Wednesday, October 9, 2013

சூரியனும் பனித்துளியும்


”சூரியன் வந்து வா எனும்போது
என்ன செய்யும் பனியின் துளி?”

காதலில் தன் நிலையைப் பெண்ணொருத்தி பாடுவது போல் வைரமுத்து எழுதிய வரிகள் இவை.

இந்த வரிகளுக்கு நதிமூலம் ஏதேனும் உண்டா என்று யோசித்தால் கம்பனுக்கு அடி எடுத்துக் கொடுத்த ஏற்றப் பாட்டுக்காரனின் வரிகளே பலருக்கும் ஞாபகம் வரக்கூடும்.

“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே”

என்பது அந்தப் பாடல். வயலுக்கு ஏற்றம் இரைத்தவனின் கிராமத்துப் பாடல்-வரிகள் எழுப்பும் அர்த்த அலைகள் மிகவும் அழகானவை.

மூங்கில் இலை மீதுள்ள பனி நீரைக் குறிப்பிடுகிறான் அவன். மண்ணில் விழுந்திருந்தால் பனிநீர் மண்ணால் உறிஞ்சப்பட்டிருக்கும். அதன் பின் அது பனித்துளி என்னும் பெயருக்கு ஏற்றதன்று. மூங்கில் இலை மீதுள்ள பனிநீர் தூய்மையானது.

மூங்கில் இலை மேல் தூங்கும் பனிநீர் என்பது உடலுக்குள் வந்திருக்கும் ஆன்மாவுக்குக் குறியீடு.

மூங்கில் இலை எங்கிருந்து வந்திருக்கிறது? மண்ணில் இருந்துதான் அல்லவா? ஆனால் அது மண்ணைப் போல் இல்லை. உடல் மண்ணிலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அது மண்ணைப் போன்றது அல்ல.

பனித்துளி வானத்தில் இருந்து வந்துள்ளது. அது மீண்டும் வானத்திற்கே போயாக வேண்டும். ஆனமா இறைவனிடமிருந்து வந்துள்ளது. அது மீண்டும் இறைவனிடமே சென்றாக வேண்டும்.

’தூங்கும் பனி நீர்’ என்னும் வாக்கியத்தைக் கவனியுங்கள். அது இயக்கமற்று இருக்கிறது. அதனால் அசைய இயலாது. பனித்துளி தன்னைத் தானே ஆவியாக்கிக் கொள்ள முடியாது. சூரியனின் சுடர்கள்தான் அதனை ஆவியாக்க வேண்டும். இங்கே நம்மை அனுப்பிய அந்த இறைவனேதான் மீண்டும் தன்னிடம் நம்மை அழைத்துக் கொள்ள வேண்டும்.

தூங்கும் பனித்துளியைப் போல் மனிதனின் நிலையும் இருக்கிறது. “மனிதர்கள் உறக்கத்தில் இருக்கிறார்கள்” என்பது நபிமொழி.

”வாங்கும் கதிரோன்” என்பதில் தொனிக்கும் வாஞ்சையை உங்களால் உணரமுடிகிறது அல்லவா? அதிகாலையில் சூரியனின் ஒளிக்கதிர் அத்தனை சூடாக இருக்காது அல்லவா? அது கருணையின் கதகதப்புடன் பனித்துளியைத் தொட்டுத் தூக்கிக் கொள்கிறது.

அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர் பட்டவுடனே தாமதிக்காமல் பனித்துளி ஆவியாகிவிடுகிறது. முதல் அழைப்பிலேயே அது தன் காதலனிடம் சென்றுவிடுகிறது. பக்தனின் மனநிலை இது.

”சூரியன் வந்து வா எனும்போது”...

பனித்துளி ஒன்றும் செய்யாது. சூரியன் வந்து அதனை வாங்கிக் கொள்கிறது.

இந்த வரிகளுக்கு இன்னொரு நதிமூலம் தெரிகிறது எனக்கு. வைரமுத்துவின் மனக்காட்டில் அந்தப் பனித்துளி வேறொரு திசையிலிருந்து வீசிய பருவக்காற்றில் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.


மிர்ஸா காலிப் எழுதிய ஒரு கஸல் பாடலில் உள்ள கண்ணி இது:

’பார்க்கவில்லை சூரியன்
பனித்துளியை இன்னும்
இல்லையெனில் நானும்
தலைமுதல் பாதம் வரை
வழிபாட்டின் சுவையை
வேண்டிக் கிடப்பவனே

(ஃகூர் ஷப்னம்-ஆஷ்னா ந ஹுவா வர்னா மெய்(ன்) அஸத்
சர்-தா-கதம் குஜாரிஷெ ஸௌகெ சுஜூத் தா)

ஆவியாக வேண்டும் என்னும் ஆசை பனித்துளியிடம் இருந்தால் மட்டும் போதுமா? சூரியன் பனித்துளியைப் பார்க்கும் போதுதான் பனித்துளி அதனிடம் அர்ப்பணமாக முடியும்.

தரையில் தலைசாய்த்து வழிபடுவதின் இனபத்திற்கு நானும் கோரிக்கை வைத்தபடிதான் இருக்கிறேன். ஆனால் இறைவன் அதற்கு என்னை நாடாவிட்டால் அதை நான் எப்படி அடைய முடியும்?

சூரியன் பார்க்கும் பனித்துளி சூரியனிடம் கிளம்பி விடுகிறது. இறைவன் யாரைத் தனதாகப் பார்க்கிறானோ அவர்தான் ஆன்மிகப் பயணத்தில் கிளம்ப முடியும்.

சூரியன் பனித்துளியைப் பார்க்கும் கணத்தில் சூரியனே அந்தப் பனித்துளியில் பிரதிபலிக்கிறது. ஆன்மாவின் வழிபாடு இதுதான். அதாவது, ஆன்மா இறைவனைப் பிரதிபலிக்க வேண்டும். ஆன்மாவின் ’சஜ்தா’ இதுதான்! அதை அடைவதற்குத்தான் மிர்ஸா காலிப் ஏங்குகிறார்.

ஏகத்திற்கான ஏக்கம் இந்த வரிகளில் வெளிப்படுகிறது. ஏகத்திற்கான தாகத்திற்கு அவனின் பார்வைதான் பானம். அதுவே ’ஸௌகெ சுஜூத்’ தலை சாய்த்தலின் சுவை என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பேரின்பத்தையே சூஃபி ஞானி கலீமி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் கவிதை நூலின் தலைப்பு “மஹ்வெ சுஜூத்’ தலைசாய்த்தலின் போதை என்று குறிப்பிடுகிறது.

இஹ்சான் என்று நபி (ஸல்) கற்றுத்தந்த நிலை இந்தப் பிரதிபலிப்புத்தான். “அல்லாஹ்வைப் பார்ப்பது போல் அவனை வணங்கு; அவ்வாறு இயலவில்லை எனில் அவன் உன்னை நிச்சயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்பது அவர்களின் வாக்கு.

இறைவனைப் பார்ப்பது போல் எனில் எங்கே? தன்னில்தான்! பனித்துளி சூரியனைத் தன்னில் பிரதிபலிப்பது போல். நீயும் ஓர் திரவக் கண்ணாடியாய் மாறிப் பார்!


இன்னொரு கட்டம் நகர்ந்தாக வேண்டும். இன்னொரு கதவு திறந்தாக வேண்டும். அதை இன்னொரு மகாகவி செய்யட்டும். ”தீர்க்கதரிசியின் தோட்டம்” (The Garden of the Prophet) என்னும் நூலில் லெபனான் தேசம் தந்த மகாகவி கலீல் ஜிப்ரான் சொல்வதைக் கேளுங்கள்:

“சிறிது நேரம் கழித்து அல்-முஸ்தஃபா தன் விரலால் சுட்டிக் காட்டிச் சொன்னார், ‘பனித்துளியில் உள்ள காலைச் சூரியனின் பிரதிபிம்பம் சூரியனை விடவும் குறைந்ததல்ல. வாழ்வு உங்கள் ஆன்மாவில் பிரதிபலிப்பது வாழ்வை விடவும் குறைவானதல்ல.”


அன்பர்களே! சூரியன் போ என்று சொன்னாலும் என்னதான் செய்யும் பனியின் துளி?

2 comments: