Friday, June 11, 2021

நெசவாளி ஃபாத்திமாவும் கூடாரமும்

 (சூஃபி கதை நேரம்...)

            தூரக் கிழக்கில் ஒரு பட்டினத்தில் ஃபாத்திமா என்னும் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவள், வளமான நெசவாளி ஒருவரின் மகள். ஒரு நாள் அவளிடம் அவளின் அப்பா சொன்னார்: “வா, மகளே! நாம் ஒரு பெரும் பயணம் புறப்படுகிறோம். மத்தியக் கடலின் தீவுகளில் எனக்கு வணிகம் இருக்கிறது. ஒருவேளை, நீ அங்கே உனக்கு ஏற்ற அழகான ஓர் இளைஞனைக் காணலாம். அவனை நீ திருமணம் செய்துகொள்ளலாம்.”

            அவர்கள் புறப்பட்டு தீவு தீவாகப் பயணித்தனர். அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவள் தனக்கு வாய்க்கப் போகும் கணவனைப் பற்றிக் கற்பனைகளை நெய்து கொண்டிருந்தாள். ஆனால், ஒருநாள் அவர்கள் க்ரீட் தீவுகளுக்குப் போய்க் கொண்டிருந்த போது சூறாவளி வீசியது. கப்பல் சிதைந்தது. அரை மயக்கமான நிலையில் ஃபாத்திமா அலெக்ஸாண்ட்ரியாவின் கடற்கரையில் ஒதுங்கினாள். அவளின் அப்பா இறந்துவிட்டார். இப்போது அவள் நிர்க்கதியாக நின்றாள்.

            கப்பல் சிதலமடைந்து கடலில் விழுந்து தத்தளித்த அனுபவம் அவளை மிகவும் பாதித்திருந்தது. அவளின் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகள் அதனால் மழுங்கிவிட்டது.

            அவள் மணல்களில் அலைந்து கொண்டிருக்கையில் ஆடைகள் தயாரிக்கும் குடும்பம் ஒன்று அவளைக் கண்டது. அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அவளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவளுக்குத் தங்களின் கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்தனர். 

        இவ்வாறு அவளுக்கு ஓர் இரண்டாம் வாழ்க்கை கிடைத்தது. ஓரிரு ஆண்டுகளிலேயே அவள் பழசையெல்லாம் மறந்து மீண்டும் கலகலப்பாகிவிட்டாள். ஆனால், ஒருநாள் அவள் ஏதோ ஒரு வேலையாகக் கடற்கரையில் இருந்தபோது அடிமை வணிகர்களின் குழு ஒன்று அங்கே வந்து அவளைக் கைப்பற்றி மற்ற அடிமைகளுடன் அவளையும் அடைத்து எடுத்துச் சென்றது.

            அவள் பிழிந்து பிழிந்து அழுதாள். ஆனால் அடிமை வணிகர்கள் அவள் மீது இரக்கம் காட்டவில்லை. அவர்கள் அவளை இஸ்தான்பூலுக்குக் கொண்டு போய் அங்கே ஓர் அடிமையாக விற்று விட்டனர்.

            இரண்டாம் தடவையாக அவளின் உலகம் சிதைந்துவிட்டது. இப்போது, அந்தச் சந்தையில், அடிமைகளை வாங்குவோர் ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் ஒருவர் கப்பல்களுக்குப் பாய்மரம் தயாரிக்கும் தனது மரப்பட்டறையில் வேலை செய்வதற்கு அடிமை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார். ஃபாத்திமாவின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அவர் அவளை வாங்குவதென்று முடிவு செய்தார். வேறு யாராவது அவளை வாங்குவதை விடத் தான் அவளை வாங்கினால் அவளுக்கு ஓரளவு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பதே அவரின் நினைப்பு.

            தன் மனைவிக்கான வேலைக்காரியாக அவளைக் கொடுக்கலாம் என்று எண்ணி அவர் ஃபாத்திமாவைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் வீடு வந்து சேர்ந்தபோது பேரிடியான செய்தி ஒன்று அவருக்குக் காத்திருந்தது. அவரின் சரக்குகள் சென்ற கப்பல் கொள்ளையடிக்கப் பட்டதால் அவர் தன் செல்வங்களை எல்லாம் இழந்துவிட்டார். அவரால் அதற்கு மேல் பணியாட்கள் வைத்துக் கொள்ள முடியாது. எனவே, பாய் மரம் செய்யும் வேலையில் அவரும் அவரின் மனைவியும் ஃபாத்திமாவும் மட்டுமே கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

            தன்னை மீட்டு வந்த எஜமானின் மீதுள்ள விசுவாசத்தால் ஃபாத்திமா மிகக் கடுமையாக உழைத்தாள். அதனால் மனம் மகிழ்ந்த அவர் அவளுக்கு விடுதலை வழங்கினார். அவள் அவரின் நம்பகமான உதவியாளராகப் பணியாற்றினாள். இவ்வாறு, தனது மூன்றாம் வாழ்வில் அவள் முன்னை விட மதிப்பும் மகிழ்ச்சியும் உடையவள் ஆனாள்.

            ஒருநாள், எஜமான் அவளிடம் சொன்னார்: “ஃபாத்திமா, நம் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலுடன் நீ ஜாவா தீவுக்கு என் காரியதரிசியாகப் போய் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவற்றை நீ கவனமாக நல்ல விலைக்கு விற்று வர வேண்டும்.”

            அவள் கிளம்பினாள். ஆனால், கப்பல் சீனப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சூறாவளி ஒன்றில் சிக்கிச் சிதைந்தது. இரண்டாம் தடவையாக ஃபாத்திமா கடலில் விழுந்து தத்தளித்துக் கரை ஒதுங்கினாள். அது அவள் அறிந்திராத அந்நிய தேசம். அவள் மீண்டும் நொந்து கரைந்து அழுதாள். தான் எதிர்பார்த்த எதுவுமே தன் வாழ்க்கையில் நடப்பதில்லை என்பதை எண்ணி எண்ணி மனம் நொறுங்கினாள். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போதே ஏதாவது ஒரு அசம்பாவிதம் வந்து அவள் நம்பிக்கையில் மண் அள்ளிப் போட்டுவிடுகிறது.

            ”கடவுளே! ஏன் இப்படி நான் சிரமப்பட்டு என் வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டு வரும்போதெல்லாம் கேடு வந்து சேர்கிறது? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயரங்கள் நேர வேண்டும்?” என்று அவள் கதறி அழுதாள். ஆனால் விடையே இல்லை. எனவே அவள் மணலில் இருந்து எழுந்து ஊருக்குள் போகத் தொடங்கினாள்.

            சீனாவில் யாருக்கும் ஃபாத்திமாவையோ அவளின் துயரங்களையோ தெரியாது. ஆனால், அந்த ஊரில் மரபான நம்பிக்கை ஒன்று இருந்தது. என்றேனும் ஒருநாள் தொலைவான தேசம் ஒன்றிலிருந்து ஒரு அந்நியன் – ஒரு பெண் – வருவாள். அவள் சீன அரசருக்காக ஒரு கூடாரத்தை நெய்து கொடுப்பாள். அப்போதெல்லாம் கூடாரம் செய்யும் கலை சீனர்களுக்குத் தெரியாது. எனவே அவர்கள் ஒவ்வொரு நாளும் அதீத எதிர்பார்ப்புடன் அந்தக் கலையை அறிந்த ஒருத்தியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

            அப்படியான ஒரு பெண் கடற்கரைக்கு வந்து சேரும்போது அவளைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பரம்பரையாக ஒவ்வொரு மன்னரும் ஆண்டுக்கு ஒரு முறை தமது தூதுவர்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்பி வெளிநாட்டுப் பெண் யாரேனும் வந்திருந்தால் உடனே அரசவைக்கு அழைத்து வர வேண்டும் என்று கண்காணித்து வந்தனர்.

            சீனக் கடற்கரையின் ஊர் ஒன்றுக்கு ஃபாத்திமா வந்து சேர்ந்த நேரமும் அத்தகையதுதான். அவளின் மொழியை அறிந்த துபாஷி ஒருவரை வைத்து மக்கள் அவளிடம் பேசினார்கள். அவள் தங்கள் மன்னரின் அவைக்குப் போக வேண்டும் என்று சொன்னார்கள்.

            ஃபாத்திமா தன் முன் கொண்டு வரப்பட்டதும் மன்னர் அவளிடம் கேட்டார், “பெண்ணே! உனக்குக் கூடாரம் செய்யத் தெரியுமா?”

            ”முடியும் என்று நம்புகிறேன்,” என்றாள் ஃபாத்திமா.

            அவள் அதற்குத் தேவையான கயிறுகள் கேட்டாள். ஆனால், அவள் கேட்பது மாதிரியான கயிறுகள் அவர்களிடம் இல்லை. எனவே, தான் கற்றுக்கொண்ட கைவினையை நினைவுப்படுத்தி இழைகளைக் கொண்டு அவளே கயிறு திரித்தாள். பிறகு அவள் கூடாரத்துக்கான கெட்டித் துணி கேட்டாள். அதுவும் சீனர்களிடம் இல்லை. எனவே, அலெக்சாண்ட்ரியாவின் நெசவாளர்களிடம் தான் கற்றுக்கொண்ட நுட்பங்களை நினைவு கூர்ந்து அவளே கூடாரத்துக்கான கெட்டித் துணியை நெய்தாள். பிறகு அவளுக்குக் கூடாரக் கழிகள் தேவைப்பட்டன. ஆனால், சீனர்களிடம் அவள் கேட்கும் பொருள் இல்லை. எனவே, இஸ்தான்பூலில் கப்பல்களுக்கான பாய்மரக் கழிகள் தயாரிப்பதில் தான் பெற்றிருந்த அனுபவத்தைக் கொண்டு அவளே மரங்களை அறுத்துக் கூடாரக் கழிகளை உருவாக்கினாள். அந்தப் பொருட்கள் எல்லாம் தயாரானதும், தனது பயணங்களில் பல்வேறு இடங்களில் தான் பார்த்திருந்த கூடாரங்களின் அமைப்புகளை எல்லாம் தன் மூளையைக் கசக்கி நினைவில் ஓர்ந்து அவள் ஒரு கூடாரத்தை எழுப்பி முடித்தாள்.

            சீன மன்னர் வந்து கூடாரத்தைப் பார்த்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவள் என்ன பரிசு கேட்டாலும் தருவதாக ஃபாத்திமாவிடம் கூறினார். அவள் சீனாவிலேயே தங்கிவிட முடிவு செய்தாள். அங்கே அவள் ஓர் அழகான இளவரசனைத் திருமணம் செய்துகொண்டாள். அங்கே அவள் தன் மரணப் பரியந்தம் தன் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் சூழ இன்பமாக வாழ்ந்தாள்.


            ஒரு நேரத்தில் நமக்கு நடப்பது மிகக் கொடூரமான அனுபவமாகத் தோன்றினாலும் அது தன் வாழ்வின் நிரந்தர மகிழ்ச்சியின் உருவாக்கத்தில் ஓர் இன்றியமையாத பகுதிதான் என்பதை ஃபாத்திமா தனது இந்த சாகச நிகழ்வுகளால் உணர்ந்து கொண்டாள்.

db

            இந்தக் கதை கிரேக்க நாட்டுப்புற இலக்கியத்தில் நன்கு அறியப்பட்டதாகும். அதன் சமகால இலக்கியத் தொகுதிகளில் தர்வேஷ்களின் இலச்சினைக் கருத்துக்களையும் மரபுகளையும் காண முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கதைப் பிரதி அட்ரியானோப்பிளைச் சேர்ந்த ஷைகு முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. அவர் ’ஜமாலிய்யா நெறி’ (’பேரழகின் வழி’)-யின் நிறுவனர் ஆவார். 1750-இல் இறந்தார்.

No comments:

Post a Comment