3.
அறிவு பற்றிப் பேசிக் கொண்டிந்தோம். அறிவையே ஆராயும் துறை ஒன்றுண்டு.
அதற்கு ஆங்கிலத்தில் எபிஸ்டெமாலஜி என்று பெயர். சூஃபி மகா ஞானி இப்னுல் அறபி (ரஹ்)
அவர்கள் குறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இச்சொல்
அடிக்கடிப் பயன்படுத்தப் படுகிறது என்று பேராசிரியர் குறிப்பிட்டார். உணர்வும் ஓர்
அறிதல் முறையாக இருக்கிறது, உள்ளுணர்வு கொண்டு அறிதல் என்றெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
கவிஞர் பேசாமல் இருந்தார். ஏதேனும் பேசும்படி அவரைத் தூண்டினோம்.
”’அடக்கம்’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்று சொல்கிறேன்” என்று மிக அடக்கத்தோடு சொல்லிக்
கொண்டு குறுங்கவிதை மொழிந்தார்:
”எந்தன் அறிதல்
உந்தன் அறிதலில்.
அறிந்தவை எல்லாம்
உன்னை அறிதலில்.”
இதுவரை சூஃபி பேசாமலிருந்தார். இக்கவிதையைக் கேட்டு புன்னகை புரிந்தார்.
பிறகு சொன்னார், “தன் வாலைத் தானே கவ்வும் முயற்சியில் குரைத்தபடிச் சுற்றிச் சுழல்கிறது
நாய். தன் வாலைத் தானே கவ்விக்கொண்டு மௌனமாய்க் கிடக்கிறது பாம்பு.”
”எனில், நாயை நாம் எப்படிப் பாம்பாக்குவது?” என்று சூஃபியிடம் கேட்டான்
சாதகன். “கல் மனத்தைக் கரைத்து” என்று சொல்லிவிட்டு எம்மை நோக்கி,
”நாயை அரவமாக்கு
நானைத் திரவமாக்கு”
என்றார்
சூஃபி.
No comments:
Post a Comment