9
தப்ரேஸ்
குரு மறைகிறார்
மேலும் சொல்லப்பட்டது, ஆன்மிக மரபின் இவ்விரு சாதகர்களின் அணுக்கத்
தொடர்பு பிறரின் புரிதலுக்கான எல்லைகளைக் கடந்தபோது மௌலானாவின் முன்னாள் சீடர்கள் பொறாமை
கொண்டனர். ‘யாரிந்தப் புதியவர்? நமது குருவின் காலத்தையும் கவனத்தையும் இந்த அளவு ஈர்த்துவிட்ட
இவர் யார்?’ என்று பேசிக் கொண்டனர். எனவே மௌலானா ஷம்ஸ் திடீரென்று மறைந்து போனார்.
ஒரு மாதம் முழுவதும் மக்கள் அவரைத் தேடினர். அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
அவர் எங்கே சென்றார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அப்போது மௌலானா ரூமி அவர்கள்
பண்டைய காலத்து ஞானியர் அணிவது போன்ற தொப்பியும் முன் பக்கம் நெடுகிலும் திறந்திருக்கும்
வகையில் அமைந்த அங்கியும் அணியத் தொடங்கினார். மேலும் அவர் ’கமான்ச்சா’வில் (பாரசீக
யாழில்) ஆறு நரம்புகளும் அதன் கீழ்ப்பகுதி அறுகோணம் கொண்டதாயும் அமைக்கப் படட்டும்
என்று சொன்னார். அதற்கு முன் அக்கருவிக்கு நான்கு பக்கங்கள் மட்டுமே இருந்தன. கமான்ச்சாவை
ஆறு பக்கங்கள் உடையதாக ஆக்குவது பற்றி அவர் இப்படி விளக்கினார்: “நமது கமான்ச்சா ஆறு
பக்கங்கள் கொண்டது. ஏனெனில், ஒவ்வொரு பக்கமும் இவ்வுலகின் ஒரு பக்கத்தைக் குறிக்கும்.
அதன் நரம்புகள் நேர் எழுந்ததாக ’அலிஃப்’ என்னும் எழுத்தின் வடிவத்தில் உள்ளன. அலிஃப்
என்பது அறபி மொழியின் முதலெழுத்து, அல்லாஹ் என்னும் திருநாமத்தின் முதலெழுத்து. அலிஃப்
என்பதே ஆன்மாவின் உயிர். இன்னனம், உமக்கு அகச்செவி இருப்பின் இதன் நரம்புகளின் வழியாக
அல்லாஹ்வின் அலிஃபைக் கேளுங்கள், உமக்கு அகவிழி இருப்பின் நேரெழுந்த நரம்புகளான அந்த
அலிஃபில் அல்லாஹ் என்னும் திருநாமத்தின் ஆன்மாவைப் பாருங்கள்.”
இதைக் கேட்டதும் (இறைக்) காதலர்கள் உள்ளம் பொங்கி ஆன்மிக இசையில் மூழ்கி
கூச்சலிடும் பரசவங்களை அடைந்தனர். இவ்வாறு, மெலியோரும் வலியோரும், கற்றாரும் கல்லாரும்,
முஸ்லிம்களும் அல்லாரும், அனைத்து நாட்டவரும் இடத்தவரும் மௌலானா ரூமியின் அரவணைப்பையும்
கவனத்தையும் நோக்கிக் குவிந்து அவரது தொண்டர்களாகி ஆன்மிகக் கவிதைகளை வாசிக்கவும் மறைஞானப்
பொருள் கொண்ட பாடல்களைப் பாடவும் தொடங்கினர். அல்லும் பகலும் அவ்வாறே இயங்கினர். ஆன்மிக
நெறிப்படாதோரும் பொறாமை கொண்டோரும் இப்பயிற்சிகளைக் கண்டித்தவர்களாக ‘இதெல்லாம் என்ன
நடக்கிறது? வினோதமான காட்சிகள்!’ என்றனர்.
ஆழ்ந்த தியானத்திலும் மறைஞானப் பயிற்சிகளிலும் ஈடுபட்டோருள் செல்வ
வளமும் அவகாசமும் கொண்டோரும் அரசின் உயர் பதவிகளை வகித்தோரும் இருந்தனர். அவர்களெல்லாம்
இப்போது தமது முந்தைய சொகுசு வாழ்க்கையைத் துறந்தவர்களாகவும் பொது மக்களால் ஏளனம் செய்யப்படுவோராகவும்
ஆயினர். வணக்க வழிபாடுகளை அளவுக்கு மீறிச் செய்து மெய்ஞ்ஞான சமாதி நிலைகளுக்கு அடிக்கடிச்
சென்றவரான ஓர் இளவரசர் வெளிப்படையில் பைத்தியமானான். ஆனால், அந்த மகானை ஏளனம் செய்திருந்த
நிராகரிப்பாளர்கள் எல்லாம் உண்மையிலேயே பைத்தியங்கள் ஆயினர்.
இவை எல்லாம் மௌலானா ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் அவர்களின் தாக்கம்தான் என்று
சொல்லவும் வேண்டுமோ? ‘உலகப் பற்றுக் கொண்டோரால் பித்தன் என்று ஏசப்படாத வரை எவரும்
தனது இதயத்தில் உண்மையான இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்’ என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.
மெய்ப்பொருளின் அகமியம் மௌலானா ரூமியில் வெளிப்பட்டபோது இறையருள் பெற்றோர் அவரின் சீடர்கள்
ஆயினர், பிழை பட்டோர் கைவிடப்பட்டனர். இறையருள் இல்லானுக்குப் பகைமையே அன்றி வேறில்லை.
சொல்லப்படுகிறது, பயபக்தர்களை நிராகரிக்காதே. அச்சமற்ற இறை நேசர்களை அஞ்சுக. இல்லையெனில்,
அன்னோரின் பொறுமை உன்னைத் திண்ணமாக நசித்துவிடும்.
10
ஆறு
மாயப் பேய்களும் பூக்களும்
பக்தி நெறியில் ஏசுவின் தாயைப் போன்ற தன்மை கொண்டவரும் மௌலானாவின் மனைவியுமான கிரா ஃகாத்தூன் அவர்கள் அறிவிக்கின்றார்:
‘குளிர் காலம் ஒன்றில் ஷம்ஸி தப்ரேஸின் மடியில் மௌலானா அவர்கள் தலை சாய்த்து ஓய்வெடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரது அறைக் கதவின் இடுக்கு வழியாக இதனை நான் கண்டேன்.
மேலும், அவ்வறையின் ஒரு பக்கத்துச் சுவர் திறந்திருப்பதைக் கண்டேன். அவ்வழியே அச்சமூட்டுகின்ற
ஆறு உருவங்கள் உள்ளே நுழைந்து மௌலானாவுக்கு முகமன் உரைத்து அவர் முன் பூங்கொத்துக்களை
வைத்தன. நண்பகல் வரை இந்நபர்கள் அங்கே இருந்தனர். ஆனால் ஒரு சொல் கூடப் பேசப்படவில்லை.
’தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதைக் கவனித்து, தொழவும் தொழ வைக்கவும்
மௌலானா அவர்கள் ஷம்ஸிடம் ஜாடை காட்டினார். ஆனால், தன்னினும் மேலான ஆளுமை இருக்கத் தொழுகையைத்
தான் வழி நடத்த இயலாது என்று அவர் சொல்லி மறுத்தார். எனவே மௌலானாவே தொழுகைக்குத் தலைமை
தாங்கினார். அவர்களுடன் சேர்ந்து தொழுத அந்த ஆறு உருவங்களும் அதன் பின் அவருக்கு மிகுந்த
மரியாதை காட்டிவிட்டுச் சென்றனர்.
கிரா ஃகாத்தூன் மேலும் சொன்னார், இக்காட்சியைக் கண்டபின் அச்சமும்
மருட்சியும் மிகைத்துத் தான் மயங்கி விழுந்துவிட்டார். ‘நான் சுய நினைவுக்கு எழுந்தபோது
அறையிலிருந்து மௌலானா வெளிப்பட்டு வந்து அந்தப் பூக்களை எனக்குத் தந்தார். அவற்றை மிகவும்
பத்திரமாகப் பாதுகாக்குமாறு சொன்னார். அப்பூக்களின் சில இதழ்களை நான் மூலிகை நிபுணர்களிடம்
அனுப்பி வைத்துப் பரிசோதிக்கச் செய்தேன். தமது வாழ்நாளில் அத்தகைய பூக்களைத் தாம் பார்த்ததே
இல்லை என்று சொல்லி அவை எங்கிருந்து கிடைத்தன என்றும் அவற்றின் பெயர் என்ன என்றும்
அவர்கள் கேட்டார்கள். மேலும், அப்பூக்களின் நறுமணம், நிறம் மற்றும் மென்மை ஆகியனவும்
குளிர் காலத்தின் நடுவில் அத்தகைய பூக்கள் எப்படிப் பூக்க முடியும் என்பதும் அந்த மூலிகை
நிபுணர்களுக்கு பெரிதும் வியப்பூட்டியது.
அத்தகு மூலிகை வல்லார் இடையில், அடிக்கடி இந்தியாவிற்குச் சென்று வரக்கூடிய
முக்கியமான தாவரவியல் பேராசான் ஒருவர் இருந்தார். அவர் பேரார்வமும் வியப்பும் தரக்கூடிய
பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு வரும் வழக்கமுள்ளவர். அந்தப் பூக்கள் இந்தியாவிலிருந்து
வந்தவை என்று அவர் சொன்னார். அவை அந்நாட்டின் தென் முனையில் சரந்தீவில் (இன்றைய இலங்கையில்)
அன்றி வேறெங்கும் வளர்வதில்லை. அவை இவ்வளவு புத்துயிர்ப்பாகவும் அழகாகவும் எப்படி ரூம்
வரை வந்தடைந்தன? அந்நேரத்தில் அவை எப்படி தமது நாட்டிற்கு வந்து சேர்ந்தன என்பதை அறிய
அவர் பெரிதும் ஆசைப்பட்டார். அதனால் கிரா ஃகாத்தூன் கொண்டிருந்த வியப்பு மேலும் அதிகமாயிற்று.
திடீரென்று மௌலானா ரூமி அங்கே தோன்றிச் சொன்னார், “இந்தப் பூக்களை மிக எச்சரிக்கையாகப்
பாதுக்காத்துக்கொள். இதன் ரகசியங்களை எவருக்கும் நீ வெளிப்படுத்தாதே. இந்தப் பூக்கள்
அக வாழ்வை உனக்கு அளிக்கவும் உனது கற்புக்கும் பக்திக்கும் மேலும் கண்ணியம் சேர்க்கவும்,
இந்திய நிலத்தில் சொர்க்கத்தின் பகுதிகளைப் பேணி வருகின்ற ஆன்மிகத் தலைவர்கள் இவற்றை
உனக்குப் பரிசாகக் கொண்டு வந்துள்ளார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே! எப்போதும் இப்பூக்களை
உனது கண்களைப் போல் கவனமுடன் பாதுகாத்திரு. இவற்றுக்கு எவ்விதக் கேடும் நேர்ந்து விடக்கூடாது.’
மௌலானாவின் அனுமதியுடன் அப்பூக்களில் சிலவற்றை
கிரா ஃகாத்தூன் அந்நாட்டின் மன்னரின் மனைவியான கர்ஃகி ஃகாத்தூனுக்குப் பரிசளித்தார்.
மற்ற பூக்களை எல்லாம் அவர் தன்னிடம் வைத்து மிக எச்சரிக்கையுடன் பாதுகாத்தார். எவருக்கேனும்
கண்ணில் நோவு உண்டானால் அந்தப் பூக்களின் இதழ்களை ஒற்ற வலி நீங்கிப் போனது. அப்பூக்களைக்
கொண்டு வந்தோரின் ஆன்மிக உயர்வின் காரணத்தால் அவற்றின் நறுமணமும் நிறமும் மங்கவே இல்லை.
11
உயிர்களும்
ஒளிகளும்
இன்னொரு நிகழ்வும் அறிவிக்கப்படுகிறது. விளக்கு வைப்பதற்காக வீட்டின்
நடுவில் உயரமானதொரு மேடை எழுப்பப் பட்டிருந்தது. முன்னிரவு முதல் விடியும் வரை அதனருகில்
நின்றபடிதான் மௌலானா தனது தந்தையான ஞானி பஹாவுத்தீன் அவர்கள் எழுதிய ஆன்மிகக் குறிப்புக்களை
வாசித்துக் கொண்டிருப்பார். அவ்வீட்டில் வசித்து
வந்த ஜின்யான் (ஜின்கள் – அசுராதிகள்) கூட்டமொன்று ஓரிரவு கிரா ஃகாத்தூனிடம் வந்து
இரவெல்லாம் வெளிச்சமாக இருப்பதைத் தம்மால் தாங்க முடியவில்லை என்று சொல்லின. அவற்றால்
வீட்டில் இருப்போர் தாக்கப்படலாம் என்று அவர் அஞ்சினார். இதை அவர் மௌலானாவிடம் தெரிவித்த
போது அவர் ஒன்றுமே சொல்லவில்லை. மூன்றாம் நாள் மௌலானா தனது மனைவியான கிரா ஃகாத்தூனிடம்
சொன்னார், ’இனி நீ அந்த ஜின்களைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. அவர்கள் எல்லோரும் எனது
சீடர்களாகிவிட்டனர்.’ எனவே, அவரது குடும்பத்தாரோ உறவினர்களோ நண்பர்களோ இனி அவற்றால்
தாக்கப்ப்பட மாட்டார்கள்.
12
போருக்கொரு
ரகசிய ஓட்டம்
ஊரிலே மிகவும் பெயர் பெற்ற தலைமை கசாப்புக்காரர் ஒருவர் இருந்தார்.
அவர் பெயரும் ஜலாலுத்தீன் என்பதே. அவர் மௌலானாவின் ஆரம்பக் கால சீடர்களில் ஒருவர்.
அவர் நகைச்சுவையும் பேரன்பும் அருளப்பட்டிருந்த ஓர் ஆளுமை. குதிரைக் குட்டிகளை வாங்கிப்
பழக்கி வளர்த்து பெரிய மனிதர்களிடம் விற்றல் என்பது அவரது இன்னுமோர் ஈடுபாடு. அவரது
தொழுவம் எப்போதும் சிறந்த வகைப் புரவிகளால் நிரம்பியிருக்கும். சொல்லப்படுகிறது, ஒருமுறை
மறைவின் பேருலகிலிருந்து மௌலானாவின் இதயத்தினுள் ஓர் உதிப்பு எழுந்தது. பேரழிவு ஒன்று
இவ்வுலகில் ஏற்படப் போகிறது என்று அது சொல்லிற்று. அவர் சொன்னார், ‘நாற்பது நாற்கள்
மௌலானா அவர்கள் தனது பெரிய தலைப்பாகை அவிழ்க்கப்பட்டு இடுப்பில் சுற்றப்பட்ட கோலத்தில்
சஞ்சலமான மனதுடன் உலவிக் கொண்டிருந்தார். கசாப்புக்காரர் தொடர்ந்து சொல்கிறார், “இறுதியில்,
ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு நாள் மௌலானா எனது வீட்டினுள் நுழைந்தார். நான் மரியாதை செய்தேன்.
விசை மிகு வலிய குதிரை ஒன்றைத் தனக்கு ஆயத்தமாக்கிச் சேணம் பூட்டித் தருமாறு அவர் ஆணையிட்டார்.
திமிறித் துள்ளும் புரவியொன்றை நாங்கள் மூவர் மிக வலிந்து சேணை பூட்டி மௌலானாவிடம்
தந்தோம். அவர் அதன் மேல் தாவி அமர்ந்து கிப்லா (தெற்கு) திசை நோக்கி அதனை ஓட்டிச் சென்றார்.
நானும் அவருடன் வர அனுமதி கேட்டேன். நான் அவருக்கு ஆன்மிக உணர்வால் மட்டுமே உதவி செய்தால்
போதும் என்று சொல்லிவிட்டார்.’
’அந்தி
நேரத்தில் அவர் திரும்பி வந்திருந்ததைக் கண்டேன். அவரது அங்கி முழுவதும் புழுதியாகியிருந்தது.
யானையைப் போல் வலிய உடல் கொண்டிருந்த அக்குதிரை அடையாளம் காண இயலாத படிக்கு மிகவும்
களைத்துப் போயிருந்தது. அடுத்த நாள் மௌலானா வந்து முந்தைய தினம் தான் பயன்படுத்திய
குதிரையினும் நல்ல குதிரையாக ஒன்று வேண்டும் என்று கேட்டார். முந்தைய நாளினைப் போன்றே
மிக வேகமாகக் கிளம்பிச் சென்று அந்தி மாலையில் திரும்பினார். இந்தக் குதிரையும் களைத்திருந்தது.
காரணம் கேட்க எனக்கு மனம் துனியவில்லை. மூன்றாம் நாளும் மௌலானா வந்து குதிரை ஒன்றைப்
பெற்றுக்கொண்டு மிக வேகமாகச் சென்றார். எனினும், மாலை தொழுகை நேரத்தில் அவர் திரும்பிய
போது அவர் மிகவும் திருப்தி அடைந்தவராக ஓய்வாக அமர்ந்துகொண்டு பாடினார்:
”வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்! பாடும் எனது நண்பர்களே! நரகத்தின் நாய் நரகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது!”
மௌலானாவை மிகவும் அஞ்சிய நான் அதற்கான காரணத்தைக் கேட்க முடியவில்லை.
”சில நாட்களுக்குப் பின் சிரியாவிலிருந்து காரவான் (பயணக்குழு) ஒன்று
வந்து சேர்ந்தபோது மங்கோலியரின் படை ஒன்று டமஸ்கஸ் நகரத்தின் மீது படையெடுத்து அழித்ததாக
அறிந்தோம். அதன் தலைவன் ஹலாக்கு கான். 1257-இல் வாளால் பாக்தாதை வென்று அதன் கலீஃபாவைக்
கொன்று அதன் பின் அலெப்போ நகரைக் கைப்பற்றியபின் டமஸ்கஸ் நகரை நோக்கிச் சென்றவன். அப்படை
தம்மைச் சுற்றி வளைத்துவிட்ட போது அதற்கு எதிராகப் போரிடுவதில் இஸ்லாமியப் படைக்கு
உதவி புரிவதற்காக மௌலானா அங்கே வந்திருப்பதை டமஸ்கஸ் மக்கள் கண்டனர். அதன் பயனாக அவர்கள்
மங்கோலியப் படையை வெற்றி கண்டனர். இந்த நற்செய்தியை எங்களுக்குச் சொன்னவர் எங்களை மிகவும்
ஊக்கப்படுத்தினார். மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் நாங்கள் மௌலானாவிடம் வந்து டமஸ்கஸில்
நிகழ்ந்தவற்றை அவரே எமக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டோம். மௌலானா சொன்னார், ‘ஏய்
ஜலாலுத்தீன், அது அப்படித்தான் போங்க.’
13
பணக்கார
வணிகனும் கிழக்கின் தர்வேஷும்
மௌலானாவின் தலையான சகவாசிகள் அறிவித்துள்ள ஒரு நிகழ்வு இது. ஒருமுறை,
தப்ரேஸைச் சேர்ந்த பணக்கார வணிகர் ஒருவர் கோன்யாவுக்கு வந்தார். சர்க்கரை வணிகர் ஒருவரின்
வீட்டில் தங்கினார். ஞானியரைக் கண்டு முகமன் உரைத்து அவர்களது கைகளை முத்தமிட்டு அருள்
பெற வேண்டி கோன்யாவில் இருக்கும் ஆன்மிக ஞானிகளைப் பற்றி அவர் விசாரித்தார். யாரேனும்
ஒருவர் பயணம் மேற்கொண்டால் சென்றடையும் இடத்தில் வசிக்கும் ஞானியரின் சகவாசத்தைத் தேட
வேண்டும் என்பதோர் ஐதீகமாக இருந்தது. அறமும் ஞானமும் சிறந்தோர் பலர் அவ்வூரில் இருப்பதாகவும்
அவர்களுள் மிகச் சிறந்தவர் எனில் அறிஞர்களின் அறிஞர் என்று போற்றப்படும் ஷைகு சத்ருத்தீன்
அவர்கள்தாம் என்றும் மார்க்க அறிவிலும் ஞானத் துறையிலும் அவருக்கு நிகராகச் சிலரே இருக்கின்றனர்
என்றும் அனைவரும் ஒருமித்துக் கூறினர். அறிஞர் சிலர் அவ்வணிகரை சத்ருத்தீனின் இல்லத்திற்கு
அழைத்துச் சென்றனர். சிலர் ஷைகுக்கு இருபது தீனார்கள் மதிப்புள்ள பரிசுகளை எடுத்துச்
சென்றனர்.
தப்ரேஸின் வணிகர் ஷைகின் வீட்டை அடைந்தபோது அலுவலர்களும் பணியாட்களும்
கொண்டதொரு கும்பல் சூழ நின்றபடி ஷைகிற்கு சேவை செய்திடக் கண்டார். இதைப் பார்த்து மிகவும்
மன வேதனை அடைந்த அவ்வணிகர் தானொரு தர்வேஷைக் காண வந்திருக்கின்றாரே ஒழிய ஒரு பண்ணையாரை
அல்ல என்று சொன்னார். ஏனெனில் தர்வேஷ்களுக்கு அத்தகைய பணியாளர்கள் தேவையில்லை; பகட்டும்
இருப்பதில்லை என்று அவர் உறுதியாக நம்பினார். அகத்தில் ஆத்ம ஞானத்தை அடைந்திருப்பதால்
அத்தகைய பகட்டுகள் இந்த ஷைகை பாதிப்பதில்லை என்றும் இனிப்புப் பண்டங்கள் மருத்துவருக்கு
நோய் செய்யா, ஆனால் நோயாளிக்கு அவை தீங்கு செய்யும் என்றும் உடன் வந்தோர் கூறினர்.
எனினும், உள்ளத்தில் ஒருவித ஒவ்வாமை உடனேயே அவ்வணிகர் ஷைகின் அவைக்குள்
புகுந்தார். தேவைகள் உள்ளோருக்கு பெருந்தொகைகள் ஈந்து உதவிய பின்னரும் தனது வாழ்வில்
பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்றன என்று ஷைகிடம் தனது பிரச்சனையைச் சொன்ன வணிகர்
அதற்குக் காரணமும் தீர்வும் யாவை என்று வினவி நின்றார். ஆனால அவரது கேள்வி மற்றும்
கோரிக்கை ஆகியவற்றை ஷைகு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. இதனால் மிகவும் துயருற்ற மனத்துடன்
அவ்வணிகர் ஷைகின் இடத்தை விட்டுத் திரும்பினார்.
’அறத்திலும் ஆன்மிகத்திலும் நான் பயனடையும் வகையில் இந்த ஊரில் வேறு
ஞானி எவராவது இருக்கின்றாரா?; என்று அவர் மறுநாள் வினவினார். சால்பும் பக்தியும் சிறந்த
ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி என்றும் அவரது முன்னோர்கள்
பதினைந்து தலைமுறையாக மார்க்க அறிஞர்களாகவும் ஞானியராகவும் இருக்கின்றனர் என்றும்,
அவர் ‘அல்லும் பகலும் வழிபாட்டில் மூழ்கித் திளைக்கிறார், ஞானப் பெருங்கடலில் நீந்துகிறார்’
என்றும் எல்லோரும் சொன்னார்கள். அத்தகைய ஒரு ஞானியைப் பார்க்க அவ்வணிகர் கொண்டிருக்கும்
ஆவல் மிகுதியை அறிந்த நண்பர்கள் அவரை மௌலானா ரூமியின் சமயக் கல்லூரிக்கு அழைத்துச்
சென்றனர். அவரின் தலைப்பாகை முனையில் அவர்கள் ஐம்பது தீனார்களை முடிந்து வைத்தனர்.
மௌலானாவின் இருப்பிடத்திற்கு அவர்கள் வந்தபோது அவர் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இருப்பதையும்
அவரைச் சுற்றிலும் ஓர் ஆற்றல் இருப்பதையும் கண்டனர். அவ்வாற்றல் அவர்களைத் தாக்கி மயக்கிற்று.
தப்ரேஸ் வணிகர் மௌலானாவைப் பார்த்ததுதான் தாமதம், மிக ஆழமாகத் தாக்கமுற்றுத் தேம்பி
அழத் தொடங்கினார்.
மௌலானா சொன்னார்: ‘உமது ஐம்பது தீனார்கள் ஏற்கப்பட்டன. (நேற்று அந்த
ஷைகுக்குக் கொடுக்கப்பட்ட) இருபது தீனார்கள் வீணாகிவிட்டன.’ உன் மேல் இறை முனிவு இறங்க
இருந்தது. ஆனால் அவனது கருணை உன்னை இந்தப் பள்ளிக்கு அழைத்து வந்திருக்கிறது. இன்றிலிருந்து
இனியனாய் இரு. உன் வணிகத்திற்கு யாதொரு தீங்கும் நேராது.’ இச்செய்தியால் அவ்வணிகர்
பெரிதும் கவரப்பட்டார். ஏனெனில் தனது மனத்தில் இருப்பதை இன்னமும் அவர் பேசவே இல்லை.
