Tuesday, June 8, 2021

நெருப்பின் கதை

(சூஃபி கதை நேரம்...)


            
முன்பொரு காலத்தில் ஒருவன் இயற்கை இயங்கும் வழிகள் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனது ஈடுபாடு மற்றும் ஆராய்ச்சியின் விளைவாக நெருப்பை உண்டாக்கும் வழியை அவன் கண்டுபிடித்துவிட்டான்.

            அந்த மனிதனின் பெயர் நூர். அவன் தனது கண்டுபிடிப்பை மக்களிடம் காட்டுவதற்காக ஊர் ஊராகப் பயணம் செய்தான்.

            மக்களின் பல்வேறு குழுக்களுக்கு அவன் தனது ரகசியத்தைக் கற்பித்தான். சிலர் அந்த அறிவின் பயனை அடைந்தார்கள். பிறரோ, அவன் தங்களிடம் கொண்டு வந்திருக்கும் கண்டுபிடிப்பின் மதிப்பு என்ன, அதை எப்படியெல்லாம் ஆக்கமான வழிகளில் பயன் படுத்தலாம் என்று புரிந்து கொள்வதற்குள், அவன் மிகவும் அபாயமானவன் என்று எண்ணி அவனை ஊரை விட்டே துரத்தினார்கள். இறுதியாக, அவன் ஒரு பழங்குடி மக்களிடம் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டியபோது அவர்கள் பீதியடைந்து அவனொரு பிசாசு என்று எண்ணி அவனைத் துரத்திச் சென்று கொன்று விட்டார்கள்.

            நூற்றாண்டுகள் கழிந்தன. நெருப்பு உண்டாக்கும் கலையைக் கற்றுக்கொண்ட முதல் இனக்குழு அதனைத் தனது பூசாரிகளுக்காக ஒதுக்கிக் கொண்டது. அதை அவர்கள் செய்து காட்டும்போதெல்லாம் மக்கள் வியப்பிலும் அச்சத்திலும் உறைந்து நின்றனர். பூசாரிகளுக்கு அதிகார பலம் கிடைத்தது.

            இரண்டாம் இனக்குழு நெருப்பு உண்டாக்கும் கலையை மறந்துவிட்டது. ஆனால் அது நெருப்பு உண்டாக்கும் கருவிகளை வைத்து வழிபட்டது. மூன்றாம் இனக்குழு நூரின் பிரதிமையை வழிபட்டது, ஏனெனில் அவன்தான் அந்தக் கலையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். நான்காம் இனக்குழு, நெருப்பு உருவான கதையைத் தமது தொன்மக் காவியங்களில் பதிந்து வைத்தது: சிலர் அதை நம்பினார்கள், சிலர் நம்பவில்லை. ஐந்தாம் இனக்குழு எதார்த்தத்திலேயே நெருப்பை உண்டாக்கிப் பயன்படுத்தி வந்தது. அதைக் கொண்டு அவர்கள் குளிர் காயவும், உணவு சமைக்கவும், புழங்கு பொருட்கள் பலவற்றை உருவாக்கவும் செய்தனர்.

            பல பல ஆண்டுகள் போன பின், இந்த இனக்குழுக்களின் நிலங்கள் வழியாக ஞானி ஒருவர் தனது சீடர்களுடன் பயணித்தார். தாம் பார்த்த வகை வகையான சடங்குகளைக் கண்டு சீடர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமது குருவிடம் சொல்லினர்: “ஆனால் இந்த எல்லாச் சடங்குகளுமே நெருப்பு உண்டாக்கும் முறையுடன் தொடர்பு கொண்டவை மட்டுமே, வேறொன்றும் இல்லை. நாம் இந்த மக்களைச் சீர்திருத்த வேண்டும்!”

            குரு சொன்னார்: “அப்படியானால், நல்லது. நாம் நமது பயணத்தை மீண்டும் தொடங்குவோம். அதன் முடிவில், யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்களோ, உண்மையான பிரச்சனைகளையும் அவற்றை அணுகும் முறைகளையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.”

            அவர்கள் முதலாம் இனக்குழுவை அடைந்தபோது அவர்கள் விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்டனர். தீயை உண்டாக்கும் தமது மதச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பூசாரிகள் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தார்கள். அது நிறைவடைந்து, சடங்கு பார்த்ததன் விளைவாகப் பழங்குடியினர் பரவச நிலையில் இருந்தபோது குரு சொன்னார்: “யாராவது பேச விரும்புகிறீர்களா?”

            முதல் சீடன் சொன்னான்: “சத்தியத்தை எத்தி வைக்கும் பணியின் நிமித்தமாக, நான் இந்த மக்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்த விரும்புகிறேன்!”

            ”எது நடந்தாலும் அதற்கு நீயே பொறுப்பேற்க சம்மதம் என்றால், தாராளமாக நீ பேசலாம்,” என்று குரு சொன்னார்.

            இப்போது அந்த மட்டிச் சீடன் பழங்குடித் தலைவருக்கும் பூசாரிகளுக்கும் முன்னால் வந்து நின்று சொன்னான்: “நீங்கள் வணங்கும் சிலையின் பேராற்றலாக நீங்கள் கருதும் இந்த அதிசயத்தை என்னால் செய்ய முடியும். அப்படி நான் செய்து காட்டிவிட்டால் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லாம் அசத்தியத்தில் இருந்திருக்கிறீர்கள் என்று ஒப்புக்கொள்வீர்களா?”

            ஆனால் அந்தப் பூசாரிகள் கத்தினார்கள்: “பிடியுங்கள் இவனை!” அவன் பிடித்துச் செல்லப்பட்டான். அதன் பின் அவன் ஆளையே காணோம்.

            குருவும் சீடர்களும் அடுத்த நிலத்துக்குப் போனார்கள். அங்கே இரண்டாம் பழங்குடியினர் தீக்கருவிகளுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர். மீண்டும், அந்தப் பழங்குடியினருக்குப் பகுத்தறிவைத் தூண்ட சீடன் ஒருவன் தானே முன்வந்தான்.

            குருவின் அனுமதியுடன் அவன் சொன்ன்னான்: “பகுத்தறிவு கொண்ட மக்களாக உங்களைக் கருதி உங்களிடம் நான் பேச அனுமதி கோருகிறேன். ஒரு பொருளை உண்டாக்குவதற்கான கருவிகளை நீங்கள் வணங்குகின்றீர்கள், அந்தப் பொருளைக்கூட அல்ல. இப்படியாக நீங்கள் அதன் முழுப் பயன்பாட்டை ஒத்திப் போடுகிறீர்கள். இந்தச் சடங்கின் பின்னணியில் இருக்கும் எதார்த்தம் என்ன என்பதை நான் அறிவேன்.”

            இந்தப் பழங்குடியில் பகுத்தறிவுள்ள சிலர் இருந்தனர். ஆனால் அவர்கள் அந்தச் சீடனிடம் சொன்னார்கள்: “ஒரு பயணியாகவும் அந்நியனாகவும் உங்களை எங்கள் சமூகத்துக்குள் வரவேற்றோம். ஆனால், எங்களின் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அந்நியரான உங்களால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. நீ தப்பு செய்கிறாய் தம்பி, நீ எங்களின் சடங்கை ஒழிக்க நினைப்பதும் எங்கள் மதத்தைச் சிதைக்க நினைப்பதும் பெருங் குற்றம். இதற்கு மேல் உன்னிடம் கேட்பதற்கு ஏதுமில்லை. நீங்கள் போகலாம்.”

            எனவே, குருவும் சீடர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

            அவர்கள் மூன்றாம் பழங்குடியினரின் நிலத்திற்கு வந்து சேர்ந்தபோது, ஒவ்வொரு வீட்டின் முன்பும் பிரதிமை ஒன்று இருப்பதைப் பார்த்தனர். அது, மூல நெருப்பு மூட்டியான நூரின் பிரதிமை. அந்தப் பழங்குடியின் தலைவர்களிடம் மூன்றாம் சீடன் பேசினான்:



            ”இந்தச் சிலை ஒரு மனிதனைக் குறிக்கிறது. அவனிடம் ஒரு திறமை இருந்தது. அதை நாமும் செயல்படுத்திப் பயன் பெற முடியும்.”

            ”நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்,” என்று அந்த நூர் பக்தர்கள் ஒப்புக் கொண்டார்கள். “ஆனால் அந்த ரகசியத்தின் உண்மையை எல்லாரும் அடைய முடியாது. அது மிகச் சிலருக்கு மட்டுமே அருளப்படுவது.”

            ”இல்லை, அதைப் புரிந்து கொள்ள முன்வருவோர் ஒரு சிலர்தான். அதனால் அது அவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. அதன் எதார்த்த விசயங்களை முன்னோக்க மறுப்பவர்களுக்கு அது கிடைப்பதில்லை, அவ்வளவுதான்,” என்றான் மூன்றாம் சீடன்.

            ”இது அப்பட்டமான மதத் துரோகம். அதுவும், நம் மொழியை ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாத ஒரு மடையன் இப்படிப் பேசுகிறான் பாருங்கள். இவன் நம் நம்பிக்கைகளை ஏற்ற ஒரு பூசாரியும் கிடையாது,” என்று சமயவாதிகள் கலகலத்தார்கள். அதற்கு மேல் பேச்சுவார்த்தையில் முன்னேற அவனால் முடியவில்லை.

            குருவும் சீடர்களும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் நான்காம் பழங்குடியின் ஊரை அடைந்தனர். இப்போது நான்காம் சீடன் ஒருவன் அந்த மக்களுக்கு முன்னால் வந்து நின்றான்.

            ”தீ உருவான கதை உண்மையே! தீயை உருவாக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும்,” என்று அவன் பேசினான்.

