2:109
பிள்ளைகளை வளர்த்தல்
இலட்சியங்களில்
மூழ்கி, பிள்ளைகளைப் பராமரிக்காமல் அல்லது எனது வேலையை மறந்து, எப்போதெல்லாம் தெருவில்
ஏதேனுமொரு குழந்தையின் சப்தத்தைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் என் பிள்ளைகளை நினைவு கூர்கிறேன். சந்ததிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்
நான் எனது வாழ்வைக் கழித்தால் அதிக காலத்தை வீணடித்தவன் ஆவேன். ஆனால், நான் அவர்களை
புறக்கணித்தால் அவர்கள் தமது காலத்தை வீணடித்து விடுவார்கள்.
2:111,113
முடிவெடுக்கும் பயிற்சிகள்
என் மாணவர்கள் சிந்திக்க இந்தச் சிக்கல்களைத் தந்தேன். ஒரு மனிதனிடம்
ஐந்து அல்லது ஆறு வெவ்வேறு வகையான வணிகங்கள் செய்கின்ற பத்துக் கடைகள் உள்ளன. அவனது
செலவுகள் வருமானத்தை மிஞ்சுகின்றன. ஏதாவது மாறியாக வேண்டும். வேறு ஊருக்கு நகர்ந்து
விடலாமா என்று அவன் எண்ணுகிறான். ஆனால் இப்போதிருக்கும் ஊரில் அப்பகுதியில் பல்லாண்டுகள்
வாழ்ந்திருக்கிறான். அவனுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவன் சமூகத்தின் ஓர் அங்கம்.
அத்தகைய நெருக்கத்தையும் பிரபல்யத்தையும் அவன் எப்படி விடமுடியும்?
பாடல்கள் புனைந்து அவற்றைப் பொது மக்களிடம் பாடுகின்ற ஒரு பெண்ணின்
கணவனது சூழ்நிலையை எண்ணிப் பாருங்கள். ஒரு நாள் அவன் திடீரென்று வீட்டுக்குத் திரும்புகிறான்.
மனைவி வேறொருவனுடன் இருப்பதைப் பார்க்கிறான். அவளை விவாகரத்துச் செய்வதாகச் சபதம் செய்தபடிக்
கோபமாக வெளியேறுகிறான். சமைக்கப்பட்ட ருசியான உணவு, தூய்மையான ஆடைகள், கதகதப்பான படுக்கை,
தானே புனைந்த பாடல்களை இனிய குரலில் பாடுகின்ற ஒரு பெண்ணுடன் வாழ்வதன் கிளர்ச்சி ஆகியவற்றை
எல்லாம் பின்னர் நினைவு கூர்கிறான்.
அத்தகைய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன? நெருக்கடியான தருணங்களை
ஒவ்வொருவரும் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்பத்தான் அணுகுகின்றார்களா?
2:114
கிரகிக்க முடியாத ஓர் உண்மை
அனைத்துச்
செயல்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்று நான் பாரசீகர்களிடம் சொல்கிறேன். வேலை,
புனிதப் போர், பிற வகையான போர்கள், தொழுகை, மற்றும் பிற நற்காரியங்கள் யாவும் ஒரே புள்ளியை
நோக்கித்தான் செலுத்துகின்றன: இறைவனுடனான உங்கள் உறவு, நாம் எதனுள் வாழ்கின்றோமோ மற்றும்
நம்முள் எது வாழ்கின்றதோ அந்த ரகசியத்தினுள் வளர்ந்து வருகின்ற விழிப்புணர்வு, பல்வேறு
பெயர்களின் அல்லது பெயறற்ற நிலையின் நம்பிக்கை, ஒரு போதும் சொல்ல முடியாத அல்லது ஒரு
சொல்லில் அள்ள முடியாத அது.
இந்த ரகசியத்திற்கு நமது மறுமொழி இரண்டு உணர்வுகளில் இருக்கிறது: ஆதரவு
/ நம்பிக்கை மற்றும் அச்சம் / திகைப்பு. அச்சத்திற்குள் எழுகின்ற உணர்வுகள் பெரும்பாலும்
கண்மூடித்தனமாகவும் வன்முறையாகவும் இருக்கின்றன. ஆதரவினுள் மென்மையும் அன்பும் இருக்கின்றன.
ஒன்று மற்றதினுள் எப்போதுமே இருக்கின்றது. அச்சத்தினுள் ஆதரவும் ஆதரவினுள் அச்சமும்
வாழ்கின்றன. நமது இந்தப் பருவுலகம் தன்னுள் இவ்விரண்டையும் வைத்தபடிதான் உருக்கொண்டு
வருகின்றது.
கலீஃபா உமர் அவர்களும் எத்தியோப்பியாவின் அரசரும் இதனைக் கேட்டபோது
உடனே அழுதார்கள். நாம் ஏன் அழுவதில்லை?
ஒருவேளை நாம் கேட்க முடியாத ஏதோவொரு பயங்கரமான கிரகிக்க முடியாத உண்மையை இதனுள் அவர்கள்
கேட்டார்கள் போலும்.
கஃபாவிற்கு அருகில் இருப்பவர்கள் அதன் வெளிவட்டத்தில் இருப்பவர்களைக்
காட்டிலும் உண்மையை அறிவதில் துனிச்சலாக இருக்கிறார்கள். மூல சாட்சியத்தை அவர்கள் தமக்குள்
வைத்திருக்கிறார்கள். நரக நெருப்பு வரும்போது அஃது அவர்களைக் காப்பாற்றும். ஆனால்,
யாரெல்லாம் உலகப் பிரச்சனைகள் தம்மை உலர்ந்து போகும்படி விடுகிறார்களோ அவர்கள் உடனே
எரிந்து சாம்பலாகி விடுவார்கள்.
2:115-116
செரிமானம்
பலத்த விருந்து ஒன்று சாப்பிட்டேன். ஒவ்வொருவரின் வயிறும் எப்படி வெவ்வேறு
உணவாலும் குடிப்பாலும் நிரம்புகிறது என்று இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
உள்ளுதிப்பு வருகின்றது: இந்தக் காய்களும் கனிகளும், இந்த இறைச்சித் துண்டுகளும், இந்த
வண்ண வண்ண பானங்கள், கடினமான மற்றும் மென்மையான ரொட்டிகள், அவை எல்லாம் நம்முள் புகழ்
ஓதிக்கொண்டு உயிருடன் இருக்கின்றன.
அதே போல், இங்கே இருக்கின்ற மனிதர்களும் விலங்குகளும் அரூப ஜீவன்களும்
எல்லாம் இறை ரகசியத்தினுள் சுவைக்கப்பட்டு மெல்லப்பட்டு செரிக்கப் படுகின்ற உணவுகளே.
இச்செயற்பாடு நிகழும்போது நன்றியுணர்வு சக்தியாக எழுகின்றது.
விண்மீன்கள் அவற்றின் நல்ல மற்றும் தீய தாக்கங்களைப் பொழிகின்றன. அதே
போல் ஓரைகள் நாம் சுவாசிக்கும் காற்றாக மாறி தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களாகிய
நம்மையும் போஷிக்கின்றன. நாமோ இந்த மொழியை வைத்துக்கொண்டு இறைவனைப் புகழ்ந்து ஏத்துவதாக
பாவனை காட்டி அவனைக் கோபமூட்டிக் கொண்டிருக்கிறோம்.
ரோஜாத் தோட்டங்களையும் பிற வசதிகளையும் நினைவு கூர்கையில் எனது புறங்கையில்
ஏற்பட்டிருக்கும் கருந்திட்டுக்களை கவனிக்கிறேன். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. மரங்கள்
முதலில் மென்மையான் செடிகளாகத்தான் ஆரம்பமாகின்றன. வளரும்போது அவை உறுதியாகித் தடித்த
பட்டைகளுடன் நிற்கின்றன. அதுவேதான் எனது கைகளுக்கும் நடந்திருக்கிறது.
எனது தொழுகையில் என் கவனத்தைத் திருப்ப ஏரார்ந்த கருவிழிப் பெண்கள்
வருகின்றனர். இதுவும் இயல்புதான். எண்ணற்ற ஆசைத் தோற்றங்கள் இருக்கின்றன. பிறகு பிள்ளைகள் வருகின்றார்கள். நேசத்தின் புதிய
வழிகள், புதிய செல்லக் குட்டிகள். சந்ததிகளை உருவாக்கும்போது ஆசைகள் எப்படி மாற்றம்
அடைகின்றன என்பது மிகவும் குதூகலமாக உள்ளது. அவற்றுக்குப் பின் ஒரு நிரந்தரச் சிரிப்பு
இருக்கின்றது.
நீ செய்யும் ஒவ்வொன்றிலும் இறைவனை நினைப்பாயாக. உதாரணமாக, உடலுறவின்
இன்பத்தை நீ நாடும்போது, அந்தக் கூரிய இன்பமும் அதனை நெருங்கி வருதலும் உனது ரட்சகனிடமிருந்து
அன்பளிப்புக்களாக வருகின்றன என்பதை நினைவில் வை. உன்னால் முடியும் எனில், ஓர் வலிப்பு
அல்லது வாதம் வந்தால் அதிலும்கூட, பூகம்பம் மற்றும் நிலநடுக்கம் ஆகிவற்றுள் வாழ்கின்ற
அதே பிரசன்னம்தான் உனக்குள்ளும் அதிர்கின்றது என்று நினைவு கொள்.
காதலின் சுவையை விடவும் மேலான ஒன்றை இந்த வாழ்வில் நான் கண்டதே இல்லை.
புகழ்ச்சி அர்ப்பணிப்பு மற்றும் பணிவு ஆகிய மிக ஆழமான நமது உணர்வுகளின் உள்ளேயும் காதலிக்கவும்
காதலிக்கப் படவுமான விருப்பமே இழையோடுகின்றது. பிற நற்பண்புகள் எல்லாம் அதில் இருந்தே வளர்ந்து வெளிப்படுகின்றன. இறைவனின்
இனிய நாடித்துடிப்பு அதுவே!
2:117 கலவி
காமம் என்பது இரு முனைகளில் கிளரும் தீ: ஆணின்
பசிய உயிர் நீரிலும் பெண்ணின் தகிக்கும் கருவறையிலும். அந்த ஆணின் மீதான காதல் அவளில்
அங்கே ஆழமாக இல்லை எனில் கலவியின் தழல் ஒருபோதும் எழாது.
2:123-124
விதையும் நாட்டுப்புற மக்களும்
குவாரிஸ்மின் தூதரிடம் பேசிக்கொண்டிருந்தேன். குராசான் மீது படையெடுப்பு
நடத்தும்படி குவாரிஸ்மின் மன்னர் அலாவுத்தீன் முஹம்மத் உத்தரவிட்டிருப்பதால் அவ்வூரின்
தொடர்புகளை எல்லாம் கைக் கழுவி விடும்படி அவரிடம் சொன்னேன். அதனை ஓர் எச்சரிக்கையாகவே
செய்தேன். அவருடைய இக்கட்டான நிலையை நமக்கோர் எச்சரிக்கையாகப் பயன்படுத்துகிறேன். நாம்
ஒரு காரியத்தைச் செய்யும் முன் அதனால் நமக்கோ மக்களுக்கோ அழிவு எதுவும் ஏற்படாமல் இருக்குமா
என்று நன்றாக எண்ணிப் பார்த்தே செய்ய வேண்டும்.
தமது தொழிலுக்காக மனமுவந்து தூக்கத்தை விட்டுவிடும் நாட்டுப்புற மக்களைப்
போல் நாம் இருக்க வேண்டும். பயிர்கள் விருத்தியாக விளைந்து வந்தால் அவர்கள் தமது சன்மானத்தை
அடைகிறார்கள். இல்லை எனில் அதனை அவர்கள் மறுவுலகில் பெறுவார்கள். இந்தப் பருவுலகின்
சுவர்களுக்கு அப்பால் வேறு உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு பசுமைக் குடிலுகுள்ளும் ஒரு தோட்டம்
இருக்கிறது. இந்தப் பசுங்குடில் உலகினுள் சாஸ்வத மலர் ஒன்று வளர்கின்றது. நித்தியம்
நிஜம் அல்ல எனில் நாம் இதனை அநித்தியம்
என்று சொல்லியிருக்க மாட்டோம்.
”நபியே! இவ்வுலக வாழ்வின் உதாரணத்தை அவர்களுக்கு விளக்குங்கள்: வானிலிருந்து
நாம் பொழிவிக்கும் நீரைப் போல. அதனால் பூமியில் பயிர்கள் செழித்தன. அவை காற்று அடித்துச்
செல்லும் காய்ந்த பதராகி விடுகின்றன.” [18:45].
மண்ணறைக்குள் செல்பவை மக்கி மறைகின்றன. இதயங்களுக்குள் உள்ளவையோ வளர்ந்து
கொண்டிருக்கின்றன, மேலும் துலங்கி வருகின்றன. [காண்க: குர்ஆன்: 100:9-10].
நிலத்தினுள் உள்ள விதைகள் எல்லாம் மண்ணறைக்குள் உள்ள தூய மனிதர்களைப்
போன்றவை. மழை வருகின்றது. நாம் இந்த விதைகளை அவற்றின் மண்ணறைகளுக்குள் கழுவுகின்றோம்.
கருவறைக்குள் மிதக்கும் விந்தணுக்கள் போன்று அங்கே புதிய முகங்கள், புதிய மரங்கள்,
திடலிலும் கடலிலும் அதுவரை பார்க்கப்பட்டிராத கைகள் மற்றும் கால்கள், சூழ்ந்திருக்கும்
இந்த காற்றிலோ விண்மீன்களிலோ ஒருபோதும் உணரப்பட்டிராத பிரசன்னங்களுடன் கூடிய புதிய
உயிர்கள் ஆகியவை தோன்றுகின்றன.
எனது வேலையை ஏதேனுமொரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நான்
சிரத்தையாக எண்ணினேன். நான் கடவுளின் தோட்டக்காரன். அவனது படைப்புக்களைத் தெளிவாகக்
காட்டுவதில் நான் செய்திருக்கும் வேலையைப் பற்றி எனது எஜமான் திருப்தி கொள்ள வேண்டும்
என்று விரும்புகிறேன். எனவே நானொரு பிரதிக்ஞை செய்தேன். பிறகு நான் பலகீனமாகிப் பேச
முடியாமல் ஆனேன். சிரமங்கள் நிச்சயமாக ஏற்படுகின்றன. ஆனால் நான் என்னைச் சுற்றி உள்ளவர்களிடம்
சொல்வது போல், உனது உடல் தடைப்பட்டுப் போனாலும், உனது பேச்சுத்திறன் நலிந்து விட்டாலும்,
நீ நன்றாகவே இருப்பாய் – உன் மீது குறையொன்றும் இல்லை – உனது முனைப்பின் (நிய்யத்)
அடிப்படை தெளிவாக இருக்கும் எனில்.
2:130
அடுத்து எதைத் தொடங்குவது?
பல வாய்ப்புகளில் அடுத்து எந்த வேலையை அல்லது கல்வியைத் தொடர்வது என்று
என்னால் முடிவெடுக்க இயலவில்லை. உயிர்ப்பு, ஆன்மா, தெய்வீகப் பரிமாணம் அல்லது மதிப்பு
ஆகியவை இல்லை எனில் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் அர்த்தமற்ற சோம்பலான காலப் படுகொலை
மட்டுமே. ஆனால், இறைவனும் ஆன்மாவின் ரகசியமும் நாம் ஆற்றும் செயல்களில் இந்தக் கால
இடத்தில் ஒத்திசைந்து இணையும் எனில் நாம் செய்வது யாதாயினும் அதுவே நித்தியத்தை நிகழ்த்துகின்றதாகவும் அதுவே இறை ரகசியத்தின்
இயக்கமாகவும் இருக்கும். அக்கணத்தில் பிறக்கும் ஒவ்வொரு எண்ணமும் செயலும் அசைவும் சுயத்தின்
மாபெரும் உண்மையின் வெளிப்பாடுகளே.
ஒரு குறிப்பிட்ட
செயல் எதிர்காலத்தின் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு இட்டுச் செல்கிறதா என்பது
பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். நீ எப்போது மரணிப்பாய் என்பதும்கூட முக்கியம் அல்ல. அக்கணத்தில்
நித்தியம் தன்னையே உருவாக்கிக் கொள்கிறது. இந்தக் கணத்தில் மட்டுமே நீ மேலும் மேலும்
இறைவனை நெருங்குகிறாய். வடு கணு கிளை கொப்பு நார் வேர் ஒவ்வொன்றிலும் காலமும் முடிவிலியும்
பின்னிப் பிணைகின்றன. தொடர்ந்து நிகழ்வதன் அதிசயத்தை இங்கிப்போதில் மட்டுமே உனக்குக்
காட்ட முடியும்.
2:131-133
பழைய போர்களின் படையரவம்
புலன்களில் வழியாக நான் உண்மையில் அறிவது எதனை என்றும் எங்கே எப்படி
புதிய அறிதல் தொடங்க முடியும் என்பது பற்றியும் கடந்த ஒரு மணி நேரமாக நான் குழம்பிக்
கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் கடவுளாக இருந்தால்? இப்பருவுலகம் எனது சஞ்சலத்தை அல்லது
படைப்புணர்வின் களிப்பை வெளிப்படுத்தும் அல்லவா? சுருங்குதல் விரிதல் இரண்டுமே முழுமையாக
இருக்கும். நான் எதையும் சொல்ல முடிந்த எனது ரகசிய இடம் இதுவே ஆதலால் – எவரும் எப்போதும்
கேட்டுவிட முடியாது – நிவாரணம் கேட்டு அழுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு விடுதலை
தாருங்கள் என்று என் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். பாய்ச்சலையும் நிறையும் இடத்தையும்
அனுமதியுங்கள். வலிய ஆசையைத் தடுத்து வைக்க வேண்டாம். உறைகள் அனிச்சையாகக் கழன்று விழட்டும்.
அவை விழத்தான் வேண்டும்.
மருத்துவத்துக்காக ரத்தம் எடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் நான்கு
பகுதிகள் கருஞ்சிவப்பு இலந்தையும் ஒரு பகுதி பிளம்ஸ் பழமும் கொண்ட பானத்தைப் பருக வேண்டும்
என்று மதிப்பிற்குரிய மருத்துவர் சொல்கிறார்.
அவர் மேலும் சொல்கிறார், நீங்கள் ரத்தம் வழியும்போது மெத்தையில் மல்லாந்து
கொண்டு மனதைத் தளரவிடுங்கள், சிகிச்சையின் போது மூன்று கோப்பைகள் செம்மது அருந்துங்கள்,
மது அருந்த மாட்டீர்கள் எனில் புளிப்புள்ள திராட்சைக் கூழில் வெல்லம் கலந்து பருகுங்கள்.
காஜா ஹல்லாஜைக் காண்பதில் நான் எப்போதும் மகிழ்கிறேன். பிறகு அவர்
பேசத் தொடங்குகிறார். சமர்கந்தின் மிக முக்கியமான நபர். ஆனால் கேட்பதற்கு மிகவும் தொந்தரவாகப்
பேசுபவர். உதாரணமாக, அவர் என்னிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னார்:
ஒரு ரொட்டியை எட்டு மாதங்களுக்கு ஒரு பெண் வைத்திருந்தாள்.
இதற்கு ஓராண்டு ஆவதற்குள் நாம் இந்த ரொட்டியைத் தின்றுவிட வேண்டும்
என்று அவள் தனது கணவனிடம் சொல்கிறாள்.
’உன் ஆடைகளை நீக்கு. படுக்கைக்கு வா’ என்று கணவன் சொல்கிறான்.
இந்த ஆடைகளில் குறையேதும் இல்லை. நீங்கள் ஏன் கட்டிலுக்குச் செல்ல
நினைக்கிறீர்கள்?
இல்லை என்றால் நான் எட்டு மாதங்களுக்குச் சீக்காளியாகி விடுவேன்.
சரி, ஆன்மிக உணர்வுடன் ஹல்லாஜ் கூறிய ஒரு திருக்காட்சி இது:
நான் தியானத்தில் அமர்ந்திருத போது என் முன் ஒரு மனிதர் தோன்றினார்.
தொடர்ந்து அழுததன் காரணமாக அவரின் கண்களுக்குக் கீழே இரண்டு கோடுகள் விழுந்திருந்தன.
அவர் என்னுடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு சுவரின் வழியாக
வெளியேறினார். அவர் கதவுகளைப் பயன்படுத்தவில்லை.
காஜாவின் இன்னொரு பீற்றல்:
உணவும் குடிப்பும் இன்றி நான் ஐந்நூற்று அறுபது கி.மீ பயணித்தேன்.
ஒவ்வொரு மாதமும் நான் நாலரை கிலோ கோதுமை மாவில் ஜீவிக்கிறேன். ரொட்டி செய்து அதைக்
காய வைத்துக் கொள்கிறேன். அதை உடைத்து அதன் மீது தண்ணீர் தெளிக்கிறேன். அது மட்டுமே
எனது வாழ்வாதாரம்.
காஜாவின் கதைகள் என்னை அவர் மீது மேலும் மேலும் குறைவாக இரக்கப்பட வைக்கின்றன. சில நேரங்களில்
நான் தனியாக இருக்கும்போது எனக்குச் சொல்லப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்கிறேன், சமானி,
குவாரிஸ்ம்ஷா, ஃகதபி, ஃகுர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களின் காட்சிகள். பிறருக்கு
நிகழ்ந்தவற்றை நினைவு கூர்வது என்பது பெரும்பாலும் கால விரயமே என்று எனக்குத் தோன்றுகிறது.
உன் வாழ்க்கை பற்றி நீ கவலைப்படுவதே மிகவும் பயனுள்ளது.
அரசர், படையரவம் மற்றும் அதிகாரப் போட்டிகள் பற்றிக் குறைவாக கவனம்
செலுத்து. வெளியுலகின் மாபெரும் நிகழ்வுகள் பெரிதும் கவனிக்கப்படாமல் போகட்டும். தெய்வீக
ரகசியத்துடனான உனது நட்பும் அதனுடன் உனது உள்ளுணர்வின் உரையாடலுமே உண்மையானவை.
(தொடரும்...)
No comments:
Post a Comment