Thursday, February 18, 2021

’நாற்பது விதிகள்’ – ஒரு விளக்கம்

 


14-பிப்ரவரி- 2021 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டின் பக்கமொன்றில், ஒரு பக்க அளவில் மூன்று சிறு கட்டுரைகள். மூன்றுமே காதலைப் பற்றியவை. அன்று காதலர் தினமாம். அரை பக்க அளவிலான ஒரு கட்டுரை ஃபிரான்சிஸ் கிருபா எழுதிய ‘கன்னி’ என்னும் நாவலைப் பற்றியது. கீழ்ப்பகுதியில் வலது புறம் இருந்த கட்டுரை அலிஃப் ஷஃபக் எழுதிய “The Forty Rules of Love” என்னும் நாவலைப் பற்றியது. ரியாஸ் என்பார் எழுதியது. (இடது புறம் இன்னொரு குறுங்கட்டுரை. பெயர் நினைவில்லை).

            ரியாஸ் எழுதிய கட்டுரை தொடர்பாகக் கொள்ளு நதீம் அவர்கள் வாட்ஸாப்பில் நேற்றுக் காலை 10:54-க்கு எனக்குச் செய்தி அனுப்பியிருந்தார். ரியாஸ் எழுதிய கட்டுரைக்கு ‘மஸ்னவி அபுதாஹிர் மௌலவி’ மறுப்புத் தெரிவித்து நாளிதழுக்கும் மறுப்புத் தெரிவித்திருநதார் என்று குறிப்பிட்டு, அதன் தூண்டுதலில் தானும் நாவலை வாங்கி வாசிக்கத் தொடங்கியிருப்பதாகவும், நான் அந்த நாவலை வாசித்திருப்பதாகக் கேள்விப்பட்டு இது குறித்து என் கருத்தை அறிய விரும்புவதாகவும் கேட்டிருந்தார்.

            தினமும் காலை விடிந்தும் விடியாமலும் என் வீட்டு முற்றத்தில் பறந்து வந்து விழும் நாளேடு ’இந்து தமிழ் திசை’தான். நாளேட்டைப் புரட்டினால் நான் முதலில் வாசிப்பதும் இலக்கியம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான சிறு கட்டுரைகளைத்தான். தேசிய மாநிலச் செய்திகளை எல்லாம் அப்புறம்தான் வாசிப்பேன். ஆனால், 14-ஆம் தேதியன்று மேற்குறிப்பிட்ட பக்கத்தை நான் பார்க்கவே இல்லை. ஏனெனில், அன்று செய்தித்தாளையே நான் தொடவில்லை. அன்று மட்டுமல்ல. கடந்த இரண்டு வாரங்களாகவே செய்தித்தாள் பக்கம் அதிகமாகப் போகவேயில்லை. காரணம், மொழிபெயர்ப்பு வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்தேன். ஆங்கில நாவல் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். என்ன நாவல் என்று கேட்கிறீர்களா? அலிஃப் ஷஃபக் எழுதிய “காதலின் நாற்பது விதிகள்” (The Forty Rules of Love)!

            17-02-2021 (புதன்) அன்று மதியம் ஒரு மணி அளவில் மொழிபெயர்ப்பையும் இந்நாவல் குறித்த முன்னுரை ஒன்றையும் எழுதி சீர்மை உவைஸ் (இப்போது இப்படி அழைக்கிறார்கள். முன்பு மெல்லினம் உவைஸ். பதிப்பகப் பெயர்கள்) அவர்களுக்கு மின்னஞ்சலில் கோப்பு அனுப்பி வைத்தேன். இரண்டு மாதங்களுக்கு மேலாக எழுத்திலேயே கிடந்துவிட்டேனா, இனி ஒரு வாரத்துக்கு மடிக்கணினியைத் தூக்கக் கூடாது என்று வேறு உத்தரவாகிவிட்டதா, எனவே வாசிப்பில் இறங்குவோம் என்று ‘வேதாளம் சொன்ன கதை’ (யுவன் சந்திரசேகர்) என்னும் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன் (பள்ளி ஆசிரியர் ஒருவர் இதை எம்ஃபில் ஆய்கிறார். அவருக்கு நான் நெறியாளர்.)

            இடைப் பிறவரலாக இன்னொன்று. 17-02-2021 அன்று காலை ஒன்பதே முக்காலுக்கு நிஷா மன்சூர் அழைத்துப் பத்து நிமிடங்கள் பேசினார். (மேட்டுப் பாளையத்திலிருந்து கம்பம் போய்க்கொண்டிருந்தார்.) ”கி.அ.சச்சிதானந்தம் தெரியும்தானே?” என்று ஆரம்பித்தார். ஆச்சரியம்! 16-02-2021 அன்று சக பேராசிரியர் முனைவர் த.செல்வராசு அவர்களிடம் கி.அ.சச்சிதானந்தம் மொழிபெயர்த்த “சிவானந்த நடனம்” என்னும் நூல் (ஆங்கிலத்தில் ஆனந்த கெண்டிஷ் குமாரசுவாமி எழுதிய “The Dance of Shiva”) பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவரையே இப்போது நிஷா மன்சூர் கேட்கிறார் என்றால் சற்றே வியப்பாக இருக்காதா? விசயத்தைச் சொன்னார். ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) எழுதிய “மன்திக்குத் தய்ர்”  என்னும் சூஃபி காவியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் பெயர்த்திருக்கிறார் என்றும் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்று சோதித்து சொல்லுமாறு அதன் கைப்பிரதி தன்னிடம் தரப்பட்டிருப்பதாகவும் சொன்னார். ”இரண்டு அத்தியாயங்கள் படித்தேன். தலை சுற்றுகிறது. அப்படிப் போட்டுக் குதறி வச்சிருக்கார். பெயர்களை எல்லாம் தப்புத் தப்பாக எழுதியிருக்கிறார்…” என்றார் மன்சூர். ‘காதலின் நாற்பது விதிகள்’ நூலை மொழிபெயர்க்கத் தொடங்கும் முன் நான் அந்த நூலின் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தேன் என்பதையும் அப்பணி பாதியில் ஆரம்பக் கட்டத்தில் நிற்கிறது என்பதையும் என்ன சொல்ல? பாரசீக மூலம், உருது மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு அந்த நூலை நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன் (அதே முறையில் இன்னொரு நூலையும் பெயர்த்து வருகிறேன்: மவ்லானா ரூமியின் ஆன்மிக உரைகளின் தொகுப்பான ஃபீஹி மா ஃபீஹி.) நான் மொழிபெயர்க்கும் விசயத்தைச் சொன்னவுடன் மன்சூர் சற்றெ பதற்றமான தொனியில் ஆலோசனை ஒன்று வழங்கினார்: ‘எல்லாருக்கும் புரியுற மாதிரி எளிமையான நடையில் எழுதுங்க… ரொம்பக் கவித்துவமாப் போய்ட வேணாம்.”

            14-ஆம் தேதி இந்து நாளிதழில் ரியாஸ் எழுதிய கட்டுரையை நேற்று பிற்பகல்தான் வாசித்தேன். ஏற்கனவே இந்த நாளேட்டில் ‘ஆனந்த ஜோதி’ என்னும் இணைப்பில் (வியாழன் தோறும்) சூஃபிகள் பற்றி ஒருவர் எழுதி வந்ததில் இருந்த அபத்தங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதிலே இல்லை. சூஃபிகள் மற்றும் அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை எல்லாம் படுகொலை செய்து தாறுமாறாக எழுதி அந்தக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. ரியாஸ் எழுதிய இந்தக் கட்டுரையிலும் அது மாதிரியான பெயர்ச்சிதைவுகள் இருந்ததே எனக்கு வருத்தமளித்தது. Samarkand என்று ஒரு நகரம். ஸமர்கந்த் என்பது சரியான உச்சரிப்பு. யூடியூபிலேயே பரிசோதித்துவிட முடியும். இவர் சாமர்கண்ட் என்று எழுதியுள்ளார். போகட்டும். இந்த நாவலில் இடம் பெறும் முக்கியமான ஒருவரின் பெயர் Aziz Z.Zahra என்று ஆங்கிலப் பிரதியில் இருக்கிறது. Aziz என்பது முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பரவலாகப் புழங்கப்படுமொரு பெயர்தான். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று. குர்ஆனின் 12-ஆம் அத்தியாயத்தில் இப்பெயரில் ஆளுநர் ஒருவரும் சுட்டப்படுகிறார். சவூதி அரேபியாவில் அரசரின் பெயராக “King Abdul Aziz” என்று வேறு இப்பெயர் ஸுப்ரசித்தம். இதைத் தமிழில் முடிந்த அளவு அறபி உச்சரிப்புக்கு அருகில் தொனிக்குமாறு ‘அஜீஸ்’ என்றுதான் காலகாலமாக எழுதப்படுகிறது. ரியாஸ் இப்பெயரை அஷிஸ் என்று ஒலிபெயர்த்திருக்கிறார். அதே போல் ’ஸஹ்ரா’ என்பதை சஹாரா என்று பாலைவனமாக்கிவிட்டார். சூஃபிக் குறியீடாகப் பாலவனப் பெயர் வருகிறது என்று கருதிவிட்டாரோ என்னவோ? அதே போல் ஷம்ஸின் ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் Tabriz என்று எழுதப்படும். ஃபார்ஸி ஒலிப்பில் அது ‘தப்ரேஸ்’. (நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் பாடிய “அல்லாஹு அல்லாஹு” என்னும் உலகப் புகழ் பெற்ற கவ்வாலியைக் கேட்டுப்பாருங்கள். அதன் எடுப்பு வரிகள்: “ஷம்ஸி தப்ரேஸ் கர் ஃகுதா தலபீ / ஃகுஷ் புஃகான் லா இலாஹ இல்லா ஹூ”). ரியாஸ் இப்பெயரை ‘தப்ரிஸ்’ என்று எழுதுகிறார்.

            இதற்கே மனதிற்குள் ‘மண்டூகம் மண்டூகம்…’ என்று திட்டிவிட்டேன். (”பின்ன என்னங்க? இதெல்லாம் நல்லாலீங்க…”) தேசிக விநாயகம் பிள்ளை Omar Khayyaam என்று ஃபிட்ஜெரால்டு எழுதியதை வைத்துக்கொண்டு ஒமார் கய்யாம் என்று எழுதினால் போகிறது என்று விட்டுவிடலாம். (அதையே நான் விமரிசனம் செய்திருக்கிறேன். நாரோவில் பக்கம் உனக்கு ஒரு முஸ்லிம் நண்பர்கூட இல்லையா? இந்தப் பெயரின் உச்சரிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டு ஒழுங்காக எழுத முடியாதா? இப்போது தோன்றுகிறது, ஒருவேளை ரியாஸ் மாதிரி யாரிடமாவது அவர் கேட்டிருக்க வாய்ப்புள்ளது.) மதியம் ரசஞ்சாதமும் கப்பக்கிழங்கு சிப்ஸும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அலைபேசியை நோண்டினால் வாட்ஸப்பில் 1:48-க்கு சீர்மை உவைஸ் ஒரு செய்தி அனுப்பியிருந்தார், ரியாஸ் பற்றி. “எழுதியவர் சமீபத்தில் அறிமுகமான நண்பர்தான்” என்று அது தொடங்கிற்று. அல்லாஹு அக்பர்! இது என்னடா இது, யுவன் எழுதிய வேதாளம் சொன்ன கதை நாவல் மாதிரி தொடங்கிப் போய்க்கிண்டிருக்கிறதே? என்று நினைத்தேன்.

            நினைத்தது உண்மைதான். நேற்று (18-02-2021) மாலை ஆறு மணி வாக்கில் முகநூலில் உவைஸ் ஒரு சேதியைப் போட்டிருந்தார். “காதலின் நாற்பது விதிகள் நாவலின் தமிழாக்கம் நிறைவுற்றது. (அல்ஹம்துலில்லாஹ்!). ரமீஸ் பிலாலியின் சொக்க வைக்கும் மொழிபெயர்ப்பில், சீர்மை வெளியீடாக… விரைவில், இன்ஷா அல்லாஹ்!” நண்பர்களுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று தலையைச் சொறிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

            இந்த முகநூல் செய்தியை, இந்து நாளிதழ் ஆசிரியருக்கு இக்கட்டுரை பற்றித் தனது மறுப்பைத் தெரிவித்திருந்த மௌலானா மௌலவி டி.எஸ்.அபுதாஹிர் மஹ்ழரி அவர்கள் பார்த்திருக்கிறார். மாலை 7:23-க்கு அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “என்னங்க நாவல் இது?...” என்று ஆரம்பித்துத் தனது ஐயங்களைப் பேசினார். திருச்சியின் பேரங்காடி ஒன்றில் கைலி வாங்கிக் கொண்டிந்தேன். இருந்தாலும், ஒதுங்கி நின்று அவரிடம் பன்னிரண்டு நிமிடங்கள் பேசினேன். அப்போது புரிந்தது, ரியாஸின் கட்டுரையில் உள்ள ஒயேயொரு வரிதான் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது. அவர் அழைப்பதற்குச் சற்று முன்னர், 6:01-க்கு கொள்ளு நதீம் அவர்களுக்கு வாட்ஸாப் செய்தி அனுப்பியிருந்தேன்: “தேடிப் படித்துவிட்டேன். ஒரேயொரு வரி மிகவும் Misleading-ஆக உள்ளது.” அவ்வளவுதான் அப்போது அனுப்ப முடிந்தது. பெஸ்ட் டிராக்கில் அமர்ந்து கொண்டே அனுப்பினேன்.

