Saturday, July 10, 2021

அத்தர் வியாபாரிகளின் தெருவில்

 


                   அத்தர் கடைத்தெருவில் சென்று கொண்டிருந்த தோட்டி ஒருவன் திடீரென்று மயங்கி விழுந்துவிட்டான். பல்வேறு அத்தர்களைக் கொண்டு அவனை எழுப்ப முயன்றார்கள். நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. அவன் செத்தவன் போல் விறைத்துக் கிடந்தான்.

            அப்போது அங்கே மூத்த தோட்டி ஒருவர் வந்தார். சூழ்நிலையைப் புரிந்துகொண்டார். துர்நாற்றம் அடிக்கும் ஏதோ ஒன்றை அவனின் மூக்கருகில் வைத்தார். அவன் உடனே விழித்து எழுந்துவிட்டான். “அடடா! என்னவொரு வாசனை!” என்று அவன் வியந்து கூறினான்.

            நீ பழக்கப்பட்டுப் போன எந்தவொரு பொருளும் இல்லாத நிலைக்குக் கடந்து செல்ல உன்னை நீ தயார்ப்படுத்த வேண்டும். நீ இறந்த பிறகு பெறப்போகும் அனுபவம் எதுவோ அதற்கான முன் அனுபவத்தை இங்கேயே நீ அடைய முயற்சி செய். அது மிக அரிதாகவே கிடைக்கும்.

            நீ புழங்கிப் பழக்கப்பட்ட ஒரு சில பொருட்களின் மீது உன் பற்று மிகவும் இறுகிப் போய்விட்டால் அது உனக்குத் துன்பத்தையே கொண்டு வரும், அத்தர் கடைத் தெருவில் சென்ற தோட்டியை அத்தரின் நறுமணம் மயக்கம் போட வைத்தது போல்.

db

            இந்த நீதிக் கதைக்கு விளக்கம் தேவையில்லை. பதினோராம் நூற்றாண்டில் இமாம் கஸ்ஸாலி எழுதிய கீமியாயே சஆதத் (’பேரின்ப ரசவாதம்’) என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. புலப்பட்டுள்ள இவ்வுலகில் ஒரு சில பொருட்கள் மட்டுமே உள்ளமையின் வேறு பரிமாணத்துடன் (மறுவுலகுடன்) தொடர்பு கொண்டுள்ளன என்னும் சூஃபி போதனையை இக்கதையின் மூலம் அவர் உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment