வாழ்க்கை
நிரந்தரம் இல்லை, வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை என்னும் சிந்தனை எழாத மனிதன் இருக்க
முடியாது. அதைப் பாடாத கவிஞனும் இருக்க முடியாது.
நிலையாமை பற்றி எத்தனையோ கவிதைகள் உள்ளன. அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை மிக எளிதில் எதிர்மறைத் தொனியைப் பெற்றுவிடலாம். அதில் ஒரு சோர்வும் சோகமும் சுலபமாகச் சேர்ந்துவிடும்.
நிலையாமை
பற்றிப் பேசும் கவிதை ஒன்று தன் அழகால் நம்மை வசீகரிக்கிறது என்பது மிகவும் அரிதானது.
ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் அத்தகைய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். “Nothing
gold can stay” என்னும் கடைசி வரியே அதன் தலைப்பாக இடப்படுகிறது.
அது
மிகவும் சிறிய கவிதை. எட்டு வரிகள் மட்டுமே. ஒவ்வொரு வரியும் மிக நிதானமாக நகரும் கவிதை
அது. ஆம், அந்தக் கவிதையை நாம் அவசரமாக வாசிக்க முடியாது. அதன் அகத்திலேயே ஓர் உள்ளார்ந்த
நிதானம் இருக்கின்றது.
நிலையாமை
என்பது காலத்தால் உணரப்படும் ஒன்று. ’நேற்று இருந்தவன் இன்று இல்லை’ என்பதே இந்த உலகத்தின்
பெருமை என்கிறார் திருவள்ளுவர்.
நிலையாமையைப்
பேச வரும் ராபர்ட் ஃபிராஸ்ட் காலத்தையே கையில் எடுக்கிறார்:
இயற்கையின் முதற்பசுமை
தூய தங்கம்;
தக்க வைக்கக் கடினமானது
அவளின் இந்நிறம்.
விடியலில்
எல்லாம் பொன்னிறமாகப் பொலிகின்றன. இயற்கையின் முதற் பசுமை மீது மஞ்சள் வெயில் விழுந்து
அதைத் தங்கமாகப் பிரகாசிக்கச் செய்கிறது.
இயற்கை
என்பது இங்கே வாழ்க்கை என்பதன் குறியீடு என்று விமர்சகர்கள் விளக்கம் தருகின்றனர்.
முதற்பசுமை என்பது இளமைப் பருவம். தங்கம் என்பது வாழ்வின் மதிப்பு. தங்கமே உலோகங்களில்
மதிப்பு மிக்கது. அதுபோல் இளமைப் பருவமே வாழ்வில் மிகவும் மதிப்புடைய காலம்.
வைகறைப்
பொழுதில் சேவல் கூவும் காட்சியை வருணிக்கும் வள்ளலார் “பொற்கோழி கூவிற்று” என்கிறார்.
கோழி என்பது சேவலைக் குறிக்கும் பொதுப் பெயர். அது என்ன பொற்கோழி? அதிகாலையில் பொன்னிற
வெயில் தன் மேல் விழுவதால் சேவல் தங்கத்தால் ஆனது போல் தோன்றுகிறதாம். அதனால் அது பொற்கோழி!
இந்த
வரியைத் தலைப்பாக வைத்து ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ள திருலோக சீதாராம் இதற்கு ஒரு
நயமான விளக்கம் நவில்கிறார். பொன் என்பது பணத்தை, செல்வத்தைக் குறிக்கும். காலை விடிந்ததும்
மனிதர்களில் பலரையும் எழுப்பிவிடுவது அவர்கள் மனத்தில் உள்ள பணம் சேர்க்கும் ஆசைதான்.
பொன் என்னும் கோழியே அவர்களின் உள்ளத்தில் கூவி எழுப்புகிறது என்கிறார் அவர்.
ஆனால்,
அதிகாலையின் அந்தப் பொன்னிறம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அதுபோல் இளமைப் பருவம் என்பதும்
சீக்கிரமே போய்விடுகிறது.
இயற்கையின்
வண்ணங்களிலேயே இந்த விடியற் பொழுதின் தங்க நிறம்தான் தக்க வைக்க மிகவும் கடினமானது
என்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட். ஏன் இதைச் சொல்ல வேண்டும்? காரணம் உண்டு. தம் வாழ்வின்
பருவங்களில் மனிதர்கள் தக்க வைக்க நினைப்பது இளமைப் பருவத்தையே. பிள்ளைப் பருவத்தில்
இருக்கும்போது எப்போது வளர்ந்து வாலிபர் ஆவோம் என்று ஆசைப்படுகிறார்கள். முதுமை எட்டிப்
பார்க்கும் வயதில் இளமையை இழுத்துப் பிடித்து வைக்க என்னென்ன வழிகள் என்று எண்ணுகிறார்கள்.
அடுத்து
ஃபிராஸ்ட் சொல்கிறார்:
அவளின்
கொழுந்து இலை
ஒரு மலர்;
ஆனால் அது
சொற்ப நேரமே.
விடியலின்
பொற்கதிர்கள் செய்யும் ஜாலத்தால் கொழுந்து இலையே ஒரு மலரைப் போல் காட்சி தருகிறது.
எத்தனை அழகான காட்சிப் பிழை! புலன்களை ஏய்க்கும் மாய மயக்கு.
இளமைப்
பருவம் என்பது எல்லாருக்குமே உண்மையான மலராக இருப்பதில்லை. இளமையில் எல்லாருக்குமே
தம் வாழ்க்கை மலர்ந்து மணம் வீசப் போகிறது என்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது.
ஆனால், அரிதாக ஒரு சிலரின் வாழ்க்கை மட்டுமே மலர்கிறது. பலரின் வாழ்க்கை வெறும் இலையாகவே
இருந்துவிடுகிறது.
பிறகு
இலையாகத் தணிகிறது
இலை.
நான்
பூ இல்லை, வெறும் இலைதான் என்று வாழ்க்கை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆ! எத்தனை
வேதனையான ஒப்புதல்!
அப்படித்தான்
ஏதேன் தோட்டம்
சோகத்தில்
மூழ்கியது.
ஒவ்வொரு
இளைஞனும் ஆதம், ஒவ்வொரு இளைஞியும் ஏவாள். இளமைப் பருவம் அவர்களுக்கு சொர்க்கத்தின்
ருசியைக் காட்டுகிறது. அப்போது அவர்களின் வாழ்க்கை ஏதேன் தோட்டமாகவே இருக்கிறது. ஆனால்
அது நிலைப்பதில்லை. வாழ்வின் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுகிறது.
சொர்க்க இழப்பின் சோகம் கவிந்து விடுகிறது.
அப்படித்தான்
பகலாகி விடுகிறது
விடியல் விரைவில்;
நிலைப்பதில்லை
பொன்னான
எதுவும்.
என்று தன் கவிதையை முடிக்கிறார்
ராபர்ட் ஃபிராஸ்ட்.
நாள்
என்பது வாழ்வின் குறியீடு என்றால், விடியல் என்பது இளமைப் பருவம், அந்தி என்பது மரணம்.
வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசியிருந்தால் அவர் அந்தி நேரத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார்.
இளமை நிலையாமை பற்றிப் பேசுவதால் விடியற் பொழுதைப் பாடுகிறார்.
ஒரு
நாள் முடிவதில் இல்லாத சோகத்தை அதிகாலையின் பொன்னிற அழகு மாறிப்போவதில் உணர்கிறது கவியின்
உள்ளம்.
No comments:
Post a Comment