#86
நபியின் காரியஸ்தர்
பின்னர், மறைவுலகிலிருந்து அவன் வரக் கண்டேன். கரடிக்குட்டி (விண்மீன்)
மண்டலத்தின் ஏழு விண்மீன்களும் ஏழு அறைகளாய் இருந்தன. மறைவிலிருந்து அவன் அவ்வறைகளுக்கு
வந்தான். அவற்றின் ஏழு சாளரங்களின் வழியே அவன் தோன்றுவதைக் கண்டேன். பெருவியப்பும்
கண்ணியமும் என்னில் தூண்டும்படியாக அவன் என்னிடம் தோன்றினான். பிறகு நான் மதினாவின்
திசையிலிருந்து நிறைய பேர் வருவதைப் பார்த்தேன். அவர்களை நான் கண்டபோது இறைத்தூதர்கள்,
மறைத்தூதர்கள், வானவர்கள் மற்றும் ஞானிகளைக் கண்டேன். அந்த இறைத்தூதர்கள் மற்றும் மறைத்தூதர்களிடையே
நபிகள் நாயகம் இருந்தார்கள். அவரின் முன் அவரது தோழர்கள் நின்றனர். இறைத்தூதர்களின்
முன் சூஃபி குருமார்கள் இருந்தனர். அவர்களில் நான் சூஃபி மகான் சரிய்யுஸ்ஸக்தி இருக்கக்
கண்டேன். அவர்களில் அவரே மிகவும் ஏற்றமானவராக, ஒரு காரியஸ்தரைப் போல் இருந்தார். நீல
நிறப் பட்டு மேலாடையுடன் இளவரசர்களின் ஆடையை அணிந்திருந்தார். அவரின் சிரத்தில் வேலைப்பாடுகள்
மிக்கதொரு தொப்பி இருந்தது. நபிகள் நாயகத்தைத் தடுத்துவிடாமல் முன்னால் மக்கள் கூட்டத்தை
விரட்டுவதற்கென்று கணை பூட்டிய வில்லொன்று அவரின் கையில் இருந்தது. அவரே நமது நபிகள்
நாயகத்தின் காரியஸ்தர். அவர்கள அனைவரும் ஒருங்கே வந்தனர். இவ்வறைகளின் கீழே அனைத்து
மக்களுடனும் நபிகள் நாயகம் நின்றார்கள். மேலான இறைவனிடம் பரிந்துரை செய்பவர் போல் தனது
கைகளை உயர்த்தினார்கள்.
#87 மேலான உதாரணம்
நள்ளிரவின் பின், அனைத்தையும் கடந்த ஒருவனான அவனைக் கண்டேன், அயிரக்
கணக்கான அழகுகளில் அவன் தோன்றியதைப் போல். அவற்றில் நான் அவனது மேலான உதாரணத்தின் மகத்துவத்தைக்
கண்டேன். ஏனெனில், ‘வானிலும் பூமியிலும் மிக மேலான உதாரணம் அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்,
ஞானம் மிக்கவன்’ (குர்ஆன்:30:27). அவனே செந்நிற ரோஜாவின் மகத்துவம் என்பதைப் போலிருந்தது.
இது ஓர் உதாரணம். ஆனால், அவனுக்கு உவமை ஏதும் இருப்பதை அவன் தடை செய்துவிட்டான்! ‘அவனின்
உதாரணம் போல் ஏதுமில்லை’ (குர்ஆன்:42:11). எனினும் ஒரு புலப்பாடு இல்லாது எப்படி நான்
வருணிப்பேன்? இந்த வருணனையானது எனது பலகீனத்தின் நோக்கிலும், சாசுவதத்தின் தன்மைகளை
கிரகித்துக்கொள்வதில் எனக்குள்ள இயலாமையாலுமே நேர்கிறது. அனாதியின் நதிக்கரையில் ரௌத்திரத்தின்
பாம்புகள் உறையும் பாலைகளும் பாழ்நிலங்களும் மிகுதமுள்ளன. அவற்றுள் ஒரு பாம்பு தனது
வாயைத் திறந்தால், படைப்புக்களில் எதுவுமோ அல்லது காலமோ எஞ்சாது. அனாதியின் நாயனை வருணிப்பவனை
அஞ்சிக்கொள். ஏனெனில், அவனது ஏகத்துவத்தின் கடலில் எல்லா ஆன்மாக்களும் உணர்வுகளும்
மூழ்கியுள்ளன. அவனது பெருமை மற்றும் வல்லமையின் நுட்பங்களில் அவை மறைந்தொழிகின்றன.
#88
என் மகனுக்கு இறைவனின் பிரதிநிதித்துவம்
பெருவிரிவின் ஆயிரம் சபைகளில் நான் அவனுடன் இருந்தேன். பேரன்பின் ஆயிரம்
சபைகளில் அவன் என்னுடன் இருந்தான், அவனது அன்பாலும் அழகாலும் அவன் என்னை நேசிக்கும்
வரை. அந்த இனிமை என் ஆன்மாவில் தங்கிற்று. பின்னர், அனைத்தும் கடந்தானை அவன் தோன்றியபோது
கண்டேன். என் மகன்களில் ஒருவனைப் பற்றிக் கவலை கொண்டேன். அவன் எனது அந்த மகனை நோக்கிச்
சென்றான். தன் முன் அவனை நிற்க வைத்தான். அவனிடம் அன்பு காட்டினான். ‘இவன் என் பிரதிநிதி’
என்றான். பிறகு என் மகனுக்கு மேலானவர்களின் ஆடையை அணிவித்தான். அத்துடன் நிறுத்திவிட்டான்.
நெருக்கமான வானவர்கள் அவனுடன் இருந்தனர். பிறகு அவன் என்னை நித்தியத்தின் வானங்களுக்குச்
செலுத்தினான். மகத்துவத்தின் வாசல் வழியே என்னை அருகில் கொணர்ந்தான். நான் மகத்துவத்தின்
உலகைக் கண்டபோது பிரகாசமான ஒளிகளை அன்றி வேறெதனையும் காணவில்லை. மகத்துவத்தின் பேரொளி
பளிச்சிட்டதால் அவற்றை என்னால் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. சுரங்கங்கள் கொண்டதொரு
வெண்ணுலகைக் கண்டேன். அதுவே எல்லாம் வல்ல இறைவனின் பிரசன்னம். அங்கு மக்கள் யாருமே
இல்லை என்பதையும் கண்டேன்.
#89
படைப்பின் சிறுமை
அங்கே நான் சத்தியப் பரம்பொருளைக் கண்டேன், என்னை சுவீகரித்து அரவணைக்கும்
பொருட்டு என்னை நோக்கி வருவதைப் போல். அவனை நான் பார்த்தபோது அவனுக்கான ஏக்கங்களுடன்
என் அறிவுணர்வு கொதித்தது. ஆனால், அவனது மகத்துவத்தின் பொருட்டு நான் அவனருகில் செல்லவில்லை.
அன்னனம் மூன்று நாழிகை சென்றது. பின்னர் அவனை நான் அவனது மகத்துவம் மற்றும் நுட்பங்களுடன்
நித்தியத்தின் உலகில் கண்டேன். பின்னர் அவனை நான் ஆதமின் வடிவத்தில் கண்டேன். இது ஏகத்துவத்தின்
ரகசியம் என்று நினைத்தேன். பின்னர் அவன் தனது கையை எனக்கு வெளிப்படுத்தினான். அவனது
கையில் எறும்பினைப் போலொன்றைக் கண்டேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவன்
சொன்னான், “இதுவே அர்ஷும் (இறையாசனமும்), குர்சியும் (பாதப் பலகையும்), வானங்களும்,
பூமியும், விதானமும் பாதாளமும் ஆகும்”. பிறகு மேலான இறைவனின் சொல் என்னைத் தூண்டிற்று:
“அல்லாஹ்வின் மதிப்பிற்குத் தக அவர்கள அவனை மதிக்கவில்லை. மேலும், இப்பூமி முழுவதும்
மறுமை நாளில் அவனது ஒரு பிடிதான். மேலும், வானங்களனைத்தும் அவனது வலக்கையில் சுருட்டப்பட்டிருக்கும்.
அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்” (குர்ஆன் 39:67). நபிகள் நாயகம் நவின்றதை
நான் நினைவு கூர்ந்தேன்: “கருணையாளன் கையில் கடுகினும் சிறிதே படைப்பினம் யாவும்”.
#90
ஆசனமும் பாதப் பலகையும் வைத்திருத்தல்
வல்லமையும் அழகும் கொண்டு என்னிடம் தோன்றினான். பின்னர் அவன் என்னைக்
காதலின் நிலையில் விட்டுவிட்டான். அவன் மறைந்துகொண்டான். மறைவின் பறவைகளைப் பிடிப்பதற்காக
நான் தியானத்தில் அமர்ந்தபோது, ஆசனத்திற்கும் பாதப்பலகைக்கும் இடையில், வருணிப்புக்கெட்டாத
வல்லமையும் அழகும் கொண்டவனாக சத்தியப் பரம்பொருளைக் கண்டேன். அவனால் மூடி திறக்கப்பட்டதொரு
பொக்கிஷம் போன்று ஆசனமும் பாதப்பலகையும் இருந்தன. பிறகு அவன் அவற்றை மூடிவிட்டான்.
ஏனெனில், அவையே அவனது அழகிய பண்புகளுள் குறிப்பான சிலவற்றைத் தவிர அவனது ரகசியங்கள்
எல்லாம் காணப்படும் இரு இடங்களாகும். நித்தியத்தின் நாவால் அவன் சொன்னான்: “இவ்விரு
பொக்கிஷங்களும் உனதல்லவா?”. தாளாப் பெருங்களியால் யானொரு பித்தன் போல் ஆகும்வரை தனது
அழகு மற்றும் வல்லமையின் தரிசனத்தால் அவனது படைப்பின் வாத்சல்யத்தில் எனது இதயத்தை
அவன் கவர்ந்திருந்தான். அது அவன் மீதான ஏக்கத்தை அதிகமாக்கிற்று. என் மீதான அவனது அழகு
மற்றும் வாத்சல்யத்தில் நான் மகிழ்ந்திருந்தேன். அந்த நாழிகைகள் என்னில் கடந்து போயின.
#91
நெருக்கத்தின் பறவை மாடங்கள்
அவன் ஒளிந்துகொண்டான். பிறகு எனக்கு அவனது நெருக்கத்தின் பறவை மாடங்களைக்
காண்பித்தான். வல்லமையின் புலங்களில் அவன் என்னை வல்லமையின் திரைகள் கொண்டு திருப்பினான்.
அவனது மணவறைகளில், அவனது அனைத்துத் திரைகளில் நான் கண்டேன். அந்த மணவறைகளில் நெருக்கத்தின்
சபைகளை தரிசித்தேன். விரிப்புக்கள் அனைத்திலும் அமர்ந்தேன். திருப்பண்புகளில் ஆக அழகானவற்றில்
தன்னை எனக்குக் காண்பித்தான். நெருக்கத்தின் மதுக்கள் கொண்டு என்னைக் களியேற்றினான்.
அவ்விடத்தில், மேலான இறைவனின் முன் யானொரு மணப்பெண் போல் நின்றேன். அதன் பின் யாது
நடந்தது என்பது மொழிதலுக்குள் வராது. கடவுளை சூக்குமங்களாகச் சுருக்கிவிடுவோரின் அனைத்துக்
குறிப்புக்களைக் கடந்தவனும் தூல வடிவங்களில் அவனைக் கற்பனிப்போரின் வெளிப்பாடுகளைக்
கடந்தவனுமான அவனுக்கே எல்லாப் புகழும்.
#92
திருப்பண்பில்லா வெளிப்பாடு
திரைவிலகலின் எழுபதாயிரம் தளங்களில் அவனை நான் தரிசித்தேன். பிறகு
நான் எனது தன்மைகளுக்கு மீண்டேன். என்னில் எஞ்சிய, அவனது திருப்பண்புகள் பற்றிய அறிவும்,
அவனது சுயம் பற்றிய அறிவும் கடுகு விதையினும் சாலச் சிறிது. அறிதல், அறியாமை, பரிசுத்தம்,
மேன்மை, நித்தியம் மற்றும் இறைப் பிரசன்னம் ஆகியவற்றின் பெருங்கடல்களில் எனது ஆன்மாவும்
இதயமும் அறிவும் மனமும் எல்லாம் நாஸ்தியின் மகத்துவம் பற்றிய பெருவியப்பில் இருந்தன.
தமது தன்மைகளுக்கேற்ப தமது தேடல்கள் பலகீனமானோருக்கும் தன்னைக் காட்டிக் கொள்ளும் அவனுக்கே
எல்லாப் புகழும்! ஆனால், அவன் தனது ஏகத்துவத்தில் மாற்றங்களை எல்லாம் கடந்தவன் ஆதலால்
அவனை எப்பொருளும் உள்ளபடி அறியவே இயலாது. மேலான இறைவனை நான் பார்த்திருந்தேன், திருப்பண்புகளின்
திரைகள் விலகவும் அவனது சுயத்தின் சுடர்கள் வீசவும் காத்திருந்தபடி. சத்தியப் பரம்பொருள்
தனது திருமுகத்தை என் இதயத்திற்குக் காட்டிற்று, எப்படி என நான் கேட்காமல். என் புறக்கண்களால்
நான் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்றே அது இருந்தது. அவனது மகத்துவத்திலிருந்து
மறைவுலகம் பிரகாசித்தது. பிறகு அவன் தோன்றி மறைந்தான், மீண்டும் மீண்டும்.
#93
இறைத்தூதர்களின் பிரார்த்தனை
மதீனாவின் திசையிலிருந்து பேரொளி ஒன்றைக் கண்டேன். வானத்திலும் பூமியிலும்
ஒரு கால் பாகம் பறிக்கப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டது. அவ்வொளியை நான் கண்டபோது அது
முஹம்மதின் ஒளி (நூரே முஹம்மத்) என்று அறிந்தேன். அஃது, வியப்பூட்டுமொரு ஒளியின் மிசை
இருந்தது. அதன் மிகைபடு வல்லமையும் வியப்பும் பொருட்டு அதனை நான் தொடர்ந்து பார்க்க
முடியவில்லை. எவ்வொளியின் முன் நின்று என் தோழரொருவர் தொழுகைக்கு அழைப்பு ஒலிப்பதைக்
கண்டேன். அவர், அளவாலும் கண்ணியத்தாலும் தாக்கத்தாலும் மேலானவராக இருந்தார். பின்னர்
நான், முஹம்மதின் ஒளியின் முன் நின்று ஆதமும் மூசாவும் ஏனைய இறைத்தூதர்களும் தொழுகைக்கான
அழைப்பு ஓதுவதையும் பிரசன்னத்தின் முன் பிரார்த்திப்பதையும் கண்டேன். ”மகாமன் மஹ்மூதா”
(குர்ஆன்:17:79) என்னும் பெரும்புகழ்த் தலத்திற்கு முஹம்மத் (ஸல்) வந்த போது, அவரிடம்
மேலான இறைவன் முகத்தோடு முகம் நோக்கி, அவனது ஏகத்துவம் பற்றியும் அவனல்லாத அனைத்தும்
அவனது ஆற்றலின் முன் அழிந்துவிடுவது பற்றியும், “முஹம்மதே! ஏகன் ஒருவனே” என்று சொல்வதைக்
கேட்டேன்.
#94
நபியின் ரோஜாக்களும் ஒடுக்கும் பெருவலியும்
மூன்று நாழிகைகள் கடந்தன. இறைப் பிரசன்னத்தின் உயர்ந்த நிலையில் முஹம்மத்
(ஸல்) அமர்ந்திருக்கக் கண்டேன். அவரே சிவந்த ரோஜா. அவரின் முகத்திலிருந்தே சிவப்பு
ரோஜாக்களின் மகத்துவம் சுடர்ந்து கொண்டிருந்தது. அவரின் நீள கேசங்கள் திறந்திருந்தன.
சத்தியப் பரம்பொருள் அவரின் வடிவில் தோற்றம் கொண்டிருந்தது. ”ரூஸ்பிஹான்!” என்று என்
பெயரைச் சொல்லி அவர் என்னை அழைத்தார். அவரது மகத்துவத்தின் ஒளியும் மேன்மையான முகத்தின்
நுட்பங்களும் அனைத்துப் படைப்புக்களையும் ஆயிரம் ஆண்டுத் தொலைவுகள் நூறாயிரம் ஆண்டுத்
தொலைவு தடவைகள் பரவி உட்கொண்டன. எவரும் அவரை எட்ட முடியவில்லை. அவரது வல்லமையின் தாக்கத்திற்கு
இதுவே கோடி காட்டல். அது, காலம் முதன்முதலில் தன்னைத் தோற்றிக் காட்டும் கணத்திலேயே
அதனை மறைந்துவிடச் செய்கிறது.
#95
அரவணைப்பும் ஐயங்களை அகற்றுதலும்
பிறகு இறைவன் என்னை அருகழைத்து இணைதலின் அறையை எனக்கெனத் திறந்தான்.
தனது தாயின் அறையிலொரு குழந்தை போல் நானிருந்தேன். ஒரு காதலனின் வாஞ்சையுடன் அவன் என்னை
வருடினான். அப்போது, ஏகத்துவக் கடலின் அலைகள் என்னை வாரியெடுத்தன. அவன் தனது வலிமையான
மகத்துவத்தால் என்னை அழித்தான். மேலான இறைவன் சொன்னான், “நான் நான்தான். என்னை ஐயப்படாதே.
வலிய ரட்சகனே உன் இறைவன்; அனைத்துப் படைப்புக்களின் இறைவன். நீ சிந்தித்த உதாரணம் பற்றி
நீ கவலைப்படுகின்றாயா? அது என் தோற்றமே. உனக்கு என் வல்லமையின் திரை விலக்கம் அது”.
பிறகு நான் என்னை மேலான இறைவனின் நிலத்திலும் மறைவான ஊர்களிலும் இருக்கக் கண்டேன்.
ஒவ்வொரு இடத்திலும் அழகு மற்றும் சௌந்தர்யத்தின் ஆடைகளில் மேலான இறைவனின் தோன்றுதலைக்
கண்டேன். மறைவான உலகிற்கு என்னை அவன் மீளச் செய்தபோது அவன் எதனை நான் காணும்படிச் செய்தானோ
அதனை நான் காணும்படிச் செய்தான்.
#96
நித்தியத்தின் சாளரம்
பின்னர் நான் சுவர்க்கத்தைக் கண்டேன். அதில் கண்ணழகிகள், கோட்டைகள்,
மரங்கள், நதிகள், ஒளிகள், இறைத்தூதர்கள், ஞானிகள் மற்றும் வானவர்களைக் கண்டேன். நித்தியத்தின்
உலகிலிருந்தொரு சாளரம் போலும் சத்தியப் பரம்பொருளின் வடிவைக் கண்டேன். மகத்துவமிகு
சத்தியனைக் கண்டேன். நான் சொன்னேன், “சொர்க்கத்தைப் பற்றி எனக்கு அறிவி”. அவன் சொன்னான்,
“சுவர்க்கத்தினரே! நித்ய உலகின் இந்தச் சாளரத்திற்கு நான் தினமும் எழுபதாயிரம் தடவைகள்
வருகிறேன். ரூஸ்பிஹானின் சந்திப்பிற்கான ஏக்கத்துடன் நான் சொர்க்கத்தைப் பார்க்கிறேன்!”.
அவனது அப்பாலான முகம் வல்லமையும் அழகும் நிறைந்தும், சொர்க்கம் சௌந்தர்யமும் நெருக்கமும்
நிரம்பியும் இருந்தது. நான் மகிழ்ச்சி கொண்டேன். அந்த மகிழ்ச்சியில் உடலுடன் எனது இதயம்
பறந்துவிடும் போலாயிற்று. மறைவின் அந்த நுட்பமான சந்திப்பினால் பரவசங்கள் என்னில் மிகைக்கக்
கண்டேன். அவையே சாட்சியாதலின் முதற்படிகள் ஆயின.
#97
அணியுலகின் தாலாட்டுக்கள்
பின்னர் சத்தியப் பரம்பொருள் அழகானதொரு வடிவத்தில் என்னிடம் தோன்றியது.
எமக்கிடையில் திரையோ இடைவெளியோ இல்லாதபடிக்கு மிக நெருக்கமாக. பேரன்பால், தனது திருப்பண்புகளின்
அழகிலிருந்து ஏதொவொன்று எனக்குத் தோன்றும்படிச் செய்தான். அது எனது அமைதியையும் நிம்மதியையும்
பறித்துச் சென்றது. அவன் என்னை நெருக்கம் மற்று ஆத்மானந்தத்தின் தளத்தில் வைத்தான்.
இரவின் இரண்டாம் பாதி அந்நிலையில் கழிந்தது. நான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில்
இருந்தேன். அவன் தெய்வீகத்தின் அணிகள் சூடி என்னிடம் தோன்றினான். அனைத்துக்கும் அப்பாலான
அவன் இந்த அணிகலங்களில் ஆதமின் கோலத்திலிருந்தான், வெண்ணாடை அணிந்தபடி. அவன் என்னுடன்
பேசினான். அன்பாயிருந்தான். அடுத்தொரு மணிநேரம் கழியுமாறு என்னைத் தாலாட்டித் தூங்க
வைத்தான்.
#98
இருவில்லின் அளவு அல்லது அதனினும் நெருக்கம்
எனது ஆன்மிக நிலை பற்றிக் கவலை கொண்டேன். இரண்டு விடுத்தம் தொழுத பிறகு,
மறைவின் ஒளிகள் வெளிப்படவும் நித்திய மின்னலில் ஒளி பிரகாசிக்கவும் எதிர்பார்த்தேன்.
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் அவனைக் கண்ட அதே கோலத்தில் சத்தியப் பரம்பொருளை
கண்டேன். அவன் என் வீட்டில் இருப்பது போல் இருந்தது. அவனில் நான் மறையும் வரை அவன்
என்னை அணுகினான். அப்போது என் மனம் ஓதிற்று, “இறங்கினார், பின்னர் நெருங்கினார். வில்லின்
இரு முனைகளைப் போல், அல்லது அதனினும் நெருக்கமாக” (53:8,9). இதனால், நான் பரவசம், நெருக்கம்,
தெளிவு மற்றும் போதை ஆகியவற்றைக் கற்பிக்கப்பட்டேன். விடியும் வரை அந்நிலையில் இருந்தேன்.
ஒரு தரிசனம் கண்டேன். அது சிவப்பு ரோஜா போல் இருந்தது. அவன் என்னை அழைத்துச் சொன்னான்,
“எறும்புகள் என்னை விட்டும் எனது ரகசியங்களைக் கொண்டு செல்கின்றன அல்லவா?” எறும்புகளின்
இதயங்கள் அவனது ரகசியங்களின் அருள்களால் நிரம்பியுள்ளன. இக்கேள்வியில் அவனது கோபம்,
பெருமை மற்றும் வல்லமையின் வெளிப்பாடு உள்ளது.
#99
கடவுளின் நகரம்
அது நடந்த பின், ஏக்கத்திலும் துடிப்பிலும் மட்டுமே தோன்றுகின்ற பரவசங்கள்
கொண்டு சத்தியப் பரம்பொருளைத் தேடிக் கொண்டிருந்தேன். பிரக்ஞையின் ஆழ் மையத்தை இறைவனது
வெளிப்பாட்டின் ஒளிகள் தொடும்போதுதான் அத்தகு ஏக்கம் கிடைக்கிறது. பிரிவுகளைக் கொண்டே
அன்றி அவன் பகுத்தறிவாளரிடம் தோன்றுவதில்லை. மறைவின் கதவுகள் திறக்கப்பட்டன. நித்தில
வெண் கடல்கள் கண்டேன். அவற்றின் நடுவில் ஒரு துண்டு நிலம் இருந்தது. அந்நிலத்தில்,
தனது அழகு மற்றும் லட்சணங்களுடன் சத்தியப் பரம்பொருளை கண்டேன். அவன் தனது முகத்தை லாவகமாகவும்
வாஞ்சையுடனும் என்னிடம் கொண்டு வந்தான். அவ்விடத்தில் பல மணி நேரம் நான் பரவசத்திலும்
திரையேற்றத்திலும் நின்றேன். பின்னர் அவன் கடவுளின் நகரம் என்றழைக்கப்படும் இடமொன்றில்
இருந்தான். அங்கே நான் சத்தியப் பரம்பொருளைத் தேடிச் சென்றேன். அங்கே அவனது இருத்தலின்
அடையாளங்களை அன்றி வேறெதுவும் இல்லை. அங்கே எனக்கு எந்த தரிசனமும் வெளிப்படுத்தப் படவில்லை.
பிறகு நான் மேலான இறைவனை வல்லமையின் ஆடை அணிந்தவனாகக் கண்டேன். நான் மொழிய இயலாத விதத்தில்
அவன் என்னை அழைத்து நெருங்கினான். நான் அவனை தரிசித்திருந்தேன், அன்புமிக்க பித்தேறிய
ஒரு மகனைப் போல்.
#100
கடவுளுடன் நடனம்
ஒருநாள், ஏக்கப் பெருங்கடலில்
நான் வீழ்ந்தபோது மகத்துவத்தின் அலைகள் என்னை இறைப் பிரசன்னத்தின் தரிசனத் தளத்திற்கு
இட்டுச் சென்றன. சத்தியப் பரம்பொருள் எனக்குத் தனது அழகினையும் வல்லமையையும் தனது முகத்தின்
நுட்பங்களின் சுடர்களாகத் திரை நீக்கிக் காட்டக் கண்டேன். நான் அவனது அழகினை நோக்கியபடி
முற்றும் போதை அடைந்திருந்தேன். ஏறத்தாழ என் உயிரை விட்டுவிட்டேன். என் அறிவே அழிந்தது
போலானது. என் இதயம் பறந்துவிட்டது போலிருந்தது. என் உணர்வு அழிக்கப்பட்டது.ஆனால அவனை
தரிசிப்பதன் பரவசத்தில் என் வடிவம் மட்டும் எஞ்சியிருந்தது. அவனது உயர்ந்த மகத்துவத்தின்
களிப்புகள் தோன்றி என் மனதிற்கு உவப்பூட்டுமாறு அவன் என்னிடம் தன் முகத்தைத் திருப்பினான்.
உலகம் முழுவதும் சத்தியப் பரம்பொருளால் நிரம்பியிருப்பதை வைகறையில் கண்டேன். ஒரே நேரத்தில்
நான் மறைந்தும் வெளிப்பட்டும் இருந்தேன், அவனை நான் கண்டது போன்றும், அவனை நான் காணாதது
போன்றும். பின்னர் அவன் வந்தான். அவனது நடனம் என்னைத் தூண்டிற்று. எனவே நானும் அவனுடன்
ஆடினேன். சுதாரிப்பு வரும் வரை நான் அந்த நிலையிலேயே இருந்தேன்.
(to be continued...)
No comments:
Post a Comment