உன் பார்வையின்
பரவசத்தில்
நான்
பேசியது
ஒருவருக்கும் புரியவில்லை
உன்னைப்
பார்க்கும்
பரவசத்தில்
நான்
பேசுவது
எனக்கே
புரியவில்லை
*
ஒன்றை
வேறொன்றாய்க்
காட்டும்
மதுவின்
போதை
என்கிறார்…
உன் போதையில்
கேட்டுக்
கொண்டேன்
‘ஒன்று’தானே
இருக்கிறது
’வேறொன்று’
எங்கே?
*
நிலா
உனக்கு
நிகரில்லை
நெஞ்சே!
தழும்பு
தென்படுவதில்லை
தீ இன்னும்
அணையாதபோது
*
இறைவா!
உன்னிடம்
நான் கொண்டுவந்ததெல்லாம்
கிழிந்து
போன செல்லாத பணம் மட்டுமே
எனினும்,
கொண்டுவந்ததில்லை
நான்
கள்ளப்பணத்தை
ஒருபோதும்
*
பாலைகள்
கடந்து
சோலைகள்
கடந்து
வந்தேன் உன் முன்னால்
நிறைய
இருந்தன சொற்கள்
நின்றது ஒன்று மட்டும்
கண்ணீரில்
நனைந்த
உன் பெயர்
*
வயிறெனும்
மண்ணறை மீது
வாழ்வைத்
தொடங்குகிறான் மனிதன்
உயிருடன்
புதைபட்டுப் போன
உள்ளங்கள் எத்தனையோ!
வயிறெனும்
ஒருசாண் கயிறு
கட்டியுள்ளது
கால்களை...
இல்லையெனில்
இதயப்
பறவை
ஏழு வானங்களுக்கு
அப்பால்
எப்போதும்
பறந்திருக்கும்
*
பறவைக்குக்
கூடு
மனிதனுக்கு வீடு
சிறகுகள்
விரிக்கப்
பறவைக்கு
வானம்
உன் சிறகுகள்
விரியும்
வானம் எது?
வீடு
என்பது
கனவு காணும் இடம்
வீடே
கனவல்ல எனக்கு
*
கல்லைத்
துளைக்கும் கூர்மை
கண்களில் ஏன் வைத்திருக்கிறாய்?
மெழுகை
விடவும்
மென்மையாகத்தானே
என் உள்ளம்
இருக்கிறது?
a
No comments:
Post a Comment