            பழங்குடிக்குள் குழப்பங்கள் கிளம்பிவிட்டது. அவர்கள் பல்வேறு கும்பல்களாகப் பிரிந்துவிட்டார்கள். சிலர் சொன்னார்கள்: “இது உண்மையாக இருக்கலாம். அப்படி எனில், நெருப்பு மூட்டுவது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” இந்தக் கும்பலை குருவும் சீடர்களும் பரிசோதித்துப் பார்த்த போது அவர்களில் பலரும் நெருப்பு உருவாக்கும் கலையைத் தமது சுயநலத்துக்காக, சுய லாபத்துக்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர் என்பதும், அது மனித இனத்தின் முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பு என்பதை அவர்கள் உணரவில்லை என்றும் தெரிந்தது. திரிக்கப்பட்ட தொன்மக் கதைகள் எந்த அளவுக்கு மனிதர்களின் மூளைகளுக்குள் ஆழமாக இறங்கிவிட்டன என்றால் அவர்கள் மனநிலை தடுமாறியவர்களாகவே இருந்தனர். அவர்களிடம் நேரடியாகத் தீயை உருவாக்கிக் காட்டியிருந்தாலும் அவர்களால் அதைக் கற்றுக்கொண்டு பின்பற்றியிருக்க முடியாது.

            இன்னொரு கூட்டம் இருந்தது. அவர்கள் சொன்னார்கள்: “இந்தத் தொன்மங்கள் எல்லாம் உண்மை இல்லை. இந்த மனிதன் நம்மை எல்லாம் ஏமாற்றப் பார்க்கிறான். இங்கே இடம் பிடிக்கத் திட்டம் தீட்டுகிறான்.”

            இன்னொரு கூட்டம் சொன்னது: “நாம் நமது தொன்மங்களை எல்லாம் உள்ளது உள்ளபடி நம்புகிறோம். ஏனெனில் அவையே நமது கட்டடத்தின் அடித்தளம். நாம் அவற்றைக் கைவிட்ட பிறகு இவர் சொல்லும் வியாக்கியானம் தப்பாகிவிட்டது என்று தெரியவந்தால் நம் சமூகத்தின் கதி என்னாகும்?”

            இது மாதிரி மேலும் பல்வேறு கண்ணோட்டங்கள் இருந்தன.

            எனவே, குருவும் சீடர்களும் தொடர்ந்து பயணித்தார்கள். அவர்கள் ஐந்தாம் பழங்குடியின் ஊரை அடைந்தனர். அவர்களிடம் தீயுருவாக்கம் என்பது அன்றாடப் புழக்கத்தில் இருந்தது. அதைக் கொண்டு பல்வேறு காரியங்களும் நடைபெற்றன.

            குரு தனது சீடர்களிடம் சொன்னார்:

            ’எப்படிக் கற்பிப்பது என்று நீங்கள் கற்க வேண்டும். ஏனெனில், மனிதன் தனக்குக் கற்பிக்கப்படுவதை விரும்புவதில்லை. முதலில், கற்பது எப்படி என்பதை நீங்கள் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதற்கு முன், அவர்கள் கற்றுக்கொள்ள இன்னமும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டும். கற்றுக்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால், எதைக் கற்க வேண்டும் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அதை மட்டுமே கற்க அவர்கள் விரும்புகின்றார்கள். இதை எல்லாம் நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு நீங்கள் கற்பிக்கும் முறைகளைக் கையாளலாம். கற்பிப்பதற்கான தனிப்பட்ட திறன் இல்லாத அறிவு என்பது கற்பிக்கும் திறனுடன் கூடிய அறிவைப் போன்றதன்று.”

db

            ஷைகு அஹ்மது அல்-பதவி (இறப்பு: 1276) அவர்களிடம் கேட்கப்பட்டது: “காட்டுமிராண்டி யார்?”

            அவர் சொன்னார்: “படிப்படியான வளர்ச்சியாலும், இறைப் பாதையின் கடுமையான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாலும் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றை தனது சிந்தனையாலும் உணர்ச்சியாலும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கும் அளவுக்குத் தனது கண்ணோட்டம் மழுங்கிப் போனவனே காட்டுமிராண்டி ஆவான்.

            ”மக்கள் மூசா நபியையும் ஈசா நபியையும் பார்த்துச் சிரித்தார்கள். ஏன்? ஒன்று, அவர்களின் கண்ணோட்டங்கள் மோசமாக மழுங்கிப் போயிருந்தன. அல்லது, அந்த நபிமார்கள் பேசியபோதும் செயல்பட்ட போதும் மக்களிடமிருந்து தமது உன்னத நிலைகளை மறைத்துக் கொண்டார்கள்.”

            தர்வேஷ் மரபின்படி, அஹ்மது அல்-பதவி அவர்களையும் மக்கள் தூற்றவே செய்தார்கள். அவர் கிறித்துவத்தை போதிக்கிறார் என்று முஸ்லிம்கள் தூற்றினர்; பிற்காலத்துக் கிறித்துவ நம்பிக்கைகளை அவர் நிராகரித்ததால் கிறித்துவர்களும் அவரைத் தூற்றினர். அவர் எகிப்து நாட்டின் ’பதவிய்யா சூஃபி நெறி’யின் நிறுவனர்.

No comments:

Post a Comment