Monday, June 7, 2021

சொர்க்கத்து உணவு

 

(சூஃபி கதை நேரம்...)


ஆதமின் மகன் யூனுஸ் தன் வாழ்க்கையை இனி விதியின் வசத்தில் ஒப்படைப்பதுடன் ஒரு மனிதனுக்கு வாழ்வாதாரம் வந்து சேர்கின்ற வழிகளையும் காரணங்களையும் தேடி அறிவது என்று ஒருநாள் முடிவு செய்தான்.

            அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: “நான் ஒரு மனிதன். அப்படியாக, இவ்வுலகின் பொருள்களில் எனது பங்கினை ஒவ்வொரு நாளும் பெறுகிறேன். அந்தப் பங்கு என்னிடம் எனது முயற்சிகளாலும் பிற மனிதர்களின் முயற்சிகளாலும் வந்து சேர்கிறது. இந்த செயல்முறையை இன்னும் எளிதாக்கி, மனிதர்களுக்கு வாழ்வாதாரம் வந்து சேரும் வழியை நான் கண்டறிவேன். அது எப்படி? ஏன்? என்பதையும் தெரிந்து கொள்வேன். எனவே நான், தனது வாழ்வாதாரத்துக்கு எல்லாம் வல்ல இறைவனை மட்டுமே சார்ந்திருக்கச் சொல்கின்ற மேலான ஆன்மிக நெறியைக் கடைப்பிடிப்பேன். உணவும் பிற பொருட்களும் வெளிப்படையில் சமுதாயத்தின் வழியாகவே வந்து சேர்கின்ற குழப்பமான உலகில் வாழ்வதைவிட, அனைத்தையும் ஆட்சி செய்கின்ற இறை சக்தியின் நேரடியான ஆதரவில் என்னை வைக்கப் போகிறேன். பிச்சைக்காரன் இடை நபர்களைச் சார்ந்து இருக்கிறான்: தாராளமான ஆண்களையும் பெண்களையும். அவர்களுமே கூட இரண்டாம் நிலைத் தூண்டல்களுக்குக் கட்டுப்பட்டவர்களே. அவர்கள் ஏன் பொருட்களையோ பணத்தையோ தருகிறார்கள். அவர்கள் அப்படிப் பயிற்சி செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பதால்தான். நான் இனி ஒருபோதும் அத்தகைய நேரடியற்ற கொடைகளை ஏற்க மாட்டேன்.”

            அவ்வாறு சொல்லிக்கொண்டு, அவன் ஊருக்கு வெளியே போனான். தான் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தபோது கண்ணுக்குத் தெரியும் மனிதர்களின் மீது எப்படி உறுதியான நம்பிக்கை வைத்திருந்தானோ அதே போன்ற நம்பிக்கையை இப்போது கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் மீது வைத்தான்.

            பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அவற்றின் உலகில் உணவளிக்கப் படுவது போல் அல்லாஹ் தனது தேவைகளை எல்லாம் முழுமையாகப் பார்த்துக்கொள்வான் என்ற உறுதியுடன் அவன் நிம்மதியாகத் தூங்கிவிட்டான்.

            வைகறையில் பறவைகளின் சத்தம் அவனை எழுப்பிற்று. தன் வாழ்வாதாரம் தோன்றுவதற்காக ஆதமின் மகன் முதலில் அசையாமல் அப்படியே படுத்திருந்தான். மறைவான சக்தியின் மீது தான் கொண்ட நம்பிக்கை மற்றும், தன்னைத் தானே உட்படுத்திக்கொண்ட புலத்திற்குள் அது வேலை செய்யத் தொடங்கும்போது அதனைத் தான் புரிந்துகொள்ள முடியும் என்ற தனது உறுதி ஆகியவற்றுக்கு அப்பால் விரைவிலேயே அவன் ஓர் உண்மையை உணர்ந்தான். இந்த அசாதாரண உலகில் அனுமான சிந்தனை மட்டுமே வேலைக்கு ஆகாது என்பதுதான் அந்த உண்மை.

            நாள் முச்சூடும் இயற்கையை அவதானித்துக் கொண்டும், தண்ணீரில் மீன்களைப் பார்த்துக்கொண்டும் தனது ஔராதுகளை ஓதிக்கொண்டும் அவன் அவன் ஆற்றங்கரையிலேயே கிடந்தான். அவ்வப்போது அவ்வழியாக செல்வச் செழிப்பும் அதிகார பலமும் கொண்டோர் கடந்து போனார்கள். அவர்களுடன் சென்ற சேவகர்களே ஜொலிக்கும் உடைகள் அணிந்து நிமிர் பிடர் புரவிகளின் மீது ஆரோகணித்துப் பீடுடன் சென்றனர். அந்தக் குதிரைகளில் தொங்கவிடப் பட்டிருந்த சிறு சிறு மணிகளின் ஓசை அந்தப் பாதையின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமையைப் பறைசாற்றுவது போல் இருந்தது. தங்கள் எஜமானின் தலைப்பாகை லேசாக வெளியே தெரிந்தாலே போதும் அந்த சேவகர்கள் உடனே அவருக்கு மரியாதை செய்து சலாம் போட்டார்கள். அந்த வழியாக யாத்திரைக் குழுக்களும் கடந்து சென்றன. அவர்கள் காய்ந்த ரொட்டியையும் உலர்ந்த பாலாடைக் கட்டியையும் மென்று விழுங்குவதைப் பார்த்தபோது அந்த எளிய உணவாவது கிடைக்காதா என்று அவனுக்கு வயிற்றில் பசி கிள்ளிற்று.

            ’இது எனக்கு ஒரு சோதனை. சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும்,” என்று யூனுஸ் நினைத்தான். அன்றைய நாளின் ஐந்தாவது தொழுகையை (’இஷா’ என்னும் இரவுத் தொழுகையை) முடித்துவிட்டு, போர்வையைப் போர்த்திக்கொண்டு, அட்ட மா சித்திகளை அடைந்தவர் என்று சொல்லப்பட்ட தர்வேஷ் ஒருவர் தனக்குக் கற்றுத் தந்த முறைப்படி தியானத்தில் ஆழ்ந்தான்.

            இன்னோர் இரவு கழிந்தது.

            டைக்ரிஸ் பேராற்றின் நீரலைகளில் சூரிய ஒளிகள் சிதறி மின்னுவதைப் பார்த்தபடி யூனுஸ் அமர்ந்திருந்தான். இரண்டாம் நாளில், விடிந்து ஐந்து மணி நேரத்தில், நாணற் புதருக்குள் ஏதொவொன்று நீரலையில் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருப்பது அவன் கவனத்தைக் கவர்ந்தது. அது ஒரு பொட்டலம். இலைகளால் சுற்றப்பட்டு பனைக் கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஆதமின் மகன் யூனுஸ் ஆற்றுக்குள் இறங்கி அடையாளம் தெரியாத அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டான்.

            அது ஒரு விளங்கனி எடை இருந்தது. அதன் கயிற்றை அவன் அவிழ்த்தபோது ஓர் இனிய நறுமணம் அவன் மூக்கில் இழைந்தது. இப்போது அவன் பாக்தாத் நகரத்து ஹல்வா ஒன்றின் உடைமையாளன்! பாதாம் பசை, ரோஜாப் பன்னீர், தேன், பிஸ்தா முந்திரி போன்ற பருப்பு வகைகள் மற்றும், குங்குமப் பூ முதலிய விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் போட்டுச் செய்யப்பட்ட அந்த ஹல்வா அதன் சுவைக்காக அதிக விலைக்கு விற்கப்படுவது, உடல் நலம் தருகின்ற உணவாக மதிக்கப்படுவது. ஹரம் என்னும் அந்தப்புரத்தில் அடைகாக்கப்படும் அழகிகள் அதன் அருமையான ருசிக்காக அதனை அவ்வப்போது கொறிப்பார்கள். செருக்களம் செல்லும் போர் வீரர்கள் அது தரும் நீடித்த சக்திக்காக அதனைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். அது ஒரு நூறு வகையான வியாதிகளுக்கு கை கண்ட மருந்தாகவும் பயன்பட்டது.

            ”என் நம்பிக்கை வென்றுவிட்டது!” என்று யூனுஸ் குதூகலித்தான். “இப்போது சோதனை நேரம். இதே மாதிரியான ஹல்வா அல்லது இது போன்று வேறோர் உணவு எனக்காக தினமும் நீரில் வந்து சேர்ந்தால், விதி எனக்கான வாழ்வாதாரத்தை இதன் மூலம் வழங்குவதாக உறுதியாகிவிடும். அப்புறம் நான் இது எங்கிருந்து வருகிறது என்பதை அறிய என் பகுத்தறிவைப் பயன்படுத்தினாலே போதும்.”

            அடுத்த மூன்று நாட்களும், அதே நேரத்தில், ஹல்வா பொட்டலம் ஒன்று மிதந்து வந்து யூனுஸில் கைகளை அடைந்தது.

            இது, முதலாம் தரத்திலான கண்டுபிடிப்பு என்றூ அவன் முடிவு செய்தான். உன் சூழலை நீ எளிமையாக்கினாலும் இயற்கை அதன் வழமையான போக்கில்தான் செயல்படுகிறது. இந்த ஒரு கண்டுபிடிப்பே உலகத்துடன் அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவன் உள்ளத்தை அரித்தது. “நீ அறியும்போது போதிக்க வேண்டும்” என்று சொல்லப்படவில்லையா? நிதானமாக யோசித்தபோது தனக்கு இப்போதும் ஒன்றும் தெரியாது என்பதை அவன் உணர்ந்தான். அவன் வெறுமனே அனுபவப் பட்டிருக்கிறான். ஆறு ஓடி வரும் திசையில் எதிர் சென்று அந்த ஹல்வா எங்கிருந்து வருகிறது என்று காண்பதுதான் அடுத்த கட்ட நடவடிக்கை என்று தெளிவாகத் தெரிந்தது. அப்போது அவன் அதன் மூலத்தை மட்டும் அல்ல, தனக்கே என்று அது அனுப்பப்படும் காரணத்தையும் அவன் தெரிந்து கொள்ளலாம்.

            யூனுஸ் நதிமூலத்தை (அல்லது ஹல்வா மூலத்தை) நோக்கிப் பல நாட்கள் நடந்தான். ஒவ்வொரு நாளும் வழக்கமான முறைப்படி, ஆனால் முன்பை விட சற்று நேரம் முந்தி ஹல்வா வந்து சேர்ந்தது. அவன் அதை உண்டான்.

            பொதுவாக, ஆறுகள் எல்லாம் தமது ஊற்றிடத்தை நெருங்க நெருங்க குறுகித்தான் இருக்கும். ஆனால், இந்த ஆறு அது தோன்றுமிடத்தை நோக்கிப் போகப் போக அகலமாகி வந்தது என்பதை அப்போது யூனுஸ் கவனித்தான். மிக அகலமான நீர்ப்பரப்பின் நடுவில் சிறு தீவு ஒன்று இருந்தது. அந்தத் தீவில் மிகவும் வலிமையான, இருந்தும் அழகான கோட்டை ஒன்று நின்றது. இங்கிருந்துதான் அந்த சொர்க்கத்து உணவு புறப்பட்டு வந்திருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்தான்.



            அவன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அலங்கோலமான நெட்டை தர்வேஷ் ஒருவர் அவன் முன் வந்து நிற்கக் கண்டான். துறவி மாதிரி சடை சடையான கேசம் வைத்திருந்தார். பல்வேறு நிறங்களில் ஒட்டுக்கள் போடப்பட்ட அங்கி அணிந்திருந்தார்.

            ”அஸ்ஸலாம், பாபாவே!” என்றான்.

            ”இஷ்க், ஹூ!” என்று அவர் கத்தினார். ’இங்கே உனக்கு என்ன வேலை?”

            ”நான் ஒரு புனிதத் தேடலில் இருக்கிறேன்,” என்று ஆதமின் மகன் யூனுஸ் விளக்கினான். “என் தேடலுக்காக நான் அந்தக் கோட்டைக்குப் போயாக வேண்டும். அங்கே போவதற்கு உங்களிடம் ஏதாவது உபாயம் இருக்கிறதா?”

            ”உனக்கு அந்தக் கோட்டையின் மீது தனிப்பட்ட ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அதில் இருக்கும் அபாயத்தை நீ அறிந்திருப்பதாகத் தோன்றவில்லை,” என்றார் பாபா. “அதை நான் உனக்குச் சொல்கிறேன்.”


