Sunday, June 6, 2021

மூன்று மீன்கள்

     இர்விங் கர்ஷ்மார் எழுதிய “Master of the Jinn" நாவலை தமிழில் மொழிபெயர்த்துவிட்டேன். சீர்மை பதிப்பகம் விரைவில் அதனை நூலாக வெளியிடும் என்று நம்புகிறேன்.

    அடுத்து என்ன என்று நண்பர் உவைஸ் கேட்டிருந்தார். 

    அடுத்த மொழிபெயர்ப்புப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். இத்ரீஸ் ஷா தொகுத்த “Tales of the Dervishes" என்னும் நூலினை “தர்வேஷ்களின் கதைகள்” என்று தமிழில் கொண்டு வரத் திட்டம். இந்த நூலில் இருந்து ஏற்கனவே மூன்று கதைகளை 2013-இல் மொழிபெயர்த்து பிரபஞ்சக்குடிலில் போட்டிருக்கிறேன்.(”தேநீரின் கதை” (16-ஏப்ரில்-2013), ”மணலின் கதை” (2-ஜூந்2013) மற்றும் “ ஏசுவின் பறவைகள்“ (12-ஆகஸ்ட்-2013)). எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன். அப்போது, கதைகளின் இடையிடையே சூஃபி விளக்கக் குறிப்புக்களை எழுதியிருந்தேன். இப்போது கதைகளை மட்டும் மொழிபெயர்த்து வருகிறேன். நேரம் வாய்க்கும் போதெல்லாம் இங்கே புதிய கதைகளைத் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். இதோ, முதல் கதை:



   







மூன்று மீன்கள்

            ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. ஒரு அறிவாளி மீன், ஒரு பாதியறிவு மீன் மற்றும் ஒரு முட்டாள் மீன். எங்கும் இருக்கும் மீன்களின் வாழ்க்கையைப் போலவேதான் இந்த மூன்று மீன்களின் வாழ்க்கையும் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது, ஒருநாள் விடியல் நேரத்தில் மனிதன் ஒருவன் அங்கே வந்து சேரும்வரை.

            அவன் ஒரு வலை வைத்திருந்தான். அறிவாளி மீன் அவனை நீரின் வழியாகப் பார்த்தது. தனது அனுபவங்கள், தான் கேட்ட கதைகள் மற்றும் தன் நுண்ணறிவு எல்லாத்தையும் வைத்து அது ஒரு முடிவுக்கு வந்தது.

            ”ஒளிந்து கொள்ள இந்தக் குளத்தில் சரியான இடமே இல்லை. அதனால் நான் இறந்து போனதாக பாவனை செய்வேன்.”

            அது தன் வலிமையை எல்லாம் திரட்டி அந்தக் குளத்தை விட்டு வெளியே குதித்து மீனவனின் காலடியில் வந்து விழுந்தது. அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். அறிவாளி மீன் மூச்சடக்கி வீங்கிக் கிடந்ததைப் பார்த்து அது செத்துவிட்டது என்று அவன் நினைத்தான். எனவே அதைத் தூக்கியெறிந்தான். அது நழுவிப் போய் குளத்தங் கரையில் இருந்த ஒரு பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

            இப்போது இரண்டாம் மீன், அரை குறை அறிவு கொண்டது, என்ன நடந்தது என்பதை அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அது முதல் மீனிடம் நீந்திச் சென்று விசயத்தை விசாரித்தது. “மிக எளிது,” என்றது அறிவாளி மீன். “நான் செத்தவன் போல் நடித்தேன். எனவே அவன் என்னை வீசியெறிந்துவிட்டான்.”

            எனவே, அந்த பாதியறிவு மீன் உடனே தானும் நீருக்கு வெளியே குதித்து மீனவனின் காலடியில் விழுந்தது. “விசித்திரம்!” என்று மீனவன் எண்ணினான். “இவை இங்கே எல்லா இடத்திலும் குதித்து விழுகின்றன.” அந்த பாதியறிவு மீன் தனது மூச்சை அடக்க மறந்துவிட்டதால் அந்த மீனவன் அது உயிரோடுதான் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தன் கூடைக்குள் போட்டான்.

            அவன் நீருக்குள் நோட்டம் விடுவதற்காகத் திரும்பினான். தன் முன் அவை துள்ளி குதித்துத் தரையில் விழுவதைப் பார்த்ததில் சற்றே அவன் குழம்பிப் போயிருந்ததால் தன் கூடையை மூடிவைக்க மறந்துவிட்டான். அந்த பாதியறிவு மீன் அதை அறிந்தபோது வெளியே எகிறி குதித்தது. பிறகு அது தத்தித் தத்தி நகர்ந்து மீண்டும் நீருக்குள் வந்துவிட்டது. அது முதல் மீனைத் தேடி அதன் அருகில் கிடந்து தத்தளித்தது.

            இப்போது மூன்றாம் மீன், அதாவது முட்டாள் மீன், இதையெல்லாம் பார்த்த பிறகும் பாடம் படிக்கவில்லை. முதலாம் மற்றும் இரண்டாம் மீன்களின் கதையை அறிந்த பிறகும் அதற்கு அறிவு பிறக்கவில்லை. எனவே, அந்த இரண்டு மீன்களும் அந்த முட்டாள் மீனையும் தம்முடன் அழைத்துக் கொண்டு குளமெல்லாம் சென்று மூச்சடக்க வேண்டியதன் அவசியத்தையும் செத்தது போல் பாவனை செய்ய வேண்டிய தேவையையும் போதித்தன.

            ”மிக்க நன்றி ஐயா! இப்போது நான் புரிந்துகொண்டேன்,” என்று அந்த முட்டாள் மீன் சொன்னது. சொல்லிவிட்டு விரைந்து சென்று குளத்துக்கு வெளியே துள்ளி குதித்து மீனவனின் அருகில் போய் விழுந்தது.

            ஏற்கனவே இரண்டு மீன்களை இழந்த கடுப்பில் இருந்த மீனவன் அது மூச்சு விடுகிறதா இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் முட்டாள் மீனைத் தன் கூடைக்குள் போட்டான். அவன் தன் வலையை மீண்டும் மீண்டும் குளத்தில் வீசிப் பார்த்தான். ஆனால், அந்த இரண்டு மீன்களும் குளத்தின் அடியில் சேற்று வளைக்குள் போய் பதுங்கிவிட்டன. அவனின் கூடையும் இந்த முறை மூடப்பட்டிருந்தது.

            கடைசியில் மீனவன் தன் முயற்சியைக் கைவிட்டான். கூடையைத் திறந்து பார்த்தான். முட்டாள் மீன் செத்துக் கிடந்தது. அதை அவன் தன் பூனைக்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.

db



            









இந்த போதனைக் கதையை, நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள்தான் சூஃபி குருமார்களுக்கு (ஃகாஜகான்) சொன்னார் என்று கூறப்படுகிறது. அந்த குருமார்களே பதினான்காம் நூற்றாண்டில் தம் வழிமுறைக்கு நக்‌ஷ்பந்திய்யா நெறி என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.

            சில நேரங்களில் செயல்பாடுகள் கரத்தஸ் என்று சொல்லப்படும் கறுப்புக் கல்லின் நாட்டில் நிகழ்கின்றது.

            கதையின் இப்பிரதி அப்தால் (’மாற்றப்பட்டவர்’) அஃபீஃபி என்னும் சூஃபியிடம் இருந்து வருகிறது. அவர் அதனை ஷைகு முஹம்மது அஸ்கர் அவர்களிடம் இருந்து கேட்டார். அஸ்கர் அவர்கள் 1813-இல் இறந்தார். அவரது அடக்கத்தலம் தில்லியில் உள்ளது.

  

No comments:

Post a Comment