ஒருநாள், மீனவன் ஒருவனின் வலையில் பித்தளைப் புட்டி ஒன்று சிக்கியது. அது ஈய மூடி இடப்பட்டிருந்தது. கடலில் அது மாதிரியான ஒரு வித்தியாசமான பொருளை அதுவரை அவன் கண்டெடுத்ததில்லை. எனவே, அதனுள் விலையுயர்ந்த பொக்கிஷம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணினான். மேலும், அதுவரை அவனுக்கு வாழ்க்கையில் மீன்பிடியும் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை. ஒருவேளை அந்தப் புட்டிக்குள் எதுவுமே இல்லை என்றாலும்கூட பித்தளை வியாபாரியிடம் அதை விற்கவாவது செய்யலாம்.
அந்தப் புட்டி ரொம்பப் பெரியதாகவும் இல்லை. அதன் மூடி மீது ஒரு
முத்திரை இருந்தது: இறைத்தூதரும் பேரரசருமான சுலைமானின் முத்திரை. அதனுள் பயங்கரமான
ஜின் ஒன்று அடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்தி அடக்கி மனித குலத்தின் நன்மைக்காகச்
சேவை செய்ய வைக்க வல்ல ஒரு மனிதன் தோன்றும் காலம் வரையில் மக்கள் அதனிடமிருந்து பாதுகாப்பாக
வாழ வேண்டும் என்பதற்காக சுலைமான் நபியே அதனைக் கடலுக்குள் வீசி எறிந்திருந்தார்.
ஆனால், மீனவனுக்கு இதெல்லாம் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம்
தன் கையில் ஒரு அரிய வஸ்து சிக்கியிருக்கிறது, அவன் அதை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும்,
அது அவனுக்கு பெரிய லாபத்தை ஈட்டித் தரலாம் என்பதுதான். அதன் வெளிப்புறம் பளபளப்பாக
இருந்தது. நிச்சயமாக அது ஒரு கலைப் பொருள்தான். அவன் நினைத்தான், “இதன் உள்ளே வைரங்கள்
இருக்கக்கூடும்.”
”கற்றதை மட்டுமே கையாள்க” என்னும் மூதுரையை அவன் மறந்தான். புட்டியின்
ஈய மூடியைத் திருகித் திறந்தான்.
”நான் ஜின்களின் தலைவன். அற்புத நிகழ்வுகளின் ரசகியங்கள் தெரிந்தவன்.
நான் சுலைமான் நபிக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் என்னைக் கைது செய்து புட்டிக்குள்
அடைத்து விட்டார். இப்போது பழி வாங்கும் படலம் ஆரம்பம். நான் உன்னை அழிக்கப் போகிறேன்!”
மீனவன் பீதியில் நடுங்கினான். நெடுஞ்சாண் கிடையாக மணலில் விழுந்து
கதறினான்: “ஜின்னு அவர்களே! உங்களுக்கு விடுதலை தந்தவனையே நீங்கள் கொல்வது நியாயமா?”
”நிச்சயமாக, நான் உன்னைக் கொல்வேன்,” என்றது ஜின். “அற்ப மானுடனே!
அடிபணியாமை என் இயற்கை, அழிவே என் திறமை. சில பல ஆயிரம் ஆண்டுகள் நான் முடங்கிக் கிடந்தாலும்
என் மூர்க்கம் குறையாது மூடனே!”
ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது என்பதன் தர்க்கம் மீனவனின் மூளைக்குப்
பிடிபடவே இல்லை. இத்தனை ஆண்டுகளாக, எல்லாருக்கும் அள்ளிக் கொடுக்கும் கடல் தனக்கு மட்டும்
கிள்ளிக் கிள்ளித்தான் கொடுத்தது. போகட்டும், தன் வாழ்வையே வசந்தமாக்கப்போகும் பொக்கிஷம்
ஒன்று வலையில் மாட்டியிருக்கிறது என்று பார்த்தால் புட்டிக்குள் இருந்து பிசாசு ஒன்று
கிளம்பி வந்து உயிரை வாங்க நிற்கிறது. தன் உயிரின் மதிப்புத்தான் என்ன?
ஈய மூடியின் மீது பொறித்திருந்த முத்திரையை அவன் கவனித்தான்.
சட்டென்று அவன் மனதில் ஒரு சிந்தனை மின்னல் வெட்டிற்று. “நீ இந்தப் புட்டிக்குள் இருந்து
வந்திருக்கவே முடியாது. நீ இவ்வளவு பெரிசாக இருக்கிறாய். புட்டி இவ்வளவு சிறியதாக இருக்கிறது,”
என்றான்.
பிறகு அவன் தனது பலத்தை எல்லாம் திரட்டி தன்னால் முடிந்த அளவு
தொலைவில் அந்தப் புட்டியைக் கடலுக்குள் வீசியெறிந்தான்.
பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள், வேறொரு மீனவன், முந்தைய மீனவனின்
பேரன், அதே இடத்தில் தனது வலையை வீசினான். அந்தப் புட்டி அவனின் வலையில் சிக்கியது.
அதாவது: “கற்றதை மட்டுமே கையாள்க.”
தனது உலோகச் சிறையின் அசைவுகளால் தூக்கம் கலைந்து எழுந்த ஜின்
பித்தளைப் புட்டிக்குள் இருந்து கத்தியது: “ஆதமின் மகனே! நீ யாராக இருந்தாலும், தயவு
செய்து இந்தப் புட்டியைத் திறந்து எனக்கு விடுதலை கொடு. நான் ஜின்களின் தலைவன். அற்புத
நிகழ்வுகளின் ரசகியங்கள் தெரிந்தவன். ஆனால், தனது தாத்தனின் அறிவுரையை நினைவு கூர்ந்த
இளம் மீனவன் அந்தப் புட்டியை ஒரு குகைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த
மலையின் முகட்டுக்கு ஏறிப் போய் அங்கே தனிமையில் தியானம் செய்யும் ஞானி ஒருவரைச் சந்தித்தான்.
நடந்த கதையை ஞானியிடம் கூறினான். அவர் சொன்னார்: “உனக்குச் சொல்லப்பட்ட
அறிவுரை மிகவும் சரிதான். இந்தக் காரியத்தை நீயேதான் செய்ய வேண்டும். எனினும், அதை
எப்படிச் செய்வது என்பதை நீ முதலில் அறிய வேண்டும்.”
”ஆனால், நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அந்த இளைஞன் கேட்டான்.
”நிச்சயமாக. நீ செய்தே ஆக வேண்டும் என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?”
என்று அவர் கேட்டார்.
”எனக்குத் தோன்றுகிறது என்றால், அந்த ஜின்னை வெளியே விட வேண்டும்
என்பதுதான். அது எனக்கு அற்புதங்களின் அறிவைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அல்லது, கடலின் அலைகளைப் போல் பொன்னொளி வீசும் தங்கக் கட்டிகளைத் தரலாம், அல்லது பச்சை
மாமலை போல் கிடக்கும் மரகதக் குவியல். மேலும், ஜின்களால் என்னவெல்லாம் தர முடியுமோ
அதையெல்லாம்!”
”ஒருவேளை நீ ஜின்னை வெளியே விட்டதும் இது எதையுமே அது உனக்குத்
தராமல் போகலாம் என்று உனக்குத் தோன்றவே இல்லையா?” என்று ஞானி கேட்டார். “அல்லது நீ
கேட்டதையெல்லாம் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அதை நீ பாதுகாக்க முடியாதபோது உன்னிடம்
இருந்து பறித்துக் கொள்ளலாம். அல்லது நீ அதை வெளியே விட்டதும் நீ எதிர்பாராத ஏதாவதும்
நிகழலாம், அதை நீ சமாளிக்க முடியவில்லை என்றால் உன் கதி என்னாகும்? ஏனென்றால், தான்
பயன்படுத்தக் கற்றதை மட்டுமே மனிதன் பயன்படுத்த முடியும். கற்றதை மட்டுமே கையாள்க!”
”சரி, நான் என்ன செய்ய வேண்டும்?”
”அந்த ஜின் உனக்கு என்ன தர முடியுமோ அதில் கொஞ்சம் மாதிரியை
அதனிடம் கேள். அந்தக் கொசுரு என்ன என்று பார். அதைப் பாதுகாப்பது எப்படி என்று அறிந்துகொள்.
அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று சோதித்துப் பார். அறிவைத் தேடு, உடைமைகளை
அல்ல. ஏனெனில், அறிவு இல்லை எனில் உடைமைகள் வீண்தான். அதுதான் நம் வாழ்வின் சிரமங்களுக்குக்
காரணம்.”
இப்போது அந்த இளைஞன் தெளிவாகவும் சிந்திப்பவனாகவும் இருந்ததால்
அவன் ஜின்னை விட்டு வந்த குகைக்குத் திரும்பும் போது ஞானி சொன்னபடி தன் மனதிற்குள்
திட்டம் தீட்டிக் கொண்டான்.
அந்தப் பித்தளைப் புட்டியைச் சுண்டினான். ஜின் பதில் பேசியது.
அதன் குரல் உலோகத்தின் குரலைப் போல் கேட்டது, ஆனால் பயங்கரமாக இருந்தது: “சுலைமான்
அலைஹிஸ் சலாம் (அவர் மீது பேரமைதி உண்டாவதாக!) அவர்களின் பெயரால் கேட்கிறேன், ஆதமின்
மகனே! என்னை வெளியே விடு.”
”நீ என்னை நம்பவில்லையா? என்னால் பொய் சொல்ல முடியாது என்பது
உனக்குத் தெரியாதா?” என்று ஜின் திரும்பிக் கேட்டது.
”இல்லை, எனக்குத் தெரியாது” என்றான் அவன்.
”அப்படியானால், உன்னை நான் எப்படி நம்ப வைப்பது?”
”எனக்கு ஒரு ஒத்திகை காட்டு. புட்டிக்குள் இருந்துகொண்டே உன்னால்
எதாவது செய்ய முடியுமா?”
”ஆமாம், என்னால் முடியும்,” என்றது ஜின். “ஆனால், அந்த ஆற்றல்களைக்
கொண்டு என்னால் இந்தச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.”
”சரி சரி, என் மனதிற்குள் ஒரு பிரச்சனை குடைந்து கொண்டிருக்கிறது.
அதற்கான சரியான தீர்வு என்ன என்பதை அறியும் ஆற்றலை எனக்குக் கொடு.”
உடனடியாக, ஜின் தனது வினோதமான கலையைக் காண்பித்தது. தனது தாத்தாவிடம்
இருந்து தந்தையின் வழியாக தான் பெற்றுள்ள அறிவுரையான மூதுரையின் மூலத்தை இளம் மீனவன்
அறிந்தான். புட்டிக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஜின் அவனின் தாத்தனுக்குக் கொலை மிரட்டல்
விடுத்த காட்சியை அவன் தன் மனத்திரையில் கண்டான். மேலும், ஜின்களிடம் இருந்து ஆற்றல்களை
எப்படிப் பெறுவது என்றும் அவற்றைப் பிறருக்கு எப்படிச் சொல்லித் தருவது என்றும் அவனுக்கு
வெளிச்சமாயிற்று. ஆனால் அதற்கு மேல் அவன் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பதையும்
அவன் உணர்ந்தான். எனவே, இளம் மீனவன் அந்த புட்டியை எடுத்து, அவனது தாத்தன் செய்ததைப்
போன்றே, கடலுக்குள் வீசி எறிந்துவிட்டான்.
அவன் தனது வாழ்வின் மிச்ச காலத்தை ஒரு மீனவனாக அல்லாமல் மக்களுக்கு
போதனை செய்வதில் கழித்தான். ’தான் பயன்படுத்தக்
கற்காத ஒன்றைப் பயன்படுத்த முயலும் மனிதனுக்கு உண்டாகும் தீமைகள்’ குறித்து அவன்
விளக்கி எச்சரித்தான்.
ஆனால், ஜின்கள் அடைக்கப்பட்டிருக்கும் புட்டிகள் எல்லாருடைய
கைகளிலும் கிடைப்பதில்லை. அதைக் கண்டவர்கள் அரிதினும் அரிது. அப்படியே எவரேனும் கண்டெடுத்தாலும்
அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஞானியர் இருப்பதில்லை. இளம் மீனவனின் வழித்தோன்றல்கள்
அவனின் “போதனை”களைக் கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக்கொண்டு அவனின் விவரிப்புக்களை நாடகப்
பாங்கில் பாவித்துக் கொண்டிருந்தனர். நாட்கள் போகப் போக அவர்கள் ஒரு தனி மதமாக உருவாகிவிட்டனர்.
மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட, பொன்னும் வெள்ளியும் நவமணிகளும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட
ஆலயங்களில் அவர்கள் பித்தளைப் புட்டிகளில் பானங்களைப் பருகினர். இந்த மீனவனின் நடத்தைகள்
மீது அவர்கள் பெரிய மரியாதை வைத்திருந்ததால் அவன் செய்த காரியங்களை எல்லாம் தாமும்
போலச் செய்து மகிழ்ந்தனர்.
பித்தளைப் புட்டி என்பது, பல நூற்றாண்டுகளுக்குப் பின் இவர்களுக்கு,
புனிதச் சின்னமாகவும் பெரிய மர்மமாகவும் இருக்கின்றது. இந்த மீனவனை நேசிப்பதால் மட்டுமே
அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த முனைகின்றனர். அவன் இருந்த கடலோர கிராமத்தில்
அவர்கள் எளிய குடில் ஒன்றைக் கட்டி புத்தாடைகளும் பூக்களும் அணிகலன்கலும் சூடிக்கொண்டு
அதனுள் புதுமையான சடங்குகள் பலவற்றைச் செய்கின்றனர்.
இளம் மீனவனுக்கு போதனை வழங்கிய ஞானியின் வழி வந்த சீடர்கள் இப்போதும்
அவர்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். மீனவனின் பரம்பரையில் வந்த பேரப் பிள்ளைகளையும்
யாருக்கும் தெரியாது. பித்தளைப் புட்டி கடலுக்கு அடியில் எங்கோ கிடக்கிறது. அதனுள்
ஜின் தூங்கிக் கொண்டிருக்கிறது.
db
இந்தக் கதையின் ஒருவகைப் பிரதி ஆயிரத்தோர் இரவு அறபிக் கதைகள் வாசித்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அதன் வடிவம் தர்வேஷ்களால் சொல்லப்படுவது. மத்தியக் காலத்தின்
வசியக்காரனான விர்ஜில், நேப்பிள்ஸ் நகரில் பெற்ற
ஆற்றலும், பொ.ஆ 999-இல் போப் சில்வஸ்டர் என்றான கெர்பர்ட் பெற்ற ஆற்றலும் இதே போல்
’ஜின்னிடம் இருந்து பெற்ற’ அறிவினால் வந்தது என்று சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இக்கதைக்கு நான் எழுதிய அடிக்குறிப்பு:
இந்தக் கதைக்கு இத்ரீஸ்
ஷாஹ் எழுதியிருக்கும் பிற்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போப் சில்வஸ்டர் – II என்னும்
வரலாற்று ஆளுமையைப் பற்றிச் சில செய்திகள்:
இவரின் இயற்பெயர்
கெர்பர்ட். பொ.ஆ 946-இல் பிரான்சு நாட்டில் பெல்லியாக் என்னும் ஊரில் பிறந்தார்.
பொ.ஆ 963-இல் ஆரில்லாக் நகரின் புனித ஜெரால்டு மடாலயத்தில் சமயக் கல்விப்
பயில்வதற்காக இணைந்தார். எனவே அவர் பின்னாளில் ஆரில்லாக்கின் கெர்பர்ட் என்று
அழைக்கப்பட்டார். பொ.ஆ 967-இல் பார்சிலோனாவின் ஆளுநரான இரண்டாம் போரல்
மடலாயத்திற்கு வருகை தந்தபோது சமயப் பள்ளித் தலைவரின் பரிந்துரையில் கெர்பர்ட்
அவருடன் காடலோனியா மடாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார், கணிதமும் அரபி மொழியும்
பயில்வதற்காக. ஏனெனில், இஸ்லாமிய ஆட்சி நடைபெற்று வந்த ஸ்பெயின் நாட்டின் கல்வித்
தலைநகர் என்று கருதப்பட்ட குர்த்துபாவில் இருந்து பற்பல சுவடிகள் அந்த மடாலயத்தில்
இருந்தன. அங்கே கெர்பர்ட் கணிதத்தில் இந்து-அராபிக் எண்களைப் பயின்றார். அபாகஸ்
முறையையும் கற்றுக் கொண்டார்.
புனித பெனடிக்டின்
போதனைகளில் தேர்ச்சி பெற்ற துறவியாக இருந்த கெர்பர்ட், சில காலம் ரெய்ன்ஸ்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ரவன்னா மாகாணத்தின் பேராயராகவும்
பணியாற்றினார். 2 ஏப்ரில் 999 பொ.ஆ-இல் ”போப்” பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்பதவியை அடைந்த முதல் பிரான்சு நாட்டவர் அவரே. அப்போது அவரின் பெயர் இரண்டாம்
போப் சில்வஸ்டர் என்றானது. பொ.ஆ 1003-இல் தனது மரணத்தின் வரை போப்பாக இருந்தார்.
அற்புதம்
ReplyDelete