2:135
உன் ஆசையின் தனித்தன்மை
சமர்கந்தைச் சேர்ந்த ஒருவன் சொன்னான், ‘நீ என்னைக் கொலை செய்தால் நீ
ஒரு வீரன் என்று அறியப்படுவாய், நான் உன்னைக் கொலை செய்தால் நீ ஒரு தியாகி என்று அறியப்படுவாய்’.
நான் அவனை ஒரு கை பார்ப்பதற்குள் இதைச் சொல்லிவிட்டு அவன் தனது குதிரையைச் சொடுக்கிக்கொண்டு
பறந்துவிட்டான்.
நாம் ஒரு மலை உச்சியில் நின்று கொண்டு சமவெளியை திடமான பனி மூட்டத்தின்
வழியாகப் பார்ப்பதைப் போல் இருக்கிறது ஆன்மாவைப் பற்றி நாம் கற்பனை செய்வது. நாம் இறங்கி
உள்ளே செல்லும்போது பனிப்படலம் மறைந்து மரங்கள் ஓடைகள் என்று பசுமையின் விவரங்கள் எல்லாம்
தென்படத் தொடங்குகின்றன. மரணத்தின் வழியாக நாம் ஆன்மாவினுள் கடந்து செல்வதும் இப்படித்தான்
இருக்கும்.
பல வகையான ஞானிகள் இருக்கிறார்கள்; பல வகையான அறிதல்கள் இருக்கின்றன.
நீ எந்த வகை? உன் பிள்ளைகள் முற்றிலும் வேறு வகையினராக இருக்கக் கூடும். இஸ்மாயில்
நபியைப் போல் முழுமையாக அர்ப்பணமாகின்ற மனிதர்களும் இருக்கிறார்கள். அவரை அறுத்துக்
காணிக்கை தர கையில் கத்தியுடன் நிற்கின்ற இபுறாஹீம் நபியைப் போன்றவர்களும் உள்ளனர்.
இன்னொரு புறம், அகுன்ஷா போன்றவர்களும் உண்டு. அவர் தனது மகன் ஒரு மளிகை அங்காடியின்
முன்பாக தற்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.
புரளிகளைக்
கவனிக்காதே. உனது பிள்ளைகள் உன்னைப் போல் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாதே.
ஒவ்வொரு ஆன்மாவும் தனது ஏக்கத்தில் தனித்தன்மையானது. நீ காண்பது அனுபவிப்பது ஆகியவற்றையே
நம்பி இரு. உணவிலோ குடிப்பிலோ காமத்திலோ உனது விருப்பங்கள் என்னென்ன என்பதை இன்னொருவர்
அறியவே முடியாது. உனது ஆசையின் தன்மைகளை உனது பெற்றோரோ உனது பிள்ளைகளோ உணர்வதில்லை.
அதை அறிதல் என்பது உனது மட்டுமே.
இந்த விஷயங்களில் யாரும் இடையூறு செய்ய அனுமதிக்காதே, நீயும் பிறரை
இடையூறு செய்யாதே. அப்படிச் செய்தால் அது எல்லோருக்கும் பேரழிவாக முடியும்.
2:138-139
அரவமற்ற ஊரில் சிக்கித் தவித்தல்
சமர்கந்த்
அல்லது பாக்தாத் அல்லது பல்ஃக் போன்ற ஊர்களில் எல்லாரும் நாகரிகத்தின் கனிகளைச் சுவைத்துக்
கொண்டிருக்கும்போது நான் மட்டும் எங்குமே இல்லாத வெற்றிடமான வக்ஷ் போன்றதோர் ஊரில்
சிக்கிக் கிடப்பது பற்றிய கைசேதத்தை முனகிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் மேலும்
பகட்டும் ஆழமும் இருக்க விரும்புகிறேன்.
விடை இதோ: நான் உனது கூட்டாளி என்றால் நீ எங்கேயும் இருக்க வேண்டியதில்லை. நீ எனது நட்பினுள் வாழவில்லை என்றால்
நீ எங்கிருந்தாலும் அருவருப்பாகவும் அபாயமாகவுமே இருப்பாய். மிகக் கொடுமையாக நீ தனிமையை
உணர்வாய். இந்த நட்புடன் ஒப்பிடும்போது, ஷைகு தாஜ், காவலாளி மொயீன், மற்றும் இதர அரசாங்க
அதிகாரிகளுடன் நீ ஊர் சுற்றுகின்றாயே அந்தத் தொடர்புகளில் எல்லாம் அவசியமான அம்சம்
ஒன்றுமே இல்லை. நீ சத்தியம் மற்றும் இதயத்தின் பாதையில் இருக்கிறாய். அதில் நீ யாரைச்
சந்தித்தாலும் உனது ஒருங்கிணைவையும் நிஜ சுயத்தையும் அடையாளம் கண்டுகொள்வார்.
நிகழ்வுகள் யாவும் ஏதேச்சையாக நடக்கின்றன, எனவே அவற்றை மாற்றி அமைக்க
முயல்வதில் அர்த்தம் ஏதுமில்லை என்னும் சிந்தனையால் சில நேரங்களில் நான் துயரப்படுகிறேன்.
இந்தச் சிந்தனைகள் என்னை வலி மிகுந்த விசித்திரமான புரிதல்களுக்கு இட்டுச் செல்கின்றன.
இறைவன் கொடூரத்திலும் அன்பிலும் இயங்குகிறான் என்பது அவற்றுள் ஒன்று. இவை எதிலுமே இறைவனுக்குப்
பங்கில்லை என்பது இன்னொன்று.
நாம் மையப் புள்ளியில் இருந்து வாழ வேண்டும். அந்த அந்தரங்கத்தில்
இருந்து செயலை நோக்கிச் செலுத்தப்படுதல் இல்லை எனும்போதுதான் இப்படிப்பட்ட குழப்பங்கள்
எல்லாம் தோன்றுகின்றன. ஒரு கடினமான வேலையை நீ முடித்துவிட்டால், இடைவெளி விடாமல் அடுத்த
வேலைக்குப் போய்விடு. ஆனால் உன் வேலைகளுக்கு ஒரேயொரு இலக்கு மட்டும் இருக்கட்டும்:
இறையொளியின் சுவையை மேன்மையை அனுபவித்தல்.
2:139-140
நிர்வாணம்
எனது குறைகளை, வழுக்கையை, அந்தரங்க உறுப்புக்களை, ஆடைகளால் நான் மறைக்கும்
உடல் வழுக்களை யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். ஆனால் மணவாளனும்
மணப்பெண்ணும் ஒருவரை ஒருவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். அவர்கள் ஒருவருடன் ஒருவர்
பல வழிகளில் இருக்க முடியும், மென்மையாகச் சீண்டிக்கொண்டும், வன்மையாக விளையாடிக் கொண்டும்,
எப்படி விரும்பினாலும். ஏனென்றால், அவர்களுக்குள் ஒருவர் மற்றி மற்றவரிடம் எந்த அச்சமும்
இல்லை.
அதேபோல், இறைவனின் அறிவுக்கு என்னைப் பற்றிய அனைத்தும் தெரியும். இங்கே,
அதன் முன் திறந்த வெளியில் நின்றபடி நான் சொல்கிறேன், ‘இந்த உடலில் நீ என்ன செய்ய வேண்டுமோ
செய்துகொள்.’ காதல், அச்சம், பணிவிடை, சிரமங்கள், அவமானம், பரவசம் – எது நிகழ்ந்தாலும்
அதற்குத் தயாராக நிற்கின்ற மணப்பெண்ணைப் போல் இதோ எனது ஒவ்வொரு பகுதியும் உன் முன்
முழு நிர்வாணமாக நிற்கின்றது.
2:141-142
இனிப்புகளுக்கு புஃகாரா
பள்ளிவாசலில்
இருப்பதைப் போலவே வீட்டிலும் நமக்கு எப்போதும் ஆன்மவுணர்வு இருந்தால் எப்படி இருக்கும்?
நான் என் மாணவர்களிடம் சொல்கிறேன், அவர்கள் செய்கின்ற காரியம் எதுவும்
அவர்களின் அடிப்படையான சுபாவத்தை மாற்றாது, வேண்டுமானால் அது பழகித் திரட்டிய குணங்களை
மாற்றலாம்.
இந்த நகரத்தின் கடைகள் இடங்கள் எல்லாம் திடீரென்று வேறொரு நகரத்தின்
கடைகளைக் கொண்டு மாற்றப்பட்டால் என்னவாகும்? இன்னும் சில காலம் சென்றபின் அந்தச் செல்வமும்
செல்வமீட்டும் தொழில்களும் இன்னொரு நகரத்திற்கு மாற்றப்பட்டால்? அது நீ பிறந்து வளர்ந்த
ஊராக இருந்தால்?
சில நேரங்களில் நீ மரங்களை இடமாற்றம் செய்யும்போது நடப்பட்ட புதிய
இடத்தில் அவை பிழைப்பதில்லை. உனது வேலை பயனற்றதாகிறது. ஆனாலும் நீ முயற்சியை நிறுத்துவதில்லை.
”அவனே அதன் மேலிருந்து உறுதியான மலைகளை அமைத்தான். அதில் அபிவிருத்தியை அருளினான்.
அதில் அதன் உணவுகளை நான்கு நாட்களில் நிர்ணயம் செய்தான்” (41:10). வாழ்வாதாரத்தைத்
தேடுவதற்குப் பல வழிகளை இறைவன் வைத்திருக்கிறான். ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தன்மையான
அனுகூலங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மண் பேரீச்சத்திற்குத் தோதாகிறது. வேறொரு
நிலம் வாழைக்கு. புஃகாராவோ மிட்டாய்கள் செய்வதற்கான இடமாகிவிட்டது. இந்த அழகிய வகைப்பாடுகளே
பூமியைச் சீராகவும் நெருக்கடி ஏற்படாமலும் வைத்திருக்கிறது.
எனது உடலின் ஒவ்வொரு பாகமும் நிர்ணயிக்கப்பட்ட, தாதுக்கள் வினியோகிக்கப்பட்ட,
மலைகள் அவற்றின் இடங்களில் எழுப்பப்பட்ட, ஜீவராசிகள் உயிரூட்டப்பட்ட அந்த படைப்புக்
கணத்தில் இருப்பதாக மீண்டும் என்னை நான் உணரும்போது, உயிர்கள் மலர்கள் கொண்டு வருவதையும்
இசையுடன் அழகிய பெண்கள் வருவதையும் மனிதப் பிரக்ஞையை வரவேற்றுக் கொம்புகள் ஒலிப்பதையும்
உணர்கிறேன்.
பிறகு நான் மிகவும் சோர்வான, சுருங்கிய, படைப்பூக்கம் அற்ற நிலைக்குத்
திரும்புகிறேன். அங்கிருந்து நான் பார்க்கும்போது, என் பாதையை அடைத்துக் கொண்டிருக்கும்
சராசரியான மனிதக் கும்பலையே காண்கிறேன்.
2:143
பெரு முதலை
என்னைச் சூழ்ந்திருப்போரிடம் நான்
சொல்கிறேன், நீங்கள் உங்களின் மையமான, ‘மகத்துவத்தின் சிம்மாசனம்’ என்று சொல்லப்படுகின்ற,
ஆன்மாவை விட்டுத் திரும்பினால் நீங்கள் உணர்வற்ற மயக்கத்தில்தான் விழுவீர்கள்.
பெரிய முதலை ஒன்று வந்து உங்கள் கப்பலை நொறுக்குகிறது. விழிகள் ஒரு
வழியில் செல்கின்றன, காதுகள் இன்னொன்றில், உங்கள் அறிவு நிலை தவறிச் சாய்கிறது. இந்த
அழிவு எவருக்கும் நேரக் கூடும்.
உனது தேர்திறன் மீளும்போது உனது ஆளுமை வலுப்படும். கண்களும் காதுகளும்
தத்தமது இடங்களில் அமையும். நீ மீண்டும் ஒரு நண்பனாக, காதலனாக, பக்தனாக இருக்கலாம்.
2:143-144
வயிற்று வலிக்கான நிவாரணம்
வழக்கறிஞர்
சஅதின் மகனுக்குக் கடுமையான வயிற்றுவலி. ஓரிதழ்த் தாமரை வேர்களை வெல்லத்துடன் சாப்பிடக்
கொடுத்து அவர் அதனைக் குணப்படுத்தினார். பிறகு சில நாட்களுக்கு அவன் சர்க்கரை நீரை
பருகி, வலியிருக்கும் இடத்தில் அந்த நீர் திரள வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட நேரம்
வரை குப்புறப் படுக்க வைக்கப்பட்டான். சில நாட்களில் இறுக்கம் மறைந்துவிட்டது. அவனது
வயிறு தளர்ந்தது. அதில் வலி ஏதுமில்லை.
2:144
என் தாயின் சோகம்
இசைக் கலைஞன் நரம்புகளை மீட்டுகிறான்; என் தாய் அழுகிறார். இறைவன்
என்னைத் தூங்க வைப்பான் என்னும் நம்பிக்கையுடன் எனது தாயின் துயரத்திற்குள் படுக்கிறேன்.
ஆனால் அந்த விடுதலை வருவதாயில்லை. எனது தூக்கமின்மையும் அருளை விட்டுப் பிரிந்த அவரின்
சோகமும் எனது கலைந்த தலையின் மீது அழுத்துகின்றன.
2:145-அ
செண்டுகள்
என் அறிவுத்திறன், புலப்பாடு, நினைவு ஆகியன எல்லாம் இறை ரகசியத்தின்
கையிலிருக்கும் பூச்செண்டுகள். இறைவா! தாவூத் நபிக்கு ஜபூர், மூசா நபிக்கு தவ்ராத்,
ஈசா நபிக்கு இஞ்சீல், முஹம்மது நபிக்கு குர்ஆன் ஆகியவற்றை அருளியவனே! நீயே எனது அறிவு
புலப்பாடு மற்றும் நினைவு ஆகியவற்றுக்கு மதிப்பும் திசையும் வடிவமும் தருகின்றாய்!
2:145-ஆ
கொஞ்சம் பறவைக் கோந்து
உறங்குவதற்கு முன் நூருத்தீன்
பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டார். நெஞ்சில் ஒருவித அழுத்தமும் காய்ச்சலும் குளிர் நடுக்கமும்
வந்துவிட்டன. அதற்காக அவர் ஒருவித பார்லிக் கலவை, அதிகமதிகம் தண்ணீர், அரைக்கப்பட்ட
பறவைக் கோந்து கொஞ்சம், இலந்தைப் பழம் ஒன்று, அல்லித் தண்டு மற்றும் கருநன்னாரி வேர்
ஆகியவற்றை உட்கொண்டார்.
குறிப்பாக, கருநன்னாரி வேர் உதவியாக இருந்தது என்று அவர் உணர்கிறார்.
பொதுவாக, வயிற்றுவலிக்கு பார்லி பானம் உகந்ததது அல்ல. அதனால் மலச்சிக்கல் உண்டாகும்.
2:146
வாத்தை விட மேலாக எதுவும்...
உனதாகிவிட்டது என்று நீ உணரும் எதையும் உன் வழியாகக் கடந்து போக விடு.
அது ஓர் எண்ணமாக அல்லது மனநிலையாக அல்லது ஒரு வீடு, ஒரு மேஜை, ஒரு குதிரை முதலியவை
போல் ஒரு பருப்பொருளாகக்கூட இருக்கலாம். இருத்தல் என்பது இல்லாமையில் இருந்து வருகின்றது
என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா? அதைப் புரிந்துகொள்ளாமலேயே நாம் அதை மிக ஆழமாக அறிந்துதான்
இருக்கிறோம். மறைவிலிருந்தே விநியோகம் நடக்கிறது. அக்கணத்தில் ஏன் அல்லது எப்படி என்னும்
கேள்விகளுக்கு இடம் இல்லை.
எனினும், நாம் செய்ய முடிந்ததெல்லாம், சாட்சி நிலையில் பார்ப்பதுதான்.
வளரும் தோட்டத்தை, தேயும் வானத்தை நாம் வியக்கிறோம்; பூக்களின் உரையாடலை ரசிக்கிறோம்.
ஒவ்வொரு பாடலுக்கும் நடனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நதியின் மீதான காதலில்
தனது உடல் களிப்புடன் மிதந்தபடி இருக்கும் வாத்து ஒன்று தனது மகிழ்ச்சியை விளக்கிச்
சொல்வதற்கும் மேலாக நாம் அதனை விளக்கிவிட முடியாது.
சுகங்கள் வந்து நினைவில் தங்கும்
இந்த இனிய பருவத்தில் ஆன்மாவில் மூழ்கி இரு. இங்கே முழுமையாக இருக்கும் நிலையில் நீ
மறுவுலகை நோட்டமிட வாய்க்கலாம், அதன் முழுமை உன்னை நிரப்புவதை நீ உணரலாம்.
(தொடரும்...)
No comments:
Post a Comment