நண்பர் மானசீகன் அண்மையில் எழுதிய
பதிவு ஒன்றை இன்று காலையில் கண்டேன். இசைஞானி இளையராஜா அவனிக்கு வழங்கிய அரும்பாடல்களில்
ஒன்றான ‘என்னுள்ளே என்னுள்ளே...’ என்னும் பாடலைப் பற்றிய தனது அனுபவங்களை, அவதானங்களை
அவர் எழுதியுள்ளார். ஓரிடத்தில் எளியேனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்:
”நான் திருச்சி ஜமாலில் முதுகலைத்
தமிழ் படிக்கிறபோது நண்பர் பேராசிரியர் ரமீஸ் வீட்டில் (அப்போது அவர் சீனியர் மாணவர்)
தொழப் போவது போல் ஒளு செய்து விட்டு அத்தரும், பத்தியும் சேர்ந்து மணந்த ஓர் அறையில்
விளக்கை அணைத்துவிட்டு சிறு ஒளியில் கண்களை மூடி விரிப்பில் அமர்ந்தபடி கேட்டு ரசித்த
பல பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இளையராஜா
ஆச்சரியப்பட மாட்டார்”
சூஃபிகளின் இசை கேட்டல் என்னும் மரபைப் பற்றிய படிப்பறிவோடு அது எப்படியெல்லாம்
இருக்கும் என்னும் அனுமானத்தில் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. எனவேதான்,
மான்சியின் பதிவுக்கான பின்னூட்டத்தில் ‘அது ஒரு கனாக் காலம்’ என்று எழுதினேன்.
மான்சி குறிப்பிடும் நிகழ்வு எனது பாட்டியாரின் வீட்டில் எனக்குத்
தரப்பட்டிருந்த இரண்டு அறைகளில் ஒன்றில் நடந்தது. உலக இசை வடிவங்களை எல்லாம் தியானத்திற்குப்
பரிசோதித்துக் கொண்டிருந்த காலமது. மேற்கத்திய செவ்வியல் சேகரத்தில் மொஸார்ட், பாக்,
சக்காவ்ஸ்கி என்றெல்லாம் கேட்கும்போது அங்கேயும் இளையராஜாவின் ”How to name it?” மற்றும்
“Nothing but wind” ஆகிய இசைப் பேழைகள் ஒலிக்கும். ஹிந்துஸ்தானியில் படே குலாம் அலி
ஃகான், ரஷீத் கான், அஜய் சக்ரபொர்த்தி, பண்டிட் ஜஸ்ராஜ், கிரிஜா தேவி என்றொரு பட்டியல்
நீளும். கஜல் என்னும் உருதுக் கவிதை வடிவத்தின் இசைக் கோலங்களில் ஜக்ஜீத் சிங், ஹரிஹரன்,
ரூப் குமார் ரத்தோட், சல்மா ஆகா, இசை அமைப்பாளர் ஃகய்யாம் முதலியோர் இடம்பெறுவர். ராய்
என்னும் அறபி இசை வடிவத்தின் முடி சூடா மன்னன் ஷாப் ஃகாலித் சில நேரம் பாடுவார். சூஃபி
கவ்வாலி இசைதான் பெரும்பாலும் கேட்போம். அதிலும் குறிப்பாக நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான்
என்னும் ஈடிணை இல்லா இசைக் கலைஞனின் குரலில்தான் கரைந்து கொண்டிருப்போம்.
ஆங்கிலப்
புத்திசை வடிவங்களில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. என் அணுக்கத் தோழர்களில் ஒருவனான
முஹம்மது அஸ்லம் (தற்போது துபையில் பணி புரிகிறான்) எனக்கு ஆங்கில நவீன இசைகளை அறிமுகம்
செய்து வைத்தான். அதில் குறிப்பாக, மடோனாவின் ‘ஃப்ரோஸன்’ என்னும் பாடல் என்னை மிகவும்
கவர்ந்தது. மடோனா யூத ஆன்மிக நெறியான ’கப்பாலா’வை நோக்கித் திரும்பியிருந்த காலம் அது.
எனவே அப்போது வெளி வந்திருந்த ’Ray of Light’ என்னும் இசைக் கோவையில் இடம்பெற்ற பாடல்களின்
வரிகளில் எல்லாம் ஆன்மிகச் சாயல் இருந்தது. ஆங்கில நவீன இசையில் நான் பெரிதும் அனுபவித்த
ஒரே இசைப்பேழை அதுதான். மேற்கத்திய நவீனப் பாடல்கள் என்றாலே புலனின்பம் சார்ந்தவை மட்டுமே
என்று இந்தியப் பொதுப் புத்தி புகட்டியிருந்த மூட நம்பிக்கை என்னில் அன்றோடு ஒழிந்தது.
மானசீகன்
குறிப்பிட்டிருக்கும் அதே முறையில் அஸ்லம் வீட்டில் ஒருமுறை நிகழ்த்திய இசைக் கேட்டல்
நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறது. நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் பாடிய ஆற்றல் மிக்கதும்
மிகுபுகழ் பெற்றதுமான “அலீ கா கிர்வீதா” (ஹக் அலி மௌலா அலி) என்னும் பாடலை அன்று கேட்டோம்.
அரை மணி நேர நீளம் கொண்ட பாடல் அது.
நண்பரும்
தமிழ்ப் பேராசிரியருமான கரிகாலனுடன் அதுபோல் திருவையாற்றில் இசை கேட்டிருக்கிறேன்.
இளையராஜாவின் இசைக் கோவைகளுடன் கர்நாடக இசைக் கோவைகளையும் அவருடன் சேர்ந்து செவி மடுத்த
நாட்கள் நினைவுக்கு வருகின்றன. எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமணியம், கத்ரி கோபால்நாத்
போன்றோரின் சேகரம் அப்போது எளியேனிடம் இருந்தன.
இது போல்
போய்க் கொண்டிருந்த போதுதான் முதுகலை பயிலும் காலத்தில் அறிமுகமானார் பேராசிரியர் இம்தாதுல்லாஹ்.
எளியேனை எமது குருநாதரிடம் ஆற்றுப்படுத்தியவர். அவர்தான் சூஃபி இசை நிகழ்வான சமாஃ என்பது
எப்படி அமைய வேண்டும் என்று எமக்கு நெறிப்படுத்தி வைத்தார். அவரது வீட்டில் சில நிகழ்வுகள்
நடத்தியிருக்கிறோம். உருது மகாகவி அல்லாமா இக்பால் இயற்றிய “தயாரே இஷ்க் மே(ன்)” என்னும்
கசீதாவை நுஸ்ரத் அவர்கள் கவ்வாலியாகப் பாடியிருக்கிறார். அதனை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்
கொண்டிருந்தபோது ஐந்தே நிமிடங்களில் உணர்ச்சி மேலிட்டுக் கத்தியபடி அதனை நிறுத்தச்
சொன்னார். பதறியடித்து நிறுத்தியபின் “இதெல்லாம் நாம் கேட்பதற்கில்லை. அவ்லியாக்கள்
கேட்க வேண்டிய இசை” என்று சொல்லிவிட்டு அப்பாடலின் சில வரிகளை விளக்கி அரை மணி நேரம்
பேசினார். அன்று சபை அப்படியே முடிந்துவிட்டது.
இதெல்லாம்
நடைபெற்றது பதினேழு ஆண்டுகளுக்கு முன் என்பதை மனம் கொள்க. அதன் பின் எவ்வளவோ நடந்துவிட்டது.
அதையெல்லாம் இங்கே எழுதினால் ஒரு நாவலாக விரியும். ஆவலாக இருந்தாலும் இன்னும் செய்ய
வேண்டிய வேலைகள் ஒருபாடு கிடக்கும் போது வரலாற்றைத் திரும்பிப் பார்த்து எழுத ஏலவில்லை.
அடியேன்
நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி வைத்திருக்கிறேன். இதனை ஆறு நாட்களுக்கு முன் எமது
கல்லூரியில் நடைபெற்ற உமறுப்புலவர் பேரவை தொடக்க விழாவில் மேடையிலேயே அறிவித்துவிட்டு
இம்தாதுல்லாஹ் அவர்கள் தனது வெங்கலக் குரலெடுத்து எளியேன் எழுதிய பாடலொன்றைப் பாடினார்.
‘என்னவளே…’ என்று தொடங்கும் (ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்த) திரைப்பாடல் மெட்டில் அதனை எழுதியிருந்தேன்.
“அன்பு நபி எங்கள் ஆசை நபி – இந்த
அகிலங்கள்
போற்றும் நபி – உயர்
பண்பு நபி எங்கள் பாச நபி – இந்தப்
பாருல
காளும் நபி
இன்ப நபி எங்கள் இதய நபி – எங்கள்
இன்னுயிர்
தேடும் நபி – இரு
கண்ணில் வைத்து இறை காக்கும் நபி – இறைக்
காதலர் ஆன நபி”
அடியேன்
எழுதிய பாடல்களை வைத்து எத்தனையோ சபைகள் கூட்டிவிட்டோம். உணர்வுக்கு இசையும், அறிவுக்கு
அவ்வரிகளில் பொதிந்த ஞானத்தை விளக்கும் உரையும் பின்னர் தியானமும் என்றொரு கட்டமைப்பில்
அவ்வமர்வுகள் நடந்தன, நடக்கின்றன. பாட்டெழுத எளியேன் தேரும் மெட்டுக்கள் மேற்குறிப்பிட்ட
இசை மேதைகளின் ஆக்கங்களே. அவற்றுள் செம்பாகம் இசைஞானி இளையராஜா இயற்றிய இனிய மெட்டுக்கள்.
அடுத்த நிலையில் சூஃபி இசைக்கோ நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் பாடிய கவ்வாலி மெட்டுக்கள்.
தியாகையரின் கீர்த்தனைகள் அமைந்த மெட்டுக்களிலும்கூட எழுதியிருக்கிறேன். அவரின் சமாதி
அமைந்திருக்கும் காவிரிக் கரையில்தான் எனது கால்சட்டைப் பருவத்தில் பத்துப் பன்னிரண்டு
ஆண்டுகள் ஓடி விளையாடி வளர்ந்தேன்.
மானசீகன்
குறிப்பிட்டிருக்கும் ‘என்னுள்ளே என்னுள்ளே…’ என்னும் பாடல் பற்றிச் சில சொல்வாம்.
பொதுவாக நான் திரைப்பாடல்களின் காட்சிகளைக் காண்பதைத் தவிர்த்துவிடுவேன். குறிப்பாக,
மனம் கவர் பாடல்களாய் இருப்பின் அதன் திரைக் காட்சிப்பாடுகளைக் காண்பதை மிக எச்சரிக்கையாகவே
தவிர்த்து விடுவேன். அப்பாடல்கள் எனது அகக் காட்சிகளுக்கு உரியவை. சுருங்கச் சொன்னால்,
நான் பாடல் கேட்பவன், பார்ப்பவன் அல்லன்.
’என்னுள்ளே
என்னுள்ளே...’ பாடலின் இசை நிச்சயமாக ஆன்மிகத் தன்மை கொண்டதே. இசைஞானியின் பல பாடல்கள்
அப்படித்தான். திரைக் கதையின்படி இது காம நிகழ்வொன்றில் இடம் பெறுவதாய் இருக்கலாம்.
சங்க இலக்கியத்தில் ஓர் அருமயான பாடல் இருக்கிறது “யாரும் இல்லை தானே கள்வன்” என்று.
அச்செய்யுளின் அடிகளை அமர்ந்த குரலில் வாசித்துப் பார்த்தால் அதில் ஒரு பெண்ணின் அக
ஆழத்தில் கேவித் தவிக்கும் ஆன்மாவின் குரலினைக் கேட்கலாம். இப்பாடலின் இசை அந்தச் சங்கப்
பாடலுக்கு இசைஞானி இயற்றியிருக்கும் பொழிப்புரை என்று சொல்லத் தகும். வாலி எழுதியிருக்கும்
வரிகளிலும்கூட சிற்றின்பமானது பேரின்ப மொழியில்தான் பேசுகிறது. ‘காலம் என்னும் தேரே
ஓடிடாமல் நில்லு’ என்னும் ஒரு வரியை ஓர்தலே போதுமானது. வரியாகப் பார்க்கும்போது அது
காலத்திற்கு இடும் ஆணை போல் தொனிக்கிறது. இசைஞானியின் மெட்டு அதனை ஓர் பிரார்த்தனை
போல் துலங்கச் செய்கிறது (ஸ்வர்ணலதாவின் குரல் மிகச் சரியான தேர்வு. அப்பாடகிக்கு அவர்
அளித்த இசை தீட்சை அப்பாடல்.)
1997
என்று நினைவு. இப்போது தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் எனது நண்பன் சதீஷ் குமாரிடம்
இப்பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவன் அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறான்.
மானசீகன் உணர்ந்ததைப் போன்றே உணர்ந்திருக்கிறான். ‘ஐய்யய்ய… அந்தப் பாடலா?’ என்று முதலில்
முகஞ் சுழித்தான். எங்கோ ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன். திரைக்
காட்சியைப் பார்த்ததுதான் பிசகு என்று அவனுக்கே பிறகு விளங்கிற்று. ‘தயவு செய்து பாத்துடாதடா.
இதுவரைக்கும் பாக்காம ஒன்னைய இறைவன்தான் காப்பாத்தீருக்கான்’ என்று சொன்னான். இன்றளவும்,
பாட்டுப் போட்டிகள் என்று சின்னத் திரைகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் ”புள்ளிங்கோ”
அப்பாடலைத் தேர்ந்து பாடுகிறார்கள். சொல்லத் தேவையில்லை. அப்பாடலில் தொனிக்கும் ஆன்மிக
உணர்வை மனிதர் உணரத் தவறுவதில்லை. (அப்பாடலில் மேற்கத்திய செவ்வியல் இசை வடிவமான சிம்ஃபொனியின்
கூறுகள் எப்படிக் கற்பனை மேதைமையோடு கையாளப் பட்டுள்ளன என்பதை எல்லாம் பேசுவதன் தளமே
வேறு. இசையறிவு கொண்ட டெஸ்லா கணேஷ் போன்றோர் ஆய்ந்து சொல்லி அறிய வேண்டும்.)
’இசையில்
நல்லிசையும் உண்டு புல்லிசையும் உண்டு’ என்கிறார் திருவாசக ஓதுவார் மூர்த்தி திருவையாறு
ஹரிஹர தேசிகர். புல்லிசையை புறந்தள்ளி நல்லிசையை அகங்கொள்ள வேண்டும். ஆனால், எது நல்லிசை
எது புல்லிசை என்று முடிவு செய்யும் அளவு கோல் யாது? அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு தேர்வுகள்
அமையும். அவரவர் தேர்வு அவரவருக்கு என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும். மானசீகனின்
பதிவிற்கு பின்னூட்டம் இட்டோர் பலரும் வேறு சில பாடல்களைப் பரிந்துரைத்துள்ளனர். அவற்றில்
அடியேனுக்கு ஒவ்வாத பாடல்களும் உள்ளன. ஒருவர் நல்லிசை என்று நயப்பதை இன்னொருவர் புல்லிசை
என்று தள்ளக்கூடும். எளியேனுக்கும் மெட்டுக்களைத் தேர்ந்து ஞானப் பாடல்கள் எழுதுவதை
அறிந்த அன்பர்கள் சிலர் சில பாடல்களைப் பரிந்துரைத்து அவற்றின் மெட்டுக்களில் எழுதுமாறு
கேட்டதுண்டு. ‘எனக்குப் பிடித்த மெட்டாக இருந்தால்தான் எழுத வரும். உங்களுக்குப் பிடித்த
மெட்டில் நீங்கள்தான் எழுத வேண்டும்’ என்று சொல்லித் தப்பினேன்.
இது போதும். பயனில சொல்லவில்லை என்று நம்புகிறேன். பல சொல்லக் காமுற
மாட்டேன்.
மண்ணுள்
விழிக்கின்ற விதையைப் போன்று
கண்ணுள்
சுடர்கின்ற கதிரொளி காணப்
பண்ணுள்
பயணிக்கும் பாங்கது அறிந்து
என்னுள்ளே என்னுள்ளே ஆழ்கின்றேனே.
No comments:
Post a Comment