Tuesday, October 15, 2019

ரூமியின் வாழ்வில் - 3



6
சையத் பத்ருத்தீனின் போதனைகள்


சில காலம் கழித்து மௌலானா ஜலாலுத்தீன் அவர்கள் ரூம் நாட்டிற்குப் பயணித்தார் (ரூம் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள துருக்கி நாட்டின் பகுதி). அவர் கைசரியாவை அடைந்தபோது அவ்வூரின் பெருமக்கள் அவரை எதிர்கொண்டு சிறப்பாக வரவேற்றனர். மௌலானாவைத் தனது இல்லத்திற்கு அழைக்க வேண்டுமென்று சாஹிப் இஸ்ஃபஹானி விரும்பினார். ஆனால், மார்க்கக் கல்லூரியில் தங்குவதே மௌலானாவின் வழக்கம் என்று சையத் புர்ஹானுத்தீன் சொல்லிவிட்டார். ஞானம் தேடித் தன்னை நாடி வருவோரின் எண்ணிக்கை மௌலானாவைத் திகைக்க வைத்தது. அவர் தனது அறைக்குள் தனிமையில் ஒதுங்கினார். மௌலானாவின் இந்த தியானத் தன்மையைக் கண்ட மாபெரும் ஞானியான சையத் பத்ருத்தீன் அவர்கள் மௌலானா தியானத்தில் தனது சகவாசத்தை நாடித் தன்னிடமிருந்து ஆன்மிக மற்றும் மறைவான ஞானங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் சொன்னார். ஏனெனில், இறைவனின் அருளால், தனது நோக்கத்தை அடைய மௌலானா அவர்கள் இனி தனக்கொரு தந்தை போன்ற வழிகாட்டியைத் தேட வேண்டும். மகா ஞானி சையத் பத்ருத்தீனின் உள்ளக் கிளர்ச்சியை உணர்ந்த மௌலானா அவர்கள் மேலும் ஞானங்களை அடைவதற்காக அந்த ஞானியின் காலடியில் அமர்ந்தார்.

முதற் பாடமாக, ஏழு நாட்களுக்கு நோன்பு வைக்குமாறு மௌலானாவை சையத் அவர்கள் பணித்தார். ஏழு நாட்கள் மிகவும் குறைவு என்றும் தான் நாற்பது நாட்கள் நோன்பு நோற்று தியானித்து எப்போதும் மகா ஞானியான பத்ருத்தீனின் சகவாசத்திலேயே இருப்பதாகவும் மௌலானா சொன்னார். அக்காலக் கட்டத்தில் மௌலானா ஒரு சில பார்லி ரொட்டிகளை மட்டுமே சாப்பிட்டார்; நோன்பு திறப்பதற்கு சில மிடறு தண்ணீர் மட்டுமே பருகினார். அறையில் அடைபட்டுக் கிடந்து தனிமையாக நிகழ்த்திய அந்த ஆன்மிகப் பயிற்சிகளின் போது அறியப்படாத புலங்களின் மர்மங்களை அவர் கண்டார்.

நாற்பதாம் நாளது நோன்பின் நிறைவில் மௌலானாவின் அறைக்குள் சையத் பத்ருத்தீன் அவர்கள் நுழைந்த போது மௌலானா மிகவும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரின் மனம் மேலான வெறுமையின் உலகில் பறந்து கொண்டிருந்தது. ஏனெனில், “உலகில் இருப்பன யாவும் உன் சுயத்தில் உள்ளன; உனக்கு எது வேண்டும் என்றாலும் உன் சுயத்தில் தேடு, ஏனெனில் எல்லாம் நீயே.”

மௌலானாவை அத்தகைய தியான நிலையில் கண்ட பத்ருத்தீன் அவர் இன்னும் நாற்பது நாட்கள் நோற்று தியானிக்க விரும்புகிறார் என்று எண்ணியவராக அவரை அந்த நிலையிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார். இரண்டாம் நாற்பது நாட்களின் (சில்லா) முடிவில் மீண்டும் பத்ருத்தீன் அவர்கள் அறைக்குள் நுழைந்தபோது மௌலானா தொழுகையில் நின்று கொண்டிருப்பதையும் அவரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதையும் கண்டார். தொழுகையில் அவரது ஓர்மை மிக ஆழமாக இருந்ததால் அறைக்குள் யார் நுழைந்தார்கள் என்பதை எல்லாம் அவர் கவனிக்கவே இல்லை. மௌலானா மேலும் மூன்றாம் நாற்பது நாட்களை முடிக்கட்டும் என்று விட்டுவிட்டு பத்ருத்தீன் அவர்கள் திரும்பிச் சென்றார்.

மௌலானாவின் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் பட்டதால் மகா ஞானி சையத் பத்ருத்தீன் அவரகள் அறையின் கதவை உடைத்துத் திறந்து கூக்க்குரல் இட்டார். அப்போது மௌலானா அவர்கள் சாந்தம் திகழும் முகத்தில் புன்முறுவல் தவழ வெளிப்பட்டு வரக் கண்டார். அவரின் இரு விழிகளும் இரண்டு ‘ஆனந்தக் குளங்களாக’ இருந்தன. அவர் சொன்னார், “நமது இந்த இரண்டு கண்களில் நமது தெய்வீகக் காதலியின் முகம் பிரதிபலிப்பதைப் பாரீர். அதிலேயே, நமது குருநாதரின் ஆனந்த நடனத்தையும் காணீர்.”

மௌலானா அவர்கள் கட்டற்ற ஞானத்தை அடைந்திருக்கிறார் என்பதைக் கண்டு மெச்சிய பத்ருத்தீன் அவர்கள் மௌலானாவை ஆறத் தழுவி, “வாழ்வின் அறத் துறைகள் அனைத்திலும் நீங்கள் உயர்ந்த அறிஞராகத் திகழ்ந்து வந்தீர். ஆன்மிக உலகிலும் நீங்கள் அப்படியேதான். ஆனால், இப்போது நீங்கள் அகவாழ்வின் மிக உள்ளார்ந்த ரகசியங்களை அடைந்து விட்டீர், ஞானியரும் புனிதர்களும் பொறாமை கொள்ளத்தக்க நிலையை எய்தி விட்டீர். அத்தகைய விழுப்பமும் தூய்மையும் கொண்ட படித்தரத்தை நீங்கள் அடைந்ததைக் கண்டதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்’ என்று சொல்லி, மக்களை ஞானப் பாதையில் அழைத்துச் செல்லும் பயணத்தைத் தொடங்குமாறும் சத்தியத்த்தைத் தேடுவோரின் இதயங்களில் இறைக் காதலின் தீபத்தை ஏற்றுமாறும் அவர் மௌலானாவைப் பணித்தார். அவ்வாறுதான் மௌலானா அவர்கள் கோன்யா நகரத்தை நோக்கிய தனது பயணத்தையும் ஆன்மிக மறைஞானத்தைப் போதிக்கும் தனது பணியையும் தொடங்கினார். அதுமுதல் அவர் தனது தலைப்பாகையை அறபிகளின் முறைப்படிக் கட்டிக் கொண்டார்கள்; விரிவான கைகள் கொண்ட அங்கியை அணிந்தார்கள்; முற்காலத்து அறிஞர்களிடையே அப்படி ஆடை உடுத்துவது ஒரு மரபாக இருந்தது.

கால ஓட்டத்தில் ஞானி சையத் பத்ருத்தீன் சொர்க்கத்திற்கு அழைக்கப் பட்டுவிட்டார். மௌலானா அவர்கள் கைசரியாவுக்குச் சென்று அவரின் ஆன்மாவுக்காகப் பிரார்த்தித்து விட்டு மீண்டும் கோன்யா வந்தடைந்தார். அப்போதுதான், அனைத்து தர்வேஷ்களின் (வறுமையை ஏற்ற சூஃபிகளின்) தலைவரான மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் அவர்கள் மௌலானாவின் முன் இரண்டாம் முறையாகத் தோன்றினார்.

மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் அவர்கள் தப்ரேஸ் நகரில் கூடை முடைவோராக வாழ்ந்த ஷைகு அபூபக்கர் தப்ரேஸி அவர்களின் சீடர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தனது புனிதப் பண்புகள் மற்றும் ஆன்மிகப் பார்வைகளுக்கு அந்த ஷைகு மிகவும் புகழ் பெற்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மௌலானா ஷம்ஸி தப்ரேஸி அவர்களின் உயரிய ஆன்மிக மற்றும் மறைஞானப் படித்தரம் எந்த அளவு உன்னத உச்சத்தை எட்டியிருந்தது என்றால் ஆன்மிகத்தின் மேலான மற்றும் மாபெரும் தளங்களுக்குத் தான் மேலும் ‘உயர்ந்து உயர்ந்து பறந்து’ கொண்டே இருக்க வேண்டுமென்று மௌலானா ஷம்ஸ் விரும்பினார். தனது தேடலில் அவர் இவ்வுலகைப் பல்லாண்டுகள் சுற்றி அலைந்தார். இதனால் அவருக்கு நாடோடி ஷம்ஸுத்தீன் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

