Tuesday, October 8, 2013

ரூமியின் வைரங்கள் - part 9



காதல் மதுவின்
போதையில் கனிந்து
தன்னை இழந்து
இனிமை நிறைந்துள்ள தலைவன்...

‘எனக்குத் தருவீரா
உங்கள் இனிமையில் கொஞ்சம்?’

‘ஏதுமில்லையே என்னிடம்’ என்கிறார்
தன் செழிப்பை அறியாதவராய்
*

ஆசைகளின் கூச்சலில் செவிடாகி
அறியாதிருக்கிறாய்...
இதயத்தின் உள்ளே
இருக்கிறான் காதலன்!
இரைச்சலை நிறுத்து
மௌனத்தில் கேடாபாய்
அவன் குரல்
*


உன் பெயரை உச்சரித்தல்
உன்னைக் காண உதவுவதில்லை

உன் முகத்தின் ஒளயில்
என் கண்கள் கூசி இருள்கின்றன

உன் உதடுகளுக்கான ஏக்கம்
அவற்றை அழைத்து வருவதில்லை அருகில்

என்னை விட்டும் உன்னைத் திரையிடுவது
உன்னைப் பற்றிய என் நினைவே!
*


இந்தக் காதல் ஒரு பேரரசன்
ஆனால், அதன் கொடி மறைந்துள்ளது

சத்தியத்தைப் பேசுகிறது குர்ஆன்
ஆனால், அதன் அற்புதம் மறைந்துள்ளது

ஒவ்வொரு காதலனின் உள்ளத்தையும்
காதல் தன் அம்பால் துளைத்துள்ளது

ரத்தம் வழிந்தோடுகிறது
ஆனால், காயம் மறைந்துள்ளது!
*

இரவிடம் நான் சொன்னேன்:
“நெடுநேரம் இங்கு இருப்பதில்லை நீ
அதனால்தான் நிலவைக் காதலிக்கின்றாய்”

இரவு என்னை நோக்கிச் சொன்னது:
“அது என் தவறல்ல
சூரியனை ஒருபோதும் பார்ப்பதில்லை நான்
எல்லையற்ற காதலை எப்படி அறிவேன்?”
*

இருப்பதா அல்லது இல்லாமல் போவதா
என்பதல்ல என் குழப்பம்

ஈருலகம் விட்டுத் தப்பித்தல்
அது ஒன்றும் வீரம் அல்ல

என்னுள் இருக்கும் அற்புதங்களை
அறியாதிருக்கிறேன்
என்பதுதான்
உண்மையில் பைத்தியக்காரத்தனம்!
*

உன் பாதங்களைப் பற்றியிருக்கிறேன்
உன் கைகளை எட்டமுடியவில்லை என்னால்

யாரிடம் திரும்புவேன் நான்,
உன் காதல் மட்டுமே என் தேவை எனும்போது?

என்னைப் பகடி செய்கிறாய் நீ:
“உன் விழிகளில் கண்ணீர் இல்லையே?”

உடைகிறது என் உள்ளம்...
என் இமைகளில் ஒளிரும் துளிகள்
உனக்குத் தெரியவே இல்லையா?
*


நண்பனே!
உன் பேரன்பால் என்னைச் செய்து
ரத்தமும் சதையும் ஆன
ஆடை ஒன்றை அணிவித்தாய்

பிறகு உன் இதயத்தில் இருந்து
விதையொன்றை என்னுள் புதைத்தாய்

நீ மட்டுமே இருக்கின்றாய் என்னும்
புனித இடமாக்கினாய்
இந்தப் பிரபஞ்சத்தை
*

ஒரு முத்தம் கேட்டேன்
ஆறு தந்தாய்

எங்கிருந்து கற்றாய்
இந்தக் கலைத்திறன்?

கனிவும் தாராளமும் நிறைந்து...
இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல நீ!
*


தொழுகையில் தரையைத்
தொடுகின்ற போது
உன்னை அன்றி
என் இலக்கு
வேறெதுவும் இல்லை

தோட்டங்கள் பூக்கள் பறவைகள்
ஆனந்த நடனம் என்று
நான் பேசுபவை எல்லாம்
சாக்கு போக்குகள் மட்டுமே
*

நண்பனை நான் காணும்போது
என் பார்வையில் திருப்தி ஆகிறேன்

ஆனால்
காட்சியும் நண்பனும்
இரண்டாக இருக்க இயலாது

அவன்தான் பார்க்கிறான்
என் கண்களால்!
*

உன்னைப் பற்றிக் கதைத்திருந்தேன்
என்னை மௌனம் ஆக்கினாய்

உன் இனிமையைச் சுவைத்தேன்
எல்லாம் நின்றுவிட்டது

பரவத்தில் ஓடினேன்
என் இதயத்தின் வீட்டிற்குள்

அங்கே,
என்னைப் பிடித்துக்கொண்டாய் நீ!
*


தீயினால் மட்டும் ஆவதல்ல சூடு

என் கதவின் வழியே
சட்டென்று நீ நடக்கும்போது
கதகதப்பை உணர்கின்றேன்

வருவதாய்ச் சொல்லி நீ
வாராமல் போகையில்
சில்லிட்டு உறைகின்றேன்

பனியினால் மட்டும் ஆவதல்ல குளிர்!
*

தாகித்த இதயமாய் இரு
ஓய்வின்றித் தேடு

உன்னுள் ஆழத்தில் மறைந்திருக்கும்
சப்தமற்ற இந்த ஏக்கமே
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
மூல ஊற்றாக இருக்கட்டும்
*

கனவுகளில் கவனம் கலைந்தவனாய்
நண்பனின் மீது மோதிக்கொண்டாய்

அவனின் இருப்பினை உணர்ந்து
உன் பாதையில் உறைந்துவிட்டாய்

நேருக்கு நேராய் அவனைக் காணும்
வலிமை உன்னிடம் இல்லை எனில்
காதலின் குடிகாரர் கூட்டத்தை
ஏன் தேடுகிறாய் நீ?
*

நண்பனே!
என் வாழ்க்கை உனக்கு அர்ப்பணம்
என்னை ஏற்றுக்கொள்
உன் மதுவால் போதையாக்கி
ஈருலகை விட்டும் காப்பாற்று

உன்னை அன்றி வேறெதில் பொருந்தினாலும்
என் இதயத்தைத் தீயில் இட்டுவிடு!
*

நீ இன்றி மது இல்லை
உன் கைகள் இல்லை எனில்
ஜெப மாலையால் பயன் இல்லை

தொலைவில் இருந்து உத்தரவிடுகிறாய்
’நடனம் ஆடு’ என்று

என் காதலனே!
மேடையமைத்து நீ
திரையை விலக்கவில்லை என்றால்
எப்படி ஆடுவேன் நான்?
*

என் இதயத்தின் ஒளியும்
என் ஆன்மாவின் நிம்மதியும் நீயே!
வம்புகள் செய்பவனும் நீயே!

‘நண்பனைப் பார்த்திருக்கிறாயா?’
என்று கேட்கிறாய் மீண்டும் மீண்டும்

நன்றாகத் தெரியும்தான் உனக்கு
நண்பன் பார்க்கப்பட முடியாதவன் என்று!

No comments:

Post a Comment