2:78-79
பல்வேறு அச்சங்கள்
குர்ஆன் (98:8)- ஆம் வசனம் இறையச்சம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது
என்ன? இறைவன் அல்லாத ஏதேனும் ஒன்றை பற்றிய அச்சம் இத்தனை ஆழ்ந்த நடுக்கம் தருவதாக இல்லை.
மனித நிலைக்கு உரிய ஆரம்ப அச்சங்கள் எல்லோரிடமும் உண்டு. பிறகு நம்பிக்கை வளர்கிறது.
மெல்லிய கிளைக்கு ஊட்டம் தரும் உறுதியான வேர்ப் பிடிப்பாக இறையச்சம் வருகிறது. ”அதைப்
பிடியும்; அஞ்சற்க” (20:21). மூசா நபியின் அச்சம் இந்த அடைக்கலத்தில்தான் ஊன்றி இருந்தது.
இது என் பிரார்த்தனை: நான் என் அச்சங்களை உன்னிடம் தருகிறேன். நான்
நோய்ப் பட்டிருக்கும் போது நலம் கொண்டு வா. மரணிக்கும்போது வாழ்வு கொடு. எனது ஆழ்ந்த
சீரழிவை எனது மகத்துவம் ஆக்கு. பெண்களின் அழகை நான் கேட்கும்போது அதை எனக்கு அருள்.
பெண்களை மேலும் அழகாக்கு, அவர்கள் மீதான என் ஆசையை மேலும் வலிமையாக்கு.
2:81
எங்கே நிம்மதி?
நாம் நமது அழகிய குழந்தைகளைப் போற்றுகிறோம். வணிகத்தைப் போற்றியபடி
அங்காடித் தெருவில் சுற்றுகிறோம். திரைகளை பின்னுக்கு இழுத்து விடுகிறோம். பொன் அல்லது
புகழால் ஆன பொருட்களை, அரசாட்சி மற்றும் பிற ஈர்க்கும் அதிகாரங்களைப் பார்க்கிறோம்.
”அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்” (83:15).
மூசா நபியின் கைத்தடி எப்படி மாறி திடீரென்று ஃபிர்அவ்னின் படைகளை
அவை எப்போதுமே இருக்கவில்லை என்பதைப் போல் விழுங்கித் தீர்த்தது என்பதை நினைத்துப்
பார். நாம் இங்கே நமது இழப்புக்களை ஒப்பாரி வைத்துக் கொண்டு, குறைகளின் விவரங்களில்
மூழ்கியபடி அமர்ந்திருக்கிறோம். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லாம் கடந்து போனவை, முதலையின்
வாய்க்கு வீசப்பட்ட துணுக்குகள். அதுவோ தனது தலையை உயர்த்தி கேட்கிறது, இவ்வளவுதானா? மீதி எங்கே?
நாம்
அணிந்துகொள்ளப் போகும் அலங்காரங்களை மிகவும் ஜாக்கிரதையாகத் தயார் செய்கிறோம். நான்
அதற்கு உதவுகிறேன். இதோ இப்படி. நண்பர்களே, அதற்குப் பதிலாக நாம் நமது தன்முனைப்பின்
பொய்யாடைகளை உரிப்போம். அவற்றைக் கிழித்தெறியுங்கள். நாம் இதில் ஒன்றாக உழைத்தால்,
நமது பாவனைகளை, குரூரங்களை, மடமைகளை, மற்றும் இவை எதுவுமில்லாமல் வாழும் வழிகளைக் கண்டடைய
முடியும்.
2:87-88
அதிக அதிகாரம்
சலனமும் நிற்றலும், பிரித்தலும் தொகுத்தலும், பருவுலகில் இறைவனின்
நாட்டத்தைச் செயற்படுத்தும் நான்கு காரணிகள் இவையே.
”அவன் அறியவில்லையா? மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப் படும்போது;
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப் படும்போது” (100:9-10).
