Saturday, October 5, 2019

…என்றார் சூஃபி (பாகம்-2)



      ”…என்றார் சூஃபி” என்னும் தலைப்பில் எளியேனின் “பிரபஞ்சக்குடில்” என்னும் வலைப்பூவில் 1-நவம்பர்-2013 முதல் 29-ஜூலை-2019 வரையிலான காலக் கட்டத்தில் ஐம்பது எண்ணங்கள் எழுதியிருந்தேன். (அத்தொடரிலும்கூட 27-ஜூலை-2015 முதல் 14-ஜூலை-2019 வரை சூஃபி மௌனித்திருந்த இடைவெளி ஆனது.) அவற்றை மட்டும் அதே தலைப்பில் ஒரு சிறு நூலாக வெளியிட மனம் கொண்டேன். இறை சக்தி அதனைச் சாதனை செய்வதாகுக!

      அணிமையில் ”என்றார் சூஃபி” என்று முடியும்படியாக நண்பர் நிஷா மன்சூர் அவர்களும் தனது சிந்தை கிளர் சீரிய எண்ணங்களை அதே பாணியில் முகநூலில் எழுதி வருதல் கண்டு மகிழ்ந்தேன். எம்மனோரிடம் சூஃபி ஒருவர் பேசிக் கொண்டேதான் இருக்கிறார் போலும்.

      சில காலம் இதுகாறும் மௌனித்திருந்த சூஃபி நேற்று மீண்டும் என்னிடம் பேசத் தொடங்கினார். பதிவு செய்தல் அடியேன் கடமை. இது “…என்றார் சூஃபி” தொடரின் இரண்டாம் பாகமாய்த் தொடர்வதாகுக.

1.

      ”அனைத்தையும் இணைகளாகப் படைத்தோன் அதி தூயோன்” (36:36) என்பதன் மறை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இணை என்பதுதான் என்ன? என்றொரு வினா எழுந்தது.

      ”பிரிந்து இரண்டாய் இருக்கவும் இயலாது
      இணைந்து ஒன்றாகி விடவும் மாட்டாது
      எப்போதும் ஒன்றாகிக் கொண்டே இருக்கும் இரண்டு”
என்றார் சூஃபி.

2.

      தோட்டத்தில் ரோஜாச் செடிகள் நிரம்பப் பூத்திருந்தன. அவற்றில் மனம் லயித்து நின்றார் சூஃபி. சட்டென்று “அடடே!” என்றோரு வியப்பொலி சிந்தினார்.

      என்ன என்பது போல் தோழர்கள் நோக்கினர்.

      ”எத்தனை அழகிய ரோஜாக்களை இறைவன் ஏந்தி நிற்கிறான் பாருங்கள்!” என்றார் சூஃபி.


No comments:

Post a Comment