Friday, June 25, 2021

நேரம், இடம் மற்றும் சகாக்கள்

 

            பண்டைக் காலத்தில் மன்னன் ஒருவன் தர்வேஷ் ஒருவரை அழைத்துக் கூறினான்:

            ”குருமார்களின் இடையறாத தொடர்ச்சி ஆதி காலத்து மனிதர்களிடம் போய் சேர்கிறது என்று சொல்லப்படுகின்றது. அத்தகைய தர்வேஷ் பாதை வழங்கிய ஒளிதான் பற்பல விழுமியங்களைத் தூண்டி நடத்தி வந்துள்ளது. எனது இந்த அரசாட்சி அவற்றின் மங்கிய பிரதிபலிப்பே அன்றி வேறில்லை.”

            ”உண்மைதான்,” என்றார் தர்வேஷ்.

            ”நடப்பு நிகழ்வுகளின் உண்மை நிலையை அறியும் அளவுக்கு எனக்கு ஞானம் இருப்பதால், நீங்கள் உங்களின் மேன்மையான ஞான நிலையிலிருந்து கற்றுத் தரும் பேருண்மைகளை நான் கற்க ஆவலும் விருப்பமும் கொண்டுள்ளேன் – கற்றுக் கொடுங்கள்!”

            ”இது ஆணையா? அல்லது, கோரிக்கையா?” என்று தர்வேஷ் கேட்டார்.

            ”நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரியே,” என்றான் மன்னன். “அது ஒரு ஆணையாகத்தான் வேலை செய்யும் என்றாலும் நான் கற்பேன். அது ஒரு கோரிக்கையாகத்தான் வேலை செய்யும் என்றாலும் நான் கற்பேன்.”

            தர்வேஷ் பேசுவதற்காக அவன் காத்திருந்தான்.

            பல நிமிடங்கள் கழிந்தன. ஆழ்ந்து சிந்திப்பவர் போல் குனிந்திருந்த தலையை தர்வேஷ் மெல்ல உயர்த்தினார். பிறகு சொன்னார்:

            ”’ஒளிபரப்பு நேரம்’ வரும் வரை நீ காத்திருக்க வேண்டும்.”

            மன்னன் குழம்பிவிட்டான். தான் கற்றுக்கொள்ள விரும்புவதால் தனக்கு ஏதேனும் சொல்லப்பட அல்லது காட்டப்பட தான் உரிமை பெற்றிருப்பதாக அவன் கருதினான்.

            ஆனால் தர்வேஷ் அரசவையை விட்டு வெளியேறினார்.

            அதற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், தர்வேஷ் தொடர்ந்து அரசவைக்கு வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் நாட்டின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்து நடந்தன. நாட்டில் இன்பமான நிலைகளும் சோதனையான சூழல்களும் மாறி மாறி வந்து போயின. அமைச்சர்களும் ஆளுநர்களும் ஆளாளுக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளித்தனர். வானச் சக்கரம் சுழன்றது.

            ஒட்டுக்கள் போட்ட நீண்ட அங்கி அணிந்த தர்வேஷ் ஒவ்வொரு முறை தன் கண்ணில் படும்போதும் அரசன் நினைத்தான்: ”தினமும் தர்வேஷ் இங்கே வருகிறார். ஆனால் அவர் ஒருபோதும் எனது ஞானக் கல்வியைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. அரசவையின் பல்வேறு பணிகளில் அவர் பங்கெடுக்கிறார் என்பது உண்மைதான்; அவர் பேசுகிறார், சிரிக்கிறார், சாப்பிடுகிறார்… சந்தேகமில்லை, அவர் தூங்கவும்தான் செய்கிறார். ஏதேனும் தெய்வீக சமிக்ஞை வர வேண்டும் என்று அவர் காத்திருக்கிறாரோ?” ஆனால், மண்டை காய எவ்வளவு யோசித்தாலும் இந்த மர்மத்தின் ஆழங்களை அரசனால் அளக்க முடியவில்லை.

            உரிய காலம் வந்ததும், மறைவின் அலை ஒன்று சாத்தியத்தின் கரையை மோதியது. அப்போது அரசவையில் ஓர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவர் சொன்னார், “தாவூது சாஹில்தான் இந்த உலகத்திலேயே மாபெரும் பாடகர்.”

            இது போன்ற கருத்துக்கள் எல்லாம் அரசரின் மனதை அவ்வளவாக ஈர்க்காது. ஆனால், இம்முறை அவர் அந்தப் பாடகரின் பாட்டைக் கேட்டே ஆக வேண்டும் என்று தீராத ஆவல் தீயைப் போல் பற்றிக்கொண்டது.

            ”அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்,” என்று ஆணை பிறந்தது.

            நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் பொறுப்பாளரை அந்தப் பாடகரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், பாடகர்களின் பேரரசரான தாவூது சொன்னார்: ”உங்களின் அரசருக்குப் பாடல் கலையைப் பற்றிப் போதிய ஞானம் இல்லை. வெறுமனே என் முகத்தைப் பார்ப்பதுதான் அவரின் விருப்பம் என்றால் நான் வருகிறேன். ஆனால், நான் பாடுவதைக் கேட்க அவருக்கு ஆசை எனில், எல்லாரையும் போன்று, எனக்குச் சரியான மனநிலை ஏற்படும்வரை அவர் காத்திருக்கத்தான் வேண்டும். எப்போது பாட வேண்டும் எப்போது கூடாது என்ற உணர்வுதான் என்னை உருவாக்கியிருக்கிறது. அந்த ரகசியத்தை அறிந்தால் உலகில் எந்தவொரு கழுதையும் சிறந்த பாடகர் ஆகிவிடும்.”

            இந்தச் செய்தி அரசனிடம் சொல்லப்பட்டபோது அவன் கோபத்திற்கும் ஆசைக்கும் இடையில் ஊசலாடினான். அவன் சொன்னான்: “எனக்காகப் பாடும்படி அவனை வற்புறுத்த இங்கே ஒருவர்கூட இல்லையா? அவனுக்குத் தோன்றும்போதுதான் அவன் பாடுவான் என்றால், நான் என்ன தொக்கா? நானும் எனக்குத் தோன்றும் போதுதான் கேட்பேன்.”

            மன்னன் அப்படிச் சொன்னதும் தர்வேஷ் எழுந்து நின்று சொன்னார்:

            ”காலத்தின் மயிலே! அந்தப் பாடகரைச் சந்திக்க என்னுடன் வாரும்!”

            அரசவையில் பெரிய சலசலப்பு தோன்றியது. எதிரும் புதிருமாகக் கருத்துக்கள் பிய்த்துக்கொண்டன. தர்வேஷ் ஓர் ஆழமான சூழ்ச்சி பண்ணிவிட்டார், இப்போது அவர் இந்தப் பாடகனை வைத்து விளையாடப் பார்க்கிறார் என்று சிலர் சொன்னார்கள். பாடகரை அவர் பாட வைத்துவிட்டால் அரசர் அவருக்குப் பெரிய சன்மானம் வழங்குவார் என்பது சிலரின் கருத்து. ஆனால், சவாலுக்கு அஞ்சி அவர்கள் வாயை மூடிக் கொண்டிருந்தனர்.

            ஒரு வார்த்தையும் பேசாமல் அரசன் எழுந்து நின்று தனக்கொரு ஏழ்மையான ஆடையைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அதை அணிந்து கொண்டு, தர்வேஷைப் பின் தொடர்ந்து வீதியில் நடந்தான்.

            மாறுவேடமிட்ட மன்னனும் அவனின் வழிகாட்டியான தர்வேஷும் விரைவிலேயே பாடகரின் வீட்டு வாசலில் நின்றனர். அவர்கள் கதவைத் தட்டியதும் தாவூதின் குரல் வந்தது:

            ”இன்று நான் பாடவில்லை. என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். நீங்கள் போகலாம்.”

            ஆனால், தர்வேஷ் அங்கே அமர்ந்து உடனே பாடத் தொடங்கிவிட்டார்! தாவூதுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றை அவர் பாடினார். ஆரம்பம் முதல் இறுதி வரை அதை அவர் சரியாகப் பாடினார்.

            இசை விற்பன்னர் அல்லாத அரசன் அவரின் பாடலைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டான். அவனுடைய கவனம் எல்லாம் இப்போது தர்வேஷின் இனிய குரலில் ஊன்றி நின்றது. தர்வேஷ் அந்தப் பாடலை வேண்டும் என்றே சற்று சுருதிப் பிசகாகப் பாடினார் என்பதை அவன் அறியவில்லை. அந்தப் பிழையைத் திருத்த வேண்டும் என்னும் ஆவலை தாவூதின் உள்ளத்தில் தூண்டவே அவர் அப்படிப் பாடினார்.

