Thursday, November 22, 2018

மெத்தை அருளல் வேண்டும்



                சூஃபித்துவத்தில் ‘முனாஜாத்’ என்றொரு பயிற்சி உண்டு. இறைவனுடன் உரையாடுதல் என்பது இதன் பொருள். எப்போதும் இறைவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே அந்தப் பயிற்சி.

      இறைவனுடன் நாம் ஏன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்? ஏனெனில், இறைவன் மட்டுமே நம்மோடு எப்போதும் எங்கேயும் இருக்கிறான். நமது தேவைகள் அனைத்தையும் அவனே நிறைவேற்றுகிறான். “செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடமே கேளுங்கள்; உப்பு தேவை என்றாலும் இறைவனிடமே கேளுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னது அதனால்தான்.

      இறைவனுடன் பேசுவது என்பது எல்லாச் சமயங்களிலும் உள்ளதுதான். பக்திப் பாடல்கள் என்று நாம் காணும் பனுவல்களில் எல்லாம் இறைவனை முன்னிறுத்தி உரையாடியிருக்கிறார்கள் என்பதையே காண்கிறோம். அது அவரவர் சமயத்தின் வடிவத்திற்கேற்ப வெளிப்பட்டுள்ளது.

      ’பால் தேன் பருப்பு இவையெல்லாம் உனக்கு நான் தருகிறேன். எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்கிறார் ஔவையார். அதிலே ஒரு தோழமையின் உரிமை தொனிக்கிறது.

      ’ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைக் கரவேல்!’ என்று ஆண்டாள் கேட்பதில் காதலின் நறுமணம் கமழ்கிறது.

      ’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடீ சிவசக்தி! எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்று பாரதி கோபமும் அழுகையும் ஒருசேரக் கேட்கிறான்.

      வள்ளலாரும் கடவுளுடன் பேசுகிறார். ஆனால், அது எஜமானிடம் அடிமை உரையாடுகின்ற பாணியில் இருக்கிறது. தனது உரையாடல்களை அவர் ‘விண்ணப்பம்’ என்று அழைக்கிறார். ம்ஹும், எனக்கு சுத்தப்பட்டு வராது. சூஃபித்துவம்  இறைவனைக் காதலியாக பாவிக்கிறது. காதலியிடம் விண்ணப்பமெல்லாம் விடுத்துக் கொண்டிருக்க முடியாது.


       













அமெரிக்காவின் நீல் டொனால்ட் வால்ஷ் எழுதிய புகழ் பெற்ற நூல் (நான்கு தொகுதிகள்) “Conversations with God” (கடவுளுடன் உரையாடல்கள்). அதன் முதற் தொகுதியின் முதற்பதிப்பு 1995-ல் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. வால்ஷ் உலகெங்கும் அறியப்பட்டார். ஆனால், வாழ்க்கையில் சோதனைகளால் புடம் போடப்பட்ட பின்னரே இதெல்லாம் நடந்தது.

ஒரு வானொலி அமைப்பாளராகவும் செய்தித்தாள் ஆசிரியராகவும் அவர் சராசரியான தன்னிறைவான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். தீ விபத்தொன்றில் அவரது உடைமைகள் எல்லாம் எரிந்து போயின, நடுத்தெருவுக்கு வந்தார், திருமண வாழ்க்கை முறிந்தது, கார் விபத்தில் கழுத்து ஒடிந்தது (சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ). ஓரிகான் மாநிலத்தின் ஆஷ்லாந்தின் ஊர்ப்புறத்தே ஒரு கூடாரம் அடித்துக்கொண்டு, குப்பைப் பொறுக்கி மறுசுழற்சி செய்து பணம் ஈட்டிப் பிழைத்தார். பாரதி பாடியதைப் போல், நல்லோதோர் வீணையாக இருந்து நலங்கெட்டுப் புழுதியில் வீசப்பட்டதாக உணர்ந்தார்.