            பிரச்சனைக்குரிய அந்த வரிக்கு அடுத்து வருவோம். “The Forty Rules of Love” என்னும் தலைப்பே பிரச்சனையாக இருக்கிறதா? அதைப் பற்றி ரியாஸ் தெளிவாகத்தான் எழுதியிருக்கிறார். ”தமிழில் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும், தமிழ் இலக்கிய வெளியிலும் அது பரவலாக வாசிக்கப்படுகிறது. காதல் அந்நாவலின் சிறப்பம்சமாக இருப்பதே காரணம். காதல் என்றால் ஆண்-பெண் காதல் அல்ல; வாழ்வு மீதான காதல், பிரபஞ்சத்துடனான காதல்.” மட்டுமன்று, ’இறைவனுடனான காதல்’ என்பதையும் ரியாஸ் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏன் தயங்குகிறார்?

            மவ்லவி அபுதாஹிர் மஹ்ழரி அவர்களைச் சீற்றம் கொள்ள வைத்த வரி, இறைஞானி ஷம்ஸி தப்ரேஸ் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ரியாஸ் இப்படிச் சொல்கிறார்: “மது அருந்துகிறார், பாலியல் விடுதிக்குச் செல்கிறார், இறைவன் மீது பற்றுக் கொண்டவராக இல்லை.” இந்து தமிழ் நாளிதழுக்கு மவ்லவி அபுதாஹிர் அவர்கள் எழுதியிருந்த மறுப்பில் சொல்லப்பட்டிருப்பது போல் (அதன் பிரதியை எனக்கு வாட்ஸாப்பில் கொள்ளு நதீம் அனுப்பியிருந்தார்), இந்த வரிகள் முஸ்லிம்களை மட்டுமன்று, பொதுவாக ஆன்மிக நாட்டம் கொண்ட அனைத்து மதத்தினரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்கும் என்பது உண்மைதான். இந்த இடத்தை விளக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எண்ணுகிறேன்.

            முதலில், இது ரியாஸின் கருத்து அல்ல. நாவலில் அப்படி இருக்கிறதா? என்றால் அதற்கும் நிதானமாகத்தான் பதில் சொல்லியாக வேண்டும். ரியாஸ் எழுதியிருப்பதிலும் இந்தப் பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்தது போல் பார்த்தால் தப்பாகத்தான் தெரியும். ஓர் உதாரணம்: ’மணிமேகலை’ காப்பியத்தில் ”சிறைக் கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கிய காதை” என்றொரு தலைப்பு. இதனை, “மணிமேகலை சிறையில் அடைபட்ட காதை” என்றோ “மணிமேகலை கைது படலம்” என்றோ மாற்றித் தலைப்பிட்டால் விளங்குவதில் வித்தியாசம் நேருமா இல்லையா? மணிமேகலை குற்றம் செய்து தண்டிக்கப்பட்டதாகப் படுமா இல்லையா? மணிமேகலை சிறைக்குப் போனது உண்மைதான். ஆனால் எதற்குப் போனாள் என்றல்லவா பார்க்க வேண்டும். குற்றவாளிகள் நிரம்பிய சிறையை அவள் சென்று ‘அறம்’ திகழும் இடமாக மாற்றுகிறாள் என்பதுதானே கதை? இதுவும் அதைப் போன்றுதான்.

            நண்பரும், ஃபஹீமியா டிரஸ்ட் மூலம் ரூமி (ரஹ்) அவர்களின் ஆன்மிகக் காவியமான ‘மஸ்னவி ஷரீஃப்’-ஐ ஆறு பாகங்களாக (நரியம்பட்டு எம்.ஏ.சலாம் சாஹிப் மொழிபெயர்ப்பு) வெளியிட்டவருமான அபுதாஹிர் மவ்லவியிடம் நான் மேற்காணும் ’பிரச்சனை’ வரியின் இரண்டாம் பாகத்தை மட்டும் விளக்கினேன். ஷம்ஸ் பாலியல் விடுதிக்குப் போனாரா? ஆம், இந்தக் கதையில் அப்படித்தான் வருகிறது. அனாதையாக இருந்து, அடிமையாக விற்கப்பட்டு, அநியாயமாக விபச்சார விடுதியில் சிக்கியிருக்கும் ‘பாலை ரோஜா’ என்னும் பெண் அந்த இடத்திலிருந்து விடுதலை அடைந்து தூய ஆன்மிக வாழ்க்கை வாழ விரும்புகிறாள். அவளை அவ்விடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அங்கு ஷம்ஸ் செல்கிறார். அப்பெண்ணும் அங்கிருந்து பின்னாளில் தப்பித்து வெளியேறி ரூமியின் வீட்டில் அடைக்கலம் புகுந்து, ஆன்மிக வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகக் கதை. இந்தப் பின்னணி புரியாமல் “பாலியல் விடுதிக்குச் செல்கிறார்” என்று மொழுக்கையாகப் படித்தால் பொதுப் புத்தியில் தப்பாகத்தானே விளங்கும்?

            இதே போன்றுதான் ‘மது அருந்துகிறார்’ என்னும் வரியும். ஆனால், நாவலில் வரும் காட்சியின்படியே இது இன்னும் சிக்கலான ஓரிடம். ரூமியைச் சோதிப்பதற்காக மது விடுதிக்குப் போய் இருவருக்கும் மது வாங்கி வரும்படி ஷம்ஸ் சொல்கிறார். ரூம் அதை ஒரு சோதனை என்று புரிந்து கொண்டு உடன்படுகிறார். ரூமி மதுக்கோப்பையை வாயருகில் கொண்டுபோகும்போது அதனைக் கீழே தட்டிவிடுகிறார் ஷம்ஸ். ஏன்? இது ஒரு சோதனை. அவ்வளவுதான். மது அருந்துவது ஆகுமானதல்ல என்பதால்தான் தட்டி விடுகிறார். ஆனால், ரூமியிடம் மறு பாதியைக் கொடுக்கும் முன் ஒரு பாதியை ஷம்ஸ் குடிப்பதாக இந்நாவலில் வருகிறது. அவர் அப்படிச் செய்யலாமா? என்று கேள்வி எழுகிறது. இதை எப்படி ”தஃவீல்” (Interpret) செய்வது? இந்த நாவலை இரண்டாண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் மாணவர் ஒருவர் ‘எம்.ஏ’ பட்டத்துக்காக ஆய்வு செய்தார். சூஃபி நெறியில் பைஅத் பெற்றவர் அவர். எனவே இந்த நாவலைத் தேர்ந்திருந்தார். இது மாதிரி சிக்கலான இடங்களில் எப்படிப் புரிந்து கொள்வது என்று அவ்வப்போது என்னிடம் உரையாடினார். என்னுடைய ’தஃவீல்’ – புரிதலை அவருக்கு விளக்கினேன். அதை இங்கேயும் சொல்கிறேன். இக்கட்டத்துக்கு முன் ஒரு காட்சி வருகிறது. ரூமி வாங்கி வந்த மதுவை, காய்ந்து போன ரோஜாச் செடி ஒன்றின் வேரில் ஷம்ஸ் ஊற்றுகிறார். ரோஜாச் செடி உயிரூட்டம் பெற்றுப் பசுமையாகி அதில் ஒரேயொரு பெரிய ரோஜா மலர்கிறது. இது ஓர் அற்புதச் செயல். இறைநேசர்கள் புரியும் ”கராமத்” என்னும் அற்புதம் இது. அந்த வல்லமையை வெளிப்படுத்திக் காட்டிய பின்னரே ஷம்ஸ் தான் அதை அருந்துகிறார். இப்போது அது மதுதானா? மது காடியாக மாறியது, மணல் சீனியாக மாறியது எனபது மாதிரியான அற்புதங்களை இறை நேசர்களின் வாழ்வில் நாம் கேள்விப்பட்டதில்லையா? இது அவர்களுக்கு முடியாத ஒன்றா? அல்லது இலகுவான ஒன்றா? அவ்வகையில், உண்மையில் ஷம்ஸ் அருந்தியது மதுவே அல்ல என்பது என் புரிதல். மதுவின் நிறத்திலேயே இருக்கும் ரோஜா ஷர்பத்தாக அது மாறியிருக்கிறது என்று நான் புரிந்துகொள்கிறேன். (அதைச் சுட்டத்தான் இங்கே ரோஜாச் செடி முதலில் குறியீடாகக் காட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.) பிறகு ஏன் ரூமி அருந்தப் போகையில் தடுக்கிறார்? என்று கேட்கலாம். ரூமியின் பார்வையில் அது இன்னமும் மதுதான். அந்த ’நிய்யத்தில்’ (எண்ணத்தில்) அவர் தண்ணீரையே அருந்தினாலும் அது மதுவை அருந்திய குற்றமாகத்தான் ஆகிவிடும். எனவே, குவளைக்குள் இருப்பது முன்பு மதுவாக இருந்து கராமத்தால் இப்போது மாற்றப்பட்டுவிட்ட தூய குளிர் பானமாகவே இருந்தாலும், ரூமிக்கு அது தெரியாதாகையால் மது என்று எண்ணியபடி அதை அருந்தினால் அவர் குற்றவாளி ஆகிவிடுவார். எனவே ஷம்ஸ் அவரைத் தடுத்துவிட்டார். (’மது என்று நினைத்துத் தண்ணீரையே ஒருவன் அருந்தினாலும் அவன் மது அருந்திய குற்றத்துக்கு ஆளாவான்’ என்று மௌலவி அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.)

            இப்படிப் பல இடங்களை ‘தஃவீல்’ செய்தபடித்தான் இந்த நாவலில் நாம் பயணிக்க முடியும். ஷம்ஸி தப்ரேஸ் (ரஹ்) அவர்கள் திருக்குர்ஆன் கூறும் கிள்று (அலை) அவர்களைப் போன்று நடந்து கொள்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். வெளிப்பார்வைக்கு இஸ்லாத்திற்கு எதிராகத் தோன்றலாம். நம் சிற்றறிவுக்கு எட்டாமலும் போகலாம். 16-02-2021 செவ்வாய் மாலை ஏழு மணிக்கு, என் சகோதரர் ஒருவருக்கான திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போனேன். அழைப்பிதழில் அவரது பெயரின் முன் “மௌலானா மௌலவி முஹிப்புல் மஸ்னவி” என்று எழுதியிருந்தேன். மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் மஸ்னவி ஷரீஃபை பார்ஸி மொழியிலேயே தொடர்ந்து வாசித்துப் பேரின்பம் கண்டு வரும் மார்க்க அறிஞர் அவர். வாங்கிப் பார்த்துவிட்டுப் பணிவுடன் சொன்னார், “இந்த மௌலானா மௌலவிங்கறதெல்லாம் பொய்யிங்க… பட்டம் வாங்கிருக்கேன்… எந்த அளவு அதுக்கு உண்மையா இருக்கேன்னு தெரியல… முஹிப்புல் மஸ்னவின்னு எழுதீருக்கீங்கள்ல, அத அல்லாஹ் உண்மையாக்கி வச்சாப் போதும்ங்க.” அவரின் ஆசிரியரும் காதிரிய்யா நெறியில் குருவாக இருந்தவருமான மீரான் ஹஜ்ரத் அவர்கள் எழுதிய “இன்சான் கோன் ஹே” (மனிதன் யார்?) என்னும் நூலின் பிரதி கிடைக்குமா என்று கேட்டேன். அப்போது சொன்னார்கள்: “ஆழமான கிதாபுங்க அது. ஆரம்பத்துலயே அதுல ஹஜ்ரத் சொல்லீருப்பாங்க. இதுல உள்ள ஏதாச்சும் புரியலன்னா, என் கலீஃபாக்கள்ட்ட கேட்டு விளங்கிக்கங்க, அப்பவும் புரியலன்னா வாயப் பொத்திக்கிட்டு இருங்க, சேட்டை பண்ணாதீங்க.”

            இந்த நாவலையும் அப்படித்தான் வாசிக்க வேண்டும் போலும் (ஒரு வாசகனாக என்னையும் சேர்த்தே சொல்லிக் கொள்கிறேன். சூஃபி குருமார்களான வலிமார்கள் மீது ஒரு முரீதாக நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில், அனைத்து முரீதுகளுக்கும் இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில், வெளிப்பார்வைக்கு எப்படித் தெரிகிறது என்பதை வைத்து ஒரு சூஃபி குருவை நாம் தவறாக எடை போட மாட்டோம்.) பொது மக்கள் அப்படியெல்லாம் மெனக்கெட்டு வாசிப்பார்களா? அவர்களுக்குத் தப்பாகத்தானே புரியும்? என்று கேள்வி எழலாம். இந்த நூலை ஆன்மிக நாட்டம் கொஞ்சமாவது உள்ளவர்கள்தான் வாசிப்பார்கள். அவர்களுக்குச் சரியான புரிதலின் கதவுகளை இறைவன் திறந்தருள்வான் என்று ஆதரவு வைக்கிறேன்.

            இதில் இணை கோடாக, சமகாலத்தவர்களாக வரும் இரண்டு கதை மாந்தர்களான எல்லா மற்றும் அஜீஸ் இஜட். ஜஹ்ரா ஆகியோரைப் பற்றியெல்லாம் திறனாய்ந்து விளக்கி எழுத இங்கே இடமில்லை. ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதப்பட வேண்டிய பணி அது. சுருக்கமாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். இந்நாவலின் படியே அஜீஸ் இஜட். ஜஹ்ரா ஒரு சூஃபி குரு அல்ல. தவறான புரிதல்களைத் தவிர்க்க இது போதும்.

            இனி, ரியாஸ் எழுதியிருக்கும் வாசகத்தை வெட்டாமல், மடக்காமல் முழுமையாகப் பார்ப்போம்: “ஷம்ஸ் மீது ரூமி காட்டும் அக்கறையானது ரூமியின் குடும்பத்தார்களுக்கு மட்டுமல்ல, அந்நகர மக்களுக்குமே பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் பார்வையில் ஷம்ஸ் இஸ்லாத்துக்கு மாற்றானவராக இருக்கிறார், மது அருந்துகிறார், பாலியல் விடுதிக்குச் செல்கிறார், இறைவன் மீது பற்றுக் கொண்டவராக இல்லை.” (italicized நான் செய்தது). ‘அவர்கள் பார்வையில்…” என்று தெளிவாகத்தானே எழுதியிருக்கிறார். ஞானம் இல்லாத, சாதாரண மக்களின் பார்வைக்கு அப்படித் தெரிகிறது. அவர் மது அருந்துவதாக அவர்கள் பார்வைக்குத் தெரிகிறது. உண்மை அதுவல்ல; அவர் பாலியல் விடுதிக்குச் செல்கிறார் என்பதை மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள், அவர் பெரும்பாவம் செய்கிறார் என்று எண்ணுகிறார்கள். உண்மையில் நடப்பது வேறு (மேலே விளக்கியிருக்கிறேன்); அவர் இறைப்பற்று கிஞ்சிற்றும் இல்லாதவர் போல் அவர்களின் பார்வைக்குத் தெரிகிறார்; ஆனால் அவருக்கு இணையான ஃபகீஹ் (மார்க்கச் சட்ட அறிஞர்) தமது காலத்தில் இருக்க முடியாது என்று நாவலின் ஓரிடத்தில் மவ்லானா ரூமியே சான்று பகர்கிறார். உண்மை அதுதான். ஆனால் மக்களுக்கு அந்த உண்மை எட்டவில்லை. அத்தகைய சூழலை ஷம்ஸ் ஒரு நோக்கத்தோடுதான் உருவாக்குகிறார். நாவலைப் படித்தால் அது ஏன் என்று விளங்கும்.

            இந்து நாளிதழ் மறுப்பு வெளியிட வேண்டும். இல்லை என்றால் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் அந்த நாளேட்டின் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிருப்பதாக மௌலவி அபுதாஹிர் மஹ்ழரி என்னிடம் பேசும்போது சொன்னார். பெருங்குழப்பம் ஆகிவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. ‘நாளை நான் விளக்கம் எழுதுகிறேன்’ என்று அவரிடம் சொன்னேன். ’எதில் எழுதுவீர்கள்?’ என்றார். வேறு எதில், ’முகநூலிலும் வாட்ஸாப்பிலும்தான் என்னால் எழுத முடியும்,’ என்று சொன்னேன். இதோ எழுதிவிட்டேன்.

            நிறைய எழுதிவிட்டேன். ஆயாசமாக உணர்கிறேன் நண்பர்களே! அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாக!



1 comment:

  1. ஆழமான கருத்துக்கள். சரியான விளக்கங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete