Wednesday, May 22, 2019

ஒரு சூஃபியின் டைரி - 18















#132 ஏக்கங்களின் கடல்களில் மூழ்கி...

      நான் இரண்டு விடுத்தம் தொழுது முடித்ததும் இறைவன் என்னை பூர்விகத்தின் சமவெளிக்கு அழைத்தான். அங்கே நானோர் அன்னியனாக இருந்தேன். மகத்துவத்தின் உச்சத்தில் இறைவன் என்னிடம் வல்லமை மற்றும் அழகு ஆகிய பண்புகளுடன் தோன்றினான். பிறகு அவன் எனக்கு மறைவுலகைக் காட்டினான்; அக்காரணத்தால் பாங்கர்களின் தொழுகை அழைப்பை நான் தவற விட்டேனோ என்று அஞ்சினேன். நான் சொன்னேன், “நான் எனது நாளை வீணாக்கிவிட்டேன். நான் நேரத்தோடு விரைவாக எழவில்லை.” சத்தியப் பரம்பொருள் என்னிடம் சொன்னான், “நீ தூங்கினாலும் கவலைப்படாதே. நான் உன்னுடன் தூங்காமல் இருக்கிறேன். நான் உன் மீது அன்பாக இருந்தேன், எனது திரையை உனக்குத் திறந்து கொண்டிருந்தேன்.” பிறகு மேலான இறைவன் நான் விவரிக்க முடியாத வகையில் அவனை எனக்கு மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டிருந்தான். நான் நேசிக்கும் வடிவத்தில் அவன் என்னை நெருங்கி வந்தான். நான் ஏக்கத்தின் கடலில் மூழ்கினேன். அணுக்கத்தின் சபைகளில் பிதற்றிக் கொண்டிருந்தேன். என் இதயம் மறைப்புக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையில் இருந்தது; என் உயிர் பரவசத்திற்கும் வெறுமைக்கும் இடையில் இருந்தது; என் அறிவு இறைவனின் ஆணைகளுக்குக் காத்திருந்தது; என் உள்ளுணர்வு வல்லமை மற்றும் வானவருலகை நோக்கியிருந்தது; என் நாவு நித்தியத்தை வருணித்திருந்தது; என் கண்கள் வானவருலகின் சுழற்சியைப் பார்த்திருந்தது; சத்தியப் பரம்பொருள் என்னை இணைவின் இனிமையுடன் நோக்கும் வரை என் விழிகளில் சூடான கண்ணீர் எரிந்தது. திரை நீங்கிய வல்லமை மற்றும் அழகுடன் சத்திய இறைவனை நான் கண்டேன்.

#133 பிரசன்னத்தின் வாசலுக்குள் நுழைதல்

      ஒரு நாள் இரவு எனக்கு இறைவனிடம் செல்வதற்கான வழியின் உத்தரவாதம் கிடைத்தது. சத்தியப் பரம்பொருள் என்னிடம் ஓதினான், “உம் உழைப்பு அங்கீகரிக்கப் பட்டதாகிறது” (76:22). அவன் எனக்குச் சில திறப்புக்களை எனது உழைப்பிற்கு நற்கூலியாக ஒதுக்கி வைத்திருக்கிறான் என்பதை நான் அப்போது அறிந்தேன். நான் அமர்ந்திருந்த நிலையில் நேரம் கழிந்தபோது எனது கவனத்தை வானவருலகின் வெளிப்புறத்தில் வைத்திருந்தேன். பிரசன்ன வாசலின் இரு மருங்கிலும் அதன் கதவின் முன்னும் இறைத்தூதர்களும் வானவர்களும், அவ்வுலகின் இளவரசர்களைப் போல் நின்றிருக்கக் கண்டேன். அவர்களது வரிசைக்கு அப்பால் அறிஞர்களும் சட்ட வல்லுநர்களும் நின்றிருந்தார்கள். நீதிபதிகளின் உடை அணிந்தவராக அழகிய முகமும் வடிவமும் கொண்டு போர்வை போர்த்தியவராக அல்-ஷாஃபி அவர்களைக் கண்டேன். அவர் வரிசையின் பின்னால் நகர்ந்து சென்று இறைத்தூதர்களுக்கும் வானவர்களுக்குமான வரிசைகளின் இடையில் என்னை அடையாளம் கண்டார். ஆனால் அவர் அங்கே ஓர் அன்னியனைப் போல் இருந்தார். நான் பிரசன்னத்தின் வாசலுக்குள் நுழைந்தேன். மனித குலத்தை விட்டும் மறைக்கப் பட்டேன். மகத்தான சத்திய இறைவனை எழுபது திரைகளுக்கு அப்பால், வல்லமையில் திரை நீங்கிய முகத்துடன் கண்டேன். பிறகு நான் வல்லமையின் அறைக்குள் நுழைந்தேன். அங்கே சத்தியப் பரம்பொருளை எழுபது அழகுகள் வல்லமைகள் மற்றும் புகழ்ச்சிகளில் கண்டேன். இறைவன் நாடியதே அல்லாது வேறு எதையும் இந்த வடிவங்களில் நான் காணவில்லை. பிறகு நான் சக்தியின் புலத்துள் நுழைந்தேன். அங்கே ரோஜாப் பூக்களால் ஆன திரையைக் கண்டேன். அவை வெள்ளை ரோஜாக்கள். அந்த வெள்ளை ரோஜாக்களின் இடையே சத்தியப் பரம்பொருளைக் கண்டேன். அவன் வெள்ளை ரோஜாவின் புகழ்ச்சியை அணிந்தவனாக, திரை இன்றி இருந்தான். பிறகு பிரபஞ்சலோகத்தில் இருந்து சத்தியப் பரம்பொருள் என்னை அழைத்துச் சொன்னான், “என் நேசர்கள்! எவருமே அவனை நேசிப்பதில்லை.” பிறகு அவன் எழுந்து வந்து என்னை எனது பெயர் சொல்லி அழைத்தான். நான் அவனை நேசித்தேன். பிறகு அவன் பூமியின் முகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிலும் இருந்து எனக்கே எனக்கென்று முடிவு செய்து வைத்திருந்த நெருக்கத்தை நல்கினான். அத்தருணங்களில், இளவரசர்களிடையே ஓர் அரசனைப் போன்றும் நறுமணம் கொண்ட அனைத்து செடிகளுக்கும் இடையே ஒரு ரோஜாவைப் போன்றும், பரவசத்துடன் முகம் சிவந்து கண்ணீரில் மூழ்கியபடி வரிசைகளாக நின்ற ஞானியரின் நடுவில் நான் இருந்தேன். ஆனால் அவன் மறைவின் பாலை வனங்களுக்குள் நுழைந்து விட்டிருந்தான்.

























