Friday, December 27, 2019

ரூமியின் ஞான உரைகள் - 1


ரூமியின் ஞான உரைகள்

ஃபீஹி மா ஃபீஹி
(அதில் என்ன உள்ளதோ அதுவே அதில் உள்ளது)



பாரசீக மூலம்
மவ்லானா ரூமி

தமிழாக்கம்
ரமீஸ் பிலாலி


உரை – 1


      ரூமி சொன்னார்: “நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நவின்றார்கள், ‘அறிஞருள் தீயோர் செல்வந்தரைச் சந்திப்போர்; செல்வந்தருள் நல்லோர் அறிஞர்களைச் சந்திப்போர்; வறிய ஞானியின் வாசலில் நிற்கும் செல்வந்தன் சிறந்தோன்; செல்வந்தனின் வாசலில் சென்று நிற்கும் வறிய ஞானி கீழோன்.”

      மக்கள் இந்த நபிமொழியின் வெளிப்படையான அர்த்தத்தை மட்டுமே கவனம் கொள்கின்றனர். எனவே, அறிஞர்கள் ஒருபோதும் செல்வந்தர்களைச் சந்திக்கக் கூடாது என்றும் அப்படிச் சந்தித்தால் அவர்கள் தீய அறிஞர்கள் ஆகிவிடுவர் என்றும் எண்ணுகின்றனர். 

      உண்மைப் பொருள் அது அன்று. மாறாக, செல்வந்தரைச் சார்ந்து, அச்செல்வந்தர் தமக்குத் தரும் ஆதரவுகளை நயந்து அவர்தம் பார்வை தம் மீது பட வேண்டுமே என்று எதிர்பார்த்து வாழும் அறிஞர்களே தீயோர் ஆவர்; செல்வந்தர் தமக்கு அன்பளிப்புக்கள் தருவர், தம்மைக் கண்ணியம் செய்வர், தமக்குப் பதவி உயர்வு அளிப்பர் என்னும் நோக்கம் கொண்டே அத்தகைய அறிஞர்கள் கல்வி கற்கின்றனர்.

      எனவே, செல்வர்களுக்காகவே அத்தகைய அறிஞர்கள் தம்மை மேம்படுத்தவும் கல்வி தேடவும் செய்கின்றனர். செல்வந்தர் மீதான அச்சத்திலேயே அவர்கள் அறிஞர்கள் ஆகின்றனர். அவர்கள் தம்மைத் தாமே செல்வர்களின் அதிகாரத்திற்கு ஒப்படைத்து விடுகின்றனர். தமக்குச் செல்வந்தர் தீட்டித் தரும் திட்டங்களுக்கு அவர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர். எனவே, அவர்கள் ஒரு அதிகாரியைச் சந்தித்தாலும் அல்லது ஓர் அதிகாரி அவர்களைச் சந்தித்தாலும், எப்படி ஆயினும், அவர்களே சந்திப்போர் மற்றும் அந்த அதிகாரியே சந்திக்கப் படுவோன் ஆகின்றனர்.

      எனினும், அறிஞர்கள் அதிகாரிகளைத் திருப்தி படுத்துவதற்காக அல்லாது சத்தியத் தேட்டத்திலேயே ஆரம்பம் முதல் கடைசி வரை கல்வி கற்பர் எனில் – தாம் கற்ற கல்வியின் சத்தியத்தில் இருந்தே அவர்தம் சொல்லும் செயலும் நிகழும் எனில், தாம் கற்ற கல்வியை நடைமுறைப் படுத்துவதே அவர்தம் இயல்பாகவும், எங்ஙனம் மீன்கள் நீரில் மட்டுமே வாழ முடியுமோ அப்படி, தாம் கற்றதற்கு மாற்றமாக அவர்களால் வாழ இயலாது என்ற நிலையில் இருப்பரோ – அத்தகைய அறிஞர்கள் தம்மை இறைவனின் அதிகாரத்திற்கு ஒப்படைத்தோர் ஆவர். இறைத்தூதர்களின் ஆசிகளும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் அவர்களால் தாக்கம் பெறுவர், அவர்களின் முன்மாதிரியால் ஊக்கம் பெறுவர், அவர்கள் அதனை அறிந்திருப்பினும் அறியாதிருப்பினும் சரியே.

      அத்தகைய அறிஞர்கள் ஓர் அதிகாரியைச் சந்தித்தாலும், அவர்களே சந்திக்கப் பட்டோர் ஆவர், அந்த அதிகாரியே சந்தித்தோன் ஆவான். ஏனெனில், எப்படி ஆயினும், அந்த அறிஞர்களிடம் இருந்து நன்மையும் உதவியும் பெறுபவன் அந்த அதிகாரியே. அத்தகைய அறிஞர்கள் அதிகாரியைச் சார்ந்திருப்போர் அல்லர். அவர்கள் ஒளி உமிழும் சூரியன் போன்றோர். உலகில் அனைவருக்கும் வரையாது வழங்குவதே அவர்தம் தொழில். அவர்களால் கற்கள் அணிமணிகள் ஆகின்றன. அவர்களால் மலைகள் செப்பும் இரும்பும் வெள்ளியும் பொன்னும் பொதிந்த சுரங்கம் ஆகின்றன. அவர்களால் நிலம் புத்துயிரும் பசுமையும் ஆகிறது. அவர்களால் மரங்களில் கனிகள் விளைகின்றன. அவர்களால் மார்கழிக் காற்று கதகதப்பு ஆகிறது. கொடுப்பதே அவர்தம் தொழில், அவர்கள் பெறுவதில்லை. இதனை அறபிகளின் முதுமொழி ஒன்று இப்படிச் சொல்கிறது: “கொடுக்கவே கற்றோம் யாம், எடுக்கக் கற்றோம் அல்லோம்.” எனவே, எல்லா வழிகளிலும், அவர்களே சந்திக்கப் படுவோர் (மஸூர்), அதிகாரிகளே சந்திப்போர் (ஸாயிர்).

      மௌலானா அப்துல் வாஜித் வாலே அவர்களின் பிரதியில் இவ்விடத்தில் பின்வரும் செய்தி உள்ளது:

      ”இறைவன் சொல்கிறான்: ‘உமது அறிவு, ஆற்றல் மற்றும் தன்முனைப்பு ஆகியவை மீது கர்வம் கொள்ளற்க. என்னையே நீங்கள் முற்றும் அறிந்தோன் என்றும் சர்வ வல்லோன் என்றும் புரிந்து கொள்க. அப்படி ஆயின், யானல்லாத பிறவற்றிடம், அதிகாரிகள் மற்றும் அரசர்கள் ஆகியோரிடம் நீங்கள் உதவி தேடுவதை விட்டும் உங்களைக் காப்பாற்றுவேன். கூறுக: “இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம் – குர்ஆன் 1:4).’”

      இவ்விடத்தில், குர்ஆனின் திருவசனம் ஒன்றை விளக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. இப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் பொருண்மைக்கு அது சற்றே தொடர்பற்றதுதான். ஆனாலும், அது பற்றிச் சொல்லிவிட என் உள்ளத்தில் உதிப்பு வருவதால் அதுவும் பதிவாக வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

      ”நபியே! நும் கைவசப்பட்ட கைதியரிடம் கூறுக:
      ’நும் உள்ளங்களில் ஏதேனும் நன்மை இருப்பதை
      அல்லாஹ் அறிந்தால்,
      நும்மிடம் எடுக்கப்பட்டதினும் மேலானதை
      நுமக்கு அல்லாஹ் தருவான்;
      மேலும், நுமக்கு மன்னிப்பான்.
      மேலும், அல்லாஹ்
மிகவும் மன்னிப்போன், பேரருளாளன்.”
(குர்ஆன்: 8:70).

      இத்திருவசனம் அருளப்பட்ட சூழல் யாதெனில், நபிகள் நாயகம் (ஸல்), நிர்காகரிப்பாளருடன் சமர் புரிந்து வீழ்த்தி, பொருள் கவர்ந்து, பலரையும் கைது செய்து அவர்தம் கைகளையும் கால்களையும் தளையிட்டார். அந்தக் கைதியருள் நபியின் சிற்றத்தா அப்பாஸ் அவர்களும் ஒருவர். தளைப்பட்ட கைதியர் கையறு இழிவில் இரவெல்லாம் அழுது புலம்பினர். வாளை எதிர்பார்த்து வாழ்வின் நம்பிக்கை இழந்தனர். இதனைக் கண்ட நபி முஹம்மத் (ஸல்) நகைத்தார்.

      கைதிகள் கூவினர், “பாருங்கள்! இதோ இவரிடம் சராசரி மனிதனின் குணம் வெளிப்படுகிறது. இவர் மனிதப் புனிதர் என்பது பொய். சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதிகளான நம்மைப் பார்த்து அவர் ரசித்துக்கொண்டு நிற்கிறார். தமது இச்சைகளால் ஆளப்படுவோர்தாம் தமது எதிரிகள் மீது வெற்றி கிடைத்து, அவர்கள் தமது ஆசைப்படி அழிக்கப்படுவதைப் பார்த்து களிப்பெய்தி மகிழ்ச்சி அடைவார்கள்.”

      அவர்களது உள்ளங்களில் இருப்பதைக் கண்டு கொண்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் சொன்னார், “அப்படி இல்லை. நான் கைப்பற்றிய கைதிகளைக் கண்டு நான் ஒருபோதும் களித்ததில்லை. உங்கள் துன்பத்திலும் எனக்கு உவகை இல்லை. ஆனால், நான் மகிழ்ந்து சிரித்தேன் என்பது உண்மைதான். அதன் காரணம், நான் ஒன்றை எனது அகப்பார்வையால் காண்கிறேன். அதாவது, மக்களை நான் சங்கிலியால் பிணைத்து, கழுத்தைப் பிடித்து இழுத்தபடி எரிநரகின் கரும் புகையை விட்டு வெளியேற்றி சுவர்க்கத்தினுள் கொண்டு செல்கிறேன். ஆனால் அவர்கள் அழுது புலம்பி வழக்கு உரைக்கின்றனர். ‘ஐயா, ஏன் நீங்கள் எம்மை இந்த தன்னழிவின் படுகுழியில் இருந்து பாதுகாப்பான தோட்டத்திற்கு இட்டுச் செல்கிறீர்?’ எனவே, எனக்குச் சிரிப்பு வருகிறது.

      ”ஆனால், நான் சொல்வதைக் காண்பதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், நான் சொல்வதைக் கேளீர். உமக்கு இதனைச் சொல்லும்படி இறைவன் எனக்கு ஆணையிடுகிறான்: முதலில் நீங்களே படை திரட்டினீர். உமது வலிமையில் பெருமிதம் வளர்த்தீர். உமது உரத்தையும் மறத்தையும் நம்பினீர். ’நாம் முஸ்லிம்களைக் கைப்பற்றி அவர்களை அழித்தொழிப்போம்’ என்று தமக்குள் சொல்லிக் கொண்டீர், ஆனால், உமது ஆற்றல்களை மிகைத்த அந்த ஒரு பேராற்றலை நீங்கள் கருதவில்லை. நும் படையினும் மேலான ஓர் படை உண்டு என்பதை நீவிர் அறியவில்லை. எனவே உமது திட்டங்கள் எல்லாம் தலை கீழாய் மாறின. இப்போதும், உமது அச்சத்தின் காரணமாக நீவிர் உமது பழைய நம்பிக்கைகளையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளீர். உமக்கு மேலுள்ள ஏக சத்தியத்தை நீவிர் காணவில்லை. அந்த மகா சக்தியைக் காணாது நீவிர் எனது ஆற்றலைப் பார்க்கிறீர். ஏனெனில், நீவிர் என்னால் கைப்பற்றப்பட்டீர் என்று பார்ப்பதே உமக்கு இலகுவாக இருக்கிறது.

      ”உமது இந்த நிலையிலும், நான் உமக்குச் சொல்கிறேன்: எனது ஆற்றலை நீவிர் ஏற்று, எனது ஆசைப்படி உம்மை அழித்துக்கொள்ள நீவிர் ஆயத்தமானால், அப்போதும் உம்மை நான் இத்துன்பத்திலிருந்து ஈடேற்றிவிட இயலும். கரிய் எருதிலிருந்து வெள்ளெருதினைக் கொண்டு வர ஆற்றல் உள்ளோன், வெள்ளெருதில் இருந்து கரிய எருதினையும் கொண்டு வருவான்.

      ”இரவைப் பகலில் கோர்ப்பவன் நீயே!
      பகலை இரவில் கோர்ப்பவன் நீயே!
      உயிரற்றதில் இருந்து
      உயிருள்ளதை வெளிப்படுத்துவோன் நீயே!
      உயிருள்ளதில் இருந்து
      உயிரற்றதை வெளிப்படுத்துவோன் நீயே!
      நீ நாடியோருக்கு
      கணக்கின்றித் தருகின்றாய்!”
      (குர்ஆன்: 3:27)

      ”நுமது பழைய பழக்கங்களை விட்டு மாறிவிடுங்கள். நும்மிடமிருந்து எடுக்கப்பட்ட உடைமைகள் அனைத்தையும் திருப்பித் தந்துவிடுகிறேன், பல மடங்காக. மேலும், நுமது பழிகளை எல்லாம் மன்னித்துத் தீர்த்து, இம்மையிலும் மறுமையிலும் நுமக்கு நல்வாழ்வு உண்டாகச் செய்கிறேன்.

      ”’நிச்சயமாக,
      நிராகரிக்கும் கூட்டத்தினரே அன்றி
      வேறெவரும்
      அல்லாஹ்வின் கருணை மீது
      நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.’
      (குர்ஆன்: 12:87)”

      நபியின் நல்லுரை கேட்டதும் அப்பாஸ் அவர்கள், “நான் திருந்தினேன். எனது பழைய வழிகளை விட்டும் திரும்பினேன்” என்று சொன்னார்.

      நபி முஹம்மத் (ஸல்) அவரிடம் சொன்னார், “உமது இந்தப் பேச்சுக்கு இறைவன் ஆதாரம் கோருகிறான். ஏனெனில், நேசம் உரைப்பது எளிது. அதற்கான ஆதாரம் தருதல் கடினம்.”

      அப்பாஸ் கூறினார், “பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்...), நீவிர் கோரும் ஆதாரம் என்ன?”

      ”உம்மிடம் உள்ள உடைமைகள் அனைத்தையும் இஸ்லாமியப் படைக்குத் தந்துவிட வேண்டும். இஸ்லாமியப் படையின் வலிமை அதிகமாகட்டும். நீவிர் முஸ்லிமாகிவிட்டது உண்மை எனில், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு நீவிர் நலம் நாடுவது உண்மை எனில், இதனைச் செய்க” என்று நபி முஹம்மத் (ஸல்) சொன்னார்.

      ”இறைத்தூதரே! என்னிடம் என்ன மிச்சம் உள்ளது. அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டனர். நைந்து கிழிந்த கோரைப் பாய் கூட என்னிடம் மிச்சமில்லை” என்று அப்பாஸ் கூறினார்.

      நபி முஹம்மத் (ஸல்) அவரிடம் சொன்னார், “பார்த்தீரா, நீவிர் இன்னமும் உமது பழைய வழிகளைக் கைவிடவில்லை. நீவிர் இன்னமும் சத்தியத்தின் ஒளியை தரிசிக்கவில்லை. உம்மிடம் இன்னமும் எவ்வளவு உடைமை மிச்சமுள்ளது என்று நான் சொல்லட்டுமா? அதை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர் என்று சொல்லட்டுமா? அதை யாரிடம் ஒப்படைத்திருக்கிறீர் என்று சொல்லட்டுமா? அதை எங்கே மறைத்துப் புதைத்து வைத்திருக்கிறீர் என்று சொல்லட்டுமா?”

