Friday, November 23, 2018

ஆப்பிளுடன் உயர்தல் - 1



                       
                















”மெத்தை அருளல் வேண்டும்” என்னும் கட்டுரையில் பெப்ஸ் மெத்தை வாங்குவதற்காகத் தனக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று சாரு நிவேதிதா எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அதனைச் சுற்றியே சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. 

சாருவின் இந்த வரிகளைக் கவனியுங்கள்: “என்னுடைய இப்போதைய பிரார்த்தனையை மட்டும் சொல்லி விடுகிறேன். நீ கேட்பியா மாட்டியா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. இப்போது எனக்கு அர்ஜெண்ட்டாக ஒரு மெத்தை தேவை. ப்பூ. இவ்வளவுதானா என்று கேட்காதீரும். இதில் என் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கிறது”.

’என்னது, ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு மெத்தையில் அடங்கியிருக்கிறதா?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? இயற்கை அமைப்பில், ஒரு நாளில் பாதி பகல், பாதி இரவு. நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படிப் பார்த்தாலே அது மூன்றில் ஒரு பங்கு. அறுபது வயதாகும் ஓர் ஆள் இருபது ஆண்டுகள் தூக்கத்திலேயே கழித்திருக்கிறான் என்று பொருள். அதாவது, இருபது ஆண்டுகள் கட்டிலில் அல்லது மெத்தையில். வேறு எந்த அறைக்கலனும் இவ்வளவு உறவாடியிருக்க முடியாது. இருபது ஆண்டுகள் நீங்கள் சோஃபாவில் அல்லது நாற்காலியில் அமரப் போவதில்லை. இத்தனைக்கும் நிற்பதை விடவும் படுப்பதை விடவும் நாம் அமர்ந்திருப்பதுதான் அதிகம். எனினும் தொடர்ந்து எட்டு மணிநேரம் ஒரே இடத்தில் யாராவது அமர்ந்திருக்கிறீர்களா? (ஐயா புத்தரே! இதில் தலையிடாதீர்கள். லௌகீகவாதிகள் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையின் மேட்டரும் அப்ப்டித்தான் டெவலப் ஆகப் போகிறது. நீங்கள் யசோதாவை அம்போ என்று விட்டுவிட்டுப் போகாமல் இருந்திருந்தால் உங்களுக்கும் சொல்லலாம். நீங்கள்தான் துறவி ஆகிவிட்டீரே? இருபத்துநான்கு மணிநேரமும் நீர் அமர்ந்திருக்கலாம்.  கண்களை மூடி தியானத்தைத் தொடரும் ஐயா).

அதுமட்டுமல்ல, அடியேனுக்குக் கட்டில் மெத்தையுடன் மேலும் சிறப்பான தொடர்புகள் உண்டு. இந்தக் கட்டுரையைக் கூட கட்டிலில் அமர்ந்தபடி ஒரு தலையணை மீது மடிக்கணினியை வைத்துக் கொண்டுதான் டைப்புகிறேன். புத்தகம் படிப்பதாக இருந்தாலும் கட்டிலில் அமர்ந்தபடி ஒரு தலையணையை சுவரில் சாய்த்து அதன்மீது சாய்ந்தமர்ந்து படிப்பதுதான் சொகுசாக இருக்கிறது, ஈடுபாட்டுடன் வாசிக்கவும் முடிகிறது. இப்படி பகலிலும்கூட, வீட்டிலிருந்தால், நான் பெரும்பாலும் ஜீவிப்பது கட்டிலில்தான். தியானம் செய்வதும் கட்டிலில் அமர்ந்தேதான்! ஆக, ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கு என் வாழ்வு நிகழ்வது மெத்தையில்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. (இது எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று நான் சொல்லவில்லை. என் டிசைன் அப்படி. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எனக்கு மெத்தை போல அவருக்கு கார். அல்லும் பகலும் ஆண்டு முழுவதும் அவருக்குக் கார் காலம்தான்! கார் எனில் மகிழுந்து).

 இப்போது சொல்லுங்கள், மெத்தையில் ஒருவனின் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்க இயலாதா? பல காலம் வெறுந் தரையில் படுத்துறங்கி, பின்னர் கொஞ்சம் வாழ்வில் முன்னகர்ந்து கோரைப் பாய் வாய்த்து அதில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, பின்னர் சற்றே வசதி அடைந்து இலவம் பஞ்சு மெத்தைக்கு மாறிய ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை தரை - பாய் – மெத்தை என்னும் கோட்டில் வரைந்து காட்டலாம் அல்லவா? (சிலரது வாழ்க்கையை குடிசை – ஓட்டு வீடு – மச்சு வீடு – தனிப்பெரும் வீடு – வீடுபேறு என்று வரையலாம் போல. அல்லது, சைக்கிள் – மொப்பெட் – ஸ்கூட்டர் – பைக் – மகிழுந்து – ஆம்புலன்ஸ் என்று.)

’மெத்தை அருளல் வேண்டும்’ என்னும் கட்டுரையை வலைப்பூ, முகநூல் மற்றும் வாட்ஸப் ஆகியவற்றில் பதிவேற்றியிருந்தேன். தனது ஆன்மிகக் குழுவில் அதைப் படித்துவிட்டு நாகூர் ரூமி உடனே பின்னூட்டம் போட்டிருந்தார், “அவர் மெத்தை கேட்பதற்கான காரணம்தான் கவனிக்கப்பட வேண்டியது” என்று. அதைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்வதாகத் தெரிவித்திருந்தேன்.

சாரு மென்மையான மெத்தை வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியது தூங்குவதற்காக மட்டுமன்று. (மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல என்று சினிமா கதாநாயகர்கள் புலம்பிப் பாடுவதைப் பார்த்திருக்கிறோம். போ, போய் தூக்க மாத்திரையை வாங்கு! என்றுதான் அவனது வாழ்க்கை, பொருளாதார வெற்றியே இலக்கணம் என்று வகுத்துக்கொண்ட வாழ்க்கை, அவனைத் துரத்துகிறது). ஆக, தூக்கத்திற்காக அல்ல. அதுதான் கட்டாந்தரையானாலும் குறட்டை விடும் பிணம் போல் தூங்கலாமே? என்ன குறை? அவர் மெத்தை கேட்பது நிம்மதியான தாம்பத்யத்திற்காக. அதுதான் சிந்திக்க வேண்டிய புள்ளி. உளவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்தால் அதிலிருந்து நிறையவே அறியக் கிடைக்கிறது.
























ஆபிரகாம் மாஸ்லோ என்றொரு ருஷ்ய உளவியலாளர் (உளவாளி அல்ல. உளவியலாளர், சைக்காலஜிஸ்ட். உஃப்ஃப்.. ருஷ்ய என்று அடைமொழி கொடுத்தாலே இப்படியொரு பிரச்சனையா?) மனிதனின் தேவைகளை ஒரு முக்கோணமாகச் சித்தரித்தார். Hierarchy of needs என்று அதற்குப் பெயர். அதன் கீழடுக்கில் உடல் சார்ந்த தேவைகள் என்று குறித்தார். உண்மைதானே. இப்பருவுலகில் நல்ல வண்ணம் வாழ உடல்தானே ஆதாரம். இல்லறம், துறவறம் இரண்டுமே உடல் நலம் இன்றி அமையாது. உடலின் தேவை என்னும்போது அதில் பாலியல் தேவை என்பதும் ஒன்று. அது உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானதும்கூட. (’எல்லா உயிர்க்கும் இன்பம்’ என்று அதனைச் சொல்கிறார் தொல்காப்பியர். “அனைத்தையும் ஜோடியாகப் படைத்த இறைவனுக்கே மகத்துவம்” (36:36) என்கிறது குர்ஆன்).

”எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்று சிஜாவி நகேசன் போல பாடிக்கொண்டிருந்தால் வாழ்வே தலைகீழாகிவிடும். அதை சிவாஜி கணேசன் என்று நேராகத் திருப்ப வேண்டுமானால் நிம்மதி இருக்கும் இடம் எது என்பதை அறிந்திருக்க வேண்டும். ”நீங்கள் அவளிலிருந்து நிம்மதி அடையும் பொருட்டு உங்களிலிருந்தே உங்களுக்கு ஜோடிகளைப் படைத்ததும் உங்களிடையே அன்பையும் அருளையும் ஆக்கியிருப்பதும் இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்றாகும்” (30:21) என்கிறது குர்ஆன். இவ்வசனத்தில் ’லிதஸ்குனூ’ என்னும் சொல் இடம்பெறுகிறது. ’சுகூன்’ என்றால் நிம்மதி என்று பொருள். அவ்வடிப்படையில் ’லிதஸ்குனூ’ என்பதை நிம்மதி அடைவதற்காக என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சுகூன் என்றால் நிறுத்தம் அல்லது தங்குதல் என்றும் பொருளுண்டு. மஸ்கன் என்றால் தங்குமிடம். அவ்வடிப்படையில் ’லிதஸ்குனூ’ என்பது ’தங்கும் பொருட்டு’ என்று அர்த்தம் பெறும். ’லிதஸ்குனூ இலைஹா’ என்பதை ’(அவளுடன்) சேர்ந்து வாழ்தல்’ என்பதாக அப்துல் ஹமீது பாக்கவி மொழிபெயர்த்திருக்கிறார். முஹம்மது ஜான் அவர்கள், “நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்கு…” என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக” என்கிறது ஐஎஃப்டி மொழியாக்கம். நிம்மதி மற்றும் தங்குதல் ஆகிய இரண்டு அர்த்தங்களையும் “தஸ்குனூ” என்னும் சொல் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இறைவன் ஒரு விஷயத்தை எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறான் என்பதற்கு இச்சொல்லொரு சான்று. இரண்டு அர்த்தங்களையும் இணைத்தால் “அவளிடம் தங்கி நிம்மதி பெறுவதற்கு” என்று புரிந்துகொள்ளலாம். இது தாம்பத்யத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். சேர்ந்து வாழ்தல் என்று அப்துல் ஹமீது பாக்கவி சொன்னதிலும் அந்த அர்த்தப்பாடு மறைந்திருக்கிறது. எவ்வாறெனில், இல்லம் என்பது இல்லாளையும் குறிக்கும். தாம்பத்ய உறவை “வீடு கூடுதல்” என்று சொல்வதுண்டு. இச்சொலவடையில் வீடு என்பது மனைவியைக் குறிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அதை வீடு என்றே நேர்ப்பட விளங்கிக்கொண்டு “வாடகை வீட்டில் கூடுவது கூடுமா?” என்று யாரும் மார்க்க ஃபத்வா கேட்டதாக வரலாறில்லை.























தாம்பத்யம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் நிம்மதி நல்குகிறது என்பதை இங்கே கண்டோம். இதில், இன்பம் அல்லது சுகம் என்று பொருட்படும் சொற்களை இறைவன் பயன்படுத்தவில்லை. மாறாக நிம்மதி என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறான். அதிலும் நுட்பமான அறிவுள்ளது. இன்பத்திலிருந்து நிம்மதி விளைய வேண்டும் எனில் துய்க்கப்படும் இன்பம் நேர்மையானதாக இருக்க வேண்டும். தகா வழியில் துய்க்கப்படுகையில் அப்போதைக்கு அதில் இன்பம் இருக்கலாம். ஆனால் நிம்மதிக்குப் பதிலாக சஞ்சலமும் குழப்பமுமே உண்டாகும். நேர்மையான ஆகுமான முறையில் துய்க்கப்படும் இன்பத்திலிருந்து நிம்மதியை உருவாக்குவது எது? அதைத்தான், தம்பதிகளுக்கு இடையில் “அன்பையும் அருளையும்” (மவதத்தன்வ்வ ரஹ்மா) ஆக்கியிருப்பதாக இறைவன் சுட்டுகிறான். வெறும் காமத்தால் இன்பம் நிம்மதியாக முடியாது. அதனால்தான் திருவள்ளுவர் மிகவும் தீர்க்கமாகவே சொல்கிறார்: “மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார்”. சிலர் என்று அவர் சொல்லியிருப்பதைக் கவனிக்கவும்.

ஒரு கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நிறைவேறக்கூடிய தேவை என்பது தாம்பத்யம்தான். (உணவு, உடை ஆகிய இதர தேவைகள் பிறராலும் நிறைவேறல் தகும்). அதற்கான களமாக, இடமாக, கருவியாக இருப்பது நாம் எதில் உறங்குகிறோம் என்பதுதான். பாய், ஜமுக்காளம், கட்டில், கட்டில்+மெத்தை என்பன. (உணவுக்குக் கருவி அடுப்பு என்பதுபோல்). கருவிகள் எந்த அளவு வசதிகளை வழங்குகிறதோ அந்த அளவே வாழ்வியலில் இலகுவும் நிம்மதியும் என்பதை யாரும் மறுக்கவியலாது. குடிசைக்குள்ளும் இன்று கேஸ் ஸ்டவ் இருக்கிறது. நடுத்தர வர்க்க வீடுகளில் சிம்னி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகளுடன் மாடுலர் கிச்சன் வந்துவிட்டது (மாடுப்பொண்ணுக்கு மாடுலர் கிச்சன் வைத்துத் தரவேண்டியது நியாயம்தான்!) டிவி எனில் கல்லிப்பெட்டி மாதிரியான மாடல்களை இன்று யார் விரும்புகிறார்? டிஜிட்டல் தொழில்நுட்ப ஒல்லிப்பெட்டிகள் வேண்டும் என்றே விரும்புகிறோம். அதில் படம், ஹெஜ்டி என்றும் ப்ளூரே என்றும் துல்லியம் காட்டவேண்டுமென்று விரும்புகிறோம். இப்படி, ஒவ்வொரு புலனுக்குரிய வசதிகளும் மேலும் மேலும் மெருகடைந்து வருகின்றன. தாம்பத்யமோ எனில், ஐம்புலனும் இடம்பெறும் ஒரு விஷயமாகிறது. (கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள – திருக்குறள்). அதற்கிடமான கட்டிலும் மெத்தையும் நியாண்ட்ரதல் மனிதன் காலத்திலேயே நின்றுகொண்டிருக்குமா?

இத்துடன் பேசப்பட வேண்டிய இன்னொரு விஷயம், தனியறை மற்றும் குடித்தனம் பற்றியது. தமக்கேயான அவகாசங்களைத் தேடும் இளம் தம்பதிகள் இன்று தனிக்குடித்தனம் தேடுகிறார்கள். எனவே, கூட்டுக்குடும்ப அமைப்பு மெல்ல மெல்ல இந்தியாவில் காணாமலாகி வருகிறது. இது பற்றி வருத்தப்படுபவர்களுண்டு. குறிப்பாக முதியோர்கள். ஏனெனில், இதன் ஒரு தீய விளைவாகத்தான் முதியோர் இல்லஙள் முளைக்கின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். அருகருகே வீடுகளிருக்குமாறு அமைந்த நிலையில் தனிக்குடித்தனங்களாக இருந்தால் இந்தத் தொல்லை இராது என்று எண்ணுகிறேன். நபிகள் நாயகத்தின் வாழ்வியற் பதிவுகளைப் படிக்கும்போது அப்படியான வீட்டமைப்புக்கள் இருந்ததைப் பார்க்க முடிகிறது. ஹழ்றத் அலீக்குத் தனது மகள் ஃபாத்திமாவைத் திருமணம் செய்து வைத்துத் தனிக்குடித்தனமும் அமர்த்திவிட்டார்கள். ஆனால் நடந்து சென்று காணும் தொலைவில்தான் அவ்வீடு இருந்தது. இன்னொரு ஹதீஸ். நபிகள் நாயகத்திடம் இளைஞர் ஒருவர் வந்து தான் திருமணம் செய்து கொண்ட சேதியைச் சொன்னார். “கன்னிப் பெண்ணா? விதவையா?” என்று கேட்டார்கள். “விதவை” என்றார். ஆனால் அவரோ வாலிபராக இருந்தார். “கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கலாமே? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும் தோதாக இருந்திருக்குமே?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள். இளமையின் உரிமை என்று காதல் விளையாட்டுக்களை இறைத்தூதர் பார்க்கிறார்கள் எனப்தும் கருணையின் வெளிப்பாடு அல்லவா? அன்னனம், இளம் ஜோடியர் விளையாடுதற்குத் தனிக்குடித்தனமே சாலச் சிறந்தது.