            ”தயவு செய்து அதை மீண்டும் பாடுங்கள்,” என்று அரசன் கெஞ்சினான். “இது மாதிரியான ஓர் இனிய இசையை நான் கேட்டதே இல்லை!”

            அரசன் கெஞ்சுவதைக் கேட்ட தாவூது தானே பாடத் தொடங்கினார். அவர் ஆரம்பித்த முதல் ஸ்வரத்திலேயே அரசனும் தர்வேஷும் மெய் மறந்து உறைந்துவிட்டார்கள். சாஹிலின் குயில் கழுத்தில் இருந்து பெருகிப் பாய்ந்த ஸ்வரப் பிரவாகத்தில் அவர்களின் கவனம் இணைந்து ஒன்றாகிவிட்டது.

            பாடல் முடிந்ததும், விலையுயர்ந்த பரிசுகளை தாவூதுக்கு அரசன் வழங்கினான். அவன் தர்வேஷிடம் சொன்னான்: “மகா ஞானியே! காலத்தின் குயிலான பாடகரைத் தூண்டிய உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். எனது அரசவையில் உங்களையும் ஆலோசகராக நியமிக்க விரும்புகிறேன்.”

            ஆனால், தர்வேஷ் சொன்னார்: “மேன்மைமிகு மன்னரே! நீங்கள் விரும்பும் பாடலை நீங்கள் கேட்க வேண்டும் என்றால் முதலில் அங்கே பாடகர் ஆயத்தமாக இருக்க வேண்டும், அடுத்து நீங்கள் அங்கே இருக்க வேண்டும், அப்புறம் பாடலைத் தூண்டி விடுவதற்கான ஊடகமாக அங்கே ஒருவர் இருக்க வேண்டும். மேதையான பாடகர்களிடம் அரசர்களுக்கு இருக்கும் இதே நிலைதான் தர்வேஷ்களிடம் அவர்களின் மாணவர்களுக்கான நிலையும். நேரம், இடம், சகாக்கள் மற்றும் திறமைகள்.”

db

            ’குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் சூஃபிக் கருத்துக்களைப் பயில முடியும், அவற்றுள் நேரம், இடம் மற்றும் சகாக்கள் ஆகியவை அடங்கும்’ என்னும் கருத்து சூஃபிகளுக்கும் வெளிரங்கமான சமய அறிஞர்களுக்கும் இடையில் உள்ள பிணககை அழுத்தமாகக் காட்டுகிறது.

            சூஃபிகளின் அனுபவங்களுக்கான ஆதாரங்களை மார்க்க அறிஞர்கள் தமது கல்வியின் ‘புழக்க மொழி’யிலேயே கோருகின்றனர். கல்வியாளர்கள் அல்லது விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் சூழ்நிலைகளை உருவாக்கும் வாய்ப்பையே சூஃபிகளும் கோருகின்றார்கள் என்பதை இந்தக் கதையைப் போன்றே, பல சூஃபி கதைகள் சுட்டிக் காட்டுகின்றன.


            இந்தப் பிரதி சையிது இமாம் அலீ ஷாஹ் அவர்களின் போதனைகளில் இருந்து எடுக்கப்பட்டது. 1880-இல் மறைந்த அவர்களின் அடக்கத்தலம் இந்தியாவில் குர்தாஸ்பூர் என்னுமிடத்தில் இருக்கிறது.

            ”சை” (Psi) என்று நவீன மீவுளவியல் அழைக்கும் தன்மையிலான நிகழ்வுகள் அவரைப் பற்றி அதிகம் சொல்லப்பட்டதால் எப்போதும் அவரைச் சுற்றி பற்பல ஆன்மிகப் பள்ளிகளைச் சேர்ந்த எதிர்காலச் சீடர்களும் ஆர்வலர்களும் மொய்த்துக் கொண்டிருந்தனர். அவர் தமது கனவில் தோன்றி மிக அவசியமான ஆலோசனைகளைக் கூறினார் என்றும், ஒரே நேரத்தில் அவர் பல இடங்களில் காட்சி அளித்தார் என்றும், அவர் என்ன கூறினாலும் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சாதகமான வழிகாட்டுதல் அதில் இருக்கும் என்றும் மக்கள் சொல்லிக் கொண்டார்கள். ஆனால், நேரில் வந்து அவரைப் பார்த்தால் அவரிடம் அமானுஷ்யமாகவோ அசாதாரணமாகவோ எதுவுமே இருக்காது.

இக்கதைக்கு நான் எழுதிய பிற்குறிப்பு:


              இந்தக் கதையின் தலைப்பே இசை குறித்த ஒரு சூஃபிக் கோட்பாட்டைத்தான் குறிக்கிறது. சூஃபிகள் ஆன்மிக இசை நிகழ்வை “சமா” என்று அழைக்கிறார்கள். “சமீஃ” (கேட்போன்) என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்று. அதனடியாகவே இச்சொல் உருவாகியுள்ளது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி குரு அபுல் ஹசன் அலீ இப்னு உத்மானுல் ஹுஜ்வீரி அவர்கள் எழுதிய “கஷ்ஃபுல் மஹ்ஜூப்” என்னும் நூலே பாரசீக மொழியில் எழுதப்பட்ட முதல் சூஃபித்துவ விளக்க நூல் என்று கருதப்படுகிறது. அவர்கள் அந்நூலில், சூஃபிகள் ’சமா’ நடத்துவதற்கு மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்: நேரம் இடம் மற்றும் சகாக்கள் (ஜமான், ம(க்)கான், ரிந்தான்).

            இந்தக் கதை அக்பர் தனது அரசவைப் பாடகரான மியான் தான்சேனின் குருவான சுவாமி ஹரிதாஸ் அவர்களைச் சந்தித்த கதையை நினைவூட்டுகிறது. அக்பர் தனது அவையில் ‘நவரத்தினங்கள்’ என்னும் பெயரில் ஒன்பது பேரைத் திரட்டியிருந்தார். ஒவ்வொருவரும் அவரவர் துறையின் மாமேதைகள். இசைத்துறைக்கு மியான் தான்சேன். ஆனால், தன்னை விடத் தனது குரு ஹரிதாஸ் அவர்கள்தான் இசையின் சிகரம் என்று தான்சேன் கூறியதைக் கேட்டதில் இருந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் அக்பருக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால், சுவாமி ஹரிதாஸ் பிருந்தாவனில் ’நிதி வன்’ என்னும் சோலையில் ஒரு சிறு குடியில் வசித்தார். ‘என் குரு அரசவைக்கெல்லாம் வர மாட்டார். அவர் அரசருக்காகவும் பாட மாட்டார். அவருக்குத் தோன்றும்போது இறைவனுக்காக மட்டுமே பாடுவார்,” என்று தான்சேன் சொன்னார். எனவே அக்பர் ஒரு சாதாரணக் குடிமகனாக மாறுவேடம் புனைந்து கொண்டு தான்சேனுடன் சென்று சுவாமி ஹரிதாஸின் பாடலைக் கேட்டார். ஹரிதாஸின் சீடர்களில் இருவர் மிகவும் புகழ் பெற்றனர்: ஒருவர் தான்சேன். அவர் அரசவைப் பாடகராகப் புகழ் ஈட்டினார். மற்றவர் பைஜு பாவ்ரா. அவர் தனது குருவைப் போன்றே பக்திப் பாடகராக இருந்தார்.

            அக்பரின் வாழ்வில் நிகழ்ந்த இக்கதையை நான் முதன் முதலில் ஓஷோவின் நூலொன்றில்தான் படித்தேன். (”Zarathustra A God That Can Dance – Talks on Fredrich Nietzsche’s ‘Thus Spake Zarathustra” என்னும் அவரது நூலின் பத்தாம் அத்தியாயத்தில் இக்கதை சொல்லப்பட்டுள்ளது.) அக்பர் மாறுவேடம் இட்டுக்கொண்டு நடுசாத்தில் மூன்று மணிக்குக் கிளம்பிச் சென்று சுவாமி ஹரிதாஸின் குடிசைக்கு வெளியே ஒளிந்து நின்று அவரின் பாடலைக் கேட்டார் என்கிறார் ஓஷோ. “ஒரு மன்னர், ஏறத்தாழ இந்தியா முழுவதையும் ஆட்சி புரிந்த பேரரசர், இசை கேட்பதற்காக ஒரு திருடனைப் போல் சென்றார்! அவர் அந்த இசையைக் கேட்டபோது அக்பரின் கண்களில் இருந்து ஆனந்தக் களிப்பின் கண்ணீர் வழிந்தோடியது. தான்சேனால் அதை நம்பவே முடியவில்லை,” என்று ஓஷோ சொல்வது இந்த சூஃபிக் கதையில் காணப்படும் காட்சியை அப்படியே ஒத்திருக்கிறது.


No comments:

Post a Comment