Wednesday, November 21, 2018

ரூமியின் மகாபாரதம்



               





















  நாகூர் ரூமி அனுப்பிய இரண்டு நூற்கள் இன்று தூதஞ்சலில் வந்து சேர்ந்தன. இன்று (21-11-2018, புதன்) மீலாதுந்நபி. அதற்கான அன்பளிப்பாக அவ்விரு நூற்களையும் பாவித்து உடனே அவருக்கு வாட்ஸப்பில் நன்றி நவின்றேன். 

ஒரு புத்தகம் ஹார்டி (தடிமன், 446 பக்கங்கள்); மற்றது லாரல் (ஒல்லி, 126 பக்கங்கள்). முன்னதன் பெயர் “நலம் நலமறிய ஆவல்”. உடல்நலம் குறித்த நூல் (மனநலமும்தான்). ஒல்லி நூலின் பெயர் “கதை கதையாம் காரணமாம் – மஹாபாரத வாழ்வியல்”. மகாபாரதம் என்னும் பாரகாவியத்தில் இருந்து சில குறுங்கதைகளைத் தேர்ந்து அவற்றில் தனது அகப்பார்வை அடைந்த தரிசனங்களை நமக்குச் சொல்லியிருக்கிறார்.

நாகூர் ரூமியின் நகைச்சுவை உணர்வு அவரது நூற்களை வாசித்த அனைவருக்கும் தெரியும். அதிரச் சிரிக்க வைக்காது. அரும்பைப் போதாக்கும் மெல்லிய ஹாஸ்யம். “காவியமானாலும் கசமுசாவானாலும் அது முதலில் மனதில்தான் கருவாகி உருவாகிறது” என்று அவர் எழுதியிருப்பது ஓர் உதாரணம். சுஜாதாவின் எழுத்தில் இப்பண்பு உண்டு. நாகூர் ரூமியை ஆரம்பக் காலத்தில் அடையாளம் கண்டு அங்கீகரித்தவர்களுள் சுஜாதாவும் ஒருவர்.

நூலெங்கும் அப்படியான மெல்லிய நகைச்சுவை விரவும்படி எழுதிச் செல்வது என்பது ஒரு நல்ல திறமைதான். அதிலும், சீரியஸான விஷயங்களைக் குறித்த நூற்களுக்கு அது இன்றியமையாத தேவை என்றே சொல்ல வேண்டும். நாகூர் ரூமி என்னும் புனைபெயருக்கான மூலவர் இருக்கிறாரே – பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி – மௌலானா ஜலாலுத்தீன் ரூமி – அவருக்கே இந்த நுட்பமான நகைச்சுவை உணர்வு இறையருளால் வாய்த்திருந்தது. அவருடைய பெயரைப் புனைபெயராகக் கொண்டவரிடம் அது இருப்பதில் வியப்பேதும் இல்லை.

மௌலானா ரூமி எழுதிய “மஸ்னவி” என்பதொரு மாபெரும் ஆன்மிகக் காவியம். ஃபார்சி மொழியில் அமைந்த குர்ஆன் என்று அதனைப் போற்றுகிறார்கள். அதாவது, அந்த நூலில் நுவலப்படும் நுட்பமான ஆன்மிகக் கருத்துக்கள் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டவை என்னும் அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் காவியத்தில் கொட்டிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கதைகளை நோக்க அதனை ஃபார்சி மொழியின் மகாபாரதம் என்றும் சொல்லலாம்.

நாகூர் ரூமியின் நண்பர்கள் மூவர் இந்நூலின் பாயிரத்தைச் செய்துள்ளார்கள். அணிந்துரை – சுகி சிவம், வாழ்த்துரை – திருப்பூர் கிருஷ்ணன், மதிப்புரை – பா.ராகவன். நாகூர் ரூமியின் நகைச்சுவைத் திறன் பற்றிப் பேசுமிடத்தில் திருப்பூர் கிருஷ்ணன் எழுதுகிறார், “எழுத்தால் ஒருவரை அழ வைப்பது சுலபம். ஆனால் எழுத்தால் ஒரு சின்ன முறுவலையாவது வரவழைப்பது என்பது ஆகக் கடினக் கலை. நாகூர் ரூமி அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்”.

நல்ல பாராட்டுதான். ஆனால், உண்மை இதற்குத் தலைகீழ் – ரிவர்ஸ் – என்பதே அடியேனின் அபிப்பிராயம். எழுத்தால் ஒருவரை அழ வைப்பதுதான் கடினம் என்பது என் கருத்து. (மெகா சீரியல்கள் பார்த்தபடி முந்தானையால் மூக்கு சிந்திக் கண்ணைத் துடைத்துக்கொள்வதை எல்லாம் அழுகை என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்). சுஜாதாவையே நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை இடங்களில் புன்முறுவலை வரவழைத்திருப்பார். ஆனால், எத்தனை இடங்களில் என் கண்களைக் கலங்கடித்தார்? என்று நினைத்துப் பார்த்தால் மிகச் சொற்பமே. யுவன் சந்திரசேகர் இன்னொரு ஆள் (ஆளுமை!). அவரது கதைகளிலும் மெல்லிய ஹாஸ்யத்திற்குப் பஞ்சமிராது. எனினும், ”கானல் நதி” நாவலைப் படித்தபோது, அதன் முடிவில் ஓரிடத்தில் கரைந்தழுதேன் ஐயா! அப்படி அழ வைப்பது சாதாரணம் அல்ல. (ஓர் எழுத்தாளர் சதா ரணத்தால் நம்மை அழ வைக்கிறார் என்றால் அது வேறு விஷயம். ஆனால் எழுத்தின் அசாதாரணத்தால் அழ வைப்பது மேதைமை!).

நாகூர் ரூமியிடமும் இதே விகிதாச்சாரம்தான். குட்டியாப்பாவின் தனித்தன்மையான ஆங்கிலச் சொல்லாடல்கள் கதை நெடுகிலும் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே போய், முடிவில் அப்படியான ஒரு சொல்லாடலே கண்களைச் சட்டென்று நீர்க்கொள்ளச் செய்துவிடும். அவ்விடம் ஓர் இலக்கிய மேதைமையின் ’டச்’.


















சிந்தனைக்குப் பல நல்ல புள்ளிகளை பா.ராகவன் தனது மதிப்புரையில் வழங்கியிருக்கிறார். “இது கதைகளை உண்டு வளர்ந்த சமூகம்” என்று தொடங்குகிறது அவரது உரை. இந்தியாவைச் சொல்கிறார். ஆனால், உலகின் அனைத்துச் சமூகங்களுக்கும் இது பொருந்தும் என்றே படுகிறது. கதைகள் இல்லாச் சமூகம் ஏது? அமெரிக்கக் கவிஞர் மூரியல் ருகைசரின் புகழ் பெற்ற வாசகம், “உலகம் கதைகளால் ஆகியிருக்கிறது, அணுக்களால் அல்ல” (”The universe is made of stories, not atoms”). 

“வளமான கதை மரபு என்பது துணைக் கண்டத்தின் ஆதார பலமானதன் முக்கியக் காரணம், பாரதம் இங்கு எழுதப்பட்டது என்பது. அது ஆதிக் கதை” என்கிறார் பா.ராகவன். (வியாசர் ‘ஆதிக் கவி’ எனப் போற்றப்படுகிறார்). ஒருவகையில் மகாபாரதம் என்பது இந்தியாவின் அடையாளம். அதனை “என்சைக்ளோபீடியா இன்டியானா” என்றே ஓஷோ குறிப்பிடுகிறார்! “மகாபாரதம், தெரியாதவன் இந்தியனாவே இருக்க முடியாது. இது ஒரு அடையாளம். ’மகாபாரதம்? வாட்டீஸிட்?’. இவன் வேறன்னு புரிஞ்சுக்கணும். ’ஓ இட்ஸ இன்டியன் க்ரேட் எபிக்!’. ம்..ம்.. அவன் கொஞ்சம் படிச்சவன்னு தெரிஞ்சுக்கணும்” என்கிறார் ஜெயகாந்தன் (அவரைப் பற்றிய ஆவணப்படம்: “The writer who extended the boundaries – எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்” காண்க). மனிதர்களில் எத்தனை வகைமைகள் இருக்க முடியுமோ அவற்றுக்கான ஆர்க்கிடைப் – படிவ மாதிரிகள் எல்லாம் அதில் உள்ளன. உலகில் அதிகமான ஜனத்தொகை என்பதுடன் பல்வேறு மொழிகளைப் பேசும் பன்-பண்பாட்டுச் சூழலுள்ள தேசம் என்பதால், மனித மனங்களின் சுயங்களின் அத்தனை வகைப்பாடுகளும் இங்கே காணக்கிடைக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

ராமாயணத்தை விடவும், மகாபாரதமே இன்றைக்குப் பெரிதும் மீட்டெழுதப் படுகின்றது. அதன் பன்முகத் தன்மையே அதற்குக் காரணம் எனலாம். இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”, எம்.வி.வெங்கட்ராமின் “நித்ய கன்னி”, பாலகுமாரனின் “கிருஷ்ண அர்ஜுனன்”, எஸ்.ராமகிருஷ்ணனின் “உபபாண்டவம்” ஆகிய நாவல்கள் சட்டென்று நினைவில் தோன்றுகின்றன. மகாபாரதத்தை “வெண்முரசு” என்னும் பெயரில் பல்லாயிரம் பக்கங்களில் (நிஜமாகவே பல்லாயிரம் பக்கங்கள்!) பெரும் புதினமாக ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கிறார் (ஒரு பன்னிரண்டாயிரம் பக்கங்கள் இதுவரை பன்னிரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன!). தமிழில் நிகழ்ந்துகொண்டிருக்குமொரு பெரிய இலக்கியச் சாதனை அது. 


















”திருதராஷ்டிரன் விழியற்றவன் என்பதுதான் பாரதத்தில் உள்ள மொத்தக் குறியீடுகளுக்கும் ஆதாரப்புள்ளி” என்று சொல்கிறார் பா.ராகவன். இந்த அவதானத்தை நான் முதன்முதலில் ஓஷோவின் கீதை உரை நூலில் கண்டேன். பகவத் கீதையின் முதல் அத்தியாயமான “அர்ஜுன விஷாத யோகம்” என்பதன் முதல் சுலோகம்: “திருதராஷ்டிரன் கேட்கிறான்: ‘சஞ்சயா! அறநிலமாகிய குருநிலந் தன்னில் நம்மவர் பாண்டவர் நடத்திய தென்ன? போரின் நிலையைப் புரிந்துரை செய்க’” (சுலோக தமிழாக்கம் ஆசிரியப்பா நடையில் செய்தவர் கவிஞர் கண்ணதாசன்). இதன் விரிவுரையாக ஓஷோ பேசும்போது சொல்கிறார்:

“கீதையின் அற்புத வரலாறு ஒரு குருட்டு மனிதனின் ஆர்வத் துடிப்பிலிருந்து தொடங்குகிறது. உண்மையில் இந்த உலகில் குருட்டு மனிதர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எந்தவித கதைகளும் வரலாறுகளும் தோன்றியிருக்காது! வாழ்க்கையின் எல்லாக் கதைகளும் குருட்டு மனிதர்களின் அதீதமான ஆவலினால்தான் உதிக்கின்றன”.

