47
விநயம்
மௌலானாவின் இன்னொரு நற்பண்பு அவருக்குச் சிறுவர்கள் மற்றும் முதிய
பெண்கள் மீது தனிப் பாசம். அவர்கள் மீது தனிக் கவனம் வைத்து மதிப்பளித்து அன்பு செலுத்துவார்.
மதம், இனம் அல்லது வாழ்க்கை நிலை என்று எவ்விதத்திலும் பேதம் பாராமல் ஒவ்வொருவரிடமும்
அப்படியே நடந்து கொண்டார். அவர்களை மிக மரியாதையாக நடத்தினார். உதாரணமாக, முதிய கிறித்துவ
அர்மீனியப் பெண்ணொருத்தி அவரது பாதையில் குறுக்கிட்டார். அந்த முதியளின் வளைந்த கூனுருவைக்
கண்ட மௌலானா நின்று தனது தலைப் பாகையை அவிழ்த்து, ஏழு முறை தனது தலையைச் சற்றே தாழ்த்தி
அவருக்கு மரியாதை செய்தார். அந்த முதியளும் அவ்வாறே மௌலானாவுக்கு மரியாதை செய்தார்.
சிறுவர்கள் மற்றும் முதிய பெண்கள் (மற்றும் ஆண்கள்) ஆகியோரிடம், அவருள்
முஸ்லிம் அல்லாதோர் உட்பட அனைவரிடமும், மௌலானா மிக உச்சமான கனிவுடன் நடந்துகொள்வார்
என்றும் அவர்களுக்கு ஆசிகள் அருளுவார் என்றும் சொல்லப்படுகிறது. தும்பல் (சோம்பேறி)
என்றொரு அர்மீனிய முதியவர் இருந்தார். ஒருநாள் அவர் மௌலானாவின் பாதையில் குறுக்கிட்டார்.
மௌலானா அவரிடம் மிகுந்த மரியாதை காட்டினார். அவர் மௌலானாவுக்கு ஏழு முறை முகமன் உரைத்தார்.
மௌலானாவும் அவருக்கு ஏழு முறை பதில் கூறினார்.
அதேபோல், மௌலானா ஒருநாள் தெருவொன்றில் சென்று கொண்டிருந்த போது அங்கே
பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். மௌலானாவைக் கண்டதும் அவர்கள் அவரிடம்
ஓடிச் சென்று முகமன் சொல்லினர். அவர்களுக்கு மிகவும் பாசத்துடன் மௌலானா பதிலுரைத்தார்.
தொலைவில் இருந்த சிறுவன் ஒருவன் மௌலானாவைப் பார்த்துவிட்டுக் கத்தினான், அவர் சென்று
விடாமல் நிற்க வேண்டும் என்று. எனவே அந்த வாண்டு வந்து சேரும் வரை மௌலானா அங்கேயே நின்றார்.
மௌலானா தனது ஆன்மிகப் பயிற்சிகளால் நேர்வழியை விட்டுப் பிசகிப் போய்விட்டார்
என்று மக்கள் (சிலர்) சாடியிருந்தனர். அவர் தனது சபைகளில் இசைக்கு அனுமதி அளித்துப்
பேணுவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த மறுப்புகளுக்கு எல்லாம் மௌலானா மௌனமே பதிலாக
அமைதி காத்தார். அந்த மறுப்பாளர்கள் இருந்த சுவடே தெரியாமல் வாழ்வின் காட்சியிலிருந்து
மறைந்து போயினர். ஆனால், மௌலானாவின் ஆன்மிக போதனைகள் காலத்தின் எல்லை வரை இருக்கும்.
ஒருநாள், மௌலானாவின் சீடர் ஒருவர் அவரைக் கண்ணியப்படுத்த ஆன்மிக இசை
நிகழ்வை நடத்தினார். தனது சீடரின் வீட்டிற்கு வந்து சேர்ந்த மௌலானா அழைக்கப்பட்டோர்
அனைவரும் உள்ளே நுழையும் வரை வாசலிலேயே காத்து நின்றார். இசை நிகழ்ச்சி மிகுந்த உணர்வெழுச்சியுடன்
நடைபெற்றது. மௌலானா அவ்வீட்டிலேயே அன்றிரவு தங்கினார். தனது குருநாதர் தன்னை மிகவும்
கண்ணியப் படுத்தியதாக அந்தச் சீடர் பெரிதும் மகிழ்ந்தார்.
ஏனையோர் அனைவரும் உள்ளே செல்லும் வரை வாசலில் நின்றது ஏன் என்று மௌலானாவிடம்
ஹுசாமுத்தீன் வினவினார். தான் முதலில் வீட்டினுள்ளே சென்றிருந்தால் தனக்கு மரியாதை
செய்வதாக எண்ணிக்கொண்டு அதன் பின் வேறு யாரையும் உள்ளே நுழைய விடாதபடி வாயிற் காப்போர்
தடுத்திருக்கக் கூடும் என்றும் அப்படி ஆகியிருந்தால் தனது ஏழைச் சீடர்கள் உள்ளே வந்து
தனது போதனைகளைக் கேட்க இயலாமல் நட்டப்பட நேர்ந்திருக்கும் என்றும் மௌலானா சொன்னார்.
மேலும், தனது பணக்காரச் சீடர்களின் வீட்டினுள் தனது ஏழைச் சீடர்கள் நுழைவதற்குத் தானே
வழி வகுக்கத் தன்னால் முடியவில்லை என்றால் பிறகு எப்படித் தனது சீடர்கள் நாளை சொர்க்கத்தினுள்
நுழைவதை உறுதிப்படுத்தத் தன்னால் முடியும் என்று கேட்டார்.
மௌலானா சொன்னதன் அர்த்தம் யாதெனில், பொருளாதாரம் முந்தியிருக்கும்
இவ்வுலகில் பொருள் வளம் அதிகம் உடையோரே மதிக்கப் படுகின்றனர். ஏழைமையைக் காரணம் காட்டி
இங்கே தனது ஏழைச் சீடர்கள் தனது கூட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டால் அங்கே மௌலானா
நிகழ்த்தும் ஆன்மிக உரைகளை அவர்களால் கேட்க இயலாது, அங்கே நிகழ்த்தப்படும் தியானங்களிலும்
தொழுகைகளிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியாது. எனவே அவற்றின் நன்மைகளை அவர்கள் அடையார்.
எனவே அவர்கள் சொர்க்கத்தினுள் செல்வதும் தடைப்பட அல்லது தாமதப்படக் கூடும். எனவேதான்
மௌலானா தனது ஏழைகள் முதலில் உள்ளே செல்லும் பொருட்டு வீட்டின் கதவருகிலேயே நின்றுகொண்டு
அவர்களை எல்லாம் உள்ளே அனுப்பி வைத்தார்கள். தமக்கு இவ்வளவு கவனம் அளித்தார்கள் என்பதை
அறிந்த ஏழைச் சீடர்கள் மௌலானாவுக்கு மிகவும் நன்றி பாரட்டினார்கள்.
48
மன்னிப்பு
ஒருமுறை மௌலானா தனது சீடரான பர்வானா என்பாருக்குக் கடிதமொன்று எழுதி
அனுப்பினார்கள். அந்தச் சீடர் ஓர் அரசு அதிகாரி. கொலைக் குற்றவாளி ஒருவனை மன்னிக்குமாறு
பரிந்துரைத்து அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. அது தனது அதிகார வரம்பினுள் இல்லை என்று
பர்வானா கூறிவிட்டார். கொலை புரிபவன் ஓர் உயிரை எடுக்கிறான். எனவே மக்களின் உயிரைப்
பற்றும் வானவரான இஸ்ராயீலின் மகன் என்று அவனைச் சொல்லத் தகும். எனவே, உயிரைக் கைப்பற்றுவதே
தனது பணி ஆதலால் அப்படிச் செய்யாமல் இருக்க வழியற்ற ஒருவனின் மகனை விடுவிக்கலாம் என்று
மௌலானா வாதிட்டார். பர்வானா இந்த வாதத்தைக் கண்டு வியந்தார். கொலைப் பட்டோனின் உறவினர்
இழப்பீடு பெற்றுக் கொள்ள இசைந்தால் அவனை விடுதலை செய்யலாம் என்று பர்வானா சொன்னார்.
இதை வைத்து அத்தகைய கொடுங் குற்றங்களை மௌலானா லேசாக மன்னித்து விடுகிறார் என்று கருதிவிடக்
கூடாது. கொலைப் பட்டோனின் உறவினர்கள் கொலைஞன் இழப்பீடாகத் தரும் குருதித் தொகையால்
திருப்தி அடைந்து இசைந்தால் அக்கொலைஞனை விடுதலை செய்யலாம் என்னும் சட்டத்தின் பக்கம்
மௌலானா சுட்டிக் காட்டுவதாகவே இதனைப் பார்க்க வேண்டும். அஃது கால இடம் கருதி ஏற்கப்படும்
ஒரு சட்டம்தான்.
49
அகக்
கண்
இந்நிகழ்வை மௌலானா ஷம்சுத்தீன் மாலத்தி அவர்கள் அறிவிக்கின்றார். ஒருநாள்
மௌலானா அவர்கள் கல்லூரியில் தமது சீடர்களுக்கு ஆன்மிகப் பொருண்மைகள் பற்றி விளக்கிக்
கொண்டிருந்தார். அப்போது மௌலானா ஷம்சுத்தீனைத் தான் மிகவும் நேசிப்பதாகவும் ஆனால் அவரிடம்
குறை ஒன்று இருப்பதாகவும் சொன்னார். உடனே மௌலானாவிடம் ஷம்சுத்தீன் அக்குறையைத் தான்
நீக்கிக் கொள்வதற்கு உதவியாக அதனைத் தமக்குச் சுட்டிக் காட்டுமாறு கேட்டார். மௌலானா
சொன்னார், ‘அவர் (ஷம்சுத்தீன்) எது ஒன்றைக் கருதி நோக்கினும் அதுவே இறைவனின் அருள்
மிக்க பொருள் என்றும் எவர் ஒருவரைக் கருதி நோக்கினும் அவரே இறைவனின் அருள் மிக்க நபர்
என்றும் காண்கிறார்.’ பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்கள்:
”அகத்தில் ஷைத்தானாய்
அனேகர் உள்ளனர்;
அனைவரையும் ஞானி என்று
போற்றுதல் எப்படி?
அகவிழி திறக்கும்போது
உண்மை ஞானியைக்
கண்டுகொள்வாயே!”
50
சந்தை
அதன் பின் ஷம்சுத்தீன் மேலும் அர்ப்பணமுள்ள சீடரானார். மௌலானா உரைத்தது
உண்மையே என்று ஒப்புக் கொண்டார். சாதகனின் ஆர்வக் கொந்தளிப்பு தன்னுள் இருந்தமையால்
குரு என்று சொல்லிக் கொண்ட அனைவரையும் அணுகிப் பார்க்கும் பழக்கம் தன்னிடமி இருந்தது
என்றார். ஆனால், மௌலானா உரைத்தது உண்மையான குருநாதர் குறித்துத் தனது கண்களைத் திறந்துவிட்டது
என்று சொன்னார். அந்நாளில் மௌலானா பின்வரும் கவிதையைப் படித்து அதனைச் சீடர்கள் அனைவரும்
மனனம் செய்துகொள்ள வேண்டும் என்று பணித்தார்:
”மறைஞான மருந்து விற்போரின்
இந்தச் சந்தையில்
ஒவ்வொரு கடைக்கும்
இங்கும் அங்கும் ஓடாதே;
மெய் மருந்து வழங்கும்
மருத்துவனின் கடை முன்
அமர்ந்துவிடு.”
51
சுய
ஏமாற்று
ஒருநாள் மௌலானா தனது சீடர்களிடம் மகாஞானி பாயஜீது அவர்கள் உரைத்த கருத்து
ஒன்றை விளக்கிக் கொண்டிருந்தார். ‘நபிகள் நாயகம் நிலாவைப் பிளந்தார், மரங்களைத் தன்னிடம்
நடந்து வரும்படிச் செய்தார், கற்களைப் பேசும்படிச் செய்தார் என்பன போன்ற அற்புதங்களுக்காக
மட்டும் நான் அவரைப் புகழவில்லை; ஆனால், தமது தொண்டர்களுக்கு அவர் மதுவைத் தடை செய்துவிட்டார்
என்பதற்காகவே குறிப்பாக அவரை நான் பெரிதும் புகழ்கிறேன். ஏனெனில், ஒரு நற்காரியத்தைச்
செய்வதில் அவரே அதனை முதலில் செய்பவராக இருக்கும் நிலையில் அச்செயலின் வழியே அவர் மேலும்
நன்மைகளை அடைகிறார். மது மாந்துவதில் ஏதேனும் நன்மை இருப்பதை அவர் கண்டிருந்தால் அவரே
முதலில் அதனை அருந்தியிருப்பார். ஆனால் நபிகள் நாயகம் இறைவனின் தூதர் என்பதால் அவர்
இறைவனுக்கு அடிபணிந்ததுடன் தனது தொண்டர்களையும் அப்படியே பின்பற்றப் பணித்தார்.’ பிறகு
மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:
”ஓரிரு நாட்கள் மட்டுமே
மதுவைப் புறக்கணிப்பாய் எனில்
அது ஒரு சுய ஏமாற்றமே!
சுவனத்தின் ஒளியை நீ
மதுவில் பணயம் வைத்தாய்!
உலகம் யாவிலும் அஃது
தீதும் சூதும் என்பதால்
அனைவருக்கும் ஆனது தடை”
52
செல்வமும்
வறுமையும்
இறைத்தூதரின் உடனிருந்து அவரது சபையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பதிவு
செய்து அறிவிப்போர் கூறியுள்ள ஒரு செய்தி. ஒருநாள் நபிகள் நாயகத்திடம் கலீஃபா உஸ்மான்
(ரலி) நாளுக்கு நாள் தனது செல்வம் மட்டற்றுப் பெருகி வருவதாகவும் தாராளமாக ஈகை அளித்தும்
ஏழையர்க்கு உதவியும்கூட அஃது குறைபடாது அதிகமாகவே செய்கிறது என்றும் கவலையுடன் சொன்னார்.
மேலும், ‘அதிகச் செல்வம் என்பது மனதிற்கு நிம்மதி தராது என்பதால் எனது செல்வம் இப்படி
வளர்ந்து கொண்டே போனால் நான் எப்படி வறுமை வழங்கும் மன நிம்மதியை அடைவேன்?’ என்றும்
கவன்றார். அவரிடம் நபிகள் நாயகம், “உஸ்மானே! செல்க. உமக்குச் செல்வங்களை வழங்கியதற்காக
இறைவனுக்கு நன்றி செலுத்தி ஈகை அளிப்பதைச் சில நாட்கள் வலிந்து நிறுத்தி வையும். உமது
செல்வங்கள் விரைந்து குறைந்து விடும்” என்று சொன்னார்.
ஈகை வழங்குதல் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய நன்றியறிதலின் நற்காரியங்களில்
தான் மிகவும் தோய்ந்துவிட்டமையால் அவற்றை நிறுத்தி வைப்பது தனக்கு ஒல்லாது என்று உஸ்மான்
சொன்னார். உடனே நபிகள் நாயகம் அவர்கள், எவரொருவர் இறைவன் வழங்கியவற்றுக்கு நன்றி பாராட்டுகிறாரோ
அவரது உடைமைகள் பெருகும், நன்றி மறப்போர் கடினமாக ஒறுக்கப்படுவர் என்னும் கருத்தமைந்த
திருவசனத்தை ஓதினார். இவ்வாறு, இறைவனின் மறையில் தாராளமான கொடையாளருக்கு மாபெரும் நற்கூலி
வாக்களிக்கப் பட்டுள்ளது. எனவே, இறைக் கொடைகளுக்கு நன்றி நவில்வோர்க்கு மேலும் மேலும்
கொடைகள் வழங்கப்படுதல் நில்லாது என்பதே நபிகள் நாயகம் சொன்னதன் உட்பொருள். பிறகு மௌலானா
பின்வரும் கவிதையைப் படித்தார்:
”நன்றி மறத்தல்
உன் கையை விட்டும்
கொண்டு போய்விடும்
செல்வத்தை எல்லாம்;
நன்றியறிதலோ
மேலும் மேலும் பெறுகின்றது;
இறைவனுக்கு நன்றி நவில
தரையில் உன் நெற்றியை வைக்கும்போது
நெருங்கி
அவனுடன் இருக்கின்றாய் நீ!”
