”சொர்க்கத்தில்
நாம் இறைவனுடன் உரையாடுவோம் அல்லவா?” என்று கேட்டார்கள்.
”ஆம். இறைவனுடன் அவனின் மொழியில் பேசுவோம்” என்றார் தர்வேஷ்.
”அறபி மொழிதானே?” என்றார் ஹஜ்ரத்.
”மௌனமே இறைவனின் அறபி” என்றார் தர்வேஷ்.
d
இந்த மொழிகளை மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பறவைகளும்கூட
கேட்கின்றன, பார்க்கின்றன.
உலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும்.
அஃது, அவரவர் தாய்மொழி. சிலருக்கு இரண்டு மொழிகள் தெரியலாம். மூன்று மொழி அறிந்தோர்
இன்னும் குறைவு. பன்மொழி அறிந்தோர் மிகவும் சொற்பமே. உலகில் மொத்தம் 6500 – ஆறாயிரத்து
ஐநூறு – மொழிகள் பேசப்படுகின்றன என்றும், ஏறத்தாழ 4000 – நாலாயிரம் – மொழிகளுக்கு எழுத்து
வடிவம் இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பான்மை மக்கள் ஒரு
மொழி அறிந்தவர்கள் மட்டுமே.
இதன் பொருள் என்ன? பெரிய பலகை ஒன்றில் நாலாயிரம் மொழிகளிலும்
ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டால் உலகில் பெரும்பான்மை மனிதர்களால் அவற்றில் ஒரு மொழியில்
எழுதப்பட்டதைத்தான் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 3999 – மூவாயிரத்துத் தொள்ளாயிரத்துத்
தொன்னூற்று ஒன்பது – எழுத்து வடிவங்களும் அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கிறுக்கல்கள்
மட்டுமே. அங்கே ஒரு மாடு அல்லது கழுதை வந்து நின்றால் அந்த வாசகங்கள் அனைத்தையும் அதுவும்
பார்க்கும்! நாலாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம்! இவ்வளவுதான் வேறுபாடு!
எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சுருக்கெழுத்து
(short-hand) பயின்ற ஒருவர் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் தான் எழுதிய ஏட்டைக் காட்டினார்.
அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வாசிக்க இயலவில்லை. அதாவது, எனக்குத் தெரிந்த
ஒரு மொழியின் ஒரு எழுத்து வடிவத்தையே வேரு எழுத்து வடிவ முறையில் எழுதிக் காட்டியபோது,
எனக்குத் தெரிந்த மொழியே எனக்குப் புரியவில்லை!
நாம் பேசும் வார்த்தைகளை விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன.
நமக்கு நாலாயிரம் மொழிகளில் ஒன்றோ இரண்டோ விளங்கும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்
நாலாயிரம் மொழிகளுமே புரியாது, அவ்வளவுதான்.
மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கே உரிய
மொழிகள் இருக்கின்றன; அவற்றின் பேச்சை நாம் விளங்குவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது.
நம் மொழி அதற்குப் புரியவில்லை. அதன் மொழி நமக்குப் புரியவில்லை. சரி சமம் ஆகிவிட்டது!
இறைவனின் பேச்சு எப்படிப்பட்டது? இது பற்றி சூஃபி குருமார்கள்
ஆழமான விளக்கம் தருகிறார்கள்.
இறைவனின் பேச்சு ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ என்று வருணிக்கப்
படுகிறது. அதாவது, ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை.’
அறபி என்னும் சொல்லை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று
எழுத்துக்கள் உள்ளன. நாம் அதை உச்சரிப்பதைப் கருவியில் பதிவு செய்து பின்னர் வேகம்
இன்றி மெது அசைவில் (ஸ்லோ மோஷன்) ஓடவிட்டால் ஒன்றை அவதானிக்கலாம்.
”அ” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது ‘றபி’ என்பது இல்லை.
”ற” என்னும் ஓசை உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அ-பி” என்பது இல்லை. “பி” என்பது உச்சரிக்கப்படும்
கணத்தின்போது “அற” என்பது இல்லை. இப்படியான முன் பின் நிலையில் ஓசைகள் தோன்றி மறைவது
நம் மொழியின் தன்மை. இறைவனின் பேச்சு இப்படி முன் பின்னாகத் தோன்றுவதும் மறைவதும் அன்று.
அஃது எப்போதும் இருப்பது. அவன் ஏகன். அவன் பேச்சும் ஏகமே.
’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை’ என்றால் என்ன பொருள்? அது மௌனம்
என்பதுதான். எல்லா மொழிகளும் தோன்றும் மூல நிலை அதுவே. அதற்கு நீங்கள் எந்த மொழியின்
பெயரை இட்டு அழைத்தாலும் பொருந்தும். எந்த உயிரினத்தின் மொழியாக அதைக் குறிப்பிட்டாலும்
பொருந்தும்.
“அறபி” என்னும் சொல்லுக்கு ‘பேச்சு மொழி’ என்று பொருள். ஏனைய
மொழிகளை அறபிகள் ‘அஜமி’ என்று அழைத்தனர். ‘அஜமி’ என்னும் சொல்லுக்கு ‘ஊமை மொழி’ என்று
பொருள். இது பண்டைய அறபிகளின் மொழிச் செருக்கைக் காட்டுவதாகக் கருதலாம்.
ஆனால், ஆன்மிகத்தில் அறபி என்பதன் அடையாளம் வேறு. ஞானிகளின்
பேச்சு அறபி எனப்படும். அஞ்ஞானிகளின் பேச்சு ’அஜமி’ எனப்படும்.
அதாவது,
நாக்கு உள்ளவர்கள் ஒலிப்பதை எல்லாம் பேச்சு என்று மதிக்க முடியாது, மொழி என்று ஏற்க
முடியாது. வெளிப்படையில் அதுவும் மொழியாகத் தோன்றலாம், மனித உருவம் போல. ஆனால், எப்படி
மனித உருவம் பெற்றிருப்பதலாயே ஒருவரை “மனிதன்” என்று நாம் மதிப்பிட்டுவிட முடியாதோ
அதே போல், எழுத்துக்களின் ஓசை இருப்பதாலேயே ஒருவரின் பேச்சை மொழி என்று மதிப்பிட்டுவிட
முடியாது.
இறைவனின்
’பேச்சு’ என்பது ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ – ஓசை இலது, எழுத்து இலது. அதாவது,
மௌனம். அது வெறுமனே சப்தமின்மை அன்று. அப்படிப் புரிந்து கொண்டால் நீங்கள் மௌனத்தை
அறியவில்லை, அதனைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.
மௌனம்
நேர்மறையானது; சப்தமின்மை எதிர்மறையானது.
ஒன்றின்
இன்மை அன்று மௌனம். அது இருப்பின் பண்புகளில் ஒன்று.
சப்தமின்மை
என்பது ஓசை இழப்பு. எனவே, மொழி இழப்பு. மௌனமோ அனைத்து மொழிகளின் ஊற்றுக்கண்.
இறைவனின்
பேச்சாகிய மௌனத்தை அடைந்தவர்கள், அறிந்தவர்கள் அதன் தொடர்பில் இருந்து பேசும்போது மொழி
அர்த்தமுடையதாகிறது. அதற்கே ’அறபி’ என்று பெயர்.
வெளிப்படையாகப்
பார்க்கும்போது, நபிகள் நாயகம் பேசியதும் அறபி, அவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்கர்
பேசியதும் அறபி, அவர்களின் கடும் பகைவன் அபூஜஹல் பேசியதும் அறபி.
ஆனால்,
ஆன்மிக விளக்கத்தின்படி நோக்கும்போது, நபியும் அபூபக்கரும் பேசியது அறபி; அபூஜஹல் பேசியது
அறபி அல்ல.
அபூஜஹல்
பேசிய பேச்சு ஓசையின் கோலத்தில் அறபியாக இருந்தாலும் உண்மையில் அது ‘அஜமி’யே ஆகும்.
ஆனால், அபூபக்கரின் பேச்சு மட்டுமன்று, மௌனமும்கூட
’அறபி’தான்.
நபித்தோழர்
பிலால் அவர்கள் தொழுகை அழைப்பான பாங்கு ஒலித்தபோது அவரின் உச்சரிப்பு தவறாக இருந்தது
பற்றி மதீனாவைச் சேர்ந்த நபித்தோழர்கள் சிலர் குறை பேசினர். ஆனால், அபிசீனியா (எத்தியோப்பியா)
நாட்டினர் ஆன - ‘ஹபஷி’ ஆன - பிலாலின் பாங்கொலியை அல்லாஹ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான்
என்று நபி (ஸல்) கூறினார்கள்.
ஹஜ்ரத்
பிலால் அவர்களின் ஆன்மிக உணர்வு அவ்வளவு உன்னதமாக, ஆழமாக இருந்தது. வெளிப்படையில் மொழி
இலக்கணப்படி அவர்களின் உச்சரிப்பு பிழையாகத் தெரியலாம். ஆனால், அந்தப் பிழையான உச்சரிப்பையே
இறைவன் சரியான அறபி என்று ஏற்றுக்கொண்டான். ஏனெனில் அது அழியும் உலகின் அறபி அன்று,
நித்திய ஜீவனான இறைவனின் அறபியில் இருந்து எழுந்த ஒன்று.
உருது
மகாகவி இக்பால் சொல்கிறார்: ”ரெஹ் கயீ ரஸ்மெ அதான், ரூஹே பிலாலி ந ரஹீ” (ஜவாபே ஷிகவா:16).
அதாவது,
“பாங்கின் சடங்கு
பேணப்படுகிறது;
பிலாலின் உயிர்மை
அதனுள்
இல்லை!”
’பிலாலின்
உயிர்மை’ என்பது எது? ஏக இறைவனின் பேச்சில் அவரின் பேச்சு அர்ப்பணம் ஆகிவிட்டது. ’உமரின் நாவிலும் இதயத்திலும் நிச்சயமாக அல்லாஹ்
சத்தியத்தை அருளியுள்ளான்’ (’இன்னல்லாஹ ஜஅலல்-ஹக்க
அலா லிசானில் உமர வ கல்பிஹி’ – நூல்: திர்மிதி; ஹதீஸ் எண்: 3682 / (49:78)) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஆன்மிக நிலை அது.
”தொழுகையில்
இருக்கும்போது ஒரு விசுவாசி நிச்சயமாகத் தனது ரட்சகனிடம் (அதாவது, இறைவனிடம் அந்தரங்கமாக)
உரையாடுகிறான்” (இன்னல் முஃமின இதா கான ஃபிஸ் ஸலாத்தி ஃப-இன்னமா யுனாஜீ றப்பஹு – நூல்:
சஹீஹ் புகாரீ:405; சஹீஹ் முஸ்லிம்: 547) என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்.
உரையாடல்
என்றால் இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நிகழ வேண்டும். தொழுகையில் அடியான் இறைவனின்
திருமறை வசனங்களைத்தான் ஓதுகிறான். அது இறைவன் அவனிடம் பேசுவதாகும். ஓசை கொண்ட மொழியால்
பேசுவது “அக்வால்” எனப்படும். ஓசையும் எழுத்தும் இல்லாத பேச்சுடைய இறைவன் தனது பேச்சினை
மனிதர்களின் மொழி வடிவத்தில் வெளிப்படுத்தினான். அதை ஓதும் அடியானின் உள்ளத்திலும்
உயிரிலும் ஏற்படும் உணர்வு நிலைகளே அடியான் அவனிடம் உரையாடுவதாகும. அதற்கு “அஹ்வால்”
என்று பெயர்.
ஓசை
இல்லா பேச்சுள்ள இறைவன் திருமறையின் மூலம் “அக்வால்” கொண்டு தன் அடியானிடம் பேசுகிறான்.
ஓசையுள்ள பேச்சுள்ள அடியான் “அஹ்வால்” கொண்டு தன் இறைவனிடம் பேசுகிறான். இவை ’அறபி’யின்
இரண்டு நிலைகள்.
No comments:
Post a Comment