ஒருநாள், கடவுளின் மீது காண்டாகித் தன் மனவுணர்வுகளை எல்லாம் ஒரு கடிதமாக எழுதினார். மனதில் பொங்கிக்கொண்டு வந்த ஏகப்பட்ட கேள்விகளை அதில் அவர் கோபமாகக் கேட்டிருந்தார். எழுதி முடித்த பிறகு அவரது தோளுக்கு அருகில் ஒரு குரல் கேட்டது, “என்னப்பா, நிஜமாகவே இந்தக் கேள்விக்கெல்லாம் உனக்கு பதில் வேண்டுமா? இல்லை, சும்மா பொறிஞ்சுத் தள்ளுறியா?”. யாரது என்று அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமே இல்லை. அதன் பின் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் மனதிலேயே விடைகள் பொங்கிக்கொண்டு வந்தன. தெளிவான உணர்வுமயமான அகப்பார்வைகள். அவற்றையும் எழுத்தில் பதிந்து வைக்கத் தொடங்கினார். அவையே நூலாக உருவாகி வெளிவந்து பல லட்சம் வாசகர்களை ஈர்த்தது.
      
 நீல் டொனால்ட் வால்ஷின் நூற்கள் இந்திய அத்வைத வேதாந்தத்தின் ஞானப் பார்வையை முன் வைக்கின்றன. சூஃபித்துவத்தின் ஏகத்துவ உள்ளமை என்னும் கோட்பாட்டிற்கு மிக நெருங்கி வருகின்றன. அந்தப் பார்வையிலிருந்தே படைப்புக்கள் அனைத்தின் மீதும் பாரபட்சம் அற்ற பேரன்பைத் தூண்டுகின்றன.

      ”எதிர்பார்ப்பு ஏதுமின்றியும், குறிப்பான பலன்களைத் தேடாமலும் உன் வாழ்க்கையை வாழ வேண்டும். அதுவே விடுதலை. அதுவே தெய்வீகத்தில் வாழ்தல்” என்று அவரது நூலில் ஓரிடத்தில் வருகிறது. ’கடமையைச் செய், பலனை எதிர்பாராதே!’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் உரைப்பதேதான் இது.


       













இந்தச் சிந்தனைகளை எல்லாம் தூண்டிவிட்டது இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் நான் படித்ததொரு பதிவு. சாரு நிவேதிதா எழுதிய ‘Peps’ என்னும் குறுங்கட்டுரை. அதில் அவர் பெருமாளிடம் பேசுகிறார். ‘நல்லதோர் வீணை செய்தே...’ என்று பாரதி புலம்புகிறானே, அந்த வரிகளுக்கான விரிவுரை என்று இந்தப் பதிவைச் சொல்லலாம். ஒரு பக்தன் எவ்வளவு அன்யோன்யமாக இறைவனிடம் பேசுவான் என்பதற்கொரு உதாரணமாகவும் இதனைக் கூறலாம். எழுத்துநடை, அதாவது பேச்சு நடை, மிக சுவையாக, அக்கார அடிசில் போல் வந்திருக்கிறது. திருவிளையாடலில் தருமி புலம்புவதும் நினைவு வந்தது. எதிரே நிற்பது யாரென்றே தெரியாமல் தருமி புலம்புவான். ஆனால், தெரிந்தே புலம்புவதுதான் உண்மையான பக்தனின் நிலை போலும். புதுமைப்பித்தனின் சிறுகதையைப் படிப்பது போலவும் இருந்தது.

      ”யோவ் மிஸ்டர் பெருமாள்” என்னும் விளியுடன் தொடங்குகிறது அந்த உரையாடல். அடுத்து, நிறைவேறாமல் நிலுவையில் இருக்கும் பழைய பிரார்த்தனைகள் இரண்டை நினைவூட்டுகிறார். தென்னமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது முதல் பிரார்த்தனை. இரண்டாம் பிரார்த்தனையை நீங்களே படியுங்கள்:

      ”காலையில் எழுந்தால் மொபைலில் I miss you da என்று மெஸேஜ் பார்க்கும்படியாக, ருக்மிணி தாயார் ஜாடையில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வேண்டும் என்று மொபைல் ஃபோன் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பிரார்த்தனை வைத்துக் கொண்டிருக்கிறேன். ம்ஹும், இன்று வரை கவனிப்பு இல்லை.”

