1:143
சுவையொன்றை வருணித்தல்
நான் கூறும் அறிதல் என்பதென்ன என்றும் நான் குறிப்பிடும் காதல் எவ்விதமாய்
உணரக்காணும் என்றும் ஒருவர் என்னைக் கேட்டார். நான் சொன்னேன், ”உமக்குத் தெரியவில்லை
எனில் நான் என்ன சொல்வது? உமக்குத் தெரியும் எனில், நான் என்ன சொல்வது?”
காதலை அறிதலின் சுவைக்கு எவ்வொரு விளக்கமும் இல்லை. அதைப் பற்றிய எந்தக்
குறிப்பும் எவருக்கும் அந்தச் சுவையை ஒருபோதும் தராது.
1:144-145
ஒரு முகத்தின் அழகு
”நீயன்றி சக்தி இல்லை” என்று சொல், நீயே அந்த அர்ப்பணமாய் ஆகும் வரை.
மீண்டும் மீண்டும் செய்தல் உன் மனப்பழக்கத்தை வலுப்படுத்தும். பொறுமையான பயிற்சியே
கல்லை மாணிக்கம் ஆக்குகின்றது. அறிதல் அன்பில் வேர் பிடிக்கிறது. அன்பு தூய்மையில்.
ஒவ்வொரு நாளும் மகத்துவத்தில் ஏதேனுமொரு பணி செய் (காண்க:55:29).
காதலின் இயல்பு பற்றிக் கேட்கப்பட்டால் நான் ஒன்றும் சொல்வதில்லை.
அர்ப்பணமாகிவிட்ட ஆயிரக்கணக்கான இறைத்தூதர்களின் ஆன்மாக்களை நான் சுட்டிக் காட்டுகிறேன்.
காதலைப் பற்றிப் பேசுவது அதன் சாராம்சத்தைக் கலங்கச் செய்கிறது. காதலரிடையே பகிர்வது
யாதாகினும் அதனைச் சொல்லிவிட முடியாது. அஃதொரு வாழும் மர்மம். வார்த்தைப் பரிமாற்றம்
இன்றி அதனை உணர்ந்து சுவைத்திடு. அதனை உன் ஆன்மாவில், உன் இதயத்தில், உன் ஆளுமையில்
திளைத்திடு. அச்சுவையை உன் முழு உடலாலும் சுவை. அதை நாவில் சுவைத்திடு. ஆனால் பேசுவதால்
அல்ல.
ஆன்மா பருவுடலுக்குள் நுழைதல் போல் உனது காதற் சுயம் கடவுளுக்குள்
நுழையட்டும். ஒரு முகத்தின் அழகென்பது மர்மத்தின் தோற்றமாகும், உள் நுழைதலாகும்.
1:145-146
ஊர்ஜிதம் இல்லை
”கூறுக: அல்லாஹ்வை அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவை
அறியமாட்டார்” (27:65).
அப்பிரதியுடன் நான் இக்கேள்வியை முன்வைக்கிறேன்: உனக்கோ அல்லது எவருக்குமோ
எவ்விதப் பயனையும் தராத பணியைச் செய்வது பற்றி நீ எப்படி உணர்கிறாய்? உன் கதவுக்கு
வெளியே நீ கிளம்புகையில் ஓர் இலக்கினைப் பற்றிய உறுதி உன்னிடம் இருக்கிறது அல்லவா?
எப்போதாவது நீ வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டினுள்
போய் எந்த நோக்கமும் இல்லாமல் எந்தக் காரணமும் இல்லாமல் அப்படியே அமர்ந்திருப்பதுண்டா?
என்ன விளைவு வரும் என்பதை அறியாமலேயே அவ்வப்போது நீ வேலையைத் திட்டமிடுகிறாய்.
முளை விடும் என்னும் உத்தரவாதமின்றியே நீ விதைகள் தூவுகிறாய். லாபம் தரும் என்பது பற்றிய
ஊர்ஜிதம் ஏதுமின்றியே நீ வணிக ஒப்பந்தத்திற்கு இசைகிறாய். தாம் முன்னோக்கிச் செல்லும்
புள்ளியைப் பலரும் இங்கே அடைவதில்லை. அதற்காக அவர்கள் முயற்சியை முடித்துக்கொள்கிறார்கள்
என்று அர்த்தமல்ல.
மறைவில் நாம் ஆற்றும் வேலையில் இருந்தே ஊர்ஜிதம் பிறக்கிறது. ஆனால்
நாமதை அறிய முடியாது. அவ்விடத்திற்கான பயணமும் அவ்விடத்தில் தூவப்படும் விதைகளும் ஒருபோதும்
ஏமாற்றம் அளிக்காது. தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் துறவிகளும் நமக்கு அவர்களின் நம்பிக்கையில்
சிறிதேனும் தரமுடியும், நாம் அவர்களுடன் இணைந்து உழைத்தால்.