மண்ணறைக்குள் போவது காற்று தூற்றுகின்ற புழுதி ஆகிறது. இதயத்திற்குள்
போவது திரட்டப்பட்டு உருக்கொள்கிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் இரண்டு வகை: நிச்சயமற்ற, தோராயமான மனிதன்.
சாகா மற்றும் பல்ஃக் நகரங்களின் கிழவனைப் போல, அல்லது வியாதி காலத்தில் என்னைப் போல,
அவன் சூடும் குளிருமாக மாற்றி மாற்றி மூச்சு விடுகிறான். பிறர் இருக்கிறார்கள், எப்போதுமே
அதிக அதிகாரத்தை எதிர் பார்த்தவர்களாக.
அதிகாரம் பெற்ற எவரும் உயர் ஆதிக்கத்தின் கீழே வந்துவிடுகிறார்கள்.
உன்னிடம் இருந்ததை நீ வீணடித்தாய். இப்போது இறைவனிடம் மேலும் கேட்கிறாய். குழந்தை தனது
தாயின் நூல்-தண்டைப் பம்பரமாக வைத்து விளையாடி உடைத்து விடுகிறது. பிறகு தனது அம்மாவிடம்
இன்னொன்று கேட்கிறது. அவளிடம் இருந்தாலுமே, அதனை அவள் தருவாளா? இல்லைதான், அது எவ்வளவு
அழுதாலும்.
மேலதிகாரம் கொண்டு நீ என்ன செய்ய் முயல்வாய்? அந்த வேலையை செய்ததில்
ஏற்கனவே நீ அடைந்திருக்கும் அனுபவம் என்ன?
2:89-90
சுய இச்சையும் தலைவிதியும்
குவாரிஸ்ம் நகரில் பெரும்பான்மையோர் முஃதஸிலா பிரிவினரே. அங்கே ஒருவரும் தனக்கு இறை தரிசனம் கிடைத்ததாகச் சொல்வதே இல்லை. அங்கே மக்கள் தமது வாழ்வைத் தாமே
உருவாக்கிக் கொண்டிருக்கும் சுயேச்சைகள் என்று தம்மை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாமே முன் கூட்டியே எழுதப் பட்டுவிட்டது என்னும் கொள்கை கொண்ட ஜபரிய்யா உறுப்பினன்
எவனையாவது அவர்கள் கண்டால் அவனது கழுத்தில் சங்கிலியை மாட்டி இழுத்து நான் இப்படிச் செய்வது இறைவனின் திட்டம்தான்
என்று கேலி பேசுகிறார்கள். விதிக்காரர்கள் மீது குவாரிஸ்ம் மிகவும் கடுமையாக உள்ளது.
அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. அவர்கள் வறுமையில் நடக்கும்போது அவர்களைக் கட்டி
வைத்து அடிக்கிறார்கள். ஜபரியாக்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களை எந்த வேலையும்
செய்யாத சோம்பேறிகளான முஃதஸிலாக்கள் அனுபவிக்கிறார்கள். அது கடவுளின் வேலை என்கிறார்கள். அவர்கள் ஈருலகிலும் துக்கப்படுவார்கள்
என்பது திண்ணம்.
2:92-94
உயிர்த் தோழர்கள்
மக்கள் தமது புரிதலின் நிலைகளுக்கு ஏற்பவே இறைவனை அணுகுகிறார்கள்.
சிலர் அவனுடன் லாப நஷ்டங்களை ஆலோசிக்கிறார்கள். சிலர் தெய்வீக ரகசியத்திற்கு என்ன பெயர்
வைக்கலாம் என்று கேட்கிறார்கள். சிலர் வானியலில் ஈடுபாடு காட்டுகின்றனர்; சிலர் இருத்தல்
மற்றும் இல்லாமை பற்றிச் சிந்திக்கின்றனர்.
இந்த விசயங்களில் சொல்லப்படும் உறுதியான கோட்பாடுகள் எனக்கு என்னவோ
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறது. வழிப் பலகைகள் இல்லாத அடர் வனத்தில்
தொலைந்து அலைவது போல். ஒவ்வொருவரிடமும் இறைவனுக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்த ஒரு காலம்
இருந்தது. பிறகு இறைத் தூதர்களின் வழியாகத் தொன்னூற்றொன்பது திருநாமங்கள் கிடைத்தன.
விதிக் கொள்கையின் அறிஞர்களிடம் நான் கேட்க நினைக்கிறேன், அவர்கள்
குற்றங்களை எதிர்க்கிறார்களா? அல்லது அதெல்லாம் நமது விதியின் ஒரு பகுதியாக இறைவனால்
திட்டமிடப்பட்டு வழிநடத்தப் படுகின்றவை என்று சொல்கிறார்களா?
எல்லாச் சமூகங்களும் சமமாக இருந்தால் இலட்சியங்களோ, சந்தர்ப்பங்களுக்கான
தள்ளுமுள்ளுகளோ, உயிர்ப்போ இராது. துடிப்பும் போட்டியுமான ஓர் அக்னியே மனித குலத்தின்
சாரம். அது அணைந்துவிட்டால், நாம் அனைவரும் விலங்குகளைப் போல வெறுமனே பசி தாகம் மற்றும்
காமத்தால் தூண்டப் படுபவர்கள் ஆவோம்.
விதிக்காரர்களின் கோட்பாடுகள் உறுதி இழக்கவும் என்னில் முஃதஸிலாக்களின்
சிந்தனைகள் சற்று மிகைக்கத் தொடங்கின. ராணுவத்தின் நிறைய அனுகூலங்களுடன் இலகுவான வாழ்க்கைக்குப்
பழக்கப்பட்ட, கூடாரத்தில் தங்கியிருக்கும் ராணுவப் படையைப் போன்றவர்கள் நாம் என்று
எனது மாணவர்களிடம் நான் சொல்கிறேன். பிறகு நாம் பார்க்கிறோம், ஆயுத பலம் பொருந்திய,
நன்கு கட்டமைக்கப்பட்ட படை ஒன்று நம் மீது தாக்குகிறது. நாம் தெறித்து ஓடும்போது நாம்
அந்த எதிரிப் படையில் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகிறோம்.
நாம் மிக இலகுவாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போது ஏதேனுமொன்று நிகழ்கிறது. புதியவர் எவராவது கூட்டத்திற்குள் வருகிறார், அல்லது
புதிய விஷயம். சூழல் முழுவதும் இப்போது விவாதமும் இறுக்கமும். நம்மில் சிலர் எழுந்து
அப்பால் தள்ளி நின்று கவனிக்கிறார்கள், யார் வெல்வார் என்று. சிலர் இரு தரப்பில் ஏதேனும்
ஒன்றின் பக்கம் சார்கிறார்கள். எதிர்த் தரப்பு ஓங்குவதைப் பார்க்கும்போது அவர்களைக்
கலக்கம் பீடிக்கிறது. மக்களின் வீடுகளுக்குள் உளவு பார்ப்பது நல்லதல்ல.
இதயத்திற்குள் முரண்பாடு ஏற்படுகிறது. ஏனெனில் தன்முனைப்பும் ஆன்மாவும்
அதே இடத்தில்தான் வாழ்கின்றன. நஃப்ஸ் (நமது மிருக இச்சா சக்திகள்) மற்றும் நமது இறைத்தேட்டம்
(நமது அறிவின் மிகத் தெளிந்த பகுதி) இரண்டுமே காதலின் ஊற்றான இதயத்தில்தான் வசிக்கின்றன.
பெண்ணால் ஆதிக்கம் செய்யப்படும் வீட்டில் ஒரு மனிதன் வாழ்ந்தால் காரியங்கள்
சரிப்பட்டு வராது அல்லது நல்ல படியாக முடியாது. ஒத்திசைந்த வாழ்க்கைக்கு ஒரு நுண்ணிய
சமன்பாடு தேவை. பெண் ஒரு கண்ணாடி. அவள் மீது கற்களை எறியாதே. அதே சமயம், ஓர் ஆண் என்ற
முறையில், கண்ணாடியின் மாய உலகிற்குள் நுழைந்து மாட்டிக்கொள்ளும் அரூப ஆவியாகவும் ஆகிவிடாதே.
இறைவன் பெண்களை போஷிப்பவர்களாகவும் சிரத்தை கொண்டவர்களாகவும் ஆக்கி வைத்து அவர்களின்
அக்கறைக்குப் பெரு மதிப்பு வழங்கியிருக்கிறான்.
ஆன்மாவும் ஆளுமையும் திருமணம் முடித்த ஆணும் பெண்ணுமாக மகிழ்ச்சியுடன்
ஒன்றாக வாழ முடியும். ஆன்மாவின் வளர்ச்சி மீது தன்முனைப்பு ஆதிக்கம் செலுத்தும்படி
விடாதே. மேலும், உன் சுயத்தின் ஆளுமையை முழுவதுமாக ஆன்மாவிற்குள் கரைத்து விடாதே. அவ்விரண்டும்
தனித்தனியே வலிமையாக உயிர்த் தோழர்களாக இருக்கட்டும்.
2:95
குழப்பநிலை என்னும் படகு
இதனை வீடு என்று எவர் அழைத்தாலும்,
அப்படியே புரிந்து கொண்டாலும், அவர் தொலைந்து போய் திருப்தி அற்றவராக இருப்பார். இருத்தலின்
இந்தத் தளம் கொந்தளிக்கும் கடலின் மேற்பரப்பு. நாம் குழப்பநிலை என்னும் படகில் இருக்கின்றோம்.
அது அவ்வப்போது அலைகளால் உள்ளிழுக்கப் படுகிறது, பின்னர் மேலே தூக்கி வீசப்படுகிறது.
ஆனால், உன் இதயம் நித்தியத்தில் வாழ்ந்தால் நாம் இஸ்லாம் என்று அழைப்பதில்
நீ அமைதி காண்பாய். மிகக் கொஞ்சமாகவே அலையசைவு ஏற்படுகின்ற ஆழமான மௌனம் அது.
வேட்டைக்கான அம்புகளை வைக்கும் கூடு உன்னிடம் இருக்கிறது. ஆனால், நீ
இறைவனுக்காக வேட்டையாடச் செல்கையில் உன் உள்ளே அம்புக்கூடு இருக்கிறதா? உன் தேடல் உயிருள்ளதாகவும்
அதிர்வதாகவும் இருக்கிறதா? மகிழ்ச்சியான தருணங்களில் நீ அதை மறந்து போனால், அல்லது
உடலின் வலிகளில் நீ அதை ஒத்திப் போட்டால், உனது தேடல் வெறும் நடிப்புத்தான், பிரபலமான
இப்பாடலைப் போல்:
அவளின்
சிரிப்பை நேசிக்கிறேன்
மயக்கக் கண்களை, நெளிக் கூந்தலை.
2:95ஆ-96
உயிரோட்டம்
உண்மையாக உயிருடன் இருப்பதை நான் தேடுகிறேன், அவ்விடத்தில் தெளிவான
பார்வையுடன் இருக்க நாடுகிறேன். குர்ஆனின் 17:110-ஆம் வசனத்தை வாசிக்கிறேன். ”அல்லாஹ்
என்று அழையுங்கள்; அல்லது அர்-ரஹ்மான் (அருளாளன்) என்று அழையுங்கள்; எப்பெயர் கொண்டு
அவனை நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன”.
நீங்கள் அந்தத் திருப்பண்புகளுக்குள் நகரும்போது உயிர்ப்பும் நுண்ணறிவும்
பெருகும். வானத்தை அதன் இயக்கங்களுடனும் மலைகளை அவற்றின் உறுதியுடனும் பிடித்து வைத்திருக்கும்
தெய்வீகப் பண்புகளின் அருட் கொடையாகவே நகரத்தையும் பள்ளிவாசல்களின் ஸ்தூபிகளையும் அலங்கார
நுழைவாயில்களையும் கட்டுகின்ற ஆற்றல் வருகின்றது. இவ்வாறு அவன் பிடியில் நாம் இருப்பதை
நீ உணரவில்லை எதுவும் சுவாரஸ்யப் படாது, களிப்புத் தராது, அல்லது உன்னை வியக்க வைக்காது.
தோற்றங்களை உருவாக்கி அவற்றின் வழியாக நிகழ்வுகளை வடிவமைத்தபடி நகர்கின்ற மூலத்தைக்
காணும் பார்வை இல்லாமல் போகும்போது மனித உயிர்ப்பு மங்கிவிடுகிறது.
2:99-100
ஓர் நாள்
இங்கே பல்ஃக் நகரைச் சேர்ந்த எனது அறிவுள்ள நண்பர் தஜ்ஸைது சொல்கிறார்,
ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு ஆசை இருக்கிறது, ஆனால் எனக்கு எந்த ஆசையும் இருப்பதாகத்
தெரியவில்லை என்று. நான் விடுதலை அடைந்தவனாக இருக்க வேண்டும். காதலர்கள் ஆரம்பக் காலத்தைப்
பின்னோக்குவதோ அல்லது எதிர் காலத்தை முன்னோக்குவதோ இல்லை. அவர்கள் வெறுமனே இங்கே இருக்கிறார்கள், இதைப் பார்க்கிறார்கள். இவ்விடமும் இத்தருணமும்
எப்படி வந்தது என்றோ எங்கே போகிறது என்றோ கவலைப்படுவது என் வேலை அல்ல.
தஜ்ஸைதும் அவரது கூட்டாளிகளும் சொல்கிறார்கள், நாம் யாரிடமாவது ஈர்க்கப்படும்போது
நாம் அந்தக் கவர்ச்சியில் நம்மைப் பிணைக்கிறோம் என்று. அப்படித்தான் நாம் நமது சிறைகளை
உருவாக்குகிறோம். ஆனால், நண்பனை விட்டு விலகிச் செல்லும் ஒருவன் மேலும் துக்கப்படுவான்
என்றே எனக்குப் படுகிறது. ஆசையே இல்லாதவர்கள் தமக்கே சொந்தமான துன்பச் சிறைகளில் வாழ்கிறார்கள்.
தஜ்ஸைதும் சொல்கிறார், நான்
ஒரு காதலி. இதைச் சோதிப்பது மிக எளிது. காதலர்கள் எப்போதும் காதலியைத் திருப்தி
செய்கிறார்கள். எனவே அவரின் ஏக்கத்தின் வெளுப்போ கவலையின் சுருக்கங்களோ இருக்கக் கூடாது.
தஜ்ஸைது, இந்த இளம் துருக்கியர்கள்கூட ஒரு காதலனாக உன்னை விட மேலான
நிலையில் இருக்கிறார்கள். ’என்றாவது ஓர் நாள்’
என்று சொல்லியபடி நீ உன் உள்ளத்தில் ஒரு திருமணத்தை ஒளித்து வைத்திருக்கிறாய் ஆனால்
அவர்கள் இப்போதே வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்கள்.
அந்த ஓர் நாள் வருகின்ற போது உனது காதலன்
மாறிப் போயிருப்பான். சில நாட்கள் மட்டுமே நீடிக்குமொரு ஒப்பந்தத்தில் நீ நிரந்தரமான
உறவை எதிர்பார்க்கின்றாயா?
”அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களின்
மீது பூட்டுக்கள் உள்ளனவா?” (47:24). குர்ஆனிடம் செல். உனது இதயத்தைச் சிறைப்படுத்தும்
எதையும் விட்டுவிடு. திறவுகோல் ஏற்கனவே உன் கையில் இருக்கிறது. பதில் கொடு. சாவியைத்
திருப்பு. காதல் பற்றிய ஒரு கோட்பாட்டில்
உன்னை நீயே எப்படிப் பூட்டிக் கொண்டாயோ அதிலிருந்து வெளியேறி நட.
2:100-101
ஒரு கலங்கல்
காலையில் உன் கழிப்பறைக்குச் சென்ற பின் சரியாகக் கழுவிக் கொள்ளாமல்
நீ உனது தொழுகைக்குச் செல்கிறாய். தொழுகை முடிந்ததும் பிரத்யேகமான கோரிக்கைகள் வைக்கிறாய்:
நான் பாவம் செய்துவிட்டேன். என்னைக் கேவலப்
படுத்தி விடாதே. என்னைத் தண்டித்து விடாதே.
மன்னிப்பது என்பது இறைவனின் தாராளம்தான். ஆனால், முதலில் நீ உனது மறதியின்
அந்தரங்க விளைவுகளைப் பற்றிக் கவலைப்படு. ஓர் ஆழ்ந்த கையறு நிலையை உணர்ந்து உனக்கு
அப்பாலிருந்து வருகின்ற ஈடேற்றத்தின் மீது நீ நம்பிக்கை வைக்கும்போது மட்டுமே உனக்குள்
கருணை பாய்கிறது.
உன் வழக்கப்படி ஒழுங்கீனமான மற்றும் சுயநலமான முறையில் நாளெல்லாம்
நீ செயல்பட்டால் மேலும் மேலும் கிறுக்குத்தனம்தான் அதிகமாகும். நேற்று இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று
நீ மக்களிடம் முட்டாள் தனமான கருத்துக்களைப் பேசுகின்றாய். அத்தகைய ஒரு குழப்ப நிலையில்
நீ எதையுமே உருப்படியாகச் செய்ய மாட்டாய்.
நன்றாக வேர் ஊன்றியும் இல்லாமல் முழுமையாக வேர் பிடுங்கப்பட்டும் இல்லாமல்
உள்ள ஓர் அத்தி மரத்தைப் போல் இருக்கிறாய் நீ. சுவரிலிருந்து எளிதில் உருவி எடுக்கப்படும்
ஒரு கொடியைப் போல், நீ முழுமையாகத் தெரிவதாகவும் இல்லை, முழுமையாக மறைந்ததாகவும் இல்லை.
நீ ஒரு மேக மூட்டம். தெளிவான திசையில் நீ பயணிக்கவும் இல்லை, நிலையாக ஓரிடத்தில் நிற்கவும்
இல்லை.
2:107
உன் திட்டங்களில் எளிமையாக இரு
அடுத்து என்ன விதமான கல்வியைத்
தேர்ந்தெடுப்பது என்று வியந்து கொண்டிருந்தேன். என் கவலைகள் சோர்ந்து துவள வைத்தன.
“இவ்வுலக இன்பம் அற்பமானது” (4:77) என்னும் திருவசனத்தின் பக்கம் என் கவனத்தைச் செலுத்தினேன்.
என் வாழ்வில் எது வரினும் அது எப்படி வந்தது என்றோ அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்
என்றோ குழப்பிக் கொள்ளாமல் அதை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இவ்வசனம் எனக்குச்
சொல்கிறது. வழங்கப்படும் சுகங்களை ஏற்றுக்கொள்,
அவற்றை உன்னிடம் பிடித்து வைக்க முயலாதே. அது பற்று. அறிவின் ஆர்வங்களும் இன்பங்களும்
கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் பாய்கின்ற நீரோடை ஆகும். சுவைத்து அதனைப் போக
விடு. துக்கம் நேர்ந்தால் அது மீண்டும் நேராமல் தடுக்கும் வழிகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்காதே.
அது நடக்கும். துக்கம் தலைக்கு மேல் கவியும் மேகத் திரள். அது வலியின் மழையைப் பொழிகிறது.
முடிந்தவுடன் நகர்ந்து போகிறது. உனது வாழ்வாதாரங்களை தினப்படி அளவுகளாகப் பகுத்து வைக்காதே.
உன் வாழ்க்கையைத் திட்டமிடுவதில் இலகுவாக இரு, பகுத்தறிவாக இருக்காதே. உன் தாயின் பாலை
நீ உறிஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அவளது காம்பின் துளைகளை எண்ணிக்கொண்டா இருந்தாய்?
தேவைக்கு ஏற்ப பால் வந்ததே!
(to be continued...)
No comments:
Post a Comment