Wednesday, May 29, 2019

ஒரு சூஃபியின் டைரி - 19













#145 சக்தியிரவு (லைலத்துல் கத்ரு)

      ரமலான் மாதத்தின் பதினெட்டாம் இரவாகிய சக்தியிரவு (லைலத்துல் கத்ரு) பற்றி நான் சிந்தித்திருந்தேன். அவன் எனக்கு அவ்விரவை ஒவ்வோராண்டும் காட்டித் தருகிறான் என்பது எனது ஆன்மிக வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் அவன் எனது மதியத் தொழுகைக்குப் பின் அல்லது சில சமயம் மாலைத் தொழுகைக்குப் பின், லைலத்துல் கத்ரு பற்றிய இரண்டு திருவசனங்களின் அடிப்படையிலான ஏதேனுமொரு அகக்காட்சியை வழங்குவான். அவ்விரவு நிகழ்வதற்கு முன்பாக வானவருலகில் உள்ள வடிவங்கள் பற்றிய குறிப்புக்களை அவன் எனக்குக் காட்டுவான். 

      தொழும்போது நான் என மனதிற்குள் நினைத்தேன், “இறைவா! மகத்தான இரவின் திருக்காட்சியை விட்டு என்னைத் தடுத்துவிடாதே!” உயரமான இல்லிய்யூன் வரையில் விண்ணுலகப் பகுதிகளின் கதவுகள் திறக்கப்படுவதைக் கண்டேன். அதில் வானவர்களும் ஆன்மாக்களும் உலகிற்குத் தாம் இறங்குவது பற்றிச் சற்றே குழம்பியிருப்பவர்களாகத் தென்பட்டனர். சுவனவாசிகளைக் கண்டேன். ரிள்வான் (சொர்க்கத்தின் காவலர்) ஹூரிக(ள் என்னும் சொர்க்கக் கன்னிக)ளுக்கு ஆணை இட்டார், மணப்பெண்களைப் போல் அவர்கள் தமது கைகளிலும் பாதங்களிலும் மருதாணி இட்டுக்கொள்ள. சில வானவர்கள் கொம்புகளும் முழவுகளும் போர் முரசுகளும் எடுத்து வரக் கண்டேன். மேலான இறைவனின் வாசலில் துருக்கி முரசுகள் இருக்கக் கண்டேன். அவர்கள் அதனை ஒலிக்க ஆயத்தம் ஆனார்கள். இறைவனின் பிரசன்னத்தில் இருந்து உலக மக்கள் அனைவர் மீதும் சிவப்பு ரோஜாக்கள் பொழியப்பட இருப்பதைப் பார்த்தேன். இறைத்தூதர்களும் நல்லடியார்களும் குழுமியும் பிரிந்தும் இருக்கக் கண்டேன். மகத்துவம் மற்றும் வல்லமையின் வடிவில் மேலான இறைவன் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்திக் காட்டப்போகிறான் எனக் கண்டேன்.

      இருபத்தியோராம் இரவே மகத்தான இரவு என்று அவன் எனக்கு உணர்த்தினான். வானவர் தலைவர் ஜிப்ரீலுடன் சேர்ந்து மகத்தான இரவில் இறங்கி வரும்போது கொண்டாடுவதும் சிரிப்பதும் வானவர்கள் மற்றும் ஆன்மாக்களின் வழக்கம். சில நேரங்களில் நான் அவர்களைத் துருக்கியர்களாகவும், சில நேரங்களில் நீணெடுங் கூந்தல் கொண்ட, அழகிய முகங்கள் கொண்ட மணப்பெண்களாகவும் கண்டேன். அவர்களில் சிலரை நான் மான்களின் வடிவில் கண்டேன். ஜிப்ரீல் அவர்களைப் போல் அழகிய முகம் கொண்ட வேறொரு வானவரை நான் காணவில்லை.

      அவ்விரவின் விடியலில் நான் இறைவனைத் தேடினேன். தூர்சீனா மலையில் மூசா நபியுடன் பேசியது போல் அவன் என்னிடம் பேசினான். சில மலைகள் பிளந்து விட்டன. தூர்சீனா மலையின் கிழக்குப் புறத்தில் அதிலொரு சாளரம் இருப்பதைக் கண்டேன். மேலான சத்தியப் பரம்பொருள் அந்த ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்து என்னிடம் சொன்னான், “இவ்வாறுதான் நான் மூசாவுக்கு என்னைக் காட்டினேன்.” மூசா நபி இறைவனைக் கண்டு மயக்கமுற்றவர்களாக மலையிலிருந்து அதன் அடிவாரத்திற்கு விழுவதைப் பார்த்தேன். இதனை விடவும் மேலும் அழகானதொரு அகக் காட்சியையும் கண்டேன்.



























#146 பச்சாதாபக் கண்ணீர்கள்
      
 இறைநேசர்களில் இறைவனை பரவசக் காட்சிகளின் மூலம் அறிபவர்களுக்கு எதிராகச் சில ’குர்ஆன் ஓதுவார்கள்’ (காரிய்யீன்) மற்றும் அதிகாரிகள் எழுதியிருப்பது பற்றிய கதைகளை இன்று நான் கேள்விப்பட்டேன். அந்த இறைஞானிகள் திரைநீக்கம் (கஷ்ஃப்) என்பது அருளப்பட்ட நபர்களில் ஏகத்துவ ஞானம் மிக்கவர்கள், சாட்சிநிலை வாய்க்கப்பட்டோருள் மிகவும் உண்மையாளர்கள். அந்த குறைகூறிகள் இந்த இறைநேசர்களின் ஆன்மிகப் படித்தரங்களை மறுக்கிறார்கள். இது என்னை நோகச் செய்தது. ”அவதூறுக்கான பிராயச்சித்தம் அதனால் தாக்கப்பட்டவர்களுக்காக் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருதலே” என்று சொல்லப்பட்டிருப்பதால் நான் இறைவனிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினேன்.

      பிறகு நான் மாலைத் தொழுகையை நிறைவேற்றினேன். பிறகு நான் பாலைவனத்தில் ஒரு மஞ்சள் நிற நாயைக் கண்டேன். அவதூறு பேசியோர் எல்லாம் அங்கே தமது வாயைப் பிளந்து கொண்டு நிற்பதைக் கண்டேன். அந்த நாய் தனது வாயால் கவ்வி அவர்களின் வாயிலிருந்து நாவுகளை வெளியே உருவிக் கொண்டிருந்தது. ஒரு கணத்திற்குள் அது அவர்களின் நாவுகளை எல்லாம் தின்று விட்டது. அத்துடன் காட்சி முடிந்தது. அது ரமலான் மாதத்தின் இருபதாம் நாளுக்கு முந்திய இரவு. யாரோவொருவர் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த நாய் நரகத்தின் நாய்களில் ஒன்று. அவதூறு பேசுவோரின் நாவுகளே அதற்கு தினமும் உணவு. யாருடைய நாவை இந்த நாய் தின்கிறதோ அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.”

      தனது தண்டனையை விட்டும் என்னைக் காப்பாற்றுமாறு நான் இறைவனிடம் அழுது புலம்பிக் கெஞ்சினேன். பிறகு நான் யோசித்தேன், புறம் பேசுவது இத்தகைய விளைவைக் கொண்டு வரும் என்றால் வருந்தி திருந்தி மன்னிப்புக் கேட்டு அழுகின்ற பச்சாதாபத்திற்கு என்ன சன்மானம் கிடைக்கும்?

      பிறகு நான் அழகிய வானவர்கள் வந்து எனது கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பருகுவதைக் கண்டேன். ”நாங்கள் மேலான இறைவனுக்காக நோன்பு வைப்பவர்கள். உங்களுடைய கண்ணீரைக் கொண்டே நாங்கள் நோன்பு திறக்கிறோம்.” பிறகு, மதீனாவிலிருந்து என்னை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருவதைக் கண்டேன். அவரின் தோற்றம் கம்பீரமாக அச்சமூட்டுவதாக இருந்தது. துருக்கியரின் அங்கியும் தொப்பியும் அணிந்திருந்தார்கள். அவர்களின் வலது கரத்தில் ஒரு வில் இருந்தது. இடது கரத்தில் அம்புகளைப் பிடித்திருந்தார். அவர்கள் தனது வாயைத் திறந்து எனது நாவை எடுத்து மிக மென்மையாகத் தனது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் ஆதம், நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் அனைத்து இறைத்தூதர்களும் அங்கே வரக் கண்டேன். அவர்கள் எல்லாம் எனது நாவைத் தமது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல். இஸ்ராயீல் மற்றும் அனைத்து வானவர்களையும் கண்டேன். அவர்களும் எனது நாவைத் தமது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு இறைஞானிகளும் நல்லடியார்களும் அப்படியே செய்தார்கள்.

      பரவசங்களும் பெருமூச்சுக்களும் அழுகைகளும் என்னை ஆட்கொண்டன. வல்லமை மற்றும் அழகின் வடிவில் மேலான இறைவன் வானவருலகின் திரைகளைத் தூக்கினான். அப்போது ஆதமின் தோற்றத்தில் திருப்பண்புகளின் வெளிப்பாடுகளைக் கண்டேன். பிறகு அவன் இன்னொரு படித்தரத்தில் தனது மகத்துவம் மற்றும் வல்லமையைக் காட்டியருளினான். எழுபது படித்தரங்களில் நான் அவனைக் காணும்வரை அப்படியே தொடர்ந்தது. ஒவ்வொரு படித்தரத்திலும் முன்பு நான் அவனைக் கண்டது போலவே இருந்தான், குறிப்பாக இந்த குணத்தில். அவன் என்னுடன் மகத்தான பேச்சுடன் பேசினான். ஒவ்வொரு பேச்சிலும் நான் அவனுக்குச் செவி சாய்த்தேன். பிறகு அவன் என்னை அபிவிருத்தியின் மேஜையில் அமர வைத்தான். அவன் மீது நான் மகத்துவத்தின் வண்ணங்களைக் கண்டேன். அதுபோல் அதுவரை என் இதயத்தில் நிகழ்ந்ததே இல்லை. பிறகு அந்தப் பொருட்களை விட்டும் என்னை மேலான இறைவன் தன் பக்கம் இழுத்தான்.

      நான் இறைவனிடம் கேட்டேன், “இறைவா! நீ உண்ணுதல் பருகுதல் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவன். நான் பச்சாதாபத்தில் அழுதபோது வானவர்கள் எனது கண்ணீரைப் பருகினார்கள். ஏக்கத்திலும் தரிசனத்திலும் நான் அழுகின்ற கண்ணீரை அவர்கள் என்ன செய்கிறார்கள்?” அவன் சொன்னான், “அது எனது மது.” இது அவனது கருணை தனது இறைத்தூதர்கள் மற்றும் நேசர்களிடம் (அன்பியா வ அவ்லியா) கொண்டிருக்குமொரு விதியாகும். ஏனெனில், அவன் காலத்தின் பண்புகளைக் கடந்தவன்.























#147 பசியுள்ள விருந்தினர்
      
 ”ஒரு வேளை உணவுக்கு நான் உமது விருந்தினராக இருப்பேன்” என்று அவன் மூசா நபியிடம் சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா? மேலான இறைவனின் வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கையால் அவர் நல்ல உணவுகளைத் தயாரித்து வைத்துக்கொண்டு இறைநேசர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். ஓர் ஏழை மனிதர் வந்து மூசா நபியிடம் மிகவும் கடுகடுப்புடன் யாசகம் கேட்டார். மூசா நபி சொன்னார்கள், “ஒரு ஜாடியை எடுத்துக்கொண்டு நைல் நதியில் நீர் நிரப்பி வா. பிறகு நீ வேண்டியதைச் சாப்பிடு.” அந்த ஏழை மறைந்துபோனார். மூசா நபியின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேஜை மீது இருந்தவற்றை எல்லாம் யூதர்கள் தின்று தீர்த்தார்கள். பிறகு மூசா நபி தூர்சீனா மலைக்குப் போனார்கள். “என் இறைவனே! என் ரட்சகனே! நீ என் விருந்திற்கு வரவில்லையே?” என்று கேட்டார்கள். “நான் உன்னிடம் வந்து உணவு கேட்டேன். ஆனால் நீ என்னை நைல் நதிக்கு அனுப்பி விட்டாய்” என்று இறைவன் அவர்களிடம் சொன்னான். “இறைவா! நீ அத்தகைய நிலையை விட்டும் தூய்மையானவன், அப்பாலானவன்” என்று மூசா நபி சொன்னார்கள். “மூசாவே! ஒரு ஏழைக்கு நீங்கள் உணவூட்டும்போது நீங்கள் எனக்கே உணவூட்டுகின்றீர் என்பது உமக்குத் தெரியாதா?” என்று இறைவன் கேட்டான். இவ்வாறு நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.



