ஒருவகையில் இக்கட்டுரை கடந்த அரை மாதத்தின் நாட்குறிப்புக்களாக அமைந்துவிடும்
என்று நினைக்கிறேன். புதினம் சிறுகதையெல்லாம் எழுதுபவர்கள் நனவோடை என்றொரு உத்தி சொல்வார்களே,
அதைப் போல், மனம் அசைபோடும் போக்கிலே இதை வேகமாகத் தட்டி முடித்துவிடவேண்டும் என்று
அமர்கிறேன். எழுத்து நேர்த்தியாக வந்தால் அது பழைய பாணி. தாறுமாறாக வந்தால் நான்-லீனியர்
ரைட்டிங் என்று நீங்கள் கொண்டாடக் கடவீர்கள்!
இந்த நவம்பர் மாதத்தைத் தொடங்கியது பற்றி ஒரு தகவல். பேராசிரியர் குழாத்திற்கு
இது செமஸ்டர் விடுமுறைக் காலம். முக்கால் மாதம் கிடைத்திருக்கிறது. பல கல்லூரிகளிலிருந்து
விடைத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்புகள் வந்தன. தவிர்க்க இயலாத சூழலின் நிமித்தம்
அவற்றை மறுத்துவிட்டேன். வாசிப்பில் கணிசமான நேரத்தைக் கழிக்கலாம் என்றொரு திட்டம்.
ஒவ்வோராண்டும் அரை டஜன் நூற்களாவது என் சகதர்மினியின் அன்பளிப்பாக வந்துவிடும். இந்த
அக்டோபரில் ஏழெட்டு நூற்கள் வாங்கித் தந்தாள். பிள்ளைகளுக்கும் அன்பளிப்பாக நூற்களையே
வாங்கினோம். இப்போது அவர்கள் சிறுவர்கள் அல்லர். அடோலசன்ஸ் காலக்கட்டத்தினுள் நுழைந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன வகையான நூற்களை வாங்கித் தருவது என்று தேட வேண்டியிருந்தது. மகளுக்கென்று
வாங்கிய ஒரு நூலினைப் பிறகு எனக்கான பட்டியலில் எடுத்து வைக்க வேண்டியதாயிற்று! (ஏன்
என்பதைப் போகிறபோக்கில் சொல்கிறேன்). அடியேனுக்குக் கிடைத்த நூற்களின் லிஸ்ட் இது:
சூப்பர்நார்மல் – டீன் ரேடின்
தி டாஓ ஆஃப் ஃபிசிக்ஸ் – ஃப்ரிட்ஜாஃப் காப்ரா.
ஃப்ரம் செக்ஸ் டூ சூப்பர்கான்ஷியஸனஸ் – ஓஷோ
சோஃபீஸ் வேர்ல்டு – ஜோஸ்டின் கார்டர்
தி 13த் டிசைப்பிள் – தீபக் சோப்ரா
தி ஃபால்ட் இன் அவ்ர் ஸ்டார்ஸ் – ஜான் க்ரீன்.
என்னடா இது எல்லாமே ஆங்கில நூற்களாகவே இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம்.
இவ்விடுமுறையின் வாசிப்பை நான் தொடங்கியதே ஒரு செந்தமிழ்ப் பனுவலில் இருந்துதான். ஜெயமோகன்
எழுதிய “கொற்றவை” (புதுக்காப்பியம்). சென்ற ஆண்டு வாங்கிய நூலை இப்போதுதான் வாசித்தேன்.
நான்கு நாட்கள் ஓர் அகவெழுச்சி நிலையில் அது என்னை வைத்திருந்தது. சிலப்பதிகாரக் கதைதான்.
இளங்கோவடிகளே இப்போது பிறந்து வந்து ஒரு நாவல் எழுதியது போலிருக்கிறது.
மகளுக்குச் சென்ற வருடம் ஜெயமோகனின் ‘பனிமனிதன்’, எஸ்.ராமகிருஷ்ணனின்
“கிறு கிறு வானம்” ஆகிய சிறார் நூற்களை வாங்கித் தந்திருந்தேன். உலகெங்கிலும் இப்போதுள்ள
சிறுமியர் மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்து வருவது தியா ஸ்டில்டன் மற்றும் ஜெரோனிமோ ஸ்டில்டன்
ஆகியோர் எழுதி வரும் கதைகளைத்தான் என்கிறார்கள். ஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர் வரிசையெல்லாம்
காலாவதி ஆகிவிட்டதாம்! “தி ஃபார்ச்சூன் ஆஃப் தி ட்ராகன்” என்னும் நூலினை சென்ற மாதம்
அவளின் பிறந்த நாளுக்காக வாங்கினோம். பிள்ளைகள் இருவருமே வாங்கிய சூட்டில் படித்து
முடித்துவிட்டார்கள். மகளுக்காகத்தான் ஜான் கிரீனின் ”ஃபால்ட் இன் அவ்ர் ஸ்டார்ஸ்”
வாங்கியது. ஆனால் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கு அப்புதினம் தோதானது அல்ல என்றே என்
உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சென்னையிலிருக்கும் என் சகோதரனுடன் பேசியபோது அது
உறுதிப்பட்டது. எனவே அந்நூல் என் பட்டியலில் சேர்ந்துவிட்டது. அதற்குப் பகரமாக மார்க்கஸ்
சுஸாக் எழுதிய “தி புக் தீஃப்” என்னும் புதினத்தை மகளுக்கு வாங்கிக் கொடுத்தாயிற்று.
இவ்விரு புதினங்களுமே திரைப்படங்களாக வந்துள்ளன.
நவம்பர் 3, சனிக்கிழமையோடு இப்பருவம் முடிவுக்கு வந்தது. முதலாம் தேதி
என்று நினைக்கிறேன், முதுகலை வகுப்பில் கடைசியாக அ.முத்துலிங்கம் எழுதிய “வடக்கு வீதி”
என்னும் சிறுகதையை வாசித்தேன். (சிறுகதையை நான் ‘நடத்துவது’ கிடத்துவதெல்லாம் கிடையாது.
வாசிப்பேன். குறித்த சில இடங்களை விளக்குவேன், விவாதிப்பேன்.) இது ஓர் உளவியல் வகைச்
சிறுகதை. தனது நாற்பதாம் வயதில் மனைவியை இழந்து, பின்னர் பிள்ளைகளைக் ’கரையேற்றிவிட்டு’
பதினைந்து ஆண்டுகளாகத் தனிக்கட்டையாய் வாழ்பவரான, தற்போது ஐம்பத்தெட்டு வயதாகும் சோதிநாதன்
மாஸ்ரருக்கு பத்தாம் வகுப்புப் பயிலும் பதினான்கு வயது அலமேலுவின் மீது பாலியல் ஈர்ப்பு
உண்டாகிறது. சோதிநாதன் வசிக்கும் வாடகை வீட்டின் ஓனரின் மகள் அவள். பாடங்களில் தனக்கு
ஏற்படும் ஐயங்களை அவள் அவ்வப்போது சோதிநாதன் மாஸ்ரரிடம்தான் விளக்கம் பெற்றுத் தெளிவது
வழக்கம். பைத்தாகரஸ் கணிதச் சூத்திரத்தை அவரைப் போல் சுவாரஸ்யமாக விளக்கித் தர இந்த
அவணியில் வேறாள் இருக்க முடியாது என்னுமளவுக்கு பள்ளி வாத்தியாரான சோதிநாதன் மாஸ்ரர்
கெட்டிக்காரர். சைவச் சமய நெறியில் ஊன்றியவரும்கூட. அவரது உள்ளத்தில் ஏற்படுமொரு தடுமாற்றத்தை
இச்சிறுகதை பேசுகிறது. தனது தத்தளிப்பை வென்று மனதை மீண்டும் சமனத்திற்கு அவர் என்னனம்
கொண்டு வருகிறார் என்பதைச் சொல்லிக் கதை முடிகிறது.
’வடக்கு வீதி’ சிறுகதையை வாசித்துக் காட்டியபோது நினைவு கூர்ந்து வேறு
சில இலக்கியங்களையும் திரைப்படங்களையும் பேசினேன். லா.ச.ராமாமிருதத்தின் புகழ் பெற்ற
படைப்பான ”அபிதா” . தனது முன்னாள் காதலியின்
(அவளைப் போலவே இருக்கும்) மகள் மீது அறுபது வயதுப் பேரிளங்கிழவன் கொள்ளும் ஈர்ப்பினைச்
சொல்லும் குறுநாவல் அது. அந்தக் கிழவனின் மனதிற்குள்ளேயே தத்தளித்துக் கொந்தளித்துத்தான்
கதை முடிகிறது. லா.ச.ராவின் கதைக்குத் தூண்டல் விளாதிமிர் நபகோவ் எழுதிய “Lolita”
(லோ-லி-டா) என்பது திண்ணம். (அதற்கான அகச்சான்றினை ‘அபிதா’ நாவலிலேயே லா.ச.ரா வைத்திருக்கிறார்.
நாயகியின் பெயரை உச்சரித்துப் பார்க்கும் விதம்.). அ.முத்துலிங்கத்தின் கதைக்கும் அதுவேதான்
உந்துதலாக இருந்திருக்கும் என்று படுகிறது.
நபகோவின் ‘லோலிடா’ நாவல் வெளிவந்த ஆண்டு 1955. முப்பத்தேழு வயதான ஹம்பர்ட்
என்னும் பேராசிரியர் பன்னிரண்டு அகவையளான டொலோரஸ் மீது கொள்ளும் பாலியலீர்ப்பே கதை.
இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாக இதனை இலக்கிய
உலகம் கொண்டாடுகிறது. 1962-இல் ஸ்டேன்லி கூப்ரிக் இதனைத் திரைப்படமாக இயக்கினார். முப்பத்தைந்து
ஆண்டுகள் கழித்து 1997-இல் மீண்டும் ஆட்ரியன் லைன் இயக்கத்தில் திரைப்படமானது. அறுபதுக்கும்
மேற்பட்ட பதிப்புக்களில் நூலின் அட்டை வடிவமைப்பும், திரைப் பிரதிகளும் சர்ச்சைகளைக்
கிளப்பியதில் வியப்பில்லை. பதினொன்று முதல் பதினான்கு வயது வரையிலான வளரிளம் பெண்ணின்
மீது முதிய ஆணுக்கு உண்டாகும் பாலியல் ஈர்ப்பினை ஹெபிஃபீலியா என்னும் மனப்பிறழ்வாக
இன்றைய உளவியல் வகைப்படுத்துகிறது. (6-9 வயது எனில் பீடோஃபீலியா; 15-17 வயது எஃபிபோஃபீலியா;
17-க்கு மேல் எனில் டீலியோஃபீலியா; முதியவரின் மீதான ஈர்ப்பு எனில் ஜெரன்ட்டோஃபீலியா).
நபகோவின் நாவலில் சித்தரிக்கப்படும் பேராசிரியர் ஹம்பர்ட் ஹெபிஃபீலியா என்னும் மனப்பிறழ்வு
கொண்டவர். ஆனால், அவர் மீது லோலிடாவும் காதல் கொள்கிறாள் என்பதுதான் கதையை இன்னும்
சிக்கலாக்குகிறது. அவளுக்கு ஜெரன்ட்டோஃபீலியா என்னும் மனப்பிறழ்வு!
’அபிதா’விலோ
‘வடக்கு வீதி’யிலோ இந்த ரெசிப்ரோக்கல் இல்லை. அபிதாவும் அலமேலுவும் தமது இயல்பில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இது மேற்குலகின் பிரச்சனை மட்டுமா? சமயங்களின் ஆன்மிக
வெளிச்சம் பொன்னென ஒளிரும் கிழக்கின் ‘புனித’ப் பண்பாட்டு தேசங்களில் இந்தச் சிக்கல்கள்
இல்லையா? கற்பெனும் திண்மை உண்டாகப் பெற்ற தமிழ் கூறு நல்லுலகில் இதெல்லாம் இல்லவே
இல்லை அல்லவா? இலக்கியத்திலாவது? தி.ஜானகிராமனின் ”மரப்பசு” நாவல் நினைவுக்கு வந்தது.
அதன் ‘அம்மணி’ கதாப்பாத்திரம். சின்னஞ் சிறுமியாய் இருக்கும்போதிலிருந்தே தனது பெண்ணுடல்
மீது ஆண்கள் வைக்கும் தனிக்கவனத்தை அவள் அவதானிக்கிறாள். ’உடலரசியல்’ என்றொரு சொல்லாடல்
இன்றைக்குப் பெண்ணியத் துறை சார்ந்து பேசப்படுகிறதே, அதனை விவாதிக்கக் கிடைத்த சிறந்த
இலக்கியப் பிரதிகளுள் ’மரப்பசு’வும் ஒன்று. தி.ஜாவுக்கும் நபகோவின் தாக்கம் இருந்திருக்கலாம்.
1994-இல்
லுக் பெஸ்ஸான் இயக்கத்தில் வெளிவந்த ”லியோன் – தி ப்ரொஃபெஷனல்” என்னும் திரைப்படமும்
இதன் தொடர்பில் நினைவு வந்தது. நாற்பத்தாறு வயது லியோன் என்னும் கொலைத் தொழிலாளி (ஹிட்மேன்)
மீது பன்னிரண்டு வயதினளான மாட்டில்டா காதல் கொள்கிறாள். தனது பெற்றோர்களைக் கொன்றவர்களைப்
பழி தீர்க்கும் வஞ்சத்துடன் அவனிடம் அடைக்கலமாகிக் கொலைத் தொழிலைப் பயிலும்போது அக்காதல்
உருவாகின்றது. லியோனுக்கு அவ்விதமான எண்ணமேதுமில்லை. தான் கொலை செய்யப்படும் தருணத்திலும்,
மாட்டில்டாவைத் தப்பிக்கச் சொல்லி அனுப்பும்போது ”ஐ லவ் யூ” என்று அவளிடம் அவன் சொல்லும்
அந்த பாவனையிலும்கூட அதில் காமத்தின் நிழலாட்டம் இல்லை என்றே படுகிறது. இவ்விரு கதை
மாந்தரின் தெளிவற்ற உறவுநிலைக்காகவே இப்படம் பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. எனினும்,
தவிர்க்கவியலாத திரைப் பிரதியாகப் போற்றப்பட்டது.
பாலியல்
குறித்த சிந்தனை எந்த வயதில் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு உலகளாவிய ஒற்றை அளவுகோல்
இருக்கவியலாது. சென்ற ஆண்டு திசம்பர் மாதம் பாரதிதாசன் பல்கலையில் நிகழ்ந்த பாலினக்
கல்வி குறித்த புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்டேன். பேராளராக வந்த முதிய ஆங்கிலப்
பேராசிரியை ஒருவர் தனது பேச்சினூடே இக்கேள்வியை எழுப்பினார். அவர் சொன்ன பதில் எல்லோருக்கும்
வியப்பாக இருந்தது. அவர் ஒரு நபிமொழியை மேற்கோள் காட்டினார். “ஏழு வயதாகிவிட்டால் உங்கள்
பிள்ளைகளின் படுக்கைகளைப் பிரித்துவிடுங்கள்” (நூற்கள்: தாரகுத்னி, ஹாகிம்). ஏழு வயது!
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இந்த எச்சரிக்கை, பத்திரிகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள்,
இணையம் என்பதெதுவும் இல்லாத காலத்திலேயே!
அ.முத்துலிங்கத்தின்
சிறுகதையை அலசியபோது தொல்காப்பியம் சுட்டும் வரையறைகளையும் நினைவு கூர்ந்தேன். சங்க
இலக்கியம் என்னும் நூற்றொகையே அதன் அடிப்படையில்தான் கட்டமைந்து எழுப்பப்பட்டுள்ளது.
அகன் ஐந்திணை என்பது இயல்பான பொருத்தமான காதல். கல்வி, அழகு, குலம், பொருளாதாரம், வயது
முதலிய பத்துப் பொருத்தங்கள் கொண்ட ஆணும் பெண்ணும் கொள்வதே இயல்பான காதல் என்று தொல்காப்பியம்
சொல்கிறது (மெய்ப்பாட்டியல்:25). இவற்றில் ஆண் பெண்ணை விட உயர்வாக இருக்கலாம் என்றும்
நுவல்கிறது (’மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே’ – களவியல்:90). அழகிலும் அப்படியா என்று
தெரியவில்லை. ஆனால், வயது இங்கே ஒரு பொருத்தமாகச் சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
இன்றளவும் பெரும்பான்மை அப்படித்தானே நடைமுறையில் இருக்கிறது? விதிவிலக்காக, பொருத்தம் அற்றனவாக இரண்டு நிலைகளைத்
தொல்காப்பியம் பேசுகிறது. கைக்கிளை மற்றும் பெருந்திணை என்று அவற்றுக்குப் பெயர். காதல்
என்னவென்றே தெரியாத சிறுமியின் மீது கொள்ளும் காதல் என்று கைக்கிளையைச் சுட்டுகிறது
(”காமம் சாலா இளமையோள் வயின் / ஏமம் சாலா இடும்பை எய்தி … … … சொல் எதிர் பெறாஅன் சொல்லி
இன்புறல்…” – அகத்திணையியல்:53). கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் என்றும், பெருந்திணை
என்பது இன்பம் பயக்காத ஒவ்வாக் கூட்டம் என்றும் இளம்பூரணர் உரை செய்கிறார்.
பெருந்திணை
என்பதற்கு இன்னொரு கோணத்திலும் விளக்கமுண்டு. அதனை அறிய எட்டுவகைத் திருமணங்களைப் பற்றி
முதலில் அறிய வேண்டும். அவை தமிழகத்தில் நிகழ்ந்தன அல்ல. வடமொழியாளர் வாழ்ந்த வட இந்தியப்
புலத்தில் இருந்த திருமண முறைகள். அவற்றை “மறையோர் தேஅத்து மன்றல் எட்டு” (களவியல்:89)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம்,
அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன அவற்றின் பெயர்கள். இவற்றுள் தமிழர்க்குரியது காந்திருவம்
என்பது மட்டுமே என்று தொல்காப்பியம் சொல்கிறது (’காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடும்
கூட்டம்’ – இளம்பூரணர்). இவற்றுள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியன நான்கும்
பெருந்திணை என்றும், அவை மேன்மக்களிடமே நிகழுவன என்றும் இளம்பூரணர் உரைப்பர். பிரமம்
என்னும் திருமண வகை ‘கன்னிகாதானம்’ எனப்படும். “பிரமமாவது கன்னியை அணிகலன் அணிந்து
பிரமசாரியாய் இருப்பானொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது” என்கிறார் இளம்பூரணர். “பன்னீராட்டை
வயதுடையாளை நாற்பது வயதுடைய பிரமசாரிக்குக் கொடுப்பது” என்று வயதுக் குறிப்புமுண்டு.
அதாவது மாட்டில்டா, லோலிடா போன்ற வளரிளம் கன்னியை நாற்பது வயது வரை புலனடக்கிய மாப்பிள்ளைக்குக்
கொடுப்பது.
சிலப்பதிகாரத்தில்
பதினாறு வயதுடைய கோவலனுக்குப் பன்னிரண்டு வயதுடைய கண்ணகியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அவன் “மாசறு பொன்னே வலம்புரி முத்தே” என்று முதலிரவில் அவளின் அழகினை வருணித்து உணர்ச்சியூட்ட
முயன்று தோற்கிறான். அவனது உறவு கைக்கிளை போல் ஆகிவிடுகிறது. ”கொற்றவை” என்னும் செந்தமிழ்ப்
புதினத்தில் ஜெயமோகன் எழுதியுள்ள தொடர்கள் கேளீர்:
“… கண்ணகியைக்
கோவலன் நடுங்கும் விரல்களால் தொட்டான். நாணமும் கோபமும் மெல்ல மெல்ல அகற்றி சொல்லும்
சிரிப்பும் அவள் சூட வைத்தான். யாழறிந்த செவ்விரல்களால் பின்பு அணிகளையும் ஆடைகளையும்
அகற்றி அழகொன்றையே அணிய வைத்தான். அப்போது அவன் உள்ளத்துக்குள் ஒரு மென்நரம்பதிர அவளை
அதற்கு முன்பே கண்டதை அறிந்தான். ஒரு கணம் கடலலை தாள் தழுவும் கண்ணையின் கல்முகமே அவன்முன்
வந்து சென்றது.
“அவளுடலில்
தன் உடல் தீண்டியபோது கடற்பாறையின் தண்மையை உணர்ந்தான். கோடு கனத்து ஆணி இறுகி யாழ்
ஒலியின்மை கொண்டிருந்தது. அவன் விரல்களுக்கப்பால் அதன் உள்ளிசை பெய்யாக் காரெனக் கனத்துக்
கீழ்வான் நோக்கிச் சென்றது. பின்பு அவன் தன் சொற்களால் அவ்வமைதியைக் கலைக்க முற்பட்டான்.
