Monday, January 13, 2020

யாதும் ரோஜாவின் பெயரும் - Part4


(”யாதும் ரோஜாவின் பெயரும்” என்னும் இக்கட்டுரை மூன்று பகுதிகளாக ஏற்கனவே பதிவிடப்பட்டது. Part-1 3-மே-2014 சனி, Part-2 22-மே-2014 வியாழன், Part-3 10-செப்டர்ம்பர்-2014 புதன் ஆகிய தேதிகளில் பதிவேறின. அதன் இறுதிப் பகுதி இது.)


ஜிப்ரானிலிருந்து மீண்டும் இப்னுல் அரபியின் பக்கம் திரும்புவோம். நைஸாம் பற்றி இப்னுல் அரபி தரும் உருவகங்களின் உட்பொருளை ஆராய்ந்து ரால்ஃப் ஆஸ்டின் என்பார் ”The Lady Nizam – an image of Love and Knowledge” என்றோரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் அவர் வெளிப்படுத்தும் சில சுவையான புள்ளிகளை கவனிப்போம். தேவை என்று தோன்றிய இடங்களில் அடைப்புக்குறிக்குள் அடியேன் கருத்துரைக்கிறேன்.
”நைஸாம் காதல் மற்றும் அறிவின் தோற்றமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் ஈரான் மற்றும் கிரேக்கத்தின் தன்மைகளை ஒருங்கே கொண்டு அரபு தேசத்தில் வாழ்கிறாள். (கிரேக்கர்களிடம் கூர்மையான தத்துவ சிந்தனை இருந்தது. ஆனால் காதல் மேம்படவில்லை. ஈரானியர்களிடம் உள்ளுணர்வின் எழுச்சியான காதல் இருந்தது. ஆனால் தத்துவம் மேம்பட்டிருக்கவில்லை. அரபு மண்ணில் தோன்றிய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்விரு தன்மைகளையும் ஒருங்கே சிறப்பாக இணைத்து வெளிப்படுத்தினார்கள்.) இவ்வாறு, நைஸாமின் உருவகம் துருவங்களின் இணைவாகவும், மூன்றான பன்மையின் ஒருமையாகவும் இருக்கிறது. 
 *நைஸாமின் உருவக அடிப்படையை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனில் இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் மாபெரும் நூற்களில் ஒன்றான “ஃபுசூசுல் ஹிகம்” என்பதன் 27ம் ஃபஸ்ஸை (அத்தியாயத்தை) நோக்க வேண்டும். அதில் அன்னார் மிகவும் துணிச்சலாகக் கூறியிருக்கும் விளக்கங்களில் ஒன்று, ’இறைவனை தரிசிப்பதற்கான சிறந்த ஊடகம் பெண்’ என்பதாகும். ஏனெனில் பெண்ணில் இறைவனின் படைப்புச் செயலும் படைப்பின் உடன்பாட்டுத் தன்மையும் இலகுவாகக் கலந்திருக்கின்றன.”
இக்கருத்து இப்னுல் அறபி (ரஹ்) பாடியுள்ள பின்வரும் கண்ணியில் பிரதிபலிக்கிறது: “திண்ணமாக அவளோ அறபிப் பெண்தான், எனினும், பாரசீகப் புதல்வியரின் தோன்றல்” (“இன்னஹா மின் ஃபதயாத்தின் உருபின் / மின் நபாத்தில் ஃபுர்ஸி அஸ்லன் இன்னஹா” நூல்: தர்ஜுமானுல் அஷ்வாக்:42:4) இவ்வரிகளை, “Verily, she is an Arab girl, belonging by origin to daughters of Persia, yea, verily.” என்று ரெனால்டு நிக்கல்சன் ஆங்கிலப் படுத்தியுள்ளார். “She is both Arab and foreign” என்று சுருக்கித் தருகிறார் ரால்ஃப் ஆஸ்டின்.  
மௌலானா ரூமி அவர்களும் பெண் குறித்து இதே கருத்தினைப் பேசியுள்ளார்:
“பெண் இறைவனின் ஒளிச்சுடர்; அறிக,
மண்ணுலகக் காதலி மட்டுமே அல்லள்!
படைத்தல் என்னும் பண்பின் பாத்திரம்,
படைப்பு அல்லள் என்றும் பகரலாம்!”
(”ஆன் பர்த்தவெ ஹக்கஸ்த் மஃஷூக் நீஸ்த்; ஃகாலிக்கஸ்த் கூயீ யா மஃக்லூக் நீஸ்த்” - மஸ்னவி:பாகம்-1: 2436)
ரால்ஃப் ஆஸ்டின் தரும் அற்புதமான கருத்துப் புள்ளிகளை மேலும் காண்போம்:
*நைஸாமைக் காதலின் தோற்றமாகக் காணும் உருவகத்தின் ரகசியம் இறைவன் மறைந்த பொக்கிஷமான தன்னை தனக்கே வெளிப்படுத்துவதற்கு, தனது தனித்தன்மையான தனிமை நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தனது அனந்த வாய்ப்புக்களில் தன்னைக் காண்பதன் ஆனந்தத்தை அடைவதற்கு, தனது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்குக் கொண்ட பூர்வீக ஏக்கத்தில், நேசத்தில் (ஹுப்) இருக்கிறது. தன்னை வெளிப்படுத்த காதலுக்கு இரு பொருள் தேவை, காதலனும் காதலியும். காதல் என்பதே இரண்டிற்கு இடையிலான ஆசையும் புகழ்தலும், அவை ஒன்றில் ஒன்று கலக்கத் துடிப்பதும், ஒன்றில் ஒன்று இருக்கத் துடிப்பதும் ஆகும்.”
இஸ்லாமிய இறைக் கொள்கையைத் திரட்டிச் செறிவாக வெளிப்படுத்துகின்ற திருக்குர்ஆனின் 112-ஆவது அத்தியாயத்தில் இறைவனைக் குறிக்கக் கையாளப்பட்டிருக்கும் ”அஸ்-சமது” என்னும் திருநாமத்தின் பக்கம் நம் கவனத்தைக் கோருகிறார் ஆஸ்டின். பொதுவாக, அத்திருநாமம் தமிழில் ”தேவையிலான்” என்றும் ஆங்கிலத்தில் “The Eternal One” அல்லது “The Everlasting One” (’நித்தியன், நிரந்தரன்’) என்றே மொழி பெயர்க்கப்படுகிறது. அச்சொல்லின் வேர் (ஸ-ம-த), அணிகள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் அல்லது பிரசாதம் வைக்கப்பட்ட பாத்திரம் காட்சிப்படல் என்னும் அர்த்தங்களையும் தருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். (”In the great  112th chapter of the Qur'an which so succinctly sums up the quintessential teachings of Islam on God, the term samad, usually translated "the Eternal One", comes from an Arabic root which also denotes the beauty of a bride in all her finery, or the exposition of the consecrated host in the monstrance.”) எனவே, பெண் ஒரு தூய பாத்திரம் என்றும், மெய்ப்பொருளின் வெளிப்பாடே அப்பாத்திரத்தில் நாம் பெறும் பிரசாதம் (தபர்ருக்) என்றும் கூறலாம்.
பெண் எப்போதும் அழகு என்னும் கோட்பாட்டின் கோணத்திலேயே பேசப்படுகிறாள். இப்னு அரபி (ரஹ்) அவர்கள் பெண்ணை அழகு மற்றும் அறிவு ஆகியவற்றின் வெளிப்பாட்டுத் தலமாகக் காண்கிறார்கள். அதாவது, இறைவனின் அழகு மற்றும் அறிவு ஆகியவை வெளிப்படும் ஊடகம் அவள். அஃது எப்படி என்பதை இப்னு அரபி அவர்கள் கையாளும் அறபிக் கலைச் சொற்களின் வழி ரால்ஃப் ஆஸ்டின் விளக்குகிறார்.
”ஹப்ப” என்னும் அறபி வேர்ச்சொல் நேசம் என்று அர்த்தப்படுவதுடன் கண்ணின் மணியயை (விழிப்பாவையை)க் குறிப்பதாகவும் உள்ளது. எனவே, “அழகு என்பது காண்பார் கண்ணில்” (”beauty lies in the eye of the beholder”) என்னும் சொலவடை. அழகு என்பது அன்பு என்பதுடன் தொடர்புடையது ஆதலால், இறைவனின் அன்பு மற்றும் அறிவு ஆகியவை வெளிப்படும் ஊடகம் என்றும் சொல்லலாம்.
”நைஸாம் காதல் மற்றும் அறிவின் தோற்றமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் ஈரான் மற்றும் கிரேக்கத்தின் தன்மைகளை ஒருங்கே கொண்டு அரபு தேசத்தில் வாழ்கிறாள்.” என்று இப்னு அரபி (ரஹ்) பாடுவதை ஏற்கனவே கண்டோம். கிரேக்கம் அறிவைக் குறிக்கிறது, ஈரான் (பாரசீகம்) அன்பைக் குறிக்கிறது என்றும், அரேபியா அவ்விரண்டையும் ஒன்றுபடுத்தும் இடம், “படைப்பும் உள்ளமையும் சந்திக்கும் இடம்”, ’நகரங்களின் தாய்’ (உம்முல் குராஅ) ஆகிய மக்கா அதில் உள்ளது, அந்த மக்காவில் ஆதி இறையில்லம் (கஃபத்துல்லாஹ் – அல்லாஹ்வின் வீடு) இருக்கின்றது என்றும் ஆஸ்டின் விளக்குகிறார்.
உள்ளமை மற்றும் படைப்பு ஆகிய இரண்டு துருவங்கள் சந்திக்கும் புள்ளி மட்டுமன்று, அவை ஒவ்வொன்றின் உள்ளும் மற்றதன் குறிப்பு உறைகிறது (”each pole has innate within it the hint of the other.”) என்று குறிப்பிடும் ஆஸ்டின் அதனை விளக்க இப்னு அறபி (ரஹ்) கையாளும் இரண்டு அறபிச் சொற்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
”ஹப்ப” என்னும் அறபி வேர்ச்சொல் நேசம் என்று பொருள் படுவதுடன் விதை என்றும் பொருட்படுகிறது. அதாவது, படைப்புக்களின் (’சர்வகோடி சிருஷ்டிகளின்’) சுயங்கள் இறைவனின் உள்ளமையில், நேசம் தம்மை வெளிப்படுத்துவதற்காகக் காத்திருக்கின்றன.
”அர்ஃப்” என்னும் அறபி வேர்ச்சொல் அறிவு, ஞானம் என்று அர்த்தமுள்ளது. அத்துடன், நறுமணம் என்றும் பொருட்படுகிறது. அழகும் நேசமும் நறுமணம் கமழ்வன.
(இத்துடன், ”இல்ம்” என்னும் கலைச்சொல்லையும் இப்பொருட்பாடுகளில் காணலாம் என்று கருதுகின்றேன். ஐன்-லாம்-மீம் என்னும் வேரிலிருந்து வரும் ’இல்ம்’ என்னும் சொல் அறிவு என்று பொருட்படும். அவ்வேர் எழுத்துக்களை லாம்-மீம்-ஐன் என்று மாற்றி அமைத்தால் ”லமஅ” என்னும் சொல் வரும். அதற்கு ‘பிரகாசம்’ என்று பொருள். அறிவு பிரகாசிப்பதே அழகு.)
”தெய்வீக ஆட்சியால் ஆன்மாவிலும் உடலிலும் அழகு நல்கப்பட்ட ஒரு பெண் சத்தியம் ஆவாள். ஏகநேரத்தில் அவள் வெளிப்பாடாகவும் ரகசியமாகவும் இருக்கிறாள். காதலால் மட்டுமே அவளை நாம் புரிந்துகொள்ள முடியும், நற்பண்பால் மட்டுமே தொட இயலும். அத்தகைய ஒரு பெண்ணை நாம் விவரிக்க முயலும் போது அவள் நீராவி போல் மறைந்து விடுகிறாள்.” என்று சல்மாவைப் பற்றி கலீல் ஜிப்ரான் கூறுவதை மீண்டும் நினைவு கூர்க. இக்கருத்துக்கள் இப்னு அரபி (ரஹ்) அவர்களது கருத்துக்களின் பிரதிபலிப்பே.
நைஸாம் குறித்து இப்னு அரபி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்:
“அவளை நாம் நினைக்க முயல்கையில்
கரைந்து காணாமல் போகிறாள்;
கண்கள் அவளைக் காண்பதற்கு அரிதாய்
மிகவும் மிகவும் நுண்மை அவள்”
(’லுஃபத்து திக்ருனா யுதவ்விபுஹா / லதுஃபத் அன் மசாரிஹிந் நழரி’ – நூல்: தர்ஜுமானுல் அஷ்வாக் 44:4)
      இறுதியாக, இப்னு அரபி (ரஹ்) அவர்கள் உருவகித்துப் பாடுகின்ற பெண்ணின் பெயரான “நைஸாம்” (Nyzam) என்பதை ”அப்ஜத்” என்னும் எழுத்து மதிப்பு முறைமையின் அடியாகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார் ரால்ஃப் ஆஸ்டின். அந்தப் பெயரே ஒரு குறியீட்டுக் கட்டமைப்பு அமைந்தது என்று காண்கிறார். நைஸாம் (இன்னும் சரியாக, ”நைழாம்”) என்பது நூன்-யா-ழுவே-அலிஃப்-மீம் என்னும் ஐந்து எழுத்துக்களால் ஆன சொல் (NYZAM). முதல் எழுத்தான நூன் என்பதன் மதிப்பு 50. அஃது, பிறப்பு என்று அர்த்தப்படுவது. இறுதி எழுத்தான மீம் என்பதன் மதிப்பு 40. அஃது, இறப்பு என்று அர்த்தப்படுவது. இரண்டாம் எழுத்தான் ’யா’  என்பது அறபி எழுத்து வரிசையில் கடைசி எழுத்தாகும். அவ்வகையில் அது முடிவு என்னும் இறப்பைக் குறிக்கும். இப்பெயரின் இறுதிக்கு முந்திய எழுத்தான அலிஃப் என்பது அறபி எழுத்து வரிசையில் முதல் எழுத்தாகும். அவ்வகையில் அது தொடக்கம் என்னும் பிறப்பைக் குறிக்கும். எனவே, நைஸாம் / நய்ழாம் என்னும் பெயரின் முதல் பாதியான ’நய்’ (NY) என்பதன் இரண்டு எழுத்துக்கள், பிறப்பினுள் முடிவு அடங்கி இருப்பதையும், பெயரின் இரண்டாம் பாதியான ’அம்’ (AM) என்பதன் இரண்டு எழுத்துக்கள் இறப்பினுள் தொடக்கம் அடங்கியிருப்பதையும் குறிக்கின்றன.
      நைழாம் என்னும் பெயரின் ஐந்து எழுத்துக்களில் நடுவெழுத்தாக அமைந்திருப்பது ’ழுவே’ என்பது. (இதன் உச்சரிப்பு நுட்பமானது. தமிழின் ழகரத்துக்கும் ஆங்கிலத்தின் Z-க்கும் அருகில் வருவது. எனவேதன் நைஸாம் என்றும் நைழாம் என்றும் மாற்றி மாற்றி எழுத நேர்கிறது என்பதை ஓர்க). இவ்வெழுத்தின் மதிப்பு 900. ழுவே என்னும் எழுத்து மறை ரகசியங்கள் நிரம்பியது என்று தனது ஞானப் பெருநூலான “ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா” (மக்காவின் திறப்புக்கள்)-இல் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதை ஆஸ்டின் சுட்டிக் காட்டுகிறார். நைஸாம் என்னும் பெயரின் அர்த்தம் ஒத்திசைவு (Harmonia) என்பதாகும். பிறப்பும் இறப்பும் ஆகிய எதிர்மங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து ஒத்திசைவதைச் சுட்டுவதாகவே அப்பெயர் இருக்கிறது. அவ்வழி அஃது, படைப்பும் படைத்தவனும் இணைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஞானத்துடன் நோக்கும்போது பெண் என்னும் படைப்பு, இறைவனைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது.
      இறைவன் யார்? என்னும் கேள்விக்கு நுஸ்ரத் ஃபதேஹ் அலி ஃகான் பாடிய ஒரு பாடல் இப்படி விடை பகர்கிறது: “உள்ளமையின் முறைமையை அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன், அவனே இறைவன்” (”கோயி தொ ஹே நிஸாமெ ஹஸ்தி / ச்சலா ரஹா ஹே ஒஹி ஃகுதா ஹே”).
      ஆம். நிஸாம் (Nizam) என்றால் முறைமை என்று பொருள். இறைவன் படைத்த சர்வகோடி சிருஷ்டிகளின் தொகுப்பான முழுப் பிரபஞமும் ஓர் ஒழுங்கமைவு கொண்டுள்ளது. நைஸாம் என்றால் சிறிய நிஸாம் என்று பொருள். அதாவது, பெண் ஒரு சிறிய பிரபஞ்சமாக இருக்கிறாள். பிரபஞ்ச ஒழுங்கமைவைப் பிரதிபலிக்கின்றாள் எனலாம். மேலும், நிஸாம் என்னும் சொல் கிளைத்த வேரிலிருந்து நஸ்ம் (Nazm) என்னும் சொல்லும் வருகிறது. நஸ்ம் என்றால் செய்யுள் / கவிதை என்று பொருள். பிரபஞ்சமே இலக்கணம் வழாது இறைவனால் இயற்றப்பட்ட செய்யுளாக இருக்கிறது. அதுபோல் நைஸாமும் (அதாவது, பெண்ணும்) ஒரு கவிதையாக இருக்கிறாள் எனலாம். அகக்கண் திறப்பார் ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம்’ அவளில் காண்பார்.

      ”’நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். அறியப்பட விரும்பினேன். அதனால் சிருஷ்டியைப் படைத்தேன்’ என்று அல்லாஹ் சொல்கிறான்” (குன்து கன்ஸன் மஃக்ஃயிய்யன் ஃப அஹ்பப்து அன்(ய்)யுஃரஃப ஃபஃகலக்துல் ஃகல்க் – ஹதீஸ் குத்ஸி). படைப்புக்கள் வெளிப்படுவதற்கு ஒரு சிருஷ்டித் தலமாகப் பெண் இருக்கிறாள். அன்பைக் குறிக்கும் ஹப் என்னும் வேர்ச்சொல் விதை என்பதையும் குறிப்பதன் மூலம் படைப்பின் வெளிப்பாட்டைச் சுட்டுவதையும், அறிதலைக் குறிக்கும் அர்ஃப் என்னும் வேர்ச்சொல் நறுமணத்தைக் குறிப்பதையும் முன்பே கண்டோம். இல்லறத்திற்காக ஆணும் பெண்ணும் இணையும் வதுவை முறையைப் பழந்தமிழர் ”திருமணம்” (உயர்ந்த நறுமணம்) என்று அழைத்திருப்பது எண்ணற்பாற்று. “திருமணம் எனது வழிமுறை” (அந்நிக்காஹ் மின் சுன்னத்தீ) என்று நவின்ற நபிகள் நாயகம் (ஸல்), “உங்கள் உலகிலிருந்து எனக்கு உவப்பாக்கப்பட்டுள்ளன: நறுமணம் பெண்கள் மற்றும் எனது கண்ணின் குளிர்ச்சி தொழுகையில் தேக்கப்பட்டுள்ளது” (ஹுப்பிப் அலய்ய மின் துன்யாக்கும் அத்தய்யிபு வந்நிஸாஉ வ ஜுயிலத் குர்ரத்து ஐனீ ஃபிஸ்ஸலாத்தீ) என்று அருளியிருப்பதும் இங்கே சிந்தனைக்குரியது.
      ”ஆண் பெண் ஆகியோரை நான் இப்படித்தான் ஏற்கிறேன் – போருக்குத் தகுந்தவனாக அவன், தாய்மைக்குத் தகுந்தவளாக அவள்” (“Thus would I have man and woman – fit for war, the one; fit for maternity, the other”) என்கிறார் ஃப்ரெட்ரிக் நீட்ஷே.
      வீரமே அழகைக் காதலிக்கிறது. அழகு கோழைகளை விரும்புவதில்லை. ஆன்மிகத்திலும் துணிச்சல் மிக்க உள்ளமே விவேகம் என்னும் வாளால் அஞ்ஞானத்தை வெட்டி வீழ்த்தி இருளெனும் திரைகளை விலக்கி மெய்ம்மையின் முகத்தை தரிசிக்கிறது.
      ஆண், இறைவனின் வீரன். பருவுலகில் அவனே பெண்ணின் வீரன்.
      அவன், காடு கிழாள் என்று காணப்பட்ட கொற்றவையின் வீரன்; இறைவனின் வார்த்தையைத் தனது கருவில் சுமந்த கன்னித் தாயான மர்யமின் வீரன்; வடமீன் கற்பின் திறனும் ஒளியும் இலங்கும் ஃபாத்திமாவின் வீரன்.
(--finis--)


No comments:

Post a Comment