 























 #148 ”அருளாளன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான்”

      மகத்துவம், நித்தியம் மற்றும் தெய்வீகப் பிரசன்னம் ஆகியவற்றின் வடிவில் மேலான இறைவனை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். பிறகு, எந்தப் படித்தரமும் மிஞ்சாத நிலையில் நான் அவனை புனித வடிவத்தில் நெருக்கத்தின் வல்லமையில் கண்டேன். நித்தியம் பூர்வீகம் மற்றும் முடிவற்ற மறுமை ஆகியவற்றின் கடல்களுக்குள் நான் பாய்ந்தேன். பிறகு எனது குணங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் நான் வானவருலகிற்கு இறங்கினேன். அவனது வல்லமையின் முன் அனைத்துப் படைப்புக்களும் கடுகு விதையினும் சிறியதாய் இருக்கக் கண்டேன். பிறகு நான் போதையில் பிதற்றியபடிப் பூர்வீகத்தின் வெளிகளில் அலைந்தேன். அவன் தனது கருணை மற்றும் அழகின் ஆடைகளை எனக்கு அணிவித்தான். அங்கே நான் மேலான இறைவனின் காதலனாக இருந்தேன். அவன் என்னைக் காதலித்தான். அவன் என்னிடம் அன்பாக இருந்த விதத்தை அவன் நாடியவர்களுக்கே அன்றி அவனின் படைப்புக்களில் வேறு யாரிடம் நான் சொன்னாலும் அதனை அவர்களால் தாங்கவே முடியாது. பிறகு அவன் என் மீது அவனது திருப்பண்புகளைப் போர்த்தி அவனது சுயத்தை என்னுடன் இணைத்தான். பிறகு நான் நானே அவன் என்பதைப் போல் கண்டேன். என்னை அன்றி வேறு எதுவும் என் நினைவில் இல்லை. அந்தப் புள்ளியில் நின்றுவிட்டேன். பிறகு ரட்சகத்தன்மையில் இருந்து அடிமை நிலைக்கு இறங்கி வந்தேன்.

      பிறகு நான் என்னை வல்லமையின் இருப்பிடத்தில் காணும் வரை ஆழ்ந்த காதலின் படித்தரத்தை ஆசித்திருந்தேன். சத்தியப் பரம்பொருள் தெய்வீகத்தின் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருக்க நான் ஒரு மணி நேரம் நெருக்கத்தின் படித்தரத்தில் இருந்தேன், அவனன்றி உள்ள அனைத்தை விட்டும் மறைந்தவனாக. நெருக்கத்தின் படித்தரத்திற்காக நடுக்கம் மற்றும் அழுகையுடனும், கண்களால் தரிசித்ததற்காகப் பாராட்டுக்களுடனும் பலவிதப் பரவசங்கள் என்னை ஆட்கொண்டன.

      அவன் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தான். அப்போது நான் சிரம் பணிந்தேன். எனத் முதுகில் வல்லமையின் ஒளியினது சுமைகளைக் கண்டேன். “இறைவா! இது என்ன?” என்று கேட்டேன். “’அமர்தல்’ என்பதன் ஒளி” என்று சொன்னான். ”’அருளாளன் சிம்மானசத்தில் அமர்ந்துள்ளான்’ (அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா- குர்ஆன் 20:5) என்பதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். மேலான இறைவன் சொன்னான், “நான் அர்ஷை உள்ளமையில் கொண்டு வந்தபோது, அதிலிருந்து எனது உள்ளமையின் வெளிப்பாட்டை எவர் மீதெல்லாம் நான் நாடுகின்றேனோ, அதுவே எனது ‘அமர்தல்’ என்பதாகும்.” என் சகோதரா! இறைநேசர்களில் நஃபீ (இறைவன் அல்லாதவற்றை இல்லாமை என்பதாகக் காணும்) குருமார்களின் விசயம் இது. எவரேனுமொருவர் அந்த ஞானத்தின் இடத்தில் இல்லாமல் இந்த நூலைக் கண்டால் நான் இறைவனுக்கு மனித உருவத்தை வழங்குகிறேன் என்று என்னைச் சாடுவார். ஆனால் அவரது தலை துண்டிக்கப்படும்.




















