Wednesday, November 21, 2018

உணவஞ்சல்



      















”ஸொமாட்டோவில் ஆர்டர் செய்யலாம்” என்று மகன் உற்சாகமாகக் கூறியபோது ‘அது என்ன டொமேட்டோ?’ என்று குழம்பினேன். இது தக்காளியின் ஒரு வகை இல்லை, ‘ஸொமேட்டோ’ என்றொரு உணவு ஹோம் டெலிவரி சேவை என்று விளக்கினான். உணவஞ்சல் என்று தமிழில் அழகாகச் சொல்லலாம். (இச்சொல்லினை முகநூல், வாட்ஸ்-அப் முதலிய ஊடகங்களில் பரப்பித் தமிழ்ப்பணி ஆற்றுவீர் வாசகரீர்!)

      மீலாதுந் நபி பெருநாளை முன்னிட்டு மதிய உணவு ஹோட்டலில் ஆர்டர் செய்யப்படல் வேண்டும் என்று பிள்ளைகள் கேட்டார்கள். வெளியே கிளம்புவதா? என்று தயக்கம் வந்தபோது அலைபேசி வழியாகவே ஆர்டர் செய்துவிடலாம் என்று யோசனை தந்து செயற்படுத்தியும் முடித்தார்கள்.

      சில வாரங்களுக்கு முன் ஷாப்பிங் மாலில் மூன்று வகை டெலிவரிப் பையன்களைப் பார்த்தது ஞாபகம் வந்தது. ஸ்விக்கி என்று ஆரஞ்சு நிற டீஷர்ட் அணிந்த ஒரு இளைஞன் முதுகிலொரு பையை மாட்டியபடி போய்க் கொண்டிருந்தான், ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக. அவனது நடை ஒரு மனிதப் பிறவியின் நடையாகவே இல்லை. எந்திரனின் நடையாக இருந்தது. ஷங்கரின் படத்தில் வந்த ரோபோப் படையிலிருந்து எந்திரன் ஒன்று இந்த உடையை மாட்டிக்கொண்டு வந்துவிட்டதோ என்று தோன்றியது. பணிச்சுமை அவனை அப்படியொரு அஃறிணை ஆக்கியிருந்தது. அதிலும், பேட்டரியில் சார்ஜ் இறங்கிப் போனதொரு எந்திரன் போன்று சொங்கியாக நடந்து போய்க்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் ஊபர் ஈட்ஸ் என்றொரு வகை ரோபோ வந்தது. நாங்கள் ஆட்டோவுக்காகக் காத்திருந்தோம். மழை வேறு தூறிக்கொண்டிருந்த இரவு நேரம். பத்து நிமிடத்திற்குள் இன்னொரு எந்திரன், கர்லாக் கட்டை போல் உடல்வாகுடன். சிவப்பு நிற டீஷர்ட் அணிந்திருந்த ஒரு ஸொமாட்டோ. அப்போதுதான் தெரிந்தது, வீட்டை விட்டு வெளிக்கிளம்ப கஸ்ட்டப்படும் கஸ்டமர்கள் (நகர்வோர் ஆக விரும்பாத நுகர்வோர்!) அலைபேசி மூலம் தமக்கு வேண்டிய உணவுகளைத் தெரிவித்துவிட்டால் அவர்கள் குறிப்பிடும் உணவகத்திலிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு விரைந்தோடி வந்து வீட்டில் சேர்ப்பிக்கும் சேவகர்களாம் இவர்கள். இச்சேவையை வழங்க அவதரித்த கம்பெனிகள்தாம் மேற்சொன்ன பெயர்கள். இன்னும் கைக்கார்ட், மன்ச்பாக்ஸ்  ஆகியவை திருச்சிராப்பள்ளி மாநகரில் சேவையாற்றுகின்றன என்னும் செய்திக்கு அப்போதுதான் அடியேன் அப்டேட் ஆனேன். ஆனால், என்னவொரு மதியீனம் பாருங்கள், மதிய நேரத்தில் மனப்பாடம் செய்த செய்யுளைப் போல் அந்தத் தகவல்களை அடுத்த நாளே மறந்துபோய் டௌன்டேட் ஆகியிருக்கிறேன். விளைவு, இன்று பிள்ளைகளிடம் பல்பு வாங்கியாயிற்று.


       





















ஆறு வருடங்களுக்கு முன் ”பீட்சா” திரைப்படம் வந்தபோது ஹோம் டெலிவரி செய்கின்ற பீட்சா கடை ஊழியனைத் (சின்னத்) திரையில் கண்டேன். ’வீடு வரை உணவு’ என்னும் கோட்பாடு என் நினைவில் பதிந்த ஆண்டு எது என்று நினைவில் இல்லை. அந்தக் கோட்பாடு ஒரு த்ரில்லர் புனைவாக அந்தத் திரைப்படத்தில் ஆகியிருந்தது. அது ஒருவகை ஹோம் டெலிவரி. ஒரு கடையின் ஊழியர் அவரது கடைக்கு வரும் கோரிக்கைகளுக்கு மட்டும் உணவஞ்சல் செய்வது அது. இந்த ஸொமாட்டோ, ஊபரீட்ஸ் இத்தியாதிகளின் கோட்பாடு வேறு. இவர்களுக்குச் சொந்த உணவகமென்று ஒன்றில்லை. உணவகங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட உணவகத்தின் மெனு கண்டு மனு போடும் மக்களுக்கு மெனக்கெட்டு அந்த உணவகத்திலிருந்து உணவைக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் கொடுத்துப் பணம் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு உணவஞ்சலன் ஒரு நாளில் பதினைந்து இருபது உணவகங்களுக்குக்கூட போக நேரலாம். இப்படியாக ஒரு நூறு பேர் என்று கற்பனை செய்து பாருங்கள். அரிசியில் வண்டுகள் ஊர்வது போல் இவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். (ஆண்களைத்தான் இதுவரை இப்பணியில் கண்டிருக்கிறேன். எனவே உணவஞ்சலன் என்றேன். உணவஞ்சலிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!).

      இவ்வகை வேலைகள், படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பேருதவியாய் உள்ளன என்றொரு அவதானம் இருக்கிறது. பல இளைஞர்கள் இதில் பார்ட் டைமாகப் பணியாற்றுகிறார்கள். கல்லூரி மாணவர்கள். தமது கல்விச் செலவுகளுக்காக இந்த ஊழியம் செய்கிறார்கள். இன்று என் வீட்டிற்கு உணவு கொண்டு வந்த இளைஞனும்கூட ஒரு இஞ்சினியரிங் ஸ்டூடன்ட்டாம். ஆக, பொறியியல் மாணவன் பொறியல் கொண்டு வருகிறான்! படிப்பை முடித்த பிறகும் இதிலேயே தொடர்வான் என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். நாடு அப்படி இருக்கிறது.

      ”ஏனப்பா இந்த வேலை செய்கிறாய்?” என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? “ஜாலிக்காக” என்று எவனாவது சொல்வானா? நொந்து நூடுல்ஸ் ஆகி அல்லவா தெருத் தெருவாய் அலைந்து வேலை பார்க்கிறான். “விதி” என்றுதான் சொல்வான். அதனால்தான் ஊழியம் என்று இதைச் சொன்னேன். தமிழ்தான் செம்மொழி ஆயிற்றே! எத்தனை அர்த்தப் புஷ்டியான வார்த்தையெல்லாம் வைத்திருக்கிறது பாருங்கள். ஊழியம். ஊழ் என்றால் விதி. ஒருத்தன் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், அவன் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அந்த வேலையை அவன் செய்யும்படி ஊழ் அவனை உய்த்துவிடும். என்னது, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுமா? வறுத்து வாங்குகிறது ஐயா!
 
      சென்ற மாதம் கம்பம் போயிருந்த போது என் மாமனார் (இல்லாளின் சித்தப்பா) ஒரு சேதி சொன்னார். குடும்ப சேதியாக அவர் சொல்லியிருந்தாலும் அது அரை நூற்றாண்டுக்கு முந்திய சமூக நிலையின் வரலாற்றுப் பதிவு. போடியில் இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்திருந்தார்கள். கம்பத்துக்கும் போடிநாயக்கனூருக்கும் முப்பத்தெட்டு கி.மீ தொலைவு (உத்தமப்பாளையம், தேவாரம் வழியாக). குறுக்கு வழி ஒன்றுண்டு. பதினெட்டாம் கால்வாய்ப் பாதை என்று சொல்வார்கள். அதன் வழியாக என்றால் ஒரு பத்து கிலோமீட்டர் குறையலாம் என்று நினைக்கிறேன். ஆக, இருபத்தெட்டு கீ.மி. இவர்கள் கம்பம் நாட்டாண்மைக் குடும்பம். நிலபுலமும் அதிகாரமும் இருந்த காலம். சொல்லுக்கடங்கிய பணியாளர் கூட்டமும் உண்டு. பெரும்பாலும் தலித்கள் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மாமா சொன்னார், ஒரு வேலையாள் (பெயர் சொன்னார், நினைவில் இல்லை), இங்கிருந்து கறிக்குழம்போ கருவாட்டுக் குழம்போ வைத்துத் தருவார்களாம். தூக்கைத் தூக்கிக் கொண்டு அவன் லொங்கு லொங்கென்று ஓடிப்போய் போடியில் கொடுத்துவிட்டு வருவானாம்! அது போல் அங்கும் இருப்பார்களாம். ஓடி வந்து கொடுப்பார்களாம். எவ்வளவு அருமையான உத்யோகம் என்று தோன்றுகிறதா? கேட்டதும் “அட அநியாயமே” என்று கூறிவிட்டேன். ஏன் என்று என் சிறிய மச்சான் கேட்டார். “பின்ன என்னங்க? யோசிச்சுப் பாருங்க, ஒரு உணவைக் கொண்டு போய்க் கொடுப்பதற்காக ஒருத்தன் முப்பது கிலோமீட்டர் ஓடுவது என்பதை வேறென்ன சொல்வது? அப்படியொரு வேலைக்கு ஒருவன் தயாராக இருந்திருக்கிறான். அவன் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? எஜமானுக்குச் செய்கிறோம் என்னும் தொழுநிலை. தன்னைத் தாசனாக அர்ப்பணித்துவிட்ட நிலை. அது பக்தியுணர்வால் ஏற்பட்டதல்ல. ஃப்யூடல் அமைப்பால் அவனுக்குப் பிறப்பிலேயே விதிக்கப்பட்ட ஊழியம். ‘அடப்போங்கய்யா, அந்த ஊர்ல சமைச்சு சாப்பிட மாட்டாங்களா? இதுக்கெல்லாம் மேரத்தான் (42.195 கீ.மி) ஓடிக்கொண்டிருக்க முடியுமா?’ என்று மறுத்துப் பேசுவதற்கே அவனுக்குத் தோன்றியிருக்காது.


    













அரைநூற்றாண்டு கழித்து அந்தத் தொண்டூழியம்தான் இப்படி நவீன வடிவம் எடுத்து வந்துள்ளது என்று பார்க்கிறேன். என் உறவினர் பையன் ஒருவன் சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான். ஸ்விக்கியில் பகுதிநேரப் பணி புரிகிறான். கல்விச் செலவுக்கு உதவியாக இருக்கிறது என்பதுதான் காரணம். சென்னையைப் போன்ற பெருநகரில் அப்பணி ஆற்றுவதில் அவனுக்குத் தயக்கம் ஏதுமில்லை. ஒரு கோடி பேர் வசிக்கும் ஜனசமுத்திரத்தில் அவனை இன்னார் வீட்டுப் பையன் என்று அங்கே யார் அடையாளம் காணப் போகிறார்கள்? அதுவே, கம்பம் அல்லது போடி என்றால் இந்த வேலையை அவன் செய்வானா? என்று யோசித்தேன். முடியாது. 

      இக்கட்டுரையைத் தட்டிக்கொண்டிருக்கும் வேளையில் இரவு ஒன்பதே கால் மணிக்கு நண்பர் ஃபைசல் அழைத்தார். இலுப்பூரிலிருந்து கந்தூரி சால்னா (தாழியானம்) கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு வீடாக வந்து கொடுக்க அவகாசம் இல்லை என்பதை விளக்கி, சக பேராசிரியர் ஒருவர் வீட்டில் கொடுத்துச் செல்வதாகவும், வந்து வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அப்போதே தூக்கு எடுத்துக்கொண்டு ஓடிப்போய் வாங்கி வந்தேன். இதற்கு என்ன பெயர்? ”பொட்டேட்டோ” என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது!

      கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக அறம் என்பது பசி மற்றும் உணவு ஆகியவற்றைச் சுற்றியே பெரிதும் இயங்கி வருவதாகக் காண்கிறேன்.

      ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்கிறார் திருவள்ளுவர்.

      ”மண்டினி வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது மணிமேகலை.  

      ”நடமாடும் கோயில் பகவற்கொன்றீயில் படமாடும் கோயில் பகவற்கும் ஆமே” என்றோதுகிறார் திருமூலர்.

      ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று இளகினார் வடலூர் வள்ளலார்.

      ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று கட்டளையிடும் மகாகவி பாரதி “தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றும் சீறுகிறான்.

      ”பசி வந்திடப் பத்தும் பறக்கும்” என்பது முதுமொழி.

      எனவேதான், அன்னதானம் என்பது இந்நாட்டில் ஓர் உன்னத அறம் ஆயிற்று. வணிகம்தான் என்றபோதும் உணவஞ்சல் என்பதும் ஓர் அறப்பணி என்றே தோன்றுகிறது அல்லவா? வீட்டில் தனியாக இருக்கும் முதுகுடிமக்களுக்கு இது ஒரு வரம் அல்லவா?

      இந்த உணவஞ்சல் பணியை நோக்கும்போது, ’வருணங்கள் ஒழியாது. அவற்றை யாரும் ஒழிக்க முடியாது. அவை இருந்துகொண்டேதான் இருக்கும். அந்தந்த வருணத்தின் பணியை ஆற்றுவோர் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்’ என்னும் வாதம் நினைவுக்கு வருகிறது.

      ஆம். ஆனால் அது பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதாக இராது. சாதி மதம் என்னும் நிபந்தனை இன்றி எல்லோரும் இந்த வேலையைச் செய்வதைக் காண்கிறோம். முன்பு நிலக்கிழாரின் வாரிசாக இருந்து ஏவியவர்களின் வாரிசுகள் இன்று இப்பணியைச் செய்கிறார்கள். ஆனால், உணவு கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ஒருவனை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதில்தான் அறம் பேணப்படுகிறதா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். அவன் தலித்தாக, கிறித்துவனாக, முஸ்லிமாக, பிராமணனாக என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் யார் என்று பார்வை துருவுமிடத்தில் அறம் எங்கே இருக்கும்? தகிக்கும் வெய்யிலில் வந்து நிற்பவன் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால் தயங்கும் மனத்தில் அறம் எங்கே இருக்கும்? 

      அன்பின் அறம் எங்கும் வெளிப்படல் வேண்டும். அதுதான் நாட்டின் ஆரோக்கியம். 

1 comment:

  1. மிகவும் சிறப்பான பதிவு சார், ஆழமான பார்வை வாழ்த்துகள்👍👏👏

    ReplyDelete