Monday, December 16, 2019

’அ’ முதல் ’ன்’ வரை



      தமிழில் முதல் எழுத்துக்கள் முப்பது. அவை, உயிரும் மெய்யும்.

      அ முதல் ஔ வரை பன்னிரு உயிர் எழுத்துக்கள்; க் முதல் ன் வரை பதினெட்டு மெய் எழுத்துக்கள்.

      தமிழின் அரும்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் இப்படித் தொடங்குகிறது:
      ”எழுத்தெனப் படுப
      அகரம் முதல்
      னகர இறுவாய் முப்பஃதென்ப”

      திருவள்ளுவர் தொல்காப்பியம் காட்டும் மொழி நெறியில் தோய்ந்தவர் என்பதற்கு ஒரு நயம் காட்டப்படும். அதாவது, அன்னார் தனது திருக்குறள் நூலை ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்றே தொடங்குகிறார். அதன் இறுதியில் 1330-ஆம் குறளை “பெறின்” என்னும் சொல் கொண்டு முடிக்கும் வழி ‘ன்’ என்னும் எழுத்தால் முடிக்கிறார்.

      ஆன்மிக அவை ஒன்றில் அடியேன் பேசுகையில் “அகர முதல னகர இறுவாய் அமைந்த சூரத்துல் ஃபாத்திஹா” என்று பேசினேன். சிலர் வியப்புற்றனர்.

சூரத்துல் ஃபாத்திஹா என்பது குர்ஆனின் தோற்றுவாய். ஏழு திருவசனங்களைக் கொண்ட முதல் அத்தியாயம். அஃது, ‘அல்ஹம்து’ என்று அகர முதலாகத் தொடங்கி (அறபியில் அலிஃப் என்னும் எழுத்தால் தொடங்கி), ’ழால்லீன்’ என்று னகர மெய்யை இறுதியெழுத்தாகக் கொண்டு முடிகிறது.


“அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்” (அல்லாஹ்வுக்கே புகழெல்லாம் – அவன் உலகங்கள் அனைத்தையும் புரப்போன்) என்னும் முதல் திருவசனத்தை நோக்க, அதுவும் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிதல் எண்ணற்பாற்று. ஆங்கிலத்தில் முழுமை (complete, total, whole) என்பதைக் குறிக்க A to Z என்று கூறுமாப் போல் தமிழில் அகரம் முதல் னகரம் வரை என்று சொல்லலாம். அனைத்து உலகங்களும் என்று முழுமைப்படுத்திச் சொல்லும் திருவசனம் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிந்துளது.

அறபி மொழியில் அருளப்பட்ட வேதத்திற்குத் தமிழ் எழுத்து முறையைக் கொண்டு விளக்கஞ் செப்பல் தகுமா என்றொரு கேள்வி இவண் எழலாம். ஞானத்தில் தமிழும் அறபியும் இயைந்து நெருங்குதல் ஓர்கிறோம்.



அகரக் குறிலைத் தொடர்ந்த இரண்டாம் எழுத்து ஆகார நெடில். அதாவது அ என்பது முன்னிற்கும் தலைவர் (இமாம்) எனில் ஆ என்பது தலைவரைத் தொடர்ந்த தொண்டர் (முக்ததீ). அவ்வடிப்படையில், இமாம் (முன்னின்ற தலைவர்) தோற்றுவாய் அத்தியாயத்தை ஓதி முடிக்கும் போதும், பிரார்த்தனையில் வாசகங்களை ஓதி முடிக்கும்போதும், முக்ததி (பின்பற்றும் தொண்டர்) “ஆமீன்” (அப்படியே ஆவதாக) என்று சொல்கிறார். ஆமீன் என்பது ’ஆ’-வில் தொடங்கி ’ன்’-இல் முடிகிறது.

1 comment: