’மெய்ப்பொருள்’
பதிப்பக நண்பர் உவைஸ் தந்திருக்கும் திட்டப்படி மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் “ஃபீஹி
மா ஃபீஹி” என்னும் நூலினை “ரூமியின் ஞான உரைகள்” என்னும் தலைப்பில் தமிழாக்கி வருகின்றேன்.
ஃபாரசீக
மொழியில் அமைந்த மூலப் பிரதியுடன் மௌலானா அப்துர் ரஷீத் தபஸ்ஸும் செய்த உருது மொழியாக்கம்
மற்றும் ஆர்தர் ஜான் ஆர்பெர்ரி செய்த ஆங்கிலப் பெயர்ப்பு ஆகியவற்றையும் வாசித்துக்
குறிப்பெடுத்துக் கொண்டு தமிழாக்கம் செய்து வருகிறேன். விளக்கம் தேவை என்று எளியேற்குப்
படும் இடங்களில் அடிக்குறிப்புக்களும் எழுதி வருகிறேன்.
அன்னனம்,
இரண்டாம் உரைக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புக்களில் ஒன்று குறுங்கட்டுரை எனத் தக நீண்டது.
அஃது பின்வருமாறு:
உரை-2
கடலும் நுரையும்: தெய்வீக மெய்ம்மையைக்
கடல் என்றும் இப்பருவுலகை நுரை என்றும் மவ்லானா ரூமி இவ்வுரையில் உவமித்துக் கூறியுள்ளார்.
இக்கருத்து மஸ்னவி ஷரீஃபில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
”கடலின் உள்ளமை வேறு, நுரை வேறு;
நுரையை விட்டுவிடு,
கண் கொண்டு
கடலினைக் காண்.
இரவும் பகலும் நுரையின் அலைவுகள்
இடையறாது கடல் இயங்குவதால்.
நுரையைக் காண்கிறாய் நீ
கடலைக் காண்பதில்லை
வியப்புதான்
போ!
படகுகள் போல் ஒருவரோடொருவர்
மோதிக் கொண்டிருக்கிறோம்.
கண்கள் இருக்கின்றன எனினும்
கடலைக்
காணாமல் இருக்கிறோம்.
உடல் எனும் படகில்
உறங்கிக் கொண்டிருப்பவனே!
நீரைக் கண்டுவிட்டாய் எனில்
நீரின்
நீரைக் காண்.
நீருக்கும் உளது நீர் ஒன்று
அதுவே நீரை அசைக்கிறது.
உயிருக்கும் உளது உயிர் ஒன்று
அதுவே உயிரை அழைக்கிறது.”
” (”ஜிஸ்மெ தர்யா தீகரஸ்த் ஒ கஃப் திகர் / கஃப்
பஹல் வஸ் தீதா தர் தர்யா நிகர். // ஜும்பிஷெ கஃப்ஹா ஸ தர்யா ரோஸோ ஷப் / கஃப் ஹமீ பீனீ
வ தர்யா நே அஜப் // மா-ச்சூ கிஷ்தீஹா பஹம் பர் மீ ஸனேம் / தீரா சஷ்மேம் வ தர் ஆபே ரோஷ்னேம்
// ஏ தூ தர் கிஷ்தீயெ தன் ரஃப்தா பஃகாப் / ஆப் ரா தீதீ நிகர் தர் ஆபெ ஆப் // ஆப் ரா
ஆபீஸ்த் கூ மீராந்தஷ் / ரூஹ் ரா ரூஹேஸ்த் கூ மீஃகாந்தஷ்” – பாகம்:3 – 10115-10119)
ஒப்புமை:
கலீல் ஜிப்ரான் எழுதிய நூலொன்றின் தலைப்பு “Sand and Foam” (’மணலும் நுரையும்’). மவ்லானா
ரூமி உணர்த்த விழையும் அதே ஞானத்தை ஜிப்ரானும் இவ்வுவமை கொண்டு பேசுகிறார். ”ஏக உள்ளமை”
(வஹ்தத்துல் உஜூத்) என்னும் கோட்பாட்டின் கோணத்தில் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜிப்ரான் சொல்கிறார்:
”இக்கரைகளில் என்றென்றும் நடக்கின்றேன் நான்
மணலுக்கும் நுரைக்கும் இடையில்.
பேரலை அழித்துவிடும் என் பாதச் சுவடுகளை;
வீசும் காற்றில் விலகிவிடும் நுரை.
கடலும் கரையும்
நிலைத்திருக்கும் நித்தியமாய்.”
(I AM FOREVER walking
upon these shores,
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever.)
Betwixt the sand and the foam,
The high tide will erase my foot-prints,
And the wind will blow away the foam.
But the sea and the shore will remain
Forever.)
மேலும் சொல்கிறார்:
”நேற்றுதான் நினைத்திருந்தேன், வாழ்வின் உலகில் தாள லயமின்றித் துடிக்குமொரு
துகள் யான் என்று. யானே அவ்வுலகென்றும் ஒத்திசைந்த துகள்கள் யாவும் வாழ்வு கொண்டு என்னுள்தான்
சுழல்கின்றன என்றும் அறிந்தேன் இன்று.”
(It was but yesterday I thought
myself a fragment quivering without rhythm in the sphere of life.
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within me.)
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within me.)
கலீல்
ஜிப்ரான் எழுதிய இன்னொரு நூல் ”The Madman” (“பித்தன்”). அதில், “The Greater Sea”
என்றோரு குறியீட்டுக் கதை உள்ளது. அதிலும், இவ்வுலகம் பிரபஞ்சம் என்னும் பெருங்கடலின்
ஒரு கரையாகப் புனையப்படுகிறது. ஆன்மிக வாழ்விற்கு இவ்வுலகு ஏற்றதன்று என்பது ஜிப்ரானின்
முடிவு. எனவே, ”Then we left that sea to seek the Greater sea” (’பிறகு யாம் அதனினும்
பெரிதான கடலினைத் தேட அக்கடல் விட்டு அகன்றோம்’) என்று முடிக்கிறார்.
No comments:
Post a Comment