Tuesday, October 10, 2017

கவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள்



(12.09.2017 செவ்வாய்க் கிழமை, உத்தமப்பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்திய்யா கல்லூரியில் ஆற்றிய உரையின் விரிவும் செம்மையும் செய்யப்பட்ட வடிவம்)

Image result for kaviko abdul rahman 

அன்பர்களே!
      நாம் வாழ்கின்ற காலகட்டத்தையும் தொட்டு வாழ்ந்து சென்றிருக்கும் ஒரு மாபெரும் கவி ஆளுமையின் நினைவாக இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது. அவரது எழுதுகோல் என்னும் மந்திரக்கோல் வரைந்த பனுவல்களை எல்லாம் படித்துப் படித்துப் பரவசம் எய்தி அறிவை விரிவு செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அவரை நேரில் கண்டு உரையாடி உள்ளத்திற்கு வெளிச்சம் பெற்றுக்கொள்ளும் பேறும்கூட வாய்க்கப் பெற்றவர்களின் பட்டியலில் நானும் இடம்பெற்றுவிட்டேன் என்னும் உவகையுடன் உங்கள் முன் நிற்கின்றேன்.

      ”கவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள்” என்னும் ஏற்றமிகு தலைப்பில் உரையாற்ற வேண்டும் என்று நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முனைவர் பட்ட ஆய்வுக் களமாக அமையத் தகுந்த தலைப்பு இது. அல்லது, தொடர்ச் சொற்பொழிவாக நிகழ்த்தத் தகுந்த தலைப்பு. எனவே, எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அரைமணி நேர எல்லைக்குள்ளாக இத்தலைப்புச் சார்ந்து ஒரு வரைபடத்தை மட்டுமே உங்களுக்கு நான் வழங்க இயலும். இத்தலைப்பை முனைவர் மு.அப்துல் ஸமது அவர்கள் எனக்குத் தெரிவித்த போதே என் மனதிற்குள் ஒரு வினா எழுந்தது, “ஆழமும் அகலமும் அமைந்த அட்லாண்டிக் பெருங்கடலினை அரை நாழிக்குள் அமுக்கிக் காட்ட இயலுமா?” என்று. எப்படியிருந்தாலும், இந்தத் தலைப்புச்  சுட்டுகின்ற பொருண்மை சார்ந்து பேச வேண்டியது மிகவும் இன்றியமையாதது. கவிக்கோ அவர்களின் ஞானத்தேடலைப் புறக்கணித்துவிட்டு அவரை வெறும் கவிதை வித்தைக்காரர் என்பதாக மட்டுப்படுத்துவது அந்த ஆளுமைக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கும். எனவேதான், மிகவும் விழிப்போடு சரியாகவே இந்தத் தலைப்பினை வழங்கியிருக்கிறார்கள்.  

      ”கவிக்கோ கவிதைகளில் விரியும் ஞான மரபுகள்” என்னும் இந்தத் தலைப்பினை நோக்கிய போது, இச்சொற்றொடரின் நடுச்சொல்லாக அமைந்திருக்கின்ற “விரியும்” என்னும் சொல்லில் என் மனம் ஊன்றி நின்றது. விரிதல் என்பதை ஒரு சில பொருள்கள் சார்ந்து நாம் பயன்படுத்துவோம். ‘விரிவானம் பாராய் தம்பி’ என்று பாரதிதாசன் சொல்வார். ’விரிகடல்’ என்றும் சொல்லப்படுவதுண்டு. உயர்ந்து வளர்கின்ற ஒரு பெரு மரத்தின் கிளைகளைப் பார்க்கும்போது ’கிளைகள் விரிகின்றன’ என்றும் ‘விரிந்த கிளைகள்’ என்றும் சொல்லப்படுவதுமுண்டு. இந்த வார்த்தை அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை ஒன்றினை எனக்கு நினைவூட்டிற்று. ”பால்வீதி” என்னும் நூலில் அவர் எழுதிய ”தாகம்” என்னும் கவிதை:

      ”வேலிக்கு வெளியே
      தலையை நீட்டிய என்
      கிளைகளை வெட்டிய
      தோட்டக்காரனே!
      வேலிக்கு அடியில்
      நழுவும் என் வேர்களை
      என்ன செய்வாய்?”

      பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கவிதையை நான் வாசித்தபோது இந்தக் கவிதையில் தோட்டக்காரன் என்னும் குறியீடு கொண்டு இறைவனிடம் அப்துல் ரகுமான் முறையீடு செய்கிறார் என்று நான் எண்ணினேன். ஆனால் கருணை மிக்க அந்த இறைவன்தான் அப்துல் ரகுமானின் ஆன்மாவுக்கு அந்த ஞான தாகத்தையே தந்தவன். மட்டுமல்ல, அவன் அவருடைய கிளைகளை வெட்டவும் இல்லை என்பதற்கு அவர் எழுதிக்குவித்துள்ள பதினொரு கவிதை நூற்களும் ஏறத்தாழ இருபத்தைந்து கட்டுரை நூற்களும் சான்றாக இருக்கின்றன.

      ஆம், அவரது வேர்கள் நான்கு திசைகளிலும் ஆழ்ந்து பரவிச் சென்று உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாகி வந்திருக்கும் ஞான மரபுகளில் எல்லாம் உறிஞ்சிக் குடித்து உரமேற்றிக்கொண்டு அவரது சிந்தனைக் கிளைகளில் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிப் பழமாகிக் கனியாகியிருக்கும் கவிதைகளையும் கட்டுரைகளையும் காணும் போது கவிக்கோ அவர்களை ஒரு கற்பகப் பெருமரம் என்றே கூறத் தோன்றுகிறது.

ஞான மரபுகள் – ஒரு பருந்துப் பார்வை
      அவரது வேர்கள் அப்படி எந்தெந்த ஞான மரபுகளில் ஊட்டச் சத்தை உறிஞ்சிக்கொண்டன என்று சொல்லிவிட்டு மேலும் முன்னேறிச் செல்ல விரும்புகிறேன்.

முதலில், ஞான மரபு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் சடங்குகளால் பின்னியமைக்கப்பட்ட தளம் ஒன்று இருக்கும். உடலால் நிகழ்த்தப்படும் வணக்க வழிபாடுகளால் ஆன அந்தத் தளத்தில்தான் அந்தந்த மதத்தின் பெரும்பான்மையினர் இயங்குவார்கள். அவர்களுக்கு மதம் என்றாலே அதன் அடையாளங்களைத் தாங்கி நிற்கின்ற அந்தச் சடங்குகளின் தொகுப்பு மாத்திரமே. இது மதத்தின் புறக்கட்டமைப்பு. ஆனால் மனிதனுக்கு உடல் என்னும் புறமும் மனம் என்னும் அகமும் இருப்பதைப் போலவே, மதத்திற்கும் அகக்கட்டமைப்பு ஒன்றும் இருந்தாக வேண்டும். அது, அர்த்தங்களைத் தேடி அடையும் சிந்தனைகளால் ஆனது என்று எளிமையாகச் சொல்லலாம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்?” என்று மாணிக்கவாசகர் கேட்பதைப் போன்ற அடிப்படையான கேள்விகளைக் கேட்டுக் கேட்டு, தன்னையே துளைத்துத் துழாவி விடைகளைக் கண்டறிகின்ற ஆன்மிக நெறி என்று அதனைச் சொல்லலாம். ஆங்கிலத்திலே அதனை esoteric dimension of religion – சமயத்தின் அகப் பரிமாணம் என்று சொல்வார்கள். அப்படியாகத் தங்களின் உள்ளேயே மூழ்கிப்போய் அகமுகமாக வாழ்வின் அர்த்தங்களைக் கண்டறிந்தவர்களின் சிந்தனை முறை குரு-சீடர் என்னும் வழிவாற்றில் தொடர்ந்து வரும்போது அது ஞான மரபு என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மதத்திலும் அத்தகைய ஞான மரபு ஒன்று இருப்பதைக் காணலாம். உலகின் பெருமதங்களில் ஆற்றலுடன் இயங்கி வருகின்ற ஞான மரபுகள்:

      இஸ்லாத்தின் அகக் கட்டமைப்பான சூஃபித்துவம்.
      பௌத்த மதம் திபெத் சென்றபோது மலர்ந்த தந்த்ரா.
பௌத்த மதம் சீனம் சென்றபோது மலர்ந்த தாவோயிசம்.
      பௌத்த மதம் ஜப்பான் சென்றபோது மலர்ந்த ஜென்.
      யூத மதத்தின் அகக் கட்டமைப்பாக விளங்குகின்ற கப்பாலா மற்றும் பால் ஷெம் என்பவர் உருவாக்கிய ஹஸ்ஸித்.
Related image

      பல்வேறு ஞான மரபுகளின் தொகுப்பாக விளங்குகின்ற இந்து ஞான மரபிலே வேத உபநிஷதங்கள், பகவத் கீதை, யோக நெறி, சிவ தந்த்ரா, தென்னகத்தில் சிறப்பாக உருவாகிய சைவ சித்தாந்தமும் அதிலிருந்து எழுந்த சித்தர் நெறியும் ஆகியவற்றைச் சொல்லலாம். மேற்கு வங்கத்திலே உருவாகி வந்த பவ்ல் ஞான மரபினை இத்துடன் இணைத்துக் காணலாம்.

      கிறித்துவத்தில் ஞான மரபாக சிறப்பித்துப் பேசப்படுவன அந்தந்த ஞான ஆளுமைகளை வைத்துத்தான் என்ற வகையிலே அஸ்ஸிசியின் புனித ஃப்ரான்ஸிஸ், சிலுவையின் புனித யோவான், மெய்ஸ்டர் எக்கார்ட், அவிலாவின் புனித தெரசா, புனித அகஸ்டின் முதலியர்கள் அடங்கிய ஒரு பெரும் பட்டியலே உண்டு. இதனுடன், கிறித்துவச் சிந்தனைப் போக்கில் பெரும் தாக்குறவு செய்த, மேற்கத்தியத் தத்துவம் என்று சொல்லப்படும் சிந்தனை மரபின் தோற்றுவாயாக அமைந்த, சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹெர்மிஸ் ட்ரைமெஜஸ்டஸ், டயோஜினஸ் போன்றோரைத் தந்த பழம் கிரேக்கத்தின் தத்துவ மரபினையும் சேர்த்துக்கொள்ளலாம்.

      இரண்டு அல்லது அதற்கும் மேலெண்ணிக்கையான மதங்களை இணைக்கும் முயற்சியில் உண்டான புதிய சமயங்களின் ஞான மரபுகள் அல்லது தனிமனித ஆளுமைகளைக் கணக்கில் கொள்ளும்போது குரு நானக் நிறுவிய சீக்கிய மதத்தின் ஞான மரபும், சாய் பாபா, மெஹர் பாபா, பக்த கபீர்தாஸ் போன்றவர்களும் இடம்பெறக் காணலாம். தியோசொஃபிக்கல் சொசைட்டி என்னும் பிரம்மஞான சபையையும் இதில் சேர்த்துக் காணலாம்.

Image result for osho and j krishnamurti

      நவீன உலகில் தாக்கம் ஏற்படுத்திய ஞான ஆளுமைகள் என்று  சிலரைக் காணமுடியும். ஜார்ஜ் குருஜீஃப், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்.

      ஞானக் கவிஞர்களை இத்துடன் சேர்த்துக்கொள்ளலாம் எனில் ரவீந்திரநாத் தாகூர், மகாகவி பாரதி, அல்லாமா இக்பால், கலீல் ஜிப்ரான், மீக்காயில் நைமி என்று அந்தப் பட்டியல் நீளும்.

      உலகிலே ஞான மரபுகளுக்குப் பஞ்சமே இல்லை. அவை எல்லாவற்றையும் இங்கே பட்டியலிட்டுச் சொல்லிக்கொண்டிருக்க அவகாசமும் இல்லை. முக்கியமானவற்றைச் சொல்லியிருக்கிறேன்.

கவிக்கோ என்னும் பெருமரத்தின் ஆணிவேர்

      கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் ஏறத்தாழ இந்த ஞான மரபுகள் அனைத்திலும் ஆழங்காற்பட்ட வாசிப்பினை நிகழ்த்தியவர் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். அவருடைய தனிப்பட்ட நூலகத்திலே உலக ஞான மரபுகளைச் சார்ந்த நூற்களை அரிதின் முயன்று சேகரித்து வைத்திருந்தார். தனது நூலகத்தைப் பற்றிய ஒரு பெருமிதம், பாரதியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ‘ஞானச் செருக்கு’ அவருக்கு இறுதி வரை இருந்தது. ஞான நூற்களின் மீது ஒரு தணியாத போதை கொண்டிருந்தார். நூற்கள்தான் அவருக்கு மிகப் பிரியமான லாகிரிப் பொருள் என்று சொல்லலாம். “சொர்க்கத்தில் மது, மாது எல்லாம் உண்டு என்கிறார்கள். நான் இறைவனிடம் ஒரு நல்ல நூலகத்தைக் கேட்பேன். அது இருந்தால் மது எதற்கு? மாது எதற்கு?” என்று அவரே எழுதியிருக்கிறார் (’குங்குமம்’, ஆகஸ்ட் 2006, கட்டுரை: ‘மது எதற்கு? மாது எதற்கு?’, நூல்: ”இல்லையிலும் இருக்கிறான்”).

      அப்படி எல்லா ஞான மரபுகளிலும் தோய்ந்து எழுந்து அவர் கண்டடைந்த மெய்ப்பொருளைத் தனது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்தினார்.

      கவிக்கோ அவர்களின் வேர்கள் எல்லா ஞான மரபுகளிலும் நீரருந்தியவை என்று நான் முன்பு சொன்னேன். ஒரு மரத்தினுடைய பக்க வேர்கள் சல்லி வேர்கள் எல்லாத் திசைகளிலும் பரவிச் சென்றாலும்கூட அதனுடைய ஆணிவேர் எந்த நிலத்தில் ஆழ்ந்து நிற்கிறது என்பதுதான் அந்த மரத்தினுடைய முகவரி என்று நாம் சொல்லலாம். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய ஆணிவேர் எந்த ஞான மரபிலே ஆழ்ந்து ஊன்றி நின்றது என்று கேட்டால் அது இஸ்லாமிய மெய்ஞ்ஞானமாக விளங்குகின்ற சூஃபித்துவம் என்னும் ஞான மரபுதான்.

      கவிக்கோ அவர்களை ஒரு கற்பகப் பெருமரம் என்று நான் முன்பு சொன்னேன். கற்பகத் தரு என்பது இந்து ஞான மரபினைச் சார்ந்த சொல்லாடலாக இருந்தாலும்கூட கவிக்கோவைச் சுட்ட நான் எடுத்த அந்த பெருமரம் என்னும் குறியீடு குர்ஆனில் இருக்கின்றது.

      இஸ்லாத்தின் அடிப்படையாக, அதன் அகப்பரிமாணமாகத் திகழும் சூஃபித்துவத்தின் அடிப்படையாக இருப்பது நறுமணமான வாசகம் என்னும் பொருளில் கலிமத்துத் தய்யிபா என்று அழைக்கப்படுகின்ற “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்னும் மூல மந்திரம். இந்தக் கலிமாவை ஒரு பெருமரமாகக் குர்ஆன் வருணிக்கின்றது:

      ”அல்லாஹ் எப்படி உவமிக்கிறான் என்று நீங்கள் கவனிக்கவில்லையா? நல்ல வாசகம் ஒரு நன்மரம் போன்றது. அதன் வேர்கள் ஆழப்பதிந்துள்ளன, அதன் கிளைகள் வானத்தில் விரிந்துள்ளன; தனது ரட்சகனின் உத்தரவுப்படி அது தனது கனிகளை எல்லாக் காலமும் தருகின்றது” (அலம் தர கைஃப ளரபல்லாஹ மஸலன் கலிமத்தன் தய்யிபத்தன் கஷஜரத்தின் தய்யிபத்தின் அஸ்லுஹா ஸாபித்துன் வ ஃபர்உஹா ஃபிஸ்ஸமாஇ; துஃதீ உகுலஹா குல்ல ஹீனிம் பிஇத்னி றப்பிஹா… - குர்ஆன்:14:24).

      இந்தத் திருக்கலிமாவுக்கு சூஃபி ஞான மரபிலே என்ன விளக்கங்கள் தரப்படுகின்றதோ அதனையே அவர் உண்மை என்று கண்டு உள்ளத்தால் ஏற்றிருந்தார். எனவே கவிக்கோ அவர்களை ஒரு சூஃபி என்று அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்.

      2004-ஆம் ஆண்டில் அவருடைய ”ஆலாபனை” என்னும் கவிதை நூலினை சூஃபித்துவ நோக்கில் ஆராய்ந்து நான் எழுதிய ஆய்வேட்டின் பிரதி ஒன்றை அவருக்குக் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். மாடியில் அவரது நூலகத்தில் அமர்ந்து பேசினோம். ஏறத்தாழ இருபதாயிரம் நூற்கள் அங்கே இருந்திருக்கும். அவ்வளவு நூற்களை வாசித்தவர் ஒரே ஒரு நூலை மட்டும் எனக்குப் பரிந்துரை செய்தார். “முஸ்லிம் அத்வைத மூலமொழி” என்பது அந்த நூலின் தலைப்பு. நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் என்னும் சூஃபி அறிஞர் எழுதியது. அப்போது அந்த நூல் என்னிடம் இல்லை. சிங்க்ப்பூரில் ஒருவரிடமிருந்து அந்த நூல் தனக்குக் கிடைத்ததாகக் கவிக்கோ சொன்னார். ஆனால் அந்த அரிய நூலை அவர் எனக்குத் தரவில்லை. ‘தேடிப் படியுங்கள். மிகவும் முக்கியமான நூல்’ என்று சொல்லிவிட்டார். அந்த நூல் பின்னளில் எனக்குக் கிடைத்தது, இந்த உத்தமப்பாளையத்தில்தான். அதுவும், ஹாஜி கருத்த ராவுத்தர் அவர்களின் வமிசத்தில் வருகின்ற நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்தது என்பதை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கவிக்கோவைச் செதுக்கிய ஞான ஆளுமைகள்

      என்னுடைய அந்த ஆய்வேட்டிலே எனது ஆராய்ச்சியின் முடிவாக நான் ஒரு கருத்தை எழுதியிருந்தேன். அதாவது, கவிக்கோ அப்துல் ரகுமான அவர்களுடய ஆளுமையில் மூன்று பேருடைய தாக்கம் மிக அதிகமாகத் தெரிகிறது. அந்த மூவர் இவர்கள்தான்:
1. மாபெரும் சூஃபி ஞானக் கவிஞரான மௌலானா ரூமி.
2. அனைத்து ஞானமரபுகளையும் பற்றிப் பேசிய நவீன ஞானியான ஓஷோ.
3. உருது மொழியின் மகாகவியான அல்லாமா இக்பால்.

      நேரடியாக உரையாடியபோது என்னுடைய இந்தக் கருத்தைக் கவிக்கோ அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். “ஓஷோ மிகச் சிறந்த அறிவாளி” என்று சொன்னார்கள். மௌலானா ரூமிதான் தனது மானசீக குரு என்று சொன்னார்கள். 

Image result for rumi and iqbal 
 
2015-ஆம் ஆண்டில் அவருக்குப் பவழவிழா கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட “கவிக்கோ கருவூலம்” என்பதற்கு நானொரு கட்டுரை எழுத வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்கி அடியேன் எழுதிய “ஞானம் கனிந்த கவி” என்னும் கட்டுரையிலும் இந்தக் கருத்தினைப் பதிவு செய்திருந்தேன். 

      இந்தக் கருத்தரங்கத்திற்காக முனைவர்.அப்துல் ஸமது அவர்கள் அழைப்பு விடுத்த பிறகு மீண்டும் கவிக்கோவின் நூற்களை எல்லாம் அசைபோட்டுப் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. எனது அவதானத்தில் ஒரு சிறு திருத்தம் செய்யலாம் என்று தோன்றுகிறது. அதன்படி, இரண்டாம் இடத்திலே இன்னொரு சூஃபி ஞானியின் பெயரை இணைக்க விரும்புகிறேன். அவர்தான் ‘ஷைகுல் அக்பர்’ (மாபெரும் குருநாதர்) என்று அழைக்கப்படுகின்ற இப்னுல் அரபி அவர்கள்.
     
 கவிக்கோ அவர்களின் மொழி நடையிலும் சிந்தனை வெளிப்பாட்டிலும் கலீல் ஜிப்ரான் மற்றும் மிர்ஸா காலிப் ஆகியோருடைய தாக்கத்தைப் பார்க்கலாம். லெபனான் நாட்டின் தேசியக்கவிஞரான கலீல் ஜிப்ரானுக்கு இணையாகக் கவிக்கோ எழுதுகிறார் என்பதை அன்றே கவியரசு கண்ணதாசன் கண்டறிந்து சொல்லிவிட்டார். கவிக்கோவின் தாய்மொழியான உருது மொழியில் அவருக்கு மிகவும் பிடித்த கஜல் என்னும் வடிவத்தின் சிகரமாக விளங்குகிறவர் மிர்ஸா காலிப்.

அகக் காட்சிகள் பெற்ற அற்புதக் கவிஞர்

      ஞானிகள் மற்றும் ஞானக் கவிஞர்கள் என்று நான் இங்கே சுட்டிக் காட்டிய இந்த ஆளுமைகள் அனைவரும் அகக் காட்சிகள் பெற்றவர்கள். புறக்கண்ணால் காண முடியாத உண்மைகளின் தரிசனங்களை அகக்கண்ணால் கண்டு சொல்பவர்களையே மகாகவிகள் என்றும் ஞானிகள் என்றும் குறிப்பிடுகிறோம். அந்தச் சிந்தனைகள் எல்லாம் மனத்தால் சிந்தித்து உருவாக்கப்படுவன அல்ல. மனதை வெறுமையாக்கித் திறந்து வைக்கும் தியானத்தின் தருணங்களில் மனதிற்கு அப்பால் ஆன ஆன்மிகத் தளங்களில் இருந்து மனத்தினுள் வந்து விழும் புலப்பாடுகள். இதனை ஆங்கிலத்திலே Inspiration – உள்ளுதிப்பு என்றும் intuition – அகத்தூண்டல் என்றும் சொல்வார்கள். மறைவிலிருக்கும் பொருள் திரை விலகும்போது கண்ணுக்குத் தெரிவது போல அகவுலகின் திரைகள் விலகுவதால் அடையப்படும் காட்சி என்னும் பொருளில் சூஃபித்துவம் இதனைக் ’கஷ்ஃபு’ என்று குறிப்பிடுகின்றது. இந்து ஞான மரபில் இதனை ”தரிசனம்” என்று சொல்கிறார்கள். தமிழில் இதுவே ”காட்சி” என்று சொல்லப்படுகிறது.