#149 சக்தியிரவில் திகைப்புகள்

      ரமலான் மாதத்தின் இருபத்தோராம் இரவில், லைலத்துல் கத்ரு என்னும் சக்தியிரவில் மேலான இறைவனின் பேரருளால் நான் அற்புதமான வடிவங்களை தரிசித்தேன். அவற்றுள் நான் துருக்கியரின் தோற்றத்தில் வானவர்களைக் கண்டேன், சிலரை மணப்பெண்களின் தோற்றத்தில், மேலும் சிலரை காஃப் மலையின் உச்சியில். சிலர் மத்தளங் கொட்டக் கண்டேன். பிரசன்னத்தின் வாயிலில் ஜிப்ரீல் அவர்கள் ஒரு சிறுவனைப் போல் இசைக் கருவிகளை வாசித்திருக்கக் கண்டேன். பிரசன்னத்தின் மக்கள் யாவரையும் மகிழ்ச்சியும் சிரிப்பும் மிகைத்தன. அது மகத்தான இரவாதலால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது போல் மலையிலிருந்து பாலைவனத்திற்கு இறங்கி சமவெளியெங்கும் பரவினர். மேலான இறைவன் அவ்விரவின் முதற்பகுதியிலும் நடுவிலும் தன்னை வெளிப்படுத்தினான்; இரவின் முதற்பகுதியில் மறைவின் கருவறைகளிலிருந்தும் இரவின் நடுப்பகுதியில் இல்லிய்யீன் எனுமிடத்தின் உச்சத்திலிருந்தும் தன்னை ஒரு சிவப்பு ரோஜாவில் வெளிப்படுத்திக் கொள்வது போல. இந்தத் திரை நீக்கங்களில் எல்லாம் அவனை விடவும் அழகான ஒன்றை நான் காணவே இல்லை. பிறகு அவன் இரவின் கடைசிப் பகுதியில் தெய்வீகம் வல்லமை மற்றும் அழகு ஆகியவை அலங்கரித்த தோற்றத்தில் தன் முன் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் இறங்கினான். அவன் சொன்னான், “எனது நெருக்கத்திற்கும் எனது தரிசனத்திற்கும் எனது விருப்பத்திற்கேற்ப வழிநடத்தப்பட்டவது நீ மட்டுமே. நான் யாருக்கேனும் கருணையை நாடினால் மறைவுலகின் ஒரு கதவை அவருக்காகத் திறந்துவிடுவேன். ஆனால் யாரும் என்னை நெருங்கத் துனிவதில்லை. ஏனெனில், எனது நெருக்கம் என்பது ஆன்மிக ஞானத்தின் நெருக்கம். அது இடத் தொலைவு சார்ந்த நெருக்கம் அல்ல. உன்னை சஞ்சலப்படுத்தியது எது? முன், பின், தொலைவு, கீழ், மேல், இடம், வலம், கற்பனை, பாவனை, நெருக்கம், விலகல் என்று எதுவுமே இல்லாமல் நான் எனது சுய உள்ளமையால் இருக்கிறேன். எனக்கே மகத்துவம்! நான் பூர்வீகமானவன், நிரந்தரமானவன், காலாதீதன். நான் வல்லமையாளனாக, நிரந்தரமானவனாக, இடமேதுமின்றி இருக்கிறேன். அர்ஷுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் யாவும் திகைத்துள்ளன. அவற்றின் இதயங்களில் திகைப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. நீயும் திகைத்தோருள் ஒருவனே. உன் மீது யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை.”




















#150 இணைவுக்கான கோரிக்கை

      நான் சொன்னேன், “இறைவா! நான் அத்துடன் திருப்தி அடைய மாட்டேன்.” நான் அவனைப் பார்ப்பதைப் போன்றும் பார்க்காததைப் போன்றும் இருந்தது அது. ஏனெனில் நான் ஒருவித குருட்டுத்தன்மையில் இருந்தேன். பிறகு அவன் அந்த குருட்டுத் திரையை விலக்கினான். அப்போது நான் அவனை மறைவின் உள்ளுலகில் கண்டேன். அப்போதும் நான் விரும்பியது போல் அவனைக் காண முடியவில்லை. நான் அவனிடம் கெஞ்சி மன்றாடினேன். எனவே அவனை மறைவுலகின் வெளிப்புறத்தில் கண்டேன். அவனுடனான இணைவின் எதார்த்தத்தை நான் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கோபமும் வலியும் பொங்கியது. நான் சொன்னேன், “உனது அடியார்கள் உன்னை விட்டுத் திரும்பித் தமது தொழுகையில் தம்மையே நோக்கிக் கொள்கிறார்கள் என்பது சரிதான். இது என்ன சங்கடம்?” சிறிது நேரம் அப்படியே இருந்தேன். மேலான இறைவன் வானவருலகின் வெளிப்பகுதியில் தோன்றினான். நான் அவனை வல்லமை மற்றும் அழகின் வடிவத்தில் கண்டேன். அவன் என்னை தன்னருகில் இழுக்கவும் நான் அணுகினேன். அது நான் விரும்பியதைப் போன்றிருந்தது. ஆனால், பரவசம், ஞான நிலை, கூச்சல்கள், அழுகைகள் மற்றும் அவனது ஆட்கொள்ளும் அன்பும் அழகும் செய்யும் சஞ்சலங்கள், மற்றும் அவனுடனான இணைவின் இனிமை ஆகியவற்றின் அழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்நிலையில் சிறிது காலம் இருந்தேன்.


(தொடரும்...)

No comments:

Post a Comment