Sunday, October 27, 2019

ரூமியின் வாழ்வில்... - 5


15
நூற்களும் அவற்றின் உள்ளுறை உட்பொருளும்


      இதே போன்றதொரு நிகழ்ச்சியை ஷைகு மஹ்மூத் அறிவிக்கிறார். ஒருமுறை, சுல்தான் கை-ஃகுஸ்ரோவின் அமைச்சராக இருந்த காஜி மௌலானா இஸ்ஸுத்தீன் அவர்கள் கோன்யாவில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி அதற்கு மௌலானாவின் பெயரைச் சூட்டினார். திறமைகளும் சால்பும் மிக்க மனிதரான அவர் மௌலானாவிடம் ஒருதடவை கேட்டார், ‘நீங்கள் எவற்றை எல்லாம் படித்தீர்களோ அந்த நூற்களையேதான் யாமும் கற்றோம். ஆனால் அவற்றினின்றும் நீங்கள் ‘பெற்று’ வெளிப்படுத்துகின்றவை எல்லாம் எமது நிலைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. இது ஏன்?”

      மௌலானா சொன்னார்,  “ஆம், அது உண்மைதான். ஆனால், அல்லாஹ்வின் நூலில் ஓரிரண்டு பக்கங்களிலிருந்து நாம் ஏதோவொன்றை கிரகித்து விட்டோம். அதுதான் எம்மிடமிருந்து உமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ‘அது இறைவனின் அருளிலிருந்து வருகிறது; அதனை அவன் தான் நாடியோருக்கே வழங்குகிறான்.” கவிதையைக் கேளுங்கள்:

      ”நுணுகித் துளைக்கும் எம் அறிவிற்கு
      சனிக்கோளத்தின் அறிவும் சமமில்லை;
      அத்துடன் புதனைச் சேர்ப்பினும் அஃதே.
      எனினும் இறைவன் உயிரின் தன்மையில்
      எமக்கோர் எழுச்சியை அருளிச் செய்தனன்;
      நம்பிக்கை என்பதன் நல்லறிவுடனே
      எமது சுயங்கள் அமைந்து உள்ளன;
      ஆதலால் தெய்விக ஞானம் கற்பதே
      காதலால் எமது வாழ்க்கை ஆனது”

      இதைக் கேட்டதும், புகழ் பெற்ற அந்த காஜி உடைந்து கண்ணீர் உகுத்தார்.

16
ஆன்மிக நடனம்

      மனிதனில் ஆன்மிக உணர்வுகளைத் தூண்டும் இசைக்கும் நடனத்திற்கும் காஜி இஸ்ஸுத்தீன் எதிரானவர் என்று சொல்லப்படுகிறது. ஒருநாள், ஆன்மிகப் பரவம் மிகைப்பட்ட நிலையில், ஆன்மிக இசை அதன் உன்னதத் தளத்தில் வாசிக்கப்பட்டிருக்க, மௌலானா அவர்கள் சமயக் கல்லூரிக்கு வெளியே வந்தார். அவர் காஜியை அணுகி, அவரும் வந்து இறைவன் புகழப்படும் இவ்விசையில் கலந்து கொள்ளக் கூவினார். அவரை நெட்டித் தள்ளியபடி, ஆன்மிக அனுபவத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டுக்கு மாற்றமாக இருக்குமாறு இறைக் காதலர்களின் நடுவில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார். அவருக்கும் பரவசம் எழுந்தது. அவர் தனது அங்கியைக் கிழித்துக் கொண்டார். பிறரைப் போன்றே ஆன்மிகப் பாடலுள் மூழ்கினார், சுற்றிச் சுழன்று ஆடினார், ஆனந்தக் களியில் கூவினார். பின்னர் அவரும் மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவராகிப் போனார்.


17
பாதை

      அதேபோல், கோன்யாவின் காஜியும், இசித்தீன் என்பாரும், அமாஸ்யாவின் காஜியும், சிவாஸின் காஜியும் மௌலானாவைச் சந்தித்து அவரின் ”பாதை” எது என்று வினவினார்கள்.

தன் நெஞ்சைக் காட்டி மௌலானா கூறினார், “இதுவே எனது ’பாதை’. பின்பற்றுவோருக்கு ஞானம் அருளப்படும்.’ அதாவது, அவரது ஆன்மிகப் பயிற்சிகளே அவரின் பாதை ஆகும். அதனைப் பிறர் பேணி ஒழுகினால் அவரது வழிகாட்டுதலின்படி அவர்கள் ஞானம் அடைவர். சூஃபி நெறிக்குக் குறிப்பிட்ட ’பாட நூல்’ என்பதெல்லாம் இல்லை என்பதையும் முர்ஷித் (ஆன்மிக குரு) மட்டுமே சீடர்களை ஆன்மிக நிலைகளுக்கு இட்டுச் செல்கிறார் என்பதையும் இவ்விடையின் மூலம் மௌலானா உணர்த்துகின்றார். அந்த மூன்று நபர்களும் மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.

