('Stray Reflections of Allama Iqbal)
61
பொருட்களின்
மதிப்புகள்
இறைவன் பொருட்களைப் படைத்தான்; மனிதன் அவற்றின் மதிப்புக்களை
உருவாக்கினான். மக்களின் அமரத்துவம் இடையறாது அவர்கள் உண்டாக்கும் மதிப்புக்களில்தான்
உள்ளது என்றார் நீஷே. இறைவனது படைப்பாற்றலின் முத்திரை பொருட்களில் இருப்பது உண்மைதான்.
ஆனால், அவற்றின் மதிப்புக்கள் மனிதனின் வழியாக மட்டுமே!
62
கல்வியின்
முடிவு
பொருட்களின் விதி என்ன? தொடர் போராட்டம். அப்படி எனில், கல்வியின்
முடிவு என்னவாக இருக்க வேண்டும்? போராட்டத்திற்கு ஆயத்தம் ஆக்குவதுதான். எனவே, அறிவின்
மேன்மைக்காக இயங்கும் மக்கள் தமது வலிமையற்ற நிலையைத்தான் வெளிப்படுத்துகின்றனர்.
63
இறைவன்
சக்தியாக இருக்கிறான்
சத்தியத்தை விடவும் சக்தி அதிக தெய்வீகமானது. இறைவன் சக்தியாக
இருக்கின்றான். எனவே நீ, பரலோகத்தில் இருக்கும் உன் பிதாவைப் போல் ஆகு!
64
ஆற்றல்மிகு
மனிதன்
ஆற்றல்மிகு மனிதன் சுற்றுச் சூழலை உருவாக்குகின்றான். வலுவற்றோர்
அதற்குத் தக தம்மை அமைத்துக்கொள்ள வேண்டும்.
65
சக்தியின்
தீண்டல்
பொய்மையை சக்தி தீண்டுகிறது; அதோ, நிஜமாகிவிடுகிறது அது.
66
ஆற்றல்மிகு
மனிதனின் சிந்தனை
நாகரிகம் என்பது ஆற்றல்மிகு மனிதனின் சிந்தனையே.
67
மஹ்திக்காகக்
காத்திருத்தல்
சக்தியின் மனித வடிவமான மஹ்திக்காகக் காத்திருப்பதைக் கைவிடு.
போ, அவரை உருவாக்கு.
68
தேசியம்
என்னும் கருத்து
தேசியம் என்னும் கருத்து சமூகங்களின் வளர்ச்சியில் நிச்சயமாக
ஆரோக்கியமான ஒரு காரணியாகும். ஆனால், மிகைப்படுத்தப்படும் அபாயம் அதில் உள்ளது. அவ்வாறு
அது மிகைப்படுத்தப் படும்போது கலையிலும் இலக்கியத்திலும் உள்ள விசாலமான மனிதத் தன்மைகளை
அழித்துவிட அது முனையக் கூடும்.
69
காண்ட்-இன்
’வகுப்பமைவின் அவசியம்’
ஜெர்மானிய மக்களின் அரசியல் வரலாற்றைப் பயிலாத ஒருவரால் இம்மானுவேல்
காண்ட்டின் ‘வகுப்பமைவின் அவசியம்’ என்னும் கோட்பாட்டினை விளங்கிக் கொள்ள இயலாது. காண்ட்
பேசும் கடமைக் கோட்பாட்டின் வீரியம் அதில்தான் முழுமையாக வெளிப்படுகின்றது.
70
மடியும்
அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டல்
நோய்ப்பிடித்த ஒரு சமூக
அமைப்பு தனது ஆரோக்கியத்தைக் காக்கும் முனைப்புள்ள சக்திகளைத் தன்னுள்ளேயே சில நேரங்களில்
உண்டாக்கி விடுகிறது. உதாரணமாக, மரித்துக் கொண்டிருக்கும் சமூக அமைப்புக்குத் தன்னுடைய
புதிய லட்சியத்தின் வெளிப்பாட்டால் புத்துயிரூட்டுகின்ற ஓர் ஆளுமை.
71
சுயக்
கட்டுப்பாடு
தனிநபர்களின் சுயக் கட்டுப்பாடு குடும்பங்களை உருவாக்குகின்றது;
சமூகங்களின் சுயக் கட்டுப்பாடு சாம்ராஜ்யங்களை உருவாக்குகின்றது.
72
சிலை
வழிபாடு
இஸ்லாம் மற்றும் கிறித்துவம் இரண்டுமே ஒரு பொது எதிரியை எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது: சிலை வழிபாடு. எனினும், இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது – கிறித்துவம்
தனது அந்த எதிரியுடன் சமாதானாம் செய்துகொண்டுவிட்டது; இஸ்லாம் அதனை முற்றாக அழித்துவிட்டது.