பிறகு
உஸ்மானிடம் நபிகள் நாயகம் நவின்றார், “உஸ்மானே! செல்க. நீவிர் கொடையாளராகவும் உதவியாளராகவும்
இருப்பதால் உமது செல்வம் மேலும் மேலும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். வேறு வழியில்லை.”
எனவே உஸ்மான் தனது நன்றியறிதலின் வெளிப்பாடாக அப்போதே முந்நூறு ஒட்டகங்களையும் அவை
சுமந்து நின்ற பண்டங்களையும் சமுதாயத்திற்கு வழங்கினார்கள். நபிகள் நாயகம் அவரை வாழ்த்தினார்.
அதன்
பிறகு மௌலானா தனது சமகாலத்தை அவதானித்தார். அப்போதைய அரசர் அமீர் மொய்னுத்தீன் சுலைமான்
அவர்கள் கலீஃபா உஸ்மான் அவர்களைப் போன்ற குணம் கொண்டவர் என்றுரைத்தார். ஏனெனில், அவர்
தர்வேஷ்கள், அறிஞர், வழிப்போக்கர், தேவையுள்ளோர் மற்றும் பிணியாளர்கள் ஆகியோருக்கு
உதவுகிறார். அவர் மக்களின் இதயங்களை ஆள்கிறார், பதிலுக்கு மக்கள் தமது அரசருக்காகப்
பிரார்த்திக்கின்றனர். அதன் விளைவாக அவர் யாதொரு காரியத்தை எடுப்பினும் வெற்றி அடைகிறது,
நற்பயன் விளைகிறது. மௌலானாவின் சீடர்களுள் ஒருவர், இறைவனால் பெருஞ்செல்வம் அருளப்பட்டவர்,
நாட்டின் வேந்தர் மீது மௌலானா அள்ளிச் சொரிந்த போற்றுதல்களைக் கேட்டுப் பெரிதும் புளகம்
எய்தினார். மௌலானாவின் கோட்பாட்டினைத் தான் ஏற்று மதிப்பதன் அடையாளமாக மௌலானாவின் பாதங்களை
முத்தமிட்டு ஈராயிரம் தீனார்களை மௌலானாவின் ஏழைச் சீடர்களது நல் வாழ்வுக்காகவும், வறியார்,
தேவையுள்ளோர், கற்றுணர்ந்த அறிஞர் மற்றும் தர்வேஷ்கள் ஆகியோருக்கு பங்கு வைக்கப்படவும்
வழங்கினார்.
53
பிரகாசம்
இந்நிகழ்வை சம்சுத்தீன் முஅல்லிம் அறிவிக்கிறார். ஒருநாள் மௌலானா தனது
சீடர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகத்தின் அருண்மொழி ஒன்றின் கருத்தை
விளக்கினார். இறை பகதனின் இதயம் இறைவனின் பிரகாசத்தால் நிரம்பும்போது தூய எண்ணங்கள்
மற்றும் உணர்வுகள் விளைகின்ற செம்புலம் ஆகிறது. ஒரு மனிதனின் இதயத்தினுள் இறையொளி நுழைந்து
விட்டது என்பதை அறிந்து கொள்வது எப்படி என்று இறைத்தூதரிடம் தோழர்கள் வினவினர். நபிகள்
நாயகம் பின்வரும் அடையாளங்களைச் சொன்னார். அத்தகைய மனிதன் உலக ஆசைகளை அறவே இழந்துவிடுகிறான்;
அவனைப் பொருத்த மட்டில் உலக இன்பங்கள் அனைத்தும் தமது ஈர்ப்பை இழந்து விடுகின்றன. அவன்
தனது நண்பர் மற்றும் உறவினருக்கு அன்னியமாகி விடுகிறான்; யாரிடத்தும் அவனுக்கு எதிர்பார்ப்பு
ஏதும் இருப்பதில்லை; அவன் யாரிடமிருந்தும் எதனையும் ஆசைப் படுவதில்லை.
54
நாய்களின்
சபை
ஒருநாள் மௌலானா அவர்கள் முச்சந்தியில் நின்றபடி அனைத்து வகைப்பட்ட
மக்களுக்கும் ஞான உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சால் பலரும் ஈர்க்கப் பட்டிருந்தனர்.
பிறகு சாலையோரம் இருந்த சுவர் ஒன்றின் பக்கம் திரும்பிக்கொண்டு அவர் தியானத்தில் மூழ்கிவிட்டார்.
அந்தி வரை அந்நிலையில் இருந்தார். பிறகு அவர் தனது பார்வையைத் தெரு நாய்களின் கூட்டமொன்றின்
மீது செலுத்தினார். உடனே அவை கூர்ந்து கவனிப்பன போல் நோக்கியபடித் தமது வால்களை ஆட்டின.
விலங்குகளின் கூர்ந்த கவனிப்பைச் சுட்டிக்காட்டி மௌலானா சொன்னார், “இறைவனின் மகத்துவத்தின்
மீதாணை, அவனன்றி ஏதுமில்லை என்னும் நிலையில் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ள அவன் தனது
வல்லமையால், ஆன்மிக ஞானங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் இந்த நாய்களுக்கும் இருக்கின்றது.
இனி இவற்றை நாய்கள் என்று சொல்லற்க. இவை, அஸ்ஹாபுல் கஹ்ஃப் – குகைத் தோழர்கள் என்று
குர்ஆன் பகர்கின்றவர்களின் உடனிருந்த அந்த நாயின் இனத்தைச் சேர்ந்தவை. ஏனெனில், அந்த
நாய் குகைத் தோழர்களுடன் இணைந்து உணவும் நீரும் இன்றி வனாந்திரத்தில் அலைந்து திரிந்து
அவர்களுடனேயே மரணித்தது. அது நன்றியறிதலின் உன்னத நிலையை எட்டிவிட்டது. இங்கே விசுவாசம்
என்னும் பண்பே பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:
”தன் எஜமானுக்கான நாயின் நேசம்
உன்னத விசுவாசமாய் இல்லை எனில்
குகைத் தோழர்களின் அந்த நாய்
மிகவும் உயர்ந்ததாய் ஆனது எப்படி?
அத்தகு நேசம் கொள்ளும் நாயின்
மயிர் ஒவ்வொன்றும் சிங்கத்துக்கு நிகர்!
பள்ளிச் சுவர் இந்த ரகசியத்தை அறிகிறது,
அதனைக் காணாத கண் குருடாய் இருப்பது நல்லது
சுவர்களும் கதவுகளும் உண்மையை அறிகின்றன
மண் காற்று நீர் என்று அவை
பொருட்களால்
மட்டுமே ஆனவை அல்ல”
விரைவில்
மௌலானாவைச் சுற்றி அவரது சீடர்கள் பலரும் குழுமிவிட்டனர். அவர்களை மௌலானா வரவேற்று,
“வருக வருக காதலன் வந்துவிட்டான் / வருக வருக
தோட்டம் பூத்துவிட்டது!” என்று கவிதை பாடினார். அவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
ஆன்மிக மறைஞானத்தை விளக்கியபடியே மௌலானா தனது சீடர்களை எல்லாம் கல்லூரிக்கு இட்டுச்
சென்றார். அங்கே இரவெல்லாம் ஆன்மிக இசையும் கவிதை வாசிப்பும் நிகழ்ந்தன. அப்போது மௌலானா
பரவசம் எழ, “அருள் மிக்க இறைவன் மேல் ஆணையாக, ஞானியர் மீதும் சான்றோர் மீதும் இந்நபர்கள்
பொழிந்திருக்கும் ஏகாந்த நிலையை இந்த எளியேனின் மீதும் பொழிகின்றனர். அவர்கள் என் மீது
மாபெரும் கனிவு காட்டியுள்ளனர்!” என்று சொன்னார்.
55
மந்திராஞ்சனம்
மௌலானாவிடம் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவரான ஷெலபி ஹுசாமுத்தீன் இதனை
அறிவிக்கிறார். ஒரு நாள் மௌலானா அவர்கள் இறைவனின் மந்திர அஞ்சனம் (கண் மை - சுர்மா) ஒன்றைப் பற்றிச் சொன்னார். அதனை ஒருவர்
தமது கண்ணில் இட்டுக் கொண்டால் அது அவரது புற மற்றும் அகக் கண்கள் ஆகியவற்றைத் திறந்துவிடும்.
பிறகு அவர் உள்ளமையின் ரகசியங்களைக் காண்பார். பொருட்களின் அந்தரங்க அர்த்தங்களை அறிவார்.
தான் பொருந்திக் கொள்வோருக்கே இறைவன் அதனைத் தருவான். அந்த அஞ்சனம் எவருக்கு வழங்கப்படவில்லையோ
அவர் ஒருபோதும் எந்தப் பொருளின் அந்தரங்க நிலையையும் காணவோ விளங்கவோ இயலாது. பிறகு
மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:
”இறைவனின் அருள் இன்றி,
இறை நேசரின் அருள் இன்றி,
அரசனே ஆயினும்
அவனின் வாழ்க்கை ஒன்றுமில்லை.
இறையருள் இன்றேல்
இரு விழியும் குருடே!
இறையருள் இன்றி
முடிச்சவிழ்க்க
முடியாது!”
பிறகு மௌலானா சொன்னார், “குருநாதரின் அருட் பார்வையால் பிரகாசம் பெற்றுவிடு;
இல்லை எனில் அவர் பார்வையை விட்டு அகன்று போய்விடு.” பிறகு அவர் பின்வரும் கவிதையைப்
படித்தார்:
”ஒளியைத் தேடுகிறாய் எனில்
ஆயத்தமாக இரு;
உன்னையே தேடுகிறாய் எனில்
என் பார்வையை விட்டும் போ!”
56
மன
வாசிப்பு
மௌலானா சிராஜுத்தீன் அறிவிக்கும் நிகழ்ச்சி இது. அவர் ஒருநாள் ஹுசாமுத்தீனின்
தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்து மலர்க்கொத்து ஒன்றை வாங்கி வந்துள்ளார். மௌலானா
அப்போது ஷெலபியின் வீட்டில் இருப்பார் என்று எண்ணி அங்கே சென்றபோது மௌலானாவும் அவரைச்
சுற்றி மாபெரும் அறிஞர்களும் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மௌலானா ஆன்மிக நுட்பங்கள்
பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவரது உரையின் குறிப்புக்களைச் சீடர்கள் எழுதிக் கொண்டிருந்தனர்.
”அதில் சொக்கிப்போன நான் எனது கைக்குட்டையில் சுற்றி எடுத்து வந்திருந்த மலர்க்கொத்தை
மறந்தே போனேன். அப்போது மௌலானா என் பக்கம் முகம் திருப்பி ‘மிட்டாய்க் கடையிலிருந்து
வருபவன் கொஞ்சம் இனிப்பு வாங்கி வருவதுதானே வழக்கம்? அதுபோல், தோட்டத்திலிருந்து வருபவர்
தன்னுடம் கொஞ்சம் பூக்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும்’ என்று சொன்னார்.” மௌலானாவின்
சொற்களால் வியப்படைந்த சிராஜுத்தீன், மௌலானாவுக்கு மரியாதைகள் செய்தபடி மலர்க்கொத்தை
அவர் முன் வைத்தார். அதன் பிறகு அங்கே ஆன்மிகப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
(to be continued...)
No comments:
Post a Comment