இது ஒரு சிறு நாட்குறிப்பு. நேற்று (20-01-2020, திங்கட் கிழமை) திருமண
நிகழ்வு ஒன்றின் நிமித்தம் சென்னைப் பயணம். நள்ளிரவில் திருச்சி மீள்கை.
மாலை நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வந்த புத்தகப் பெருவிழாவிற்குச்
சென்றோம். உள்ளே நுழைகையில் பொதுக்கூட்ட அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
மார்க்ஸ்-எங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிச அறிக்கையின் மறுபதிப்புக் குறித்த நிகழ்வு அது.
“மதம் ஒருபோதும் மனிதனுக்கு விடுதலை நல்காது. அது தனது கோட்பாடுகளின் பிடியில் அவனைச்
சிறை வைத்திருக்குமே அன்றி விடுவிக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார். நுழைவுச் சீட்டு
வாங்க நாங்கள் கவனப் பட்டிருந்ததால் வேறு என்ன பேசினார் என்று நினைவில்லை.
அறுநூறு கடைகள். பல நூறாயிரம் நூற்கள். ஒவ்வொரு கடையாக மேய்ந்து செல்வதற்கே
ஒரு நாள் முழுவதும் வேண்டும். எங்களுக்கு அவகாசம் இல்லாததால் என்ன நூற்களைக் கருதி
வந்தோமோ அவற்றை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
ரஹ்மத் பதிப்பகக் கடையில் ”மஸ்னவி” காவியத் தமிழாக்கத்தின் பாகங்கள்
இருந்தன. ஏற்கனவே ஐந்து பாகங்கள் என்னிடம் உண்டு. ஆறாம் மற்றும் ஏழாம் பாகங்களை நாடியே
வந்திருந்தேன். அவற்றை வாங்கிக் கொண்டேன்.
மௌலானா ரூமி (ரஹ்) ஃபார்சி மொழியில் ஆறு நூற்களாகத்தான் மஸ்னவியைப்
பாடினார்கள். நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்களின் தமிழாக்கம் ஏழு பாகங்களாக வந்திருக்கிறது.
(ஆறாம் பாகம் அளவிற் பெரிது. எனவே இரண்டாகப் பகுத்து வெளியிடப்பட்டுள்ளது).
ஐந்தே
முக்கால் மணியளவில் அரங்கை விட்டு வெளியே வந்தபோது அங்கே தமிழக அரசின் தொல்லியல் துறை
கீழடி அகழாய்வில் கிடைத்த சங்க காலத்துப் பழம் பொருட்களில் சிலவற்றைப் பார்வைக்கு வைத்திருந்த
கூடம் இருக்கக் கண்டு அதனுள் நுழைந்தோம். துறையினர் அங்கே “’கீழடி’ – வைகை நதிக்கரையில்
சங்க கால நகர நாகரிகம்” என்னும் கையேடு ஒன்றினை விற்றுக் கொண்டிருந்தனர். தமிழ் மற்றும்
ஆங்கிலப் பிரதிகள் இருந்தன. இருபத்து நான்கு மொழிகளில் அந்நூலின் பிரதி கிடைப்பதாக
விளம்பரமும் செய்திருந்தனர். நான் மேசையருகே சென்று நின்றபோது “என்ன சார் அறபியில்
வேணுமா? உருதுவில் வேணுமா?” என்று விற்பனையாளர் கேட்டார். (அறபியும் உருதுவும் இருவேறு
மொழிகள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்ற அளவில் அந்த அன்பரைப் பாராட்டத்தான்
வேண்டும்.) “தமிழே தாருங்கள்” என்றபடி நான் சிரித்தேன். “இல்ல, அறபி உருதுவுலயும் வெளியிட்டிருக்கோம்.
அதுவும் கிடைக்கும். அதுக்குத்தான் சொன்னேன்” என்றார். (என்ன பாய், நீங்களே அறபி உருதுப்
பிரதிகளை வாங்காட்டி வேற யாருதான் வாங்குவாங்க? என்பது அவரின் தர்க்கமாக இருக்கக் கூடும்.)
வெளியேறி
நடந்தோம். கல்கோனா விற்கும் தாத்தா கூவி அழைத்தார். கண்டுகொள்ளாமல் நடந்தோம். ஜூட்
பை, செல்பேசி உறை, பன்னிறங்களில் குளிர் பானம், பார்த்தே பல்லாண்டுகள் ஆகிவிட்ட பருவட்டான
நாட்டு எலந்தைப் பழம் மற்றும் கூறிடப்பட்டு விசிறி போல் விரித்து வைக்கப்பட்ட மாங்காய்,
இன்ன பிற பண்டக் கடைகளை எல்லாம் கடந்து வெளியேறிய இடத்தில் காவல் துறை நிறுத்தியிருந்த
’நமது நண்பர்’ ஒருவர் என் கையில் இருந்த நூற்களைப் பார்த்தார். “மஸ்னவி ஷரீஃப்” என்று
தமிழில் எழுதியிருந்ததைப் படித்தவர், “அட, நீங்களும் தமிழ் ’புக்’லாம் வாங்குவீங்களா?”
என்று கேட்டார்.
“நாங்கள் தமிழ்ப் பேராசிரியர்கள்” என்றேன்.
“எங்க?”
“திருச்சி. ஜமால் முகம்மது கல்லூரி”
“திருச்சிலேர்ந்தா இதுக்கு வந்தீங்க?”
“இல்லீங்க. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்தோம். அப்படியே ஊருக்குத் திரும்புறப்ப இங்கயும் வந்துட்டுப் போறோம். வரட்டுங்களாய்யா.” என்று சொன்னேன். அவரும் இன்முகத்துடன் தலையாட்டினார்.
அடியேன் வெண்ணிற ஜிப்பாவும் சாம்பல் நிற பைஜாமாவும் அணிந்திருந்தேன். உடன் வந்த பேராசிரியர் இம்தாதுல்லாவும் அவரது மூத்த மகனும்கூட அதே மாதிரி ஆடைதான் அணிந்திருந்தனர். அத்துடன் தொப்பி, தாடி என்று எங்களைப் பார்த்த அவர்கள் எங்களை மார்க்க அறிஞர்கள் (ஹஜ்ரத்துகள்) என்று எண்ணியிருக்க வேண்டும். தப்பில்லை.
என்ன, ”அறபி, உருது பிரதிகளும் இருக்குங்க. அதுவும் வேணுமா?” என்று அந்த தொல்லியல் அலுவலர் கேட்டிருந்தால் அது சரியான புரிதலில் கேட்டதாக இருந்திருக்கும்.
(’ஹஜ்ரத்’ என்று அடையாளப் படுத்தப்பட்ட தோற்றத்தில் இருந்த) என் கையில் தமிழ் நூற்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தக் காவலர் எவ்வித உணர்வு மாற்றமும் இன்றி இயல்பாக இருந்திருந்தால் அது அவருக்குச் சரியான புரிதல் இருப்பதைக் காட்டியிருக்கும்.
அத்தகைய நிலையை நோக்கிச் சமுதாயம் நகர்ந்தாக வேண்டும் நண்பர்களே!
No comments:
Post a Comment