            
”முதலில், அதில் ஓர் அரசனின் மகள் – இளவரசி – வாழ்கிறாள். உண்மையில், அதில் அவள் சிறை வைக்கப்பட்டு அகதியாக இருக்கிறாள். அவளுக்குப் பணிவிடை செய்ய அழகான சேடிமார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அது சிறைவாசம்தானே? அவள் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் ஒருவன் அவளை அங்கே சிறை வைத்திருக்கிறான். அவள் தப்பித்து வெளியேற முடியாதபடி வலிமையான விவரிக்க முடியாத தடைகளை எல்லாம் செய்து வைத்திருக்கிறான். அவை சாதாரண கண்களுக்குத் தெரியாது. நீ அந்தத் தடைகளை எல்லாம் தாண்டிப் போனால்தான் கோட்டைக்குள் இருக்கும் உன் இலக்கை அடைய முடியும்.”

            ”உங்களால் எனக்கு உதவ முடியுமா?”

            ”நான் ஒரு ஆன்மிக யாத்திரை புறப்பட ஆயத்தம் ஆகிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், இதோ, நான் உனக்கு ஒரு வளீஃபா சொல்லித் தருகிறேன், ஒரு வார்த்தையும் பயிற்சியும். உனக்குத் தகுதி இருந்தால் அது தாராள மனம் கொண்ட ஜின்களின் மறைமுகமான சக்திகளை நீ அடைய உதவும். கோட்டையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மாய சக்திகளை முறியடிக்க அந்த ஜின்களால் மட்டுமே முடியும். உன் மீது சலாம் உண்டாகட்டும்.” அவன் காதில் அவர் சில வினோதமான ஒலிகளை ஓதிவிட்டு அவரது வயதுக்கும் தோற்றத்துக்கும் உண்மையிலேயே அதிசயம் என்று சொல்லத்தக்க திறமையுடனும் வேகத்துடனும் அப்பால் விலகிப் போனார்.

            யூனுஸ் அங்கே அமர்ந்து பல நாட்கள் தனது வளீஃபா-வை ஓதியபடி ஹல்வா தோன்றுகிறதா என்று கவனித்தான். பிறகு ஒருநாள், சாயும் சூரியனின் ஒளிக் கதிர்கள் அந்தக் கோட்டையின் சிறிய கோபுரங்கள் மீது விழுகையில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டான். அங்கே, பூமியில் இல்லாத பிரகாசமான பேரழகுடன் இளம் பெண் ஒருத்தி நின்றாள். அவள் இளவரசியாகத்தான் இருக்க வேண்டும். அவள் ஒரு கணம் சூரியனை நோக்கினாள். பிறகு, கோட்டைக்கு மிகக் கீழே தீவின் பாறைகள் மீது மோதிக் கொண்டிருக்கும் அலைகளில் விழும்படி ஹல்வா பொட்டலம் ஒன்றை வீசினாள். அப்படியானால், அவனது வாழ்வாதாரத்தின் மூலம் இங்கேதான் இருக்கிறது.

            ”சொர்க்கத்து உணவின் தோன்றுமிடம்!” என்று யூனுஸ் கூறினான். இப்போது அவன் உண்மையின் வாசலை அடைந்துவிட்டான் என்றே சொல்லலாம். தர்வேஷ் கற்றுத் தந்த வளீஃபாவின் மூலம் அவன் அழைத்திருக்கும் ஜின்களின் தளபதி விரைவிலேயே எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும். அது அவன் அந்தக் கோட்டைக்குள் போகவும், இளவரசியைக் காணவும், உண்மையை அறியவும் உதவும்.

            

        இந்த எண்ணங்கள் அவன் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது அவன் வானங்களைக் கடந்து ஓரிடத்திற்குத் தூக்கிச் செல்லப்படுவதை உணர்ந்தான். அந்த இடம் விண்ணுலகம் போன்று இருந்தது. அங்கே வியப்பூட்டும் அழகான வீடுகள் இருந்தன. அவன் அவற்றில் ஒன்றினுள் நுழைந்தான். அங்கே மனிதனைப் போன்ற உயிரினம் ஒன்று நின்றது. ஆனால் அது மனிதன் அன்று. அது இளமைத் தோற்றம் கொண்டிருந்தாலும் யுகங்களின் அறிவுப் பக்குவம் அதற்கு உண்டு என்பது போல் தோன்றியது. “நான்தான் ஜின்களின் தளபதி. மாபெரும் தர்வேஷ் உனக்கு அளித்த இறைவனின் அழகிய நாமங்களை நீ ஓதியதால் உனது கோரிக்கையை ஏற்று உன்னை நான் இங்கே தூக்கி வந்திருக்கிறேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?”

            ”அனைத்துலக ஜின்களின் ஆற்றல் மிகு தளபதியே!,” என்று நடுங்கிக் கொண்டே யூனுஸ் பேசினான். “நானொரு சத்திய சாதகன். என் தேடலுக்கான விடையை நானேதான் அந்தக் கோட்டைக்குள் போய் அடைந்தாக வேண்டும். நீ என்னைத் தூக்கியபோது நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கோட்டை. அதற்குள் நுழைந்து இளவரசியுடன் பேசுவதற்குத் தேவையான ஆற்றலை நீ எனக்குத் தா!”

            ”அப்படியே ஆகட்டும்!” என்றது ஜின் தளபதி. “ஆனால் எச்சரிக்கை. ஒரு மனிதனுக்கு அவனின் புரிந்து கொள்ளும் தகுதிக்கும் அவனின் ஆயத்த நிலைக்கும் ஏற்பவே கேள்விகளுக்கான விடை கிடைக்கும்.”

            ”உண்மை என்பது உண்மைதான்,” என்றான் யூனுஸ். “அது என்னவாக இருந்தாலும் அதை நான் அடைந்தே தீர்வேன். எனக்கு நீ வரத்தைக் கொடு.”

            ஜின் செய்த மாயத்தால் அவன் அடுத்த நொடியே உடலற்ற சூக்கும வடிவத்தில் படு வேகத்தில் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தான். அவனுடன் ஜின் சேவகர்களின் சிறு குழு ஒன்றும் வந்தது. இந்த மனிதனுக்கு அவனின் தேடலில் தமது சிறப்பான திறமைகளைக் கொண்டு உதவி ஒத்தாசைகல் செய்ய வேண்டும் என்று ஜின்களின் தளபதி அவற்றுக்கு ஆணை இட்டிருந்தது. கோட்டையின் மறைவான தடைகளைப் பார்ப்பதற்கு அவற்றை இதை நீட்டு என்று சொல்லி ஜின்களின் தளபதி கொடுத்த அபூர்வமான கண்ணாடிக் கல்லை அவன் தன் கையில் இறுகப் பிடித்திருந்தான்.

            அந்தக் கல்லைக் கொண்டு ஆதமின் மகன் பார்த்த போது அவன் கண்களுக்கு அந்தக் கோட்டையில் இருக்கும் தடைகள் என்ன் என்று தெரிந்தது. வரிசை வரிசையாக, ஊனக் கண்களின் பார்வைக்குத் தென்படாத, அதி பயங்கரமான பூதங்கள் நின்றன. யாரேனும் கோட்டைக்குள் நுழைய வந்தால் அவை அறைந்துவிடும். இதைச் சமாளிக்கும் வேலைக்குப் பயிற்சி பெற்ற சேவக ஜின்கள் அந்த பூதங்களை விரட்டியடித்தன. அடுத்து ஒரு மறைவான வலை அந்தக் கோட்டையைச் சுற்றிலும் தொங்குவதை அவன் பார்த்தான். வலைகளை அறுத்தெறியத் தேவையான தந்திரங்கள் பயின்ற சேவக ஜின்கள் பறந்து பறந்து அவற்றை அறுத்துவிட்டன. பிறகு, கீழே அழுந்தாத பெரிய பாறை ஒன்று கோட்டைக்கும் ஆற்றங்கரைக்கும் இடையில் அடைத்துக்கொண்டு நிற்பதைக் கண்டான். அதுவுமே, ஜின்களின் திறமைகளால் அப்பால் தூக்கியெறியப் பட்டது. பிறகு அந்த ஜின்கள் எல்லாம் அவனுக்கு சலாம் வைத்துவிட்டுத் தங்களின் உலகத்தை நோக்கிப் பறந்து போய்விட்டன.

            இப்போது ஆற்றங்கரையிலிருந்து பாலம் ஒன்று தானே எழுந்து வந்து கோட்டை வரை நீண்டு நிற்பதை யூனுஸ் பார்த்தான். கால் கூட நனையாமல் அதன் மீது நடந்து அவனால் கோட்டைக்குள் போக முடிந்தது.  வாயிலோன் ஒருவன் அவனை இளவரசியிடம் இட்டுச் சென்றான். அவன் முதலில் தூரத்தில் இருந்து பார்த்தபோது தெரிந்ததை விட அழகாக இருந்தாள்.

            ”இந்தச் சிறையைப் பாதுகாப்பானதாக வைத்திருந்த தடைகளை எல்லாம் தகர்த்ததற்காக நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றூ அவள் சொன்னாள். “நான் இப்போது என் அப்பாவிடம் திரும்பிப் போவேன். அதற்கு முன், உனது கடின முயற்சிகளுக்காக நான் உனக்கு சன்மானம் அளிக்க விரும்புகிறேன். பேசு, என்ன வேண்டும் என்று சொல், அது உனக்குத் தரப்படும்.”

            ”ஈடு இணையற்ற ஆணி முத்தே!” என்று அழைத்தான் யூனுஸ். “நான் தேடுவது ஒன்றே ஒன்றுதான். உண்மை. சத்தியத்தைத் தேடுவோருக்கு அதை வழங்குவது அதை வைத்திருக்கும் ஒவ்வொருவர் மீதும் கடமை அல்லவா? எனவே, நான் உன்னைக் கேட்கிறேன், மேன்மை மிகு இளவரசியே! என் தேவை ஆன உண்மையை நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.”

            ”பேசு. கொடுக்க முடிந்த உண்மை எதுவாக இருந்தாலும் அது உனக்கு இலவசமாகவே வழங்கப்படும்.”

            ”நல்லது, மேன்மை மிகு இளவரசியே! சொர்க்கத்தின் உணவான அந்த அற்புத ஹல்வாவை ஒவ்வொரு நாளும் நீங்கள் எனக்காகக் கீழே போட்டீர்களே, அவ்வாறு அது எனக்காக விதிக்கப்படக் காரணம் என்ன? அது எப்படி விதிக்கப்பட்டது?”

            ”ஆதமின் மகன் யூனுஸே!” என்று அந்த இளவரசி அவனிடம் பேசத் தொடங்கினாள். “அந்த ஹல்வா, தினமும் நான் கழுதைப் பாலில் குளிக்கும்போது முந்தைய நாள் நான் போட்டுக்கொண்ட அரிதாரத்தைச் சுரண்டி எடுத்து உருட்டுவதுதான்.”

            ”ஓ, கடைசியில் நான் தெரிந்துகொண்டேன்,” என்றான் யூனுஸ், “ஒவ்வொரு மனிதனின் புரிதலும் அவனது புரிதிறனின் அளவுக்கு ஏற்பவே உண்டாகும். உனக்கோ, அது அன்றாடக் குளியலின் அரிதார மிச்சம். எனக்கோ, அது சொர்க்கத்தின் உணவு!”

db

            இந்தக் கதையை எழுதிய ஹல்க்கவி சொல்கிறார்:

”எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்றபோதும் வாசிப்பவரின் ஆழ் மனத்தின் பிரக்ஞையை ஆக்கப்பூர்வமாகத் தாக்குகின்ற நிலையில் உள்ள சூஃபி கதைகள் மிகச் சொற்பமே.

            ”பிற கதைகள் எல்லாம் அவை எங்கே எப்போது எப்படி வாசிக்கப்படுகின்றன என்பதை வைத்தே வேலை செய்கின்றன. எனவே, பெரும்பான்மை நபர்கள் அவற்றில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே அடைகின்றனர்: பொழுது போக்கு, புதிர்மை, குறியீடு.”

            ஆதமின் மகன் யூனுஸ் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். அவர் 1670-ஆம் ஆண்டு இறந்தார். அவரிடம் குறிப்பிடத்தக்க மருத்துவ ஆற்றல்கள் இருந்தன. அவர் ஓர் ஆக்க விஞ்ஞானியாகவும் இருந்தார்.

No comments:

Post a Comment