Tuesday, December 3, 2019

ரூமியின் வாழ்வில் - 10


68
பூமித்தாய்

      ஒருமுறை மௌலானாவின் முதன்மையான சீடருள் ஒருவர் இறந்துவிட்டார். அவரை மண்ணறைக்குள் மரப்பெட்டியில் வைப்பதா அல்லது வெறுமனே புதைப்பதா என்று சீடர்களுக்குள் ஆலோசனை நடந்தது. எவ்வொரு முடிவும் எட்டப்படாமல் அவர்கள் ஞானி கமருத்தீனிடம் கருத்துக் கேட்டனர். மரப்பெட்டி இன்றி அவரது உடல் வெறுமனே புதைக்கப்பட வேண்டும் என்று முடிவு சொன்ன கமருத்தீன் விளக்கமும் சொன்னார்: “ஒரு குழந்தையை அதன் சகோதரன் நேசிப்பதை விடவும் அதனைப் பெற்ற தாய்தான் அதிகம் நேசிப்பாள். அதே போல், மரச் சவப்பெட்டியை விடவும் பூமித் தாய் தனது மகனைத் தன் மடியில் மிகப் பாசத்தோடு ஏற்றுக் கொள்வாள். மரமும் மண்ணிலிருந்தே பிறந்து வந்திருப்பதால் அது மனிதனுக்குச் சகோதரன் ஆகிறது.” இந்த விளக்கத்தைக் கேள்விப்பட்ட மௌலானா பெரிதும் மகிழ்ந்து ஞானி கமருத்தீனை மிகவும் பாராட்டினார். இந்த விளக்கத்தை எவ்வொரு நூலிலும் தான் படித்ததே இல்லை என்றும் சொன்னார்.


69
நின் பணி ஏற்பாய்
  
    தலைமைக் காஜியும் நிர்வாகத் தலைவரும் அக்காலத்தில் அந்நாட்டில் மாபெரும் சட்ட மேதை என்று புகழ் பெற்றவருமான கமாலுத்தீன் என்பார் ஒருமுறை கோன்யாவுக்கு வந்தார். இஜ்ஜுத்தீன் கைக்காவூஸ் என்னும் பெயர் கொண்ட ஆளுநரைச் சந்தித்தார். அவ்வூரின் முக்கிய அறிஞர்களான ஷம்சுத்தீன், ஜீனுத்தீன் ராஜி, ஷம்சுத்தீன் மாலத்தி போன்றோரைத் தாம் சந்தித்ததாகவும் கல்வியிலும் பயபக்தியிலும் சிறந்து விளங்கும் அவர்கள் எல்லாம் தான் மௌலானா ஜலாலுத்தீன் ரூமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதாகவும் அவர் ஆளுநரிடம் தெரிவித்து அத்தகைய மாபெரும் ஆளுமையைத் தான் காண நேரம் ஒதுக்கித் தருமாறு வேண்டினார்.

      தலைமைக் காஜி சொல்கிறார்: ‘நான் மௌலானாவின் வீட்டினுள் நுழைந்தவுடன் அந்த மகா ஞானியின் தோற்றத்தைக் கண்டு நான் மூச்சடைத்து நின்றுவிட்டேன். என்னை வரவேற்பதற்காக மிகுந்த கண்ணியத்துடனும் கனிவுடனும் மௌலானா எழுந்து வந்தார்.
      “எம்மை நீ கைவிடுகிறாய்;
      நின் பணி ஏற்பாய்.
      உன் கவனத்தை எப்படியெல்லாம்
      கவர்கிறோம் என்று பார்க்கவில்லையா நீ?”

      அதன் பிறகு மௌலானா இறைவனுக்கு நன்றி சொன்னவராக, கல்வியிலும் கண்ணியத்திலும் காஜி மிக உன்னதமான இடத்தை அடைந்திருக்கிறார் என்று சொன்னார். காஜி சொல்கிறார், “அதன் பின் மௌலானா மிக நுட்பமான விடயங்கள் குறித்துப் பேசத் தொடங்கினார். அத்தகைய கருத்துக்களை நான் அதுவரை கேள்விப்பட்டதே இல்லை, எந்த நூலிலும் படித்ததும் இல்லை. அவை எம்மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தால் நானும் எனது மகனும் அதாபெக்கும் மற்றும் சிலரும் மௌலானாவின் சீடர்கள் ஆனோம். நான் எனது வீட்டிற்குத் திரும்பிய பின்னரும் மௌலானாவின் ஈர்ப்பை உணர்ந்துகொண்டே இருந்தேன். நிம்மதியற்றுத் தவித்தேன். எனவே மீண்டும் மௌலானாவின் முன் சென்று நின்றேன். எனது குருநாதரைக் கண்ணியம் செய்யும் வகையில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். அந்நிகழ்வுக்கு கோன்யாவின் பெரிய மனிதர்கள் பலரையும் திரளாக அழைத்திருந்தேன்.

      ”அழைக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்ததால் அதற்குத் தக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக, குளிர் பானம் செய்வதற்கு எம்மால் முப்பது தாழிகளுக்கு மேல் சேகரிக்க முடியவில்லை. சர்பத்துக்காக ’சர்க்கரைக் கூம்பு’கள் சிலவும் வாங்கியிருந்தோம். பெருந்திரளான விருந்தினரைச் சமாளிக்க வேண்டியிருப்பதால் தம்மிடம் இருக்கும் சில பாத்திரங்களை இரவல் தரும்படி ஆளுநரின் மனைவியிடம் கேட்டிருந்தோம். சிறப்பு விருந்தினர்களுக்காகத் தேன்பானம் ஒன்றைத் தயாரிக்க நாடியிருந்தேன். பலருடைய தாகத்தையும் தணிக்கும் அளவுக்குப் போதிய சர்பத் இருக்கிறதா என்று நான் கவலைப்பட்டேன். அப்போது சட்டென்று அறைக்குள்ளே மௌலானா தோன்றினார். நாங்கள் வைத்திருக்கும் சர்பத்துடன் எவ்வளவு நீர் சேர்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சட்டென்று மறைந்துவிட்டார். எனது பணியாளர்கள் அறைக்கு வெளியே ஓடிச் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் மௌலானாவை அங்கே காணவில்லை. மௌலானாவின் ஆலொசனைப் படி நாங்கள் அனைத்து சர்பத்தையும் பள்ளிவாசலின் உலோகத் தொட்டியில் கொட்டினோம். அத்துடன் மேலும் மேலும் நீரையும் கலந்தோம். அவ்வப்போது சர்பத்தைக் குடித்துப் பார்க்குமாறும் அதிக அளவு தண்ணீர் கலந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறும் நான் எனது பணியாளர்களிடம் சொன்னேன். அனால் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் நடந்தது போல் எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் கலந்தோமோ அவ்வளவு அதிகமாக சர்பத் இனிப்பாகவும் சுவையாகவும் இருந்தது! இதற்கு மேல் நீரூற்ற முடியாது என்ற எல்லை எட்டிவிட்டது என்று நாங்கள் உணரும் வரை மேலும் மேலும் நீரூற்றிக் கொண்டே இருந்தோம். மௌலானாவின் அற்புதத்தை எண்ணி நாங்கள் வியப்பில் உறைந்திருந்தோம்.

      ’இசை நிகழ்ச்சி மதியம் தொட்ங்கி நள்ளிரவு வரை விருந்தினரின் எதிர்பாராத பரவச மனநிலைகளுடன் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி முழுவதும் நானும் மொய்னுத்தீனும் விருந்தினர்களுக்கு குளுமையான சர்பத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:

      ”காதலின் கதகதப்பான மூச்சு எழுகிறது
      காதலின் நறுமணம் இங்கே தவழ்கிறது
      நித்திய வாழ்வின் சத்திய பானத்தை
      அத்தனைப் பேருக்கும் அருந்திட அளிமின்!”

      ஆன்மிக ரகசியத்தின் பாடல் வேகம் பிடித்தபோது, நாங்கள் எல்லாரும் ஆன்மிக உணர்வெழுச்சியில் திளைத்திருந்தபோது சட்டென்று மௌலானா என்னைத் தன்னருகில் இழுத்து எனது கன்னங்கள் இரண்டிலும் முத்தமிட்டுப் பின்வரும் கவிதையைப் படித்தார்:

      ”என்னை நீ அறியாய் எனில்
      காதலியின் பிரிவுத் துயரத்தால்
      உறக்கமற்ற இரவுகளைக் கேள்
      களைப்புற்ற என் முகத்தைக் கேள்
      காய்ந்து வெடித்த என் உதட்டைக் கேள்”

      அங்கிருந்த பலரும் கீழே மண்டியிட்டு மௌலானாவின் பாதங்களை முத்தமிட்டபடி அவரின் சீடர்களாவதற்குக் கெஞ்சினர். எனது உலகப் பயன்களும் அதிகமாகின. எனது ஆன்மிகப் பார்வை மிக உன்னதமான நிலைக்குத் துலக்கம் அடைந்தது. விண்டுரைக்க முடியாத உணர்வுகள் எனது உள்ளத்தில் எழுந்தன. ‘சில நேரங்களில் மனதில் இருப்பவை நாவில் வெளிவர மறுக்கின்றன’ என்று அரபி முதுமொழி ஒன்று சொல்கிறது. இவ்வாறு சொல்லி நானும் மௌலானாவின் பணியாளனும் சீடனும் ஆனேன். மௌலானா என்னை ஆசீர்வதித்தார். இறையருளின் இரட்டைக் கதவுகள் எனக்குத் திறக்கப்பட்டன.”

70
மெழுகுவத்திகள் அற்புதம்


      இதே போல் இன்னொரு நிகழ்ச்சியில் மொய்னுத்தீன் ஒரு இசையமர்வுக்கு ஏற்பாடு செய்து நகரின் முக்கிய நபர்களை அழைத்திருந்தார். சபையில் ஒளியேற்றுவதற்காக ஒவ்வொரு விருந்தினரும் ஒரு பெரிய மெழுகுவத்தியைக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வியக்கும்படியாக மௌலானா அவர்கள் மிகச் சிறிய மெழுகுவத்தி ஒன்றைக் கொண்டு வந்தார். யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கடைக்கண் பார்வையால் தமது வியப்பைப் பரிமாறிக் கொண்டனர். மௌலானா ஒரு கஞ்சர் என்று சிலரும், ஒரு பித்தர் என்று சிலரும் மேலும் பல விதமாகவும் கருதினர். அவர்களின் எண்ணங்கள் மௌலானாவுக்குத் தெரியாமல் இல்லை. எனவே, தான் கொண்டு வந்திருக்கும் சின்னஞ் சிறிய மெழுகுவத்தியே அவர்கள் அனைவரும் கொண்டு வந்துள்ள பெரிய மெழுகுவத்திகளின் உயிரூற்று என்று அவர் சொன்னார். மௌலானாவின் நண்பர்கள் அதனை ஒத்துக்கொண்டனர். ஆனால் பிறர் மறுத்தனர். மௌலானா சொன்னார், “நீங்கள் நமப்வில்லை என்றால் உங்களுக்கு நான் ஆதாரம் தருகிறேன்.” இவ்வாறு சொல்லியபடியே தனது சிறிய மெழுகுவத்தியை அணைத்தார். உடனே அந்த இடம் முழுவதும் இருளாகிவிட்டது. மௌலானா மீண்டும் தனது மெழுகுவத்தியை ஏற்றியபோது பிற மெழுகுவத்திகள் எல்லாம் சுடர் பெற்றன. இதனைக் கண்டு அனைவரும் பெரிதும் வியந்தனர். முன்பு மௌலானாவை நம்பாதோர் அனைவரும் அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதன் பின் இசை நிகழ்ச்சி புதிய வேகத்துடன் தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெற்றது. பெரிய மெழுகுவத்திகள் அனைத்தும் கரைந்து தீர்ந்துவிட்ட நிலையிலும் மௌலானா கொண்டு வந்த சிறிய மெழுகுவத்தி எரிந்தபடி இருந்தது. அது கரைந்திருக்கவும் இல்லை, அதன் ஒளி மங்கவும் இல்லை. அன்றைய தினம் பலரும் மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.


71
உடைமைகளின் அர்த்தம்

      மௌலானாவின் சீடர் ஒருவர் கைசரியாவில் இருந்த இறையியற் கல்லூரியின் முதல்வராக இருந்தார். பெரிதும் கற்றறிந்த மார்க்க அறிஞர் அவர். பின்னால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி ஒன்றிலும் பேராசிரியராகப் பணி புரிந்தார். குருநாதர் ஆன்மிகச் சபையில் இருக்கும் நிலையில் தொழுகை செய்ய எவருக்கும் அனுமதியில்லை என்று மௌலானா ஒருமுறை குறிப்பிட்டதாக அவர் அறிவிக்கிறார். குருநாதர் அந்நிலையில் இருக்கும் போது, சீடர்கள் எல்லாம் தெய்வீக அருட்புலத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், சிலர் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்று தொழுகையில் ஈடுபடுகிறார்கள். மௌலானா ஆன்மிக இசையைக் கேட்பதும் ஆன்மிக உணர்வெழுச்சியில் போர்த்தப்பட்டிருப்பதும் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நிலையை அல்லது ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் நிலையை ஒத்தது. இவ்வாறும் மௌலானா குறிப்பிட்டார்.

      ”... இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பேரொளியில் ஒரு துகளை அடைந்துவிட்ட நிலையில் நான் சொல்கிறேன் தெய்வீகம் என்பது இறைக்காதலில் பரவசம் அடைந்திருப்பது அன்றி வேறில்லை. பருப்பொருட்களுக்கு அப்பாலான ஒரு நிலையால் நான் சூழப்பட்டிருக்கும் போது உலகிற்கு அப்பாற்பட்ட ஆனந்தக் களிப்பால் எனது சுயம் ஒளிமயமாகிறது. எனவே எனது சீடர்கள் நான் சொல்வதைக் கேட்டும் எனது தொடர்பில் இருந்தும் எனது பேரொளியில் பங்கு கொள்ள வேண்டும். எனவே நீங்கள் அத்தகைய ஒரு குருநாதரைக் கண்டால் அதை மட்டுமே பெரும் பேராகக் கருதுங்கள். எனது உறவால் உங்களின் உடலையும் உள்ளத்தையும் ஒளிமயமாக்குங்கள். அத்தகைய தொடர்புக்கு நன்றியுடன் இருங்கள்.”

      நாம் செய்ய வேண்டிய சரியான தொழில் எது? அல்லது நமது உடைமைகளின் தன்மைகள் என்ன? என்பது போன்ற பயனற்ற விவாதங்களில் நீங்கள் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் மௌலானா குறிப்பிட்டார். உண்மையில், உடைமைகளை எப்படிச் செல்வு செய்கிறீர்கள் என்பதே கவனிக்கத் தக்கது. அது உங்களுக்கு ஆன்மாவின் தொடர்பு ஏதுமற்றதாயும் வெறுமனே உலகப் பொருட்களின் நோக்கங்களை மட்டும் நிறைவேற்றுவதாகவும் நீங்கள் உணர்ந்தால், அப்பொருளை நீங்கள் எவ்வளவு ஆகுமான வழியில் பெற்றிருந்தாலும் சரியே, அப்பொருள் உமக்கு ஆகாததும் மட்டமானதுமே ஆகும். ரொட்டி உனது எஜமான் ஆகிவிடாத முறையில் ரொட்டியை உண்பாயாக! இவ்விடயத்தில் கலீஃபா உமர் அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், ’நீங்கள் உமது ரொட்டியை உமரைப் போல் உண்ணுங்கள். மக்கள் அவருக்கு ரொட்டி தருகின்றனர், அவர் மக்களுக்குச் சேவை செய்கிறார்.’ மேலும் இவ்விடயம் குறித்து மௌலானா பின்வரும் கவிதைகளைப் படித்தார்:

      “இறைப் பணி ஆற்றிட என்று
      உண்ணப்படும் கவளம் ஒன்று
      பொன் வெள்ளி மணிகள் யாவினும்
      மதிப்பில் குறைந்தது அன்று!
      தீய செயல்களின் துர்நாற்றம்
      தூய உணவைக் கெடுப்பதினும்
      வாயை மூடிப் பூட்டிவிடு
      அதன் சாவியைத் தொலைத்துவிடு!
      எவனின் உணவு பக்தியைத் தருமோ
      அவனின் உணவே ஆகுமானது!”

72
காணும் கண்

      மார்க்க ஆசிரியரும் சிறந்த அறிஞருமான ஷம்சுத்தீன் மௌலானாவின் சீடர்களில் ஒருவர். அவர் எப்போதுமே ஆன்மிக நிகழ்வுகளின்போது மௌலானாவின் முகத்தையே கூர்ந்து நோக்கியபடி இருப்பார். ஆன்மிக இசை நிகழ்வுகளில் அவர் ஏன் பாடுவதிலும் சுழல்வதிலும் பங்கேற்பதில்லை என்று ஒருமுறை மௌலானா கேட்டபோது மௌலானாவைத் தவிர வேறு எவருமே ரசித்துப் பார்க்கும்படியாக இல்லை என்றும் தனது குருவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விடத் தனக்கு இன்பம் தருவது வேறில்லை என்றும் அவர் சொன்னார். மௌலானா அவரது உணர்வை மிகவும் பாராட்டினார்கள். எனினும், தனக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் – அந்தரங்க முகம் – அதில் இறை ரகசியங்களின் ஞான ஒளிச் சுடர்கள் வெளிப்படுவதை அவர் ஓர்ந்து காண முயல வேண்டும் என்றும் சொன்னார். மேலும் மௌலானா சொன்னார், ஒளிவீசும் சூரியனை ஒருவர் நேருக்கு நேர் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முயலக் கூடாது. அதன் பிரகாசம் அவரது பார்வையைப் பறித்து விட்டால் பின்பு அவர் எதனையுமே பார்க்க இயலாமல் போய்விடும். மேலும், வெறுமனே புறக்கோலத்தைக் காண்பது மட்டுமே ஒருவரின் அகக் கண்ணில் பார்வையை வழங்கிவிடாது. பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:

      ”காணும் கண்ணுடையானே!
      இறைவனின் பிரதிபலிப்புக்களை மட்டுமே
      காண்பதில் நிம்மதி கொண்டிரு.
      ஒருபோதும் அவனது தூய முகத்தை
      நேருக்கு நேர் நோக்க எண்ணாதே!”

      (இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான புள்ளி யாதெனில் மௌலானா இங்கோ அல்லது இந்நூலில் வேறு எங்குமோ தனக்கு இறைப் பண்புகளைக் கோரவே இல்லை. ஆனால் ஆன்மிகச் சொல்லாடலின்படி, ஓர் உன்னத நிலையில் மனிதனின் சுயம் இறைவனில் எந்த அளவு அழிந்து (அதாவது, மறைந்து) விடுகிறது (ஃபனா என்னும் நிலையில் ஆகிவிடுகிறது) என்றால், அதன் பின் அந்த ஆன்மிக ஞானி ‘தன்னிலும் தன்னைப் பற்றியும்’ இறைவனையும் அவனது திருப்பண்புகளையும் தவிர வேறு எதனையும் பார்ப்பதும் உணர்வதும் இல்லை. ஆன்மிகப் பனுவல்களில் அவ்வப்போது சொல்லப்படுவது போல அவர் ‘உலகில் இருந்தாலும் உலகிற்கு உரியவராக இல்லை’)

73
அறிஞனில் குற்றம் காணல்

      ’ஷைகுகளிடம் (குருமாரிடம்) ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்று சந்தையில் சுற்றித் திரியும் இழி மக்கள் சொல்கிறார்களே, அவர்கள் எதைச் சொல்கிறார்கள்?’  என்று ஒருமுறை பஹாவுத்தீன் அவர்கள் மௌலானாவிடம் கேட்டார். மௌலானா சொன்னார், “அந்தக் ‘கெட்ட பழக்கம்’ என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ரகசியமாகச் செய்யப்படுகிறது. எனினும் உண்மையான ஷைகுகளிடமும் தர்வேஷ்களிடமும் அப்பழக்கம் இல்லை. குருமாரின் கோலத்தில் சுற்றி வருவோர், அந்தரங்கத்தில் பயபக்தி அற்றோர், அவர்களிடம்தான் காலம் செல்லச் செல்ல அந்தத் தீய பழக்கம் உருவாகிவிடுகிறது. ஆரம்பத்தில் அவர்களின் கல்வி அவர்களது தீய பழக்கத்தை மறைத்து நிற்கிறது. எனினும் இறுதியில் அவர்கள் வெளிப்படுத்தப்பட்டுத் தூற்ற்ப்படுகிறார்கள்.”

      உதாரணமாக, முன்பு சத்ருத்தீன் போன்ற மாபெரும் ஞானியருக்கெல்லாம் சவால் விடக்கூடிய ஒருவன் இருந்தான். அவன் பெயர் நசீருத்தீன். மிகுந்த கல்வி உடையவன்; ஆனால் பயபக்தி கிஞ்சிற்றும் இல்லான். அவனுக்குப் பெருந்திரளான தொண்டர்கள் இருந்தனர். ஒருநாள் மௌலானா அவன் வசிக்கும் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். சீடர்கள் சூழ தனது இல்லத்தின் மாடத்தில் அவன் அமர்ந்திருந்தான். மௌலானாவைச் சுட்டிக் காட்டி அவன் சொன்னான்: ‘இந்த மனுசன் முகம் எவ்வளவு விசித்திரமா இரிக்கி! அவன்ற தலப்பாவையும் ஜிப்பாவையும் பாருங்க! அவன்ற இதயத்துல தெய்வீகப் பொறி ஒன்னாவது வந்திருக்கும்னு நான் காணல. என்ன மாதிரியான ஆளு அவன்ற முரீதாவானோ?’

      மௌலானா அவனது வலிய கோட்டையின் சுவருக்கு அப்பால் சென்று “தரங்கெட்டவனே! எச்சரிக்கை!” என்று சொல்லிச் சென்றார்கள். உடனே அவன் இடி தாக்கியது போல் கதறிக்கொண்டு கீழே விழுந்து வலியால் துடித்துப் புரண்டான். அவனது சீடர்கள் பதறிக்கொண்டு அவனைச் சுற்றி வந்து காரணம் வினவினர். தான் மௌலானாவைப் பற்றி வாய் நிறைய மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டதாகவும் அந்த மகா குருவின் ஆன்மிக ஆற்றல்களைத் தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவன் அரற்றினான். அதே சமயம், மௌலானா அவ்வாறு சொன்னது யாரை நோக்கி என்று அவருடன் இருந்த சீடர்களுக்கு அதுவரை தெரியவில்லை. நடந்ததை மௌலானா அவர்களுக்கு விளக்கிய பிறகு அச்செய்தி சந்தை வீதிகளில் எல்லாம் காட்டுத்தீ எனப் பரவிற்று. விரைவில் மக்கள் அந்த பொய் குருவைப் பற்றிக் கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். அவன் ஓர் ஒழுக்கங்கெட்டவன் என்றும் தன்னை ஞானி என்று விளம்பரப் படுத்திக்கொள்ள பணம் தந்து ஆட்களை ஏவியவன் என்றும் அவனையும் நம்பி மக்கள் ஏமாந்தனர் என்றும் பேசிக் கொண்டார்கள். இறுதியில் அவன் கோன்யாவில் உள்ள அனைவராலும் நிந்திக்கப்பட்டான். புனிதனாக வேடமிட்டுத் தம்மை ஏமாற்றிய அவனின் தொடர்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக அவனது சீடர்களே அவனுக்கு நஞ்சூட்டினார்கள்.

74
நாய்களும் மனிதரும்

      சிறந்த கலைஞரான ஷைஃகு பத்ருத்தீன் அறிவிக்கிறார். ஒருநாள் அவரும் பள்ளித் தலைமை ஆசிரியரான சிராஜுத்தீனும் மௌலானாவுடன் காலாற நடந்து கொண்டிருந்தனர். தான் தனியாக நடக்க வேண்டும் என்று விரும்புவதாக மௌலானா சொன்னார். எங்கே சென்றபோதும் அங்கே எதிர்படுகின்ற மக்கள் எல்லோரும் சொல்லும் சடங்கு ரீதியான முகமன்களுக்கு விடை சொல்ல்லிக் கொண்டே இருப்பது பெரிதும் அலுப்பூட்டுகிறது என்பதால் தான் தனியாக நடக்க விரும்புவதாக விளக்கினார். அவர் சிறிது நேரம் தனியாகவே நடந்து வந்தார். ஊர்ப்புறத்தே மணல் வெளியில் சில நாய்கள் படுத்திருப்பதைப் பார்த்தார். காலை இளம் பரிதியின் ஒளிக்கு முகம் காட்டியபடி அந்த நாய்கள் எல்லாம் ஒற்றுமையாகவும் மிக நிம்மதியாகவும் படுத்திருபப்தை மௌலானாவிற்கு பத்ருத்தீன் சுட்டிக் காட்டினார்: “இந்த நாய்களைப் பாருங்கள், அவை எவ்வளவு ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் எப்படி இருக்கிறோம்?”

      மௌலானா சற்று நேரம் யோசித்தார். பிறகு சொன்னார், “இந்த நாய்கள் இப்போது அமைதியாகப் படுத்திருக்கிறன என்பது உண்மைதான். ஆனால், ஒரு எலும்புத் துண்டை எடுத்து அவற்றிடையே வீசி எறியுங்கள். நீங்கள் சொல்லும் ஒற்றுமை என்னவாகிறது என்று அப்போது பாருங்கள். மனிதர்களின் நிலையும் அப்படித்தான். இரண்டு மனிதரிடையே சுயநலம் எதுவுமில்லாமல், பொருளாதார விடயம் எதுவுமில்லாமல் இருக்கும் வரை அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால், உலக லாபம் எதையாவது அவர்களுக்கு முன் போட்டுப் பாருங்கள். அப்போது அவர்களின் அமைதியும் ஒற்றுமையும் காணாமல் போயிவிடுகிறது. நாய்களை விடவும் மோசமாக அடித்துக் கொள்கிறார்கள்.” கடந்து போகின்ற இந்த உலக வாழ்க்கைக்குத் தேவை ஆன, ‘இறந்து அழிந்து போகின்ற’ பொருட்களை மிகக் குறைவாக மட்டுமே சேகரித்துக் கொள்கின்றவர்கள் மட்டுமே இங்கே அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர்.

75
பொற்காசுகள்

      ஒருமுறை ஆன்மிகக் கூட்டம் ஒன்றிற்கு மௌலானாவை மொய்னுத்தீன் அழைத்திருந்தார். மௌலானாவை கண்ணியம் செய்வதற்காக ஊரின் பெரிய மனிதர்களையும் அதற்கு அவர் அழைத்திருந்தார். இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. மிக உயர்ந்த தரத்திலானா சிறப்பான அதி சுவையான உணவுகள் மௌலானா முன் வைக்கப்பட்டன. பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றைத் தட்டில் வைத்து அதன் மீது சோற்றைக் குவித்து மூடி மறைத்திருந்தார் மொய்னுத்தீன். உணவைத் தொடாமலேயே மௌலானா அதனைக் கண்டுபிடிக்கிறாரா என்று சோதிக்கவே அவ்வாறு செய்திருந்தார். மேலும் தந்திரமாக, அவ்வுணவு ஆகுமான வழியில் எச்சரிக்கையுடன் ஈட்டிய பணத்தில் தயார் செய்யப்பட்டது என்பதால் அதனைத் தயக்கமின்றி உண்ண வேண்டும் என்றும் சொன்னார். மௌலானா அவ்வுணவைத் தொடாமலேயே அமர்ந்த்ருந்தார். மேலும், அது போன்ற நல்ல உணவு பொற்காசுகள் கலக்கப்பட்டு வீணாகக்கூடாது என்றும் சொன்னார். ஆம், மொய்னுத்தீனின் தந்திரத்தை மௌலானா தனது அக சக்தியால் கண்டுபிடித்துவிட்டார். அதன் பிறகு மௌலானா ஒரு நெடும்பாட்டின் முதல் அடிகளைப் படித்தார்:

      ”இனிய பொருட்களின்
      பொலிவுக்கும் அழகிற்கும் அல்ல
      என் இதயத்தில் காதல்.
      அழியும் உணவின் உள்ளிருக்கும்
      பொற்காசுகள் எனக்கெதற்கு?”

      மொய்னுத்தீன், மௌலானாவிடம் மன்னிப்புக் கோரினார். மௌலானாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு அவரது மேன்மையைச் சோதித்தமைக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

76
மறைந்திருக்கும் தர்வேஷ்

      உண்மையான தர்வேஷ் மறைந்திருக்கிறார் அல்லது தன்னை மறைத்துக் கொள்கிறார் என்று சொல்லப்படுவதன் மெய்ப்பொருள் யாது? அவர் தன்னை ஆடைகளைக் கொண்டு அப்படி மறைத்துக் கொள்கிறாரா அல்லது அது ஒருவித விசேசமான வேறுபட்ட கண்ணோட்டத்தைக் குறிக்கிறதா? என்று ஒருமுறை மௌலானாவிடம் அவரது மகன் வினவினார்.