1:146-147
நோக்கங்களுக்கு அப்பால்
நான் இறந்தபின், இவ்வுடல் உலர் புழுதி ஆகும்போது, நிகழும் மாற்றங்களில்
நீ எப்படி இயங்குகின்றாய் என்பது பற்றி என்னை அறியாமையில் வைக்க வேண்டாம். உன் செயல்களை
நான் நேசிக்கிறேன். எனது உணமைத் தோழனே! உன்னில்தான் எல்லாம் நிகழ்கிறது என்பதை நானறிவேன்.
இயங்குதலை நான் காணும்போது என் சுயம் உன்னுடன் நகர்ந்து செல்வதை நான் பார்க்கிறேன்,
ஒவ்வொரு குறிப்பையும் அவற்றின் ரத்தம் புரந்து ஓர் ஆழ்ந்த வியப்பில் அவற்றை அவற்றின்
தெய்வீக ரட்சகனின் முன் சிரம்பணியச் செய்கையில். (காண்க 17:109).
மரங்களும் அவை கொண்டிருக்கும் கனிகளும், சுகம் தரும் எந்தத் தொடுதலும்,
புலன்களின் வழி வருகின்ற எதுவும் அறிவில் தாக்கம் செய்கிறது. ஆனால் எனக்கு இன்னும்
வேண்டும். புலன்களுக்கு அப்பாலும் உள்ளேயும் இயங்குகின்ற நோக்கங்களை விட்டும் இன்னும்
எத்தனைக் காலம் என்னை நீ தடுத்து வைப்பாய்? தவிப்பு இனியும் வேண்டாம், பணிவான ஒப்படைதல்
இனியும் வேண்டாம். பிரசன்னத்தின் உள்ளே என்னை எரிய விடு.
1:147-148
அரைத் தூக்கத்தில் ஓர் அரசன்
உறக்கத்திலிருந்து உன்னுள் எழுகிறேன். நான் திரும்பி உன்னை என் அணைப்பில்
பற்றுகிறேன், அரைத் தூக்கத்தில் ஓர் அரசன் தான் தனியாக இருப்பதாக நினைத்துப் பின் தனது
மனையாளைத் தன்னருகே கட்டிலில் கண்டு, அவளின் கூந்தலை முகர்ந்து, தனக்கொரு துணை இருக்கிறாள்
என்பதை நினைவுகொள்வது போல்.
மேலும் மெல்ல விழித்து அவன் பேசத் தொடங்குகிறான். எனவே, நான் உன்னுள்
விழிக்கின்றேன். அந்த இன்பம், கிசுகிசுத்தல், வியப்பில் நாம் நடைபோடும் நேரங்களின்
நேர்த்தி. நான் நெருங்குகிறேன். ”என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மைக் கேட்கும்போது
நிச்சயமாக நான் அருகிலிருக்கிறேன்” (2:186).
பிறகு நான் நினைவு கூர்கிறேன், இறை பிரசன்னத்தில் மூசா நபியவர்கள்
மூர்ச்சை அடைந்ததை, ஏசுவின் முகத்தை, ஞானியர் திறக்கும் மர்மங்களை, முஹம்மது (ஸல்...)
அவர்களின் உறுதியை, தமது பாடல்களில் காதலர் கலந்து ஒன்றாவதை. மேலும் எனக்குத் தெரியும்,
இக்கால்களுக்கு நீ வழங்கியிருக்கும் வியப்பினை நடப்பதற்காகவே நான் இக்கால்கள் கொடுக்கப்பட்டிருக்கிறேன்.
1:150
இறப்பதன் தன்மையும் இன்னும் தோன்றாததன் மகத்துவமும்
உடலின் இச்சைகளை மறுக்கும் எவனும் தனது ஆன்மாவில், மற்றும் தனது இதயத்தில்,
மற்றும் தனது இறைநம்பிக்கையில் இருந்து வரும் ஓர் ஆழ்ந்த ஏக்கத்தை நிறைவேற்றுகிறான்.
தொழுகையின் அர்த்தம் இதுவே: இன்னமும் தோன்றாததன் (அதாவது மறைவின்) மகத்துவத்தை அனுபவிக்க
நாம் மாம்சத்தின் இச்சைகளைக் கட்டுப்படுத்துகிறோம். ஐவேளைத் தொழுகையில் நின் நெற்றி
நிலத்தைத் தொடுவது இவ்வெண்ணத்தை ஒப்புகிறது. ஆனால் நீயோ அதற்கு எதிரானதை செய்துவிட்டாய்.
நினது ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் குரலை உதாசீனப்படுத்திவிட்டு உன் உடலின் தூண்டல்களுக்கு
மதிப்பளித்துவிட்டாய்.
உனக்கு இரண்டு அஸ்திவாரங்கள் இருக்க முடியாது. ஒன்று நீ உனது இதயம்
மற்றும் ஆன்மாவில் நின்று செயலாற்று. இல்லையெனில் உனது வாழ்க்கை உனது நஃப்ஸ் என்னும்
மிருக மனத்திலிருந்து, உனது காமக் குரோத மாச்சர்யங்களில் இருந்து வெளிப்படும். அவை
எல்லாம் இறப்பனவற்றின் தன்மைகள், இறையருளைப் பெற அடிபணியாவற்றின் தன்மைகள்.
No comments:
Post a Comment