      எனவேதான், உலகில் தோன்றிய மகாகலைஞர்கள் யாவரும் தமது கலை வெளிப்பாடுகளை, அவை தம் வழியாக வெளிப்பட்டவையே அன்றித் தாம் உருவாக்கியவை அல்ல என்றும், அவை தாம் கண்டறிந்தவையே என்றும் சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒருபோதும் உரிமை கொண்டாடுவதில்லை. இங்கே பக்கத்தில் உள்ள பண்ணைப்புரம் என்னும் சிற்றூரில் பிறந்த இசைஞானி இளையராஜா அவர்கள்கூட இசை என்பது தனக்கு வழங்கப்படுகிறது என்றே சொல்லி வருகிறார். அது இந்த அர்த்தத்தில்தான்.
Related image 
 
      கலீல் ஜிப்ரான் எழுதிய “The Prophet” என்னும் நூலின் முன்னுரையில் கிளாவ்டு பிராக்டன் சொல்கிறார், His power came from some great reservoir of spiritual life else it could not have been so universal and so potent, but the majesty and beauty of the language with which he clothed it were all his own.” (அவருடைய ஆற்றல் ஆன்மிக வாழ்வின் ஏதோவொரு பேருலகிலிருந்து வந்திருக்கிறது. இல்லை எனில் அது அவ்வளவு உலகளாவியதாகவும் வீரியமுள்ளதாகவும் இருந்திருக்காது. ஆனால் அதற்கு அவர் அணிவித்திருக்கும் பீடும் அழகும் அவருக்கே உரித்தானது). இக்கருத்தினை, கவிக்கோ அவர்களின் அனைத்துப் படைப்புக்களுக்கும் நாம் சொல்லமுடியாது என்றபோதும் ஆன்மிகம் சார்ந்து அவர் எழுதியிருக்கின்ற கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்குச் சொல்லலாம்.

      ரிஷிகள் இயற்றிய ரிக் வேத தரிசனங்களின் தாக்கத்தால் அதே போன்று தான் எழுதிப்பார்த்த வசன கவிதைகளுக்குப் பாரதியார் “காட்சிகள்” என்று தலைப்பு வைத்தது இந்த அடிப்படையில்தான்.

      அகக்கண்ணால் தரிசிப்பதையே அறிவு என்று பழந்தமிழர் குறிப்பிட்டார்கள். ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று திருவள்ளுவர் சொன்னார். ”கற்றது உடைமை காட்சியின் அறிப” என்று முதுமொழிக்காஞ்சியில் மதுரைக் கூடலூர் கிழார் சொன்னார். கணியன் பூங்குன்றனார் எழுதிய, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்குகின்ற புறநானூற்றுப் பாடலில் “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின்” என்று இவ்வகை அறிவு குறிப்பிடப்படுகிறது.

      இது தொடர்பாக ஓஷோ கூறிய ஒரு கருத்தினை இங்கே நாம் நினைவுகூரலாம். “இந்திய தத்துவம்” (Indian Philosophy) என்பதாக ஒன்று இல்லவே இல்லை என்று அவர் சொல்வார். இந்திய ஞானிகளின் மெய்யியல் முறை என்பது ”உண்மையை தரிசிப்பது” என்னும் அகக்காட்சியே அன்றி “உண்மையைப் பற்றிச் சிந்திப்பது” என்பதல்ல என்று விளக்கமும் தருவார். எனவே கிழக்கின் பெருமதங்கள், ஞான மரபுகள் நமக்குத் தருவது Philosia என்பதுதான், Philosophy அல்ல என்று அவருக்கே உரிய பாணியில் முத்திரை வைப்பார்.

      கவிக்கோ அப்துல் ரகுமான அவர்கள் ஆன்மிகப் புலம் சார்ந்து இயற்றியிருக்கின்ற மெய்யியல் ஆக்கங்களைப் படித்துப் பார்க்கின்றபோது அகக் காட்சிகள் பெற்ற அற்புதக் கவிஞர் என்று அவரை அறிகிறோம்.

      அவருடைய ஆரம்பக் காலத்து நூற்களில் இந்த ஞானப் பொருண்மை குறைந்த அளவிலேயே காணக்கிடைக்கிறது. அவரது மெய்யறிவு முதிர்ச்சி பெற்ற பிற்காலத்தில் அது அதிகமாகவே அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டது. இப்படி அவரது படைப்புலக வாழ்வை முற்பகுதி மற்றும் பிற்பகுதி என்று பிரிப்பதற்கான ஓர் அடையாளக் கோடாக அவரது “ஆலாபனை” என்னும் நூலையே அடியேன் அவதானித்து வைத்திருக்கிறேன்.