தனிக்குடித்தனத்தில் கிடைக்கும் விளையாட்டு அவகாசங்கள், வாய்ப்புக்கள் கூட்டுக் குடும்பத்தில் இருக்காது. அதிலே, குடும்பத்தை வளர்த்தெடுப்பதற்காகத் தமது தனிச்சுகங்களை தியாகம் செய்வதற்கான கோரிக்கை இருக்கிறது. அதற்கான ஒரு காலக்கட்டம் இந்தியாவில் பரவலாக இருந்தது. அப்போது இயல்பாகவே இளம் தம்பதியரின் மனநிலை அந்தத் தியாகத்தை முன்னிறுத்தித் தமது இளமை விளையாட்டுக்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டது (பாரதிதாசனின் “குடும்ப விளக்கு” நினைவு வருகிறது. நாட்டுக்கு முதலில் சேவை செய்துவிட்டுப் பிறகு நாம் இன்பம் காண்போம் என்று முதலிரவு அறையில் அவன் அவளிடம் அறிவுரை பகர்கிறான்!). அப்படி தார்மீகவுணர்வுடன் தியாகத்திற்குத் தயாராகதோரில், நிர்ப்பந்த சூழலாகக் கூட்டுக் குடும்பத்தில் தமது திருமண வாழ்வைக் கழித்தோரில் அந்த ஆற்றாமை என்னென்ன வடிவங்கள் எடுத்து வெளிப்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. பொறாமை, கழிவிரக்கம், நுட்பமான பழிவாங்கல்கள், சொத்துரிமைச் சண்டைகள் என்று பல விகாசங்கள். இன்றைக்கு இந்தியச் சமூக அமைப்பின் நிலை வேறு. புறவசதிகளின் பெருக்கம் நமது அக அமைப்பையும் மாற்றியிருக்கிறது. (அகத்தின் அடிப்படைகளை அல்ல; நுகர்பொருள் சார்ந்த மேலமைப்பை மட்டும். அடிப்படையே மாறும் எனில் மனிதன் மனிதனாயிருக்க மாட்டான்).
















இளம் தம்பதிகளுக்கான தனிக்குடித்தனம். அவர்களுக்கான தனியறை. அதில் வைக்கப்பட வேண்டியது வசதியான கட்டில் என்பதே நாகரிகத்தின் வளர்ச்சி நமக்கு வரையறுத்திருக்கும் நியதி. அதில் தம்பதியர் காணும் இன்பமும் நிம்மதியும் அவர்களின் வாழ்வைச் செம்மை செய்யும் என்று நம்புகிறோம். பெண்ணுக்குத் தரும் சீர்வரிசையிலேயே இன்றைய தினத்தின் சிறந்த வசதியான அமைப்பில் கட்டிலும் மெத்தையும் நல்க முனைகிறோம். நம் பொருளாதாரத்திற்கு எட்டிய வகையில் கொடுக்கிறோம். புதுமணத் தம்பதியரின் வாழ்க்கை நன்றாக இருக்கிறதா? என்னும் கேள்வியின் அடித்தளம் தாம்பத்யமாக இருக்கிறது.
இந்தப் புற வசதிகளெல்லாம் இருந்தால்தான், அதாவது அந்தப்புறம் வசதியாக இருந்தால்தான் நிம்மதி கிடைக்குமா? ஏழையாக வாழ்பவர்கள் இல்லற இன்பமும் நிம்மதியும் அடைய முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றுதான் திருக்குறளும் சொல்கிறது. அன்பும் அறனும் இருந்தால், திருக்குர்ஆன் சொல்வது போல் அன்பும் அருளும் இருந்தால், ஓலைக்குடிசையில் பிய்ந்த பாயிலும் தாம்பத்யம் சிறப்புறும் என்பது என்னவோ உண்மைதான். “ஒன்றின் கூறாடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்பது சரிதான். எனினும், பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை மறுத்துவிட முடியாது. நாம் உடல்களாலும்தான் வாழ்கிறோம். அது பருவுலகின் பாற்பட்டது. எனவே, அகத்தில் அன்புடன் புற வசதிகளும் இணையும் போது அதிலொரு முழுமை இருக்கிறது. வசதிகளிருந்தும் அன்பிலார் வாழ்வு பெருங்கொடுமை. வசதிகள் அற்றும் அன்புடையார் வாழ்வு சிறிதினிமை. வசதிகளும் அன்பும் ஒருசேர வாய்த்த வாழ்வு நனி இனிது.

 (to be continued...)

No comments:

Post a Comment