Thursday, May 9, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 20



















2:38 சிவப்பு ரோஜாவை வெண் புல்லருடன் ஒட்டுதல்

      சில செடிகளுக்கு கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் நன்கு வளரக்கூடிய வேர்கள் உண்டு. கொடிமுந்திரி, வெண் புல்லர் மற்றும் வில்லோக்கள் முந்திய ஆண்டுகளில் நன்றாக வளர்ந்துள்ளன. இலைகளும் மொக்குகளும் வரும் முன் இவ்வாண்டு அவற்றை இடமாற்றினால் நன்கு வேர் பிடிக்கும். அவற்றை இளவேனில் காலத்தில்தான் மண்ணில் நட வேண்டும். வேறு பருவங்களில் அல்ல. பிற மரங்களையும் அதைப் போலவே இலைகளும் மொக்குகளும் வெளிவரும் முன்பே நட்டுவிட வேண்டும். எனினும் அவற்றில் சில மரங்கள் மொக்குகள் லேசாக வெளி வந்த, ஆனால் முழுமையாக வந்துவிடாத நிலையில் நட்டு வைத்தால்தான் வேர் பிடிக்கும்.
     
 நீ விதைகளை நட நாடினால் கோடையின் ஆரம்பத்தில் விதை. அவற்றுக்கு அதிகமாக நீர் வார்க்க வேண்டும். எனில், பனிக்காலத்தில் அவை பிளந்து நன்றாக முளைவிடும்.
      
 சிவப்பு ரோஜாக்களை வெண் புல்லர் மரத்துடன் ஒட்டுப் போடலாம். ஒரு விரல் நீளத்திற்கு வெண்புல்லர் மரக்கிளையில் வெட்டி எடுக்கவும். அவ்விடத்தில் அதே அளவில் ஒரு சிவப்பு ரோஜாக் கிளையை வெட்டிப் பொருத்தி வெண் புல்லரின் தோலைக் கொண்டு மூடவும். அவ்விடம் முழுவதையும் களிமண் அப்பி அதன் மீது நார்த்துணியை சுற்றிக் கட்டவும். அதன் மீது ஈரக் களிமண்ணை அப்பி மூடவும். ஒட்டுப் போட்ட பகுதியில் வெண் புல்லர் ஈரத்தை உறிஞ்சும். பிறகு அதிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் வளரத் தொடங்கும்.
      
 வேனில் காலத்தில் ஈரம் கிளைகளின் வழியே விரைந்து ஏறுகின்றது. கடுங்கோடையில் நீர் வேரிலேயே பின் தங்கி உச்சிக் கிளைகள் காய்ந்து விடுகின்றன. வசந்த காலத்தின் ஈரத்தில் மரங்கள் பிற மரங்களுடன் எளிதில் இணைய இயலும். பேதானா என்னும் சீமை மாதுளம்பழம் ஆப்பிளுடனும் ஆப்பிள் பேதானாவுடனும் இணை சேர முடியும். இதனைச் செய்ய, ஆப்பிள் மரக்கிளை ஒன்றை எழுதுகோலின் முனை போல் சாய்மானக் கூராக வெட்டிக் கொள்ளவும். பிறகு, பேதானா மரத்தண்டினை கூரரிவாள் கொண்டு வெட்டவும். வெட்டிய இடத்தில் கத்தியால் லேசாக நடுவில் பிளந்து அந்தப் பிளவினுள் ஆப்பிள் கிளையைச் செருகவும். அவ்விடத்தை ஈரக் களிமண் கொண்டு மூடி அதன் மீது நார்த்துணியை சுற்றி இறுக்கிக் கட்டவும். அந்தத் துணியின் மீதும் களிமண்ணை அப்பி மூடி வைக்கவும். மொக்குகள் வெளிவரும் முன்பே இளவேனில் பருவத்தில் இப்படி நீ செய்தால் அவ்விரு மரங்களும் ஒன்றாக வளரும்.

      சிற்றூர்களில் முசுக்கட்டடை (மல்பெரி)க் கிளைகளை வெட்டி வைக்கோல் கற்றைகளுடன் சேர்த்து வசந்த காலத்தில் நட்டு வைக்கிறார்கள். ஓராண்டு கழித்து முசுக்கட்டடைச் செடிகள் கொத்துகளாக முளைத்து இலை விடுகின்றன. அவ்விலைகளை அவர்கள் பறித்துப் பட்டுப்புழுக்கள் கூடு கட்டுவதற்குத் தருகிறார்கள். அடுத்த ஆண்டில் மேலும் முசுக்கட்டடைச் செடிகள் வளர்ந்து அதே போல் செய்யப்படுகிறது.

