இசை முரசு நாகூர் ஹனீஃபா அவர்களைப் பற்றிய எனது
கருத்து சிலர் மனதைப் புண்படுத்தியிருக்கலாம். அது யான் எதிர்பார்த்ததுதான். ஆனால்,
‘கைப்பினும் உண்மை கிளத்தல்’ என்பது நபி கற்பித்த அறம் அல்லவா?
”பாமர முஸ்லிகளுக்குத் தன் பாடல்கள் மூலம் தாவா
செய்தவர் அண்ணன் ஹனீபா என்பதும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பெரியவர் முஹம்மது
ஃபாரூக் முகநூலில் பின்னூட்டம் இட்டிருந்தார். “Sure. He has his own credits. இச்சமூகத்தின்
நிலைக்குத் தன்னை இறக்கிக் கொண்டார் என்பதே என் கருத்து.” என்று அவருக்கு பதிலுரைத்தேன்.
பெரியவர் ஃபாரூக் அவர்களின் பின்னூட்டம் எனது
கருத்தை ஒருவிதத்தில் வழிமொழிந்துள்ளது. ‘பாடல்கள் மூலம் தாவா செய்தவர் அண்ணன் ஹனீபா”
என்பதன் பொருள் என்ன? அவை பிரச்சாரத் தொனி கொண்டவை என்பதுதானே? அதனாற்றான் கழக அரசியல்
மேடைகளில் அவர் பாடினார். அம்மேடைகளில் நாகூர் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்கள் பாடுவதை நம்மால்
கற்பனை செய்ய இயலுமா?
கழகத்தின் அரசியல் பரப்புப் பணிக்கு முரசு அறைவது
போன்ற வலிய குரல் மட்டுமே தேவை. ராக நளினங்கள் அல்ல. அதற்கு ஹனீஃபா மிகக் கச்சிதமாகப்
பொருந்தினார். ஆனால், அந்த அரசியல் பரப்புரைப் பண்பே அன்னாரின் இஸ்லாமியப் பாடல்களிலும்
வந்துவிட்டதும் தமிழ் முஸ்லிம் சமூகம் அதனை உச்சிமேல் வைத்து மெச்சியதும் இச்சமூகத்தின்
இசை ரசனைத் தாழ்வையே காட்டுகிறது.
நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களின் கருத்து உள்ளடக்கம்
என்பது சமயத்தின் சடங்கு மற்றும் சட்டவியல் தளம் சார்ந்தே பெரிதும் அமைந்தன. உருதுக்
கவ்வாலிகளில் இருப்பது போல் மெய்ஞ்ஞானக் கருத்துக்களை அள்ளி வழங்கும் பாடல்கள் தமிழில்
இல்லை. குணங்குடி மஸ்தான் போன்றோர் எழுதியுள்ள கீர்த்தனைகளில் ராகமும் தாளமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றுக்கு உரிய மெட்டமைத்துப் பாடும் பணி செய்யப்படவில்லை. ஏனெனில், அதற்கான ரசனை
தமிழ் முஸ்லிம் சமூகத்தில் இல்லை.
நாகூர் ஹனீஃபா இச்சமூகத்தின் ரசனையின்மை காவு
வாங்கிய ஒரு பலி. இச்சமூகம் அவரை மிக மேன்மையாகக் கொண்டாடுகிறது என்று தோன்றுகிறதா?
உண்மையில், ஒரு கலைஞனாக அவரை வீழ வைத்த சமூகம் இது. அவர் எட்டியிருக்க வேண்டிய உயரங்களுக்கு
அவரை நாம் அனுமதிக்கவில்லை. அவரது ஆரம்பக் காலத்துப் பாடல்களைக் கேட்டால் இது புரியும்.
இனியும் ஒரு பலி விழல் தகாது. இச்சமூகம் தன்னை
ரசனையில் உயர்த்திக் கொள்ள வேண்டியது கடமை. காலக் கட்டாயமும் கூட.
கழகத்
தொண்டர்களின் இசை ரசனை? கழகத்தின் கருத்துப்
பாவலர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ஓர் அழகான பாடல் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து
நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்பது. அறிஞர் அண்ணா அப்பாடலை ”ஓர் இரவு” (1951) என்னும்
படத்தில் இடம்பெறச் செய்தார். ஆர்.சுதர்சனம் இப்பாடலுக்கு ”தேஸ்” ராகத்தில் மிக அருமையானதொரு
மெட்டு அமைத்திருந்தார். இப்பாடலை அப்படியே கர்நாடக சங்கீத உலகம் வாரியணைத்துக் கொண்டது.
எம்.எம்.தண்டபானி தேசிகர், டி.கே.பட்டம்மாள் என்று அக்காலத்து வாக்கேயக்காரர்களும்
அதனைப் பாடியிருக்கிறார்கள். இந்நாளில் சஞ்சய் சுப்ரமணியன், உன்னி கிருஷ்ணன், ஓ.எஸ்.அருண்,
சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், மகாந்தி ஷோபனா முதலியோரும் பாடி வருகின்றனர். நவீன
இசைக்கு ஒப்ப அதனை மெருகேற்றிப் பாடப்பட்டுள்ள பிரதிகளும் கிடைக்கின்றன.
குறைகள்
எல்லாத் தர்ப்பிலும் உண்டு. இங்கு செவ்வியல் ரசனையின்மை என்றால் அங்கு தமிழை வடமொழிச்
சாயலில் பாடுவது. “ஆசை முகம் மறந்து போச்சே” (பாரதியார் பாடல்) என்பதை யுவ பருவத்து
மாமிகளிருவர் ”ஆஷை முகம் மறந்து போஷே…” என்று பாடியிருக்கின்றனர். சாதியுணர்வும் கர்நாட
இசையுலகில் அதிகம். (”துன்பம் நேர்கையில்...” பாடலை ரசித்த ஒருவர் அது பாரதிதாசன் இயற்றியது
என்று தெரிந்ததும் எழுந்து நின்று பாடகரை நோக்கி, ‘அப்படியே ஈ.வெ.ரா.வையும் பாடிப்பிடு,
சங்கீதம் வெளங்கீரும்’ என்று கதறினாராம்.) இந்தச் சாதியுணர்வை உடைக்க அத்தரப்பிலிருந்து
முயற்சிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. டி.எம்.கிருஷ்ணா அதை மிக உறுதியாக முன்னெடுத்து
இயங்கி வருகிறார். மாதம் ஒரு கிறித்துவ மற்றும் இஸ்லாமியக் கீர்த்தனை பாடப் போவதாக
அறிவித்தார். எனில், என்னிடம் பல பாடல்கள் உள்ளன. அவர் கவனம் கொள்ளட்டும்.
பாரதிதாசன்
இயற்றிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. தேஸ் ராகத்தில் இசை அமைக்கப்பட்டது.
அம்மெட்டில் அடியேன் இன்று காலை ஒரு பாடல் புனைந்தேன். நான் பின்பற்றிய பிரதியின் சுட்டி
இது: https://www.youtube.com/watch?v=5cQ0BHieE4o.
பல்லவி
திங்கள் போல் முகம் காணும் பாக்கியம்
தீனின் நாளில் அருள்வாயே
அனுபல்லவி
மங்கிடாப்
புகழ் திகழும் மாநபி
மன்றம்
சேர அருள்வாயே – அல்லாஹ்!
மன்றம்
சேர அருள்வாயே!
(திங்கள்...)
சரணம்-1
எங்கும்
நிறைந்த உன் உள்ளமை எனும்
ஏகம்
நானும் நோக்க - நீ
பொங்கும்
கருணையால் பொய்மை நீக்கியே
பாதம்
சேர அருள்வாயே!
(திங்கள்...)
சரணம்-2
தங்கும்
அருளினால் கலியை நீக்கியே
தண்ணென்
ஒளியைக் கூட்டி – நீ
செந்தண்மை
வளர் தூதர் சேவடி
செல்லும்
வாழ்வு அருள்வாயே!
(திங்கள்...)
சரணம்-3
கொஞ்சும்
பைந்தமிழ்க் கவியெடுத்து நான்
கானம்
பாடும்போது – ஏழை
நெஞ்சில்
திருநபி நாதர் தரிசனம்
நேரும்
வாழ்வு அருள்வாயே
(திங்கள்...)
No comments:
Post a Comment