Wednesday, October 23, 2013

அழகின் முகவரி


ஒப்பனை ஏதும் இன்றியே குழந்தைகள் அழகாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
வளர்ந்த பின் அந்த இயல்பான அழகிற்கு என்ன ஆகிறது?

விலங்குகள் ஒப்பனை செய்து கொள்வதில்லை. மனிதனிடம்தான் இது ஒரு கலையாக வாய்த்தது. ஒப்பனை வேடமாகவும் பரிணமித்தது.

வேடத்திற்கும் ஒப்பனைக்கும் இடையிலான கோடு தேய்ந்து வருகிறது; மனிதனுக்கும் மிருகத்திற்குமான கோடும்தான்.

அழகு பற்றிய தவறான தத்துவங்களால் அகில உலகும் அலங்கோலமாகிக் கிடக்கிறது.

காஸ்மெடிக்ஸை காயகல்பம் என்று மூளைச் சலவை செய்து வருகின்றன விளம்பரங்கள். மக்கள் மனங்களோ விளம்பரங்கள் சுழற்றும் பம்பரங்கள்.

புற அழகிற்கு ஆராதனை காட்டும் அரிதார நெருப்பு அக அழகிற்குக் கொல்லி வைக்கிறது. அது புற-அழகு மட்டுமே வாழ்க்கைக்குத் துருப்புச் சீட்டு என்று சொல்லி வைக்கிறது.


’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

இதயத்தில் தீபம் ஏற்றும் இந்த வாசகம் கிழக்கின் ஞானத்திற்குச் சொந்த வாசகம். கிழக்கு கண்ட அழகின் முகவரி இதுதான்.

மேற்கு என்பது அறிவியல், கிழக்கு என்பது ஆன்மிகம் என்று பார்க்கப்படுவதில் நியாயம் உண்டு என்று ஓர்ந்திருக்கிறேன். ஓஷோ, இக்பால் ஆகியோரிடம் இருந்து இக்கருத்தைத் தேர்ந்திருக்கிறேன். கிழக்கு தன்னை மெல்ல மெல்ல மேற்கில் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட நேர்ந்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் ஒரு கருத்தை அடியேன் நவில்கிறேன்:
மனிதனை ஒளியால் அலங்கரிப்பது கிழக்கின் வழிமுறை; மனிதனை மண்ணால் அலங்கரிப்பது மேற்கின் வழிமுறை.

தியானமே நமது அலங்காரமாக இருந்தது; இன்றோ ஒப்பனையே பலரின் தியானம் ஆகிவிட்டது.

காயாக இருக்கையில் ’பச்சை’யாய்  இருக்கும் ஆப்பிள் கனிந்து கனிந்துதான் சிவப்பாக வேண்டும். ஆப்பிள்-காய் மீது சிவப்புச் சாயம் பூசி விட்டால் அது ஆப்பிள்-பழம் ஆகிவிடாது.

அழகு எப்படி இருக்க வேண்டும்? இயல்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குச் சரியான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

இயல்பு என்பது தோற்றத்திலும் பண்பிலும்.

அழகு என்பது சீதை போல் இயற்கையாக இயல்பாக இருப்பது. ஒப்பனையோ ராமனை மயக்க வந்த சூர்ப்பனகை.

பெண்ணின் அழகைப் பேரழகு ஆக்குவது தன் அழகைப் பற்றிய அவளின் பிரக்ஞையின்மையே என்னும் கருத்துப்பட அல்லாமா இக்பால் பின்வருமாறு சொல்கிறார்:
“சுயப்பிரக்ஞை இல்லாத, பேரழகு நிறைந்த பெண்ணே இறைவனின் இவ்வுலகில் எனக்கு மிகவும் வசீகரமான பொருள்”

“அழகானதொரு பொருள் நிரந்தர ஆனந்தம்” என்று கீட்ஸ் பாடியதும் இத்தகைய அழகைப் பற்றித்தான் என்று சொல்லலாம்.

புன்னகையைத் தவிர வேறு நகையேதும் அணியாத அன்னை ஆயிஷா (ரலி) – நபிகள் நாயகத்தின் இளைய மனைவி – ஒருநாள் தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்களை அணிந்து கொண்டார்கள். வீடு வந்த நபிகள் நாயகம் “என்ன இது?” என்று கேட்டார். “தங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்” என்று நவின்றார் ஆயிஷா. “இந்த அலங்காரம் வேண்டாம். அவற்றைக் கழற்றிவிடு” என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள்.

ஆன்மிகத்தின் கண்கள் இயல்பானவற்றில்தான் இறைவனின் அழகை தரிசிக்கின்றன. ஆன்மிக ஒளி கொண்ட கண்கள் உள்ள ஆண் தனது பெண் இயற்கையான அழகுடன் இருப்பதையே விரும்புவான்.

காமோஷ் கஸியாபூரி என்று ஒரு கஸல் கவிஞர். தன் காதலியிடம் வினயமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறார் இப்படி:

கன்னங்களும் உதடுகளும்
இயல்பாகவே இருக்க விடு...
வண்ணங்கள் பூசாதே
தாஜ்மகாலின் மீது

(ஆரிஸ்-ஒ-லப் சாதா ரெஹனே தோ
தாஜ்மஹல் பெ ரங் ந டாலோ)



2 comments:

  1. அற்புதம் மிக அற்புதம்

    ReplyDelete
  2. காயாக இருக்கையில் ’பச்சை’யாய் இருக்கும் ஆப்பிள் கனிந்து கனிந்துதான் சிவப்பாக வேண்டும். ஆப்பிள்-காய் மீது சிவப்புச் சாயம் பூசி விட்டால் அது ஆப்பிள்-பழம் ஆகிவிடாது// அருமை அருமை.. ரசித்தேன்.

    ReplyDelete