இரண்டாம்
நூல்
சமா
ஆழ்நிலை
கேட்டலுக்கு ஒரு நாடியுண்டு. அது துடிக்க வேண்டும். இல்லை எனில் அதில் உயிர் இல்லை.
சமாவின் சொற்களும் இசையும் நண்பர்களின் உரையாடல் போன்று மிக இயல்பாக பாய்ந்து தொடர
வேண்டும்.
விதைகளைத்
தூவும் கிண்ணம் போல் கேட்டலின் வாளியில் இசை பொழிகிறது. அழுகிய விதைகள் சில இருக்கக்கூடும்,
சரியற்ற வார்த்தைகள். அதற்காகக் கிண்ணத்தை ஏசாதே.
கண்ணாடி
வேலைப்பாடு பல வடிவங்கள் எடுக்கிறது. ஒளிரும் மஞ்சளுடன் கூடிய பக்தாதின் உட்குழிவு,
சமர்கந்தின் செந்தூரம், புஃகாராவின் ஸ்படிகக் கோளக் குடுவைகள். இசை மற்றும் கவிதைக்கும்
அப்படித்தான்: சமாவுக்கு அழகிய வகைமைகள் வேண்டும்.
மேலும்
சில மேசைகள் இட்டு விருந்தினர்களை அழைக்க நாம் கதவு திறக்கும்போது அவர்களுக்கு நாம்
ஊசிப்போன உணவைப் பரிமாறுவதில்லை. நடப்பது போல் அப்படி நடக்கும் எனில் அது விபத்துதான்.
ஆனால் ஒருவர் வேண்டுமென்றே கெட்டுப்போன இறைச்சியை அல்லது பானத்தைப் பரிமாறினார் எனில்
அப்படிச் செய்ததன் சாபம் ஒருபோதும் நீங்காது, அவர் பின்னர் எத்தனை நல்லறங்கள் ஆற்றினும்.
சமா புத்தம் புதிதாகவும் அன்புடன் செய்யப்படுவதாகவும் இருக்கட்டும்.
இசை மற்றும்
அசைவுகளுடன் பேசப்படும் கவிதை வசந்த காலத்தின் இடியைத் தொடர்ந்து செல்வது போல் இருக்க
வேண்டும்: அழுத்தம், ஒரு மென்மையான இழுப்பு, மௌன இடைவெளி, மேலும் இடி, உடனே மறைவு.
அது ஒருபோதும் நீண்டு செல்வதில்லை.
சமாவின் அடியிலும் உள்ளேயும்
சிரிப்பு இல்லை எனில், பிரகாசமான தற்பணிவின் ஹாஸ்யம் இல்லை எனில், புகழ்ச்சியில் உண்மையும்
உயர்வும் பெருமிதமும் இரா. நகைச்சுவை இல்லாது சமா
சுமையும் இறுக்கமும் ஆகிறது.
உடலின்
ஒவ்வொரு பாகத்திற்கும் ஓர் இசைத் தேர்வு உள்ளது. ஒவ்வொன்றும் தனித்த முறையில் சமாவைத் துய்க்கிறது. இதயம் போல் அல்லாத வேறு
வகையில் காது இசையை உள்வாங்குகிறது. சுண்டப்படும் நரம்பின் இசையுடன் பேசப்படும் சொற்கள்
காதுக்குத் துன்பமாகவும் இதய மையத்திற்கு இன்பம் தருவதாகவும் இருக்கக்கூடும். அல்லது
நேர் மாறாக. மிக மென்மையான ஒன்று உங்களது ஆன்மாவின் பேரறிவுக்குக் குமட்டுவதாக இருக்கலாம்.
விரல்களின் தாளத்தைச் சிறுநீர்க் காய்கள் வெறுக்கின்றன. மத்தளம் அவற்றைப் பதறச் செய்கிறது.
எனினும், விரல்கள் செய்யும் எதுவும் நுரையீரலுக்கு இதமாக இருக்கிறது.