மேலும் அவர் சொல்கிறார், “திருதராஷ்டிரனுக்குப் பிறந்த நூறு மைந்தர்களும் எல்லா விதங்களிலும் குருட்டு வியவகாரங்களே செய்து வந்தார்கள். அவர்களுக்குக் கண்கள் இருந்தன. ஆனால் பார்க்கும் சக்தி அவர்களிடம் இல்லை”. இந்தக் குருட்டுத் தன்மை என்பது அகக்கண் குருடாக இருக்கின்ற அஞ்ஞான நிலை என்றும் ஓஷோ விளக்குகிறார். ”நிச்சயமாக, அவர்களுடைய கண்கள் குருடாக இல்லை, ஆனால் அவர்களது நெஞ்சங்களில் இருக்கும் இதயங்களே குருடாக உள்ளன” (22:64) என்று அத்தகையோர் பற்றி குர்ஆன் சொல்கிறது.

நாகூர் ரூமி தரும் மகாபாரதக் கதை விளக்கங்கள் எவ்வகையில் புதுமையாக இருக்கின்றன என்று கேட்கலாம். ஓர் உதாரணம் பார்ப்போம். பௌராணிக இதிகாசக் கதைகளில் எல்லாம் இன்றியமையாத ஒரு விஷயமாக வருவது சாபம் என்பதும் சாப விமோசனம் என்பதும் அல்லவா? ஆற்றல் கொண்ட ஒருவன் மீது அறவோர் சாபமுரைக்கும் போது அவன் தனது ஆற்றல்களை எல்லாம் இழந்துவிடுவான் என்பது கதைகள் கேட்கும் சிறுவர்களுக்கும் தெரியும். அதனை நாகூர் ரூமி இவ்வாறு விளக்குகிறார்: “சாபம் என்பது ‘ஹையர் ஃப்ரீக்குவன்ஸி’யிலிருந்து ‘லோயர் ஃப்ரீக்குவன்ஸி’க்குப் போ என்று அவர்கல் சபிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். க்வாண்டம் இயற்பியல் அப்படித்தான் கூறுகிறது”. இதுபோல் நவீன அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்தும், பல்வேறு சமயப் பார்வைகள் சார்ந்தும் ஒப்பிட்டு விளக்கங்களை இந்நூல் முழுவதிலும் அவர் சொல்லிச் செல்வதில் வியப்பில்லை. அவரின் பரந்துபட்ட வாசிப்பு வெளிப்படத்தானே செய்யும்? ஓஷோவின் பாணி என்று இதனை நான் பார்க்கிறேன். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட சமய நூலை முன்வைத்து அவர் விவரித்துப் பேசும்போது இப்படித்தான் பல்வேறு துறைகளைத் தொட்டு ஒப்பிட்டு விளக்கிச் செல்வார். உதாரணமாக, உபநிஷத் பற்றி அவர் உரையாற்றினால் அதில் சூஃபிகள், ஜென் ஞானிகள், கார்ல் மார்க்ஸ். விட்ஜென்ஸ்டீன், ஜார்ஜ் குர்ஜீஃப், சார்லஸ் டிக்கன்ஸ், சோரென் கீர்க்கெகார்டு, மர்லின் மன்ரோ, ரஸ்புடீன், ஏசுநாதர், புத்தர், மகாவீரர், ஐன்ஸ்டீன், வில்லியம் ஜேம்ஸ், தான்சேன், காந்தி, வில்ஹெம் ரீச் என்று ஒரு நூறு பேராவது வந்து போவார்கள் (யார்தான் இல்லை?).

மகாபாரதக் கதை முழுவதும் முதலில் வியாசரின் மனதில் உருக்கொண்டு விட்டது. பிறகு அதனை ஓலையில் எழுதுவதற்கு ஒருவரைத் தேடும்போது கணபதியே அதனை எழுதச் சரியானவர் என்று அடையாளம் காட்டப்படுகிறார். இதனை விளக்கும்போது ஓர் ஆழ்ந்த பார்வையை ரூமி நமக்குத் தருகிறார்: “மனம்தான் பிள்ளையார் சுழி!”.

ரூமியின் இந்நூலினைப் படிக்கும்போது நமக்கும் ஏதாவது புதிய தரிசனங்கள் அல்லது விளக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். முதல் கதையைப் படித்தபோதே எனக்கு அப்படியொரு விளக்கம் தோன்றிற்று. உடனே இந்தக் கட்டுரையை எழுத அமர்ந்துவிட்டேன்! அவ்விளக்கத்தை இப்போது சொல்கிறேன். மகாபாரதத்தைப் படியெழுதித் தருவதற்கு விநாயகர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். “நான் எழுதுகிறேன். ஆனால் என்னுடைய எழுதுகோல் எந்தவொரு நிலையிலும் நிற்காது. அதனால் நீ நிற்காமல் சொல்லிக்கொண்டே போக வேண்டும்” என்பது அந்த நிபந்தனை. இவ்விடத்தில் நாகூர் ரூமி தரும் விளக்கம் இது: “சாதாரணக் கவிஞனுக்கும் மஹாகவிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். சாதாரணக் கவிஞர்கள் யோசித்து யோசித்து எழுதுவார்கள். ஆனால் மஹாகவிகள் மழையைப் போலப் பொழிவார்கள். மொத்த மஹாபாரதமும் வியாசரின் மனதுக்குள் வந்தாகிவிட்டது. இனி அதைக் கொட்டவேண்டியதுதான் பாக்கி. எனவே, கவிதை என்பது, ‘Spontaneous overflow of powerful feelings’ என்று ஆங்கிலக்கவி வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல, வியாசர் கொட்டுவதற்கும் விக்னேஷ்வர எழுதுகோல் அதே வேகத்தில் எழுத்தில் வடிப்பதற்கும் சரியாக இருக்கும்”.

அடியேனுக்கு வேறொரு விளக்கம் தோன்றுகிறது. விநாயகர் அந்த நிபந்தனையை விதித்ததன் மூலம் வியாசரின் அகத்தில் நினைவு மற்றும் நினைவிலி மனத் தளங்குளுக்கு இடையிலான கதவை அகலத் திறந்து வைத்துவிட்டார். மனித மனத்தில் நினைவு (conscious) மற்றும் நினைவிலி (unconscious) என்னும் இரு நிலைகளுண்டு. நினைவிலியில் புறப்பட்டு வருகின்ற வார்த்தைகளை எல்லாம் நினைவு மனம் அப்படியே வெளியிடுவதில்லை. அவற்றின் மீது தணிக்கை செய்கிறது. வெளியிடத் தக்கவை எவை தகாதன எவை என்று கண்டு அதற்பட ஆல்டர் செய்து, வெட்டி ஒட்டி மாற்றியமைத்துச் செய்திக்கு உருக்கொடுக்கிறது. இவ்வேலையைச் செய்யும் மனத்தளத்தை ‘Preconscious’ என்று சிக்மண்ட் ஃப்ராய்டு அழைத்தார். இந்த மனத்தளமே நினைவுக்கும் நினைவிலிக்கும் இடையிலுள்ள கதவு. அல்லது சல்லடை. அப்படியொரு தணிக்கையே இல்லாவிட்டால் என்னாகும்? நினைவிலியில் உதிப்பவை எல்லாம் அப்படியே வந்து நினைவுத் தளத்தில் விழுந்து வெளிப்படும் அல்லவா? அந்நிலையையே இங்கே வியாசரிடம் உண்டாக்க விநாயகரின் நிபந்தனை முனைகிறது எனலாம். ஏனெனில் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனால் தணிக்கை செய்வதற்கான அவகாசமே இருக்காது அல்லவா?

இவ்வாறு நினைவிலி மனதில் தோன்றுவதைத் தணிக்கை செய்யாமல் அப்படியே எழுகின்றதொரு இலக்கிய முறைமையை மேற்குலகில் ஒரு குழு சென்ற நூற்றாண்டின் இருபத்தாம் ஆண்டுகளில் கண்டுபிடித்தது. அதற்கு மீ-மெய்ம்மியல் (Surrealism) என்று பெயர். அதன் பிதாமகர்களுள் ஒருவரான ஆன்றே ப்ரெட்டன் “கலை என்பது நினைவிலிருந்தே வர வேண்டும்” என்று கூறினார். மனம் போன போக்கில் குறுக்கீடு செய்யாமல் கலையை வெளிப்படுத்துவதை, எழுதுவதை அவர்கள் “automatic writing” என்றனர். இங்கே, மகாபாரதம் ஆட்டோமேட்டிக் எழுத்துமுறையில் உருவாக வேண்டும் என்று விநாயகர் திட்டமிடுவதாகக் காணலாம்.













ஆட்டோமேட்டிக் எழுத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. மனதில் தோன்றியதை எல்லாம் தோன்றிய வண்ணம் எழுத வேண்டும் என்றால் கெட்ட வார்த்தைகளும் தோன்றினால் என்ன செய்வது? சர்ரியலிஸ்டுகள் அப்படியெல்லாம் எழுதத்தான் செய்தார்கள். மக்களின் புழக்கத்தில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எழுதினால்தான் இலக்கியம் எதார்த்தத்தின் கண்ணாடியாக இருக்கும் என்பது அவர்களின் வாதம். (எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர். எனவே, சர்ரியலிஸ்டுகளின் அந்த வாதம் ஒருவகையில் தொல்(காப்பிய) நெறிதான்!) கண்ணாடியின் முன்னால் நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் அது அப்படியேதான் உங்களைப் பிரதிபலிக்கும். உங்களுக்கு மீசை நன்றாக இல்லை என்பதற்காகத் தனிக்கை செய்துவிடுமா? அல்லது திகம்பர கோலத்தில் நிற்கிறீர்கள் என்றால் பிக்ஸல்களை மழுக்கிக் காட்டுமா? என்கிற ரீதியில் அவர்களின் தர்க்கம் செல்கிறது. 

இந்த இடத்தில் நாகூர் ரூமியின் “தாயுமானவள்” குறுநாவலை நினைவு கூர்கிறேன். (குறுநாவல் என்று சொன்னதற்காக அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் தமிழில் இப்போதெல்லாம் நாவல் என்றால் குறைந்தது ஐநூறு அறுநூறு பக்கங்கள் எழுதுகிறார்கள்). அப்புதினத்தில் மீன்காரி ஒருத்தி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவதாக வருகிறது. வார்த்தையே வருகிறது. நாவலைப் படித்த சக பேராசிரியர் ஒருவர் ‘என்ன இவரும் இப்படியெல்லாம் ஆரம்பிச்சுட்டார்? ஒரு இஸ்லாமிய நாவலில் இப்படியெல்லாம் இருக்கலாமா?’ என்றார். மீன்காரி கதாப்பாத்திரம் அப்படிப் பேசியதைக் கேட்ட நினைவில், ஒரு மீன்காரி எப்படிப் பேசினாளோ அப்படியே ’பதிவு’ செய்திருக்கிறார் ரூமி. மீன்காரி ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து அப்படிப் பேசினாலுமே ஆச்சரியம் ஒன்றுமில்லை. மீன்காரி எந்த மதத்தவளாக இருந்தாலும் அப்படிப் பேசுவதாக இருப்பது எதார்த்தம்தான். (கசாப்புக் கடை பாய்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லையா? பெண்கள் பேசக்கூடாது என்று சொல்ல அது என்ன ’ஆண்’மீக மொழியா?) இஸ்லாமிய நாவல் என்பதற்காக மீன்காரி கோபப்பட்டால் சூறாவா ஓதுவாள்? நாகூர் ரூமி எழுதிய இன்னொரு நாவல் “திராட்சைகளின் இதயம்” (’குரு’நாவல்!). அதிலும் ஓரிடத்தில் கெட்ட வார்த்தை வருகிறது. இப்படியாகவும், சர்ரியலிஸ்டு பாணி எழுத்துக்கு ரூமியின் பங்களிப்பு இருக்கிறது!

விஷயம், வியாசர் தன் மனதிற்கு சென்ஸார் இல்லாமல் எழுதியிருந்தார் எனில் மஹாபாரதத்தில் கெட்டவார்த்தை இருக்கிறதா? என்பது. இருக்கலாம். கெட்டவர்கள் இருக்கையில் கெட்ட வார்த்தைகளும் இருக்கத்தானே செய்யும்? ஆனால் கண்டறிதல் அரிது. ஏனெனில், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அந்த வார்த்தை உங்களுக்கு மொழியின் ஒரு தூய சொல்லாகவே தோன்றும். அதன் அர்த்தம் அறிய நீங்கள் அகராதியை நாடுவீர்கள். ஒருவகையில், தொல் இலக்கியங்களை நாம் மூல மொழியில் வாசிப்பதே கூட மொழி பெயர்ப்பை வாசிப்பது போன்றதுதான். மூல மொழியின் தாக்கத்தை ஒருபோதும் மொழிபெயர்ப்புத் தராது. ஒரு காலத்தில் புழங்கிய மொழியின் வழக்கு அல்லது பிரதி வேறொரு காலத்தில் அம்மொழியைப் பேசுபவர்களுக்கே மொழிபெயர்ப்பின் தன்மையை அடைந்துவிடுகிறது. அதனால்தான் இன்று பழைய இலக்கியங்களின் வரிகளைப் புரிய நாம் அகராதிகளையும் உரைகளையும் தேடுகிறோம்.

உதாரணமாக, அறபி மொழியில் ‘ஃபர்ஜ்’ என்றொரு சொல் உளது. திறப்பு என்று பொருள். அச்சொல் யோனியையும் குறிக்கும். எனவே அச்சொல் இடம்பெறும் கவிதை அல்லது உரைநடை சொற்றொடர்களைப் பாலியல் கணக்கிலும் அர்த்தப்படுத்திவிட இயலும். அதனால், அச்சொல் இடம்பெறும் பனுவல்கள் மீது விவாதங்கள், விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் ஆகியன ஏற்பட மொழியே வழிகோலுகிறது. செவ்வியல் மொழிகள் மிகவும் செறிவானவை. அவற்றுள் ஒரு சொல் நேர்ப்பட ஒற்றைப் பொருளையே அன்றி ஒரு அர்த்தப் பரப்பினைத் தன்னுள் கொண்டிருக்கக் கூடும். Shades of meanings என்று சொல்லுமாறு அர்த்தபாவங்களைக் குறித்து நிற்கும். ஒரே சொல் எதிர்மறையான இரு அர்த்தங்களைச் சுட்டுவதையும் அறபி மொழியிற் காண்கிறோம். சமற்கிருதத்திலும் அன்னனம் ஆழிய செறிந்த சொற்களுண்டு. மூல வாக்கியங்களை அறியாமல் இதற்குமேல் நம்மால் ஏதும் சொல்லவியலாது. அது இக்கட்டுரையின் எல்லையைத் தாண்டியதும் கூட.

ஆனால், இங்கே நமக்கு முக்கியமானது என்னவெனில், நமது நினைவிலிக்கான கதவினைத் திறக்கும் பணியை மகாபாரதக் கதைகள் செய்யும் என்பதே. நமது அகத்தின் ஆழத்தை நாம் அறிய இக்கதைகள் உதவும். நாம் விழிப்புடன் படிக்க வேண்டும் என்பதே நமது பங்களிப்பு. “கண்ணாடியின் ஆழம் என்பது அது பிரதிபலிப்பதன் ஆழமே” என்பார் ஜெயமோகன். மகாபாரதம் நமது நினைவிலியின் ஆழத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்குமொரு கண்ணாடி.

இக்கட்டுரையை வரையும் தருணத்தில் நூலின் முதன் மூன்று கதைகளையே படித்திருக்கிறேன். இதோ, கண்ணாடியின் முன் நின்று என்னைப் பார்த்துக்கொள்ளப் போகிறேன்.

No comments:

Post a Comment