Monday, December 30, 2019

ரூமியின் ஞான உரைகள் - 2


உரை – 2

      ”குருநாதர் மௌனமாகவே இருக்கிறார்” என்று யாரோ ஒருவர் சொன்னார்.

      அதைக் கேட்டு ரூமி பேசத் தொடங்கினார்: நல்லது. என்னைப் பற்றிய நினைப்புதான் உன்னை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது. என்னைப் பற்றிய அந்த நினைப்பு உன்னிடம் நேரடியாகப் பேசவில்லை. ‘காரியங்கள் நலமா?’ என்று கேட்கவில்லை. சொல்லற்ற எண்ணமே உன்னை இங்கே இழுத்து வந்தது. வார்த்தைகள் ஏதுமின்றி எனது உள்ளமை உன்னை ஈர்த்து ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இட்டுச் செல்கிறது எனில், வார்த்தைகளில் என்ன சிறப்பு இருக்கிறது? சொற்கள் மெய்மையின் நிழல், மெய்மையின் ஒரு கிளை. நிழலில் ஈர்க்கும்போது உண்மை ஈர்க்காதா?

      சொற்கள் ஒரு பாசாங்கு மாத்திரமே. உள்ளுறவே ஒரு நபரை இன்னொருவரிடம் இழுக்கிறது, சொற்கள் அல்ல. ஞானி ஒருவர் எத்தனை ஆயிரம் அற்புதங்களை வெளிப்படுத்திக் காட்டினாலும், அவருடன் உள்ளுறவு இல்லாத ஒரு நபர் அவற்றைக் கண்டு எவ்விதத் தாக்கமும் பெற மாட்டார். உள்ளுறையும் மெய்மையே நம்மை ஈர்க்கிறது, அசைக்கிறது. வைக்கோலில் ‘அம்பர்’-இன் (’நளிமை’யின்) தன்மை சற்றேனும் இல்லை என்றால் வைக்கோல் ஒருபோதும் அம்பரிடம் ஈர்க்கப்படாது. அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாது, அம்பரை நீங்கள் கம்பளி கொண்டு தேய்த்தாலும் சரியே. இனம் இனத்தோடு சேரும். அந்த இனத்தன்மை (ஜின்ஸிய்யத்) அவற்றுக்கு இடையே மறைந்துள்ளது, வெளிப்படையில் தெரிவதில்லை.

      எண்ணமே நம்மை அழைத்து வருகிறது. பூங்காவின் எண்ணம் பூங்காவிற்கு, கடையின் எண்ணம் கடைக்கு. எனினும், இந்த எண்ணங்களின் பின்னால் ஒரு ரகசிய ஏமாற்று மறைந்துள்ளது. நல்லதே என்று நினைத்துக் கொண்டு நீங்கள் ஓரிடத்திற்குச் சென்று ஏமாந்து போனதில்லையா? எனில், சிந்தனைகள் எல்லாம் ஒரு போர்வையைப் போன்றவை. அவற்றின் உள்ளே யாரோ ஒருவர் ஒளிந்திருக்கிறார். மெய்ம்மை உங்களை ஈர்த்து எண்ணங்கள் எல்லாம் மறைந்துவிடும் ஓர் நாளில் நீங்கள் ஏமாந்து போகமாட்டீர்கள். அப்போது நீங்கள் பிசகு இல்லாமல் உள்ளதை உள்ளபடிக் காண்பீர்கள்.

”ரகசியங்கள் சோதிக்கப்படும் நாளில்” (யவ்ம துப்லஸ் சராஇர் – 86:9).

      எனவே, நான் பேசுவதற்கு என்ன காரணம் இருக்கிறது? உண்மையில், ஈர்க்கும் பொருள் ஒன்றே; அது பலவாகத் தெரிகிறது.


      நாம் பல நூறு ஆசைகள் கொண்டிருக்கிறோம். ‘எனக்கு சேமியா வேண்டும்’ என்கிறோம். ‘எனக்கு தோசை வேண்டும், எனக்குப் பொங்கல் வேண்டும், எனக்கு பிரியாணி வேண்டும், எனக்கு ஹல்வா வேண்டும், எனக்கு மாம்பழம் வேண்டும், எனக்கு பேரீச்சம் வேண்டும்…” இவற்றை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் சுட்டிக் கூறுகிறோம். ஆனால், காரியத்தின் வேர் ஒன்றே ஒன்றுதான்: பசி. நாம் கேட்ட ஒன்றைக் கொண்டு நிறைந்துவிட்ட பின் நாம் சொல்வது ஒன்றேதான்: ’போதும், மேலும் வேண்டாம்.’ எனவே, நம்மை ஈர்த்தது பத்தோ நூறோ அல்ல, ஒன்றே ஒன்றுதான்.

      ”மறுப்பாளர்களுக்கு அவர்களின் எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம்” (74:31).

      படைப்புக்களின் இந்த எண்ணிக்கை ஒரு சோதனையே. ஏனெனில் அவை ஏக உள்ளமையை மறைக்கின்றன. ‘ஞானி ஒருவரே, மனிதர்கள் பலர்’ என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது, ஞானி எப்போதும் ஒன்றையே கருதுகிறார். மக்களின் உள்ளமோ பல்வேறு தோற்றங்களில் சிதறிக் கிடக்கின்றது. எந்த நூறு? எந்த ஐம்பது? எந்த அறுபது? கண்ணாடிகள் பலவும் பிரதிபலிக்கும் இந்த உலகில் அவர்கள் முகமும் கைகளும் கால்களும் அற்ற மக்கள். உள்ளமும் உயிரும் அலமந்து அவர்கள் மாந்திரீகனின் பாதரசத்தைப் போல் நடுங்குகின்றனர். தாம் யாவர் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அறுபது என்றோ நூறு என்றோ ஆயிரம் என்றோ அவர்களை அழையுங்கள். ஆனால் ஞானி ஒருவர்தான். இந்தப் பார்வையேகூட ஒரு சோதனைதான் அல்லவா? ஏனெனில், உண்மையில் அந்த ஆயிரம்கூட ஒன்றுமே இல்லை. ஆனால், ஞானி என்பவரே ஓராயிரம், நூறாயிரம், கோடானு கோடி.

      ”கலீலுன் இதா உத்தூ, கஸீருன் இதா ஷத்தூ” – “எண்ணிக்கையில் சொற்பம், வலிமையில் அதிகம்.”

      மன்னன் ஒருவன் தனது படை வீரர்களுள் ஒருவனுக்கு மட்டும் நூறு வீரர்களுக்கான சலுகைகளைத் தந்தான். படை புலம்பியது. ஆனால் மன்னன் ஒன்றுமே சொல்லவில்லை. போர் நாள் வந்தபோது வீரர்கள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடினார்கள். ஆனால் அந்த ஒரு வீரன் மட்டும் நின்று சமர் புரிந்தான். “இதற்காகத்தான், இவன் ஒருவனை நூறு பேருக்குச் சமமாக நான் வளர்த்தேன்” என்று மன்னன் சொன்னான்.

      இறைநேசர் ஒருவரைக் கண்டுகொள்வதற்கு, தன்னைத் தானே ஒன்றுமில்லாமல் ஆக்கிப் பார்க்கின்ற தீர்க்கமான பார்வை ஒருவருக்கு வேண்டும். ஓரவஞ்சனைகளை முற்றிலும் களைந்துவிட வேண்டும். பகுத்தறியும் தெளிந்த பார்வையே இல்லாதவர்களோடு நாம் வாழ்நாளெல்லாம் பழகி வந்ததால் நமது பார்வையும் மங்கி விடுகிறது. இறைநேசர் நம்மால் கண்டுகொள்ளப் படாமலேயே கடந்துபோய் விடுவார்.

      பகுத்தறிவு (தமய்யுஸ்) என்பதொரு பண்பு (சிஃபத்). அது எப்போதும் ஒருவருக்குள் மறைந்திருக்கிறது. பித்தனுக்குக் கைகளும் கால்களும் நன்றாகத்தான் இருக்கின்றன, ஆனால் அவனுக்குப் பகுத்தறிவு இல்லை என்பதை நீங்கள் பார்த்ததில்லையா?  பகுத்தறிவு நும்முள் இருக்கும் நுட்பப் பொருள் (மஃனயே லதீஃப்).

      நீங்களோ, நன்மை தீமையைப் பகுத்தறிய இயலாத உடலை வளர்ப்பதிலேயே இரவும் பகலும் கவனம் செலுத்தி வருகின்றீர்கள். நுட்பப் பொருளை முற்றிலும் மறந்துபோய் உமது ஆற்றல்கள் அனைத்தையும் உடலைப் பேணுவதிலேயே அர்ப்பணிப்பது எதற்காக? பகுத்தறிவு என்பது உடலைக் கொண்டே நிலை பெற்றுள்ளது என்று நீங்கள் பாசாங்கு செய்கிறீர்கள். ஆனால் உண்மையில் உடல்தான் பகுத்தறிவைக் கொண்டு நிலை பெற்றுள்ளது. பகுத்தறிவு உடலால் நிலை பெறுவதில்லை.

      கண்கள் மற்றும் காதுகள் ஆகிய சாளரங்களின் வழியே பிரகாசிக்கும் ஒளி, அந்த ஜன்னல்கள் இல்லை என்றாலும் பிரகாசிக்கவே செய்யும். தான் பிரகாசிப்பதற்கு அது வேறு ஜன்னல்களைக் கண்டு கொள்ளும். இது எப்படி இருக்கிறது என்றால், சூரியனுக்கு முன்னால் நீங்கள் ஒரு விளக்கைக் கொண்டு வந்து “இதைக் கொண்டே நான் சூரியனைப் பார்க்கிறேன்” என்று சொல்வதைப் போல் இருக்கிறது. வெட்கக்கேடு! நீங்கள் விளக்கைக் கொண்டு வராதபோதும் சூரியன் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும். அதனைக் காண விளக்கின் தேவை என்ன?

      இறைவனின் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம். நம்பிக்கையே பாதுகாப்புப் பாதையின் முதற்பொருள். ஒருவேளை நீ இதுவரை பாதையில் செல்லவில்லை எனில் அதனை இனியாவது கண்டுகொள். நான் நெறி தவறி விட்டேன் என்று சொல்லாதே. நேரான பாதைக்கு மீண்டு வா. அதனை உன் முன்னே எப்போதும் வைத்துக்கொள். நெறிப் பிறழ்வு ஏற்படாது. நெறி என்பது மூசா நபியின் கைத்தடி போன்றது. அதன் முன் மாயைகள் எல்லாம் விலகி மறைந்துவிடும். நீ ஏதேனும் தீமை செய்திருக்கிறாய் என்றால் உனக்கே செய்து கொண்டாய். உன் அநீதத்தால் நெறிக்கு என்ன அழிவு ஏற்பட முடியும்?

      ”பறவை ஒன்று மலையின் மீது அமர்ந்து பறந்தது
      மலை வளரவும் இல்லை, சற்றே கரையவும் இல்லை”

      நீ நேரான வழிக்கு வந்துவிட்டாய் எனில், கதை முடிந்தது. ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதே.


      அரசர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சகவாசம் வைப்பதில் இதுதான் அபாயம். உயிரை இழந்து விடுவாய் என்பதன்று. இன்றோ அல்லது நாளையோ, எப்படியும் எப்போதாவது உயிர் போகத்தான் போகிறது. அரசர்களும் அதிகாரிகளும் உன் வாழ்விற்குள் நுழைந்துவிட்டால், அவர்களது நட்பில் நீ ஆதாயம் அடையும்போது, அவர்களிடம் இருந்து பொருள் பெறும் நிலையில், அவர்களின் ஆதிக்கம் உன் மீது ஏற்படத் தொடங்கிவிடும், நீ அவர்களது ஆசாபாசங்களுக்கு ஆதரவாகவே பேசும் நிலை ஏற்பட்டுவிடும். உலகியல் சார்ந்து அவர்கள் பேசும் அற்பமான அபத்தமான செய்திகளை எல்லாம் நீ மிகுந்த கவனத்துடன் செவிமடுக்க வேண்டியவன் ஆகிவிடுவாய். அவற்றை மறுத்துப் பேசவும் உன்னால் முடியாது.

      அங்கேதான் அபாயம் இருக்கிறது. சத்திய மூலத்துடன் நீ கொண்டிருக்கும் உணர்வு மங்கிவிடுகிறது. அரசர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நீ நட்பை வளர்த்துக் கொள்ளும்போது ஆன்மிக வாழ்விற்கு அடிப்படையான அக்கறை உனக்கு அன்னியம் ஆகிவிடுகிறது. ஆட்சியாளரின் பாதையில் நீ செல்லச் செல்ல, ”காதலி” (இறைவன்) இருக்கும் திசை மறைந்துபோகிறது மெல்ல மெல்ல. உலகாயத மாந்தருடன் நீ எவ்வளவு சமாதானம் ஆகின்றாயோ அவ்வளவுக்கு “காதலி” உன்னை விட்டும் திரும்பி விடுகின்றாள். யாரேனும் அநியாயக்காரனுக்கு ஆதரவு காட்டினால் அந்த அநியாயக்காரனையே இறைவன் அவனுக்கு எதிரியாக்கி விடுவான் (“வ மன் அ-ஆன ழாலிமன் சல்லதஹுல்லாஹு அலைஹி”). அவர்களின் திசையில் பயணிப்பது என்பது அவர்களின் ஆட்சிக்கு நம்மை அடிமை ஆக்குவதாகும். நீ அவர்களின் பாதையில் இறங்கிவிட்டால் இறுதியில் இறைவன் அவர்களுக்கு உன் மீது ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்திவிடுகிறான்.

      கடலினை அடைந்துவிட்ட பின்பும் கையளவு நீர் மட்டுமே எடுத்துக் கொள்வது கைசேதமே! அந்தக் கடலினுள் முத்துக்கள் இருக்கின்றன. இன்னும் ஏராளமான செல்வங்கள் உள்ளன. வெறுமனே நீர் மொண்டு கொள்வதில் அர்த்தம் என்ன? அறிவுடையோருக்கு அதில் என்ன பெருமிதம் இருக்க முடியும்? இவ்வுலகம் என்பது சத்தியப் பெருங்கடலில் பொங்கும் ஒரு நுரை மட்டுமே. இறைநேசர்களின் ஞானமே அந்தப் பெருங்கடல். அதனுள் சத்தியம் என்னும் முத்து இருக்கின்றது.

      இந்த முழு உலகம் என்பது மிதந்து கொண்டிருக்கும் நுரைக் கசடு மட்டுமே. எனினும், அலைகளின் அலைவில், இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் கடலின் தாள கதியில், இந்த நுரைக்கு ஒருவித அழகு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அழகு வேறு எங்கிருந்தோ வருகின்ற இரவல் அழகுதான். அது நம் கண்ணுக்கு மினுக்கிக் காட்டுகின்ற பொய்க்காசு.

      ”பெண்கள், பிள்ளைகள், பொன் மற்றும் வெள்ளிக் குவியல்கள், உயர் புரவிகள், கால்நடைகள், மற்றும் வேளாண் நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வம் கொள்வது மானிடர்க்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக இன்பங்களே! அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது!” (3:14).


      மனிதனே இறைவனின் விண்மானி. ஆனால், விண்மானியைக் கையாள விஞ்ஞானி ஒருவர் வேண்டும். காய்கறி விற்பவன் அல்லது கூல வாணிகனின் கையில் விண்மானி கிடைத்தால் வேலைக்கு ஆகுமா? அக்கருவி கொண்டு ’உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளக்க’ அவர்களால் ஒல்லுமா? விஞ்ஞானியின் கையில்தான் விண்மானி விலைமதிப்புள்ள பொருளாகிறது.

      செப்பு மாழையால் செய்யப்பட்ட இந்த விண்மானி ஓர் ஆடியைப் போல் வானகத்து இயக்கங்களைப் பிரதிபலிக்கிறது. அதுபோல், மனிதன் இறைவனின் விண்மானியாய் இருக்கிறான்.

      ”மேலும், திண்ணமாக யாம் ஆதமின் வழித்தோன்றல்களைக் கண்ணியப்படுத்தினோம்” (’வ லகத் கர்ரம்னா பனீ ஆதம்’ – 17:70).

      இறைவனே மனிதனுக்கு அக மற்றும் புற ஞானங்களை அருளியுள்ளான். மனிதன் தனது உள்ளமை என்னும் விண்மானி கொண்டு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பொழுதும் இறைவனின் ஒளிச்சுடர்களையும் இணையற்ற பேரழகையும் தரிசிக்கின்றான். இந்தக் கண்ணாடியை விட்டு அந்த அழகு ஒருபோதும் வெறுமை ஆவதில்லை.

      இறைவனுக்குரிய அடியார்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் நுண்ணறிவு, மெய்ஞ்ஞானம் மற்றும் அற்புதங்களால் தம்மைப் பிறரிடமிருந்து மறைத்துக் கொள்கின்றனர். படைப்புக்கள் அவர்களைப் பார்க்க இயலாது என்பது உண்மைதான். இறைக்காதல் மிகைத்ததொரு பொறாமையால் அவர்கள் தம்மை அப்படி மறைத்துக் கொள்கிறார்கள், அறபிப் பழங்கவி முதன்னபி சொல்வதைப் போல்:

      ”இந்த அழகிகள் ஆடையணிவது தம்மை அலங்கரிக்க அல்ல, தம் அழகைப் பாதுகாக்கவே!”  

(to be continued...)

No comments:

Post a Comment