Saturday, October 12, 2019

மௌன விற்பன்னர்




மௌனமாய்
இருந்தார் குரு.

மௌனமாய் இரு என
உதட்டில் விரல் வைத்துக்
குறிப்புக் காட்டினார்.

‘மௌனமாய் இரு’ என்று
மொழிந்தார் ரத்தினச் சுருக்கமாய்.

மௌனம் யாதென
மனத்துள் நினைத்த போதே
‘சும்மா இரு, சொல் அற’ என்று
உபதேசித்தார் சற்றே விளக்கமாய்.


இயல்பில் இரு – இந்தப்
புற்களைப் போல்
கற்களைப் போல்
என்று
கவிதைகள் தீட்டினார்
கடிதங்கள் நீட்டினார்.
 

மௌனம் பற்றி
ஒரு நூறு நூற்கள்
பொழிந்து வைத்தார் பின்னர்.

அனைத்தையும் கரைத்து
அமுதெனக் குடித்து
முடித்தனர் மௌன விற்பன்னர்.

ஒளி பெருக்கும்
மௌனம்
அறிகிலார்.

தியானம் கூட்டுகிறார்
ஒலி பெருக்கியில்
’சும்மா இரு’ என்னும்
சொல் அலற.

No comments:

Post a Comment