      வியப்பில் உறைந்த அப்பாஸ், “அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று கூறினார்.

      ”உமது தாயிடம் குறிப்பாக நீவிர் இவ்வளவு உடைமையை ஒப்படைக்கவில்லை? இன்னின்ன இடத்தில் ஒரு மதிலின் கீழ் நீவிர் உமது தங்கத்தைப் புதைத்து வைக்கவில்லை? ‘நான் நல்லபடியாகத் திரும்பி வந்துவிட்டால் இதனை எனக்குத் தாருங்கள். இல்லை எனில், இவ்வளவு பகுதியை இதற்காகச் செலவிடுங்கள், இன்னாருக்கு இவ்வளவு பங்கு தந்துவிடுங்கள், மீதியை உமக்கே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நீவிர் உமது தாயிடம் வாக்கு உரைக்கவில்லை?” என்று அப்பாஸிடம் நபி முஹம்மத் (ஸல்) கேட்டார்.

      இதனை அப்பாஸ் கேட்டவுடன் முழுமையான சரணடைதலில் தனது கைகளை உயர்த்தினார். “இறைத்தூதரே! பழங்கால மன்னர்களான ஹாமான், நம்ரூது, ஷத்தாது போன்றோரை ஒப்ப நீங்களும் விதியின் ஆதரவைப் பெற்றுள்ளீர் என்றுதான் இதுவரை நான் எப்போதும் நினைத்து வந்தேன். நீங்கள் இப்போது சொன்னதை எல்லாம் கேட்டபின், இது இறைவனின் உதவிதான் என்று உணர்கிறேன். இது மேலே, இறை விதானத்தில் இருந்தே உமக்கு வழங்கப்படுகிறது!”

      நபி முஹம்மத் (ஸல்) நவின்றார், “இப்போது நீவிர் உண்மை உரைத்தீர். முன்பு உமக்கு உள்ளே நீவிர் மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் சங்கிலி வளையம் சலம்பும் ஒலியை நான் கேட்டேன். என் ஆன்மாவில் அகச் செவி உள்ளது. எவருள்ளும் சந்தேகம் சலம்புவதை அந்த அகச் செவி கேட்டுவிடும். நீவிர் என்னை நம்புகின்றீர் என்பது இப்போது உண்மைதான்.”

      இக்கதையை நான் அமீரிடம் சொல்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமுண்டு: தொடக்கத்தில் நீவிர் முஸ்லிம் சமூகத்தின் தலைவராகத் தோன்றி வந்தீர். “நான் என்னையே பணயம் வைத்தேன்” என்று சொன்னீர். “இஸ்லாம் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருப்பதற்காக நான் எனது சுய ஆசைகளையும் கருத்துக்களையும் தீர்ப்புக்களையும் அர்ப்பணித்துவிட்டேன்” என்றீர். ஆனால், அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்பதை மறந்து இறைவனின் திட்டங்களைக் காண முடியாமல் ஆகி, உமது சொந்தத் திட்டங்கள் மீது நீவிர் நம்பிக்கை வைக்க வேண்டிய நிலை ஆனதும் உமது நோக்கங்கள் எல்லாம் தலை கீழான விளைவையே ஏற்படுத்தின. தார்த்தாரியருடன் பேரம் செய்துகொண்டதன் மூலம் சிரியா மற்றும் எகிப்து நாட்டினரை அழிபப்தற்கு நீவிர் அவர்களுக்கு உறுதுணை ஆகின்றீர். அது முடிவில் இஸ்லாமிய அரசாட்சியையே அழித்துவிடும் அல்லவா? இஸ்லாத்தைக் காப்பதற்கு என்று நீவிர் செய்த இந்தத் திட்டத்தினை அதன் அழிவிற்கு வழி வகுப்பதாக இறைவன் புரட்டிவிட்டதை நீவிர் காணவில்லையா?

      நிலைமை மிக அபாயமாக உள்ளது. இறைவனின் பக்கம் முகம் திருப்புவீர். எனினும், நண்பரே! உமது இந்த நிலையிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர். ஆனால், இறைவனை முன்னோக்கி அவனது சித்தத்திற்கு உம்மை ஒப்படைப்பீராக! அப்பாஸும் பிற கைதியரும் கருதியது போன்று, உமது ஆன்மாவின் வலிமை உம்மிடமிருந்தே ஊற்றெடுப்பதாக நீவிர் கருதினீர். அதனால் பலவீனத்தில் வீழ்ந்தீர். ஆனால், நம்பிக்கை இழக்காதீர். வலிமையிலிருந்து பலகீனத்தைக் கொண்டுவர இயன்ற அவனே உமது பலகீனத்திலிருந்து முன்பை விடவும் பெரிய வலிமையைக் கொண்டு வருவான். கைதிகளைக் கண்டு நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நகைத்ததைப் போல் நுமது தற்போதைய சங்கடமான நிலை மீது நானும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், தொலைந்து போனதைக் காட்டிலும் பெரிதான ஏதோ ஒன்று இந்த பலகீனத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் வெளிப்படும். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம். ஏனெனில், ’நிச்சயமாக, நிராகரிக்கும் கூட்டத்தினரே அன்றி வேறெவரும் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை இழக்க மாட்டார்கள் -(குர்ஆன்: 12:87)’

      நான் இவ்வண்ணம் அமீரிடம் பேசுவதன் நோக்கம், விடயத்தை அவர் சரியாகப் பார்த்து இறைவனின் நாட்டத்தைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. மிக்க மேலான நிலையிலிருந்து அவர் மிகக் கீழான நிலைக்கு வீழ்ந்து விட்டார். எனினும், இப்படியாக அவர் வளர முடியும். வாழ்க்கை நமக்கு மிகவும் அற்புதமான விடயங்களைக் காட்டியபோதும் அந்த அற்புதத்தின் ஊற்றினை நாம் மறந்துபோகும்படியான கண்ணி ஒன்றை அவற்றின் பின் மறைத்து வைத்திருக்கும். நாம் நமது மமதை மற்றும் தற்பெருமை ஆகியவற்றால் இந்தச் சிந்தனைகளும் திட்டங்களும் நமக்குச் சொந்தமானவை என்று கோருவதை விட்டும் நம்மைத் தடுப்பதற்காக இறைவன் இப்படி திட்டம் தீட்டியுள்ளான்.

      ஒவ்வொரு பொருளும் தோற்றம் அளிக்கும்படியே உண்மையில் இருக்கும் எனில், கூர்மையானதும் ஒளி மிக்கதுமான அகப்பார்வை அருளப்பட்டிருந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு இறைவனிடம் வேண்டியிருக்க மாட்டார்கள்:

      ”இறைவா! பொருட்களை அவை உள்ளபடியே எனக்குக் காட்டுவாயாக!
      பொருளொன்றை அழகுள்ளதாக நீ காட்டுகிறாய்,
உண்மையில் அது அசிங்கமானதாக இருக்கின்றது.
பொருளொன்றை அசிங்மகானதாக நீ காட்டுகிறாய்,
உண்மையில் அது அழகுள்ளதாக இருக்கின்றது.
அனைத்துப் பொருளையும் அவை உள்ளபடியே எமக்குக் காட்டு,
அப்போது யாம் அவற்றின் கண்ணியில் சிக்க மாட்டோம்,
நெறி பிறழ மாட்டோம்.”

      இப்போது, உமது தீர்ப்பு எவ்வளவு நன்மையாகவும் பிரகாசமாகவும் இருந்த போதும், ஒருபோதும் அது இறைத்தூதரின் தீர்ப்பினை விடச் சிறந்தது அன்று. எனவே, உமது ஒவ்வொரு கருத்து மற்றும் ஒவ்வொரு நோக்கத்தின் மீதும் நீவிர் நம்பிக்கை வைக்காதீர். மாறாக, இறைவன் மீதும் அவனது ஞானத்தின் மீதும் நம்பிக்கை வைப்பீராக.

(to be continued...)

No comments:

Post a Comment