      இத்தகைய இயற்கை நிகழ்வுகளை ஓர்ந்து கவனிக்கும் இத்தகைய இன்பத்தால் இவ்வுலகம் அலங்கரிக்கப் பட்டுள்ளது. பழங்கள், மரங்கள், ஓடைநீர், நெருப்பு, புகை. தாம் கடந்து அப்பால் சென்று கொண்டிருப்பதையும், கண்ணுக்குத் தெரிகின்ற இந்த வளர்தலின் அறிவியலுக்குப் பின்னால் ஆன்மாவை தரிசிக்கும் பார்வை ஒன்று இருப்பதையும் அவை நமக்குச் சொல்கின்றன.



























2:44 ஒரு முதன்மை ஒப்பாரி

      ஓரிடத்தில் நான் வசதியாக அமர்ந்தவுடன் எனது வயிறு வலிக்கத் தொடங்குகிறது. பிறகு சரியான பல்வலியும் கிளம்புகிறது. என் முகத்தில் கருந்திட்டுக்கள் தோன்றுகின்றன. தொடர்ந்த பேதி வேறு. நடந்தால் மூட்டு வலி பிய்க்கிறது. இவ்வடிவத்தின் மீது அப்படியாக முதுமை கவிகின்றது.

      மரணத்தின் வாசலை நான் கடக்கும் வரை இந்தக் குறைபாடுகள் அதிகரித்து வரும். எனது வியாதிகள் பற்றி இப்படி நான் முனகிக் கொண்டிருந்தால் வேறு எதற்கும் நேரமே இருக்காது. எனது மரண ஊர்வலத்தில் நானே முதன்மை ஒப்பாரியாக இருக்க மாட்டேன். இப்போதில் இருந்து இந்த விரைவான அழிவின் மீது நான் கவனம் செலுத்தப் போவதில்லை.

      மூழ்கி அடிப்பாறையில் முட்டிக்கொண்ட ஒருவனாக, ஏதொவொரு அவமானக் காட்டில் சாகும்படித் தனியே புறக்கணிக்கப்பட்ட ஒருவனாக என்னை நான் பாவிக்கப் போகிறேன். எனினும், அவ்விடத்திலும் உயிருடன் இருப்பதன் இன்பம் எனக்குண்டு, நான் பின்பற்றிச் செல்லக்கூடிய சில ஆசைகளும் எனக்கு எஞ்சியுள்ளன. இந்தப் பழம்பிணம் வாழ்கிறது. பின்னர் இறந்து போகிறது.

2:52 நேர்மை
      
 உண்மை பேசுபவன் இப்போதே செல்வனாகவும் வருமுலகில் அருளப் பட்டவனாகவும் இருக்கிறான். பிற வகைச் சம்பாத்தியங்களில் உனது நட்புகள் உதவுகின்றன. நேர்மையின் அக வளமே உனது ஆன்மாவுக்குப் போதுமாய் இருக்கட்டும்.

      முஸ்லிம்கள் அல்லாதாரிடம் இஸ்லாமிய நெறியின்படியே நடந்துகொள். பத்திலொரு பங்கு ஏழைகளுக்கு. பிறரின் பயிர்களிலிருந்து உன் குடும்பத்தின் அன்றைய தேவைக்கான அளவை மட்டுமே பெற்றுக்கொள்.















 2:55-56 அருளை இழத்தல்

      இறையருள் பெற்றவரகளுக்காகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். நாம் அருளை இழந்துவிடக் கூடும் என்பதையே இது காட்டுகிறது. மனைவி மக்களைப் பராமரிப்பதற்கான ஆற்றல் திண்ணமாக இருக்கும் எனில் கவலை ஏதுமில்லை. ஆனால் இருக்கிறது. ஒளியைத் தடுக்கின்ற பேராசைகளும் கீழான இச்சைகளும் நமது பாதையில் புகைக் கற்றைகளாகத் தொங்கி நம்மைத் தடுமாற வைக்கின்றன. ஓர் அதிகாலையில் உனது ஊற்று நீர் மீண்டும் மண்ணுக்குள் மறைந்து உனது ஓடை வறண்டு விட்டால் தெளிவான நீர்ப் பாய்ச்சலை மீண்டும் கொண்டு வருவோன் யார்? [காண்க: குர்ஆன்:67:30].


















2:58 இணைகள்

      ”நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம்” (51:49). வேலைகள் உண்மையில் ஜோடிகளில் நடக்கின்றன. உன் கூட்டாளியைத் தேடு. அவரின் முன் நீ முற்றிலும் பணிவாக உணர்ந்து உன்னை வழிநடத்திச் செல்ல அவரிடம் முழுமையான நம்பிக்கை உனக்குப் பிறக்கும்போது அவரை நீ கண்டுகொள்வாய்.

      இரவில் தோற்றங்கள் மாயத் தன்மை கொள்கின்றன. உன் குழந்தை என்று நீ காண்பது விடிந்த பின் வெளிச்சத்தில் பார்க்கும்போது இறந்த கழுதையின் வெட்டப்பட்ட தலையாக இருக்கக் கூடும். சமவெளியின் குறுக்கே ஒரு புழுதிக் காற்று புறப்பட்டு வருவதைப் பார்க்கிறாய் நீ. ஆனால், புரவியில் இவர்ந்து வரும் ஓர் உயரதிகாரி என்று அதனை எண்ணிக் கொள்கிறாய். அவரின் வருகையால் நீ மதிப்படைவதாக மகிழ்கிறாய். உன்னிடம் இருப்பதிலேயே கண்ணியமான ஆடையை அணிந்து அவரை வரவேற்கத் தயாராகிறாய். உண்மையில் அங்கே அதிகாரியும் இல்லை குதிரையும் இல்லை. வெறும் மாயக் குதிரையாட்டம் மட்டுமே.

      வாத்து ஒரு சேற்றுத் துளையை குடைந்து தனது அலகை மேலும் தீவிரமாக நுழைத்துப் புழுக்களைத் தேடுகிறது. சேற்றுத் தெளிப்பால் அதன் சிறகுகள் மேலும் பாரமாகின்றன. வழிப்போக்கன் ஒருவன் அதனைக் கண்டு அதன் பேராசைக்காக அதனைத் திட்டுகிறான். இந்த வேலை அவனுக்குத் தேவையா என்ன?

2:60-61 வெறிப் பற்றுகள்

       மறுப்பாளர்கள் மற்றும் வெறியாளர்கள் ஆகியோருக்கு நான் விடை சொல்கிறேன். நீங்கள் வருணிப்பது போல்தான் அபூபக்கர் இருந்தார்கள் என்று சொன்னால் நானும் அவர்களை எதிர்ப்பேன். அலீயைக் கொன்றது அவர்களே எனில் ஃகாரிஜியாக்களை நான் எதிர்க்கிறேன். இறைத்தூதரின் குடும்பத்தாரை இழிவு செய்யும் யஜீதையும் அவனது கூட்டத்தாரையும் நான் எதிர்க்கிறேன். நபி (ஸல்) அவர்கள் மீது ஐயமும் கேலியும் பேசுகின்ற கூட்டத்தினர், அவர்கள் கிறித்துவர்கள் அல்லது யூதர்கள் அல்லது பொய்யர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்கு எதிராக நின்று நான் நபிக்கு ஆதரவாகப் பேசுவேன். அத்தகைய செய்திகளை ஆழமாக அறிந்தவர்கள் நான் ஒருபோதும் இக்கூட்டத்தினர் எவருடனும் சேர்ந்துவிட வேண்டாம் என்று சொல்கிறார்கள். இவர்கள் தமது பற்றாளர்கள் அல்லர், வெறியர்கள்.

      இறைவனை ”ஒப்புமை”ப் படுத்தி அவன் இரத்தம் பிணி காற்று நீர் உயிரற்ற ஜடங்கள் மற்றும் புதுமையும் மிகத் தற்காலிகமும் ஆன பொருட்களால் ஆனவன் என்பதாக ஹம்பலியாக்கள் பேசுகின்றனர். இது கேலிக்கூத்துதான். ‘ஒப்புமை’ (தஷ்பீஹ்), உருவமைப்பு, விக்கிரகம் போன்ற சொல்லாடல்களுக்கு இடையிலான விளையாட்டுத்தான். சில சொற்களின் வரையறைகள் மீது எப்போதுமே அத்தகைய முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன.

      கொள்கைப் பகைமையால், அவரிடம் இழிவான குணங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பிறர் எதிரியாகப் பார்க்கின்ற ஒருவரை நீ மிகவும் நேசிக்கவும் கூடும். நீ சொல்கிறாய், நான் ஒத்துக்கொள்கிறேன், உண்மையிலேயே அவர் அப்படித்தான் என்று தெரிந்தால் நானும் அவரை எதிர்ப்பேன். (குறிப்பு: இப்பகுதி மூலப் பிரதியில் ஓரக்குறிப்பாக அதே கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளது).

      தமக்கு எதுவும் ஆகுமானதே என்னும் பொருள்முதல் வாதிகளும் கட்டற்ற சிந்தனாவாதிகளும் தம்முன் உள்ளவை அன்றி வேறெதையும் அறியாத சிறு பிள்ளைகளைப் போல, அல்லது தமது வயிற்றால் மட்டுமே புரிந்து கொள்வதால் தொட்டி நிறைந்த தீவனத்தை மட்டுமே சிறந்த பொருள் என்று கருதுகின்ற கழுதைகளைப் போலத் தமக்குள் வாதாடுகின்றனர்.

2:62 என் தாயின் கோபம்

      என்னைப் பற்றி மக்கள் பேசுவதில் எனது தாயின் கெட்ட கோபத்தைப் பற்றியும் நிச்சயம் பேசுகிறார்கள், அது எப்படிக் கட்டுப்பாடின்றிப் போகிறது என்பதைப் பற்றியும் அதனை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதைப் பற்றியும்.

      நான் அதனை எப்படி உணர்கிறேன் என்றும் அவர் தன்னை எப்படிச் சீர்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவரிடம் நான் சொல்லலாம். ஆனால அவர் என்னையும் என் ஆலோசனைகளையும் மட்டம் தட்டுவார். நான் கண்டுக்காமல் இருப்பேன். எனது அறிவுரை எவருக்குத் தேவைப்பட்டாலும் என்னிடம் வரலாம். ஒருவர் நம்மிடம் கேட்காதபோது அவருக்கு அறிவுரை கூறுவது என்பது வார்த்தைகல் எழுதப்பட்ட சீட்டுத் தாள்களை நெருப்பில் போடுவதைப் போன்றது.

      தாம் செய்வதை ஏன் செய்கிறோம் என்றோ அல்லது செய்யாததை ஏன் செய்யவில்லை என்றோ தர்வேஷ்கள் விளக்கம் சொல்லத் தேவையில்லை.


















2:67 அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்கா

      ”அவனே உமக்கு பூமியை வசப்படுத்தி வைத்தான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். அவனின் உணவிலிருந்து உண்ணுங்கள்” (67:15)

      சமாளிக்க முடிந்தது என்பதற்கும் மேலாக வாழ்க்கையை ஆக்குகின்ற கருணையை நீ எதிர்பார்க்க வேண்டும். ஆனால் நீ  வேறு எங்கோ பார்க்கிறாய், அது அல்லாத வேறு ஏதோ சுகத்தை விரும்பியவனாக.

      விழிப்புணர்வுள்ள உன் சுயம், அதனுடன் கொடுக்கப் பட்டவற்றுடன், நன்கு திருத்தி அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பூங்காவைப் போல், காட்டுப் பூக்களும் விளைந்த அற்புதங்களும், விரையும் ஓடைப் புனலும், அதனருகே அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான தனிப்பட்ட இடங்களும் கொண்டதாக இருக்க வேண்டும்.

      துயரப்படும் ஒருவர் உன்னைக் கண்டால் உன்னிலே ஓர் அடைக்கலத்தை அவர் காண வேண்டும், ஒரு புத்துணர்ச்சியை உணர வேண்டும். ஒருவர் ரொட்டியும் வெண்ணெயும் எடுத்துவரத் தேவை இல்லாத ஒரு தாராளமான வீட்டை உன்னில் அவர் காண வேண்டும். அப்போது வளம் மிகுந்து வரும்.















2:74-75 புகைச்சல்கள்
      தூய ஆடைகளும் விலைமதிப்புள்ள புழங்கு பொருட்களும் கறுப்படைந்த மையத்தை மறைக்க முடியாது. எரிச்சல் பிளவுகளின் வழியாகப் புகைச்சல்களை வெளியிடுகிறது. நீ புகைச்சல்களை விசிறித் துரத்துகிறாய். ஆனால் அவை மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. 

      குற்றவாளியின் கொடுஞ் செயல்களே அவனைச் சுற்றிலும் சிறைச் சுவர்களை எழுப்பிவிட்டதைப் போல, உனது மறதியும் உள்வர ஒளியை மறுப்பதுமே உனது ஆன்மாவைப் பயணத்தை விட்டும் நிறுத்தியுள்ளது.

(to be continued...)

No comments:

Post a Comment