Sunday, October 6, 2019

ஓர் இஸ்லாமியப் பாடல்



     இசைமுரசு’ என்று போற்றப்பட்டவரும் இசுலாமிய இசைஞருள் ஒருவராயும் கழக அரசியல் மேடைகளின் முரசொலியாகவும் திகழ்ந்த நாகூர் ஈ.எம்.ஹனீஃபா அவர்களின் அதி தீவிர ரசிகர்கள் சிலரை நான் அறிவேன். அவ்வகையில் ஒருவருடன் பேசியிருந்தபோது “நாகூர் ஹனீஃபா அறபி இசையில் ஏதாவது பாடியிருக்கிறாரா?” என்று கேட்டேன்.

      ”ஏனில்லை? சலாத்துல்லாஹ் சலாமுல்லாஹ்... இருக்கு. ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்… இருக்கு” என்று அடுக்க ஆரம்பித்தார்.

      நான் இடைமறித்தேன், “இதெல்லாம் அறபி லிரிக்ஸ் கொண்ட பாடல்கள். ஆனால் அறபி இசை இவற்றில் இல்லை.”

      நாகூர் ஹனீஃபாவின் செம்பாகப் பாடல்களில் இந்திய இசைத் தன்மையும் கிடைக்க மாட்டாமல் நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். அவற்றில் மார்க்கக் கருத்துக்கள் மட்டுமே உண்டு. அவரின் உரத்தக் குரலுக்கு ஏற்ற பிரச்சாரத் தொனி உண்டு. நெளிவு சுளிவுகள் அற்ற தட்டையான மெட்டுக்களே மிகுதி.

      இந்தித் திரைப் பாடல்களின் மெட்டுக்களில் அவர் பாடி வைத்த ’இசுலாமியப் பாடல்கள்’ இங்கே தமிழ் முஸ்லிம் சமூகமெங்கும் நிறைந்துவிட்டன. எளியேனும் அவ்வழியில் நின்று திரைப் பாடல்களின் மெட்டுக்களில் இஸ்லாமியப் பாடல்கள் இயற்றி வருகின்றேன். நான் தேர்ந்தெடுக்கும் மெட்டுக்களின் மூலம் குறித்த திண்ணமான தெளிவான பார்வை எனக்குண்டு. அதை முஸ்லிம் சமூகம் எவ்விதம் ஏற்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அவற்றைச் சொல்லும் முன் இசை பற்றிய எனது பார்வைகள் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன்.

      நல்ல இசை ஆகுமானது என்று நான் உறுதி கொண்டுள்ளேன். நல்ல இசை எது என்பதும் அறிவேன்.

      உலக இசைகளில் எல்லாம் இந்திய செவ்வியல் இசையே மேன்மையானது என்பதையும் ஓர்ந்துளேன்.

      இந்திய செவ்வியல் இசை வடிவங்களான ஹிந்துஸ்தானி மற்றும் கருநாடகம் ஆகிய இரண்டின் மூலம் தமிழிசையே என்பதும் என் உறுதியான எண்ணம்.

      இந்தியச் செவ்விசை ஆன்மிகம் சார்ந்தது. அது இறைஞானம் அடையும் ஆறுகளுள் ஒன்று. தகா இசை பற்றி நபிகள் நாயகம் கண்டித்துரைத்த அளவுகோல் கொண்டு இந்தியச் செவ்வியல் இசையை அளத்தல் ஆகாது என்பது என் தெளிவு. (இம்மண்ணிலும் தகாத இழிந்த இசைகள் உள்ளன. அவற்றை நிச்சயமாகக் கண்டிக்கவும் புறந்தள்ளவும் வேண்டும் என்பதில் ஐயமில்லை).

      அடியேன் சார்ந்திருக்கும் ஆன்மிக நெறியின் ஒரு கிளை ”சிஷ்தியா” என்பதாகும். அதன் கொடிவழி ஏற்றத்தில் இந்தியாவிற்கு வந்த முதல் ஞானியாக ’அஜ்மீரில் வாழும் ஞானி’ முய்னுத்தீன் என்னும் ஃகாஜா நாயகம் (ரலி) அவர்கள் பிறங்குகின்றார்கள். அவர்களே சூஃபி இசையில் இந்தியச் செவ்வியல் இசையினை இடம்பெறச் செய்த முதல்வர். எனவே சிஷ்தியா நெறி நிற்போர்க்கு இந்தியச் செவ்வியல் இசையமைந்த இஸ்லாமியப் பாடல்களை அப்பியாசிப்பதே பொருத்தமானது.