      மௌலானா சொன்ன விடை: “அது இரண்டுமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் தமது சூஃபி நெறியை மக்களிடமிருந்து மறைப்பதற்காக அவர் ஏதெனுமொரு தொழிலையும் தேர்ந்து கொள்கிறார். உதாரணமாக, சில தர்வேஷ்கள் காதலைச் சொல்கின்ற கவிதைகளை எழுதுகிறார்கள். மக்கள் அவற்றை உடல் ரீதியான காதலாக விளங்கிக் கொள்கிறார்கள். சிலர் வணிகம் செய்கின்றனர். உதாரணமாக, பாபா ஃபரீதுத்தீன் அத்தார் ஒரு மருந்தகராக இருந்தார். பஜாரில் ஒரு மருந்தகம் வைத்திருந்தார். வேறு சிலர் இலக்கிய எழுத்தாளர்களாக இருந்தனர். ஒருவர் இவை அனைத்துக்கும் தொடர்பில்லாத எதையாவது செய்துகொண்டிருக்கக் கூடும். உண்மையில் அவர்கள் யாவர் என்பதை மறைப்பதற்காகவே இதெல்லாம் வடிவமைக்கப் பட்டுள்ளன. உலக மக்களின் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்கும் பொருட்டே அவர்கள் இன்னனம் செய்கின்றனர். உலக மக்கள் தம்மைத் தொந்திரவு செய்யாமல் தனியே விட்டுவிட வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பொது மக்கள் ஏற்காத காரியங்களைச் செய்கின்ற ஒரு கூட்டத்தாரும் உள்ளனர். எனவேதான், “அல்லாஹ் தனது நேசர்களை (அவ்லியாக்களை) மறைத்து வைத்திருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். சூஃபி நெறியைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் நிம்மதியாகத் தமது ஆன்மிக வேலைகளைச் செய்ய வேண்டும் என்றுதான் இத்தகைய கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. என்ன விலை கொடுத்தும் உலக லாபங்களை அடைய வேண்டும் என்பதொன்றே தமது வாழ்வின் நோக்கமாகக் கொண்ட மக்களுடன் கலப்பதால் அந்தப் பாதை தடைப்படும். உண்மையில் அத்தகையோர் கொடுக்கும் விலை என்ன? ஆன்மிக உலகமும் பணியும், அதன் பயனாகக் கிடைக்கின்ற ‘எப்போதும் இருப்பவனும் எப்போதும் இருக்கப் போகிறவனும் எப்போதும் இருந்தவனுமான’ இறைவனின் காதலும்தான் அவர்கள் இழக்கும் விலை. பிறகு மௌலானா பின்வரும் கவிதையை படித்தார்:

      ”அனைவரும் எப்போதும்
      அனைவரையும் அறிந்தபடியே
      கண்ணாமூச்சி ஆடுகின்றனர்.
      உண்மையில் அவர்கள் யாரோ
      அப்படித் தெரிவதில்லை
உலகின் பார்வையில்.
அவர்கள் என்னவென்று
ஒருகணமேனும்
பார்ப்பதில்லை பலரும்.
உள்ளொளியில் திரிகின்றனர்
யாரும் அறியாமல்
உலகில் அற்புதங்கள் செய்தபடி.
சிலநேரங்களில், அப்தால்களெனும்
சிறிய ஞானியரும்கூட
தாம் யாவர் என்பதைத்
தாமே குறைவாகத்தான் அறிகின்றனர்.
அவர்களது அகமும் புறமும்
அனைவருக்கும் என்றும் புதிர்தான்!”


77
இறக்கும் முன் இறந்து போ

      ஒருமுறை மௌலானா தன் மகனிடம் சொன்னார், “உன் பாதை என்ன என்று யாராவது உன்னிடம் கேட்டால் நீ இப்படிச் சொல்: ‘என் பாதை மிகக் குறைவாக உண்பதே. அல்ல, என் பாதை என்பது இறந்து போவதே! அதாவது, இறைவனின் பேரொளியில் காணாமல் போவது.’” அதன் பின் மௌலானா ஒரு கதை சொன்னார். தர்வேஷ் ஒருவர் ஒரு வீட்டின் முன் நின்று தண்ணீர் கேட்டார். உள்ளிருந்து அழகிய பெண் ஒருத்தி வாசலுக்கு வந்து அவர் கையில் வெற்றுப் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தாள். அதனைப் பார்த்த அவர், ‘நான் குடிப்பதற்குத் தண்ணீர்தானே கேட்டேன்?’ என்றார். அப்பெண் சொன்னாள், ‘நீங்கள் கேட்டதற்கான விடையைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். தர்வேஷ் என்பவர் பயபக்தர். அவர் இரவெல்லாம் உறங்கிக் கொண்டும் பகலெல்லாம் உண்டு கொண்டும் இருக்க மாட்டார். அவர் பல இரவுகள் பட்டினியாகவே படுப்பார். பல பகல்கள் ஏதும் உண்ணாமலே இருப்பார்.’ மேலும், ‘உண்பது என்பது வாழ்வதற்காகவே. மாறாக, வாழ்வது என்பது மேலும் மேலும் உண்பதற்காக அல்ல’ என்றொரு பாரசீக ஞானி சொல்லியிருக்கிறார்.” அந்த இளம்பெண்ணைச் சந்தித்த பிறகு அந்த தர்வேஷ் அதன் பின் தனது இறுதி மூச்சு வரை பல நாட்கள் பகலெல்லாம் உண்ணா நோன்பிலேயே கழித்தார் என்று மௌலானா சொன்னார்.

78
காரணம் எப்படி காரியம் அப்படி
  
    மளிகைக் கடைக்காரன் ஒருவன் தன் கடையில் கிளி ஒன்றை வைத்திருந்தான்.
  
    ஒருநாள் கடைக்குள் நுழைந்த பூனை ஒன்று எண்ணெய்ப் பாத்திரத்தைக் கவிழ்த்துவிட்டு ஓடிவிட்டது.

     கடைக்குத் திரும்பி வந்த வியாபாரி அந்தக் கிளிதான் எண்ணெய்யைக் கொட்டிவிட்டது என்று நினைத்தான். கோபத்தில் அவன் கிளியின் தலையில் பலமாகத் தட்டினான். அதன் தலையிலிருந்த இறகுகள் எல்லாம் கொட்டிவிட்டன.
  
    சிறிது நேரம் கழித்து வழுக்கைத் தலையன் ஒருவன் கடைக்கு வந்தான். அவனைப் பார்த்துக் கிளி கத்தியது: “யோவ், நீயும் எண்ணெய்யைக் கொட்டி விட்டாயா?”


79
பகுதிகள் வேண்டாம் முழுமை வேண்டும்

      பச்சை குத்துபவனிடம் ஓர் இளைஞன் வந்தான். தனது புஜத்தில் சிங்கம் ஒன்றின் உருவத்தைக் குத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

      ஆனால் அவ்விளைஞன் ஒரு கோழை. ஊசியின் முனை முதலில் குத்திய உடனேயே கதறினான், “சிங்கத்தின் எந்தப் பகுதியை வரைகிறாய்?”

      ”வால்” என்றான் பச்சை குத்துபவன்.

      ”சிங்கத்துக்கு வால் ரொம்ப முக்கியமாக்கும். அதெல்லாம் வேணாம். வேற பகுதியை வரை” என்று கட்டளை இட்டான் இளைஞன்.

      ஓவியன் அவன் சொன்னபடியே செய்தான். மறுபடியும் அவ்விளைஞன் கதறினான். அப்படியே ஒவ்வொரு முறையும் கால் வேண்டாம் பிடரி வேண்டாம் வயிறு வேண்டாம் தலை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் அவனிடம் பச்சை குத்துபவன் சொன்னான், “தலை கால் வயிறு வால் எதுவுமே வேண்டாம், ஆனால் உனக்குச் சிங்கம் மட்டும் வேணுமா? பகுதிகள் எதுவுமே வேண்டாம் ஆனால் முழுமை மட்டும் வேண்டும் என்றால் அது முடியாது தம்பி.”

80
அரசனும் அடிமைப் பெண்ணும்

      முன்பொரு அரசன் இருந்தான். அவன் ஓர் அடிமைப் பெண் மீது காதல் கொண்டான். அவளை விலை கொடுத்து வாங்கி வந்தான். ஆனால் அவள் சட்டென்று நோயில் விழுந்தாள். எந்தவொரு மருத்துவராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஏனெனில், அந்த மருத்துவர்கள் எல்லாரும் சுயநலத்தில் இருந்தனர். அவளுக்குத் தமது மருந்துகளைக் கொடுத்தபோது “இன் ஷா அல்லாஹ்” (இறைவன் நாடினால்) என்று சொல்ல மறந்துவிட்டனர்.

      ஒரு நாள் அரசன் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு முதிய ஞானியைப் பார்த்தான். மறுநாள் அதே ஞானி அரண்மனையின் வாசலில் வந்து நின்றார். அந்த அடிமைப் பெண்ணைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்றார்.

      அவளுக்கு அருகில் அவர் அமர்ந்தபோது முன்பு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் எல்லோரும் தமது தன்முனைப்பின் காரணத்தால் அவளது அகநிலையைக் காணத் தவறிவிட்டனர் என்பதை உணர்ந்துகொண்டார். அவர்களின் அகந்தையே அவர்களுக்குத் திரையாகிவிட்டது.

      அவள் காதலில் இருப்பதாலேயே அப்படித் தேய்ந்துகொண்டு வருகிறாள் என்று அவர் கண்டார். அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவளின் நாடியை அவர் சோதித்தார். சுற்றி வளைத்துப் பல கேள்விகள் கேட்டுக் கடைசியில் உண்மையை அறிந்தார். சமர்கந்த் நகரைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவனை அவள் காதலிக்கிறாள்.

      ’இவளது நோய்க்கு மருந்து வேண்டும் என்றால் சன்மானங்கள் அளிப்பதாகச் சொல்லி எப்படியாவது அந்தப் பொற்கொல்லனை நீ இங்கே அழைத்து வர வேண்டும்’ என்று அவர் அரசனிடம் தனிமையில் சொன்னார்.

      பொற்கொல்லனைக் கவரும்படிப் பேசுவதற்கு நாவன்மை மிக்க தூதர்களை அரசன் அனுப்பி வைத்தான். மிகுந்த பேராசையுடன் அவன் வந்து சேர்ந்தான். அவனுக்கும் அடிமைப் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

      ஆறு மாதத்தில் அவள் முழுமையாக நலம் பெற்றாள்.

      ஆனால், அந்த மாய மருத்துவர் ஒரு ரகசிய மருந்தைத் தயாரித்துப் பொற்கொல்லனுக்கு அவனறியாமல் ஊட்டி வந்தார். அதன் காரணமாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து நலிந்து காணச் சகிக்காத கோரமாகிவிட்டான். அவன் மீதான காதல் அவளிடம் மெல்ல மறைந்து போய்விட்டது.

      ஒருநாள் அந்தப் பொற்கொல்லன் இறந்துவிட்டான். அவனது நினைவுகள் அவளது உள்ளத்திலிருந்து நீங்கிவிட்டது.

      இந்தக் கதை உங்களுக்கு அதிர்ச்சி தருகிறது. ஏனெனில் முழுமையான கதையை நீங்கள் அறியவில்லை.


(to be continued...)

No comments:

Post a Comment