கற்ற பாணர் பாடல்களின் அணிகளெல்லாம் அவன் மொழிமீதேறிக் கடலோரக் கரும்பாறைமீது ஓங்கியடித்து
நுரைசிந்திப் பின்வாங்கிக் கொண்டிருந்தன. சொற்கள் ஓய்ந்த அமைதி வெளியில் அவன் ‘கண்ணகி!
கண்ணகி!’ என்று விம்மிக் கொண்டிருந்தான்” (பக்கம்:87).
யாமெல்லோரும்
அறிந்த கதைதான். அதன் பின் கோவலன் ஆடற்கணிகையான மாதவியிடம் சென்று விடுகிறான். அவளுடன்
அவனது உறவுநிலை எப்படியிருந்தது? “குலமகளில் கணிகையைத் தேடியவன் கணிகையில் குலமகளைத்
தேடுவதை அவள் அறிந்திருந்தாள்” என்றெழுதுகிறார் ஜெயமோகன். மாதவியின் வழியாகத்தான் கோவலன்
தந்தையாகிறான். மணிமேகலையைக் கண்ணகியின் மகள் என்றே மாதவி சொல்கிறாள். கணிகையர் குலத்தின்
மாசறும் பொருட்டு அவ்வாறு கூறினாள் என்று விளக்கம் செய்யப்படுவதுண்டு. அதைவிட ஆழமான
உளவியற் காரணங்கள் இருக்க வேண்டும். மாதவியில் கண்ணகியே உருவகித்து அடையத் தவித்திருக்கிறான்
கோவலன் என்று நோக்குகையில் உடலால் தனது மகளான மணிமேகலையை ஆத்மாவால் கண்ணகியின் மகள்
என்றே மாதவி கருதினாள் என்று விளங்கலாம்.
கண்ணகி
ஒரு குறியீடு. அப்படியானால் அவள் நிஜமான மனிதப் பெண் இல்லையா என்று கேட்கவேண்டாம்.
மண்ணில் வாழ்ந்த மனிதப் பிறவியாகவே அவள் ஒரு குறியீடும் ஆவாள். ஒவ்வொரு பெண்ணின் அகமும்
ஒரு குறியீடுதான். கண்ணகி தொல் தமிழ் மரபின் தாய்த்தெய்வ வழிபாட்டுக் குறியீடாகவே வளர்ந்தவள்.
அவளது அகத்தின் பரிமாணம் சாலப் பெரிது. ”கொற்றவை” நாவல் முழுவதிலும் பெண்மை ஒரு கடல்
என்று உருவகிக்கப் படுகிறது. கடலின் ஆழத்தை அஞ்சுவது போல் பெண்மையின் ஆழத்தை ஆண் அஞ்சுகிறான்.
அவ்வாழத்தில் ஒளிரும் முத்துக்களின் மீது மாளாத ஆசையும் அவனுக்கு உண்டு. “அன்னையாய்
தங்கையாய் காதலியாய் மனையாட்டியாய் மகளாய் நம்மைச் சூழ்ந்து புரக்கும் பேரருளே பெண்மை”
என்று பாண்டியன் நெடுஞ்செழியனிடம் உரைக்கிறார் அமைச்சர் பெருஞ்சாத்தனார்.
“மண்ணில்
கொந்தளிக்கும் வாழ்க்கை அழியும். குன்றுகளாக நிலைத்த அலைமுகடுகள் சரியும். ஆழியோ அழியாதது.
ஆழமோ என்றுமுள்ளது. ஆழத்திற்கு மனிதக்கண் கொடுத்த வடிவம் அன்னை” (கொற்றவை, ப.522) என்றெழுதுகிறார்
ஜெயமோகன். கண்ணகியைக் கன்னி என்றும் அன்னை என்றும் இரு வடிவங்களாகக் காப்பியம் காட்டுகிறது.
வஞ்சித்துறைமீது படையெடுத்து வரும் டச்சுக் கப்பற்தலைவன் வான்கோஸ் கொடுங்கோளூர் மாமங்கலப்
பேராலயத்துளுள்ள அன்னைச் சிலையை ஒருகணம் மேரி மாதாவின் பேருருவமாகக் கண்டு பீதியடைகிறான்.
மேரி மாதா – மர்யம் – ஏசுநாதரின் அன்னை – கன்னித்தாய்! ஏனைய உறவுநிலைகளைவிடவும் பெண்மையின்
வடிவங்களில் ஓர் ஆணுக்கு வாழ்வின் பெருந்தாக்கமாய் நிற்பன இவ்விரு வடிவங்களே – தாயும்
கன்னியும். மனையாளாகி வரும் கன்னியை அவன் கலந்து தாயாக்குகிறான். அவனே ஒரு தாயின் கருவறையில்
உருவாகி வந்தவன்தான். இந்த இரண்டு நிலைகளில் பெண் அவனை எப்போதும் அசைத்துக்கொண்டே இருக்கிறாள்.
இடையீடாக
இங்கே ஒரு சிந்தனையைச் சொல்கிறேன். ‘தி ஃபால்ட் இன் அவ்ர் ஸ்டார்ஸ்’ நாவல் மேற்குலகில்
இளம் வாலிபர்களுக்கான – யங் அடல்ட்ஸ் – நாவலாகவே வெளிவந்தது. அதன் தலைவன் தலைவி இருவரின்
வயது பதினாறு. இருவருமே இருவேறு வகையிலான புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவ்வாறு
பெரும்பிணியால் தாக்குற்று மரணத்தை விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதின்பருவத்து
இளைஞர்கள் சிலர் ஒரு தேவாலயத்தில் வாரமொரு முறை சந்தித்துத் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு
பிரார்த்தனையும் செய்கிறார்கள். இப்படித்தான் அதன் கதை ஆரம்பமாகிறது. ஒருநாள், பிரார்த்தனைக்குப்
பின் தேவாலயத்தின் வெளியே நண்பன் அகஸ்டஸுடன், தன்னை அழைக்க வரும் அம்மாவுக்காக ஹேஸல்
காத்த்திருக்கிறாள். குழுவில் உள்ள மோனிகாவும் ஐஸக்கும் காதலர்கள். அவ்விளம் இணை தேவாலயத்தின்
சுவரில் சாய்ந்தபடி முத்தமார்ந்து களித்திருக்கிறது. அப்போது ஐஸக்கின் கை மோனிகாவின்
மீது படர்ந்தபடி அவளின் முலையை அழுத்துவதை ஹேஸல் பார்க்கிறாள். “I think he’s hurting
her boob” என்று அகஸ்டஸிடம் கூறுகிறாள். 313 பக்க நாவலின் 19-ஆம் பக்கத்திலேயே இப்படியொரு
சித்தரிப்பைப் படித்ததும் பதறிவிட்டேன். இதைத்தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பதின்பருவத்தினர்
படித்துக்கொண்டிருக்கிறார்களா? நாவலை இருநூறு பக்கங்கள் வரை படித்தபோதும் அபத்தமான
– பக்குவமற்ற ஒன்றாகவே தோன்றியது. சில்லியாக இருக்கிறது என்று வாட்ஸ்-அப்பில் சென்னைச்
சகோதரனுக்கு பின்னூட்டம் அனுப்பினேன். ஆனால் அது ‘ரிவெட்டிங்’-ஆன கதை என்று அவன் எனக்குச்
சொல்லியிருந்தான். புதினத்தின் இறுதி ஐம்பது பக்கங்களில் அந்த ரிவெட்டிங் தன்மை இருந்தது.
மனதைப் பிழிந்தது. அதை நான் தெரிவித்தபோது திரைப்படம் பார்த்துவிட்டுத் தான் அழுததாகச்
சொன்னான். இதுதான் இலக்கியத்தின் பணி. மதம் தேசம் பண்பாடுகள் என்ற எல்லா எல்லைகளையும்
தாண்டி மனிதத்தை தரிசிக்கவும் புரிந்துகொள்ளவும்தான் இலக்கியம் தேவைப்படுகிறது.
அகஸ்டஸுடன்
ஹேஸல் பழக ஆரம்பித்து அவனுடன் சேர்ந்து அவுட்டிங் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் அவளிடம்
அவளது அம்மா சொல்கிறார்: “இப்போதெல்லாம் நீ மிகவும் டீனேஜாக மாறிவிட்டாய்”. “இதைத்தானே நீங்கள் ஆசைப்பட்டீர்கள், நான் டீனேஜ்
பெண்களைப் போல் ஆகவேண்டும் என்று?” எனக் கேட்கிறாள் ஹேஸல். “ம்ம்ம். இந்த மாதிரியான
டீனேஜ் இல்லை. ஆனால், நீயொரு இளம் பெண்ணாகிவிட்டாய், நண்பர்களைத் தேடிப் பிடித்திருக்கிறாய்,
டேட்டிங் செல்கிறாய் என்பது பற்றி நானும் உன் அப்பாவும் சந்தோஷப்படுகிறோம்” என்கிறாள்
அவளின் அம்மா. இதுபோன்ற காட்சிகள் இந்தியச் சூழலில் நமக்கு விசித்திரமாக இருக்கலாம்.
ஒரு நல்ல அம்மாவாக அவரை நாம் மதிப்பிட மாட்டோம். ஆனால் அங்கே இலக்கணம் வேறாகத் தெரிகிறது.
ஹேஸல் தனது ஆதர்சமான எழுத்தாளர் பீட்டர் வான் ஹூட்டனைச் சந்திக்க ஆசைப்படுகிறாள். அவர்
ஆம்ஸ்டர்டாமில் இருக்கிறார். தனது தாயுடனும் இளம் காதலனாகிய அகஸ்டஸுடனும் அவள் ஆம்ஸ்டர்டாம்
செல்கிறாள். அங்கே அகஸ்டஸும் ஹேஸலும் மெய்யுறு புணர்ச்சி கொள்கிறார்கள். இதை அறிந்தும்,
தன் மகள் வாழ்வின் இன்பத்தை நுகர்ந்தாள் என்றே அந்த அம்மா மகிழ்ச்சி அடைவதாக ஜான் க்ரீன்
எழுதிச் செல்வதை நம் பண்பாட்டின் எல்லைக்கு அப்பால் நீளும் பார்வையைக் கொண்டுதான் புரிந்துகொள்ள
இயலும். எனினும், இது சங்கத் தமிழ் சொன்ன களவியலின் பாற்படும் அல்லவா? சங்க காலத்துத்
தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை இக்காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய இலக்கியங்களில்தான் காணமுடியும்
போலும்!
மரணம்
கண்முன் நிற்கும் நிலையில் இளம்பருவத்து ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் என்பது வாழ்வு
மற்றும் மரணம் குறித்த அவர்களது அகத் தேடலில் எழும் கேள்விகளின் அலையடிப்பினூடாக நகர்ந்து
செல்கின்றபோது உருக்கொள்ளும் மனோபாவம் என்பது முற்றிலும் வேறு என்பதைத்தான் இந்நாவலை
வாசிக்கையில் உணர்ந்துகொண்டேன். அதிலும் குறிப்பாக, இவ்வுலக வாழ்வு கோரும் அனைத்து
பருவசதிகளும் நிறைந்துள்ள ‘affluent’-ஆன பெருவளம் மிக்க குடும்பத்திற் பிறந்தவொரு பதின்வயது
நபரின் மீது சட்டென்று நோயுருவில் மரணத்தின் நிழல் கவியும்போது எப்படியிருக்கும்? என்பதை
இந்நாவலின்வழி அறிகிறோம்.
மோனிகா-ஐஸக்
இணை முத்தமாடும் காட்சியில் அவனின் அங்கை அவளின் நெஞ்சின் மீது படர்ந்ததை வாசிக்கையில்
அக்கன்னியில் அன்னையைத் தேடும் மதலையாகவே அவனின் செயற்பாடு தோன்றிற்று. கன்னி – அன்னை
என்னும் இருநிலைகளே ஓர் ஆணின் மேல் பெண்மையின் அழுத்தமான தாக்கத்தைச் செலுத்துகிறது
என்று மேலே சொன்னேன் அல்லவா? இந்நூலில் அக்காட்சியைப் படிக்கையில், இருபத்து மூன்று
ஆண்டுகட்கு முன்பு ஓஷோ தந்ததொரு அவதானத்தை நினைவுகூர்ந்தேன். அவரது மிகப் பிரபலமானதும்,
புரிதலின்மையால் அவருக்குப் பெரிதும் அவப்பெயர் ஈட்டித் தந்ததுமான நூலில் அதனைப் படித்திருந்தேன்.
“காமத்திலிருந்து கடவுளுக்கு” என்னும் அந்நூலை தாடி நரைத்த முதியவர் ஒருவர் எனக்குப்
பரிந்துரைத்து வாங்கினேன். தமிழில் அந்நூலை ஓஷோ தர்மதீர்த்தா சந்யாஸ் ஆஸ்ரமம் வெளியிட்டிருந்தது.
ஓஷோவின் நேரடிச் சீடரான ஸ்வாமி மோகன் பாரதி அவர்கள் திருச்சியிலிருக்கிறார். அவர் தலைமையிலான
சீடர் குழு ஒன்று அதனைத் தமிழாக்கம் செய்திருந்தார்கள் என்று நினைவு. இரவல் வாங்கிய
யாரோ அமுக்கியதால் என் நூலகத்திலிருந்து தொலைந்து போய்விட்டது. இப்போது அதன் ஆங்கிலப்
பிரதியான “From Sex to Superconsciousness” என்னும் நூலினை வாங்கியிருக்கிறேன்.
1968-ல் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் குவாலியர் குளத்திடலில்
ஓஷோ ஹிந்தியில் நிகழ்த்திய ஐந்து உரைகளின் மொழிபெயர்ப்பு இந்நூல். அரைநூற்றாண்டாகிவிட்டது!
அந்நூலில்
ஓஷோ சொல்கிறார்: “இக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் திரளாக அமர்ந்திருக்கிறீர்கள்.
இங்கேயுள்ள ஆண்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், அவர்கள் தமது மனைவியருடன் முழுமையான
காதலுணர்வில் இருக்கும்போது சிறு பிள்ளைகள் தமது தாயருடன் நடந்துகொள்வது போல் இயங்குவதில்லையா?
ஓர் ஆணின் கை அனிச்சையாக பெண்ணின் முலையகம் நோக்கிச் செல்வது ஏனென்று நீங்கல் அறிவீர்களா?
அது, தனது அம்மாவின் முலை நோக்கி நகரும் ஒரு குழந்தையின் கரமே! பெண்ணின் மீதான காதல்
ஓர் ஆணில் மிகைத்த அக்கணமே அவனது கை தானாகவே அவளது முலை நோக்கிப் போகிறது. ஏன்? முலைகளுக்குக்
காதலுடன் என்ன தொடர்பு? உண்மையான தொடர்பு எதுவுமே இல்லை. ஆனால், ஒரு குழந்தைக்குத்
தனது தாயின் முலைகளுடன் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. முலைகளுடனான தனது தொடர்பே உயிர்ச்சரடு
என்று அதன் ஆழ்மனத்தில் அதன் குழவிப் பருவத்திலிருந்தே உணர்ந்திருக்கிறது. ஒரு ஆணில்
ஆழமான காதல் பொங்கிப் பாயும்போது அவன் பிள்ளையாகிவிடுகிறான்!” (பக்.108-109).
இன்னும்
பற்பல அவதானங்களை இவ்வுரைகளில் ஓஷோ முன்வைக்கிறார். அவை அனைத்தையும் நம்மால் ஏற்கவியலுகிறதா
என்பதெல்லாம் வேறு பிரச்சனை. ஆனால் காமம் குறித்த, இக்காலத்திற்குத் தேவையான அக விழிப்பினை
இந்நூல் நிச்சயமாகத் தருகிறது. காமம் குறித்த சரியான தெளிவான புரிதலைப் பெற்றோர்கள்
தமது பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும். சரியான பாலியல் கல்வியைப் பெற்றோர்களே முதலில்
பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். இல்லை எனில் தவறான மூலங்களிலிருந்து தவறான புரிதல்களை
அவர்கள் பெறுவார்கள். அதனால் அவர்களின் எதிர்காலமே நாசமாகிவிடும் சாத்தியமுண்டு என்று
ஓஷோ எச்சரிக்கிறார். ஓர் அற்புதமான தீர்வும் இதில் அவர் தருகிறார். பாலியற் சக்தி உடலில்
மெல்ல மெல்லத் திரண்டு பதின்பருவத்தில்தான் அது உடலில் தனக்கான வாசலைத் திறக்கிறது.
அதற்கு முன்னமே தியானத்தின் வாசலைப் பிள்ளைகளில் திறக்கச் செய்ய வேண்டும். காமத்தின்
வாசல் திறக்கும் முன்பே தியானத்தின் வாசலைத் திறப்பீறாக! இல்லை எனில் இயற்கை வழங்கும்
அந்த அற்புதமான சக்தி தவறான வழிகளிலேயே விரயமாகும். பாலியற் சக்தியை விரயம் பண்ணும்
ஒருவனிடமிருந்து வலிமை மிக்க சந்ததி உருவாகி வராது. எனவே தியானத்தைப் பழக்கி அவ்வாற்றலை
நெறிப்படுத்துவது மிகவும் அவசியம் என்று ஓஷோ கூறுகிறார்.
பிள்ளைகள்
நம்மை ஏய்த்து வளர்ந்துவிடுபவர்கள். தம்மையுமேகூட. நம் பெற்றோர் நம்மை ஏதுமறியாக் குழந்தைகள் என்றெண்ணியிருந்த
நாட்களில் நாமும் அப்படித்தான் மனம் முதிர்ந்து நமக்கேயான உலகைப் படைத்துக்கொண்டு சட்டென்று
வளர்ந்து நின்றோம். வேற்றுலகினர் போல் அவர்கள் முன் ஓர் அதிகாலையில் காட்சி நல்கினோம்.
நம் பிள்ளைகளும் அப்படியே வளர்வார்கள். இதோ, அறிவியல் வரலாறு கணிதம் என்று அவர்கள்
பயிலும் பாடங்களில் அவர்கள் வயதில் நாம் கேட்டறியாத பல கோட்பாடுகளைப் பயில்கிறார்கள்.
ஜோஸ்டின்
கார்டர் எழுதிய “Sophie’s World” என்னும் புதினத்தை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அக்கதையின் முதன்மை நபரான சோஃபிக்கு வயது பதினான்கு. அவளுக்கு ஒரு மறைவான நபர் உலகத்
தத்துவங்களைக் கற்பிப்பதே இந்நூலின் கதை. சாக்ரடீஸுக்கு முந்தைய கிரேக்க ஞானிகள் தொடங்கி
சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், இந்திய வேதாந்தம், ரொமாண்டிசிஸம், மத்தியக் காலத்
தத்துவங்கள், ஸ்பினோஸா, ஹ்யூம், பெர்க்லி, ஹெல்லனிசம், ஹெகல், கீர்க்கெகார்டு, டார்வின்,
சிக்மண்ட் ஃப்ராய்டு, கார்ல் மார்க்ஸ் வழியாகத் தற்கால நவீனத் தத்துவங்கள் வரை அவள்
பயில்கிறாள். இவ்வளவு தத்துவ நெறிகளை விளங்கும் ஆற்றல் ஒரு பதினான்கு வயதினளுக்கு இருக்கிறது
என்கிறது இந்நாவல்!
மூளையின்
வளர்ச்சி என்பது ஒரு கோணத்தில் மட்டும் அமைவதன்று. வெளியேயிருந்து புகட்டப்படும் தகவலறிவிலேயே
நம்மைத் தாண்டிச் செல்லுமவர்கள், உள்ளிருந்தெழும் அறிதலில் நம்மைவிடவும் மக்குகளாக
இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை அல்லவா? அது இயற்கையில் விழிக்கும் அறிவு அல்லவா?
வானவர் கோன் ஜிப்ரீல் வந்து ’நினக்கொரு குழந்தை உண்டாகும்’ என்று நற்செய்தி நவின்றபோது
“எந்த ஆணும் என்னைத் தீண்டாத நிலையில் எப்படிக் குழந்தை உண்டாகும்?” என்றே கன்னி மர்யம்
அவர்கள் வினவியதாகக் குர்ஆன் சொல்கிறது (அத்தியாயம்19:திருவசனம்20). பெண்ணை ஆண் தீண்டுவது
என்பதென்ன என்று பன்னிரு பிராய இளங்கன்னி எப்படி அறிந்தார்? அது அவ்வயதில் இயல்பாக
அகத்தில் விழிக்கும் அறிவு என்றே ஞானியர் கூறுகின்றனர். அஃது இறைவன் வகுத்த நெறி.
கண்ணகி
என்னும் கன்னியின் உடலுள் கடலின் ஆழமான அன்னையின் அகம் மறைந்திருந்து மெல்ல மெல்ல வெளிப்பட்ட
கதையாகச் சிலப்பதிகாரத்தை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன் என்று முன்னம் சொன்னேன்.
கற்பின் செல்வி என்று போற்றப்பட்டவள் கண்ணகி. சம்பவாமி யுகே யுகே என்று கீதையில் கிருஷ்ணன்
சொல்வதைப் போல், “அறம் அவிந்து மறம் தழைக்கும்போதெல்லாம் பேரன்னை நுண்ணுருக்கொண்டு
ஒரு பெண்ணுடலில் ஏறி வெளிவருகிறாள்” என்று ஜெயமோகன் எழுதுகிறார். இறைமையைப் பெண்ணென
உருவகித்துக்கொள்ளும் சாக்த மரபின் பல்வேறு உருவக வடிவங்களுண்டு. அவற்றை வியந்து வழிபடுவோரின்
நிலைகள் ஒற்றைத் தன்மை கொண்டன அல்ல. காமச் செய்கையே வழிபாடு என்று வரையறுத்து வைக்கப்பட்ட
மரபுத் தொடர்களும் அவற்றிலுண்டு. உலகெங்கும் வளத் தொன்மங்கள் (Fertility Myths) உருவாகிய
இடங்களிலெல்லாம் காமச் சடங்குகளும் (Sex Rituals) நிகழ்ந்துள்ளதை மானுடவியல் ஆய்வுகள்
பதிவு செய்துள்ளன. தொல் தமிழகத்தில் அத்தகு சூழல் இருந்ததாகக் ”கொற்றவை” நாவல் நுவல்கிறது:
“அன்னைக்குப்
படைத்த ஊனும் கள்ளும் உண்டு மக்கள் வெயிலில் அலைந்து பித்தேறினர். கடையர் மக்கள் வசைகளும்
நகையாட்டும் கூவிச் சிரித்தனர். முழவும் முரசும் பறையும் எழுப்பிய தாளத்தில் நரம்புகள்
அதிர நடனமிட்டனர். ஆணும் பெண்ணும் கூடிக் களித்து முயங்கி வீழ்ந்து துயின்று பின் எழுந்து
மீண்டும் ஊனும் கள்ளும் உண்டு ஆடி மீண்டும் விழுந்து முயங்கித் தளர்ந்து துயின்று எழுந்தனர்.
விழித்த கருங்கண்களும் நா தொங்கத் திறந்த உதிரவாயுமாக அன்னை அவர்கள் நடுவே வீற்றிருந்தாள்.
“பலிக்கல்போல
வெய்யோன் சிவக்க சூழ்ந்த மண்போல முகில் சிவக்க பகல் எரிந்தடங்கியது. இருளில் பந்தங்கள்
செந்நாக்குகள் சூடிச் சுழன்றாடின. செவ்வொளியில் உண்டும் குடித்தும் களிகொண்டும் காமம்
நுகர்ந்தும் கூத்தாடியது கூட்டம். ஆயிரம் நாக்கொண்ட அரவர்கோனும் அறைந்திட முடியாத அன்னையின்
அல்குலின் அணையாப் பெருங்காமத்தைப் பற்றிய குடிப்பாடல்களைப் பாடிக் களிநடனமிட்டனர்
புலையர். விண்ணகக் கோள்களும் மண்ணக உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து சேரும்
அணையா வேள்விக்குழி அது” (பக்கம்:569).
புதினத்தின்
இறுதியில், இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், தனது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்குச்
செல்கிறார் எழுத்தாளர். கருவறையிலிருக்கும் கன்னியாகுமரியின் சிலையைப் பார்க்கின்றார்.
“கனிந்த கண்களும் குறும்புநகையும் கொண்டவள். தாயும் தோழியும் ஒன்றாகக் கலந்தவள்” (ப.595).
தனது பதின்பருவத்து மகளையும் நோக்குகிறார். அவ்விளம் கன்னியின் அகத்தினுள் அன்னையின்
ஆழம் மெல்ல விழிப்பதை ஓர்கின்ற தந்தையாகிறார். “மகளை நோக்கினான். அக்கண்களும் கன்னக்
கதுப்பும் குறுமயிர்நிரையும் கழுத்தில் சிறுசெம்மணிமாலையும் என அவள் அவன் கைகளில் பிறந்து
விழுந்து தவழ்ந்தெழுந்து வளர்ந்த குழந்தையென ஒருகணமும் அறியவே முடியாத எவளோ என மறுகணமும்
தோன்றினாள்” (ப.595).
அ.முத்துலிங்கத்தின்
‘வடக்கு வீதி’ கதையை வகுப்பில் அலசியதைச் சொல்ல ஆரம்பித்து எங்கோ வந்திருக்கிறோம்.
அப்போது இன்னொரு கோணத்தையும் தொட்டுப் பேசினேன். இளம் பெண்ணை வயதான ஆண் மணப்பது பற்றிய
பேச்செழும்போதெல்லாம் நபிகள் நாயகத்தின் திருமணம் குறித்த பேச்சும் எழாமலிராது. நபிகள்
நாயகத்தின் திருமணங்களில் இரண்டு திருமணங்கள் மிக முக்கியமானது. அவ்விரண்டுமே சராசரி
நிலையிலிருந்து மாறுபட்டவைதாம். முதற்திருமணம் நிகழ்ந்தபோது நபிகள் நாயகத்தின் வயது
இருபத்தைந்து. ஏற்கனவே இரண்டு முறை விதவை ஆகி நின்ற ஃகதீஜா என்னும் நாற்பது வயதுப்
பெண்ணை அவர் மணந்தார். பால்ய காலத்திலேயே அன்னையை இழந்த நபிகளாருக்கு அவரை விடப் பதினைந்து
வயது மூத்த பெண்ணின் அரவணைப்பில் அன்னையின் வாத்சல்ய நிறைவு கிடைத்திருக்கும் என்று
உளவியலாளர் இயம்புவர். எனில், ஐம்பத்திரண்டாம் அகவையில் தனது நெருங்கிய நண்பரான அபூபக்கர்
அவர்களின் மகளான ஒன்பது வயது ஆயிஷாவைத் திருமணம் முடித்தார்கள் என்பதை உளவியல் என்னனம்
நோக்கும்? இத்திருமண உறவையே நபிகள் நாயகத்தை வசைவோர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு
அவர்களது ஆளுமையைக் கறைப்படுத்த முனைகின்றனர். அவர்களைப் பாலியற் குற்றவாளி என்பதாகவும்
‘பீடோஃபில்’ என்பதாகவுமெல்லாம் வசைந்துரைக்கும் இணையத் தளங்கள் உள. ஆறு வயதுப் பெண்ணுடன்
உடலுறவு கொண்டார் என்றெல்லாம் கூசாது எழுதுகிறார்கள். அத்திருமணத்தின் போது ஆயிஷாவின்
அகவை என்ன என்பது பற்றி அறுதியிட்டுக் கூற முடியாத நிலை உள்ளது. நபிமொழி ஆய்வில் நான்
வாசித்த வரையில், ஆயிஷாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது திருமணச் சடங்கு நிறைவேற்றப்பட்டு
அவர் ருது ஆகாத சிறுமியாக இருந்ததால் பெற்றோருடனேயே இருந்தார். பதினான்கு வயதானபோது
அவரது தந்தையான அபூபக்கரே நபிகள் நாயகத்திடம் பேசித் தனது மகளைப் புக்ககம் ஏற்கச் செய்து
இல்லற வாழ்வு தொடங்கிற்று. அப்போதுதான் தாம்பத்ய உறவும் நிகழ்ந்தது.
ஒரு குறிப்பிட்ட
மதத்தை அதன் எதிரிகள் வசையவும் அசதியாடவும் கறைப்படுத்தவும் பாலியற் சார்ந்த புள்ளிகளையே
தேர்வது அறிவிற் கடைஞரின் இயல்புதான். கிருஷ்ண ஜெயந்தியின் போது முகநூலில் வந்த சில
இடுகைகள் மிகவும் நோக வைத்தன. கிருஷ்ணனை ஸ்த்ரீ லோலன் என்னும்படிக்கு அவை குற்றஞ்சாட்டின.
கிருஷ்ணனின் காதலாடல்கள் இந்து மதத்தில் மறைவானவை அல்ல. கிருஷ்ணன் உண்மையாக வாழ்ந்த
மனிதன் என்றே நான் நம்புகிறேன். அவனைப் பற்றிய சித்தரிப்புக்கள் ஜெயதேவர், வேதவியாசர்
போன்றோரால் புனையப்பட்ட ஆன்மிகக் குறியீடுகள் என்பதாகச் சொல்லும் வாதத்தரப்புமுண்டு.
அதேபோல், ஏக நேரத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி என்னும் பாஞ்சாலி பற்றியும்
கீழ்த்தரமாக விமர்சிப்போருமுண்டு. அவளோர் ஆன்மிகக் குறியீடு என்று விளக்குவோருமுண்டு.
அன்னை
என்னும் உருவகமே கன்னி என்னும் உருவகமாகவும் மாறி பாவிக்கப்படுவதுண்டு. யோக நெறியில்
சொல்லப்படும் குண்டலினி என்னும் சக்தி பெண்ணாக உருவகிக்கப்படுகிறது. அதற்கு வாலை என்றொரு
பெயருண்டு. தசநாடிகளில் ஊறிவரும் ஆற்றல் என்பதால் அதனைப் பத்து வயதுக் கன்னி என்றுரைப்பர்.
“வாலைக் குமரியடி – மருவக் காதல் கொண்டேன்” என்று பாரதியார் பாடினார். குணங்குடி மஸ்தான்
சாகிபு பாடிய மனோன்மணி என்பதும் அந்த யோக சக்தியின் பெண்ணுருவகமே.
கிருஷ்ணன்
குறித்த சித்தரிப்புக்களில் ஆன்மிகக் குறியீட்டு மதிப்புக்கள் இருந்தபோதிலும், அவை
உண்மையாகவே நிகழ்ந்தவை என்று கொண்டாலும்கூட கிருஷ்ணன் என்னும் பேராளுமையின் மீது விமர்சனம்
வைக்குமளவு சராசரி மனித அறிவுக்குத் தகுதிப்பாடு இல்லை என்பதே எனது புரிதல். திரௌபதி
பற்றியும் எனது புரிதல் அப்படியே. நபிகள் நாயகம் குறித்தும் அதுவே எனது நிலைப்பாடு.
இறைத்தூதர்கள், இறை ஞானியர் ஆகியோரின் நிலைகள் சராசரி மனித நிலையிலிருந்து மிக மேலானதொரு
தளத்தில் இயங்குபவை. அவற்றை மதிப்பிடும் அளவுகோல்கள் சராசரி மானுடத்தின் கைகளில் இல்லை
என்பதறிக.
மனித மனத்தின் விகாசங்கள் வியப்பூட்டுபவை. விரல் விட்டு எண்ணி வகைப்படுத்திக்கொள்ள
முடியாதபடிக்கு அவை எண்ணிறந்தன. சூஃபித்துவத்தில் ஒரு சொலவடையுண்டு: “மனிதர்களின் மூச்சுக்கள்
எத்தனையோ இறைவனை அடையும் வழிகள் அத்தனையுள்ளன”! மனித மனவியல் என்பது கோடானு கோடித்
துலங்காத் தடங்கள் ஊடும் பாவுமாய்ப் பின்னிக்கிடக்குமொரு பெருங்காடு. இலக்கியங்களும்
இதர கலைகளும் அதனுள் பயணித்துப் பாதை கண்டு வந்து விண்டுரைக்க முயல்வன. ஒவ்வொரு கலைப்படைப்பும்
அதனுள் ஒருவன் கண்ட ஒற்றைப் பாதையின் வரைபடம் மாத்திரமே. அதைப் பிடித்துக்கொண்டு நீங்கள்
மீண்டும் காட்டினுள் நுழையும்போது அடையாளமே தெரியாது அக்காடு மாறியிருக்கும்.
என் மகள் ருதுவானபோது ஒரு சிறு கவிமின்னல் என் உளத்தில் சுடர்விட்டது.
“மகளே! உன் வயதின் பெண்களையெல்லாம் எனக்கு மகளாக்கி விட்டாய் நீ” என்று சொல்லிக்கொண்டேன்.
அத்தருணத்தின் அகவெழுச்சியாக அவ்வுணர்வு இருந்தது. அதன் பிரகாசம் மங்கிவிடாமல் அகத்தின்
விசும்பில் தொடர்ந்து வருகின்றது.
இலக்கியத்திலிருந்து என் ஆன்மிகத்திற்கான பயிற்சிகளை நான் நிகழ்த்திக்
கொள்வதுண்டு. சரியான முறையில் கையாளப்படும்போது ஆன்மிகத்திற்கு இலக்கியத்தின் பங்களிப்பு
என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாயிருத்தல் கூடும். ஓர் இலக்கிய வாசகனாக, கவிஞனாக,
மனத்தைப் பல்வேறு உருவகிப்புக்களில் செலுத்த இயலுபவனாக என்னை நான் கண்டுகொண்டு கால்
நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இலக்கியங்கள், திரைப்படம், ஓவியம் என்றான பல்வேறு
கலை வடிவங்களின் வழியே எனக்கு எத்தனையோ வாழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. தன் கற்பனையின்
வழியே ஓர் இளங்குமரன் காதலனாகவும் கணவனாகவும் பாவனை கொள்ளும் பருவத்திலேயே தந்தையாகவும்
பாவித்துக் கொண்டவன் நான்.
லியோன் திரைப்படத்தில் தோன்றிய மாட்டில்டாவை எனது மகளான பாவனையிலேயே
நோக்க முடிந்தது. அப்பாத்திரத்தில் தோன்றிய நடாலி போர்ட்மேன் ஒரு யுவதியாக வளர்ந்தபின்
நடித்த ப்ளாக் ஸ்வான் மற்றும் கோயாஸ் கோஸ்ட்ஸ் ஆகிய திரைப்படங்களைப் பார்த்தபோதும்
ஒரு முதிர்ந்த தந்தை தனது மகளைக் காணும் தத்தளிப்பாகவே மனநிலை நீண்டது. நண்பர்களே!
மனித மனத்தின் விகாசங்கள் வியப்பூட்டுபவை.
No comments:
Post a Comment