      ஃகாஜா நாயகம் இந்திய மண்ணிற் பிறந்தோர் அல்லர். ஃகுராசானிலிருந்து வந்தவர்கள். ஆனால் இங்கே பிறந்து செழித்திருந்த இசையை அவர்கள் தமது ஆன்மிகப் பாதைக்கு வரித்துக் கொண்டனர் என்பது ஆழ்ந்து நோக்கற்பாலது. இம்மண்ணின் இசையே இம்மண்ணிற் பிறந்தோரின் மனங்களைச் சமைக்கும் என்றோர் உண்மையை அவர்கள் உணராமலா அப்படிச் செய்தார்கள்? சரி, அஜ்மீரிலேயே அடங்கிவிட்ட ஃகாஜா நாயகம் அவர்கள் தென்னாடு போந்திருப்பார்கள் எனில்? இங்கிருந்த செவ்வியல் இசையை அல்லவா வரித்திருப்பார்கள்? இங்கே அப்போது இருந்த இசை எது? கருநாடக இசை என்று இன்று வழக்கிலுள்ள இசை முறைமை அப்போது கட்டமைக்கப் படவில்லை. அதன் மூல வடிவமானதும் உலகின் தொல்லிசை வடிவங்களுள் பிறவற்றினும் அதி செம்மை பெற்றதுமான தமிழிசையே இங்கிருந்தது. அதனை அவர்கள் கைக்கொண்டிருப்பர் என்பது திண்ணம். அதனால், அவர்கள் வகுத்த ஆன்மிக நெறியைச் சார்ந்துளோர் தமிழிசை அமைய இஸ்லாமியப் பாடல்களை இயற்றிப் பாடி அப்பியாசித்தல் அந்நெறியின்பாற்படும் என்பதறிக.

      இன்னொரு கோணத்தில் நோக்கின், தமிழிசையே ஹிந்துஸ்தானிக்கும் கருநாடகத்திற்கும் மூலக் கருவூலம் என்பதால் ஹிந்துஸ்தானி வடிவத்தில் ஃகாஜா நாயகம் (ரலி) அவர்கள் தமிழிசையையே வரித்துக் கொண்டார்கள் எனத் தட்டில்லை.

      தமிழரின் இசை சுந்தரத் தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்ட இசை ‘மகானுபாவலு’க்களால் கருநாடக இசையாக முறைமைப் படுத்தப்பட்டுத் தமிழுக்கு அன்னியமாகியுள்ள நிலையில் தமிழிசைக்கு எங்கே செல்வது? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழ்ச் சைவர்கள் தேவாரப் பதிகங்கள் மற்றும் திருவாசகம் ஆகியவற்றைக் கொண்டு சில தமிழ்ப்பண்களைப் பேணி வருகின்றனர். கருநாடக இசையிலுள்ள எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான ஜன்ய ராகங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் தொல் தமிழ்ப் பெயர்கள் யாவை என்று அறிதல் எளிதில் இயல்வதன்று.

      இந்நிலையில், தமிழிசை கொண்டே இஸ்லாமிய ஞான நெறியில் என் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களைப் பாடல்களாக இயற்றுவது என்று முயலும்போது அப்பணி இயலுதற்கு எளிய வழி யாது? இசை என்பதோ கரை காண முடியாததொரு பெரும் பௌவம். அதன் மீது நான் கொண்டிருக்கும் ஆசை என்பது கம்பன் சொல்வது போல் ‘ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு / பூசை முற்றவும் நக்குபு புக்கென’ நான் கொண்டிருக்கும் பேராசையே ஆம். எனினும், தன் விடாய் அளவுக்கு இப்பூனை பாற்கடலைச் சுவைத்தே வருகின்றது. அச்சுவையே நான் இயற்றும் பாடல்களாய் உருக்கொள்கின்றன.

