கடும் பயிற்சிகளுக்குப் பேர் போன ஆன்மிகப்
பள்ளி ஒன்றைச் சேர்ந்த, மரபான மனம் கொண்ட தர்வேஷ் ஒருவர் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தார்.
அற மற்றும் அறிவார்ந்த சிக்கல்களைப் பற்றிய சிந்தனையில் அவரின் மனம் மூழ்கியிருந்தது.
ஏனெனில் அவர் சார்ந்திருந்த சூஃபிச் சமூகம் அப்படியான ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டே இயங்கியது.
உணர்ச்சிகரமான மார்க்கச் செயற்பாடுகளையே அவர் சத்தியத் தேடல் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று பேரோசை ஒன்று அவரின் கவனத்தைக்
கலைத்தது. அது ஒரு மனிதக் குரல்தான். யாரோ தர்வேஷ்களின் மந்திரத்தை உச்சக் குரலில்
ஓதுகின்றார். “என்ன இது அனர்த்தமான உச்சரிப்பு?” என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.
ஏனெனில் அந்த மனிதன் மந்திரத்தைப் பிழையாக உச்சரித்தான். “யா ஹூ” என்பதே சூஃபிகள் ஓதும்
முறை. ஆனால் அதை அவன் “ஊயா..ஹூயா…” என்று ஓதிக் கொண்டிருந்தான்.
அந்த மனிதனின் குரல் ஆற்றுக்கு நடுவில்
இருந்த ஒரு தீவிலிருந்து வந்து கொண்டிருந்தது. எனவே தர்வேஷ் வாடகைக்குப் படகு பிடித்துக்கொண்டு
அங்கே சென்றார்.
அங்கே எளிமையான கோரைக் குடிசை ஒன்றில்
தர்வேஷ்களின் ஆடையை அணிந்த பாமரன் ஒருவன் அமர்ந்திருந்தான். “ஊயா… ஹூயா…” என்று உரக்க
உச்சரித்தபடி அவன் அதன் தாள கதிக்குத் தக அசைந்து கொண்டிருந்தான். தர்வேஷ் அவனை இடைமறித்துச்
சொன்னார்: “நண்பா! நீ சூஃபிகளின் வாசகத்தைப் பிழையாக உச்சரிக்கிறாய். இப்படி ஓதினால்
ஒரு நன்மையும் கிடைக்காது. சரியாக ஓதும் முறையை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்.
அந்தக் கடமை எனக்கு இருப்பதால்தான் வாடகைக்குப் படகு பிடித்து உன்னிடம் வந்திருக்கிறேன்.
கல்வி கற்பிப்பவருக்கும் நன்மை இருக்கிறது, கற்பவருக்கும் நன்மை உண்டு.”
அந்த மனிதன் நெக்குருகிப் போனான். அவன்
கண்களில் கண்ணீர் வழிந்தது. “உங்களுக்குப் புண்ணியமாப் போகும் ஐயா! எனக்குச் சொல்லிக்
கொடுங்கள். நான் அப்படியே ஓதுகிறேன்,” என்றான்.
”நீ இப்படி ஓது: ‘யா ஹூ… யா ஹூ… யா ஹூ’
அவ்வளவுதான். மிகவும் எளிமையான மந்திரம்தான். இதில் உனக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பே
இல்லை… எங்கே ஓது பார்க்கலாம்: ‘யா ஹூ… யா ஹூ… யா ஹூ…’”
அவன் சேர்ந்து ஓதினான்: “யா ஹூ… யா ஹூ…
யா ஹூ…”
”அவ்வளவுதான். இப்படியே ஓது. உனக்கு இறைவன்
நற்கூலி வழங்குவான்.” என்று சொல்லிவிட்டு தர்வேஷ் கிளம்பினார். பாமர மனிதன் அவருக்கு
மிகவும் பணிவுடன் ஒரு சீடனைப் போல் நன்றி கூறினான்.
ஒரு நபரின் தவறைத் திருத்திவிட்டோம், ஒரு
நன்மையான காரியத்தைச் செய்துவிட்டோம் என்னும் மன நிறைவுடன் தர்வேஷ் படகில் ஏறிக் கிளம்பினார்.
மந்திர வாசகத்தை மிகச் சரியாக உச்சரிப்பவர் நீரின் மீது கூட நடக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட ஒருவரை இன்னமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், ஏதொவொரு காரணத்தால்
என்றாவது ஒரு நாள் தானே அந்த ஆற்றலை அடைந்துவிடுவார் என்னும் பலமான நம்பிக்கை அவருக்கு
இருந்தது.
இப்போது அந்தக் கோரைக் குடிசையில் இருந்து
முன்பு போல் பேரோசை கேட்கவில்லை. ஆனால், தான் கற்றுக்கொடுத்த பாடத்தை அந்தப் பாமரன்
ஒழுங்காக ஏற்றுக்கொண்டான் என்னும் திருப்தி அவருக்கு இருந்தது.
ஆனால் திடீரென்று அந்தப் பாமர தர்வேஷின்
குரல் உரத்துக் கேட்டது. அவன் மீண்டும் பழைய மாதிரி “ஊயா… ஹூயா…” என்றே ஓதினான்.
மனித குலம் எப்படி கோணிப் போகிறது… எப்படி
அது தன் தவறுகளிலேயே ஊன்றி நிற்கிறது என்றெல்லாம் தர்வேஷுக்குக் கவலையான சிந்தனைகள்
எழ ஆரம்பித்துவிட்டன. அவர் அப்படின் நினைத்துக் கொண்டிருக்கும் போது வினோதமான ஒரு காட்சியைக்
கண்டார். தீவிலிருந்து அந்தப் பாமரன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான், நீரின்
மேல்!
வியந்து போய் அவர் படகை நிறுத்திவிட்டார்.
பாமர தர்வேஷ் படகின் அருகில் வந்து நீரின் மீது நின்றபடியே அவரிடம் கேட்டான்: “போதகரே!
தொந்திரவுக்கு மன்னிக்கவும். வேறு வழியில்லை. எனக்கு மீண்டும் மந்திரம் தப்பாகிவிட்டது.
இன்னும் ஒரு முறை எனக்குச் சரியாக ஓதச் சொல்லித் தாருங்கள் ஐயா! அதை ஞாபகம் வைப்பது
எனக்குச் சிரமமாக இருக்கிறது.”
db
ஆங்கிலத்தில் [பிற மொழிகளில்] இந்தக் கதையின்
உயிரோட்டமான பகுதியின் ஒரு கோணத்தை மட்டுமே பெயர்த்தளிக்க முடிகிறது. ஏனெனில், இக்கதையின்
அறபிப் பிரதிகள் பல பொருள் கொண்ட ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பயன்படுத்துகின்றன.
[homonyms என்கிறார் இத்ரீஸ் ஷாஹ். அது ஒரு
சொல்லுக்குப் பல பொருள் இருப்பது. தமிழிலும் அத்தகைய சொற்கள் உண்டு. உதாரணமாக, ’அரவம்’
என்றால் ஒலி என்றும் பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. தமிழில் அது போல் ‘எழுத்தோரன்ன
பொருள் தெரி புணர்ச்சி’ என்று சொற்றொடர் வகை ஒன்று உண்டு. ’காசா லேசா?’ (காசு என்றால்
சாதாரணமா? என்று அர்த்தம்) ‘காசாலே சா’ (பணத்தாலே செத்துப் போ என்று அர்த்தம்)
– மொ.பெ-ர்] அத்தகைய சொற்றொடர்களின் வெளிப்படையான அர்த்தங்கள் அபத்தமாகவோ அல்லது ஒரு
அறத்தை வலியுறுத்துவதாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றின் மாற்று அர்த்தத்தில் அவை ஆழ்நிலைப்
பிரக்ஞையில் விழிப்படைவதற்கான நோக்கில் உருவாக்கப் பட்டிருக்கும்.
கிழக்கில் இக்கதை பொது மக்களிடம் பரவியிருக்கிறது.
ஆனால் மிகத் தொன்மையான தர்வேஷ் ஆவணங்களில் இக்கதை காணப்படுகிறது.
இந்தப் பிரதி அண்மைக் கிழக்கில் உள்ள
“அசாசீன்” (Essential, Original, அசல்) நெறியினரின் ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தக் கதைக்கு எளியேன் எழுதிய அடிக்குறிப்பு:
கதைகள்
இனம் மொழி சமயம் நாடு என்னும் எல்லைகளைக் கடந்து செல்பவை. தாம் சென்றடையும்
இலக்கின் வார்ப்பில் தம்மை ஒப்படைத்துக் கொள்பவை. அவ்வாறு தனது அடையாளங்களை மாற்றிக்
கொண்டு பல்வேறு மரபுகளில் வாழ்ந்து வரும் கதைகள் பல உள்ளன. இக்கதையும் அவற்றில்
ஒன்று. இதே கதை கிறித்துவச் சமயத்திற்கு ஏற்ப உருமாற்றப் பட்டுள்ளது. ருஷ்ய
இலக்கிய மேதையான லியோ தொல்ஸ்தாய் (Leo Tolstoy) இக்கதையை ”திரீ ஸ்டார்ட்ஸா” (”Три Старца” / “The
Three Hermits” / “மூன்று துறவிகள்”) என்னும் பெயரில் 1885-இல்
எழுதினார். அக்கதை 1886-இல் ”நீவா” (தினைத்தோட்டம்) என்னும் வார இதழில் வெளியானது.
1907-இல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான “Twenty-Three Tales” (’இருபத்து மூன்று
கதைகள்’) என்னும் நூலில் இடம்பெற்றிருந்தது. லியோ தொல்ஸ்தாய் எழுதிய கதையின் படி
படகில் சென்றவர் கிறித்துவ பிஷப் ஒருவர். அவர் வடமேற்கு ருஷ்யாவில் உள்ள
ஆர்க்கேஞ்சலஸ்க் என்னும் இடத்தில் இருந்து வட ருஷ்யாவின் வெண் கடலில் உள்ள தீவு
ஒன்றில் இருக்கும் சொலோவெட்க்ஸ்கி மடத்துக்குப் பயணமாகிறார். வழியில் உள்ள தீவு
ஒன்றில் முதுமையான பாமரத் துறவிகள் மூவரைக் காண்கிறார். அவர்கள் மிகவும் எளிய
பிரார்த்தனை ஒன்றைச் செய்து வருகின்றனர்: “நீவிர் மூவர், யாமும் மூவர், எம்மீது
கருணை காட்டுக.” இந்த மந்திரத்தில் லியோ தொல்ஸ்தாய் தனது ரோமன் கத்தோலிக்க,
பவுலியக் கிறித்துவக் கொள்கையான திரியேகத்துவம் (Trinity) என்பதைக்
கையாண்டுள்ளார். நீவிர் மூவர் என்பது பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவி (யஹோவா,
ஏசு, ஜிப்ரயீல்) ஆகிய மூவரைக் குறிக்கும். தர்வேஷ் கதையில் ஒரு நபராக இருந்த
பாமரனை தொல்ஸ்தோய் திரியேகத்துவக் கொள்கையை வைத்துப் புனைந்த மந்திரத்திற்காகவே
மூன்று துறவியராக மாற்றியிருக்கிறார்.
அந்தப் பாமரத்
துறவிகளுக்கு பாதிரியார் நீண்ட வாசகங்கள் கொண்ட பிரார்த்தனையைக் கற்றுக்
கொடுக்கிறார். அது பைபிளில் உள்ள பிரார்த்தனை (மத்தேயு 6:9). ஏசுநாதர்
மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக பைபிள் குறிப்பிடும் பிரார்த்தனைகளில் அதுவும்
ஒன்று. எனவேதான் பாதிரி அதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். ஆனால் அந்தப்
பாரமர்களால் அவ்வளவு நீளமான பிரார்த்தனையை நினைவில் நிறுத்த முடியவில்லை. அவர்கள்
செய்யும் பிரார்த்தனை ஒற்றை வரியில் சுருக்கமாக இருக்கிறது. அதுவே அவர்களுக்கு நீரின்
மீது நடக்கும் ஆற்றலைத் தருகிறது. அவர்களின் பிரார்த்தனை, மரபுவழித் திருச்சபை
(Orthodox Church) வலியுறுத்துகின்ற ”ஏசு பிரார்த்தனை” (Jesus Prayer) என்னும்
ஒற்றை வரிப் பிரார்த்தனையை ஒத்தகாக இருக்கிறது. “Lord Jesus Christ, Son of God,
have mercy on me” என்பதே அந்தப் பிரார்த்தனை. (பின்பு அவ்வரியின் இறுதியில்
sinner (பாவி) என்னும் சொல்லும் கூடுதலாக இணைக்கப்பட்டது.) இப்பிரார்த்தனை,
எரமெட்டிக் மரபு என்னும் தனிமைத் துறவு மரபில் நீண்ட காலம் ஆழ்நிலை
தியானத்திற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது (eremitic என்னும் சொல்லே hermetic
என்றாகி, தனித்திருக்கு துறவியைக் குறிக்கும் hermit என்னும் சொல்லைத்
தந்துள்ளது.) கிழக்கத்திய மரபுவழித் திருச்சபையில் இந்த ஆன்மிக நெறி “ஹேசிகாஸம்”
(hesychasm) என்று அழைக்கப்படுகிறது. ருஷ்ய மரபுவழித் திருச்சபை மிகவும் பழமையானது
என்பதும் இங்கே கவனத்திற்குரியது. பாமரத் துறவியர் “இடைநிறுத்தம் இன்றித்
தொடர்ந்து பிரார்த்தனை செய்தார்கள்” (pray without ceasing) என்று தொல்ஸ்தாய்
எழுதியிருப்பது மரபுவழித் திருச்சபையின் ஆன்மிக நெறியில் உள்ள ஆழ்நிலை தியானத்தை
சமிக்ஞை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரார்த்தனையின்
சாராம்சமே முக்கியமானது என்னும் கருத்தை வலியுறுத்தவே இந்தக் கதையை லியோ தொல்ஸ்தாய்
எழுதியிருக்கிறார். தனது கதையின் தொடக்கத்தில் அவர் பைபிள் வாசகம் ஒன்றை மேற்கோள்
காட்டியுள்ளார்: “அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது அஞ்ஞானிகளைப் போல் வீண்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம்
கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.”
அருமை
ReplyDelete