Tuesday, December 24, 2019

”கடற்காகம்”



    











 ”மணல் பூத்த காடு” என்னும் அருமையான நாவலை முன்பு தந்த நண்பர் முஹம்மது யூசுஃப் தனது இரண்டாம் நாவலான “கடற்காகம்” நூலைச் சென்ற மாதம் அனுப்பியிருந்தார். இரு நாட்களுக்கு முன் வாசித்து முடித்தேன்.
      
 ”நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” (21:30 அல் குர்ஆன்) என்னும் திருவசனத்தை தியான ஸ்லோகமாக மொழிந்து துவங்கி முன்னுரை வரைகிறார் முஹம்மது யூசுஃப். அதிலேயே ஒரு சொல்லாராய்ச்சி.

      மூத்தோனைக் குறிக்க ’அண்ணன்’ என்னும் சொல்லே தமிழரிடம் பெருவழக்கு. காயற்பட்டிணம் வாழ் முஸ்லிம்கள் அண்ணனைக் குறிக்க ‘காக்கா’ என்னுஞ் சொல்லினைப் புழங்குகின்றனர். இவ்வழக்கின் தொடக்கப் புள்ளியை வரலாற்றில் தேடும் முஹம்மது யூசுஃப் ஆதம் நபியின் புதல்வர்களான ஆபில் காபில் ஆகியோர் பற்றிய கதையுடன் தொடர்பு காட்டி வியப்பூட்டுகிறார்.

            நூல் வெளியானபோது முகநூலில் அதன் முன் அட்டையைக் கண்டு மிகவும் கவரப்பட்டேன். எளிமையும் தெளிவும் கொண்ட மிக அழகான வடிவமைப்பு. நீல வானப் பின்னணியில் வெண்ணிறக் கடற்காகம் ஒன்று சிறகு விரித்திருக்கும் காட்சி. கண்ட முதற்கணமே ரிச்சர்ட் பாக் எழுதிய “ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்” என்னும் உலகப் புகழ் பெற்ற நூலின் அட்டையை நினைவு கூர்ந்தேன்.
 


     





















 ”கடற்காகம்” என்னுந் தலைப்பும் நாவலுள் இடம்பெறும் முதன்மை மாந்தருக்கான குறியீடாகத்தான் இருக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லிற்று. உடனே,

      ”ஏகப் பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற
      காகம் அதுவானேன் கண்ணே றகுமானே!”
என்று குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் பாடிய வரிகள் நினைவில் எழுந்தன. ஆம், அவர் பாடியிருப்பது நெய்தல் நிலத்துக் கடற்காகத்தையே, மருத நிலத்துக் கருங் காக்கையை அன்று என்று விளங்கிற்று.

      ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவலில் ஆங்காங்கே ஒரு கருநாய் வந்துபோகும். அது எதன் குறியீடு என்று அவர் குறிப்பிட மாட்டார். மரணத்தின் குறியீடாக இருக்கக்கூடும். வாசகர்கள் தாம் விளங்கியபடி அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். அதுபோல், இந்நாவலில் ஆங்காங்கே கடற்காகமும் கருங் காகமும் இடம் பெறுகின்றன.

      ”கடற்காகம் ஒன்று சாவகாசமாய்ச் சிறகை விரித்து அனாதையாய் உவர்த்த கார் நிற வானில் விருப்பமின்றி மெதுவாகப் பறக்கத் துவங்கியது” (ப.27) மற்றும், ”இலவம் பஞ்சு போல் வானில் மிதந்து சென்று கொண்டிருந்தது ஒரு காகம்” (ப.260) ஆகிய வரிகள் நூலின் அட்டை காட்டும் படிமத்திற்கானவை எனலாம். இவை முறையே, தாரிக் மற்றும் அய்டா ஆகியோரைக் குறிப்பன என்பது கதையோட்டத்தில் விளங்கும். இக்கதையில் இடம்பெறும் ஒவ்வொரு மாந்தரும் ஒரு காகம்தான் என்று குறியீடாகச் சொல்லலாம்.

      நாவலின் கதை தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டு வட்டத்தில் கிளியூர் ஊராட்சி ஒன்றியத்தினுள் குளச்சலுக்கு அருகில் உள்ள ’இனையம் புத்தன்துறை’ என்னும் சிற்றூரில் தொடங்கி சிரியா நாட்டில் உள்ள அலிப்போ என்னும் நகரில் முடிகிறது. ஆனால், கதையின் செம்பாகக் களம் அபுதாபியிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் அரபிக் கடலில் இருக்கும் டெல்மா என்னும் தீவுதான். ஒரு மாத காலம் அந்தத் தீவில் வசித்த அனுபவத்தை நாவல் நமக்குத் தருகிறது. இதற்காகவே வாசிக்கலாம். 

 
      தமிழகத்திலிருந்து தாரிக், டேனியல் மற்றும் அன்வர் ராஜா, கேரளாவிலிருந்து அலவிக் குட்டி, லெபனானில் இருந்து முவாசீன், ஈரானிலிருந்து சமீரா, மற்றும் இன்னோரன்ன பிற கதாபாத்திரங்கள் டெல்மா தீவில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைச் சித்தரிப்பதே இந்நாவலின் மைய இழை. தமிழரும் மலையாளியரும் பொருள்வயின் பிரிவாக அமீரகம் (Emirates) சென்றிருள்ளனர். ஆனால், ஈரான் லெபனான் சிரியா ஆகிய இடங்களிலிருந்து அங்கே வந்திருப்போர் அனுபவிப்பது புலம்பெயர் வாழ்க்கை.

      சமயம் மற்றும் அரசியல் ஆகிய கோணங்களில் இந்நாவல் மூன்று முக்கியமான புள்ளிகளைப் பேசுகிறது:

      அ) சுற்றுச் சூழல் போர் (Environmental War). இதன் ஒரு பகுதியாக, சுனாமி, நிலநடுக்கம், பெருமழை, கடும்புயல் போன்ற ’இயற்கைப் பேரிடர்கள்’ செயற்கையாக உருவாக்கப்படுவது குறித்தும் அதற்கான ஹார்ப் தொழில்நுட்பம் குறித்தும் தாரிக் என்னும் மாந்தன் வழியாகப் பரக்கப் பேசுகிறார்.

      ஆ) இந்து மற்றும் முஸ்லிம் சமய நல்லிணக்கம்: சாவக்காடு ஹமீது பாய் என்னும் மாந்தன் வழியாக இப்பொருண்மை பேசப்படுகிறது. இந்து மரபை இஸ்லாம் குறிப்பிடும் பழங்கால இறைத்தூதர்களின் சமூகமாகப் பார்க்கும் புரிதல் இதில் வெளிப்படுகிறது. “இந்துக்கள விட்டு விலக விலக உங்களுக்கு ஒன்னுமே கிடைக்காது. அவன் நமக்கு ஆதி பந்தம். இதை முஸ்லீம்கள் புரிஞ்சிக்கனும்.” (ப.224) என்று சொல்கிறார் சிஹ்ரு (மாந்திரீகம்) செய்பவரான சாவக்காடு ஹமீது பாய். இப்பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருமே அறிய வேண்டிய செய்திகள் உள்ளன.

      குர்ஆன் 2:62-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்படும் ”ஸாபியீன்” என்னும் சமுதாயத்தவரை ஆங்கிலத்தில் Sabeans என்று எழுதுவர். இந்நாவலில் அத்திருவசனத்தைச் சுட்டுமிடத்தில் Sapiens என்று அச்சாகியுள்ளது (ப.239). டார்வினிசம் முன்வைக்கும் பரிணாம / கூர்தலறக் கோட்பாடானது பகுத்தறிவு வளர்ச்சி கொண்ட மனிதர்களை ஹோமோ சேப்பியன்ஸ் (homo sapiens) என்று குறிக்கிறது. முஹம்மது யூசுஃப் இச்சொல்லினை Sabaens என்பதுடன் குழப்பிக் கொண்டார் என்று எண்ணுகிறேன். “பட்டதொம்ப குகைல சேப்பீயன்கள் (Sapeins) வாழ்ந்ததுக்கான அடையாளம் இன்னும் இருக்கிறதா சொல்லுறாங்க.” (ப.239) என்று சாவக்காடு ஹமீது பாய் பேசுவதில் இக்குழப்பம் எழுகிறது. ஹோமோ சேப்பியன்ஸ் என்பது உயிரியல் கலைச்சொல். லத்தீன் மொழியில் அறிவுள்ள மனிதன் (wise man) என்று பொருள். ஆதம் நபியே ஹோமோ சேப்பியன்தான். நாவலில் சுட்டப்பட்டிருக்கும் குர்ஆனின் 2:62-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்படும் யூதர்கள் கிறித்துவர்கள் சாபியீன்கள் ஆகிய அனைவருமே ஹோமோ சேப்பியன்ஸ்தாம்.

      இ) இஸ்லாத்தில் ஏற்பட்ட சுன்னத்தி – ஷியா என்னும் பெரும்பிளவின் வரலாறு, மற்றும் புதிய தீவிரவாத இயக்கங்கள் ஆகியன பற்றி மர்வான் என்னும் மாந்தனின் வழியாகப் பேசப்படுகிறது. (டாக்டர் அம்ரு என்னும் மாந்தனின் வழியாக பாலஸ்தீன் போராட்ட வரலாறு குறித்துப் பேசப்படுவதையும் இங்கே சேர்த்துக் கருதலாம்.) ”எனது சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரிந்துவிடும்” என்று நபிகள் நாயகம் நவின்றது இவண் நினையத்தகும். “ஷியா” என்னும் கருத்தியல் முஸ்லிம்களிடையே பிளவும் பகைமையும் உண்டாக்கும் நோக்கில்  பதினைந்தாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விவரிக்கும் பக்கங்கள் மேலும் விரிவான தேடலுக்குத் தூண்டுகின்றன.

      முஹம்மது யூசுஃப் தம்மையொரு ”தகவல் கொண்டாடி” என்று இந்நாவலிலும் குறிப்பிட்டு அதனை நாவல் நெடுகிலும் எண்பிக்கவும் செய்கிறார். எளியேனும் ஒரு தகவல் கொண்டாடி என்பதால் நாவலில் ஈடுபாடு அதிகரித்தது. பள்ளி ஆசிரியை சமீரா தனது மாணவிகளுக்குச் சொல்லும் கதைகளில் டெல்மா தீவின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவையாகவும் வரைந்து காட்டுகிறார். ஆயிரத்தோரிரவு அறபிக் கதைகளில் உள்ள சிந்துபாத் கதைக்கும் டெல்மா தீவின் வரலாற்றுக்கும் உள்ள உறவை அறிந்தபோது வியப்பில் புருவங்கள் உயர்ந்தன.

      சிந்துபாதிடம் ஒரு மாலுமி சொல்வதாக அக்கதையில் வரும் கவிதை ஒன்றனை சமீரா சொல்வதாக யூசுஃப் எழுதியுள்ளார். ரிச்சர்ட் பர்ட்டன் ஆங்கில ஆக்கம் செய்த அக்கவிதையைத் தமிழாக்கம் செய்து பார்த்தேன்:

“உழைப்பில் மனிதன் உயரங்கள் அடைகுவன்
பெரும்புகழ் நயப்போன் இரவினில் உறங்கற்க;
வெண்முத்து வேண்டுவோன் ஆழ்கடல் மூழ்குக;
தன்வலி கொண்டு பொன்பொருள் ஈட்டுக;
பாடுபடல் இன்றிப் பெரும்புகழ் தேடுவோன்
சாத்தியம் அற்றதில் வாழ்வைச் சாய்க்கிறான்”
(”By means of toil man shall scale the height;
Who to fame aspires musn’t sleep at night;
Who seeketh pearl in the deep must dive,
Winning weal and wealth by his main and might;
And who seeketh Fame without toil and strife,
Th’ impossible seeketh and wasteth life.”)

”ஆயிரத்தோர் இரவு அறபிக் கதைகள்” ஐரோப்பிய இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. லத்தீன் அமெரிக்க இலக்கிய முன்னோடியாகக் கருதப்படும் செர்வாண்டிஸ் எழுதிய “தொன் குய்ஷே” என்னும் எஸ்பஞோல் காவியக் கதைக்கு முன்னோடி அஃதே. மேற்சொன்ன கவிதையால் தாக்கம் பெற்றது என்று கருதத்தகும் ஒரு ஆங்கிலக் கவிதையைக் காட்டுகிறேன். கவி ஹெச். டபிள்யூ. லாங்ஃபெல்லோ பாடுகிறார்:

“பெரியோர் வசமாக்கிப் பேணிய உயரங்கள்
கண்ணிமை நேரத்தில் கைக்கூடின அல்ல
நண்பர் தூங்கிய நள்ளிராப் போதுகளில்
தளராது முயன்று தவம்செய்த பயனே!”
(The heights by great men reached and kept / were not attained by sudden flight,/ but they, while their companions slept, / were toiling upward in the night.)

      இந்நாவலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இன்னொரு ஆங்கிலக் கவிதையும் சமீரா நினைத்துப் பார்ப்பதாகவே வருகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் உமர் இப்னு முஹம்மத் அல்-நஃப்ளவி என்பவரால் எழுதப்பட்டதொரு பாலியற் பனுவலான “அல்-ரவ்ளுல் ஆத்திர் ஃபீ நுஸ்ஹத்தில் ஃகாத்திர்” என்னும் நூலில் உள்ள கவிதை அது. (ரிச்சர்ட் பர்ட்டன் இந்நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முஹம்மது யூசுஃப், ”The Perfume Garden’ என்னும் நாவலை மூவசீனைத் தவிர்த்து விட்டு இப்போது தனியாக வாசிக்கத் துவங்கினாள்” (ப.80) என்று எழுதுகிறார் முஹம்மது யூசுஃப். “The Perfumed Garden” என்பதே சரியான தலைப்பு. மேலும், அஃதொரு நாவல் அன்று. சிறு சிறு கதைகள் சில அதனுள் உள்ளன. ஜியொவன்னி பொக்காஷியோ எழுதிய ”டெகாமரான்” மற்றும் ஆங்கில இலக்கியப் பிதாமகர் ஜெஃப்ரி சாசர் எழுதிய ”கேன்ட்டர்பரி டேல்ஸ்” ஆகியவற்றில் உள்ளன போன்ற கதைகள். மற்றபடி, பாலின்பத் துய்ப்பிற்கான உடலியல் கூறுகள் பற்றிப் பேசும் உரைநடைப் பகுதிகளே அந்நூலில் மிகுதி. எனவே, வாத்ஸ்யாயன் எழுதிய ”காமசூத்திரம்”, கல்யாண மல்லா எழுதிய “அனங்கரங்கா”, கொக்கோகர் இயற்றிய “ரதி ரகஸ்யம்” (அதிவீரராம பாணிடியரால் தமிழாக்கப்பட்டது) முதலிய நூற்களுடன் அது ஒப்பிடப்படுகிறது. இவை யாவும் காமத்திற்கான உடலியல் பற்றியே பேசுவன. மிகைப்பாடு உள்ளன. திருவள்ளுவரின் காமத்துப்பால் இவற்றினும் வேறானது. காமத்தின் உடலியலைப் பேசாது உளவியலையே பேசுவது. “ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று அது முடி(க்)கிறது. அவ்விடத்தில் நிறைவு காணாதோர் மேற்சொன்ன நூற்களில் வழி தேடத் தொடங்குவர். சமீரா அப்படித்தான் “நறுமணத் தோட்டம்” நூலினைப் படிக்கிறாள்.)

      நாவலில் முஹம்மது யூசுஃப் கையாண்டிருக்கும் மொழிநடை, உவமை, பகடி குறித்துப் பேசினால் இக்கட்டுரை ஒரு சிறு நூலாக விரியும். மணல் பூத்த காடு பற்றி அப்படித்தான் ஐம்பது பக்கங்களுக்கு எழுதினேன். இந்நாவலுக்கு அப்படி நான் எழுதப் போவதில்லை. நாவலையே வாங்கிப் படியுங்கள். அமீரகம் குறித்த ஆவணங்களாகத் திகழும் இந்நாவல்களின் வரிசையில் மேலும் பற்பல கதைகளை முஹம்மது யூசுஃபின் எழுதுகோல் வெளிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக!

No comments:

Post a Comment