மௌலானா சொன்னார், “உமது கேடுகளுக்குக் காரணம் சொல்லவா? ஒரு முறை நீங்கள்
மேற்கு பரங்கியரின் (ஐரோப்பியக் கிறித்துவர்களின்) பகுதியில் ஒரு தெருவில் நடந்து சென்று
கொண்டிருந்தீர். அங்கே குறுக்குச் சாலையில் ஒரு மாபெரும் ஐரோப்பியக் கிறித்துவ தர்வேஷ்
உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர். அவரது வறுமைக் கோலத்தையும் அவர் படுத்துறங்கும்
இடத்தையும் அருவருத்து அவரது துயர் நிலைக்கு முகம் சுளிப்பவர் போன்று அவரைத் தாண்டிச்
சென்றீர். அதனால் அந்த ஞானியின் உள்ளம் புண்பட்டது. உன் மீது தொடரும் தரித்திரம் உன்னுடைய
அந்த அகம்பாவம் மற்றும் தற்பெருமை ஆகியவற்றால் உண்டானதே. போ, அவரிடம் மன்னிப்புக் கேள்,
அவரை மகிழ்ச்சி செய். அவருக்கு எனது முகமன்களை சொல்லு.’
இந்த முன்னறிவால் வணிகர் பெரிதும் பாதிக்கப்பட்டார். அக்கணமே அந்த
பரங்கி தர்வேஷைக் காண வேண்டுமா என்று அவ்வணிகரை மௌலானா கேட்டுக்கொண்டே தனது அறையின்
சுவரைத் தொட்டார். அதிலே ஒரு சாளரம் திறந்தது. அதனுள் பார்க்கும்படி வணிகரிடம் சொன்னார்.
மௌலானா வருணித்ததைப் போன்ற குறுக்குச் சாலைகள் அதில் தெரிந்தன. அங்கே அந்தப் பரங்கி
தர்வேஷ் உறங்கிக் கிடப்பதையும் பார்த்தார்.
வியப்பு மேலிட ஒரு பித்தனைப் போல் வணிகர் தமது ஆடைகளைக் கிழித்துக்
கொண்டார். மௌலானா குறிப்பிட்ட அவ்விடத்திற்குச் சென்றார். பரங்கிஸ்தானின் (பரங்கியர்
வசிப்பிடத்தின்) மேற்குப் பகுதியிலுள்ள ஊருக்கு அவர் வந்தடைந்தபோது குறுக்குச் சாலையில்
அவ்விடத்தைத் தேடி முன்பு போலவே அங்கே பரங்கி தர்வேஷ் படுத்திருப்பதைப் பார்த்தார்.
கண்ணியமாகவும் பணிவாகவும் சற்றுத் தொலைவிலேயே தனது குதிரையை விட்டுக் கீழே இறங்கினார்.
பரங்கி தர்வேஷை நோக்கி மரியாதை செய்தார். வணிகரைப் பார்த்ததும் அந்த தர்வேஷ், “எனக்கு
ஆற்றல் ஏதுவும் கிடையாது. இல்லையெனில், என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ள மௌலானா எனக்கு
அனுமதி கொடுத்திருப்பார்கள் என்றால் நான் உனக்கு என்னையும் இறைவனின் ஆற்றலையும் அன்றைக்கே
காட்டியிருப்பேன். பரவாயில்லை, அருகில் வா!” என்று சொல்லியழைத்து வணிகரை அன்பால் ஆறத்
தழுவி அவரின் தாடியில் முத்தமிட்டார். மேலும் சொன்னார், ‘இதோ எனது குருநாதரைப் பார்!’
அவரது நெஞ்சில் வணிகர் மௌலானா ரூமியைக் கண்டார். மௌலானா ஆன்மிக இசை கேட்டபடி இடையிடையே
தனது சீடர்களுக்கு பாடல் வரிகளின் விளக்கங்களைக் கூறிக்கொண்டும் இருந்தார். அவர் ஒரு
பாடல் வரியைப் பாடினார்:
’இருப்பதெல்லாம் இறைவனின் உடைமை
உள்ளதைக் கொண்டு உவகை பூத்திரு
மணியாய், இரு மரகதமாய், அல்லது
மண்ணாங் கட்டியாய் இருப்பதுன் விருப்பம்!
நன்றி உணர்வென இருப்பாய் அல்லது
கொன் றொழிக்கும் நிரா கரிப்பாய்;
பரங்கி என்னடா? பார்சி என்னடா?
பரம்பொருள் நாடில் பரவசம் தானடா!
எந்த நேரமும் ஏக இறைவனை
வந்தித்
திருப்பதே வாழ்க்கை ஆகுமே!”