சலவை மொட்டு, அவளுக்கு நிலா என்று பெயர், முட்டை வாசிகள், கரைகளே நதியாவதில்லை, சொந்தச் சிறைகள், உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், தொலைபேசிக் கண்ணீர், பால்வீதி, நேயர் விருப்பம் ஆகிய அவருடைய முற்கால நூற்களில் இலக்கியம் அரசியல் ஆகியன சார்ந்த சிந்தனைகளுக்கிடையே ஆங்காங்கே மெய்யியற் சிந்தனைகளும் இடம்பெறக் காண்கிறோம். ஆனால், ’ஆலாபனை’யிலும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த ஆக்கங்களிலும் மெய்ஞ்ஞானச் சிந்தனைகளை அவர் அமுதசுரபி போல் அள்ளி வழங்குகிறார்.

1999-இல் வெளிவந்த “பூப்படைந்த சப்தம்” என்னும் கட்டுரை நூல் முழுவதுமே ஆன்மிகப் புலனங்களைப் பேசுகின்றது. அதன் முன்னுரையில் கவிக்கோ எழுதுகிறார், “கவிஞர்கள் ஞானிகள் சில நேரங்களில் அபூர்வமான சில தரிசனங்களைக் கண்டுவிடுகிறார்கள். இது சத்தியத்தின் தரிசனம். இத்தகைய தரிசனங்களை விளக்கும் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறேன்”.

அதன் பின் ஏப்ரல் 2000 முதல் பிப்ரவரி 2001 வரை ஜூனியர் விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஜூன் 2005-இல் “இது சிறகுகளின் நேரம்” என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. அதிலும் ஞான மரபுகள் சார்ந்த சிந்தனைகள் பூத்துக் குலுங்கின. அதன் முன்னுரையில் கவிக்கோ சொல்கிறார்,

“உலகத்தில் ஞான நூல்கள் பல. ஆயினும் அவற்றின் மூல ஊற்று ஒன்றே. ஏனெனில் உண்மை ஒன்றே. இதை உணர்த்தவே இந்தக் கட்டுரைகள். ... ... ... பல நாட்டு ஞானிகளின் தரிசனங்களை இதில் தொகுத்திருக்கிறேன்.”

உலகின் ஞான மரபுகள் பலவற்றையும் அவர் தோய்ந்து கற்றுத் தெளிந்தவர் என்பதற்கு இரண்டு கட்டுரைகளைச் சான்றாகக் காட்டலாம். 2006-இல் வெளிவந்த “இல்லையிலும் இருக்கிறான்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் உள்ள ‘இல்லையிலும் இருக்கிறான்’ மற்றும் ‘அடிப்படைவாதம்’ ஆகிய கட்டுரைகள். இவற்றுள் முதற் கட்டுரையில் மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கம்பன், ப்ருஹதாரண்யக உபநிஷத், தைத்ரீய உபநிஷத், ரிக் வேதம், சூஃபி ஞானியர், திருவள்ளுவ தேவ நாயனார், இஸ்லாத்தின் மகாவாக்கியம் (அதாவது, கலிமா), சிதம்பர ரகசியம் ஆகியவற்றைச் சுட்டியும், இரண்டாம் கட்டுரையில் யூத நூலான தால்முத் சப்பாத், தாவோயிசம், கன்புசிய மத நூலான அனபெட்ஸ், மகாபாரதம், பௌத்த நூலான உடன்ஸ்வர்க்கம், புதிய ஏற்பாடு, அல்ஹதீஸ், திருக்குறள் ஆகியவற்றுடன் தந்தை பெரியாரின் கருத்துமொழி ஒன்றினையும் சுட்டிக்காட்டி அவர் தனது கருத்தோவியங்களைத் தீட்டுகிறார். 
 
(to be concluded in the next part).

No comments:

Post a Comment