      இப்பணி இயல, இசைத் தமிழ் இயற்றிய தவப்பயனாய் வந்துதித்தவர் இசைஞானி இளையராஜா. முன்பொரு கட்டுரையில் முன்மொழிந்த கருத்தினை ஈண்டு மீண்டும் வழிமொழிகிறேன். தமிழரின் கூட்டு நினைவிலியிலிருந்து காலம் திறந்து வைத்ததொரு இசைச் சாளரம் இளையராஜா. அவருக்குக் கை வந்தது போல் கருநாடக இசை வேறு எவருக்கும் கைவரவில்லை. இது எதனைக் காட்டுகிறது? கருநாடக இசை என்பது தமிழ் நாட்டுப்புற இசை ஈன்ற குழவி என்பதையே. இளையராஜாவிற்கு மேற்கத்திய செவ்விசை வசப்பட்டது போல் வேறெவருக்கும் வசமாகவில்லை. இது எதனைக் காட்டுகிறது? மேற்கத்திய நாடுகளின் இசைக்கும் ஆதி காலத்து வேர் என்பது தமிழே என்பதை அல்லவா? ஆம். இது எதிர் வழி நிகழ்ந்ததில்லை. நிகழாது. பிள்ளையின் வயிற்றில் தாய் ஜனிப்பதில்லை.


      எளியேன், இசைஞானி இளையராவின் மெட்டுக்களைத் தேர்ந்தே பாடல்கள் இயற்றத் தொடங்கினேன். ஏ.ஆர்.ரகுமானின் மெட்டுக்கள் சிலவற்றிலும் இயற்றியுள்ளேன் (உ-ம்: ‘என்னவளே அடி என்னவளே...’ என்னும் மெட்டில் ‘அன்பு நபி எங்கள் ஆசை நபி இந்த அகிலங்கள் போற்றும் நபி்” என்று தொடங்கும் பாடல்.) கருநாடக இசையுலகில் தியாகையர் இயற்றிய கீர்த்தனைகள் சிலவற்றின் மெட்டுக்களிலும் சில பாடல்கள் இயற்றியுள்ளேன் (உ-ம்: ஹம்சநாதம் என்னும் ராகத்தில் அமைந்த ‘பந்துரீத்தி கோலுவிய வைய ராமா…” என்னும் மெட்டில் ‘ஒன்று பார்வை போதும் யா றசூலே தாஹா” என்று தொடங்கும் பாடல்.) ஹிந்துஸ்தானி இசையுலகில் இந்திய சூஃபி இசையின் வடிவமான கவ்வாலியின் வேந்தராகத் திகழ்ந்த நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்களின் மெட்டுக்களிலும் பாடல் இயற்றி அவை தமிழ்க் கவ்வாலிகளாகப் பாடப்படுமாறு செய்துள்ளேன். (ஃபரீது அயாஜ் சகோதரர்கள், ஜாஃபர் ஃகான் பதாயூனி முதலியோரின் கவ்வாலி மெட்டுக்களிலும் எழுதியுள்ளேன்.) ஜக்ஜீத் சிங் பாடிய கஜல்களின் மெட்டுக்களிலும் பாடல்கள் புனைந்துளேன். இதர இசை வடிவங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      இது பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பணி. தனிப்பட்ட ஆன்மிக அவைகளில் சஹ்ருதயர்களோடு மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவது.

      ஏனெனில், இசை குறித்து இங்கே பல்விதப் பார்வைகளும் தவறான புரிதல்களும் இருக்கும் நிலையில் இவற்றை வெளிப்படுத்தி என்ன பயன்? நானோ பெரிதும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களிலேயே எழுதி வருகிறேன். அவரோ திரையிசைஞர் என்று அழுத்தமாக அடையாளம் பெற்றிருப்பவர். திரையிலோ பெரும்பான்மையும் சிற்றின்பத் துறை சார்ந்த பாடல்களே இடம்பெறுகின்றன. எனவே, “சிற்றின்பப் பாடல்கள் மெட்டில் மார்க்கப் பாடலா?” என்றுதான் உடனே கேட்கத் தோன்றும். உண்மை இதற்கு நேரெதிர் என்பது எத்தனைப் பேருக்குப் புரியும்?

      ஆம். பேரின்ப உணர்வுக்கான மெட்டுக்களையே இங்கே திரையில் சிற்றின்பத்திற்கான பாடல்களாக இளையராஜா அமைத்திருக்கிறார். (உ-ம்: “சந்தத்தில் பாடாத கவிதை” என்னும் பாடலின் மெட்டு ‘காபி’ என்னும் ராகத்தில் அவர் புனைந்தது. அதன் இசையமைப்பை விரிவாக்கி “Mood Kapi” என்றொரு இசைக் கோலம் வரைந்திருக்கிறார். கேட்டுப் பாருங்கள். கருநாடக சங்கீத மேடையில் ஒரு கீர்த்தனையைக் கேட்பதாகவே தோன்றும். அவரது பெரும்பான்மைப் பாடல்களில் இவ்வாறு சிற்றின்பத்துள் பேரின்ப வாசல் கரந்துள்ளது. கண்டறிந்து திறப்போர் அதனைத் தமக்கு ஆன்மிகக் கருவியாய் ஆக்கிக் கொள்ளலாம். 

இப்போது இதை நான் எழுதுவதற்குத் தெம்பு தந்தவர் டெஸ்லா கணேஷ் என்னும் இசையறிஞர். ”ராக சுதா” என்னும் யூடியூப் முகவரியில் இளையராஜாவின் மேதைமையை அக்கு அக்காகப் பிரித்து அலசி விளக்கிக் கொண்டிருக்கிறார். கருநாடக மற்றும் மேற்கத்திய செவ்விசை அறிந்த அவர் இளையராஜா என்னும் ஒற்றை ஆளுமையை வைத்து ஓர் இசைப் பல்கலைக்கழகமே நடத்தி வருகிறார் என்று சொல்லலாம். இளையராஜா இசையமைத்த பெரும்பான்மைப் பாடல்களின் சொற்களை நீக்கிக் கருநாடக இசையுலகு சார்ந்த சொற்களைப் பெய்தால் கருநாடகக் கச்சேரிகளிற் பாடத்தக்க கீர்த்தனைகளாகிவிடும் என்று அவர் உரைத்ததைக் கேட்ட உந்துதலிலேயே இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

      இதோ சென்ற வாரம் இயற்றிய ஒரு சிறு பாடல். ’கண்ணாலே காதல் கவிதை...” என்று தொடங்கும் திரைப்பாடலுக்குக் கல்யாணி என்னும் ராகத்தில் இளையராஜா அமைத்த மெட்டில் அடியேன் எழுதியது.

பல்லவி

விண்ணேறி நேரில் இறையைக் கண்டாரை நினைத்தேனே
தன்னேறில்லாத தமிழிற் பண்ணோடு இசைத்தேனே

அனுபல்லவி

எந்நாளும் தூதர் புகழைப் போற்றிடும் வாழ்வில்
குறையொன்றும் இல்லை நீ வாழியென் நெஞ்சே!
(விண்ணேறி...)

சரணம்-1

அருஷினில் இறையோடு தூதர் தனித்த பொழுது
அருளினில் உயிர் மேவி இணைந்து இனித்த பொழுது---//2//

அங்கு காலங்கள் என்று எதுவுமில்லை
அன்று இடமெனும் ஒரு பொருளுமில்லை---//2//

நான் எவ்வணம் உரைப்பேன்?
தன்னேறில்லாத தமிழிற் பண்ணோடு இசைத்தேனே
(விண்ணேறி...)

சரணம்-2

இதயமே அருஷாகித் தொழுகை நிகழும் தருணம்
உதயமே அதில் நாதர் நபியின் சுவனக் கிரணம்---//2//

புகழ் யாவையும் நபி உயிரில் நின்று
திகழ்ந்தேகிடும் இறை அளவில் நன்று---//2//

நான் எவ்வணம் உரைப்பேன்?
தன்னேறில்லாத தமிழிற் பண்ணோடு இசைத்தேனே
(விண்ணேறி...)


No comments:

Post a Comment