பின்னர் அவ்வணிகர் மௌலானாவிடம் வந்தபோது பரங்கி தர்வேஷ் உரைத்தனுப்பிய
முகமனைத் தெரிவித்தார். மௌலானாவின் சீடர்களுக்கு அந்த தர்வேஷ் பற்பல அன்பளிப்புக்களை
அனுப்பியிருந்தார். அதன் பின் கோன்யாவிலேயே தங்கிவிட்ட அந்த வணிகர் மௌலானா ரூமியின்
அணுக்கச் சீடர்களில் ஒருவர் ஆனார்.
14
ஒளிரும்
கண்கள்
மொய்னுத்தீன் என்பவரின் வீட்டில் ஓரிரவு மாபெரும் ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சி
(சமா) ஏற்பாடு ஆகியிருந்தது. அறிஞரும் ஞானியரும் அங்கே பெருந்திரளாக வந்திருந்தனர்.
மௌலானா ஆனந்தக் அளிப்பு மிகைப்பட மீண்டும் மீண்டும் பரவசத்தில் கூச்சலிட்டார். சற்று
நேரம் கழித்து அவர் அந்த வரவேற்பறையின் ஒரு மூலைக்குச் சென்று அங்கே நின்றிருந்தார்.
இசையை நிறுத்தி இடைவெளி விடுமாறு சொன்னார். இக்கோரிக்கை அங்கிருந்த ஞானியருக்கு வியப்பூட்டியது.
அப்போது மௌலானா சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டார். பிறகு அவர் தனது தலையை உயர்த்திப்
பார்த்தபோது அவரது இரண்டு கண்களும் களிப்பில் கங்குகள் போல் ஒளிர்ந்தன; பிரகாசிக்கும்
இரத்த உருண்டைகள் போல் அவை இருந்தன. “வாருங்கள் தோழர்களே! எனது கண்களில் இறையொளியின்
மாட்சியைப் பாரீர்!” என்று சொன்னார். அவற்றைக் காண ஒருவருக்கும் துனிச்சல் பிறக்கவில்லை.
அவற்றைக் காண முயன்றோரின் பார்வை உடனே மங்கிச் சற்று நேரத்தில் முற்றும் அவிந்து போயிற்று.
இதைக் கண்டு சீடர்கள் எல்லாம் ஆன்மிகப் பரவசத்தில் கூவினர்.
பிறகு மௌலானா ஷெலபி ஹுசாமுத்தீனைப் பார்த்துத் தனது அருகில் வரும்படி
அழைத்து, “வா, என் வாக்கு மற்றும் நம்பிக்கையின் பொருளே! முன்னே வா என் நேசனே! என்
மன்னனே! என் மெய்யரசே! முன்னே என்னிடம் வா!” என்று சொன்னார்கள். தன் மீது பொழியப்படும்
பாராட்டுக்களில் களியேறி ஷெலபி கூச்சலிட்டார். அவரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
அமீர் தாஜுத்தீனுடன் இவ்விஷயங்களைப் பற்றி
விவரித்துக் கொண்டிருந்த ஒருவர் மறுத்தார், ஹுசாமுத்தீன் ஷெலபியின் மீது மௌலானா ரூமி
பொழியும் புகழ்ச்சிகள் எல்லாம் உண்மையா? அல்லது வெறுமனே அவர் ஷெலபி மீது கனிவாக இருப்பதுதானா?
என்று. இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது அங்கே ஹுசாமுத்தீன் வந்து சேர்ந்தார்.
அந்தச் சந்தேகியின் அங்கியைப் பற்றித் தூக்கி நிறுத்திவிட்டு, மொய்னுத்தீனை நோக்கிச்
சொன்னார், “மௌலானா என்னைப் பற்றிச் சொல்வன முன்பு உண்மையில் எனக்கு உரியனவாக இல்லை
என்றாலும் இப்போது மௌலானாவின் நாவிலிருந்து வந்த சொற்கள் ஒவ்வொன்றும் எனது பகுதியாகவே
மாறிவிட்டன, ‘திண்ணமாக அவனொரு பொருளை நாடுங்கால் அதற்கவன் மொழிவதெல்லாம் ’ஆகு’ என்பதுதான்,
அஃது ஆகிவிடுகின்றது’ (சூறா யாசீன்: 82) என்று குர்ஆன் சொல்கிறது. மௌலானாவின் சொற்கள்
இறைவனின் சொற்களுக்கு இணையானவை அல்ல என்றபோதும் குறியீடாக அவையும் உடனடி பாதிப்புள்ளவை,
எந்த விளக்கத்தையும் சாராதவை, தேவைப்படாதவை. கவிதை வரி ஒன்று இதனைக் குறிப்பிடுகிறது:
”’செம்பினைப்
பொன்னாகும்
ரசவாதக் கல்’ என்று
அனைவரும் சொல்கிறார்கள்.
இந்த ரசவாதக் கல்லோ
செப்புத் துண்டு ஒன்றை
ரசவாதக் கல்லாகவே மாற்றிவிட்டது!”
எனவே,
இத்தகைய பண்புகள் அவரது சீடர்களில் எழுவது என்பது மௌலானா தனது நண்பர்கள் மற்றும் சீடர்கள்
மீது கொண்டுள்ள வாஞ்சைக்கு அப்பாற்பட்டதல்ல.”