18
கிளியும் வழுக்கை மனிதனும்

      அதனா நகரின் ஆணையர் பள்ளி வாசல் ஒன்றைக் கட்டியெழுப்பி அதற்கு மௌலானாவின் பெயரைச் சூட்டினார். பெரும் பொருட் செலவில் தான் கட்டியிருக்கும் அப்பள்ளியின் திறப்பு விழாவில் தொழுகைக்குப் பின்னர் மௌலானாவை உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். எனவே, மௌலானா ஒரு பிரசங்கம் செய்தார். தலை வழுக்கையாகிப் போன கிளி ஒன்றைப் பற்றி அதில் குறிப்பிட்டுப் பேசினார். (அக்கதையிலிருந்து மக்களுக்குக் குறியீடான விளக்கங்கள் சொல்லிப் படிப்பினை ஊட்டினார். அக்கதை மௌலானாவின் பெருங் காவியமான மஸ்னவி ஷரீஃபில் இடம்பெற்றுள்ளது.) அந்த விழாவில் கலந்துகொண்ட பெருமக்களில் இரண்டு காஜிகளுக்குத் தலை வழுக்கையாக இருந்தது. கூட்டத்திலும் பொது மக்கள் சிலருக்குத் தலை வழுக்கை. எனினும் அவர்கள் எவருக்கும் மனம் புண்படவே இல்லை. அத்தனை நயமாகவும் எதிர்ப்புணர்வு எழாமலும் அக்கதையின் கொடுக்கு எவரையும் தைக்காமலும் மௌலானா பிரசங்கம் செய்த திறத்தை அவ்விழாவில் பங்கேற்ற மகா ஞானி கமாலுத்தீன் என்பார் மிகவும் மெச்சினார்.

19
ஒரு சச்சரவு

      அதே போன்று இன்னொரு அறிவிப்பு. ஒருநாள் மௌலானா அவர்கள் ஒரு தெருவில் நடந்திருந்த போது அங்கே இரண்டு நபர்கள் சச்சரவிட்டபடி ஒருவர் மீதொருவர் அவதூறுகளை வாரி வீசிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், “எனக்கு நீ ஒரு கெட்ட வார்த்தை சொன்னால் உனக்கு நான் ஆயிரம் சொல்வேன்” என்று கூறுவதை மௌலானா கேட்டார். மௌலானா அவர்கள் முன்னால் போய் நின்று, “நண்பரே! உங்கள் நிந்தனைகளை எல்லாம் என் மேல் கொட்டி விடுங்கள். நீங்கள் என் மேல் ஆயிரம் கெட்ட வார்த்தைகள் சொன்னாலும் ஒரே ஒன்றைக் கூட நான் திருப்பிச் சொல்ல மாட்டேன்!” என்றார். அவ்விருவரும் மிகவும் வெட்கிப் போனார்கள். இந்த அறிவார்ந்த போதனை அவர்கள் இருவரையும் நண்பர்கள் ஆக்கிவிட்டது.

20
இலக்கணப் புலவரும் கிணறும்

      இந்த நிகழ்வை மௌலானா ஷம்ஸுத்தீன் மாலத்தி சொன்னார். கற்றுதெ தேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவர் ஒருமுறை மௌலானாவுக்குத் தனது மரியாதையைச் செலுத்துவதற்காகத் தனது மாணவர்களுடன் வருகை தந்தார். எனினும், மௌலானாவிடம் வினாக்கள் தொடுத்து அறிவைச் சோதித்து மட்டந்தட்ட வேண்டும் என்னும் அழுக்காறு அவரது மனத்துள் கரந்து கிடந்தது. கற்று அறியக் கிடைக்கும் அறிவெல்லாம் தமது ஆசானின் நெஞ்சத்துள் அடங்கிவிட்டன என்பது அந்த அறிஞரது மாணவர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, அவர்களும் மௌலானாவின் அறிவை ஆழம் பார்க்க ஆவல் கொண்டிருந்தனர்.

      அவர்களின் உள் நோக்கத்தை உணர்ந்து கொண்ட மௌலானா அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை மிகுந்த கண்ணியத்தோடு வரவேற்றார். அறிவுத் துறைகள் பல சார்ந்து உரை நிகழ்த்தினார். போகும் போக்கில், எதிரியின் உள்ளத்தைத் தைக்குமாறு கருத்தைச் செலுத்தும் அவரது பாணியில் குறியீடான கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார். சமய அறிஞர் இருவரைப் பற்றிய கதை அது. அவர்களில் ஒருவர் இலக்கணப் புலவர், மற்றவர் சமயக் கல்வியை முடித்திருந்தும் மெய்ஞ்ஞானப் பாதையைப் பின்பற்றிச் செல்லும் சாதகர். அவர்கள் இருவரும் ஒருநாள் காலாற நடந்து கொண்டிருந்தனர். பேச்சின் இடையில் அந்த ஆன்மிகச் சாதகர் வார்த்தை ஒன்றைச் சற்றே பிழையாக உச்சரித்தார். நூற்கள் பல கற்று அறிவுச் சேகரத்தை அகத்தில் வைத்திருப்பதாக அகந்தை மிகுந்திருந்த இலக்கணப் பண்டிதரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தை அப்படித் தவறாக உச்சரிக்கப்படுவதைத் தன்னால் ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று அவர் பொருமினார். அவர்கள் நெடுநேரம் விவாதித்துக் கொண்டே நடந்திருந்தனர். வழியில் பாழ் கிணறு ஒன்று  இருப்பதை இருவருமே கவனிக்கவில்லை. இலக்கணப் புலவர் அதனுள் விழுந்துவிட்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் சாதகனிடம் கோரினார். அவர் தனது மறுப்புரையைத் திரும்பப் பெற்றால்தான் காப்பாற்ற முடியும் என்று சாதகன் சொன்னான். இலக்கணப் புலவர் அதற்கு ஒப்பாமல் தனது அறிவின் மேன்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தார். எனவே அவரை அங்கேயே விட்டுவிட்டு அந்தச் சாதகன் போய்விட்டான்.

      இந்தக் குறியீட்டுக் கதையைச் சொல்லிவிட்டு மௌலானா அவர்கள் தொடர்ந்து தற்பெருமை மற்றும் தற்புகழ்ச்சி குறித்துப் பேசினார்கள். “சுய மேன்மையை வலியுறுத்துவதை ஒருவர் நிறுத்தினாலே ஒழிய அவர் ஓர் இருட்டுக் கிணற்றுக்குள்தான் கிடப்பார். பிறருக்கு மட்டுமே தெரிகின்ற, தனக்குப் புலப்படாத கிணறு அது. கடிவாளம் அற்ற தன்முனைப்பு என்பது அந்தப் புலவர் விழுந்து கிடந்த கிணற்றைப் போன்றதே. தேவையில்லாத சுய முக்கியத்துவமே அந்த உணர்வின் வெளிப்பாடாகும்.” ஆன்மிகக் கருத்துள்ள இந்தக் கதையைக் கேட்டுப் பெரிதும் பாராட்டிய அவர்கள் அனைவரும் மிகவும் தாக்கம் பெற்று மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.

21
தர்வேஷும் ஒட்டகமும்


      ஒருநாள், மௌலானாவின் முன்னிலையில் கூடியிருந்தோர் அந்நாட்டின் ஆளுநரான மொய்னுத்தீன் என்பவரைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவரது ஆட்சியில் மக்கள் மிகவும் உடல் சௌகரியத்துடனும் உடல் நலத்துடனும் வாழ்ந்தனர் என்றும் அவரது வண்மை மிகப் பெரிது என்றும் பேசினர். மௌலானா சொன்னார், அது எதார்த்தம்தான், நூறு மடங்கு உண்மைதான்; ஆனால் வாழ்க்கைக்கு இன்னோர் அம்சமும் இருக்கின்றது (அதாவது, வெறுமனே புறத் தலைமை மட்டும் போதாது. ஆன்மிகத் தலைமைக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும்.) இது தொடர்பாக கதை ஒன்றும் சொன்னார்:

      முன்பு ஒருமுறை குழு ஒன்று ஹஜ் என்னும் புனித யாத்திரையாக மக்காவுக்குப் பயணித்தது. அந்தக் குழுவில் இருந்த தர்வேஷ் ஒருவரின் ஒட்டகம் நோய்ப்பட்டது. அவர்கள் எவ்வளவு சிகிச்சை செய்தும் அந்த ஒட்டகம் எழுந்து நிற்கவில்லை. (அந்த தர்வேஷ் ஒரு சலுகைப் பயணம்தான் செய்கிறார்; அவரிடம் மூட்டை முடிச்சுகள் ஏதுமில்லை என்பது வெளிப்படை.) எனவே, அந்த ஒட்டகம் சுமந்து வந்த பைகளை எல்லாம அவரவர் எடுத்துக்கொண்டு வேறு ஒட்டகங்களில் பகிர்ந்து ஏற்றி விட்டார்கள். வாகனம் ஏதுமின்றி அந்த தர்வேஷைத் தனியே விட்டுவிட்டார்கள். தர்வேஷை அப்பயணக்குழு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மௌலானா பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”வழிகாட்டி ஒருவரை
      உன்னுடம் அழைத்துச் செல்
      பாதையோ மிகவும்
      பாதகமானது.
      நல்லூழின் நட்சத்திரம்
      என்று சொல்வேன் அவரை.
      அவர் ஒரு வழிகாட்டியாய் இருப்பது
      அகவை மிகுந்தவர் என்பதால் அன்று,
      திகழும் ஞானத் திறத்தால் மட்டுமே.”


22
கழுதை


      மௌலானா ஒருநாள் சமயக் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பற்பல ஆன்மிக மர்மங்களின் உள் அர்த்தங்களை விளக்கிக் கொண்டிருந்தார். திருக்குர்ஆனில், “திண்ணமாக, ஓசைகளில் மிகவும் அருவருப்பானது கழுதையின் ஓசையே” (31:19) என்று சொல்லப்பட்டிருப்பது ஏன்? என்று கேட்டு அதனைத் தனது மாணவர்களும் சீடர்களும் விளங்குகிறார்களா என்றும் கேட்டார்.

      மௌலானா விளக்கினார், “விலங்குகள் எல்லாம் ஓசை எழுப்பும்போது இறைவனை வணங்கவும் புகழவும் செய்கின்றன. உதாரணமாக ஒட்டகம், பெண் ஒட்டகம்; தேனீக்களின் ரீங்காரம், குளவியின் சப்தம். ஆனால், கழுதை அப்படியான நோக்கத்தில் கத்துவதில்லை. அது இரண்டே தருணங்களில்தான் தனது குரலை எழுப்புகிறது: அது பசித்திருக்கும்போது மற்றும் இணை சேர விரும்பும்போது. எவனது உள்ளத்தில் இறைக்காதலுக்கு இடமில்லையோ அந்த மனிதனும் அப்படித்தான். உண்மையில், அவன் கழுதையை விடவும் மட்டமானவன்.”
அதன் பிறகு அவர் இந்தக் கவிதையைப் பாடினார்:

      ”எவரது ஆர்வங்கள் கழுதையைப் போன்றதோ
      அவரது படித்தரம் கழுதையினும் கீழ்தான்;
      வழியோ உனக்குப் பரிச்சயம் இல்லையேல்
      கழுதையின் ஆசைக்கு எதிராக இயங்கு!”

      அதன் பின் அவர் அரசன் ஒருவனைப் பற்றிய கதையைச் சொன்னார். அந்த அரசன் தன்னிடம் மூன்று பொருட்களை அனுப்புமாறு அண்டை நாட்டு அரசனுக்குச் செய்தி அனுப்பினான்: ஆக மட்டமான உணவு, மிகவும் மோசமான மனிதன் மற்றும் மிகவும் கீழான விலங்கு. அரசனின் நண்பனான அந்த அரசன் கொஞ்சம் மோசமான உணவு, அர்மீனியா நாட்டு அடிமை மற்றும் ஒரு கழுதை ஆகியவற்றை அனுப்பி வைத்தான். கத்துவன யாவற்றின் ஓசைகளிலும் கழுதையின் ஓசையே அருவருப்பானது என்றுரைக்கும் திருக்குர்ஆன் வசனத்தை அவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
       
ஒருநாள், மௌலானாவும் அவரது நண்பர்களும் ஷெலபி ஹுசாமுத்தீன் அவர்களின் தோட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தனர். மௌலானா ஒரு கழுதையின் மீது அமர்ந்திருந்தார். ஷீது, உஜைர் மற்றும் ஏசு போன்ற இறைத்தூதர்கள் கழுதை மீது சவாரி செய்துள்ளனர் என்றும் அந்த புனித வழிமுறையைத் தானும் கடைப்பிடிப்பதாகவும் அவர் சொன்னார்.

கவிதை:

      ”அறிவாளியே!
      கழுதையின் வெற்று முதுகின் மேல்
      சவாரி செய்வாய்!
      இறைவனின் தூதர்கள் பலர்
      இவர்ந்து சென்றனர் அப்படியே!”

      அப்போது, ஞானி ஷஹாபுத்தீனும் ஒரு கழுதையின் மீது சவாரி செய்திருந்தார். அது திடீரென்று கத்தத் தொடங்கிற்று. அதன் சப்தத்தால் கோபமுற்ற ஷஹாபுத்தீன் அதனைத் தலையில் அடிக்கத் தொடங்கினார். மௌலானா அவரைக் கண்டித்துச் சொன்னார், “அதனை அடிக்காதீர். இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் அதன் மீது சவாரி செய்கின்றீர். அது உங்கள் மீது சவாரி செய்யவில்லை!” ஷஹாபுத்தீன் வெட்கிப் போனார். மன்னிப்புக் கோரும் பாவனையில் கழுதையை விட்டுக் கீழிறங்கி அதன் குளம்புகளை முத்தமிட்டார். மேலும் மௌலானா சொன்னார், “அதே போன்ற உணர்ச்சிகள் மனிதர்களையும் ஆட்டுவிக்கின்றன. அப்படியானால் அவர்களையும் அடிக்கத்தானே வேண்டும்?”

23
உலக இழப்பு

      ஒருநாள், ஒரு மனிதன் மௌலானாவிடம் வந்து தனது உலக நட்டங்களைப் பற்றியும் வறுமை தன்னை முடக்கி விட்டதைப் பற்றியும் மிகவும் கசப்புடன் புலம்பிக் கொண்டிருந்தான். தனது சகவாசத்தை விட்டுவிடுமாறு மௌலானா அவனிடம் சொன்னார். மேலும், “எமக்கு அருகிலேயே வராதே. எம்மை விட்டும் எம்மைப் போன்றோரை விட்டும் தூரமாகவே இரு” என்றும் சொல்லிவிட்டுப் பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”மேன்மையானவனே வா!
      என்னைப் போல் இரு.
      அழியும் பொருட்களின்
      ஆழ உயரங்களைத் தேடாதே.
      சாத்தானின் பின்னல் அதுவே!
      அரசனின் மகுடம் உன்
      சிரசில் பொருத்தப்படும்!
      ஞானியரின் அங்கி உன்
      மேனியில் சூட்டப்படும்!”

      இதே போல் ஒரு நிகழ்வு நபிகள் நாயகத்தின் வாழ்வில் அறிவிக்கப்படுகிறது. தனது தோழர் ஒருவருக்கு அவர் நவினறார், “இரும்புக் கவசங்கள் அணிந்துகொள்; பகைமையை வரவேற்கவும் சிரமங்களை அனுபவிக்கவும் ஆயத்தமாகு; ஏனெனில் உலகச் சம்பத்துக்களின் சுருக்கம் என்பது இறைவனை நேசிப்போருக்கு வழங்கப்படும் அருட்கொடை ஆகும்!”

      மௌலானா சொன்னார், ஒருமுறை ஞானி ஒருவர் பணக்காரன் ஒருவனிடம் அவன் எதை அதிகம் நேசிக்கிறான், பாவத்தையா? அல்லது பணத்தையா? என்று கேட்டார். பணத்தையே அதிகம் நேசிப்பதாக அந்த மனிதன் சொன்னான். அவனிடம் ஞானி சொன்னார், “நீ உண்மையைச் சொல்லவில்லை. ஏனெனில் நீ மரணிக்கும்போது உனது செல்வங்களை விட்டுவிட்டுப் போவாய்; ஆனால் உனது பாவங்களை எடுத்துக்கொண்டு போவாய்.”

      ”நீ எதை அதிகம் நேசிக்கிறாயோ அதை உன்னுடன் எடுத்துச் செல்வதற்கு வழியைப் பார்” என்று அவனிடம் அந்த ஞானி சொன்னார். (அதாவது, அவன் பணத்தையே அதிகம் நேசிக்கிறான். அதனை மறுமைக்கு எடுத்துச் செல்வது என்பது அவன் வாழும்போதே அதனை ஏழைகளுக்கு ஈகையாகக் கொடுத்துச் செல்வதுதான்.) “தர்மம் செய். அப்படியானால், நீ இறைவனிடம் சென்று சேர்வதற்கு முன்பே அவனுக்கு உனது செல்வங்களை அனுப்பி வைத்தவன் ஆவாய். ’நன்மையில் நீங்கள் உங்களுக்காக முற்படுத்தியதை அல்லாஹ்விடம் கண்டடைவீர்’ (2:110) என்று குர் ஆன் சொல்கிறது. அதுவே மிக உன்னதமான சன்மானம் ஆகும்.” என்றும் அவர் அவனிடம் சொன்னார்.

24
கண்ணியமான இடம்

      ஞானி மொய்னுத்தீன் ஒருநாள் தனது இல்லத்திற்கு அணுக்க நண்பர்கள் பலரையும், சான்றோரையும் அறிஞர்களையும் அழைத்திருந்தார். அவர்களை அவரவர் தகுதிக்கேற்ப கண்ணியமான இடங்களிலே அமர வைத்திருந்தார். மௌலானாவும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாட்டின் உயர் ஆளுநர் விரும்பினார். எனவே, மௌலானாவை அழைத்து வர உயர் ஆளுநரின் மருமகனான முஜாதுத்தீன் அனுப்பப்பட்டார். சிறப்பு இருக்கைகள் யாவும் நிரம்பிவிட்டதால் மௌலானா வருகை தந்தால் அவரை எங்கே அமர வைப்பது என்று அங்கிருந்த சிறப்பு விருந்தினர்களிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. அவரவரும் தனது மதிப்பின் மீது உறுதியாக இருந்த காரணத்தால் மௌலானா வரும்போது தனது இடத்தை விட்டும் எழாமல் இருப்பது என்று முடிவு செய்துகொண்டனர். மௌலானாவை அழைத்து வருமாறு பணிக்கப்பட்டவர் நயமிகு சொற்களால் அழைப்பு விடுத்தார். எனவே, மௌலானா தனது பிரதிநிதியாகிய ஞானி ஷெலபி ஹுசாமுத்தீன் மற்றும் பிற நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

      மௌலானாவின் சீடர்கள் முன்னே நடந்தனர். ஞானி ஹுசாமுத்தீன் அந்த வீட்டினுள் காலடி வைத்தவுடன் அங்கிருந்த ஆன்மிக குருமார் அனைவரும் அவரை வரவேற்று உயர்வான இடமொன்றில் அமர வைத்தனர். பின்னர் மௌலானா ரூமி அங்கே வந்து சேர்ந்த போது உயர் ஆளுநர் ஓடிச் சென்று வரவேற்று மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் மௌலானாவின் கைகளை முத்தமிட்டார். பெரிய மனிதர்கள் யாவரும் ஏற்கனவே சிறப்பிடங்களில் அமர்ந்திருப்பதைக் கண்ட மௌலானா அவர்களுக்கு முகமன் உரைத்துவிட்டு நடு மேடைக்கு அப்பால் இருந்த இடத்தில் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

      மௌலானா அவர்கள் மேடைக்கு அப்பால் ஓரத்தில் அமர்வதைக் கவனித்த ஷெலபி ஹுசாமுத்தீன் தானெழுந்து சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அதனைக் கண்ட பிற பிரமுகர்களும் எழுந்து வந்து அவர்களின் அருகில் அமர்ந்தனர். ஆனால், மௌலானாவின் பெருமையை ஒருபோதும் ஏற்பதில்லை என்று நெஞ்சில் வஞ்சகம் பூண்டிருந்தோர் மட்டும் இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்திருந்தனர். ஷைகு நசீருத்தீன், சையது ஷரீஃபுத்தீன் போன்றோர் அவர்களில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் கல்வியாளர்கள், ஒவ்வொருவரும் ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்தவரைப் போன்றோர். ஷரீஃபுத்தீன் உயர்ந்த பண்புகளும் அறிவும் பெற்றவராயினும் கொஞ்சம் அவரமாகவும் வெளிப்படையாகவும் பேசிவிடக் கூடியவர் என்று சொல்லப்பட்டது. மௌலானா பலரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்கள் என்பதையும் தனது பக்கம் பெரும்பான்மை இருக்கைகள் வெறுமை ஆகிவிட்டன என்பதையும் கண்ட ஷரீஃபுத்தீன், சிறப்பு விருந்தினருக்கான இருக்கை எது? என்றும் கூட்டத்தின் தலைவர் உண்மையில் யார் என்றும் கேள்வி எழ்ப்பினார்.

      ஃகுராசான் நகரின் ஞானியர் மற்றும் தனிமையான வாழ்க்கை வாழ்ந்தோர் ஆகியோரது கருத்தின்படி மேடையின் விளிம்புப் பகுதியே கண்ணியமிக்க இடம் என்று ஷைகு ஷரீஃபுத்தீன் சொன்னார். சூஃபிகளின் உலகில் மேடையின் கடைசி ஓரமே மிகவும் கண்ணியமான இடம் என்று ஷைகு சதுருத்தீன் கூறினார். பிறகு, சோதிக்கும் முறையால், கண்ணியமான் இடம் எது என்று அவர்கள் மௌலானாவைக் கேட்டனர். மௌலானா பாடினார்கள்:

      ”வசிப்பிடம் எது? சிறப்பிடம் எது?
      தலைமை தாங்குவோர் யார்?
      இந்த வார்த்தைகளில் எல்லாம்
      உண்மையில் அர்த்தம் உள்ளதா?
      நாம் என்பதும் நான் என்பதும் யார்?
      இறைவன் எங்கோ அங்கே நாம்.”

      ”இறைவன் எங்கோ அங்கேதான் தலைவரும்” என்று மௌலானா சொன்னதும், “சரி, இறைவன் எங்கே?” என்று சையது சதுருத்தீன் கேட்டார். “ஓ அந்தகரே! நீங்கள் பார்க்கவில்லை அல்லவா?” என்று கேட்டுவிட்டு மௌலானா பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”காண்பதற்கு அகக்கண் இல்லை உன்னிடம்.
      இல்லையேல்,
உச்சி முதல் பாதம் வரை
      உன் மொத்த இருப்பிலும்
      உன்னை அல்ல
      அவனையே காண்பாய் நீ”

      பின்னர் மௌலானா அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பின்பு, ஷரீஃபுத்தீன் டமஸ்கஸுக்குச் சென்றார். மௌலானா அவர்கள் முன்னுரைத்தது போன்றே அவர் கண்பார்வையை இழந்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். மௌலானா தன்னை நோக்கிச் சத்தமிட்ட போது யாரோ தனது கண் முன்னால் கரும்பலகை ஒன்றைப் பிடித்திருப்பது போன்று தான் உணர்ந்ததாகவும் தன்னால் அதன் பின் எதையுமே தெளிவாகக் காண இயலவில்லை என்றும் அவர் சொன்னார். மௌலானாவின் மன்னிக்கும் மனோபாவம் மாபெரிது என்பதால் அவர் தன்னை மன்னிக்கக் கூடும் என்று அவர் நம்புவதாகச் சொல்லிப் பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”மன்னிப்பின் நம்பிக்கையை இழக்காதே.
      சொன்னதைத் திரும்பப் பெற்றால்
      மன்னிப்பின் கடலோ விசாலமானது.
      தொழுகையிலும் தியானத்திலும்
      பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்;
      அவனின் மன்னிப்போ அளப்பரிது.”

      ஜலாலுத்தீன் கரத்தையின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு. தான் நிறுவும் கல்லூரியின் (மதரஸாவின்) கட்டடப் பணி நிறைவு பெற்றதால் அவர் அதன் திறப்பு விழாவிற்கு வருமாறு பெருந்திரளான அறிஞர்களையும் ஊரின் பெரிய மனிதர்களையும் அழைத்திருந்தார்.

      அந்நாளில்தான் மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் அந்நகருக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்தார். கூட்டத்தில் கண்ணியமான இடம் எது என்று அவர் மௌலானாவைக் கேட்டார். மௌலானா சொன்னார், “அறிஞர்களிடையே கண்ணியமான இடம் என்பது மேடையின் நடுவில். ஆன்மிக நெறியின் ரகசியங்களைத் தேடுவோருக்குக் கண்ணியமான இடம் என்பது மேடையின் மூலை. சூஃபிகளுக்குக் கண்ணியமான இடம் என்பது மேடையின் ஓரம். காதலர்களுக்கோ கண்ணியமான இடம் என்பது நேசனின் அருகில்.” இதைச் சொல்லிவிட்டு மௌலானா ரூமி தனது இடத்தை விட்டு எழுந்து சென்று மௌலானா ஷம்ஸி தப்ரேஸின் அருகில் அமர்ந்து கொண்டார். அதன் பின் கோன்யா நகரில் மௌலானா ஷம்ஸ் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.
      
 ஆளுநர் மொய்னுத்தீன் அவர்கள் ஒருமுறை தனது இல்லத்தில் மௌலானாவைச் சிறப்புச் செய்யும் வகையில் இசை நிகழ்ச்சி (சமா) ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை அழைத்திருந்தார். ஞானத் துறைஞர் மற்றும் ஆன்மிகச் சிந்தனையாளர் பலரும் வந்திருந்தனர். நள்ளிரவு வரை உணர்வெழுச்சியுடன் சென்றது. எனவே ஆக்கி வைத்திருந்த உணவெல்லாம் ஆறிப்போய் உண்ணத் தகாமல் ஆயின. பணியாள் இதனை ஆளுநரின் காதில் ஓதினான். அவரோ தக்க நேரம் பார்த்து மௌலானாவிடம் விநயத்துடன் விண்டார். நிலைமையை மௌலானா புரிந்து கொண்டார். “கட்டுக்கடங்காத விசையுடன் நீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது நீராலையின் அருகில் நிற்குமொருவன் அதன் இயக்கத்தை எப்படி நிறுத்தமுடியும்?” என்று சொன்னார்.

      இந்த உவமையைக் கேட்டவுடன் ஆளுநர் உணர்ச்சி மேலிட்டுக் கண்ணீர் வடித்தார். உணவு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. விருந்தினர்களுக்குப் புதிய உணவு சமைக்கப்பட்டது.


25
மருந்துகளின் அற்புதம்

      ரூம் அரசின் அக்காலத்து மருத்துவருள் சிறந்தோன் அக்மலுத்தீன். அம்மருத்துவன் நச்சரவம் தீண்டிய எழுபதின்மரைக் காக்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து மாத்திரைகளைத் தயாரித்திருந்தான். அப்போது ஆட்சி செய்திருந்த அரசனின் ஆணைக்கு ஏற்பவே இக்காரியம் நடந்து வந்தது. அவசர காலத்துக்கென்று எப்போதும் எழுபது கிண்ணங்களில் அந்த மருந்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அரசர் கட்டளை இட்டிருந்தார்.

      அந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த நாளொன்றில் மௌலானா ரூமி அவர்கள் ஏதேச்சையாக அந்த மருத்துவனின் வீட்டிற்கு வந்தார். வழக்கப்படி அவரை மிகவும் சிறப்பாக அவன் வரவேற்றான். வினோதமான எழுபது மருந்துக் கோப்பைகள் இருப்பதைக் கண்ட மௌலானா ஒவ்வொன்றாக அவற்றை விழுங்கி முடித்தார். ஒவ்வொரு கோப்பையை முடித்ததும் அதன் அருமையான சுவைக்காக இறைவனைப் புகழ்ந்தார்.

      இதனைக் கண்ட மருத்துவன் வியப்பில் உறைந்து நின்றான். அவனுக்குப் பேச்சே எழவில்லை. சராசரி மனிதனின் மீது அந்த மருந்து என்ன விளைவை ஏற்படுத்தும் என்று மௌலானாவிடம் அறிவிக்கவும் அவன் துனியவில்லை. அந்த ஆற்றல் மிக்க மருந்துகளை அருந்திவிட்டு மௌலானா அவர்கள் எதுவுமே நிகழாதது போல் தனது கல்லூரியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அந்த மருந்தின் ஆற்றலைப் பற்றி மௌலானாவின் சீடர்களிடம் மருத்துவன் சொல்லி வைத்தான். அவனைப் போலவே அவர்களும் தங்களது குருநாதரின் உடல் நிலையில் அந்த மருந்துகள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்று அஞ்சினர். மௌலானா அவர்கள் தனது வாணாள் முழுவதும் கடுமையான ஆன்மிகப் பயிற்சிகளில், நீண்ட நேர வழிபாடுகளில் கழித்தவர் ஆதலால் அவர் தனது உடல் நலத்தை மிக எச்சரிக்கையாகப் பேண வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். அந்த மருந்தின் ஓர் அலகை அருந்தினாலும் அவரால் எழ முடியாமல் போய்விடும் என்று மருத்துவன் சொல்லியிருந்தான். அவனால் நிம்மதியாகச் சாய்ந்திருக்க முடியவில்லை. மனத்தில் மிகுந்த பதற்றத்துடன் அவன் மௌலானாவின் இருப்பிடத்திற்கு விரைந்தான். கல்லூரியின் முற்றத்தில் மௌலானா அமர்ந்திருப்பதைக் கண்டான். அகத் தத்துவ நூலொன்றில் ஆழ்ந்து அதனை அமைதியாக வாசித்துக் கொண்டிருந்தார்.

      மரபான முகமன் உரைத்த பின், அவர் எப்படி உணர்கிறார் என்று அவன் மௌலானாவை வினவினான். தண்ணென்ற புனலோடை ஒன்றன் அருகில் அமர்ந்திருப்பதைப் போல் தான் குளுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக மௌலானா கூறினார். அவர் சிறிது காலம் குளுமையான நீரை அருந்தாமல் இருக்க வேண்டுமென்று மருத்துவன் மிகப் பக்குவமாக எடுத்துரைத்தான். மௌலானா உடனே பனிநீர் கொண்டு வருமாறு ஆணையிட்டார். அதில் கொஞ்சம் பனிக்கட்டியையும் இட்டு மேலும் குளுமையூட்டி அதனை உறிஞ்சிக் குடித்து முடித்தார். ஆன்மிக இசையை ஆரம்பிக்கும்படி ஆணையிட்ட பின் குளிப்பதற்குச் சென்றார். மூன்று நாட்கள் அந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

      மனித அனுபவத்தில் இப்படி மருத்துவ அறிவைப் புறந்தள்ளுவது சாத்தியமே இல்லை என்று அந்த மருத்துவன் அலறினான். ஞானிகள் மட்டுமே இப்படிச் செய்ய இயலும். அதன் பின் அவனும் அவனது மனைவி மக்களும் உறவினர் சிலரும் மௌலானாவின் சீடர்களாயினர். தனது மருத்துவத் தோழர்களிடம் அவன் இந்நிகழ்வைப் பல காலம் சொல்லிக் கொண்டிருந்தான்.

      கவிதை இதைச் சொல்கிறது:

      ”அருந்தின் அவரை நஞ்சு நலியாது.
      அறைகுறைச் சாதகன் அருந்துவான் எனில்
      நீலச் சுண்டெலி போலவன் மேனி
      சாலவும் மாறிச் சாய்ந்து கிடக்கும்.
      முத்து நபியின் முதலாம் பிரதிநிதி
      சத்திய அபூ பக்கரின் மீது
      நஞ்சின் தீமை கொஞ்சமும் இல்லை
      என்பதன் ரகசியம் இதுதான், அறிக.
      ஞானியர் தமக்கோ நஞ்சு என்பது
      தேனென மாறும் உண்மை தெரிக.”

      இக்கவிதை வரலாற்று நிகழ்வு ஒன்றைச் சுட்டுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரைப் புலம் பெயர்ந்து மதீனா நகர் நோக்கிப் பயணித்தபோது நபியின் முதல் கலீஃபா (பிரதிநிதி)யான அபூபக்கர்தான் உடன் சென்றார். எதிரிகள் அவர்களைத் துரத்தி வந்தனர். பயணத்தின் இடையில் அவர்கள் ”தௌர்” என்னும் குகையில் மறைந்திருந்தனர். அதிலொரு பாம்புப் புற்று இருந்தது. அதிலிருந்து பாம்பு ஒன்று தனது தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. வெளியே வராமல் அதனைத் தடுக்க அபூபக்கர் தனது பாதப் பெருவிரலால் புற்றுத் துளையை அடைத்தார். அந்தப் பாந்தள் அவரைக் கொத்திற்று. அது தீண்டிய இடத்தில் நபியின் தூய உமிழ்நீர் தடவப்பட்டது. பாம்பின் விடம் அவருக்குத் தீங்கு செய்யவே இல்லை.

(to be continued...)

No comments:

Post a Comment