(இதுவரை
ரூமியின் வைரங்கள் என்று தரப்பட்டவை இணையத்தில் கண்டெடுத்த படக்கவிதைகள் ஆகும். இனி,
என்னிடமுள்ள நூல்களில் இருந்து வைரங்களை எடுத்து வைக்கிறேன்)
முதலில்
என்னைத் தூண்டினான்
முடிவற்ற
அரவணைப்புக்களால்
கடைசியில்
என்னை எரித்துவிட்டான்
கவலைகளால்
வலிகளால்
இந்தக்
காதல் சதுரங்கத்தில்
என்னையே
நான் இழந்தேன்
அவனை
அடைவதற்கு.
*
ஒன்றாகப்
பிணைந்துள்ளோம் நாம்
நிலம்
நான், காலடி நீ
இந்தக்
காதல்தான்
எத்தனை
ஓரவஞ்சனையானது...
உன் உலகைப்
பார்க்கமுடிகிறது
உன்னைப்
பார்க்க முடிவதில்லை
என்னுடன்
நீ இருக்கும்போது
விழிகள்
இரண்டில் உறக்கம் ஏது?
என்னுடன்
நீ இல்லாதபோது
உறங்கவிடாது
கண்ணீர்...
இரண்டிற்கும்
எனது நன்றிகள் உனக்கே!
இரண்டின்
வேறுபாடு அறிவாய் நீ
தொழுகை
பனிமூட்டம்
நீக்கிப்
பேரமைதியை
தருகிறது
உள்ளத்திற்கு மீண்டும்
ஒவ்வொரு
காலையும்
ஒவ்வொரு
மாலையும்
இதயம்
பாடட்டும்
‘லா இலாஹ இல்லல்லாஹ்’
அல்லாஹ்வை
அன்றி
உள்ளமை
இல்லை
*
என் வாழ்வைப்
பார்க்கும்போது
காதல்
மட்டுமே என்
ஆன்மாவின்
துணைவனாய்
இருந்து வந்துள்ளதை அறிகிறேன்
ஆழத்திலிருந்து
என்
ஆன்மா
சொல்கிறது:
‘தாமதிக்காதே!
காதலிடம்
சரணடைவாய்’
*
நீ உன்
ஆன்மாவைத் தேடுகின்றாயா?
சிறையை
விட்டு வெளியே வா!
நீரோடையை
நீங்கு
கடலில்
பாயும் நதியில் சேர்ந்திடு
இவ்வுலகில்
மூழ்கி
அதை உன்
சுமையாக்கிக் கொண்டாய்
இவ்வுலகிற்கு
மேலே எழு
இன்னொரு
பார்வை உள்ளது!
உன் வசியம்
என்னைக் கவர்ந்து
பித்தத்தின்
விளிம்பிற்கு இட்டுச் சென்றது
சமநிலை
பிசகினேன் நான்
பணிவடைந்தேன்,
திருப்பி அனுப்பப்பட்டேன்
பிறகு,
என் இதயத்தைத் தீண்டினாய் நீ
உன் கற்பனையின்
படியெல்லாம்
மாற்றி
வடிவமைத்தாய் என்னை
*
வருடமெல்லாம்
காதலனொரு
பித்தன்தான்...
நிலையிலியாய்
நோயாளியாய்
அவமானத்திற்கும்
ஆளாகிறான்
ஆனால்
ஆனால்
காதல்
இல்லையேல் துன்பம் மட்டுமே
காதலுக்கோ
வேறெதுவும் பொருட்டல்ல!
*
வாசம்
உன் நாசிக்கு எட்டவில்லை எனில்
நேசத்தின்
தோட்டத்திற்குள் நுழையாதே!
ஆடை களைய
நாட்டமில்லை எனில்
சத்தியத்தின்
நதியில் இறங்காதே!
இருக்கும்
இடத்தில் இருந்துகொள்,
வராதே
எமது பாதைக்கு நீ
சொர்க்கத்தைப்
பற்றிய
கற்பனை
உனக்கிருந்தால்
இழந்துவிடு
அவற்றை
காதலின்
ஒரு கிரணத்தைக் கண்டு
பூமிக்கு
வந்துவிட்டது ஆன்மா!
சொர்க்கத்தின்
நூறு லட்சணங்கள்கூட
மீண்டும்
கவர முடியவில்லை அதனை
இங்கே,
இங்கேதான்
காதலின்
உண்மையைக்
கண்டறிகின்றது
ஆன்மா!
*
சிலநேரம்
உணர்கிறேன்
நானொரு
மன்னன் போல்
சிலநேரங்களில்
சொந்தச்
சிறைக்குள் புலம்புகிறேன்
இந்த
நிலைகளுக்கிடையில் உழலும்போது
பெருமைப்
படுவதெங்கே
என்னைப்
பற்றி நான்?
இந்த
‘நான்’ என்பது
என் கற்பனையின்
துணுக்கு மட்டுமே!
காதலி
நடந்திருந்தாள் அவள் போக்கில்
உயரம்,
மெலிவு, கனவுக் கண்கள்
கையில்
ரோஜாக்கள்...
ஒரு முத்தம்
திருட
அவள்
முன் தாவினேன்
கூச்சலிட்டாள்:
‘ரோஜாத் திருடன்!’
*
பிறரை
பாவித்தலில்
என்னை
அறியத் தவறினேன்
உள்ளுக்குள்
நோக்கி உணர்ந்தேன்
என் பெயரை
மட்டுமே தெரியும் எனக்கு
விட்டு
வெளியேறிய அந்தக் கணத்தில்
நின்றேன்
எனது நிஜமான சுயத்தில்
*
சொர்க்கத்திற்குள்
நுழைய வேண்டுமா?
சத்தியத்தின்
பாதையில் நடப்பதற்கு
இறைவனின் அருள் அவசியம்தான்
இறுதியில்
அனைவரும்
அடையத்தான்
போகிறோம் மரணத்தை
எனினும்,
பாதையில் எச்சரிக்கையாய் இரு
இதயம்
எதையும் காயப்படுத்தாதே!
*
இருக்கின்றேன்
மகிழ்ச்சியாய் இன்றிரவு
நண்பனுடன்
நான்
பிரிவுத்
துயர் விட்டு விடுதலையாகி
சுழன்றாடுகின்றேன்
அவனுடன்
என் மனதிற்குச்
சொல்கிறேன்,
‘வருந்தாதே!
வைகறையின்
சாவியைத்
தொலைத்துவிட்டேன்!’
அருமை ...ஆசிரியருக்கு எனது நன்றிகள் ....
ReplyDelete