ஷெலபி
இன்னனம் பேசிய பின்பு, மௌலானாவின் ஞானத்தை முன்பு ஐயப்பட்டிருந்தோர் அனைவரும் நாணித்
தலை கவிழ்ந்தனர்; சத்தியம் அறிந்து மௌலானாவுக்கு நன்றி நவின்றனர். மௌலானாவின் இன்னொரு
அதீதப் பண்பு யாதெனில் எவருமே அவரது பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.
அவரது கண்களின் சுடரொளி எந்த அளவு பிரகாசமாக இருந்தது என்றால் அதனை நேருக்கு நேர் நோக்க
முயலும் எவரும் தாளாமல் தமது கண்களைக் கவிழ்த்து விடுவர்.
இன்னொரு
நிகழ்வும் அறிவிக்கப்படுகிறது. மார்க்கக் கல்லூரியின் முதல்வரான மௌலானா ஷம்ஸுத்தீன்
மாலத்தி (ரஹ்) அவர்கள் மௌலானா ரூமியின் முதன்மைச் சீடர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்,
ஒருமுறை மௌலானா ரூமி தனது சீடர்களுடன் ஞானி ஹுசாமுத்தீனின் தோட்டத்தில் இருந்தார்.
அப்போது மௌலானா அவர்கள் தனது கால்களை தெளிந்தோடும் தண்ணென்ற ஓடைக்குள் வைத்தவாறு அமர்ந்த
நிலையில் தனது சீடர்களுக்கு மறைஞான உரையாற்றிக் கொண்டிருந்தார். குறிப்பாக, தனது குருநாதரான
மௌலானா ஷம்ஸுத்தீன் தப்ரேஸியின் ஆன்மிக ஆற்றல்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
கல்லூரி
ஆசிரியருள் ஒருவரான பதுருத்தீன் வாலித் இதனைக் கேட்டு மிகவும் தாக்கம் பெற்றவராக ‘என்
கைசேதமே! என் கைசேதமே!’ என்று புலம்பலானார். அவரிடம் மௌலானா, ‘ஏனிந்த பெருமூச்சு? ஏனிந்த
துயரம்? இப்படியான உணர்வுகளைக் காட்டும்படி என்ன நடந்துவிட்டது?’ என்று கேட்டார். மௌலானா
ஷம்ஸுத்தீன் தப்ரேஸியை நேரில் காணும் பேறு தனக்குக் கிடைக்கவில்லை, அத்தகைய ஓர் ‘ஆன்மிக
விளக்கு’ தருகின்ற அக வெளிச்சத்தைப் பெறத் தனக்கு வாய்க்கவில்லை என்று அவர் சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதைக் கேட்டு மௌலானா ரூமி சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு, “மௌலானா
தப்ரேஸியை நீ நேரில் காணவில்லை என்றாலும், தனது முடி ஒவ்வொன்றிலும் ஆயிரம் ஆயிரம் தப்ரேஸிகளை
வைத்திருந்தபோதும் தப்ரேஸியின் மெய்ஞ்ஞானப் பெருங்கடல் எற்றுகின்ற ரகசியப் பேரலைகளை
இடையறாது வியந்து கொண்டிருக்கும் ஒருவனின் வாசலுக்கு நீ வந்துவிட்டாய்!” என்று சொன்னார்கள்.
அதன் பின் ஒரு பாடலைப் பாடினார்:
“எம் இதயத்தின் தேசத்தைக்
கைப்பற்றிய வேந்தராம் ஷம்சுத்தீன்
அவருக்குள் மூழ்கியே கிடக்கின்றது
எமது
வாழ்க்கை எல்லாம்!”
அங்கு
இல்லாத போதும் அதிகமாக நினைவு கூரப்படும் அந்த மகா ஞானியைப் பற்றி மௌலானா சொல்லும்
வருணிப்புக்களில் அனைவரும் திளைத்தனர். பின்னர் அவர் பின்வரும் கவிதை வரிகளைப் பாடினார்:
“சட்டென்று
என் உதடுகள் உச்சரித்தன
ரோஜாவின்
பெயரையும்
ரோஜாத்
தோட்டத்தின் பெயரையும்.
பின்னர்
அவன் வந்தான் –
என் உதடுகள்
மீது
கை பொத்திச்
சொன்னான்:
’நானே
அரசன்,
பூவனத்தின்
ஆன்மா நானே’
பிரகாசமானவனே!
எனைப்
போல் நீயும் பிறங்குதல் வேண்டின்
நினைத்திரு என்னையே நித்தமும்!”
இந்த
நிகழ்வின் காரணமாக அடுத்த நாற்பது நாட்களுக்கு பதுருத்தீன் உடல்நலம் குன்றி இருந்தார்.
பாவ மன்னிப்பு வேண்டிய பின்னர் அவரது உடல்நிலை சீரானது. அதன் பின் அவர் மௌலானாவிடம்
மிகவும் நெருக்கமாகிவிட்டார்.
(to be continued...)
No comments:
Post a Comment