7
ஷம்ஸுத்தீனின் அகக்காட்சி


      ஓர் இரவு ஷம்ஸி தப்ரேஸ் மனத்தில் மிகவும் சஞ்சலப் பட்டிருந்தார். தனது அகக் கொந்தளிப்பில் கதறினார். ஆன்மிக உணர்வுகளால் தூண்டப்பட்ட மனநிலைக்குள் மூழ்கினார். பிறகு மிக உருக்கமாக வேண்டினார், “இறைவா! உனது மாபெரும் ஞானிகளுள் ஒருவரை எனக்குக் காட்டியருள்; நீ நேசிக்கும் ஒருவரிடம் என்னை அழைத்துச் செல்.” அவர் தேடிக் கொண்டிருக்கும் அந்த நபர் அறிஞர்களின் அறிஞர் என்று புகழ் பெற்றவரும் பல்ஃக் நகரைச் சேர்ந்தவருமான பஹாவுத்தீன் என்பவரின் மகன்தான் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. ‘இறைவா! அவரின் முகத்தை எனக்குக் காட்டு’ என்று ஷம்ஸ் வேண்டினார். அதற்கு நன்றியாக அவர் என்ன தரத் தயாராக இருக்கிறார் என்று கேட்கப் பட்டது. அதற்கு மௌலானா ஷம்ஸ் தனது உயிர் அன்றித் தன்னிடம் வேறெதுவும் இல்லை என்றும் தனது தலையைத் தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சொன்னார். அவரின் உள்ளத்திற்குள் ஒரு குரல் ஒலித்தது: ‘ரூமிற்குச் செல்க. அங்கே உனது தேடலின் இலக்கை அடைவாய்.’ முழுமையான நம்பிக்கையுடனும் வலிமையான காதலுடனும் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி ரூம் நோக்கிக் கிளம்பினார். அவர் டமஸ்கஸிலிருந்து ரூம் வந்தடைந்தார் என்று சிலர் சொல்கின்றனர்; சிலரோ அவர் அப்போதே தப்ரேஸுக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து ரூம் வந்தடைந்தார் என்று கூறுகின்றனர்.

8
ஆன்மிகப் பொக்கிஷங்களின் மதிப்பீட்டாளர்

      ஷம்ஸ் கோன்யாவிற்கு வந்தடைந்த போது சர்க்கரை வியாபாரிகளின் கிடங்கு ஒன்றில் தங்கினார். தனது வாடகை அறையில் விலை மதிப்பு மிக்க பூட்டு ஒன்றைத் தொங்க விட்டார். வேலைப்பாடுகள் மிக்க தலைப்பாகை அணிந்து அதில் அந்தப் பூட்டின் சாவியை முடிந்து வைத்திருந்தார். இதனைக் கண்ட மக்கள் அவரொரு பணக்கார வணிகர் என்று நினைத்தனர். உண்மையில் அவர் வேறொரு அறையில் வெறுமனே ஒரு கோரைப் பாயும், உடைந்த பானை ஒன்றும், தலையணையாக செங்கல் ஒன்றையும் வைத்துக்கொண்டு தங்கியிருந்தார். பார்லித் தவிட்டை நீரில் ஊற வைத்துக் குடிப்பது மட்டுமே அவரது உணவாக இருந்தது.


      அப்போது ஒரு நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஞானியரின் தலைவர் ஷம்ஸி தப்ரேஸ் விடுதி ஒன்றின் வாசலில் அமர்ந்திருந்தார். கண்ணாடி வியாபாரிகளின் தெருவிலிருந்து வெளிப்பட்டு மௌலானா ரூமி ஓர் ஒட்டகை மீது இவர்ந்து வருவதைக் கண்டார். அவரது ஒட்டகையின் அருகில் மிகப் பெரிய மார்க்க அறிஞர்களும் மௌலானாவின் மாணவர்களும் நடந்து வந்து கொண்டிருந்தனர். மௌலானா ஷம்ஸுத்தீன் தப்ரேஸி ஓடோடிச் சென்று மௌலானா ரூமியின் வாகனத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, “ஓ, ஆன்மிக பொக்கிஷங்களின் மதிப்பீட்டாளரே! யார் சிறந்தவர், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களா? அல்லது அபூ யஜீது பிஸ்தாமி அவர்களா? சொல்லும்!’ என்று கேட்டார். மௌலானா ரூமி உடனே, “இல்லை இல்லை, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம் சிறந்தவர், ஏனெனில் அவர்கள் இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்கள் அனைவருக்கும் தலைவராக இருக்கிறார்கள்” என்றுரைத்து இந்தக் கவிதை வரிகளைப் பாடினார்:

      ”எமது நாடு நற்பேறு பெற்றது
      எம்மையே அர்ப்பணிப்பது கடமை ஆனது
      எமது பயணக் குழுவின் தலைவர் முஹம்மத்
      முழு உலகின் கண்ணியமும் அவரே.”

      ஆனால், ஷம்ஸுத்தீன் மீண்டும் கேட்டார், “அப்படியானால், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘இறைவா! உனக்கே புகழ் எல்லாம், உன்னைப் புகழ வேண்டிய முறைப்படி நான் புகழவில்லையே’ என்று சொன்னதற்கும், அபூ யஜீது பிஸ்தாமி, ‘நானே பரிசுத்தமானவன், எனது மாட்சிமை என்னே! அரசர்களின் அரசன் யானே!’ என்று சொன்னதற்கும் பொருள் என்ன?”

      மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் சொன்னதைக் கேட்டவுடன் மௌலானா ரூமி தனது வாகனத்தில் இருந்து கீழிறங்கினார், ஒரு கூக்குரல் இட்டார், மயங்கி விழுந்தார். அந்நிலையில் ஒரு மணி நேரம் அவர் இருந்தார். மயங்கிக் கிடந்த ஞானியைச் சுற்றி மக்கள் கூடிவிட்டனர். அவர் மீண்டும் விழித்தெழுந்ததும் மௌலானா ஷம்ஸிடம் சொன்னார்: “அபூ யஜீதின் ‘தாகம்’ ஒற்றைக் கோப்பையில் தணிந்து விட்டது. ஒரே மிடறில் அவரது கொள்ளளவு நிரம்பி விட்டது. அவரது கதவுகளின் குறுகிய இடைவெளி அந்த அளவு இறையொளியை மட்டுமே உள்ளே அனுமதித்தது. ஆனால் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது ‘தாகமும்’ கொள்ளளவும் வரம்பற்றவை. இறைவனின் கருணைக்கான அவர்களின் தணியாத ஆவல் அளப்பரியது. ஏனெனில், குர்ஆன் சொல்கிறது, ‘உமக்காக நாம் உமது நெஞ்சத்தை விரிவாக்கவில்லையா?’[94:1]. எனவே அவர்கள் மிக அதிகமாக உள் வாங்கினார்கள். இறைவனின் அருளோ அளவற்று நீள்வது. எனவே முஹம்மத் (ஸல்) அவர்களின் தவிப்பும் ஆவலும் அபூ யஜீதுடையதைக் காட்டிலும் முடிவிலா மடங்கு அதிகமானவை. ’இறைக் காதலின் ஆர்வத்தின் ஒரு மூச்சு’ என்பது மாபெரும் ‘தாகத்தால்’ உண்டாகிறது.” இதனைச் சொல்லிவிட்டு மௌலானா ரூமி அவர்கள் மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் அவர்களுடன் சேர்ந்து மார்க்கக் கல்லூரிக்குச் சென்று தனது அறைக்குள் அடைந்து கொண்டு அவருடன் இணைந்து தியானத்தில் ஈடுபட்டார். அங்கே அவர்கள் நாற்பது நாட்கள் தனித்திருந்தனர். அக்காலக் கட்டம் மூன்று மாதங்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

      மேலும் சொல்லப் படுகிறது, மௌலானா ரூமி சொன்னார், “ஷம்ஸி தப்ரேஸ் அவ்வினாவை என்னிடம் கேட்டபோது எனது உச்சந் தலையில் ஒருவித ஜன்னல் ஒன்று திறந்தது; என் தலையிலிருந்து ஆவியொன்று கிளம்பி விண்ணுக்குச் சென்றது.”

      மௌலானா ஷம்ஸுத்தீன் தப்ரேஸியின் அந்தத் தாக்கம் மற்றும் கேள்வியின் விளைவாக மௌலானா ரூமி மார்க்கக் கல்லூரியில் தான் ஆற்றி வந்த பாட விரிவுரைகளைச் சிறிது காலம் நிறுத்தி விட்டார்கள். மார்க்க போதனைகளையும் சிறிது காலம் நிறுத்தி விட்டார்கள். ஆனால் தனது நேரம் முழுவதையும் மறை ஞான மரபின் மீது தியானிப்பதிலேயே ஈடுபடுத்தினார். அவர் எழுதினார்:

      ”புதன் கிரகத்தைப் போன்று எனது சுயத்தின் உட்பொருட்கள் எல்லாம் சிதறுகின்றன. நான் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்திருந்த போதும், கிண்ணம் ஏந்தியோனின் நெற்றியில் நான் ரகசிய எழுத்தினைக் கண்டபோது நான் போதை அடைந்தேன். பரவசத்தில் எழுதுகோல்களை உடைத்து விட்டேன்.”

(to be continued...)

No comments:

Post a Comment