சமாவில் இந்த ஒன்பது படிமங்கள் உமக்கு வழிகாட்டும்:
இதயத் துடிப்புத் தாளம், நண்பர்களின் உரையாடல், கிண்ணத்திலிருந்து விதைத் தூவல், கண்ணாடி
வேலைப்பாட்டின் அழகிய வகைமை, விருந்துணர்வு, வசந்த கால இடி, காற்று வெளியிடை சிரிப்பு.
மனித உடலின் உறுப்புக்கள் போன்று சமா என்பதும் தனது பல ஒத்திசைவு முறைகளுடன் இயங்க
வேண்டும். அவற்றுக்குத் தனித்தனியே பிரத்யேக இயக்கமும் ஆனந்தமும் உண்டு. அதே வேளை அவை
அனைத்தும் ஒன்றாய், தேகம் இதயம் ஆன்மா மற்றும் ஒளிமிகு அறிவு அனைத்தாலும் ஆன முழுமையான
மனித இருப்பைச் சுமக்கின்றன.
2:13-14
இரண்டு மரங்கள்
இறைவனின் புகழ்ச்சியை நான் உரக்கக் கூறிக்கொண்டிருந்த போது கழுதை ஒன்று
கத்துவதைக் கேட்டேன். இந்தத் தூய்மையற்ற தடைகள், எனக்கு இடையூறாக இருந்தன. அழகின் புகழ்ச்சியில்
இப்படி ஒரு கலப்பு இருக்க இயலாதே? தான் காதலிப்பது தூய்மையானது என்றே மனம் அனுமானம்
செய்கிறது. பற்று செல்வத்தின் மீதாக இருந்தபோதும் அது மிகவும் இன்றியமையாத செல்வம்
என்றே அது கருதுகிறது. நாம் சிறந்த சொற்பொழிவைக் கேட்க ஆசைப்பட்டால் ஷைகு தாஜின் சபைக்குச்
சென்று அங்கு பேசப்படுவதைக் கேட்கிறோம், மிக இயல்பாக. பாதுகாப்பை எதிர்பார்த்தே பறவைகள்
காற்றில் எழுகின்றன. நான் எனது நண்பர்களை எனது சிறகுகளின் கீழ் வைத்திருக்கிறேன். எனவே,
அவை என்னுடையவை அல்ல என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள். அவர்களை நான் எனது அழகில்
சேர்த்துக் கொள்கிறேன். இந்த உயிரினத்தில்
ஒருவனாக இருப்பதினும் பெரிய சுகம் வேறு ஏதும் இல்லை.
தோற்பதால் மனச் சோர்வு வருகிறது. பற்களிலும் மூட்டுகளிலும் தேய்மானம்
வருகிறது. நீ உனது மண் வீட்டைக் களிமண் கொண்டு செப்பனிடலாம். ஆனால் காலப் போக்கில்
அது இடிந்துதான் போகும். தாதுக்கள் எப்போதுமே பிணக்கில் உள்ளன, அவை எப்போதுமே சிதலமாக
முடிகின்றன.
இவ்வுலகம் என்பது சுத்த வெறுமையில் புதைக்கப்பட்ட ஒரு விலைமதிப்பான
விதையிலிருந்து வளர்ந்து வந்துள்ள மரமாகும். நீரும் காற்றுமே அதன் வேர்கள், மண்ணே அதன்
தண்டு. விண்ணே அதன் கிளைகள். விண்மீன்களே அதன் இலைகள். அவை எதுவுமே மூல விதையைப் போல்
இல்லை. தேக்கு மரங்கள் கருவாலிக் கொட்டையைப் போல் இருப்பதில்லை. ஒவ்வொரு மரத்திற்கும்,
வளரும் பொருள் ஒவ்வொன்றுக்கும், இரண்டு வேர்கள் உள்ளன. ஒன்று வெளிப்படையில் உள்ளது,
மற்றது மறைவில். சாறும் சுவையும், தண்டின் தடிமனும், பிற தன்மைகளும் நாம் தொட்டுணரும்
இவ்விடத்தில் இருந்து வருவன அல்ல, அவை மறைவான வேரிலிருந்து, ரகசியத்தில் இருந்து வருகின்றன.
மேலும், இன்னொரு மரம் உள்ளது. அதன் வேர்கள் இங்கேயும் கிளைகளும் கனிகளும் மறைவிலும்
உள்ளன. அந்த மரத்தையே நாம் அர்ப்பணிப்பு, அடிபணிதல், இஸ்லாம் என்று அழைக்கிறோம்.
Khotanese donor ladies. old mural painting
2:16-17
ஃகோத்தன் பண்டிகை
சீனாவில் துருக்கிப் இனக்குழுக்கள் குடியேறிய பகுதியான ஃகோத்தனில்
நடக்குமொரு பழஞ்சடங்கு பற்றி நான் கேட்டிருக்கிறேன். ஆண்களும் திருமணமாகாத இளம் பெண்களும்
– அவர்தம் தலைகள் மூடப்படாமலும், தேகத்தில் கண்ணியமற்ற ஆடைகளுடனும் – சந்தையில் கையில்
கை கோர்த்தபடி நடந்து செல்வார்கள். அந்தச் சடங்கு இப்படித்தான் தொடங்கும்: ஒவ்வொருவரும்
குடித்துவிட்டு ஆடியபடி கள் குடுவைகளைப் பகிர்ந்தபடி. கொண்டாட்டக் குழுவினர் இங்கும்
அங்கும் பிரிந்து திரிந்து இறுதியில் பேராலயத்து விமானத்தின் கீழே மன்னர் ஃகானின் முன்
குழுமுவார்கள். அங்கே பெண்கள் தமது ஆடைகளைப் பகுதி களைந்து தமது முலைகளை ஆண்களுக்குக்
காட்டுவார்கள். அங்கே திறந்த வெளியில் காதலாடல் தொடங்கும். நாம் நமது வீட்டில் அறைக்குள்
மட்டுமே செய்யும் காரியங்களை அவர்கள் பொதுவிடத்தில் செய்வார்கள். அந்த இனக்குழுக்களின்
பெண்களுக்கான வருடாந்திர யோனிலிங்க அறுவைச் சடங்கின் ஒரு பகுதி அந்நிகழ்வு.
போதையில் நினைவற்றுப் போகும் அந்த இளம்பெண்களுக்கு அடுத்து நிகழ்வது
என்ன என்று எண்ணினால் எனக்கு மயக்கமே வருகிறது. மனிதர்கள் செய்கின்ற எல்லாவற்றிலும்
இறைவன் ஒரு பகுதியா, இதிலும்? குர்ஆன் 11:6 சொல்கிறது, ”அனைத்து(ப் படைப்பு)ம்…” (குல்லுன்…).
நாம் நோக்கும் இவ்வுலகம் விசித்திரமானதும் சங்கடமானதும் ஆகும். இங்கே, ஓர் உதாரணத்திற்கு,
இக்கணத்தில் என் இச்சைகள் இவை: எனக்கோர் அழகிய பெண் தேவை; உணவும் பானமும் இசையும் கலகலப்பும்
தேவை. வாழ்வின் புனிதத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எனக்கே மிகப் பரந்த அங்கீகாரத்தை நான் ஆசைப்படுகிறேன். எனது விருப்பங்கள் தீவிரமடைய
வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவனின் உள்ளமை ஒவ்வொரு கணமும் என் வழியாக வெளிப்படுவதை
நான் உணர விரும்புகிறேன்.
விடைகள் இந்த அறிவிப்புக்களாக வருகின்றன: தேனீக்கள் பூக்களில் தேன்
உறிஞ்சுவதைப் பார். இருத்தலின் ஒவ்வொரு ரகசியத்திடமும் அதையே செய். அந்த உறிஞ்சுதலில்
உருவாகும் தேனாக உனது உடலை ஆக்கு. நீ கனவு காணும் அளவற்ற மதுவும் வாழ்வளிக்கும் ஒளியும்
நாமே. நீ உன்னில் அதனை மீட்கும்போது, நீ ஈடுபடும் ஒவ்வொரு சுகத்திலும் நிறைவைக் காண்பாய்.
திக்ரு (தியானம்) என்னும் பானத்தை அருந்து. அதன் ஆசீர்வதிக்கப்பட்ட
குகைத் தூக்கம் உனக்கு அமைதி நல்கும். (காண்க: குர்ஆன்: 18:9).
2:18-19
பள்ளிவாசலில் உறங்குதல்
மௌன மடத்தில் நானொரு ஒளிக் கீற்றைக் கண்டேன்…. ... ... ஷ்ஷ்ஷ்..[குறிப்பு:
மூலக் கைப்பிரதியில் இவ்விடத்தில் உள்ள சொல் சிதைந்திருக்கிறது). மடத்தின் தடாகம் நீரால்
நிறைவதாக அதே இரவில் பெண் ஒருத்தி கனவில் கண்டாள். பணியாளன் ஒருவன் அதனிடம் விளக்கெடுத்துச்
சென்று அதில் நீரை நிரப்பிச் சுடரேற்றினான்.
உன் மீது மிகவும் காதல் கொண்டுள்ள ஓர் அழகிய இளம் பெண்ணைக் கற்பனை
செய் – உதாரணமாக, அன்புமிக்க ஒரு செவிலி. நீ அவளது கையைப் பற்றிக்கொண்டு தோட்டத்திற்கு
அல்லது வெளியே பாலைவனத்தில் நடக்கிறாய், அக்கணத்தில் அவளுக்காக எல்லாவற்றையும் புறக்கணித்தவனாக.
இப்போது இறைவனையும் இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் உனது காதலியாகக் கருது. யார் மிகவும்
நம்பகமாக இருக்க முடியும்? (”அல்லாஹ்வைவிடத் தனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன்
யார்? -9:111). அந்தக் கையை உன் கையில்
பிடித்தபடி ஏதேனுமொரு பாழினை நோக்கி நீ நடப்பது எப்படி இருக்கும்? அந்த நட்பில் ஒவ்வொரு
இடமும் இனிய காட்சியாகத் துலங்கி உயர்ந்த மலைச் சிகரங்களின் மறைவிடங்கள் வெளிப்படுவது
போல் ஆகும்.
பரவச நபர்கள் பிறரை விமர்சிப்பதில்லை. ஆன்மிகப் பாதையில் வெகு தொலவு
முன்னேறிச் சென்றுவிட்ட ஒருவர் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க மாட்டார்.
இறைஞானி புதிய சீடர்களால் வீணடிக்கப்படுகிறார். ”வேதக்காரர்களிலும் இணைவைப்பவர்களிலும்
உள்ள நிராகரிப்பாளர்கள் தம்மிடம் தெளிவான ஆதாரம் வரும்வரை விலகுபவர்களாக இருக்கவில்லை”
(98:1).
இந்நகரைச் சேர்ந்த ஓமன் ஃபக்காயும் சூஃபிகளும் பள்ளிவாசலில் உறங்கினார்கள்.
அதன் விளைவாக அவர்களுக்குச் சளி பிடித்துக் கொண்டது. அவர்கள் இருமுகிறார்கள். அவர்களின்
மூக்குப் புழை வறண்டுள்ளது. அவர்கள் வெளிறி விசித்திரமாகத் தெரிகிறார்கள். தமது வீடுகளை
விட்டு வேறிடத்தில் உறங்குவது அவர்கள் எடுத்த தவறான முடிவாகும். இடம் விட்டு இடம் அலைவது
என்பது குழப்பத்தையும் நோயையும் உண்டாக்கும். ஓர் ஆசியப் படகினைப் போல் உங்களது உடலும்
உள்ளமும் தூக்கத்தால் தொடர்ந்து ஈரமாகிக் கொண்டிருக்கும்படி இரவில் ஓய்வெடுப்பது நல்லது.
தவறான முடிவுகள் உங்கள் படகுகளை நீரிலிருந்து வெளியே இழுத்து அவை காய்ந்துபோகும்படிச்
செய்து பயனற்றவை ஆக்கி விடுகின்றன. அந்த நபர்கள் தமது கீழான இச்சைகளுக்குத் திரும்பினர்.
அறிஞர் மற்றும் சூஃபி ஆகிய சொற்கள் மிக நல்ல ஒன்றைக் குறிக்கின்றன.
நான் ஜைன் சாலிஹீன் மற்றும் முஹம்மது சூஃபி ஆகியோரைப் பார்த்தேன். அவர்களிடம் சொன்னேன்,
நான் இப்போது இறந்து போனால் அந்த வார்த்தைகள் அர்த்தம் இழந்து போகும் என்று மக்கள்
சொல்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. அச்சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அது மாளாது. ஆனால்,
இறப்பிற்குப் பின்னர்தான் மேலும் உயீரூட்டமாக வளரும். பருத்தி மேலும் துணியாக மாறும்.
சுரண்டித் தூய்மை செய்வதால் அழுக்கும் துருவும் உதிர்ந்து போகும். நமது அடிப்படையான
அறிதலின் கலை எந்த மறைதல் மற்றும் அறியாமை, மற்றும் கோபம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி
இருக்கும்.
2:21-22
அருள் மழை பொழியப்படுதல்
நான் நோய்ப்பட்டு, நலம் கொண்டு வருபவருடனான அணுக்கமான உரையாடலில் எனது
உடல் குளிர்ந்து விறைத்துக் காய்ச்சலில் கிடந்தபோது, மணப்பெண்ணைப் போல் மூச்செறிந்து,
தனது முதல் உடலுறவில் நடுங்கும் ஒரு கன்னியைப் போல் குழம்பினேன். ”அந்த நரகின் சலசலப்பைக்கூட
அவர்கள் கேட்க மாட்டார்கள்” (21:102).
காற்று நீர் நெருப்பு மற்றும் மண் ஆகிய பொருட்களின் கடலில் நீ நடப்பதற்கான
பூங்காவை நட்டு வைத்தோம். நீ நேசிப்பதை நீ தேடியிருக்கவும் இவ்வுலகை நாம் பராமரிப்போம்.
இச்சையின் வீரியத்தை உன்னில் நாம் உறுதியாக்கி வைப்போம். கோடை வெம்மை கனியைப் பழுக்க
வைத்தல் போன்று முழுமையை நோக்கி உனது நெஞ்சத்தை விரிவாக்குவோம், நீக்க வேண்டிய தகாதன
அனைத்தையும் தீய்த்துத் தூய்மை செய்வோம். மடத்தில் நான் கண்ட பிரகாசத்தைப் போல் இந்த
தாராளும் கருணையும் என்னுள் வருகின்றன [குறிப்பு: முந்தைய பதிவினைக் காண்க]. தனது புதிய
மணப்பெண்களுள் ஒருத்தி தனது தோளில் கவ்வ, இன்னொருத்தி தனது கழுத்தில் முத்தமிட, இன்னொருத்தி
அவளது உடலே தனதாவது போல் நெருங்கி அழுத்துகின்ற ஓர் அழகிய இளவரசனைப்போல், அல்லது தமக்கு
தானியம் தெளிக்கும் ஒருவனைச் சுற்றிலும் புறாக்களும் குருவிகளும் அணில்களும் கீச்சிட்டுத்
துள்ளிக் குதிப்பது போல் தனது பிள்ளைகள் தன் மீது ஊர்ந்து உருள்கின்றதொரு தந்தையைப்
போல் என் மீது அருள்கள் பொழியப்படுவதை உணர்கின்றேன்.
(to be continued...)
No comments:
Post a Comment