      அடுத்து வருவது தமிழ் இலக்கிய, மற்றும் திரைப்படச் சூழலை நையாண்டி செய்யும் உரையாடல். தமிழ் எழுத்தாளர்கள் மூவரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். மூன்றாவது ஆளின் பெயரைச் சுட்டவில்லை. நாமாகக் கண்டு பிடிக்க க்ளூ இருக்கிறது. (படிக்கும்போதே யாரென்று தெரிந்துவிடுகிறதுதான்). “ஜெயமோகன் மகாபாரதம் எழுதி பாரத ரத்னா விருது கிட்டத்தில் போய் விட்டார். எஸ்ரா அவரே ஒரு மஹாபாரதமாகி விட்டார். இப்படி இந்த இரண்டு பயபுள்ளைகளையும் புஷ்டியாகக் கவனித்த நீர் உம்மையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் அடியேனை ஒன்றுமே கவனிக்காமல்...” என்று தொடரும் அப்பத்தி ரஜினி, கமல், இளையராஜா ஆகியோரை றாவிக்கொண்டு செல்கிறது. அடுத்து அந்த பெயர் சுட்டப்படா எளுத்தாளர் பற்றி இப்படிச் சொல்கிறார்:

       ”சரி, இதை விடும். ஒரு ஆள் – உம் மீது நம்பிக்கை இல்லாதவர் – கொஞ்சம் இடது என்று வைத்துக்கொள்ளுமேன் – அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அந்த மாதிரி தமிழ்நாட்டில் கொறஞ்சது அம்பதாயிரம் பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உமக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும். நீர் என்ன செய்தீர்? பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதானே? அவரை நீர் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைத்தீர். நியூயார்க் டைம்ஸில் எழுதுகிறான் ஐயா அவரைப் பற்றி! என்ன, யாரா? நீர் என்ன தினந்தினமா இப்படிச் செய்கிறீர்? அதான் உம் பெயரிலேயே எழுதுகிறாரே ஒர்த்தர், அவர்தான். ம்? எதாவது லாஜிக் இருக்கா?”

      இதைப் படித்தபோது எனக்கு அல்லாமா இக்பாலின் ”ஷிக்வா வ ஜவாபே ஷிக்வா” என்னும் முறையீடும் மறுமொழியும் நினைவுக்கு வந்தது. மரபுக் கவிதையில் புதுமையான திருப்பமாக அது உருது மொழியில் வந்தபோதே சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிற்று. சாருவின் இந்த ‘முறையீடு’ பின் நவீனத்துவ எழுத்துப் பாணியில் அமைந்திருக்கிறது. இதன் பின்னணியை அறியாவிட்டால் உங்களுக்கு இதுவும் அதிர்ச்சியாகவே இருக்கும்.

      அடுத்து, ஜனனம் – மரணம் – காமம் இவை பற்றி, ஜார்ஜ் பத்தாய் என்னும் ஃப்ரென்ச் இலக்கியத் தத்துவவாதியின் கோட்பாட்டைச் சுட்டியபடி, உரையாடல் நகர்ந்து செல்கிறது. ஆலயங்களில் முன்னெப்போதுமில்லாத கூட்டம் இப்போது இருப்பதான சமூக மாற்றத்தை விசாரிக்கும் சிந்தனைகளுடன் நகர்கிறது. கடைசியாக, காமத்தைப் பற்றிக் கடவுளிடம் பேசுகிறார். காமத்தையும் அவன்தானே படைத்தான்? அப்படியானால், அதைப்பற்றி மனம் திறந்து பேசவும் அவன்தானே சரியான ஆள்?

      கொஞ்ச காலமாக, சம்போகத்துக்குப் பின் உடல் நோவு பின்னி எடுக்கிறது என்றும், என்னதான் தன் வீட்டு மெத்தை இலவம் பஞ்சு அடைத்ததாக இருந்தாலும் முரட்டுத் தனமாக இருப்பதாகவும் சலித்துக்கொண்டு ஒரு கோரிக்கையை வைக்கிறார்: “சமீபத்தில்தான் ஒரு நண்பரின் இல்லத்தில் அந்த மெத்தையைப் பார்த்தேன். பெயர் Peps. விலை நாற்பது ஆயிரம்தான் (அதாவது சலுகை விலையில்!) மெத்தை என்றால் அது மெத்தை. ஏதோ வாட்டர் பெட்டில் படுப்பது போல் இருந்தது. உடனே நாற்பது ஆயிரம் கிடைக்கச் செய்யும்படி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

     இதையே வள்ளலார் போன்ற ஒருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பாடியிருந்தால் “மெத்த சலித்தேன், மெத்தை அருளல் வேண்டும் ஐயனே!” என்று பாடியிருப்பார் எனத் தோன்றியது. சாருவின் இந்தப் பிரார்த்தனை பற்றி மேலும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவற்றைப் பிறகு சொல்கிறேன்.

No comments:

Post a Comment