#134 சிவப்பு ரோஜாக்களின் மரம்     
      சிவப்பு ரோஜா மரம் ஒன்றில் சத்தியப் பரம்பொருளை வல்லமை மற்றும் அழகுடன் கண்டேன். நான் அந்த மரத்தினடியில் நின்றிருந்தேன். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டேன். அவரின் அங்கியின் கைப்பகுதிக்குள் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்கள் இருந்தன. அவர் அவற்றைப் பொழிந்தார். இதர இறைத்தூதர்களும் வானவர்களும் அப்படியே செய்தனர். நான் ஆதமைப் பார்த்தேன். அவரிடம் ஒரு ரோஜா இருந்தது. நான் ஜிப்ரீலைப் பார்த்தேன். அவரிடமும் ஒரு ரோஜா இருந்தது. அவ்வகையில் சத்தியப் பரம்பொருள் அவர்களை ஏற்றுக் கொண்டான். பின்னர், திருப்பண்புகள் மற்றும் சுயம் (சிஃபாத் வ ஜாத்) ஆகியவற்றின் பேரழகு பண்புகள் மற்றும் செயல்களில் எனக்கு வெளியாகின. பிறகு அவன் சக்தியின் திரையை எனக்குக் காண்பித்தான். நான் அதனுள் நுழைந்தேன். நான் அவனது மகத்துவம் வல்லமை ஆற்றல் மற்றும் தெய்வீகப் பிரசன்னம் ஆகியவற்றைக் கண்டேன். கண்கள், இதயங்கள், நுண்ணறிவுகள், ஆன்மாக்கள், பிரக்ஞைகள் எல்லாம் இதில் திகைத்து விடுகின்றன. ஆனால், அனைத்து வருணிப்புக்கள் மற்றும் குறிப்புக்களை விட்டும் இறைவன் தூயவன். காதலின் ஊற்றில் அருந்திய நினைவுகள் என் உள்ளத்தின் மீது இறங்கின. நெருக்கத்தின் பறவைகளுக்கான வழிபாடுகளைச் செய்யும் ஏக்கத்தால் எனது சுயம் துடித்தது. மாலைத் தொழுகைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் நான் பரவசத்திலும் களிப்பிலும் இருந்தேன். பூர்வீகத்தின் அணுகுதல்களுக்கு ஆயத்தமானபடி நான் தெய்வீக சுயம் பற்றிச் சிந்தித்திருந்தேன். சக்தியின் வருகை என்னைத் தாக்கிற்று. மனித காரியங்களை விட்டும் அது என்னை அப்பால் வாரிச் சென்றது. கையிலொரு துருக்கி வில்லினை ஏந்தியபடி பூர்வீகத்தின் புரவியில் இவர்ந்து சத்தியப் பரம்பொருள் என் முன் தோன்றும் வரை நுட்பங்களும் திரை நீக்கங்களும் என்னில் ஏற்பட்டன. அவனது அடியார்களை வேட்டையாடுவதில் தளராத மக்களின் மீது அவன் கடுஞ்சினம் கொண்டிருந்தான். அலீ இப்னு அபீதாலிப் (கர்ரமல்லாஹ வஜ்ஹஹு – இறைவன் அவரின் முகத்தை மேன்மைப் படுத்துவானாக!) அவர்கள் அம்மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டவர்களாக மலை ஒன்றிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தேன். அவர் அம்மக்களைத் தாக்கினார். அவர்களில் சிலர் அவரின் சந்ததியாகவும் இருந்தனர். இந்த தண்டனைக்கு முன் அவர்கள் அடியார்களை அடக்கி ஆண்டனர். ஆனால் அவர்களின் குடும்ப உரிமைகள் எதுவும் நீக்கப்படவில்லை. 
      காலம் கடந்தது. காட்சிகளை தரிசிப்பதன் பரவசங்களுக்கு இடையில் இருந்தேன். ஒவ்வொரு தரிசனத்திலும் தனிப்பட்ட திருப்பண்பு இருந்தது. இரவு கழிந்தது. அதில் பாதி மட்டுமே மீதமிருந்தது. சத்தியப் பரம்பொருள் தோன்றி என் அருகில் வந்தான். அவனது அழகிய திருப்பண்புகளில், மிகச் செம்மையான அழகில், மிகச் செம்மையான வல்லமையில் அவனைக் கண்டேன். சக்தியின் தலைவாசல் வழியாக நித்தியத்தின் திரைகளை விலக்கிக்கொண்டு அவன் வந்தான். அவனது ஒளியின் மகத்துவமான சிவப்பு ரோஜாக்களால் உலகத்தை நிரப்பிவிடுவது போல் அவன் தனது மகத்துவத்தை வெளிப்படுத்தினான். பிறகு அவன் ஓதினான், “இன்று ஆட்சி யாருடையது? அடக்கியாளும் ஏகனாம் அல்லாஹ்வுக்கே!” (40:16).

#135 ஏற்றத்தின் நறுமணங்கள்

      குறிப்பிட்ட சில இரவுகளில் நான் மேலான இறைவனைத் தேடினேன். அவன் எனது வீட்டில் வல்லமை மற்றும் அழகுடன் தோன்றிடக் கண்டேன். நெருக்கமான வானவர்களுக்கும் காட்டியிராத வகையில் அவன் தன்னைக் காட்டினான். பிறகு என்னைப் பரவசங்களிலும் ஆன்மிக நிலைகளிலும் கைவிட்டு அவன் மறைந்தான். பிறகு அவன் நித்திய உலகிலிருந்தபடி என்னை பூர்வீகத்தின் நிலத்திற்கு அழைத்து வருமாறு காற்றுகளுக்குக் கட்டளை இட்டான். அவனது எதார்த்தங்களின் நறுமணங்கள் என்னை வசப்படுத்திக் காற்றில் நான் பறக்கும்படிச் செய்தன. அவ்வாறு, எழுபதாயிரம் நறுமணங்கள் என்னை வசப்படுத்தின. அவை ஒவ்வொன்றும் இறைவன் தனது ஏற்றங்களுக்காக எண்ணிக்கை இட்டு வைத்திருப்பவை ஆகும். நான் சத்தியப் பரம்பொருளை அடைந்து அவனைப் புனிதம், மகத்துவம், சக்தி, வல்லமை மற்றும் பெருமை ஆகிய பண்புகள் கொண்டவனாகக் கண்டேன். என் பெயரைச் சொல்லி அவன் என்னிடம் பேசினான், “ரூஸ்பிஹான்! நீ ஏதேனும் பரிமாணம், வடிவம், கற்பனை அல்லது ஒப்புமையைக் கண்டாயா?”. இது ஒருமையின் படிநிலை என்று நான் மௌனமாகச் சிந்தித்தேன். அனைத்துக் காலங்களும் அவற்றில் இருப்பவையும் அழிந்து போயின.

















#136 பாஸா மற்றும் ஷீராஸின் ஞானியர்

      பாஸாவின் மண்ணறைத் தோட்டத்தில் என்னைக் கண்டேன். செந்நிற அங்கியும் தலையில் சிவப்புத் தொப்பியும் அணிந்த ஞானி ஒருவர் தனது மண்ணறையை விட்டு வெளியேறிச் செல்வதைப் பார்த்தேன். அவர் நின்றபோது பாஸாவின் ஞானிகள் அனைவரும் அவருடன் நின்றனர். பிறகு அவர்கள் என்னுடன் ஷீராஸுக்கு வந்தனர். நாங்கள் ஷீராஸை நெருங்கியபோது அதன் ஞானிகள் அனைவரும் தமது மண்ணறையிலிருந்து எழுந்து வந்து வரவேற்று நகருக்குள் அழைத்துச் சென்றனர். இது, நான் அங்கே திரும்ப வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில் நடந்தது. நான் என்னைக் கிழக்குப் பக்கம் இருக்கக் கண்டேன். பூர்வீக அழகுடன் சத்தியப் பரம்பொருள் என்னிடம் தோன்றினான். அவனது அளவற்ற அழகு மற்றும் அரவணைப்பில் என் உள்ளம் உருகியது.











 #137 துருக்கியரின் அழகு

      ஒரு மணி நேரம் கழித்து இறைவன் என்னிடம் தோன்றியபோது துருக்கியரின் அழகுடன் தோற்றமானான். கடவுளின் முன் அவர்கள் கிழக்குப் பாலைவனத்தில் ஒன்று கூடினார்கள். அவன் அவர்களிடம் தோன்றியபோது அவர்கள் வியப்பில் ஆழ்ந்து, மேலான இறைவன் மீதான தமது தூய ஏக்கத்தால் “அவர்கள் அவனுக்குச் சிரம் பணிந்து வீழ்ந்தனர்” [12:100]. நான் என்னை அமர்ந்து ஓய்வெடுப்பவனாகக் கண்டேன். இறைவன் என்னை அடையாளம் கண்டான். என்னைத் தேடிக்கொண்டு உலகெங்கும் திரிந்ததாகவும், தன்னை தரிசிக்க என்னைப்போல் தகுதியானவர் வேறு யாருமில்லை என்றும் சொன்னான். அவன் என்னை விட்டு மறைந்த போது அவன் மிக இறுக்கமான அங்கி அணிந்திருக்கக் கண்டேன். என் தலையில் கேசமும் தொப்பியும் இருந்தன. மறைவான ஆற்றலின் கருவறையிலிருந்து சத்தியப் பரம்பொருள் என்னை வெளியே கொண்டு வந்தபோது நான் அவனை நோக்கி வலிய வில்லொன்று எய்த கணை ஒன்றின், அல்லது கடிய ஈட்டி ஒன்றின் வடிவில் விரைந்தேன். கடல் திடல் காற்று மலை விண் மண் எதுவும் என்னைத் தடுக்கவில்லை. அவன் அருகில் எட்டும் வரை கீழும் மேலும் உள்ள அனைத்தையும் நான் துளைத்துச் சென்றேன். 
#138 வண்ணத்துப் பூச்சிகளைப்போல் வானவர்களைச் சிதற விடல்

      வல்லமை மற்றும் மகத்துவத்தின் உலகில் மேலான இறைவனை நான் கண்டேன், முன்பு கிழக்கில் அவனைக் கண்டதைப் போன்றே ஓர் இடமோ அல்லது ஒரு பரிமாணமோ இல்லாத நிலையில். அவன் தன்னை வெளிப்படுத்தியபோது, வானவர்கள் துருக்கியர்களைப் போல் சிவப்பு நிற ஆடை அணிந்தவர்களாக அவனது பெருமிதத்தின் மாடங்களில் குழுமினர். சத்தியப் பரம்பொருள் அவர்களிடம் தோன்றியபோது அவர்கள் பரவசமும் களிப்பும் எழ சிதறிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் போன்று ஆனார்கள். மிக்க மேலான சத்திய இறைவனின் அழகின் இன்பத்தில் நான் இறந்துபோனேன். அதாவது, இறைவன் நாடியபடிக்கே அன்றி வேறு வகையில் நான் இறக்கவில்லை. பல்வேறு பகுதிகளில் ரகசியத்தின் இலக்குகளைத் தேடிய பின் திடீரென்று அர்ஷ் என்னும் இறை அரசாசனத்தின் உலகில் நான் அவனை வல்லமை மற்றும் அழகின் வடிவில் கண்டேன். நான் அவனுடன் என்னவாக இருந்தேனோ அதுவே அவன் விரும்பியது. அணுக்கத்தின் நிலையில் அவனை தரிசித்தபடி பரவசங்கள் மற்றும் ஆனந்தத்தின் கடல்களுக்குள் மூழ்கினேன். சில கணங்கள் அவன் என்னை விட்டு மறைந்தான். எமக்கு இடையில் இருந்த தற்பெருமையின் திரையை அவன் நீக்கினான். நான் அவனை அவ்வடிவில் கண்டேன். அவன் என்னை தன்னருகில் இழுத்து அரவணைப்பும் அன்பும் காட்டி “நல்வரவு ரூஸ்பிஹான்!” என்று சொன்னான். நான் ஆனந்தத்தில் எவ்விக் குதித்தேன், சப்தமிட்டேன், கைகளைத் தட்டினேன், பாடலை முனகினேன். அவன் என்னவன் என்பதை அவனிடமிருந்து அறிந்தேன். நேரம் சென்றது. அவனிடமிருந்தான சுகத்தில் நான் செத்துவிடும்படி என்னைச் செய்யுமாறு அவனை வேண்டினேன். நேரம் சென்றது.

#139 “நான் உனதில்லையா?”

      இறைவனின் பாதப் பலகைக்கு மேலே, இறை அரசாசனத்தின் அருகில், பரிமாணம் என்பதைப் பற்றிய பேச்சே இல்லாத வெளியில், அவன் எனக்காக இன்னொரு உலகத்தைத் திறந்தான். தாமே கிளர்ந்தெழுந்த ஆற்றலின் நுட்பங்களின் வடிவத்தில் சத்தியப் பரம்பொருள் எனக்குத் தோற்றமானான். என்னிடத்தில் இருந்து நான் அவனிடம் பறந்து சென்றபோது அவன் சொன்னான், “உன் இதயத்தில் நிகழ்கின்ற இலட்சியங்கள் எல்லாம் என்ன? நான் உனதில்லையா? உன் இலட்சியங்களுக்கு எல்லாம் நான் போதுமானவன் இல்லையா? நான் மிக விரிவாக விசாலமும் தாராளமும் ஆனவன் இல்லையா?” நான் அவனது அழகை தரிசித்தவனாக, ஆனந்தத்தில் ஜெபித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அவனது புனித பிரசன்னத்தையும் வல்லமையையும் அழகையும் அவனது படைப்பாற்றலின் வாஞ்சையையும் அறிவித்தபடி இருந்தேன். அவனை விட்டும் நான் மறைக்கப்பட்டேன். என் ஆனந்தம் எல்லை அற்றதாக இருந்தது.





















#140 அற்புதங்களுக்கு அப்பாலான வெளிப்பாடுகள்

      இன்னொரு முறை நான் அவனிடம் இணைவைக் கேட்டேன். அது ஓர் வியாழன் இரவில் நடந்தது. நான் எனது கூட்டாளிகளுடன் ரகசியங்களின் எதார்த்தங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். நான் அவர்களிடம் சொன்னேன், “ஒருவர் வானவராகவோ அல்லது இறைத்தூதராகவோ அல்லது இறைநேசராகவோ இருந்தால் மட்டுமே மேலான இறைவனிடமிருந்து வெளிப்பாடுகளை அடைகிறார். (இறைத்தூதர்கள் பெறும் வெளிப்பாடுகள் வஹீ என்னும் படித்தரத்தைச் சேர்ந்தவை. இறைநேசர்கள் பெறும் வெளிப்பாடுகள் இல்ஹாம் என்னும் படித்தரத்தைச் சேர்ந்தவை. வஹீ என்பது இல்ஹாமை விடவும் சிறந்தது. – மொ.பெ-ர்). திரை நீக்கம் மற்றும் தரிசனத்திற்குப் பிறகே இறைவனிடமிருந்து வெளிப்பாடு வருகிறது. வானவர்களுக்கு ஒரு வடிவம் இருக்கிறது. அவர்கள் அதனை எடுக்கும்போது பார்வையில் ஐயம் நீங்குகிறது. இறைத்தூதர்களிடம் ஆதாரமான அற்புதங்கள் இருக்கின்றன. அவை வெளிப்படும்போது அவர்களின் இறைச் செய்தி பற்றிய அனைத்து ஐயங்களையும் அவை களைகின்றன. இறைநேசர்களிடம் கவர்ச்சிகரமான அற்புதங்கள் இருக்கின்றன. அவை வெளிப்படும்போதும் யாதொரு ஐயமும் மீதமிருப்பதில்லை (இறைத் தூதர்களின் அற்புதங்கள் முஃஜிஸாத் என்றும் இறை நேசர்களின் அற்புதங்கள் கராமத் என்றும் அழைக்கப்படுகின்றன – மொ.பெ-ர்). நான் கவர்ச்சிகரமான அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லன் ஆதலால் நான் இந்த மூன்று வகையினருள் எதிலும் இல்லை. கவர்ச்சிகரமான அற்புதங்களின் படிநிலைக்கு அப்பால் ஒரு படிநிலை உள்ளது. அதில் இறைவன் என்னிடம் தோன்றி அதன் சொல்லைக் கொண்டு எனக்குக் கற்பிக்கும் அரிய தெய்வீக அறிவுகளை நான் பெறுவதற்கு அவன் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளான். அவற்றை வெளிப்படுத்துவதே என் பணி.”

      நான் மேலே சொல்லியிருக்கும் படிநிலையில் நான் இருந்தபோது வெள்ளி இரவில் சத்தியப் பரம்பொருள் என்னிடம் தோன்றிச் சொன்னான், “நேற்றிரவு நான் உன்னருகில் வல்லமை மற்றும் அழகின் வடிவத்தில் அமர்ந்திருந்தேன் என்பதை நீ அறிந்து கொண்டாயா? என் முகம் உன் முகத்தின் அருகில் இருந்தது. என் முகத்தையும் உன் முகத்தையும் பிரதிபலிக்கின்ற ஒரு கண்ணாடியை நான் ஏந்தியிருந்தேன். நான் உன் முகத்தைப் பார்த்திருந்தேன். மேலும், கண்ணாடியில் பிரதிபலித்த நம் இருவரின் முகங்களையும் உன் முகத்தில் இருந்து பார்த்திருந்தேன்.” நான் சத்தியப் பரம்பொருளின் மகத்துவத்தைப் பார்ப்பதைப் போல் இருந்தது. நான் கதறியபடி மீண்டும் மீண்டும் சப்தமிட்டேன். நான் அழுதபடி அவனது எல்லையற்ற அருளையும் தாராளத்தையும் வேண்டினேன். அவன் என்னைத் தனது ஆற்றலின் போர்வைக்குள் வைத்துக்கொண்டு அவன் மட்டுமே என்னைப் பார்த்தான். காலாதீதத்தையும் ஏகத்துவம் மற்றும் நித்தியத்தின் வெளிப்பாட்டின் போதான பூர்வீக நுட்பங்களையும் காலம் என்பது அணுக இயலாது என்பதை அவன் அறிவான். அவனது வல்லமையின் ஆரம்ப விடியலில் காலமும் இடமும் இப்றாஹீம் நபி வீசப்பட்ட நெருப்பின் முன் பறவயின் சிறகுகள் பொசுங்குவதைப் போல் காணாமல் போய்விடுகின்றன. அவன் அனைத்து எண்ணங்களுக்கும் அப்பாலானவன். தனது படைப்பினங்கள் எதனின் உள்ளத்திலும் எழுகின்ற எண்ணத்தைக் கடந்தவன்.

#141 இறையழகைப் பிரதிபலித்தல்

      களிப்பு மற்றும் தெளிவில் நான் ஒரு தரிசனத்தை அடைந்தேன். மணப்பெண்ணின் ஆடைகளை அணிந்திருந்தேன். என் தலையில் பெண்களது போல் நீணெடுங் கூந்தல் இருந்தது. திறந்த தலையும் மார்புமாக நான் என் தோழர்களுடன் மணப்பந்தலின் கீழ் ஓர் அழகிய அரசனைப் போல் தோன்றினேன். நான் வானவருலகில் பறந்தபடி அங்கிருந்த பிரசன்னத்தின் மக்களைப் பார்த்தேன். ஒருவரும் எனது அழகிய வடிவிற்கு ஒப்பாக இல்லை. ஏக்கத்துடனும் காதலுடனும் அவர்கள் என்னை நோக்கிச் சிறகடித்து வருவதைப் போல் இருந்தது. ஆனால் நான் அவர்களுடன் தங்காமல் சத்தியப் பரம்பொருளை அடையும் வரை ஆன்மிகத் தோட்டங்களை நோக்கி மேலும் பறந்தேன். நான் அவனைப் பார்த்தேன். பிறகு எனது முகத்தைப் பார்த்தேன். அவனின் அழகு எனதாகவும் என் அழகு அவனதாகவும் இருந்தது. இறைவனின் எவ்வொரு படைப்பாலும் விவரிக்க முடியாத ஒரு நெருக்கத்தில் அவனுடன் நான் இருந்தேன். அந்த நிலையில்தான் இறைவன் தனது இயல்பிலும் ஏகத்திலும் தோன்றுகிறான்.




















 #142 அந்தகப் பெருங்கடல்

      சத்தியப் பரம்பொருளின் தரிசனம் தேடி அந்தகப் பெருங்கடலுள் மூழ்கினேன். வியப்பின் கடலில் தலை தூக்கினேன். மகத்துவத்தின் உலகம் ஒன்றைக் கண்டேன். மகத்துவத்தின் மீது மகத்துவம் அன்றி வேறு எதையும் நான் காணவில்லை. அதைப் பற்றி வியந்தபடி நான் திரும்பினேன். பாலைவனம் ஒன்றில் சூஃபி குருமார்களைக் கண்டேன். அவர்கள் தமது மனைவியருக்கு சூஃபி அங்கிகளை அணிவித்துக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் அவற்றைக் கீழே விரித்துப் பரப்பினர். அவற்றில் சிவப்பு ரோஜாக்கள் இருந்தன. இறைவனின் வல்லமையின் கடுமை காரணமாக, பிறரைப் போன்று அவர்கள் இறை நெருக்கத்தால் பரவசம் அடையாதிருந்தனர். அவர்களில் நான் ஷைகு அபுல் ஹசன் இப்னுல் ஹிந்த், ஷைகு ஜாஃபருல் ஹத்தா, ஷைகு அபூ அப்துல்லாஹ் இப்னு கஃபிஃப் ஆகியோரைக் கண்டேன். பிறகு நான் நெடுநேரம் சத்தியப் பரம்பொருளைத் தேடிக் கொண்டிருந்தேன். பட்டும் முத்தும் செம்பொன்னும் கொண்ட மகத்துவத்தின் ஆடைகளை அணிந்தவனாக சத்தியப் பரம்பொருள் என்னை வரவேற்றான். வெண் முத்து மற்றும் செம்பொன் ஆகியவற்றின் தீற்றல்கள் போல் அவனைச் சுற்றிலும் ஒளிகள் வீசின. அழகான ஓரிடத்தில அவன் எனக்கு அன்பும் அழகுமான ஆடைகளை அணிவித்தான். அவ்விடத்தின் அழகைக் கண்டால் சுவனக் கன்னிகளான ஹூரிகளும் உருகி விடுவர். 
#143 அவனழகின் இன்பம்

      இன்னொரு முறை அவனை நான் அத்தோற்றத்தில் சாலையில் கண்டேன். மறைவுலகின் வெளியில் அச்சாலை இருந்தது. ஏக்கத்தின் பரவசங்கள் என்னை மிகைத்தன. அவனது தரிசனத்தை எனக்கு அதிகமாக்கி அருளுமாறு இறைவனை வேண்டினேன். எனவே நான் அவனைக் கண்டபோது, அதனை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. “வானங்கள் மற்றும் பூமியின் அரசனே! உன் அழலில் என் இதயம் அடையும் இன்பத்தால் நான் செத்துப்போனால் உன்னைக் காண உன்னுடன் வேறு எதுதான் எஞ்சும்?” என்று என் மனத்தினுள் சொல்லிக் கொண்டேன். திருப்பண்புகளின் திறப்பு மற்றும் சுயத்தின் வெளிப்பாடு ஆகிய எனது இலக்குகளை நான் அடைந்துவிட்டேன் என்று தோன்றியது. காலத்திலிருந்து விடுதலை தேடியபடி எனது உள்ளுணர்வு உள்ளமை மற்றும் உள்ளவை அனைத்தின் இடங்களில் பயணித்தது. ஷீராஸில் எனது தியான விடுதியின் கூரை மீது நான் இருப்பதைப் போல் கண்டேன். வல்லமை மற்றும் அழகின் வடிவத்துடன் சத்தியப் பரம்பொருள் ஊரின் சந்தையில் இருக்கக் கண்டேன். இறைவன் மீது சத்தியமாக! அர்ஷ் அவனை அவ்வடிவில் காணும் எனில் அவனது அழகின் இன்பத்தால் உருகிவிடும். பரவசங்கள், ஆன்மிக நிலைகள் மற்றும் ஏக்கங்களும் காதலும் ஆர்வமும் நிரம்பிய களிப்பூட்டும் சந்திப்புக்கள் ஆகியவற்றின் கடல்களுக்குள் நான் மூழ்கினேன். பிறகு நான் என்னை தியான விடுதியின் உள் முற்றத்தில் அமர்ந்தவனாகக் கண்டேன். சத்தியப் பரம்பொருள் மேலும் அழகுடன் அதே தோற்றத்தில் வந்தான். அவனுடன்தான் எத்தனை எத்தனை வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள்! அவன் அவற்றை என் முன் கொட்டினான். நான் நெருக்கம் மற்றும் ஆனந்தத்தின் நிலையில் இருந்தேன். நான் உருகிவிடும்படியான ஒரு நிலையில் என் உயிர் இருந்தது. அவனது திருப்பண்புகள் மற்றும் புகழ்ச்சிக்குரிய குணங்களின் அழகு எனக்குக் காட்டப்பட்டபோது அவன் என்னை விட்டும் மறைந்து கொண்டான்.

#144 மிக உயர்ந்த ‘இல்லிய்யீன்’ (2)

      ஒரு மணி நேரத்தில் நான் ’இல்லிய்யீன்’ என்னும் உயர் தளத்தில் எழுந்தேன். அங்கே இறைத்தூதர்களும் வானவர்களும் இறைநேசர்களும் வரிசைகளில் நிற்கக் கண்டேன், அவர்களில் சிலர் இறை பிரசன்னத்தை நாடியவர்களாக. அவர்கள் வியப்பின் ஆடைகளை அணிந்திருந்தனர். ஏக்கமும் அழுகையும் பிதற்றலும் கொண்டு போதையுடன் நான் அவனை நோக்கி விரைந்தேன். பிரகாசத்தின் முற்றத்தில் நான் எனது தலையை வைத்தேன். என் கண்களிலிருந்து பெருகிய ரத்தம் என் வெளிறிய முகத்தின் மீது வழிந்தது. அவனிடம் என்னைக் காட்டிலும் பணிவான எவரையும் நான் காணவில்லை. அவனுடனான இணைவு எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. நாங்கள் எல்லாரும் திரும்பினோம். எம்மில் ஒருவரும் அவனது ஒளிகளிலிருந்து ஓர் அணுவைக் கூட அடையவில்லை. நாங்கள் திகைத்துப் போயிருந்தோம். நான் திகைப்பின் நிலையில் அமர்ந்து என்னையே தூற்றிக் கொண்டிருந்தேன். கற்பனைக் கடல்களில் எனது உள்ளுணர்வு மூழ்கிக் கொண்டிருந்தது. எனது எண்ணங்களின் போர்க்களத்தில் நான் அவற்றை எல்லாம் நிராகரித்துக் கொண்டிருந்தேன். தெய்வீகத்தின் தரிசனம் சிரிப்பின் வடிவத்தில் எனக்கு வெளிப்படுத்தப் படும்வரை நான் அதே நிலையில் இருந்தேன். அங்கே படைப்புக்களும் காலமும் அந்த சிரிப்பின் இன்பத்தில் தாமும் சிரித்தன.

(to be continued...)

No comments:

Post a Comment