73
முஸ்லிம்
சமூகத்தின் அற்புத வரலாறு
முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை மேலும் மேலும் நோக்கும்போது அது
மேலும் அதிக அற்புதமானதாகத் தோன்றுகிறது. அடித்தளம் இடப்பட்ட நாள் முதல் பதினாறாம்
நூற்றாண்டு வரை, ஆயிரம் ஆண்டுகள், சக்திமிக்க இந்த இனம் அரசியல் விரிவாக்கம் என்னும்
முழுமையான பணியில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. (’இனம்’ என்று நான் குறிப்பிடக் காரணம்
இன உருவாக்க சக்தியாக இஸ்லாம் இருந்தது என்பதுதான்). இந்தத் தொடர் இயங்குதலின் மத்தியிலும்
இந்த அற்புதமான மக்கள் தொன்மை அறிவியலின் பொக்கிஷங்களை அகழ்ந்தெடுத்துப் பாதுகாக்கவும்,
அவற்றை மேலும் வளர்க்கவும், தனித்தன்மையான இலக்கிய மரபை உருவாக்கவும், இவை அனைத்துக்கும்
மேலாக - முஸ்லிம் சட்ட வல்லுநர்கள் நமக்குத் தந்து சென்றுள்ள பெருமதிப்புமிக்க மரபான
– முழுமையான சட்டவியல் அமைப்பை உருவாக்கவும் அவகாசத்தை அடைந்திருக்கிறார்கள்.
74
இந்த
உலகைப் புணரமைக்க
பண்புநலனும் ஆரோக்கியமான கற்பனை வளமும் இருந்தால், துன்பங்களும்
பாவங்களும் நிறைந்த இந்த உலகத்தை ஒரு சொர்க்கமாக மாற்றுவது சாத்தியம்தான்.
75
வேதனை
வேதனை என்பது மனிதன் வாழ்க்கையை முழுமையாகக் காண்பதற்காக வானவர்கள்
கொண்டு வரும் அன்பளிப்பு.
76
முடிவிலி
கணித மேதையால் இயலாது; ஆனால், ஒற்றை வரியில் முடிவிலியை உணர்த்த
ஒரு கவிஞனால் இயலும்.
77
கவிஞனும்
உலகின் ஆன்மாவும்
உலகின் ஆன்மா தனது வாழ்வின் படிநிலைகளைக் குறியீடுகளில் மறைத்து
வைக்கின்றாள். பிரபஞ்சம் என்பது ஒரு மகத்தான குறியீடு அன்றி வேறில்லை. ஆனால், இந்தக்
குறியீடுகளை நமக்காக விளக்குவதற்கு அவள் ஒருபோதும் மெனக்கெடுவதில்லை. இந்தக் குறியீடுகளை
நமக்கு விளக்கித்தருவது கவிஞனின் கடமை. அவற்றின் உள்ளர்த்தங்களை உணர்ந்து மனிதகுலத்திற்கு
உரைப்பது கவிஞனின் கடமை. எனவே, கவிஞனும் உலகின் ஆன்மாவும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள்
போல் தோன்றும். ஏனெனில், உலகின் ஆன்மா மறைப்பதைக் கவிஞன் வெளிப்படுத்துகின்றான்.
78
பூடகமும்
இருண்மையும்
மத்யூ அர்னால்ட் மிகவும் துல்லியமான கவிஞர். ஆனால், கவிதையில்
கொஞ்சம் பூடகமும் இருண்மையும் இருப்பதையே நான் விரும்புகிறேன்; பூடகமும் இருண்மையும்
உணர்வுகளுக்கு ஆழம் தரும் என்பதால்.
79
வரலாறு
எனும் கிராமஃபோன்
வரலாறு என்பது தேசங்களின் குரல்கள் பதியப்பட்டுள்ள ஒருவகை பெரிய
கிராமஃபோன் ஆகும்.
80
பாவமும்
ஒழுக்கமும்
ஒருவகையில் ஒழுக்கத்தை விடப் பாவம் சிறந்தது. பின்னதில் உள்ள
ஒரு கற்பனைத் தன்மை பின்னதில் இல்லை.
81
ஒழுக்கமானவர்கள்
பாவத்திற்கு அதற்கேயான ஒரு கல்வி மதிப்பு உண்டு. பொதுவாக, ஒழுக்கமானவர்கள்
மடையர்களாகத்தான் இருக்கிறார்கள்.
82
செயல்
இல்லாத சிந்தனை
கவிதை ஓவியம் ஆகிய கலைகளைப் போல் வாழ்க்கை என்பதும் முழுவதும்
வெளிப்பாடுதான். செயல் இல்லாத சிந்தனை மரணமே.
83
வாழ்வில்
வெற்றி
மனவுறுதியே வாழ்வில் வெல்கிறது, மூளைகள் அல்ல.
84
சமூகத்
தலைவனாய் ஆவதற்கு
சமூகத் தலைவனாய் நீ ஆகவேண்டும் என்றால், பொதுமக்கள் என்னும்
பெண்ணிடம் அரட்டை அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வருணிப்புக்களால் அவளுக்கு மகிழ்ச்சி
கொடு, தேவை எனில் பொய்களாலும்.
85
வெற்றியாளன்
உன் எல்லைகளை கண்டுகொள், உன் ஆற்றல்களை மதிப்பிடு. வாழ்வில்
உனக்கு வெற்றி நிச்சயம்.
86
சோம்பேறி
மனம்
சோம்பேறி மனதில் தாவரத்தின் தன்மை ஒன்றுள்ளது. அதனால் நடனமாட
முடியாது.
87
வேதனையின்
அற மதிப்பு
வேதனையின் அற மதிப்பை எந்தச் சமய முறைமையும் மறுதலிக்க முடியாது.
கிறித்துவத்தைக் கட்டமைத்தவர்களின் பிழை என்னவெனில் அவர்கள் வேதனையை மட்டுமே அடிப்படையாக்கி
பிற காரணிகளின் அற மதிப்பை மறந்துவிட்டார்கள் என்பதுதான். எனினும், அழகான ஆனால் ஒருபக்கமான
ஹெல்லனிய லட்சியத்தை ஐரோப்பிய மனதிற்குப் புகட்ட அத்தகையதொரு சமய அமைப்புத் தேவையாக
இருந்தது. கதே கூறுவது போல், வாழ்க்கை பற்றிய கிரேக்கத்தின் கனவு நிச்சயமாக சிறந்ததுதான்;
ஆனால், அதற்கு வேதனையின் நிறம் தேவையாய் இருந்தது. அதனை கிறித்துவம் வழங்கியது.
88
பெரிய
நூலகம்
உங்களிடம் ஒரு பெரிய நூலகம் இருந்து, அதன் நூல்களை எல்லாம் நீங்கள்
வாசித்திருந்தாலும், நீங்கள் ஒரு பணக்காரர் என்பதை அது காட்டலாமே அன்றி நீங்கள் ஒரு
சிந்தனையாளர் என்பதற்கு அது ஆதாரம் அல்ல. உங்களின் பெரிய நூலகம் காட்டுவது என்னவெனில்,
உங்களுக்காகச் சிந்திப்பதற்குப் பலரையும் வாடகைக்குப் பிடிக்க உங்கள் பணப்பை போதிய
அளவு கனமாக இருக்கிறது என்பதையே.
89
அற்புதங்கள்
அற்புதங்கள் நடந்தனவா இல்லையா என்பது கேள்வி அல்ல. இது பல கோணங்களில்
அர்த்தப்படுத்தக் கூடிய, ஆதாரம் குறித்த கேள்வி மட்டுமே. உண்மையான கேள்வி யாதெனில்,
அற்புதங்களின் மீதான நம்பிக்கை சமூகத்திற்கு நன்மை தருகிறதா என்பதே. ஆம் என்கிறேன்
நான். ஏனெனில், அத்தகைய நம்பிக்கை தொல் குடிகளையும், நில வரையறையை அல்லாது லட்சியத்தை
தேசியமாகக் கொண்ட சமூகங்களையும் (உதாரணம்: இஸ்லாம்) ஒன்றுபடுத்தி வைக்கின்ற மீவியற்கை
உணர்வை வலுப்படுத்துகின்றது. ஆகவே, சமூகப் பரிணாமம் என்னும் கோணத்தில் நோக்கும்போது
அற்புதங்களின் மீதான நம்பிக்கை ஓர் அவசியத் தேவை என்றே கூறவேண்டும்.
90
மக்களாட்சி
சட்டவுணர்வை வளர்த்தெடுக்கும் போக்கு மக்களாட்சிக்கு உண்டு.
தன்னளவில் இது தீமை அல்ல. எனினும், தூய அறப் பார்வையை நீக்கிவிடவும் சட்டத்திற்குப்
புறம்பானதையும் தவறையும் ஒரே அர்த்தத்தில் பாவிக்கவும் முனைவது இதன் குறையாகும்.
No comments:
Post a Comment